valparai locationசினிமா நம் வாழ்வில் இரண்டற கலந்த கலை.

நாம் அதை தவிர்த்து விட்டு நம்மை... நம் நாஷ்டால்ஜியை அசை போடவே முடியாது. அப்படி சினிமா என்ற பிம்பம் ஒரு வகை பிரம்மாண்டத்தைக் கொண்டிருக்கிறது. அந்த பிரம்மாண்டம் நம் ஊரைச் சுற்றி சுற்றி அடிக்கடி படமாக்கப்படுவது நாம் அறிந்ததே. இன்றைய நவீனம்.. ஷூட்டிங்- ஐ போர் ஆன விஷயம் என்று தெளிவுப் படுத்திவிட்டது. ஆனால்... முன்பொரு காலத்தில்... திரையில் நடிகர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை ஆச்சரியமாக பார்த்த கால கட்டத்தில் ... ஷூட்டிங் என்பது பிரம்மாண்டமான வேடிக்கை. மன பற்கள் சிரிக்க மூளைக் கண்கள் விரிய கொண்டாடிய கொண்டாட்டம்.

கோடம்பாக்கத்தின் செல்ல ஊர்கள் என்றால் ....ஒன்று 'கோபி' சுற்றிய பகுதிகள். இன்னொன்று "ஆழியாறு" சுற்றிய பகுதிகள்.

அப்படி..அதன் நீட்சியாக வால்பாறை......அதை சுற்றிய பகுதிகளில் நிறைய படப்பிடிப்பு நடத்திய படங்கள் இருந்தாலும்.... நினைவில் உள்ளவைகளை...... இங்கே அசை போடுகிறேன்... ஆசை யாரை விட்டது என்ற சினிமாக்காரனின் முதுமொழியோடு.

"வேலுச்சாமி" என்றொரு படம்.

சரத்குமார் நடித்தது. அந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள்......வால்பாறையில் இருந்து 22 கிலோ மீட்டரில் இருக்கும் "சோலையார் டேம்" கெஸ்ட் ஹவுசில் தான் படமாக்கினார்கள். அவர்களின் வீடே அந்த கெஸ்ட் ஹவுஸ்தான் என்பது போல காட்சி அமைப்பு இருந்தது. வாசலில் கூட ஒரு பாடலை படமாக்கினார்கள். கவுண்டமணி.... செந்தில்....சரத்குமார்..... மனோரமா எல்லாரும் ஆடுவது போல.

சோலையார் டேம் நீரை பார்த்து... " நம்ம ஊர் ஆத்து தண்ணிய வெச்சுக்கிட்டே இவ்ளோ வெள்ளாமை பண்ணிட்ட..!" என்று கூட வசனம் வரும். நமக்கு அய்யோன்னு இருக்கும். அது ஆறு இல்ல.. டேம் என்று...வாய் முணுமுணுக்கும்.

அப்படியே உருளிக்கல் கீழ்பிரட்டு தாண்டி மேல் பிரட்டை சார்ந்த நீர்த்தேக்க பகுதியில் சரத்குமார் வினிதா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி கூட படமாக்கப்பட்டது.

"செம்மீனே.....செம்மீனே.....உன்கிட்ட சொன்னேனே..." பாடல் சோலையார் டேம்- ஐ சுற்றி எடுத்தது தான்.

அடுத்து வேற என்ன படம் என்று யோசிக்கையில்... மனம்... அப்படியே 'புன்னகை மன்ன'னுக்கு பாய்ந்தோடுகிறது.... அதிர்ப்பள்ளி நீராக.

புன்னகை மன்னன் படம் எல்லாருக்குமே தெரியும். அந்த அருவிக்குள் கமலும் ரேகாவும் தற்கொலைக்காக விழும் காட்சியெல்லாம் அதிரப்பள்ளியில் எடுத்தது என்று. "சும்மா அதிருதில்ல" என்று அப்போதே தமிழ் சினிமாவை கலக்கிய காட்சி அது. கமலும் ரேகாவும் மலை உச்சியில் இருந்து குதிக்கும் காட்சியை அத்தனை சீக்கிரம் தமிழ் ரசிகர்கள் மறந்து விடுவார்களா..!

கிளைமாக்சில்.... கார்- பாம் வெடித்து......அதுவும் அதே அருவியில் தானே விழுந்து தன்னைத் தீர்த்துக் கொள்ளும். ஆதலால் காதல் செய்வோம் என்பது கத்தி அழும் ஆலாபனை அன்றும் இன்றும் என்றும் என்று மன உச்சியில் நின்று கத்துகிறேன்.

"காதல் வந்துருச்சு.....ஆசையில் ஓடி வந்தேன்..." பாட்டு உள்பட "கல்யாண ராமன்" படத்தில் பெரும்பாலான காட்சிகள்....வால்பாறையில் இருக்கும் 'கருமலை' என்ற எஸ்டேட்டை சுற்றி...மற்றும் 'இரைச்சல்பாறை' என்ற இடத்தில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது என்றும் சொல்வார்கள். படத்தில்.... கமலை கொல்வதற்கு வில்லன் கூட்டம் விரட்டிக்கொண்டு வரும் சாலை அட்டகட்டி கொண்டை ஊசி வளைவுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. தேயிலை அல்லது மலைச் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தி.... அது..... படமாகவும் வந்திருந்தால் ... அது...... .ஊட்டி. ..... மூணாறு என்று பொது மக்கள் பேசுவதைக் காதில் ரத்தம் வழிய கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம்.....யாரென்று தெரியாதவர்களிடம் கூட நானே சென்று சொல்லி இருக்கிறேன். "இல்ல இல்ல...இது எங்க வால்பாறை....என்று.....!"

"ராஜாதி ராஜா..." படத்தில்.. ரஜினியின் ஒரு கதாபாத்திரம் பெயரே 'வால்பாறை வரதன்'தான்.

"சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடுக்குது
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்
மனம் விட்டு சிரிக்கின்றதே"
இப்படி ஆம்பிக்கும்... இளையராஜா கிறுகிறு.

இன்முகம் சிவக்க ... குருவிகள் கொண்டு ... பறவைகள் கொண்டு .... கிளிகள் கொண்டு ... சிறகசைக்க .... அடுத்த வரியில் ...... மனிதனின் ஆழ்ந்த நிலையை வெளிக்கொணரும் காடும் மலையும் அங்கே ஆகிருதி செய்யும்.

அங்கு மலையும் மௌனமும் திரும்பும் பக்கமெல்லாம் திளைக்கும்... தன்மத்தமும் உன்மத்தமுமென தழைக்கும்.

"மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலமுடியினில் பனி வடியுது வடியுது
மண் மடங்குதம்மா
தலையனயினில் மனம் கரையுது கரையுது
கண் மயங்குதம்மா"... இப்படி காணும் காடெல்லாம் கவிதை பதியும்.

மலையோர கவி பாடும்..... குருவி.. பறவை.. மனிதன்....எல்லாம்.. நம் காட்டுக்குள் எடுத்தது தான்.

"பச்சமலை பூவு .... இது உச்சி மலைத் தேனு ..." பாடல்... ரேவதி ஆடும் ஊஞ்சல் எல்லாமே... ஆழியார் பகுதி தான். ஆழியார் வானத்தில் .... நீருண்டு நிலமுண்டு... நித்தியமுண்டு ... என்றெல்லாம் யோசனையூரும் அற்புத வனம் அங்கே நினைவில் கால்வாய் நிறைக்கும்.

"வானத்தை போல" மற்றும் "சூர்யவம்சம்" படத்தில் வரும் வீடு... ஆனைமலை அடிவாரத்தில்... இருக்கும்... ஷூட்டிங்குக்காகவே ஒதுக்கப்பட்ட வீடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் இந்த வீட்டை பார்த்திருக்கிறோம். "தனுஷ்" நடித்த "மாப்பிள்ளை" படத்தில் கூட மனிஷா தங்குவதற்காக ஏற்பாடு செய்யும் வீடாக இந்த வீடு வந்திருக்கிறது.

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா.... உதவிக்கு வரலாமா... சம்மதம் வருமா.... ஹோ..... சந்தேகம் தானோ..." என்று 'ரவிச்சந்திரன்' 'காஞ்சனா" வையும்..."ராஜ ஸ்ரீ" யையும் வம்பிழுத்து பாடும் பாட்டு... அன்றைய கருப்பு வெள்ளை அட்டகட்டி வளைவுகளில்..... வண்ணம் பூசியது என்றால்....அது கனவு தாண்டிய ஓவியம். அந்த படத்தில் வரும் அவர்களின் வீடே ஆழியார் கெஸ்ட் ஹவுஸ்தான். அந்த கெஸ்ட் ஹவுஸ் நிறைய படங்களில்..... வீடாகவோ.... பங்களாகவோ வந்திருக்கிறது.

aliyar guest house"என் ஜீவன் பாடுது" படத்தில்... கார்த்திக்-ஐ கலாய்த்து பாடும் பாட்டு அங்கு எடுத்ததுதான்.

சத்யராஜ் நடித்த "வண்டிச்சோலை சின்ராசு" படத்தில் வரும் ஒரு சண்டைகாட்சி... வால்பாறை நோக்கி செல்லும் பேருந்துகள் தேநீர் குடிக்க நிறுத்தும் ஆழியாரில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு முன்னால் தான் படம் பிடித்தார்கள். நானே அதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். கீழே விழுந்திருக்கும் சத்யராஜ் ... மேலே படர்ந்திருக்கும் ஒரு போலீஸ்காரரின் கன்னத்தில் மாறி மாறி அறைவது போல காட்சி. நாங்கள் டீ குடித்து வடை தின்று முடிக்கும் வரை அதே காட்சி தான். அப்பவே போதும் போதுமென்றாகி விட்டது ஷூட்டிங்.

அக்காமாலை புல்வெளிகளில் யாருக்கும் அனுமதி இல்லை என்று தான் நம் அறிகிறோம்.

ஆனால்...அங்கும் நிறைய படங்கள் எடுக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்.

"சின்ன பூவே மெல்ல பேசு" படத்தில் வரும் "சங்கீத வானில் சந்தோசம் பாடும்... சிங்காரபூங்குயிலே...." பாடல்...அங்கு எடுத்ததுதான் என்று யோசிக்கிறேன்.

சமீபத்திய "கயல்" படத்தில் கூட கதாநாயகனும்.. நண்பனும்.. கூடாரம் அமைத்து இரவு தங்குவது போல ஒரு காட்சி வரும்... அங்கு எடுத்ததுதானோ என்று ஐயம் எனக்கு உண்டு. அக்கா மலை புல்வெளி கெஸ்ட் ஹவுசில் தான் மந்திரப் புன்னகை படம் எடுத்திருக்கிறார்கள்...என்று வால்பாறை நண்பர் ஒருவர் கூறுகிறார். 'நாட்டாமை' படத்தில் 'கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்' பாடல் கூட அக்காமலை புல்வெளியில் படமாக்கப்பட்டது. "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா" பாடல் கூட அக்காமலை புல்வெளியில் எடுத்தது தான் என்கிறார் இன்னொரு நண்பர்.

"சாமுராய்" படத்தில்.... மூங்கில் காடுகளே ....பாட்டில்... உருளிக்கல் பெரியகடை- அந்த ஒற்றை மரம் வரும்.

"கேரளா கஃபே" என்றொரு மலையாளப் படத்தில் ஆரம்ப காட்சியே வால்பாறை காந்தி சிலையை காட்டுவார்கள். பேருந்து வந்து காந்தி சிலையை சுற்றி நிற்கும். பேருந்தில் சீனிவாசன் ஏறுவார். பேருந்து ஸ்டான் மோர் தாண்டி உருளிக்கல் வழியே சோலையார் டேம் போவது போல காட்சி இருக்கும். சோலையார் டேமில் காக்கா கடையில் டீ குடித்து விட்டு.. மளுக்கப்பாறை வழியாக செல்வது போல காட்சி நகரும். இப்போது..... மம்மூட்டியும் பேருந்தில் இருப்பார்.

சேரன் கதை நாயகனாக நடித்த கரு பழனியப்பனின் "பிரிவோம் சந்திப்போம் " படம் அட்டகட்டியை சுற்றி எடுத்த படம் என்பது கூடுதல் தகவல். "திருமதி பழனிசாமி" படம்... அட்டகட்டியில் எடுத்திருக்கிறார்கள் என்று இன்னொரு சினிமா நண்பர் கூறுகிறார்.

சினிமாவுக்கான ரம்மியம் நிறைந்த இடம் வால்பாறையும் அதன் சுற்று பகுதிகளும் என்றால் அது மிகை இல்லை.

பனி மழை வெயில் குளிர் என காணும் போதெல்லாம் காட்சிக்குக் காட்சி ரசனை கூட்டும் அத்தனை அற்புதங்களும்.... அங்கே.....அங்கே தான் இருக்கின்றன. கேமரா கண்களின் ராட்சச தனங்களில்.... மெல்லினம் வீசும் வாடை காற்றும் மென் பனி துளிர்க்கும் புல்லின தலையசைவும் மிக இயல்பாய் அதிகாலையை பூக்க செய்யும். அந்தி மாலையில் ஏக்கம் கொள்ளும். பொன் மதியத்தில்.... தன் மயக்கம் கொள்ளும். அதிசயம் என்னவெனில்.... அலையாடும் தலையாட்டல் போல... திரும்பும் பக்கமெல்லாம்... கேமரா கண்கள் தசை ஆட்டும். தவம் பூட்டும்.

இன்னும் இன்னும் சினிமா எடுக்கும் எல்லா தகவமைப்பும் கொண்ட வால்பாறை... பொக்கிஷம்.

கண் சிமிட்டுவதைப் போல படம் பிடியுங்கள். இந்த வரலாறு பதியப்பட வேண்டும்.

- கவிஜி

Pin It