•     "திராவிட மாய் மாலம் கலைந்துவிட்டது. கசப்பான அனுபவங்களின் வலி, வேதனையினால் நாம் சமீப நாட்களாக தமிழின சுய நிர்ணய கோட்பாட்டை தூக்கிப்பிடிக்க தொடங்கி உள்ளோம்."

•     "பெரியாரிய-அம்பேத்கரிச தண்டவாளங்களில் மார்க்சிய-லெனினிய-மாவோயிச ரயில்களை ஏற்றுகிற பணியில் நம்மைப் போன்றோர் வலி, வேதனையோடு துடித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்."

•     "ஈழப் பேரழிவின்போது உலகமே தனது கண்களை இறுகப் பொத்திக் கொண்டது. மாவோயின் பழைய மக்கள் சீனமும், லெனினின் ரஷ்யாவும் - சேகுவாரா - காஸ்டிரோவின் கியூபாவும், வடகொரியாவும், லாவேசும், வியட்நாமும், லிபியாவும், பிரேசில், வெனிசுலா, பெரு, சிலி, மெக்ஸிகோ, அர்ஜெண்டீனா ஆகிய எல்லா இடதுசாரி நாடுகளுமே டவுசர் கிழிந்து அம்மணமாய் ஆகிப்போயின. காந்தி, புத்தன், யேசுவின் சமாதிகளை இடித்துப் போட நம் மனது இன்றும் தவிக்கிறது."

•     "தேசிய இன விடுதலை பற்றிய மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் மறைக்கப்பட்ட கருத்தோட்டங்களை தமிழ்த்தேசிய குடியரசை மலரச் செய்திட தமிழகத்தில் விதைத்துக் கொண்டிருக்கின்றோம்."

• "இஸ்லாமிய தீவிரவாத‌த்திற்கும், மத்திய இந்திய மாவோயிச எழுச்சிக்கும் மாற்று என்பது: இஸ்லாமியர்களிடம் பறித்த உரிமையை திரும்பத் தருவது என்றும் - இந்திய கனிமங்களை அந்நியனுக்கும், உள்நாட்டு தொழில் தரகர்களுக்கும் பட்டா போட்டு தராதே. பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையை பறிக்காதே என்றும் சொல்கிறோம்"

•     "மும்பை-கோவை குண்டு வெடிப்பு சம்பவ‌ங்களில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட பல நூறு அப்பாவி இஸ்லாமியர்களுக்கு 15 ஆண்டுகளாய் ஜாமீன் விடுதலைகூட கிடையாது. வழக்கின் தீர்ப்பிலோ இந்த பல நூறு அப்பாவிகளுக்கு ஆயுள் தண்டனைகள். இச்சம்பங்களுக்கு காரணமான-முந்தைய மும்பை, கோவை கலவர சம்பவங்களில் பல நூறு அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்ற காவிக் கும்பலின் மீது 15 ஆண்டுகளாய் இன்றும் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படவில்லை. இதையா மதசார்பற்ற நாடு என்கிறோம்."

•     "தலித்-பழங்குடியின மக்களின் பாலான வன்கொடுமை தடுப்பு நிகழ்வுகளுக்கான பல நூறு வழக்குகளில் தமிழகத்தில் இதுவரை ஒருவர்கூட தண்டனை அனுபவித்ததில்லை. திண்ணியம் சம்பவத்தில் உள்பட - இதனால் என்னாங்கடா உங்கள் சட்டம் என்கிறோம்."

•     தலித்-பழங்குடி இன மக்களுக்கான உட்கூறு சிறப்பு நிதி 15 ஆயிரம் கோடி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் தலித் காலி பணியிடங்கள் 2 லட்சம் திருடப்பட்டிகிறது. அரசு உதவி பெறும் மற்றும் அரசு நிதியிலேயே நடக்கிற சிறுபான்மைக் கல்லூரிகளில் தலித் விரிவுரையாளர்களுக்கும் அறவே மறுப்பு. நடப்பது மனுவின் ஆட்சியா என்கிறோம்."

•     "பழைய குறுநில மன்னராட்சியைப் போல தமிழகத்தில் மட்டும் 75 சிறப்பு பொருளாதார மண்டலங்கள். இங்கே தமிழக, இந்திய அரசின் 250 வகையான தொழிலாளர் நலச் சட்டங்கள் மூக்கைக் கூட நுழைக்க முடியாது. இங்கே தொழிற்சங்கம் அமைக்கவும் தடை. அட, ஆட்சியாளர்களே இந்தியாவை முழுசாய் அந்நியர்களுக்கு விலைபேசி விற்று விட்டீர்களா என்கிறோம்."

•     "தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் 25 சதப் பேர்களே நிரந்தரத் தொழிலாளர்கள். மீதி 75 சதப் பேர்கள் காண்டிராக்ட் மற்றும் பதிலி, டெம்ப்ரவரி தொழிலாளர்கள். அதாவது அத்தக் கூலிகள். 1860-லா தமிழகம் இருக்கிறது என்கிறோம்."

•     தமிழகத்தில் நிறுவப்பட்டிருப்பவையோ 30க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலவாரியங்கள். இந்த நல வாரியங்கள் மூலமாய் கடந்த நான்காண்டில் வழங்கப்பட்டிருக்கின்ற நல உதவிகளோ வெறும் 46 கோடி மட்டுமே - நான்கரை கோடி மக்களுக்கு நான்காண்டுகளுக்கு 46 கோடி - இதை விடவும் மோசடி உண்டா என்கிறோம்."

•     "இதெல்லாம் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையாம். இதெல்லாம் நல்லாட்சியின் லட்சணமாம். இன்னும் கூறிக்கொண்டே போனால், சலூன் கடை மூலையில் குவிக்கப்பட்டிருக்கிற மெல்லிய இழைகளை கிளறுகிற வேலையாகிப் போய்விடும்."

•     "இந்தியா ஒன்றல்ல. இரண்டு. ஒரு இந்தியா ஒடுக்கப்படும், சுரண்டப்படும் 80 கோடி ஏழைகளின் இந்தியா என்கிறோம். இப்படிப்பட்ட இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டுமா என்கிறோம்."

•     "தமிழகத்தில் எந்த ஊர்ச் சேரியில் நல்ல ரோடு இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்? நம்மில் பலர் இதையெல்லாம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவும் தவறுதானா? 2010லும்கூட இவர்களுக்கு இறைவனைக்கூட வழிபட அனுமதி மறுக்கப்படுகிறதே? - தீண்டாமைப் பேய் தலைவிரித்தாடுகிறதே!

•     காட்டுவேட்டை என்கிற பெயரில் மக்கள் மீது அழித்தொழிப்பு போர் நடத்தும் இந்திய மத்திய - மாநில ஆட்சியாளர்களான - பன்னாட்டு கம்பெனிகளின் கங்காணிகளுக்கு எதிராக சர்வபரி தியாகத்திற்கும் முன் வந்துள்ள 1084ன் அம்மா, மே.வங்க தங்க மங்கை மகாசுவேதா தேவி - ஜார்கண்டின் மனித உரிமைப் போராளி டாக்டர் பினராய் சென், வினோபாவாவின் சீடர் - ஜார்கண்டின் அகிம்சாவாதி ஹிமானகுமார் - மானங்கெட்ட ஜார்ஜ் புஷ்யையும், சிதம்பரத்தையும் செருப்பால் அடித்த ஈரான் பத்திரிக்கையாளர் அல்சர்மொய்தி, சீக்கிய பத்திரிக்கையாளர் ஜைனல் சிங் - இவர்களெல்லாம் எப்போதோ படித்த பெயர்கள் அல்ல - நமது நாளைய திசைகாட்டும் கருவிகள். இவர்கள் நமது நாளைய பாடத்திட்டம்.

டால்ஸ்டாயின் "வெண்ணிற இரவு", தாஸ்தாவேசுவின் "அன்னகரினா"வை படித்துத்தான் நாம் காதலித்தோம்; வளர்ந்தோம். என்னைப் போன்றோர் தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களிலும் ஊழியம் செய்கிறோம். நெடுக வாசித்தோம். எழுதவும் செய்தோம். அலைகள், சவுத் விசன், கீழைக்காற்று, தமிழோசை, விடியல், பாரதி புத்தகாலயம், நியூ சென்சுரி வெளியீடுகள் மட்டுமல்ல - ஸ்பாட்டகஸ், ஏழு தலைமுறைகள், கருப்பு அடிமைகளின் கதை, சோளகர் தொட்டி, சூறாவளி, இளமையின் கீதம், அன்னை வயல், அதிகாலைப் பொழுதின் அமைதியில், அமெரிக்கப் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், குழந்தைப் போராளி, கடைசி கடைசியாய், திருவள்ளுவனின் திரைக்கடலோடியும் துன்பம் தேடு, "ஈழம் - இனப்படுகொலைகளுக்குப் பின்னால்", பொன்னுசாமியின் "இனப்படுகொலையில் கருணாநிதி - ஆதாரங்களுடன் ஒரு குற்றப்பத்திரிக்கை”, திருச்சி வேலுச்சாமியின் "ராஜீவ் காந்தி படுகொலை - மறைக்கப்பட்ட மர்மங்கள்”, பேரறிவாளனின் "தூக்குக்கொட்டடியிலிருந்து", மீனா மயிலின் “தலித் பழங்குடி இன மக்களின் பால் ஊடகத்துறை காட்டும் தீண்டத்தகாமை” வரை வாசித்து வலி வேதனையில் துடிப்போர் நம்மில் பலர். நானோ இவைகளைப் பற்றிய கதைசொல்லி, கூடவே 1976-2003 கால சிகப்புநாடா துணையாசிரியர். 27 ஆண்டுகள் ஒரே இதழில் ஒரே நேர்க்கோட்டில் இதழியல் துறையிலும், வர்க்க ஸ்தாபனங்களிலும் தொடர்ந்து நடைபோட்டிருக்கிற மகிழ்ச்சிதான் என்னை இந்த பிரகடனத்தை எழுத வைத்திருக்கிறது.

சிற்றெறும்புக் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட மண்புழுவாய் ஊடகவியலாளர் பலர் உண்மையில் துடித்து துவளுகிறார்கள். ஆனால், நமது ஆறாவது விரலான எழுதுகோலுக்கு வேலை பூரணமாய்க் கொடுத்திட தயங்குகிறோம். கூடவே நமக்கான வர்க்கப் போராட்டங்களில் பங்கேற்க நாம் தயங்குகிறோம், படைப்பாளி, பாட்டாளிகளோடு தெருவில் இறங்கி போராடியே ஆக வேண்டும்.

நாம் எல்லாம் பேனா பிடித்தது லெனின் சோவியத் ஆட்சியை பிடித்த அந்த உலகை குலுக்கிய 10 நாட்களை படைத்த அமெரிக்க எழுத்தாளனின் கரம் பற்றி. இப்படிப்பட்ட நாமோ இன்று நெல்லிக்காய்களாய் சிதறிக் கிடக்கிறோம். நம்மில் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை. தோழமை இல்லை. உறவு இல்லை. நம்மை நாமே புகழ்ந்து கொண்டு ஆளுக்கொரு வட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நாமாவது நமக்குரிய தளங்களில் அடித்தட்டு மக்களுக்காக முடிந்தவரை இயங்குகிறோம்.

ஆனால் அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணிக்குச் சென்ற நமது தம்பி, தங்கைகளோ, ஆடு, மாடுகளாக கால்நடைகளாகவே ஆகிவிட்டனர். இவர்களுக்கு உலக வர்க்கப் போராட்ட வரலாறோ, குறைந்தபட்சம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறோ, குறைந்தபட்சம் 1937, 1965 காலங்களில் தமிழகத்தைக் குலுக்கிய டெல்லி எதிர்ப்பு போராட்ட வரலாறோகூட தெரியாது. பாவம் இவர்கள். சமையலுக்காக, கழுத்து நெறிபட்ட கோழியின் உரோமம் பறிக்கப்படுகின்றபோது, "நான் ஹேர் கட்டிங் செய்து கொள்கிறேன்" என்றும், அதை மஞ்சள் பூசிக் குளிப்பாட்டும்போது "நான் சுத்தமாய்க் குளிக்கிறேன்" என்றும், அந்த செத்த கோழி பீற்றிக் கொண்டு பாடுவதைப் போல தென் தமிழ்நாட்டில் ஒரு நாட்டுப்புற பாடல் உண்டு. இப்படி தோல் உறியப்பட்ட கோழிகளாய்த்தான் தமிழகத்தின் 5 ஆயிரம் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நமது தம்பி தங்கைகள் 'கெளிப்பில்' மிதந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர்களின் வீட்டு முகவரிகளையும் சேகரித்து எமது கணினியில் சேமித்து வைத்திருக்கிறேன். இப்படியொரு முகவரிப் பட்டியல் எந்த ஒரு பத்திரிக்கையாளர் சங்கத்திலும் இருக்க வாய்ப்பில்லை.

இவர்களின்பால் வருத்தப்படுவதிலும் நியாயமில்லை. இன்று அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இன்டர்நெட், சினிமா ஆகிய அனைத்து ஊடகங்களுமே காவல் துறையைவிடவும் உழைக்கும் மக்களுக்கான கொடிய அடக்குமுறை சாதனங்கள் ஆகிவிட்டன. இவற்றின் முதலாளிகள் அன்னியநாடுகளுக்கு இந்தியாவை கொள்ளையடிக்க துணை போகும் வஞ்சக - துரோகக் கும்பலாய் மாறிவிட்டனர். இவர்கள் கட்சிகளும் நடத்துகிறார்கள்; ஆட்சியிலும் இருக்கிறார்கள்; அரியணைக்காக காத்திருக்கவும் செய்கிறார்கள். மற்றும் சில ஊடக முதலாளிகள் அதிகாரத்தின் இருக்கைகளில் தற்போது இருப்போர், விரைவில் செல்லத் துடிப்போர்களிடம் எடுபிடிகளாக இருக்கிறார்கள். கூடவே பன்னாட்டு நிறுவனங்களின் ஊறுகாயிலிருந்து மான்சாண்டோவின் பி.ட்டி கத்திரிக்காய் விதைகளை விற்கும் மான்சாண்டோவின் கையாள்களாகவே இந்த ஊடக முதலாளிகள் இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் உதவித் திட்டங்களின் ஏமாற்று வேலைகள் உலகிற்கே வெட்ட வெளிச்சமாகும். இப்போது இந்தியா, ஆப்பிரிக்கா, இதர ஆசிய நாடுகளில் அமெரிக்கா முழு மூச்சாய் இந்த நாசகர பயங்கரவாத நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்திய, தமிழக ஆட்சியாளர்கள் அமெரிக்க வேடனின் கள்ளக் கூட்டாளிகள். இவர்களின் பங்காளிகள்தான் தமிழகத்தின் அனைத்து ஊடகத் துறைகளின் முதலாளிகள்.

வேடனின் வலையிலிருந்து தனது பறவைக்கூட்டத்தை காப்பாற்றும் தலைமைப் புறாக்கள் அல்லர் நமது ஆட்சியாளர்களும் ஊடக முதலாளிகளும். திட்டமிட்டே தனது பறவைக் கூட்டத்தை அமெரிக்க வேடனின் வலையில் சிக்க வைக்கும் கொடூர அயோக்கியக் கூட்டு கொள்ளையர்கள் இவர்கள். உலக மகா பயங்கரவாதி சந்தேகமே இல்லாமல் முன்லேடன்களான அமெரிக்க பேரரசே. இந்தப் பேரரசின் விசுவாசிகளே நமது இந்திய, தமிழக ஆட்சியாளர்கள். உலக வங்கியின் முன்னாள் ஊழியர் நமது இன்றைய பிரதமர். நேற்றுவரை பன்னாட்டுக் கம்பெனிகளின் வக்கீலாய் இந்திய நீதிமன்றத்தில் வாதடியவர் சிதம்பரம். இவர்களின் கூட்டாளிகள் இந்திய, தமிழக ஊடகப் பெருச்சாளிகள்.

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக நமது ஊடகங்கள் 2007-2010 முடிய உள்ள காலத்தில் ஒதுக்கிய கால அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் 0.7 சதம். அப்படியானால் விளையாட்டுத் துறைக்கு? 7 சதம். இதைவிடுங்கள் அழகி போட்டிகளுக்கு 10 சதம். இதுதான் இந்திய, தமிழக ஊடகத்துறையின் ஒளிபரப்புப் பண்பாடு. இந்திய ஊடகத்துறையின் 2008-09 ஆண்டின் வருவாய் 85 ஆயிரம் கோடி. நடப்பு ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ஊடகத்துறை வருமானம் ஒரு லட்சம் கோடி. 110 கோடி மக்களைக் கொண்ட இந்திய அரசின் ஓராண்டு பட்ஜெட்டே 10 லட்சம் கோடிதான். தமிழக அரசின் ஓராண்டு பட்ஜெட்டே 80 ஆயிரம் கோடிதான். இந்த 80 ஆயிரம் கோடியில் டாஸ்மாக் வருமானம் 12 ஆயிரம் கோடி.

20க்கும் மேற்பட்ட சேனலகளை நடத்தும் சன் குழுமத்தின் வருவாய், மானாட மயிலாடிக் கொண்டிருக்கும் கலைஞர் டி.வி யின் வருவாயை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். மானாட மயிலாட நிகழ்ச்சியின் முதல் ரசிகரே கருணாநிதிதான். நான் இதை இட்டுக் காட்டி சொல்லவில்லை. 2009 மார்ச் 30-ந் தேதியை ஒட்டிய நாட்களில் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த தமிழின அழிப்பை ஒருகணம் நினைவிற்கு கொண்டு வாருங்கள். அன்று வன்னிப்பகுதி எங்கும் கந்தகநெடி. எங்கும் பிணக்குவியல். அடுத்த மூச்சுக்காற்றை இழுத்துவிட நாம் உயிரோடு இருப்போமோ என்கிற பதைப்பில் பதுங்கு குழிகளுக்குள் 5 லட்சம் ஈழத் தமிழர்கள். அன்றுதான் நடிகை ரம்பா கருணாநிதியை சந்திக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர் நடிகை ரம்பா. தொடை அழகி இவர். அவரிடம் காருணாநிதி கூறுகிறார். "மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் பார்க்கத் தவறுவதில்லை." இந்த நிகழ்ச்சியின் நடன இயக்குனர் கலா அடிக்கடி சொல்லும் விசயமிது.

தமிழகத்தில் 5 ஆயிரம் ஊடகத்துறை ஊழியர்களில் ஏதோ பெயரளவிறகு சம்பளம் வாங்குகிறவர்கள் மிஞ்சிப் போனால் 15 சதத்தினருக்குமேல் இருக்க மாட்டார்கள். இவர்களில் சீப் எடிட்டர்களுக்கு மட்டும் 70 ஆயிரம் வரை சம்பளம். இவர்களில் பலர் எனது பழைய நண்பர்கள். மற்ற துணையாசிரியர், உதவியாசிரியர்களுக்கு 12 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரைதான் சம்பளம். 4 ஆயிரம் ரூபாய் சமபளம் வாங்குவோர்கள்தான் அதிக சதவீதத்தினர். இவர்களுக்கு பி.எப். பிடித்தம் ஒரு 20 சதப் பேருக்குதான். இவர்களுக்கு பணிப் பாதுகாப்பும் கிடையாது.

இந்த 15 சதத்தினர் போக மாவட்டங்களில் தாலுகாக்களில் செய்தியாளர்களாய், புகைப்படக்காரர்களாய், ஒளிப்பதிவாளர்களாய் பணி செய்கிற மீதி 85 சதத்தினர் அறவே சம்பளமில்லாமல் - கொத்தே இல்லை - ஆனால், கொத்தடிமைகளாய் எப்படிப் பணி செய்கிறார்கள்? இவர்கள் நமது பிள்ளைகள். இவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்? எப்படி இவர்களுக்கு வருவாய் வருகிறது? இதைச் சொல்வதெனில் மானக்கேடு. சொல்லாமல் தவிர்ப்பது வெட்கக்கேடு. நமது பிள்ளைகள் ஆயிற்றே. இதை எப்படி நான் சொல்வேன்?

இவர்கள் தங்கள் வாகனங்களில் பீற்றலாய் 'ஊடகம்' என்று எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், இவர்களின் ஊடக அலுவலகம் இவர்களுக்கு வழங்கி இருக்கிற பணியின் பெயரோ மாவட்ட - தாலுகா நியூஸ் ரைட்டர்.

கருணாநிதி எத்தாப்பெரிய சாமர்த்தியசாலி?

ஊடக முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளமோ வருங்கால வைப்பு நிதியோ, ஓய்வூதியமோ, பணியின்போதோ, விபத்திலோ மரணமடைந்தாலும் கூட இழப்பீடு வழங்க மாட்டார்களாம். இதனால் எல்லாம் பத்திரிக்கைத்துறை ஊழியர்களுக்கு ஊடக முதலாளிகளின்பால் கோபமோ, ஆத்திரமோ வந்துவிடக் கூடாதாம். இதற்காகவே 21 ஆண்டுகளாய் கருணாநிதி நலிந்த பத்திரிக்கையாளர் நிவாரணத்திட்டம் என்கிற பெயரில் "ஒரு கஞ்சித் தொட்டி திட்டத்தை" தொடர்ந்து நடத்தி வருகிறார். இது எத்தாப் பெரிய மோசடித் திட்டம்? எவ்வளவு பெரிய கண்துடைப்பு மாய் மாலம்? என்பதையெல்லாம் எமது ஆய்வில் வெளிவந்திருக்கிற "கொலைக் களத்தில் உழைக்கும் பத்திரிக்கையாளர்" நூலில் (தழும்பு/பதிப்பகம், செல் : 971030950) அம்பலப்படுத்தி இருக்கிறேன்.

தமிழகப் பத்திரிக்கையாளர்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற அநீதியை ஒரே வரியில் இப்படிக் கூறவிடலாம்: இதுவும் என் வார்த்தையல்ல. மார்க்சிய பேராசான் தோழர் பி.டி. ரணதிவேயின் வார்த்தைகள். அந்த வரி: "நில பிரபுத்துவ சமூகத்தில் கொத்தடிமைகளாய் இருப்பதை விடவும் நவீன முதலாளித்துவத்துவ சமூகத்தில் கொத்தடிமைகளாய் இருப்பது கொடுமையானது." இன்றைய உலகமய சூழலிலும் கொத்தே (சம்பளம்) இல்லாமல் நமது ஊடகத்துறை ஊழியர்கள் 5 ஆயிரம் பேர்களில் 80 சதத்திற்கும் மேலானவர்கள் கொத்தடிமைகளாய் தொடர்ந்து நீடிப்பது எவ்வளவு பெரிய பயங்கரவாதம்? ஏழு தலைமுறைகளில் வருகிற கருப்பின அடிமைகளா இவர்கள்?

எனவே, இவர்களுக்காகவும் நாம் தான் குரல் கொடுத்தாக வேண்டும். இவர்களின் முதுகெலும்புகளை நாம்தான் நிமிர்த்த வேண்டும். இவர்களில் ஒரு 5 சதத்தினர்கூட இந்த அறைகூவலின்படி அமையவிருக்கும் ஊடக சங்கத்தில் இணைவார்களா என்பது சந்தேகமே. பாவம் இவர்கள். நொந்து நூலாகி கிடக்கிறார்கள்.

இப்பிரச்சனையோடு - மற்றொரு அடக்குமுறை சாதனமாகவும், துரோக வேடனின் கையிலுள்ள வலைகளாகவும் ஆகிவிட்ட அனைத்து வகையான ஊடகங்களின் துரோகங்களையும் மக்களை முட்டாள்களாகவும் ஆக்கி வருகிற நயவஞ்சகத்தையும் நாம் அம்பலபடுத்தியாக வேண்டும். கூடவே இந்தப் பிரகடனத்தின் துவக்கத்தில் நட்சத்திரக் குறியிட்ட எல்லா அநீதிகளுக்கு எதிராகவும் நாம் முரசரைந்தாக வேண்டும். உழைக்கும் மக்களோடு நாம் தோளோடு தோள் கொண்டாக வேண்டும்.

அன்பான தோழரே, இப்பிரகடனம் விடுத்திருக்கிற பல அறைகூவல்களில் பலவற்றில் உங்களுக்குப் பூரண உடன்பாடு இல்லாதிருந்தாலுமே ஏதேனும் நாம் ஒத்துப் போகும் ஒரு மையப்புள்ளி கூடவா இந்தப் பிரகடனத்தில் இல்லாமல் போய்விடும்? அந்த மையப்புள்ளியிலிருந்து நாம் இணைவோமே. அவசியம் இணைவோம். அன்பு கூர்ந்து வாருங்கள். தோள் கொடுங்கள். தோளோடு தோள் நிற்போம். நம் எல்லோருக்கும் பொது எதிரி ஏகாதிபத்தியமும், அது பெற்றெடுத்துப் போட்டிருக்கிற நச்சு அரவங்களான தனியார்மய, தாராளமய, உலகமய நாகப்பாம்புகள்தானே? ஊடகங்களை விட்டு உங்களை வெளியே வரச் சொல்லவில்லை. உள்ளிருந்து கொண்டே கலக குரல் எழுப்புங்கள். கருத்தாயுதத்தை எங்களிடம் பெற்றுச் செல்லுங்கள்.

அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகம் இல்லை - வள்ளுவர்.

போராடதவர்களுக்கு இவ்வுலகமும் இல்லை - மார்க்ஸ்.

நாம் அனைவரும் சேர்ந்து துவக்கவிருக்கிற இந்த உத்தேச சங்கத்தில் நீங்கள் உறுப்பினர்களாய் ஆகிட உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் உங்களின் உடன்பாடுகளையும், முரண்பாடுகளையும் எங்களோடு இடைவிடாது தொடர்ந்து நடத்துங்களேன். நமது பொது எதிரிகளுக்கு எதிராக என்றாவது எதிராக என்றாவது ஒருநாள் நாமெல்லாம் ஒரணியாய்த் திரண்டு கொதித்தெழும் நாள் வரலாமா போய்விடும்? அதுவரை ஊடக துறை தொடர்பான நமது உணர்வுகளை - கோபங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிற ஒரு பொதுவான மேடையாக இந்த உத்தேச அமைப்பை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக பயன்படுத்துங்களேன். ஒவ்வொரு மாத மூன்றாம் வார சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரேயுள்ள ஜெய்நகர் பூங்காவில் (டெல்லியில் இயங்கும் சண்டே கிளப் பாணியில்) நாம் சந்திப்போம். மறந்துவிடாதீர்கள்.

இந்தப் பிரகடனத்தை நான் அனுப்பி இருக்கிற 500 பேர்களில் நீங்களும் ஒருவர். இந்த உத்தேச அமைப்பை நிறுவிடவும்-தொடர்ந்து முன் எடுத்துச் செல்லவும் தலைமை தாங்கவும் உங்களிலிருந்து இதய சுத்தியுள்ள ஒரு டஜன் தோழர்கள் கூடவா கிடைக்காமல் போய்விடுவார்கள்? என்கிற நம்பிக்கையிலேயே, இந்தப் பிரகடனத்தை எழுதியுள்ளேன். உங்களுக்கும் அனுப்பியுள்ளேன். அழைப்பும் விடுத்துள்ளேன். அழைப்பு விடுக்கிறவன் நானாக இருந்தாலுமே இந்த உத்தேச சங்கத்தின் நிர்வாகிகளாக பொறுப்பேற்க வேண்டியவர்கள் உங்களில் அநீதிகளின் பால் ஆத்திரமும், கோபமும் கொண்டிருக்கிற அமரன் முத்துக்குமாரை ஒத்த இளையவர்களாகவே இருத்தல் வேண்டும் என்பதே எனது அவா. நான் 57 வயதானவன்.

எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு தமிழில் முழு வீரியத்துடன் இடது, தீவிர இடது, தலித்திய, பெரியாரிய, தமிழ்தேசிய, இஸ்லாமிய மற்றும் இலக்கிய துறைகளில் 25க்கும் மேற்பட்ட உன்னதமான இதழ்கள் சமீப காலமாய் வெளிவருகின்றன. அரசியல் மொழிகளில் இந்தக் குடிமக்கள் இதழியல் - இதழ்கள் உரத்த குரலில் பேசுகின்றன. இன்றைக்கு தமிழகத்தில் ஒரளவேனும் விழிப்புணர்ச்சி இருக்கிறது என்றால் இந்த குடிமக்கள் இதழியலால்தான். இந்த ஒவ்வொரு இதழிலும் இரண்டு டஜனுக்கு மேற்பட்ட படைப்பாளிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் வலியோடும் வேதனையோடும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாரும், எவருக்கும், தத்துவார்த்த அறிவிலோ, சிந்தனையிலோ, மக்களை நேசிப்பதிலோ, போர்க் குணத்திலோ குறைந்தவர்கள் அல்லர்.

இவர்கள் அனைவருமே சமூக விஞ்ஞானிகள், நார்மன் பெத்யூன்கள். பல டாக்டரேட் பட்டங்களுக்கு உரியோர்கள், எரியும் சூரியன்கள். இதையேல்லாம் நான் பூரணமாய் அறிவேன்.

நாம் எல்லோருமே ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். நமக்காக அல்ல. தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்காக. நாம் அரைநொடி நேரம் தயங்கி நின்றாலும் நம் தமிழ்ச் சமூகம் ஆயிரம் காலம் பின்னடைந்து போகும்.

தோழர்களே நாம் ஏப்ரல் 13-ல் நமக்கான போருக்கான - ஒரு வலிமையான சங்க அமைப்பைக் கூட்டிட கூடுவோம். வாருங்கள். உங்களுக்கு நெருக்கமான படைப்பாளிகளையும் ஊடகத் தொழிலாளிகளையும் அழைத்து வாருங்கள். அவர்களின் முகவரியையும், கைப்பேசி நம்பர்களையும் எமக்கு தெரிவித்திடுக. அவர்களுக்கு இந்தப் பிரகடனத்தின் நகல்கள் ஜெராக்ஸ் எடுத்து வழங்குக.

இந்த உத்தேச சங்கத்தில் இன்றைக்கு தமிழகம் பூராவிலும் உள்ள 5 ஆயிரம் ஊடக ஊழியர்களில் ஒரு 5 சதப் பேர்கள் கூட இணையப்போவதில்லை. இதனால் ஒன்றும் பாதகமும் இல்லை. தமிழகம் பூராவிலுமுள்ள சமூகப் பொறுப்புள்ள - வலியும் வேதனையுமுள்ள படைப்பாளிகள், எழுத்துப் போராளிகள் காலப் போக்கில் பல நூற்றுக்கணக்கானோர் இந்த அமைப்பில் நிச்சயம் இணைவார்கள். இவர்களை நான் நிச்சயம் இணைப்பேன். எனவே நமது உத்தேச பத்திரிக்கையாளர் சங்க அமைப்பு - 80 சத உழைக்கும் தமிழ் மக்களின் அடக்குமுறை சாதனமாகி விட்ட தமிழக அனைத்து ஊடகங்களின்பாலும் அதிரடியான தொடர் தாக்குதல் நடத்துகிற புலம் பெயர்ந்த ஒரு அரசின் பொலீட்பீரோ"வைப்போல் கூட நாம் இயங்குவோம்.

நான் அடித்தட்டு மக்களின் அஞ்சல்காரன். தோழரே, உங்களின் இதயக் கதவை கொஞ்சமேனும் திறந்திடுங்கள். நீங்கள் உங்களின் மனக்கதவை பூட்டி வைத்திருந்தால், எந்த அஞ்சல்காரனாலும் உங்களுக்கு செய்தி சொல்ல முடியாது, தோழரே, மீண்டும் ஒரு தடவை இப்பிரகடனத்தை துவக்கத்திலிருந்து வாசியுங்கள்.

வரும் ஏப்ரல் 13-ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு வேளச்சேரி புறவழிச்சாலையிலுள்ள பொன்மனச்செல்வர் சைதை துரைசாமி அவர்களின் நேய அறக்கட்டளைத் திருமன மண்டபத்தில்

தமிழ்ப் படைப்பிலக்கத்தின் முதல் பிதாமகன் - நமக்கெல்லாம் "முன்னேர் உழவன் "

“சோளகர் தொட்டி” பாலமுருகன் அவர்கள் தலைமையில் -

“மரண கானா” விஜியின் இடி முழக்கத்தோடு நாமெல்லாம் கூடுவோம்.

நமக்கான ஒர் அமைப்பை கட்டி எழுப்புவோம். அல்லது அதற்கான முயற்சியாவது செய்வோம்.

 

வாழ்த்துக்களுடன்,

கருப்பன். சித்தார்த்தன்

15, முதல் தெரு, அகத்தியர் நகர்,

நெற்குன்றம், கோயம்பேடு, சென்னை - 600 107

கைப்பேசி : 9710309050

Pin It