அண்ணாவின் அரசியலை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அண்ணாவின் தமிழ்மொழி - இன - நாட்டு Anna_09உணர்ச்சியை வளர்த்தெடுத்த அவருடைய வரலாற்றுப் பங்களிப்பை எவரும் மறுத்துவிட முடியாது. இன்று கண்ணெதிரே தென்படும் பெரும்பான்மையான அகவை முதிர்ந்த தமிழ் உணர்வாளர்கள், பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து தமிழ்மொழி - இன- மேம்பாட்டுக்காகப் பணியாற்றி வருபவர்கள், ஒரு காலத்தில் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்டுக் களத்திற்கு வந்தவர்கள்தாம்.

அண்ணா மொழி - இன - நாட்டு உணர்வுச் செடிகளைத் தம் எழுத்தாலும் பேச்சாலும் சிந்தனைகளாலும் போற்றி வளர்த்த ஓர் இன உணர்வுத் தோட்டக்காரர் ஆவார். ஆனால் தன் தேவைக்கு ஏற்ப நறுக்கித் தான் விரும்பும் வடிவங்களில் ‘குரோட்டன்ஸ்’ செடிகளை வளர்த்தெடுக்கும் கைதேர்ந்த தோட்டக்காரராக அவர் இருந்தார்.

திருமால் மீது ஆண்டாளுக்கு இருந்த காதலாக மாறிப் போன அளவு கடந்த பக்தியைப் போன்று அண்ணாவின் மீது ஒரு சாராருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பும், அதுபோன்றே பெரியாரிடமிருந்து இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு வெளியேறி பெரியாரின் விடுதலை இயக்கத்தையே பலவீனப்படுத்தியவர் என்ற எண்ணத்தால் கருப்புச் சட்டைக்கான துணி நெய்யப்படும் போதே வெறுப்பு இழையைக் குறுக்கு இழைகளாகப் போட்டு நெய்த ஆடைகளை அணிந்து வரும் கருஞ்சட்டைத் தோழர்களுள் ஒருசாரார் கொண்டிருக்கும் காழ்ப்பும், அண்ணாவின் உண்மையான படிமத்தைக் காணவியலாதவாறு கருத்தை மறைக்கும் நூலாம் படைகளாக இருக்கின்றன.

அண்ணாவின் அரசியலில் முனை மழுங்கிய திராவிட இயக்கக் கோட்பாடுகள்:-

அண்ணாவின் தேர்தல் அரசியல், பெரியாரிடமிருந்து பதியம் போட்டுக் கொண்டுவரப்பட்ட அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் முனை மழுக்கியது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, அண்ணா இரண்டு அமைப்புகளையும் சேர்த்து ‘இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்று வருணித்தார். ஆனால், தேர்தல் அரசியலில் ஈடுபடும் தாம் எத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டும், எவற்றை நடத்தக் கூடாது என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். இரட்டைக் குழல் துப்பாக்கியில் அண்ணாவின் துப்பாக்கி முனகியது; முழங்கவில்லை. பெரியாருடைய துப்பாக்கியும் முழுமையாக மழுங்காதபடி பெருவாரியான தோட்டாக்களைத் தம்பிமார்கள் என்ற உரிமையுணர்வோடு அண்ணா அள்ளிக் கொண்டு வந்திருந்தார்.

அடிப்படைக் கொள்கைக் கூறுகளை முனை மழுக்கும் போக்கு அண்ணாவிடம் அவர் திராவிடர் கழகத்தில் பொதுச் செயலாளராக இருக்கும் போதே வெளிப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற நாளான ஆகஸ்டு 15ஐத் துக்க நாள் என்று திராவிடர் கழகத்தின் தலைவரான பெரியார் அறிவித்தபிறகும் ‘ஆகஸ்டு-15 இன்ப நாள்’ என்று அண்ணா அறிவித்தது அமைப்பின் வரம்பு மீறிய செயல்மட்டுமன்று; அது அமைப்பின் அடிப்படைக் கொள்கையை மொட்டையடிக்கும் வேலையும் கூட.

‘ஒருவனே தேவன்’

திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறித் தனி அமைப்பாகத் தி.மு.க.வை உருவாக்கிய பின்பு தமது தேர்தல் அரசியலுக்கு ஏற்ற வகையில் பல கொள்கைகளை முனை மழுக்கினார் அண்ணா. தீவிரமான சுயமரியாதைக்காரரான அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் சொற்களைத் தம் கட்சிக்கான கோட்பாடாகக் கற்பித்தார். கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொண்டனர். கடவுள் இல்லை என்று பரப்புரை செய்து வந்தவர்கள் இப்போது ஒரு தேவன் இருப்பதாக ஏற்றனர். இந்த மாற்றம் தி.மு.க.வுக்குத் தேவைப்பட்டது. இந்து மதத்தில் உள்ள இறைப்பற்றாளர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் வாக்குகளை ஈர்ப்பதில் இருந்த தடை இதனால் நீங்கிப் போனது.

பெரியாரின் கொடி கொளுத்தும் போராட்டமும், அண்ணாவின் தடுமாற்றமும்:

இந்தியத்தையும், இந்தியத் தேசியத்தையும், இந்திய ஓர்மையையும், பார்ப்பன - பனியா வல்லாதிக்கத்தையும் முற்றிலுமாக எதிர்த்த பெரியார் 1955ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல்நாள் ஒரு போராட்டத்தை நடத்த இருப்பதாகத் திருச்சியில் ஜுலை மாதம் 17ஆம் நாள் அறிவித்தார். அது இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவது என்ற போராட்டம். பெரியார் தமது தீர்மானம் பற்றிய அறிக்கையில் தெளிவாகக் கூறினார்:

“எங்களுக்கு - தமிழர்களுக்கு - தமிழ் நாட்;டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம் தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய ய+னியனில் இருக்க விரும்பவில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட ப+ர்ண சுயேச்சையுள்ளத் தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம் எங்கள் நாட்டைத் தனி - ப+ரண சுயேச்சை நாடாக ஆட்சி செய்ய எங்களுக்குச் சக்தி உண்டு; சகல விதத்திலும் எல்லாவிதமான வசதியும் உண்டு. மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.

“இந்திய ய+னியன் அரசியல் சட்டத்தில், சட்டப்படியான கிளர்ச்சியின் மூலம் பிரிந்து கொள்ளப் போதியபடி சட்டவசதி இல்லை; ... ஆனதால், நாங்கள் சட்ட சம்பந்தமான வழி மாத்திரமல்லாமல் வேறு எந்தவிதமான வழிமூலமானாலும் பிரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நாங்கள் பிரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம், எங்களுக்கு வடநாட்டாரால் நடத்தப்படும் இந்திய அரசாங்கம் ஏற்பட்ட பிறகுத் தோன்றிய எண்ணமல்ல. வெள்ளையனால் நடத்தப்பட்ட இந்திய அரசாங்கம், சர்வ வல்லமையுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலமான 1937-38 இலேயே தோன்றி, திராவிடநாடு கிளர்ச்சியை நடத்தி வந்திருக்கிறோம்.

...அன்னிய மொழியாகிய இந்தி மொழியை எங்கள் நாட்டிற்குள் அரசியலின் பேரால் பலாத்காரமாய்ப் புகுத்தி, மொழி, கலாச்சாரம், கல்வி முதலிய துறைகளிலும், அரசியலில் ஆட்சிமொழி என்கின்ற தன்மையிலும் புகுத்தி இருப்பதோடு, இந்தி படித்து பாஸ் செய்தவனுக்குத்தான் உத்தியோகம் என்கின்ற அளவுக்கு வடவராட்சி துணிந்து விட்டதால், இந்திய ஆட்சி தமிழ்நாட்டில் கூடாதென்கின்ற எண்ணம் எங்களுக்கு வலுப்பட்டு விட்டது...

ஆகவே, ‘இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவது, தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்கச் சம்மதப்படவில்லை’ என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதேயாகும்.

(விடுதலை - தலையங்கம், 20.7.1955 வே. ஆனைமுத்து(பதிப்), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -ஐஐஐ, சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி, 1974, பக்.1833-1834)

Anna_10பெரியார் அறிவித்த கொடி கொளுத்தும் போராட்டம், தமிழக முதல்வர் காமராசரின் அன்றைய அரசு ‘தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட மாட்டாது’ என்று (பெரியாரிடம் முன்னமே காட்டி ஒப்புதல் பெற்று) அறிக்கை வெளியிட்டதன் பேரில் ‘தற்காலிகமாக’ நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த போராட்டச் சூழலில் பெரியார் எல்லாக் கட்சிகளையும் ஆகஸ்டுக் கிளர்ச்சியில் ஈடுபடும்படி அழைக்கிறேன் என்று அறிவித்தார். அது உண்மையில் அவரைப் போலவே திராவிடநாடு கேட்டுக் கொண்டிருந்த அண்ணாவுக்கும் தி.மு.க.வுக்கும் விடுத்த அழைப்பாகும். பெரியாரை இன்னமும் தனது தலைவராகக் கருதிக் கொண்டிருந்த அண்ணா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கவில்லை. தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது பெரியாருக்கு உடன்பாடானது. ஏனெனில், அவரைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஓர் அன்னிய நாடு, இந்தியக் கொடி என்பது அன்னிய தேசியக் கொடி. பெரியார் இப்படிக் கேட்டார்:

“தமிழ்நாட்டில் வடவரின் ஆட்சிக்கொடி எப்படி ஆட்சிக்கொடி ஆகும்? தமிழ்நாட்டின் ஆட்சிக்கொடி வேறு; இன்றுள்ள வடவரின் ஆட்சிக்கொடி வேறு. அது வடநாட்டுக்கு ஆட்சிக்கொடியாகலாம்;; எங்களுக்கு அக்கொடி ஒரு கையகலத் துணிதானே! கை அகலக் கந்தல் துணிக்குள்ள மதிப்பைத்தானே நாங்கள் கொடுப்போம்!”

(பெரியாரின் திருவல்லிக்கேணி சொற்பொழிவு, 31.7.1955 ஈ.வெ.ரா.சிந்தனைகள். - , பக்.1838)

பெரியார் அழைப்பு விடுத்தும் அண்ணா இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முன்வரவில்லை. ஏனெனில் பெரியாருக்கு அரசியல் விடுதலை என்ற இலக்கு இருந்தது, அண்ணாவுக்குத் தேர்தல் அரசியல் கனவுகள் இருந்தன. 1956இல்தான் திருச்சி மாநாட்டில் 1957ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க. பங்கேற்கும் என்று, அதுவும் வாக்கெடுப்பு நடத்தி ‘தொண்டர்கள் விருப்பப்படி’ தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தொடக்கம் முதலே தேர்தல் பங்கேற்பைத் தடுக்கக் கூடிய எந்தச் செயல்பாட்டையும் அண்ணா தவிர்த்து வந்திருப்பதை ஆழ்ந்து நோக்கினால் எளிதில் கண்டு கொள்ளலாம். கொடி கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை மட்டுமின்றி தன் தேர்தல் அரசியலையே துறக்க வேண்டியதிருக்கும் என்பதை அண்ணா அறிவார்.திராவிடநாடு விடுதலை தமது அடிப்படைக் கொள்கையாக இருந்தாலும், பெரியாரே ‘பொதுவாக’ அழைப்பு விடுத்திருந் தாலும் அண்ணா அதை ஏற்கமுடியாது. கொடி கொளுத்தும் கிளர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள சாமர்த்தியமாகக் காரணம் கூறினார்:

“கொடி கொளுத்தும் போர் முறை பற்றி... நமது கருத்து என்ன, நமக்கு அது உடன்பாடானதா அல்லவா என்று எங்கே கேட்டார்கள் - எப்போது கேட்டார்கள்? பொதுச் செயலாளரை (அப்போது நாவலர் நெடுஞ்செழியன்) அழைத்துப் பேசியிருந்தால், அவர், திராவிட முன்னேற்றக் கழகம் இதுபற்றி என்ன கருதுகிறது என்று தெரிவித்திருக்கக் கூடும்... நாம் கலந்து பேச அழைக்கப் பட்டிருந்தால் கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்றால், இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ்காரர்களையும் நமது பக்கம் சேர்க்கும்படியானதாக இருக்க வேண்டும். கொடி கொளுத்துவது போன்ற முறை மூலம், காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஓர் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே வேறு முறையைக் கொள்வோம் என்று எடுத்துச் சொல்லி இருப்போம்.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - ஐ , கடிதம் - ஐஐ, 24.7.55, பக்.97)

கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்காமையை நியாயப்படுத்த, தங்கள் கட்சியை மதித்து அழைக்கவில்லை என்று காரணங்காட்டித் தம்பிமார்களின் தன்மானத்தைச் சீண்டினார்.

“அதென்ன என்னைக் கேட்கிறாயே! உனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது. அது அழைக்கப்படவில்லை - ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக் கிறாய். அவரை அழைக்கக் காணோம் - வேறோர் கட்சி, தன் நிர்வாகக் கமிட்டியில் தனக்குச் சரியென்றுபட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றிக் கிளர்ச்சி துவக்குகிறது - நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே - நீதான் சொல்லேன்!”

(மேலது, பக்.96)

முறையாகத் திருமண அழைப்பிதழைப் பெறாத தாய் மாமன்களுக்கு வரக்கூடிய திருமணப் புறக்கணிப்புக் கோபம் தம்பிமார்களுக்கு வரும்படி எழுதினார் அண்ணா. பெரியாரைப் போலவே தாங்களும், ஆனால் தனியாகப் போராட்டங்கள் நடத்தியிருப்பதாகத் தம்;பிகளுக்குக் கூறினார்.

“வடநாட்டு மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி... இரயில் நிறுத்தம், ஆச்சாரியார் வீட்டின் முன் மறியல் என்பவைகள், மாற்றுக் கட்சிக்காரரெல்லாம் கூட மறக்க முடியாத சம்பவங்கள் - தனியாகத் தான் நடத்தினோம்.” (மேலது, பக்.98)

பெரியார் அறிவித்த இந்தியத் தேசியக் கொடி எரிப்பும், அண்ணா பேசும் ஆச்சாரியார் வீட்டின் முன் மறியலும் சமமான போராட்டங்கள் அல்ல. ஆனால் அண்ணா அப்படித்தான் ஒப்பிட்டுப் பேசினார். பெரியாரின் போராட்டத்தில் இந்தியத் தேசிய மறுப்பு இருக்கிறது. அண்ணா நடத்திய கறுப்புக் கொடிப் போராட்டம் ஆச்சாரியாரின் திட்டத்திற்கு எதிர்ப்பு என்பது மட்டுமே. மேலும், காங்கிரஸ்காரர்களும் ஏற்கும்படியான போராட்டங்களைத்தான் நடத்த வேண்டும் என்று அண்ணா கதை படித்தார். உண்மையில், அப்போது காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசை பெரியார்தான் ஆதரித்துக் கொண்டிருந்தார். அண்ணா காமராசரையும் காங்கிரஸ் அரசையும் விமர்சித்துக் கொண்டிருந்தார்.

அண்ணாவின் போராட்டம் பற்றிய கருத்து கூட தம்பிமார்களை நிறைவு செய்தது. ஆனால், பெரியாரிடமிருந்து ‘சுவிகரிக்கப்பட்ட’ அடிப்படைக் கொள்கைகள் ஓசைப்படாமல் முனை மழுக்கப்பட்டன.

காணாமல் போன ஆரியர் - பார்ப்பனர் எதிர்ப்பு:

திராவிட இயக்கத்தின் அடிப்படை ஆரிய எதிர்ப்பும், பார்ப்பனிய எதிர்ப்பும் ஆகும். தம்மை ஆரியர் என்று அழைத்துக் கொண்ட பார்ப்பனர்களையும் அவர்களது மேலாதிக்கத்தையும் திராவிட இயக்கம் கடுமையாக எதிர்த்தது. அண்ணாவின் அரசியலுக்கு ஆரிய - பார்ப்பன எதிர்ப்பை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. 1955ஆம் ஆண்டு, அதாவது தேர்தலில் பங்கேற்க முடிவெடுப்பதற்கு (திருச்சி மாநாடு, 17-20 மே 1956) ஏழு மாதங்களுக்கு முன்பு, அண்ணா கூறிய கருத்துகள் மேலும் சில அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள அவர் தயாராகி விட்டதையே தெரிவிக்கின்றன.

28.9.1955 விடுதலையில் பெரியார் இவ்வாறு எழுதியிருந்தார்:

“ஆரியரை நடுத்தெருவில் நாளெல்லாம் போட்டு அடித்தாலும் இன்று கேட்பதற்கு நாதி இல்லை”

ஆரியர் என்று தம்மை அழைத்துக் கொள்கிறவர்களின் கொட்டம் கொஞ்சம் அடங்கியிருப்பதையே பெரியார் இவ்விதம் குறிப்பிட்டார்.

இதை அண்ணா மறுத்து திராவிடநாடு இதழில் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் எழுதினார். பார்ப்பனர்கள் இதுகுறித்து திருச்சி நகர் சதுக்கத்தில் கூடிப் பேசினர் என்றும், இந்து பத்திரிகை ஒரு குட்டித் தலையங்கம் தீட்டியது என்றும், உடனேயே குடுமியும் ப+ணூலும் உள்ள ஆரியர் உருவம் தாங்கிய சுவரொட்டிகளை அரசாங்கம் தடை செய்தது என்றும் அண்ணா எழுதினார். அதாவது ஆரியர்கள் இன்னமும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே அண்ணாவின் கருத்து.

அண்ணா இப்படி எழுதினார்:

“ஆரியர் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் ஆரியம். ஆரியரிடம் மட்டு மல்லாமல், திராவிடச் சமுதாயத்தினரிடம் இன்னும் பெருமளவுக்கு இருப்பதனாலும் ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆள வந்தார்கள் இருப்பதினாலும்தான். எனவேதான் தம்பி! நமது கழகம், ஆரியரை ஒழித்திடும் வேலையில் அல்ல, ஆரியத்தை ஒழித்திடும் வேலையில் ஈடுபடுகிறது.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் -ஐ, கடிதம் - 22, 9.10.55, பக்.212)

Anna_08மேலும் தொடர்ந்து எழுதிய அண்ணா, சகல சாதியினரையும் கண்டிக்கும் போக்கில் எழுதுகிறார். அதில் சகல வகுப்பினரின் நல்லாதரவையும் நாடும் நோக்கு ஒளிந்திருப்பதாகக் கருதலாம்.

“ஆரியம் அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை. அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது. ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது... உச்சிக்குடுமியும் ப+ணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சி களிடம் இருக்கிறது. நாயுடு களிடம் இருக்கிறது. ஏன், காமராஜரின் நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம்.

“எனவே தம்பி! நாம் ஆரியத்தை அறிவுச் சுடரால் அழித்தொழிக்க வேண்டும். அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை!

எட்டிப்போடா சூத்திரப்பயலே - என்ற ஐயர் பேச்சும் ஆரியம்தான்!

கிட்டே வராதே சேரிப்பயலே! என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!

படையாட்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்.

மறவர் முன்பு மரியாதையோடு நட! தேவர் வருகிறார். எழுந்து நில்! நாடார் அழைக்கிறார். ஓடிவா! செட்டியார் கேட்கிறார். தட்டாமல் கொடு! - என்று ஆரியம் பலப்பல முறைகளிலே தலை விரித்தாடுகிறது தம்பி, பல முறைகளில்!”

(மேலது, பக்.213)

திராவிடர்களுக்குப் பிறப்பிலேயே இழிவு கற்பித்த, சூத்திரப் பட்டம் சுமத்திய ஆரிய இனத்தை எதிர்த்த திராவிட இயக்க நிலைப்பாட்டிலிருந்து மாறி, சமூகப் பாகுபாட்டை பொதுவில் எதிர்ப்பவராக, ஆரியத்தை அனைத்து சமூகங்களிலும் காண்பவராக அண்ணா மாற்றம் கொள்கிறார். சமூகப் பாகுபாட்டைப் பொதுவில் எதிர்ப்பது சரியான பார்வையே என்றாலும், அப்பார்வை யைப் பற்றிக் கொள்ள வேண்டிய தேவை அன்றைக்கு அண்ணாவுக்கு இருந்தது. எல்லாச் சமூகங்களிலும் உள்ள வாக்காளர்களை ஈர்க்க அண்ணாவுக்கு அந்தப்பார்வை தேவைப்பட்டது எனக் கருதலாம்.

அதுபோலவே பார்ப்பனச் சமூகத்தின் எதிர்ப்பை நீக்கிக் கொள்ள வழி தேடினார் அண்ணா. தாங்கள் எதிர்ப்பது பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனியத்தைத்தான் என்று அண்ணா பேசத் தொடங்கினார். “பார்ப்பன ஒழிப்பு” என்ற தி.க. திட்டத்தில் தாம் ஏன் பங்கேற்க வேண்டும் என எதிர்;பார்க்கிறார்கள்?” என்று அண்ணா கேள்வி எழுப்பினார். பார்ப்பனர்களைத் தாங்கள் எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக அண்ணா கூறியதற்கு ‘அது என்ன ஈயம்?’ என்று திராவிட கழகம் ஏளனம் செய்தது.

‘பார்ப்பனர்களை ஒழிப்பது தி.க.வின் திட்டமானால் அதை அவர்கள் ஒழிக்கட்டும், தம்மைப் போராட்டத்திற்கு ஏன் எதிர்பார்ப்பது?’ - என்று அண்ணா கேள்வி எழுப்பினார்.

“பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை என்று 1953இல் கூறிவிட்டு 54,55இல் அக்ரகாரத்தைக் கொளுத்தவும், பார்ப்பனர்களை விரட்டவும் வேண்டும் என்று கூற வேண்டிய விதமாகப் பார்ப்பனர்களிடம் திடீரென்று அடக்க முடியாத ஆத்திரம், போக்க முடியாத பகை ஏற்படக் காரணம் என்ன? தி.க.வினர் கூறுவரா? எண்ணிப் பார்த்தால்தானே கூற.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - ஐஐ, கடிதம் - 43, 25.3.56, பக்.46)

திராவிடர்; கழகம் ஓர் இயக்கம்; தி.மு.க. ஓர் அரசியல் கட்சி; தேர்தலில் பங்கெடுக்கும் முடிவை அறிவிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அண்ணா இந்த சமரசப் போக்கை வெளிப்படுத்தினார். தி.க. தான் நடத்தும் போராட்டங்களுக்கு தி.மு.க.வையும் அழைப்பது அண்ணாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. பணபலம், பதவிபலம், அதிகாரபலம், பத்திரிகை பலம் இவற்றுடன் அதிகார மையமாக விளங்கிய பார்ப்பனச் சமூகத்துடன் ஒரு சமரசப் போக்கைக் கடைபிடிப்பது தன் அரசியலுக்கு நல்லது என்று அண்ணா கருதியிருக்க வேண்டும்.

பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு: ஒதுங்கிக் கொண்ட தி.மு.க.

தந்தை பெரியார் கணபதி உருவ பொம்மை உடைப்புப் போராட்டத்தை அறிவித்தார். அதன்படி 1953 மே மாதம் 27ஆம் நாள் பிள்ளையார் பொம்மை உடைக்கப் பட்டது. இப்போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வில்லை. பிள்ளையாரை வணங்குவதுமில்லை, உடைப்பதுமில்லை என்பது அண்ணாவின் நிலைப்பாடு. பிள்ளையார் பொம்மையை உடைக்காமல் ஒதுங்கியிருந்த காரணத்தை அண்ணா கூறினார்.

“பிள்ளையார் உடைப்பின்போதே, நாம், நம்மோடு நாளாவட்டத்தில் வந்து சேரவேண்டியவர்களை வீணாக வெறுப்படையச் செய்து விடும் என்றதனால்தான் ஒதுங்கி இருந்தோம்.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் -ஐ , கடிதம் - 11. 24.7.1955, பக்.99)

அண்ணா 1947 ஆகஸ்டு 15ஐத் துக்க நாளாகக் கடைபிடிக்க மறுத்தமைக்கும், 1955இல் பெரியார் அறிவித்த இந்தியத் தேசியக் கொடி கொளுத்தும் போராட்டத்தில் பங்கேற்க மறுத்தமைக்கும், அதற்கு முன்பு பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டமைக்கும் கூறிய காரணம் “அது நம்மோடு வந்து சேரக் கூடியவர்களை வந்து சேரவிடாமல் தடுத்துவிடும்” என்பதுதான். திராவிட நாடு விடுதலைப் போருக்கான போராளிகளின் பெருக்கத்தை அண்ணா குறிப்பிடுகிறார் என்று அப்போது எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். அது அவரது கட்சிக்கான வாக்காளர் கூட்டத்தின் வளர்ச்சியையே குறித்தது.

அண்ணா எதிர்பார்த்தது போலவே, தி.மு.க.வின் தொண்டர் படையும், ஆதரிக்கும் வாக்காளர் எண்ணிக்கையும் பெருகியது. தி.மு.க.வில் படையணிகள் பக்திமான்களால் நிரம்பியது. தி.மு.க.வின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், கடவுள் எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு போன்றவை முடங்கின. அண்ணாவுக்கு எப்போது எதை அடக்கி வாசிக்க வேண்டும், எதை அழுத்தி வாசிக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும்.

தேர்தல் அரசியலைக் கைக்கொண்ட தி.மு.க. தேர்தல் வெற்றிகளைக் குவிக்கச் சாதியத்தை வருடிக் கொடுத்தது. அது அண்ணா அறிந்தே செய்ததுதான். பல்வேறு சாதிப் பிரிவினரை ஈர்க்கவும், குறிப்பாக முக்குலத்தோரை தி.மு.க.வின் ஆதரவு நிலைக்குள் கொண்டுவரவும் முதுகுளத்தூர் கலவரச் சூழலை தி.மு.க தலைமை எப்படிப் பயன்படுத்தியது என்பது விரிவாகவும், தனியாகவும் ஆய்வுக்கு உட்படுத்தத் தகுதியுடைய ஒன்றாகும். 1950களில் சாதிகள் அரசியற் படுத்தப்பட்டமைக்கும், அரசியல் சாதிமயமானதற்கும் அண்ணாவின் தலைமையிலான திமுகவும் பங்களித்தது. இது திராவிட அரசியலின் பிறழ்நிலைப் போக்காகும்.

அடிப்படைக் கொள்கைகளை முனை மழுக்கும் செயல்பாட்டின் உச்சகட்டமாக 1967 பொதுத் தேர்தலைச் சந்திக்க அண்ணா உருவாக்கிய கூட்டணி அமைந்தது. 1967ஆம் ஆண்டில் அண்ணா பார்ப்பனீயப் பாதுகாவலரான இராஜகோபாலாச்சாரியாருடன் இணைந்து உருவாக்கிய கூட்டணி உறவு ஆரிய எதிர்ப்பு என்ற கூறினை அடியோடு ஒழித்தது. இராஜாஜி பெரியாருக்கு நெருங்கிய நண்பர்; தன் தனிப்பட்ட வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கக் கலந்தாலோசிக்கும் அளவுக்கு பெரியாருக்கு நெருக்கமான நண்பர். ஆனால், பெரியாரால் இராஜாஜியுடன் அரசியல் தளத்தில் இணைய முடியவில்லை; ஆனால் அண்ணாவால் முடிந்தது.

ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்கைகளைக் கைவிடுவது என்ற போக்கு அண்ணாவின் காலத்திலேயே தொடங்கி விட்டது. திராவிட முன்னேற்றம் பேசும் கட்சியில் பார்ப்பனர்களும், மார்வாடிகளும் இன்று முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். திராவிடக் கட்சிகளுள் ஒன்றுக்குத் தலைமையேற்றுள்ள பார்ப்பனப் பெண்மணி தன்னைப் ‘பாப்பாத்திதான்’ என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடிந்தது. அண்ணாவின் தி.மு.கவில் மிக முக்கியத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் அண்ணாவின் காலத்திலேயே பொறுப்பு வகித்த நாவலர் நெடுஞ்செழியன் கூட ஒரு பார்ப்பனப் பெண்மணியைத் தம் தலைவராக ஏற்க முடிந்தது. பார்ப்பன அரசியல் குருவான இராஜாஜியுடன் அண்ணா ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் பரிணாம வளர்ச்சியே தி.மு.க.வின் பாரதீய ஜனதா கட்சியுடனான எதிர்காலக் கூட்டணி உறவும், அண்ணாவுக்குப் பின் வந்த தி.மு.க. தலைமை இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ‘ஒரு சமூக இயக்கம்’ என்று அழைத்து, அதை அரவணைத்து ஒட்டி உறவாடியதும்.

பிரிவினைவாதக் கோரிக்கையாளர்கள் தேர்தலில் நிற்க இயலாதவாறு அரசியல் சட்டத்தில் 16ஆவது சட்டத்திருத்தம் (1963) வந்தபோது, தி.மு.க.வின் தலைமையால் பின்னிப் பின்னிப் பேசியே வளர்க்கப்பட்ட திராவிடத் தனிநாட்டுக் கனவு சடாரென்று கைகழுவப் பட்டமைக்குக் காரணம் அது கோளாறான கோரிக்கை என்பது மட்டுமன்று, தேர்தல் அரசியல் என்ற கரையான் விடுதலை அரசியலின் உள்ளீட்டை முற்றிலுமாக அரித்து ஊனப்படுத்தியிருந்ததும் தான்.

(வரும்)

- முனைவர் த.செயராமன்

Pin It