'சமூகநீதித் தமிழ்த் தேசம்" மே மாத இதழில் கந்துவட்டிக் கொடுமைகளைப் பற்றி எதிர்வன் எழுதி இருந்தார். கொலைக்கும் அஞ்சாத கொடுவட்டித் தொழில் அது என்பதைச் சான்றுகளுடன் அவர் விளக்கியிருந்தார். ஆனால் இக்கொடிய வட்டித் தொழிலையே தங்கள் “வாழ்க்கைத் தொழிலாக” ஏற்றுக் கொண்டுள்ள “கொங்கு மக்களைப்” பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வரலாற்றில் அய்ரோப்பாக் கண்டத்தில் வட்டித் தொழிலுக்குப் பெயர் போனவர்கள் யூதர்கள். செருமானியர்களின் யூத வெறுப்பிற்கு யூதர்களின் வட்டித் தொழிலும் ஒரு காரணம் எனக் கூறுவது உண்டு. சேக்சுபியரின் சைலக்கை யாரும் மறந்துவிட முடியாது. கொடுத்த கடனுக்கு நெஞ்சாங்குலைச் சதை கோரிய யூதன் அவன்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வட்டித் தொழிலில் கொழித்தவர்கள் செட்டியார் சமூகத்தினர். காரைக்குடி, 'நாட்டுக் கோட்டை'ச் செட்டியார்கள் “திரைகடல் ஓடித் திரவியம்” தேடியவர்கள் பெரும்பான்மையான அவர்களின் திரவியம் வட்டித் தொழில் வழியாகவே வந்தது. இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து எனத் தெற்காசியா முழுவதும் பரவித் தொழில் புரிந்தவர்கள் அவர்கள். ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' என்ற இரு புதினங்களும் (தமிழின் முதல் புலம்பெயர் புதினங்கள்) இப்“புலம் பெயர் தமிழர்களைப்” பற்றி விரிவாக நயனுறப் பேசுகின்றன. அவர்களை “வட்டிக் கடைத் தமிழர்கள்” என்றே ப.சிங்காரம் அழைக்கின்றார். 'புயலிலே ஒரு தோணியில்' வரும் மெடான் நகர மொஸ்கி ஸ்ட்ராட் (இந்தோனேசியா) செட்டிக்கடைத் தெரு வட்டிக்கடை “பெட்டியடிப் பையன்”களின் கதைகள் சோகச்சுவை நிரம்பியவை.
அன்றைய “செட்டிநாட்டுக்” காரர்களை ஒத்தவர்களாகவே உள்ளனர் இன்றைய இக் “கொங்கு நாட்டுக்" காரர்கள். அன்று அவர்கள் கடல் கடந்து 'திரவியம்' தேடினார்கள். இன்று இவர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சென்று 'திரவியம்' தேடுகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதிகள் (வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியப் பகுதிகள்), கரூர் மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதிகள் (அரவக்குறிச்சி, பள்ளபட்டிப் பகுதிகள்), திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள் (ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஒன்றியப் பகுதிகள்) ஆகியவை தமிழ் நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள கொடிய வறட்சிப் பகுதிகள் ஆகும். முற்றிலும் வானம் பார்த்த நிலங்கள். வானம் பொய்த்தால் கடும் பஞ்சம் தலைவிரித்தாடும் இப் பகுதியை 'சின்ன இராமநாதபுரம்' என அழைக்கலாம். அங்குள்ளவை கரிசல் காடுகள், இங்குள்ளவை செம்மண் நிலங்கள்.
உழவுத் தொழிலைத் தவிர்த்து வேறு எந்தத் தொழிலும் இங்குப் பெரிதாகத் தலைகாட்டவில்லை. வெள்ளகோவில் நகரத்திலும், அதனை ஒட்டிய சில ஊர்களிலும், மூலனூரை ஒட்டிய புதுப்பை, எரசினம்பாளையம், மொங்கநல்லாம்பாளையம் போன்ற சில ஊர்களிலும் அண்மைக் காலத்தில் விசைத்தறிக் கூடங்கள் தோன்றி நடைபெற்று வருகின்றன. இவை கரூர் துணி ஏற்றுமதி வணிகத்தை நம்பி இயங்குபவை. இத்தொழிலிலும் ஏற்றுமதியில் ஏற்படும் பின்னடைவுகள், மின்கட்டண வெட்டுஃஉயர்வு, நூல் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு தடுமாறுகின்றது. மேலும் இப்பொழுது இத்தொழிலில் நுழைந்துள்ள புதிய தானியங்கித் தறிகள் பெரும் முதலீட்டைக் கோருகின்றன. சிறு முதலீட்டாளர்கள் தொழிலைக் கைவிடும் நெருக்கடியும் ஏற்படுகிறது. புதிதாக இத்தொழிலில் நுழைவோர் இழப்பிற்குள்ளாகும் அவலமும் நேர்கிறது.
உழவுத் தொழிலும் தொடக்கக் காலத்தில் சிக்கலின்றி நடைபெற்றிருக்கக் கூடும். மார்க்;சு குறிப்பிடும் பழங்கால இந்தியாவின் தன்னிறைவுச் சிற்றூர்களாக இப்பகுதி ஊர்களும் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு உணவுப் பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை போன்றவை மட்டும் பயிரிட்ட காலத்தில் மிகுந்த நீர் தேவைப் பட்டிருக்காது. ஏற்றம் கட்டி நீர் இறைத்த பொழுது கிணற்று நீரும் முற்றாக இறைக்கப்பட்டு வற்றிப் போயிருக்காது.வானமும் மாதம் மும்முறை பெய்து நிலத்தடி நீரைப் பெருக்கி இருக்கக் கூடும். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை மூட்டைகள் வீடு முழுவதும் நிறைந்து பெருகிக் கிடந்ததை இக் கட்டுரையாளனும் சிறியவனாய் இருக்கும் பொழுது கண் குளிரக் கண்டு மகிழ்ந்திருக்கிறான்.
மின்சாரமும், அதனை ஒட்டிப் பணப் பயிர்களும் உழவுத் தொழிலுக்குள் நுழைந்த பொழுதுதான் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பணப்பயிருக்கு மாறிய உழவன் இறைவைப் பொறியைப் 'பம்ப்செட்" பயன்படுத்தி, கிணற்று நீரை உறிஞ்சத் தொடங்கினான். கிணறு வற்றத் தொட்ங்கியது. மழை பொய்த்தலும் கூடவே தொடர்ந்தது. கிணற்றை ஆழப்படுத்தத் தொடங்கியவன், ஆழ்துளைக் கிணற்றுக்கு மாறினான். வெள்ளகோவில், மூலனூர், ஒட்டன்சத்திரப் பகுதிகளில் ஆளை மிரட்டும் ஆள்துளை எந்திரங்கள் வலம் வரத் தொடங்கின. ஒவ்வோர் உழவனும் போட்டி போட்டுக் கொண்டு துளைக் கிணறுகள் அமைக்கத் தொடங்கினான். மழை பொய்த்தால், ஆழ்துளைக் கிணற்றில் நீர் குறைந்தால், உடனே இருக்கின்ற கிணற்றை ஆழப்படுத்துவது அல்லது புதிய ஒன்றைத் தோண்டுவது என்ற கட்டாயம் ஏற்பட்டது. விளைவு நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போய் இன்று ஆயிரம் அடி தோண்டினாலும் நீரைக் காண்பது அரிதாகி விட்டது. பலர் கடனாளி ஆகிப் போயினர்.
உழவர்கள் ஒரு நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டனர். பணப் பயிரை எடுத்துக் கொண்டாலும் கூட தொடக்கத்தில் இப்பகுதி உழவர்கள் மிளகாய், புகையிலை, கடலை என்றளவில் பயிரிட்டு வந்தனர். இவை ஒரு குறிப்பிட்ட பருவகாலப் பயிர் களாக இருந்தன. கிணற்றில் நீர் இருந்தால் பயிரிடு வார்கள். இல்லை யெனில் சோளம், கம்பை விதைத்து விடுவார்கள். அவை விளையாவிட்டாலும் ஆடு மாடுகளுக்குத் தீனி ஆகிவிடும். ஓட்டன்சத்திரம் காய் கறிச் சந்தை புகழ் பெறத் தொடங்கிய பொழுது மிளகாய், புகையிலை, கடலையை விட்டுச் சந்தை வேளாண்மைக்கு (மார்கெட் வெள்ளாமை) மாறத் தொடங்கினர். இந்தச் சந்தை வேளாண் மை உழவுத ;தொழிலை முழுக்க முழுக்க ஒட்டுவகைக் காய்கறிச் சாகுபடியாக மாற்றி விட்டது, வந்தது தீவினை.
ஒட்டுவகைக் காய்கறிகள் (கத்திரி, தக்காளி, பாகற்காய், அவரை, கொத்தவரை, வெண்டைக்காய் போன்றவை அனைத்தும்) பருவம் சார்ந்து விளைபவை அல்ல. எப்பருவத்திலும் அவற்றை விளைவிக்கலாம். அவற்றின் நல்விளைச்சலுக்குக் கூடுதல் மருந்தும் உரமும், கூடவே கூடுதல் நீரும் தேவை; உடன் உழவுத் தொழிலாளர்களும் கூடுதலாகத் தேவை. ஒட்டு மொத்தமாய் வேளாண் செலவு கூடி விடுகிறது. காய்கறி விதைகளையும் உழவன் விலைக்கு தான் வாங்க வேண்டும் என்பதையும் மறந்து விடக் கூடாது. சிலபல சமயங்களில் வாங்கி வரும் விதைகள் முளைக்காமல் மோசம் செய்துவிடுவதும் உண்டு. வேளாண் செலவை இப்பகுதி மக்கள் 'முட்டுவலிச் செலவு" என்கிறார்கள். 'முட்டுவலிச் செலவை" ஈடுகட்டிக் காய்கறிகளை நல்ல முறையில் விளைவித்து, சந்தைக்குக் கொண்டு செல்லும் பொழுது அங்கே உழவனுக்குக் காத்திருக்கும் பேரிடி. பயிரிடும் பொழுது விற்ற விலையில் பாதி விலையே விளைவித்த காய்கறிகளுக்குப் பேசப்படும். கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு ஏது வழி? காய் கறிகளுக்கு விலை தேடிச் சந்தை சந்தையாய் அலையும் காட்சிகள் கண்ணீரை வரவழைக்கும். கட்டுபடியாகும் விலை கிடைக்காத பொழுது சாலையோரங்களில் விற்க வந்த காய்கறிகள் அனைத்தையும் வெறுப்பில் வேதனையில் உழவன் கொட்டி விட்டுப் போய் விடும் நிகழ்வுகளும் உண்டு.
இப்பகுதி உழவர்களின் வேதனையைப் பெருக்குவதில் வேறு சில காரணிகளும் சேர்ந்து கொண்டன. பொதுவாகவே கால்நடையை உழவர்களின் செல்வம் என்பார்கள். 'மாடு" செல்வத்தைக் குறித்து நின்றதையும் நாமறிவோம். காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், ஒட்டன்சத்திரம் பகுதிகள் கால்நடை வளர்ப்பிற்கு மிகவும் ஏற்றவை. இப்பகுதி நிலங்களில் 'கொழுக்கட்டைப்புல்" என்றொரு வகை புல் நன்றாக வளரும். மழை இல்லாத காலங்களில் இப்புல் காய்ந்து கிடக்கும். மழை பெய்தவுடன் அப்படியே துளிர்த்துச் செழிக்கும். நல்ல நிலத்தில் முழங்கால் உயரத்திற்கு மேலாக வளரும்.
சென்னைப் பல்கலைக்கழகச் சொல்லகர முதலி இப்புல்லை, “கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ளதும், கால்நடைகள் மேய்வதற்கு உரியதுமாகிய புல்வகை” என்கிறது. அதே அகரமுதலி அச்சொல்லிற்கு ஆங்கிலத்தில் “கயவவநniபெ கழச உயவவடந” (கால்நடைகள் கொழுத்து வளர்வதற்கானது) என்று பொருள் விளக்கம் தருவது மிகவும் கவனிக்கத்தக்கது. இப்புல் விளையும் காடுகளை இப்பகுதி மக்கள் 'கொரங்காடு' என்கிறார்கள். இக்கொரங்காடுகளில் மேய்ந்து கொழுத்து வளர்ந்த காளைகள்தான் 'காங்கேயம்' காளை மாடுகள் என அழைக்கப்படுகின்றன. பெரும் நிலக்கிழாரான காங்கயம் சருக்கரை மன்றாடியாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் கொரங்காடுகளில் ஆயிரக்கணக்கான மாடுகளும் காளைகளும் மேய்ந்து வளர்ந்ததால் இப்பகுதி இன மாடுகளுக்கு அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
'கொங்கு" உழவர்களின் பெருமைக்குரிய சொத்தாகக் கருதப்பட்ட 'காங்கேயம் மாடுகள்" இன்று கண்ணில் காணா மாடுகளாகி விட்டன. உலகில் வாழ்ந்து மறைந்த உயிரினங்களின் பட்டியலில் காங்கேயம் கால்நடை இனமும் சேர்ந்து கொள்ளும் பேரவலம் உருவாகி வருகிறது. இதற்கு வித்திட்டது அரசின் 'வெள்ளைப் புரட்சி"த் திட்டம்தான். பசுமைப் புரட்சி எப்படித் தமிழ் மண்ணின் மரபு வேளாண்மையையும், மரபுப் பயிரினங்களையும் அழித்து ஒழித்ததோ, அது போலவே இவ்வெள்ளைப் புரட்சி கொங்கு மண்ணின் மங்காச் செல்வமான மாட்டினத்தையும் மாய்த்து விட்டது.
மிகுந்த பால் தந்ததால் அரசு அறிமுகப்படுத்திய கலப்பின மாட்டிற்குப் பெரும்பாலான உழவர்கள் மாறினர். இக்கலப்பின மாடுகளை இம்மக்கள் “சிந்து மாடுகள்” என அழைக்கின்றனர். இம் மாற்றத்தை வேறு சில காரணிகளும் ஊக்குவித்தன. உழவு உந்துகள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியவுடன் பாரவண்டி இழுப்பதற்கும், நிலத்தை உழுவதற்கும் காங்கேயம் காளைகள் தேவையற்றவை ஆயின. ஏற்கெனவே கிணறுகளில் இறைவைப் பொறிகள் பொருத்தியவுடன் காளை மாடுகள் கொண்டு ஏற்றம் இறைப்பதும் நின்று போனது. பணப்பயிர் வேளாண்மையால் கம்பு, சோளம், கேழ்வரகு திணைப் பயிர்களின் விளைவிப்பும் குறைந்து போனது. இதனால் கால்நடைக்கான தீவனம் கிடைப்பது அரிதானது. மழைப் பொழிவும் அடிக்கடி பொய்த்துப் போனதால் 'கொரங்காடு" களும் காய்ந்து போயின. இவையெல்லாம் “சிந்து மாடுகள்” இம் மண்ணிற்குள் நுழைய வழியமைத்துக் கொடுத்தன. ஆனால் எந்தச் சிந்து மாடுகள் சுமையைக் குறைக்கும் என்றும் செல்வத்தைச் சேர்க்கும் என்றும் நினைத்தானோ அவையே இன்று சுமையாக மாறிப் போயிருப்பதுதான் உழவனின் சோக வாழ்க்கை முரண்.
மரபான காங்கேயம் காளை மாடுகளுக்குக் கொழுக்கட்டைப் புல்லும், சோளம், கம்பந்தட்டுகளுமே போதுமானவை. வண்டி இழுக்கும் காளைகளுக்குக் கூடுதலாகச் சில சமயங்களில் பருத்திக் கொட்டைகள் வைப்பது உண்டு. ஆனால் இன்றைய சிந்து மாடுகளுக்கோ அவை நன்றாகப் பால் கறக்க வேண்டுமானால் உயர்ந்த கலப்பினத் தீவனங்கள் வழங்க வேண்டும். மேலும் நம் நாட்டுக் காலநிலைகளுக்குப் பொருந்தி வராததினாலோ என்னவோ பல்வேறு வகை நோய்கள் இம் மாடுகளைப் பதம் பார்க்கத் தொடங்கின. இதனால் தனக்கான மருத்துவச் செலவுகளைக் காட்டிலும் மாடுகளுக்கான மருத்துவச் செலவு கூடிக் கொண்டே போனது. மொத்தத்தில் சிந்து மாடுகளைப் பேணும் செலவு கூடிப் போக, பால் விலையோ அதற்கேற்றாற் போல் ஏறாமல் உழவனின் கையைக் கடிக்கும் விலையானது. “உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது” என்ற பழமொழி மீண்டும் இங்கே பொருள் மொழியானது.
ஆடு வளர்ப்பிற்கும் இப்பகுதி பெயர் போனது. ஆடு வளர்ப்பிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செந்நிற மயிர்கொண்ட செம்மறி ஆடுகளையே இங்கு உழவர்கள் வளர்த்து வந்தனர். ஆனால் இப்பொழுது காணப்படும் ஆடுகள் ஒருவகை பழுப்புக் கலந்த வெள்ளை நிறம் கொண்டவை. நல்ல வேளையாக இவ்வாடுகள் கலப்பின ஆடுகள் அல்ல. சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்டு வளர்க்கப்படுவதால் இவை “மேச்சேரி ஆடுகள்” என்றே அழைக்கப்படுகின்றன.
உண்மையிலே ஆடுவளர்ப்பு உழவனுக்கு நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய தொழில்தான். கறி விலை ஏறிக் கொண்டே போவதால் கொழுத்த ஆட்டுக் குட்டிகளும் நல்ல விலைக்கு விற்கின்றன. ஆனால் ஆடு வளர்ப்பிலும் உழவன் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறான். முதலில் ஆடுகளை நோய்த் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவது பெரும் அறைகூவலாகவே மாறியுள்ளது. முன்பெல்லாம் ஆடுகளை நோய் தாக்குவது என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கும். 'சொக்குத் தாக்குதல்" என்ற ஒன்றைச் சொல்வார்கள். இளம் சோளப்பயிரை ஆடுகள் மேய்ந்து விட்டால் தொண்டை கட்டி மூச்சடைத்து இறந்து விடும். நாட்டு மருந்து, மந்திரம் கொண்டே 'சொக்குத் தாக்குதலி"லிருந்து ஆடுகளைக் காப்பாற்றி விடுவார்கள். அதுபோலவே கொழுக்கட்டைப் புற்களுக்கிடையில் வளரும் மிளகாய்ப் ப+ண்டுச் செடியை ஆடுகள் மேய்ந்து விட்டால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விடும். அச்செடிகளை அகற்றுவதன் மூலம் ஆடுகளைக் காப்பாற்றுவார்கள்.
ஆனால் இன்றோ மனிதனைப் போலவே ஆடுகளையும் புதுப்புது வகையான நோய்கள் தாக்குகின்றன. சப்பை என்றொரு கொடிய தொற்று நோய் விரைந்து பரவிப் பட்டி பட்டியாய் ஆடுகளைக் கொன்று விடுகிறது. அந்நோய் கண்ட ஆடு நுரை தள்ளி துடி துடித்து இறந்து விடும். அவ்வாறே அம்மை நோய,; ஒரு காலத்தில் மனிதனை மிரட்டிய அம்மை நோய் இப்பொழுது அவனைப் பெரிதாகத் தாக்குவதில்லை. மருத்துவ அறிவியல் ஏறத்தாழ சின்னம்மை பெரியம்மைகளை ஒழித்து விட்டது. ஆனால் ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய் மனித அம்மையை விடக் கொடிதாய் இருக்கிறது. கால்நடை நோய் பெருக்கத்தினால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள கால்நடை மருத்துவர்கள் (அரசு மருத்துவர்களையும் சேர்த்து) உழவர்களிடம் காசு கறந்து விடுகிறார்கள். செலவு செய்தும் ஆட்டையோ, மாட்டையோ காப்பாற்ற முடியாமல் போகும்பொழுது உழவன் துடிக்கினற துடிப்பை உடன் வாழ்ந்து பார்த்தால்தான் புரியும்.
இவ்வாறு புதிது புதிதாகக் கால்நடை நோய்கள் தோன்றுவதற்கான காரணம் உழவன் பயிர்களுக்குப் பாவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இருக்கலாம். பயிர்களுக்கு அடிக்கும் இம்மருந்து காற்றில், ஆடு மாடுகள் மேயும் புற்களுக்கும் பரவுகிறது. அவற்றில் மேயும் ஆடுமாடுகள் நோய்களுக்கு உள்ளாகலாம். ஆனால் இது குறித்த ஆய்வுகளோ, தடுக்கும் வழிகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
ஆக, வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும் மீள உழவன் தேடிய ஒவ்வொரு வழியும் அடைபட்டுக்கொண்டே போக, வாராது போல் வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்ட வழிதான் கந்துவட்டித் தொழில். இப்பகுதிக்குள் இத்தொழில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி இஸ்லாமியர் வழியாகவே நுழைந்ததாகத் தெரிகிறது. (இது குறித்த விரிவான கள ஆய்வுகள் தேவை). வடக்கே மும்பை, ஐதராபாத் முதலான நகரங்களில் வட்டித் தொழில் புரியும் முஸ்லிம்களுக்கு உதவியாளர்களாக (வட்டித் தண்டல்காரர்களாக) அழைத்துச் செல்லப்பட்ட வறிய உழவர்கள் அவர்களிடம் தொழில் கற்றுப் பின்பு, தாங்களாகவே வட்டித் தொழில் தொடங்கி, அவர்களுக்குத் துணையாக மற்றவர்களை (பெரும் பாலும் நம்பிக்கைக்குரிய உறவுப் பையன்களை) அழைத்துச் செல்ல, பின்னர் அவர்களும் தனியாகத் தொழில் தொடங்க… இப்படியாக வளரத் தொடங்கிய இத்தொழில் இன்று வெள்ளகோவில், முலனூர், அரவக்குறிச்சி, பள்ளபட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இப்பகுதிகளை முழுமையாக வளைத்து நிற்கிறது.
காசில்லாதவன் வெளியூர் போய் காசுடன் வரக்கண்ட, கையில் ஏற்கெனவே கொஞ்சநஞ்சக் காசு வைத்திருந்தவர்கள் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராட்டிரம் என தங்களுக்குத் தெரிந்தவர்கள் வட்டித் தொழில் புரியும் இடங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள். தமிழ் நாட்டிற்குள்ளும் சிறு பெரு நகரங்களில் உள்ள தொழிலாளர்களைக் குறிவைத்து நகரத் தொடங்கினார்கள் (சென்னை, கோவை, திருப்பூர், சேலம் முதலான எல்லா நகரங்களிலும் மூலனூர், ஒட்டன்சத்திரம் கந்துவட்டிக்காரர்களைக் காணலாம்). காசில்லாதவர்கள் ஆடுமாடுகளை விற்றுக் காசு பண்ணிக்கொண்டு பறந்தார்கள். பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் தேறியவர்கள், தேறாதவர்கள், இவ்வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மேலே படிக்க முடியாதவர்கள், பட்டதாரிகள் எனப் பல் வகைப்பட்ட இளைஞர்களும் இத்தொழிலை நோக்கியே இன்றும் சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவு இப்பகுதியிலுள்ள பல ஊர்களில் நாற்பது அகவைக்குக் கீழான இளைஞர்கள் எவருமே இலர். அகவை மிகுந்த முதியவர்களே ஆடுமாடுகளையும் தோட்டங்களையும் பார்த்துக் கொண்டுள்ளனர். இக்கூற்றில் எள்ளளவும் மிகைப்படுத்தல் இல்லை. இதுவே இங்கு நிலவும் உண்மையான சமூக மெய்ம்மை.
சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் 'கந்து வட்டிப் பொருளாதாரம்" ஏற்படுத்தி வரும் சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும், ஆராய வேண்டும். கந்து வட்டியில் கொழுத்தவர்கள் இங்கு வந்து புதிதாக நிலங்களை வாங்கிப் போடுகிறார்கள். சிற்றூர்களில் பெரும் வள மனைகளைக் கட்டுகிறார்கள். புதிது புதிதான மகிழுந்துகளில் உலா வந்து மற்றவர்களை மிரளச் செய்கிறார்கள். ஊர்க் கோவில்களைப் புதுப்பிப்பதும், புதிய கோயில்களை கட்டுவதும், கோவில் விழாக்களை ஏற்று நடத்துவதும் இவர்களாகவே உள்ளார்கள். இவ்விழாக்களில் இவர்கள் செய்யும் ஆரவாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் கொஞ்ச நஞ்சமல்ல. குலதெய்வக் கோவில் போல் இவர்களுக்கென்றே “சிறப்புக் கோயில்” ஒன்றும் இங்கே உள்ளது.
பள்ளப்பட்டி ஒட்டன்சத்திரம் முதன்மைச் சாலையில் அமைந்த இக்கோயில் 'மாம்பரை முனியப்பன் கோவில்" என்று அழைக்கப்படுகிறது. கொரங்காடுகளுக்கு நடுவே சிறிய பாறைக் குன்று ஒன்று, அதனடியில் இக்கோயில் உள்ளது. கோயில் என்றால் தெய்வச் சிலைகள் இருக்கும் அல்லவா? ஆனால் இங்கே எந்தத் தெய்வச் சிலைகளும் இல்லை. வேல் கம்புகள் மட்டுமே நடப்பட்டுள்ளன. வேல் கம்புகளைச் சுற்றி சிறிய சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் கட்டிய சுற்றுச்சுவராகவே அது தோன்றுகிறது. வெளியே சற்றுத் தள்ளி சுற்றுச் சுவர் இல்லாத இன்னொரு வேல் கம்புக் கூட்டமும் உள்ளது. இதற்கு எதிரேதான் ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்படுவதும், கோழிகளின் கழுத்து அறுக்கப்படுவதும் நடைபெறுகின்றன. சுற்றுச் சுவருக்கு உள்ளே உள்ள வேல் கம்புகளில் நீக்கமற அடையாள அட்டைகள் (ஏளைவைiபெ ஊயசனள) செருகப்பட்டுக் காட்சி தருகின்றன. வேல் கம்பில் அடையாள அட்டை குத்தி நேர்ச்சி செய்தால் (கிடாய் வெட்டுவது, கோழிகள் அறுத்துப் போடுவது) கந்து வட்டித் தொழில் நன்கு செழிக்குமாம்.
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் முழுக்க முழுக்க இது ஆண்களுக்கு மட்டுமே உரிய கோயில். பெண்கள் இங்கே தலைகாட்டவே கூடாது. கிடாய் வெட்டுவதும், கோழிகள் அறுப்பதும்; அவற்றைச் சமைப்பதும் எல்லாமே ஆண்கள்தான். மேலும் வெட்டப்படும் ஃ அறுக்கப்படும், கிடாய் ஃ கோழிக் கறிகளை வீட்டுக்கோ அல்லது வெளியேயோ கொண்டு செல்லக் கூடாது. அங்கேயே சமைத்து உண்ண வேண்டும், மிச்ச மீதங்களை அங்கேயே கொட்டி விட வேண்டும்.
உண்மையில் இக்கோயிலில் என்ன நடைபெறுகிறது என்பதை ஊகிக்கச் சிரமப்பட வேண்டியதே இல்லை. முனியப்பனுக்குக் கிடாய் வெட்டப்படுகிறது, கோழியும் அறுக்கப்படுகிறது, கறியும் சமைக்கப்படுகிறது, படையலும் நடைபெறுகிறது, கூடவே மதுப் போத்தல்களும் கணக்கற்று உடைக்கப்படுகின்றன. எங்குப் பார்த்தாலும் உடைந்த மதுப் போத்தல்கள் ஆங்காங்கே சிறிய, பெரிய ஏனங்களில் கறி வேகும் காட்சிகள், வந்துள்ள கூட்டத்திற்கும் வெட்டப்படும் கிடாய் அளவுகளுக்கும் ஏற்ப ஏனங்களின் அளவுகள் மாறுபடும். சிறிய ஏனத்திலிருந்து பெரிய அண்டா வரை அங்கேயே வாடகைக்குக் கிடைக்கிறது. கறி வேக வேக அவற்றை எடுத்துக் கடிப்பதையும், மதுவை உறிஞ்சிக் குடிப்பதையும் காணக் கண் கோடி வேண்டும். மாமா, மாப்பிள்ளை, மச்சான், பங்காளிக் கொஞ்சல்களையும், வசவுகளையும் கேட்கச் செவி கோடி வேண்டும். கேரளத்து ஓணம் பண்டிகையின் போதுதான் இக்கோயிலில் கூட்டம் நிரம்பி வழியுமாம். ஓணம் பண்டிகையின் போது வட்டி வசூல் நடைபெறாது என்பதால் ஊர் திரும்பி இவர்கள் “தங்கள் பண்டிகைகளைக்” கொண்டாடுவார்களாம். இங்கே ஒரு முரண்நகையும் நிலவுவதைச் சுட்டிக்காட்ட வேண்டும். பாறைக்குன்றின் மேலே பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. அதற்கான பூசாரி ஒருவரும் உள்ளார். இப்பெருமாள் கோயிலுக்குப் பெண்கள் செல்லலாம். பாறையைச் சுற்றிலும் கறி தின்னும் குடிகாரக் கும்பல்கள் இவர்களிடையே அச்சமின்றி நுழைந்து பெருமாள் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் சிலரைக் காணும் பொழுது பக்தியின் 'மகிமை"யை உணர முடிந்தது.
மேலே விவரித்துள்ள செய்திகளை வேடிக்கையானவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவற்றின் பின்னே மறைந்திருக்கும் சமூக உளவியல் போக்குகளை ஆராய வேண்டும். கந்துவட்டிக்காரர்கள் உள்ளே நிரம்பித் ததும்பி வழியும் ஆணாதிக்க, நிலக்கிழமைப் (பிரபுத்துவ) பண்புகளைக் காணத் தவறக் கூடாது. நிலக்கிழமைத்துவம் ஒழிந்த நிலையில் இவர்கள் புதிய நிலக்கிழார்களாக உருவாகி வருகிறார்கள். ஈவிரக்கமின்றி இவர்கள் உறிஞ்சும் வட்டியே (ஏழைகளின் அரத்தமே) இவர்களுக்குள் கொடும் ஆதிக்க மன நிலையை உருவாக்கியிருக்கிறது. புறத்தில் இவர்கள் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு நாகரிக மனிதர்களாகத் தோற்றம் தரலாம். அகத்தில் பத்தாம் நூற்றாண்டு நிலவுடைமைப் பண்பாளர்களாகவே வெளிப்படுகிறார்கள். மாம்பரை முனியப்பன் கோயில் வெறியாட்டங்களும், உள்;ளுர்க் கோவில் திருவிழாக் கும்மாளங்களும் இவ்வுண்மையைச் சொல்லாமல் சொல்லுகின்றன.
இப்பகுதிகளில் “திராவிட அரசியலே” இன்னும் மேலோங்கியிருந்தாலும் அடியோட்டமாக “கொங்கு அரசியல்” மேலெழுந்து வருவதும் மனங் கொள்ளத்தக்கது. வெள்ளைக்காரனுக்குப் பின்னான காலத்தில் பட்டக்காரர், மன்றாடியார்களின் காங்கிரசு அரசியல் மேலாண்மை செய்தது. திராவிட அரசியல் பரந்துபட்ட மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பட்டக்காரர், மன்றாடியார் அரசியலி லிருந்து விடுதலை தந்தது. பின்னர் அதுவும் ஆதிக்க அரசியலாக மாறிப் போன நிலையில் புதிதாக முளைக்கும் “கொங்கு அரசியல்” ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்குமான போட்டி அரசியலாக உருவெடுத்து வருகிறது.
இங்கே இன்னொரு கசப்பான உண்மையையும் குறிப்பிட்டாக வேண்டும். இப்பகுதி மக்கள் எவரும் கந்துவட்டித் தொழிலை இழிந்த தொழிலாகவே கருதுவதில்லை. பணங்கொழிக்கும் அத்தொழிலைப் பெருமைக்குரிய தொழிலாகவே கருதுகின்றனர். முன்பெல்லாம் நிலமும், நீர்வளமும் உள்ளவர்களுக்கு, பிறகு படித்து அரசு வேலையில் உள்ளவர்களுக்குப் பெண் கொடுக்கும் பழக்கம் இருந்தது. இப்பொழுதெல்லாம் கந்துவட்டிக் காரர்களை மாப்பிள்ளையாக அடைவதையே பெரும் பேறாகக் கருதுகிறார்கள்;. படித்த பெண்கள் கூட கந்துவட்டிக்காரர்களுக்கே தலைநீட்டுகிறார்கள்.
உழவுத் தொழில் பொய்த்துப் போன நிலையில்தான் கந்துவட்டித் தொழிலை நோக்கி ஓடிப் போனார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக எவ்வகையிலும் ஏழை மக்களின் அரத்தம் உறிஞ்சும் வட்டித் தொழிலை நியாயப்படுத்தி விட முடியாது, கூடாது. உழவுத் தொழில் சிக்கல்களுக்கான காரணங்கள் மேலே விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நீக்க முன்கையெடுத்துப் போராட வேண்டும். முதலில் உடனடியாக இங்கே கண்மூடித்தனமாகப் போட்டி போட்டுக் கொண்டு ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் தோண்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் இப்பகுதி முழுவதுமே கூடிய விரைவில் பாலைவனமாக மாறிவிடும். ஆழ்குழாய்க் கிணறுகளுக்கான வழிகாட்டும் நெறிகள் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கும் நெறிகளும் நடைமுறைப் படுத்தப்படுவதாகத் தோன்றவில்லை.
நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போவதின் பேராபத்தை உழவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். ஆழ்குழாய்க் கிணறுகள் முறைப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீரைப் பெருக்குவதற்கான வழிவகைகள் ஆராயப்பட வேண்டும். விழுகின்ற மழைத் துளி ஒவ்வொன்றையும் சேகரிப்பதற்கான முறைகள் கண்டறியப்பட வேண்டும். இப்பகுதிகளில் ஏரி, குளங்கள் அரிதாகவே காணப்படுகின்றது. ஏற்கெனவே இருந்த ஒரு சில ஏரிகளும் மண்மூடிப் போயுள்ளன. அவற்றைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் புதிய ஏரி குளங்கள் அமைக்கப்பட வேண்டும். சிற்றாறுகள், ஓடைகள் கண்டறியப்பட்டு சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். ஏற்கெனவே நல்லதங்காள் ஓடையில் இவ்வாறான அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய அணைகளுக் கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
உழவர்களின் விளைபொருளுக்குக் கட்டுப் படியான விலை உறுதி செய்யப்பட வேண்டும். ஒட்டன்சத்திரம் சந்தை விரிவாக்கப்பட்டு உழவர்களின் காய்கறிகள் கெட்டுப் போகாமல் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன அறைகள் அமைக்கப் படவேண்டும். அங்கே இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு உழவர்களே காய்கறி விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெற வேண்டும்.
மாற்று வேளாண்மை ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அண்மைக் காலமாக 'கண்வலிக் கிழங்கு" என்னும் மூலிகைக் கிழங்கு வேளாண்மை, இங்குப் பரவலாக நடைபெறுகிறது. ஈழத்தில் விடுதலைப் புலிகளால் தேசியப் பூவாக அறிவிக்கப்பட்ட காந்தள் மலர்க்கொடிக் கிழங்குகளே 'கண்வலிக் கிழங்கு"கள் என அழைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் காட்டு வேலிகளில் இக்கொடிகள் படர்ந்து கிடக்கும். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதன் விதைகள் கொடிய நச்சுத் தன்மை கொண்டவை. இதன் பூக்களைக் கண்ணால் பார்த்தாலே வலி ஏற்படும் என்று கூறப்பட்டது. அதனால்தான் இதற்குக் கண்வலிக் கொடி என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். இதனைப் பயிரிடத் தொடங்கிய காலத்தில் (1990களில்) இக்கொடியால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்படலாம் என்றும், நிலமும் கெட்டுப்போகும் என்றும் சில சுற்றுப்புறவியலாளர்கள் எதிர்த்தனர். ஆனால் இக்கிழங்குகள் அள்ளிக் கொடுத்த வருமானம் அவ்வெதிர்ப்பை இருந்த இடம் தெரியாமல் அகற்றி விட்டது. அப்படியான ஓர் ஆபத்தும் இதுவரை ஏற்பட்டதாகக் காணோம்.
இன்று இக்கண்வலிக் கிழங்கு வறட்சிப் பகுதியான மூலனூர் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு மிகச் சிறந்த மாற்று வேளாண்மையாக மாறி உள்ளது. இதில் கிடைக்கும் வருமானம் வேறெந்த வேளாண்மையிலும் இதுவரை உழவன் காணாத வருமானம். ஏறத்தாழ இன்றைய விலையில் (1கிலோ - உரூ1000;; சில சமயங்களில் உரூ 2000;ஃ த்தையும் தொட்டதுண்டு) ஓர் ஏக்கருக்கு ஒர் இலக்கம் உருபாவிற்கு மேலாக வருமானம் கிடைக்கிறது. ஆனால் இதிலுள்ள சிக்கல் இதனைத் தொடக்கத்தில் பயிரிட ஓர் ஏக்கருக்கு ஏறத்தாழ மூன்று இலக்கம் உருபாய் செலவாகும். முதலாண்டு விதை விளைச்சல் குறைவாகவே இருக்கும். எனவே போட்ட முதலை எடுக்க முடியாது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் நல்ல விளைச்சலும் கூடுதலான வருமானமும் கிடைக்கும். மூன்று இலக்கம் உருபாயைக் காட்டில் இறைத்து, அதனை மீட்டெடுக்க இரண்டு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிற போது எளிய ஏழை உழவர்களால் அஃது இயலாமல் போய் விடுகிறது.
எனவே, அரசுதான் இவ்வறிய உழவர்களுக்கு உதவ வேண்டும். ஏற்கெனவே அரசு கண்வலிக் கிழங்கு பயிரிட கடன், மானியம் என உதவுகிறது. ஆனால் அது போதா உதவியாகவே இருக்கிறது. ஓர் ஏக்கருக்குப் பயிரிட ஆகும் முழுச் செலவிற்கும் அரசே உதவ வேண்டும். இலவயத் திட்டங்களுக்கு வாரியிறைத்து வீணாக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை உழவர்களுக்கு அளித்து உதவினால் இப்பகுதிப் பொருளாதாரம் பெரிதும் மேம்படும்.
கண்வலிக் கிழங்கு பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்து தயாரிக்க இக்கிழங்குப் பயன்படுகிறது. ஏற்றுமதியாளர்களும், அவர்களுக்கு உழவர்களிடமிருந்து விதைகள் வாங்கித் தரும் இடைத் தரகர்களும் பெருந் தொகையை இவ்வணிகத்தில் ஈட்டுகிறார்கள். தாங்கள் கொள்ளை இலாபம் அடைவதற்காக இடைத்தரகர்கள் திட்டமிட்டு விலையைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அரசே இதில் நேரடியாகத் தலையிட்டு உழவர்களுக்கு முழுப் பயனும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இதுபோலவே வருமானம் தரக்கூடிய பட்டுப் பூச்சி, கோழி வளர்ப்பு போன்றவற்றையும் உழவர்களிடையே ஊக்கப்படுத்த வேண்டும். ஆடு வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் அரசு உதவ வேண்டும். கூடுதலான கால்நடை மருத்துவ மனைகளை ஏற்படுத்தி இலவய மருத்துவ உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்;. கூட்டுறவுப் பால் நிலையங்களில் நடைபெறும் ஊழல்களைக் களைந்து உழவர்களுக்குக் கட்டுப்படியாகும் பால் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சியே அற்ற பகுதியாக இப்பகுதி இருப்பதையும் கவனத்தில் கொண்டு, இப்பகுதிக்கேற்ற சூழலைக் கெடுக்காத தொழில் துவங்க அரசு உதவ வேண்டும். ஏற்கெனவே உள்ள விசைத்தறித் தொழில் சிக்கல்களைப் போக்கி அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இங்கு விளைகின்ற காய்கறி சார்ந்த வேளாண் தொழில்கள் (எடுத்துக்காட்டாக முருங்கைக்காய்(பவுடர்)த் தூள் ஆலை) தொடங்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே இப்பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதி, வறட்சியும் வறுமையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இதையும் தாண்டி சிரமப்பட்டுக் கற்று இன்று உயர்ந்த இடத்தில் சிலர் இருக்கவே செய்கின்றனர். இன்று மிக உயர்ந்த இடத்தில் உள்ள வா.செ. குழந்தைசாமி இப்பகுதியில் உள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்தாம். கல்வி வாழ்க்கையில் உயர்வைப் பெற்றுத்தரும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் கந்துவட்டித் தொழில் ஆயிரக்கணக்கான இப்பகுதி இளைஞர்களைப் பள்ளி ஃ கல்லூரிப் பக்கம் செல்லாமல் தடுத்து வருகிறது. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்பகுதியில் பெருகிவரும் தரங்குறைந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகளும் கல்வியை மேலும் சீரழித்து வருகின்றன. அரசுத் தொடக்கப் பள்ளிகள் ஃ உயர் பள்ளிகள் கேடுகெட்ட நிலையில் உள்ளன. இந்நிலை மாற்றப்பட்டுத் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வழி காண வேண்டும்.
மேலே விவரித்த எல்லாவற்றையும் கண்டடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உழவர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிதான் அது. முன்னர் இங்குத் தோன்றி விரைந்து பரவிய உழவர் இயக்கம் உழவர்களை ஏமாற்றி விட்டது. அதன் தலைவர்கள் ஒரு சிலர் “இன்றைய தேர்தல் அரசியலில்” நல்ல பலன் கண்டு வருகின்றனர். உழவர்களுக்கோ இலவய மின்சாரம் (இதுவும் இனி எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ?) என்ற ஒரு நற்பயனைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. இன்றைய தேர்தல் மாயைகளிலிருந்து விடுபட்டுத் தங்கள் உரிமைக்காகப் போராட உழவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். இன்றைய நிலையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் உழவர் குறைதீர்க்கும் கூட்டங்களில் இவ்வறட்சிப் பகுதி உழவர்களின் குறைகளை எடுத்துக் கூறக் கூட ஒருவரும் இல்லை. இந்த அவலம் நீக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்கெனவே அரசியல் தெளிவு பெற்றவர்கள் முன்கை எடுக்க வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் கந்துவட்டித் தொழிலை ஆதரித்து விடக் கூடாது. அத்தொழில் நாம் விரும்பும் சமூக மாற்றத்தை எள்ளளவும் கொண்டுவராது. சமூகத்தை மேலும் பின்னோக்கியே அது இழுக்கும். அதுவே நிகழ்பொழுது நடைபெற்று வருகிறது. தமிழ்த் தேசிய ஓர்மைக்கு இது பெருஞ்சிக்கலைக் கொண்டுவரும். நாம் கனவு காணும் விடுதலை மேலும் பின்தள்ளிப் போய்விடும். விழிப்போடு செயல்படுவோம். கந்துவட்டித் தொழிலைக் குழிதோண்டிப் புதைப்போம். உழைத்து உயர்வதே உழவனின் மாண்பு.