கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- வெண்மணி அரிநரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நான் ஒரு குட்டி யானை. நான் எனது கூட்டத்துடன் இந்தியாவில் ஒரு காட்டில் வசிக்கிறேன். சிலநேரங்களில் நாங்கள் காட்டின் விளிம்பில் உள்ள கிராமங்களில் பயிர்களைத் தின்றுவிடுகிறோம். பின்னர் மனிதர்கள் எங்களைப் பதிலுக்குத் தாக்குகிறார்கள், வழக்கமாக இரு தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது.
எங்களுடைய வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கிறோம். எங்களது நீர்நிலைகள் விரைவாக மறைந்து வருகின்றன. பலநேரங்களில் எங்களுக்குப் பருகுவதற்கே நீர் கிடைப்பதில்லை. குளிப்பது பற்றிக் கேட்கவே வேண்டாம். காட்டிலிருந்து வெளியே வந்தால் நாங்கள் கொல்லப்படும் அபாயம் இருக்கிறது. நாங்கள் 'கொடிய’, ‘அபாயகரமான' விலங்குகள் என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன முட்டாள்தனம்! சில மனிதர்கள் செய்வதைப்போல நாங்கள் பிற விலங்குகளை உண்பதில்லை.
இதைவிட மோசமான விசயம் வேட்டைக்காரர்கள்தான். நான் பெரியவன் ஆனதும் எனக்குப் பெரிய தந்தங்கள் வளர்ந்துவிடும் என்றும் அப்போது நான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் என் அம்மா கூறுகிறார். நான் கொல்லப்படாவிட்டாலும் சிறை பிடிக்கப்படக் கூடும். சர்க்கஸ் அல்லது விலங்குக் காட்சி சாலைக்கு நான் கொண்டு செல்லப்படலாம். அல்லது மரங்களைச் சுமக்கவோ கோயில் திருவிழாக்காலங்களில் பங்கேற்பதற்கோ வேலையில் அமர்த்தப்படலாம்.
ஒரு யானை காட்டில் சுதந்திரமாக வாழ்ந்தால் 60 ஆண்டுகள் வாழ்கிறது. சிறைபிடிக்கப்பட்டால் எண்பது ஆண்டுகள் வாழ்கிறது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட யானைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுகின்றன. ஐந்தில் ஒரு யானை மட்டும் தான் 30 வயதைக் கடக்கிறது. காடு உண்மையிலேயே ஒரு அபாயகரமான இடம் தான்.
மனிதர்களே தங்கள் இயற்கையான வாழ்விடத்தில் இப்போது வாழ்வதில்லை. இந்தப் புவிக்கோளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி மனிதன் தனக்கு நன்மை செய்து கொள்கிறான். அப்படியானால் யானைகள் காட்டை விட்டு வெளிய வந்து மனிதர்களுடன் ஏன் வசிக்கக் கூடாது. மனிதன் தான் பூமியில் சிறப்பாக வழங்கக் கூடியவன் அல்லவா?அவன் நிச்சயமாக அவனது நாய்களுக்கும், பூனைகளுக்கும், குதிரைகளுக்கும், பன்றிகளுக்கும் ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் வழங்குவது போல உணவும் இருப்பிடமும் வழங்கிக் கொடிய காட்டிலிருந்து எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவான்.
2
அவன் அவற்றில் சிலவற்றைத் தின்று விடுகிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் அனைத்தையும் தின்று விடுவதில்லையே. நான் நல்ல உழைப்பாளி. எனவே என்னைக் கொல்லமாட்டான் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். அவனுக்குத் தந்தங்கள் தருவேன். எனது வாளின் முடியைக் கொண்டு அவன் கைவளையமும் மோதிரமும் செய்து அணிந்து கொள்ளலாம். இருந்தாலும் என்னுடைய வால் மிகவும் குட்டை தான். எந்த வகையிலாவது அது நடைமுறையில் உதவுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இந்தியாவில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பே சிறைபிடிக்கப்பட்ட யானைகள் இருந்திருக்கின்றன. எங்களுடைய முன்னோர்களான சடை யானைகளும் ராட்சத யானைகளும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியை வலம் வந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார்கள்.
நாங்களும் அழிவின் விளிம்பில் இருக்கிறோம். 1970ல் உலகில் 1.5 மில்லியன் காட்டு யானைகள் இருந்தன. இருபதாண்டுகளில் அவை 6,40,000 ஆகக் குறைந்து விட்டன. இந்தியாவில் இப்பொழுது 30,000 யானைகள் மட்டுமே இருக்கின்றன. மிக மூத்த யானை இதை என்னிடம் கூறியது.
கடந்த 100 ஆண்டுகளில் 65 பாலூட்டி இனங்கள் அழிந்து போயுள்ளன. ஆசிய சிங்கங்களுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். காட்டின் ‘அரசன்’ என்றழைக்கப்படும் சிங்கம் இன்று குஜராத் கீர் சரணாலயத்தில் அடைபட்டுவிட்டது. பிற அனைத்து இடங்களிலும் மறைந்து விட்டது. 2010 ஏப்ரலில் அந்தக் காப்பகத்தில் 411 சிங்கங்கள் மட்டுமே இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 1,00,000 புலிகள் இருந்தன. இந்தியாவில் மட்டும் 40,000 புலிகள் இருந்தன. இன்று உலகில் 6020 புலிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 1409 மட்டுமே உள்ளன. விரைவிலேயே புலிகள் இனம் அழிந்துவிடும். எங்கள் நிலை தேவலாம். ஆனாலும் நாங்களும் கவலையடைந்து தான் இருக்கிறோம்.
மனிதனோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொண்ட பறவைகளும் விலங்குகளும் பிழைத்திருக்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. மனிதர்களோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வது நிச்சயமாக அறிவுடைமை தான்! நாய்களையும் பூனைகளையும் காண எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அவர்கள் அச்சம் கொள்ள எதுவும் இல்லை. வேலையும் செய்யவேண்டியதில்லை. உண்பதற்கு நிறையக் கிடைக்கிறது. ஏராளமான வசதிகள். ஒரு யானையால் இதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.
3
யானைகளாகிய எங்களுக்கு நிறைய உணவு தேவை. நாங்கள் கண்டிப்பான தாவர உண்ணிகள். இந்தப் புவிக்கோள் ஏற்கனவே 630 கோடி மனிதர்களுக்கு உணவளிக்க வேண்டியுள்ளது. இன்னும் ஏராளமான உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும். நாங்கள் உயிர் வாழ்வதற்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன? நாங்கள் புதிய வாழ்விடத்தைத் தேடியாக வேண்டும். மனிதர்கள் மட்டும் எங்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் உணவுக்காக அலையும் துன்பத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார்களானால் எனக்கு வேலை செய்வதில் மறுப்பேதுமில்லை. யானைகள் வேலை செய்தால் என்ன தவறு? மனிதர்கள் வேலை செய்வதில்லையா?
நான் சிறை பிடிக்கப்படுவதை வெறுக்கிறேன். ஆனாலும் யானைப் பாகர்கள் மட்டும் இன்னும் சிறிது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வார்களானால், பின்னர் மனிதர்களோடு எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். பிறகு நாங்கள் பயிர்களை அழிக்க மாட்டோம்; மனிதர்களைத் தாக்க மாட்டோம் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
நன்றி: தி இந்து நாளிதழ்
26.12.2010.
புஷ்பா குருப்
தமிழில்: வெண்மணி அரிநரன் (
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சீனாவில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை விலங்கு பாண்டா கரடிகள். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, தாய்லாந்து, மெக்ஸிகோ மற்றும் பல நாடுகளின் வனவிலங்கு சரணாலயங்களிலும் இவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் சிச்சுவான், ஷான்சி மற்றும் கன்ஷி வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. உலகின் தற்போது 2000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உள்ளன. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்டு வாழும் இவை தற்போது தட்டுப்பாடான உணவின் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும் இந்த பாண்டா கரடிகள் பிறக்கும் போது 15 செ.மீ நீளமும் 200 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும். சுமார் 15 முதல் 20 வருடங்கள் வாழக்கூடியது. பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே தாயால் பராமரிக்க முடியும். எனவே மிருக காட்சிசாலைகளில் பிறக்கும் குட்டிகள் மனிதர்களால் பராமரிக்கப்பட்டாலும் இவற்றை எளிதில் பாதுகாக்கமுடியாமல் போனது. எனவே அதன் உணவு முறை மற்றும் மரபணு குறித்த ஆராய்ச்சியை பின்பற்றி தற்போது உணவு கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பாண்டா கரடிகள் அரிய வகை உயிரினம் மட்டுமின்றி மிகவும் விலை உயர்ந்த உயிரினமாகவும் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், இவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவுகளே.
சீனாவிடம் இருந்து பாண்டா கரடிகளை வாங்குவதற்காக அமெரிக்கா நிறைய பணம் செலவு செய்கிறது. வருடத்திற்கு சராசரியாக மூன்று மில்லயன் டாலர்களை அமெரிக்க செலவிடுகிறது. ஒரு பாண்டா குட்டியை வாங்குவதற்கு 6,00,000 டாலர்களை அமெரிக்க சீனாவிற்குக் கொடுக்கிறது. இந்த பணம் வனப்பகுதிகளில் வாழும் பாண்டா கரடிகளின் வாழ்கை மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படுகிறது. அழிந்து வரும் மூங்கில் காடுகள் இவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மிருகக்காட்சி சாலைகளில் பராமரிக்கப்படும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் தற்போது முன்னேற்றம் காணப்பட்டாலும், வனப்பகுதியில் வாழும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்ப்படவில்லை. United Nations Convention on International Trade in Endangered Species(CITES) மற்றும் U.S Endangered Species Act தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.
இன்று உலகம் முழுவதும் பாண்டா கரடிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டாலும் இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சீனாவின் கையில் மட்டுமே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. வனப்பரப்பை அதிகப்படுத்தி நிறைய மூங்கில் காடுகளை உற்பத்தி செய்தாகவேண்டியுள்ளது. முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செயற்கை கருவூட்டல் முறையில் பாண்டா கரடி பிறந்தது (Tai Shan). பாண்டா கரடிகளை வைத்து சீனா பணம் பண்ணும் வித்தை கற்றது பாண்டவிற்குத் தெரியாது போனாலும், அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க சீனா முயற்சி எடுத்தால் மகிழ்ச்சியே.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய விலங்கு சுமத்திரா புலிகள். உருவத்தில் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இவற்றின் நிறமும் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் வேறுபட்டு காணப்படும். ஆண் புலிகளுக்கு பிடரி மயிர் உண்டு. வேகமாக நீந்தும் தன்மை கொண்ட இந்த புலிகள், நீர் வாழ் உயிரினங்களை எளிதில் வேட்டையாடி உண்ணும். இது தவிர காட்டுப் பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடும்.
பொதுவாக அடர்ந்த மழைக் காடுகளில் இவை வசிக்கும். 12000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாக சுமத்ரா தீவுக்குள் மட்டுமே முடங்கிய புலிகள் பரிணாம வளர்ச்சியில் இன்று தனித்தன்மையோடு உருவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானூறுக்கும் குறைவான புலிகளே உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இவற்றைப் பாதுகாக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேளான் நிலங்களுக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதும், புலிகள் தொடந்து வேட்டையாடப்படுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மிகவும் அருகிவிட்ட (Critically Endangered) இனமாக இந்த புலிகள் International Union for Conservation of Nature ஆல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணமுடியாத இந்த வரையாடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் நீலகிரியை ஒட்டிய பகுதிகளில் வாழும் இவை மிகவும் அரிதான விலங்காக மாறியிருக்கிறது. 80 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட இந்த வரையாடு சுமார் 1200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடங்களில் வாழ்கிறது. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கிறது. பழனி மலை பகுதிகளிலும் அரிதாகக் காணப்படுகிறது. இந்த விலங்கை வேட்டையாடுவது தடை செய்யபட்டிருக்கிறது. நிறைந்த புல்வெளிப்பகுதிகள் இவற்றின் வாழ்வுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. தற்சமயம் வெறும் 2000 வரையாடுகள் மட்டுமே இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.
International Union for Conservation of Nature - தகவலின் படி இந்த விலங்கு அருகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். ஆண் பெண் இரண்டுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. இமாலய காட்டாடு மற்றும் அரேபிய காட்டாடு தவிர்த்து வனத்தில் வாழும் முக்கியமான ஆடு இதுவாக இருக்கிறது. இவற்றைப் பாதுகாக்க மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. வேட்டைகளில் இருந்து இவற்றைப் பாதுகாக்க இந்த வரையாடு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவேண்டும்.
- காணாமல் போகும் நீர் நாய்கள்
- அழிந்து வரும் சோலை மந்தி
- பழனி மலை தொடர்ச்சி
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?
- நான்கு கொம்பு மான் (Four horned antelope–Tetracerus quadricornis)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை
- புலிகளும் புரிதலும்
- சப்தங்கள் பொதுவானதா?
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?