தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர்' விருதினை வழங்குவதெனும் எமது முடிவுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மகிழ்வுடன் இசைவளித்திருக்கிறார் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளின்போது 'அம்பேத்கர் சுடர்', 'பெரியார் ஒளி', 'அயோத்திதாசர் ஆதவன்', 'காயிதேமில்லத் பிறை', 'காமராசர் கதிர்', 'செம்மொழி ஞாயிறு' என்னும் விருதுகளைப் பொற்கிழியுடன் சமூக நலத்தொண்டர்களுக்கு வழங்கி வரும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு, இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது வழங்க உள்ளது. இதற்கான விழா அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்-14 ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.

karunanidhiரூ.12 ஆயிரம் கோடியைத் திருப்பி அனுப்பிய அரசு

தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தியதால் முதல்வருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக சிறுத்தைகள் அறிவித்துள்ளது தான் நெருடுகிறது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவு செய்யப்படவில்லை என பல்வேறு அமைப்புகள் மட்டுமின்றி, எஸ்.சி, எஸ்.டி. ஆணையக்குழுவே குற்றம் சாட்டியுள்ளது. தலித் மக்களுக்கு எதிராகக் கட்டப்பட்ட உத்தப்புரம் சாதியச்சுவரை அப்புறப்புடுத்துவதில் முன்னின்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை தலித் மக்களுக்காக தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் மாநில அமைப்பாளர் பி.சம்பத், தமிழக அரசின் தலித் விரோதச்செயலைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

"தீண்டாமையை கடைப்பிடிப்போரைத் தண்டிக்கும் வகையில் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை முழுமையாக அமல்படுத்தியிருந்தாலே இந்நேரம் தமிழகத்தில் தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஆனால் அச்சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிதியை பல்வேறு துறைகள் பயன்படுத்தாமல் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை திருப்பி அனுப்பியுள்ளன. தலித் மக்களுக்கான சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு, சட்டம் -ஒழுங்கு என்ற பெயரால் தலித் மக்களையே தாக்குகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள தீண்டாமை ஒழிப்புக் குழுக்கள் செயலிழந்து உள்ளன" என பி.சம்பத் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அம்பேத்கர் விருதிற்கு முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளது பல்வேறு விவாதத்தங்களை உருவாக்கியுள்ளது.

பதிலுக்குப் பதிலா?

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் விருதுகளில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஒரு விருதும் வழங்கப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

தமிழக முதல்வர் கருணாநிதி, தலித் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற வாதங்களை முன்வைக்க வரவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு தீண்டாமை இழிவுகளை நீக்க அவர் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதா என்பதைத் தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் தலித் மக்களின் வாழ்நிலை மேலும், மேலும் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் 11-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் தலித் மக்களின் நிலை மிக ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வறுமையின் பிடியில் தலித்துகள்

தலித் மக்களில் 80 சதவிகிதம் பேர் இன்னமும் கிராமப்புறங்களில் தான் வசித்து வருகின்றனர். இதில் விவசாயத்தை தங்களது தொழிலாகக் கொண்டிருப்போர் 16.8 சதவிகிதம் பேர். ஆனால், பிற சாதியைச் சேர்ந்த 41.11 சதவிகிதம் பேர் விவசாயத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் தலித் மக்களிடம் நிலம் இல்லை என்ற உண்மை இந்த அறிக்கையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமம் மற்றும் நகர் சார்ந்து வாழும் 75 சதவிகிதம் பேர் தலித் கூலித்தொழிலாளர்கள்தான். தலித் மக்கள் கிராமப்புறங்களில் 35 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 39 சதவிகிதமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் 60 சதவிகித தலித் மக்கள் மிக அதிக அளவில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான். அங்கு தற்காலிக வேலை செய்யும் 69.45 சதவிகித தலித் மக்களிடையே வறுமை பெருமளவு உள்ளது. தலித் பெண்களின் கல்வி நிலை 41.9 சதவிகிதம் தான்.

உத்திரப் பிரதேதம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களே தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதில் முதல் ஐந்து இடங்களில் நிற்கின்றன. இந்திய அளவில் தலித் மக்கள் பிரச்சனை இப்படி என்றால் தமிழகத்தில் அதன் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை என்பதை ஆதிதிராவிடர் நலத்துறை துணைத்தலைவர் காம்ப்ளே கூறிய கருத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

திமுக அரசு மீது ஆணையத்தின் குற்றச்சாட்டு

"ஆதிதிராவிடர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசால், அத்திட்டங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு பேர் பயன் பெற்றனர் போன்ற புள்ளி விவரங்களைத் தர முடியவில்லை. அரசு ஊழியர்களில் ஆதிதிராவிடர் எத்தனை பேர், எத்தனை பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, காலியிடங்கள் எவ்வளவு, பள்ளி, கல்லூரிகள் என்ன நிலை என்ற விவரங்களும் மாவட்ட வாரியாகவோ, துறை ரீதியாகவோ இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாளர் சங்கம் மற்றும் அரசுக்குமிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்பு அதிகாரி இருப்பார். அதுபோன்று அதிகாரி இங்கு இல்லாததால், தகவல் பரிமாற்றம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். பிற மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் தான் பல இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பது தொடர்பாக 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகம் முற்போக்கான மாநிலம் எனக் கருதப்படும் நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே எடுக்கும் நிலை உள்ளது. அதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது. வன்கொடுமை வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். தலித்துகளுடன் கோவிலுக்குச் சென்ற குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா மீதான தாக்குதல் குறித்து, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என காம்ப்ளே கூறியவுடன் முதல்வர் கருணாநிதி என்ன சொன்னார்?

"தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதைப் போல ஒரு ஆணையத்தின் துணைத் தலைவர் சொல்லியிருப்பதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - இது பற்றிய விவரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு, குறிப்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் இருக்கிறேன்" எனக்கூறியதை மிரட்டல் என்பதைத் தவிர என்னவாக இருக்க முடியும்.

சேரிகளைத் திரட்டும் செங்கொடி இயக்கம்

மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை அருந்ததிய இயக்கங்கள் இன்னமும் நடத்தி வருகின்றன. சென்னையில் பல்லாயிரக்கணக்கான அருந்ததிய மக்களைத் திரட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பேரணியின் போது வலுவாக முன்வைக்கப்பட்டது மனிதக்கழிவை மனிதன் அகற்றும் பிரச்சனை தான். ஆனால், தமிழகத்தில் இந்த நிலை இல்லை என கருணாநிதி கூறுகிறார். "தன்னெஞ்செறிவது பொய்யற்க" என்ற வள்ளுவனின் குறள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் செங்கொடி இயக்கம் தொடர்ந்து களம் கண்டு வருகிறது.

பள்ளன்கட்சி, பறையன் கட்சி என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி அம்மக்களுக்காக தஞ்சைத் தரணியில் தோழர் பி.சீனிவாசராவ் போட்ட போராட்ட விதை கிளைவிரித்து தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கான விடுதலைக்கான போராட்டங்களாய் வெடித்துக் கிளம்பிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தலித் மக்களுக்கான இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பல்வேறு இயக்கங்கள் எடுக்கத் தயங்கிய பல்வேறு பிரச்சனைகளுக்கான போராட்டங்களை செங்கொடி இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து நடத்தியுள்ளதை பதிவு செய்வது காலத்தின் அவசியமாகிறது.

களம் கண்ட போராட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில், நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்ளடை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், வேடவந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில், விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில், நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில் ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றதற்குப் பின் இருந்தது மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தான். தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் எண்ணற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு இழிநிலை துடைத்தெறியப்பட்டுள்ளது.

கோரிக்கை நிறைவேறியதா?

ambedkarகடந்த செப்டம்பர் 30ம் தேதி அமரர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தலித் மக்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றபோது, பிரச்சனைக்கு சட்டப்பூர்வமான தீர்வு ஏற்படுத்தாமல் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தடியடித் தாக்குதலை நடத்தியதையும், இச்சம்பவத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா கடுமையாகத் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டதையும், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ஆனந்தன் உள்பட 103 பேர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

இப்பிரச்சனை சம்பந்தமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஒரு மனு வழங்கப்பட்டது.அதில் "தலித் மக்களுக்கான கல்வி- வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாகவும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவும் 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் தலித், பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகளை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஆய்வு செய்து, உரிய முடிவுகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு ஆணையத்தை அமைக்குமாறும், இந்த ஆணையம் தலித்-பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிடும் வகையில் இதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்க வேண்டும்.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்

மனித மாண்பைக் காக்கும் வகையில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றுவதற்கு தொழிலாளர்களை அதனுள் இறக்குவதை தடை செய்து தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். மனிதக்கழிவை அகற்றுவதற்கானப் பணியில் மனிதர்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இங்கும் நவீன முறைகள் அமலாவதை தமிழ்நாடு அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். இப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டபடி வெட்டியான்களை மயான உதவியாளர்கள் எனப் பெயர்மாற்றம் செய்து, உள்ளாட்சி ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டபடி விடுதலைப் போராளி ஒண்டி வீரனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும். தலித் - பழங்குடி மக்களுக்கான பின்னடைவு பதவி இடங்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இவற்றை தாமதமின்றி தமிழ்நாடு அரசு நிரப்ப வேண்டும். தலித் - பழங்குடி மக்களுக்கான உபதிட்டத்திற்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப துறைவாரியாக நிதி ஒதுக்குவதையும், அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அம்மக்களின் மேம்பாட்டிற்குச் செலவிடுவதையும் தமிழ்நாடு அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். தலித் மக்களுக்கு மேலும் அதிகமான தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை பழுது நீக்கித் தர வேண்டும். தலித் மக்களுக்கு முன்னுரிமையளித்து நிலம் வழங்க வேண்டும்.

கணிசமான தலித் மக்கள் நிலம் இல்லாமல் கூலி உழைப்பாளிகளாக இருப்பதாலும், சாதி இந்துக்களின் நிலத்தில் வேலை செய்து அன்றாட வாழ்க்கை நடத்த வேண்டியிருப்பதாலும், விழிப்புணர்வோடு தங்களது சமூக உரிமைகளை நிலைநாட்டுவதில் பிரச்சனை உள்ளது என்பதைக் கணக்கில் எடுத்து, அரசு இப்பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். மத்திய வனவுரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டின் பல்லாயிரம் கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்காக பலமுனை செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தலித் மக்களுக்கு சம உரிமையை அரசு உடனடியாக உத்தரவாதம் செய்ய வேண்டும்.

தலித் மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும். இதனை அமல்படுத்துவதில் காவல் துறை மற்றும் வருவாய்த்துறை மத்தியில் காணப்படும் குறைபாடுகளைக் களைய வேண்டும். இச்சட்டம் சரிவர அமலாவதை ஏற்கனவே வலியுறுத்தியபடி தீண்டாமை ஒழிப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், காங்கியனூரில் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா உள்பட தலித் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்குக் காரணமான காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். நாகை மாவட்டம், செட்டிப்புலத்தில் தலித் மக்கள் மற்றும் ஆர்.டி.ஓ., காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மக்களின் ஆலய நுழைவை உத்திரவாதம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவற்றில் ஒரு கோரிக்கையாவது தமிழக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினாரா?

தீண்டாமையின் பிடியில் அம்பேத்கர்

மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் நடிகர் மம்முட்டி நடித்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம். இப்படத்தை கடந்த 12 ஆண்டுகளாக திரையரங்குகளில் திரையிடப்படாமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. அம்பேத்கருக்கு நிகழ்ந்துள்ள இந்த நவீன தீண்டாமையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும், சட்டமன்றத்தில் பதிவு செய்தும் இன்னமும் முடக்கப்பட்டுள்ளார் அம்பேத்கர். இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, அண்ணலின் பிறந்த நாளில் அவர் பெயரில் விருது. என்ன சொல்வது?

அம்பேத்கரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாமல், பதவி அரசியலில் சிக்கி, நாடு நகரமெங்கும் கட் அவுட், பேனர்களில் முகம் காட்டி, வார்த்தை ஜாலங்களில் மக்களை ஏமாற்றுவது போதாதென்று இப்போது அம்பேத்கர் விருது வேறு. உனக்கு நான் தர்றேன், எனக்கு நீ கொடு என்று பரஸ்பரம் அம்பேத்கர் விருது கொடுத்து ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து கொடுப்பது இருவருக்கும் சுகமாகத்தான் இருக்கும். காலம்காலமாக ஒடுக்குதலுக்கு உள்ளாகி நிற்கும் தலித் மக்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

8 comments

8
நீலவேந்தன்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதிகள் கட்டப்பட்டபோது, அதில் 190 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசுப் பொதுநிதி ஒதுக்கீட்டில் இருந்து கட்டப்பட்டன. ஆனால், தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேருக்கு மட்டும், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தலித் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதிகளை, அவர்களுக்கென ஒதுக்கப்படும் நிதியிலிருந்துதான் கட்ட வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா? பொதுநிதியில் இருந்து கட்டினால் அந்த விடுதிகள் இடிந்து விடுமா? இது கடைஞ்செடுத்த எவ்வளவு அயோக்கியத்தனம்!

ஆனால், இதே கருணாநிதிதானே, தலித் மக்களுக்கென மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை, சமத்துவபுரங்கள் என்ற பெயரில் தலித் அல்லாதோருக்கும் வாரி வழங்குகிறார்...

தென்மாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிராக, வன்முறை வெறியாட்டம் ஆடிய சாதிவெறியர்கள் அத்தனை பேர் மீது இருந்த வழக்குகளையும், இந்த கருணாநிதி எவ்வித நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றுவிட்டு, மறுபுறத்தில், இ.கோட்டைப்பட்டியிலும், இரட்டணையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தி, இளைஞன் சுரேஷை சுட்டுக் கொன்றதும், என்கௌண்டர் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட- பழங்குடியின இளைஞர்களை வேட்டையாடி வருவதும், மிக அதிகமானோர் மீது குண்டர் சட்டதைப் பாய்ச்சி வருவதும் (இதில் பெரும்பாலானோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்) எதைக்காட்டுகிறது...

தாமிரபரணி ஆற்றில் 17 தலித்துக்களை கொன்று மிதக்கவிட்டதுடன், தொடர்புடைய மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டபோது, "மாவட்ட ஆட்சியரை மாற்றினால் முக்குலத்து மக்கள் வருத்தப்படுவார்கள்" என்று சொல்லி, முதல்வராக இருந்த கருணாநிதி சாதிவெறியைத் தூண்டி விட்டதை மறக்க முடியுமா...?

இத்தகைய வஞ்சக எண்ணம் கொண்ட கருணாநிதியை "அம்பேத்கர் சுடர்"? என்றால் காலம் நம்மை மன்னிக்காது.
- க.கண்ணன்
உனக்கு நான் தர்றேன், எனக்கு நீ கொடு என்று பரஸ்பரம் அம்பேத்கர் விருது கொடுத்து ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து கொடுப்பது இருவருக்கும் சுகமாகத்தான் இருக்கும். காலம்காலமாக ஒடுக்குதலுக்கு உள்ளாகி நிற்கும் தலித் மக்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. என்ற வரிகள் "நச்" என்று இருக்கிறது.
venky
Thiruma is a great tamizhan will keep running for power in the name of dalits,It is sad to see dalit people about there conditions. He knows that dalits had seen his real face and so he is trying to hide by doing all these jimmicks instead of fighting for their cause.
pattabiraman
viruthu koduppavarukkum vetkam illai. viruthu perubavarukkum vetkam illai. koduppavar, munbu oru naal arundadhiyargalukku eda odukkeedu wayndum enru cpm thalamaiyil poradiyabodu arundadiyargalukku eda odukkeedaa enru ethirthavar dhaan evar.
viruthu perbavaro, evarukku oru padi maylay senru, enakku naanay dittathil odukkedu koduthayn enravar. vorimaikkaaga poraadiya arundadhi makkalai evarum, avarumaaga seyrndu poraatathai kevalapaduthiyavargal dhaan.
idhil iruvaril evarum vetkapadapovadhillai.
baathikkapattu kodumaigalukku vollaagi nirkkum andha makkal dhaan karaiseruvadharkku idadhu saarigalin karam pattri pinthodaravayndum.
சமத்துவன்
தலித்துகளின் சம்பந்தி எனத்தேவைக்குத் தகுந்தவாறு பேசும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகம். நெல்லை மாவட்டத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் படுகொலை, சிவகங்கையில் தலித் பஞ்சாயத்து தலைவருக்கு அரிவாள் வெட்டு, பல்வேறு மாவட்டங்களில் கோவில் வழிபாட்டுக்குச் செல்லும் தலித்துகள் மீது காவல்துறை கொண்டு தாக்குதல், உத்தப்புரத்தில் இன்னமும் தலித்துகள் மழை, வெயிலுக்கு ஒதுங்கி நிற்க நிழற்கூரை அமைத்துத்தர தயாரில்லை. இப்படிப்பட்ட தமிழக முதல்வருக்குத் தான், "அடங்கு மறு, அத்துமீறு" என முழங்கும் திருமாவளவன், அம்பேத்கர் விருது வழங்குகிறார்.
புதைந்த கனவோடு வாழத்தயாராக இல்லை தலித்துகள். தங்களுக்கான விடுதலைக்கு இடையூறு எதுவாயினும் அதைத்தகர்த்தெறிந்து இலக்கை எட்டுவார்கள். இடையில் தடைகல்லாய் நிற்கும் தலித்துகளின்சம்பந்திகளையும், மண்ணுரிமை போராளிகளையும் அவர்கள் ஒதுக்கித்தள்ளுவார்கள்.
mavoist
வணக்கம் கவிதாகுமார். கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது கொடுத்தது சரியில்லை என்பதுதானே உங்கள் வாதம். சந்தோஷம்.
அடுத்த தேர்தலில் திமுகவுடன் சிபிஎம் கூட்டணி வைக்க நேர்ந்தால்......அப்போதும் கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது கொடுப்பது சரியில்லை என நீங்கள் சொல்வீர்களா?
மாவோயிஸ்ட்
Guest
காலம் தாழ்த்திப் படித்தேன் இக் கட்டுரையை.
ஆகச் சிறந்த கருத்துக்கள்.
c.manokar
super articles

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.