உலகின் நிலக்கரி வளத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆனால் கோடைக்காலங்களில் நிலவும் மின்தட்டுப்பாடுகளுக்கு நிலக்கரி பற்றாக்குறை முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கவும், அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் இந்தப் பற்றாக்குறை செயற்கையாக பரப்பப்படுகிறது என்பதை எளிதில் எவரும் அறிந்திடாத வகையில் நுட்பமான கொள்ளைகள் வகையில் அரங்கேறும் ஒன்றாக நிலக்கரி இறக்குமதி நடக்கிறது.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். தமிழ்நாட்டின் நெய்வேலியில் தரம் குறைவான லிக்னைட் நிலக்கரி கிடைக்கிறது. இந்தப் பகுதிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிகள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது மற்றும் நிலக்கரி இறக்குமதி என்பது கப்பல்கள் மூலம் நடக்கிறது.

electric lineசெயற்கையான பற்றாக்குறையா?

நாம் மின் உற்பத்திக்கு 70% நிலக்கரியையே சார்ந்திருக்கிறோம்.

இந்திய ஒன்றியத்தின் மொத்த நிலக்கரித் தேவை கிட்டத்தட்ட 950 மில்லியன் மெட்ரிக் டன்னாகும். அதில் 80% இந்தியாவிலேயே வெட்டி எடுக்கப்படுவதாகவும், மீதமுள்ள 20%, அதாவது கிட்டத்தட்ட 210 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதாகவும் இந்திய நிலக்கரி நிறுவனக் (CIL) குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் 2008 கால கட்டத்தில் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 70,000 மெகாவாட்-ஆக இருந்த போது 450 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. ஆனால் 14 வருடங்கள் கடந்து இப்போது அதன் திறன் 2,05,000 மெகாவாட். ஆனால் கிட்டத்தட்ட 620 மில்லியன் டன் தான் வெட்டி எடுக்கப்படுகிறது. தற்போது மூன்று மடங்கு நிலக்கரியின் அளவு உற்பத்தி திறன் உயர்ந்திருக்கிறது என்றால், அதற்கு தேவையான நிலக்கரி பூர்த்தியாக நிலக்கரி இறக்குமதியும் செய்திருக்க முடியும்.

இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL) அதிகமான நிலக்கரி உற்பத்தி செய்திருக்கிறது என்று ஒன்றிய மின்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஆனால் தற்போது ஒன்றிய மின்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், மாநில மின்துறை அதிகாரிகளிடம் தனியார் நிறுவனங்கள் கணிசமான நிலக்கரி உற்பத்தியை 2025-ல் தான் தொடங்கும் என்பதால் இன்னும் மூன்று வருடங்களுக்குரிய இறக்குமதியைத் தொடர்ந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவின் டாடா, அதானி, எஸ்ஸார் போன்ற பனியா, மார்வாடிகளே நிலக்கரி சுரங்கங்களை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் அதானியின் கார்மைக்கைல் நிலக்கரி சுரங்கம் இருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வலுவான எதிர்ப்புக்கு இடையில் இந்த சுரங்கம் அதானியால் வாங்கப்பட்டது. இந்த சுரங்கங்கள் மூலமாக இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி செய்திருக்க முடியும். தனியார் இலாபத்திற்காக செயற்கையான முறையில் நிலக்கரி பற்றாக்குறையை உருவாக்கி, மின்சார நெருக்கடியான காலத்தில் நிலக்கரி தேவையின் காரணமாக அதன் விலையை பல மடங்கு உயர்த்தி லாபம் ஈட்டுகின்றன அதானி, டாடா போன்ற தனியார் நிறுவனங்கள்.

ஒரு நெருக்கடி காலத்தில் அதானி நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் டன் நிலக்கரி வாங்க போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ஆந்திர அரசு சமீபத்தில் ரத்து செய்தது. கடந்த ஜனவரி 2022-யில் ஒப்பந்தத்தின் படி ஒரு டன் நிலக்கரியை ரூபாய் 17,480-க்கு தர ஒப்புக் கொண்டிருந்த அதானி நிறுவனம், திடீரென ஒரு டன் ரூபாய் 40,000 என விலையை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியதால் ஆந்திர அரசு அதானியிடம் இருந்து நிலக்கரி வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்நிலையில் 2022, மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திடீர் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடர் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இந்தப் பற்றாக்குறையை காரணம் காட்டி, தேசிய அனல் மின் நிலையம் (NTPC) 5.75 மெட்ரிக் டன் அளவிற்கு, ரூபாய் 8,422 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்ய அதானி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளை இணைத்துப் பார்க்கும் போது செயற்கையாக நிலக்கரி பற்றாக்குறை இருப்பது போல் என்ற பிம்பம் உறுதியாகிறது.

நிலக்கரி இறக்குமதியில் நடக்கும் இமாலய ஊழல்:

நிலக்கரியின் தரத்தைப் பொறுத்து எரியும் திறன் இருக்கும். அந்தத் திறனைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மின்சார அளவு கிடைக்கும். மின்சாரம் யூனிட் அளவுகளால் அளவிடப்படுகிறது. தரம் அதிகமான நிலக்கரி என்பது எரியும் போது 6,300 கிலோ கலோரி தரும். இதன் மூலம் அதிக அளவு யூனிட்டுகளை பெற முடியும். தரம் குறைவான நிலக்கரி என்பது எரியும் போது 3400 கிலோ கலோரி தரும். இதன் மூலம் குறைவான மின்சார யூனிட்டுகளை பெற முடியும்.

இந்தியா முழுவதுமே நிலக்கரியின் தரத்தை பரிசோதிக்கும் பரிசோதனைக் கூடங்கள் இருக்கிறது. ஆனாலும் நிலக்கரியைக் கொண்டு வரும் கப்பல் நிறுவனம் கொடுக்கும் சான்று தான் இறுதியானது என்னும் நிலையே உள்ளது. இந்த பரிசோதனைக் கூடங்கள் இருந்தும் பயனில்லாமல் தானிருக்கிறது. தரம் குறைவான நிலக்கரிக்கும், தரம் அதிகமான நிலக்கரிக்கும் இடையிலுள்ள தரத்தின் வித்தியாசத்தில் தான் கொள்ளையடிப்பதின் முக்கிய சாராம்சமே அடங்கியிருக்கிறது. நிலக்கரி சுரங்கங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், கப்பல் நிறுவனங்கள் என இறக்குமதிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் அநியாயக் கொள்ளை அடிக்கும் வழி இதில் தான் இருக்கிறது.

14-04-2022-ன் சர்வதேச விலை நிர்ணயப் படி நிலக்கரி தரத்தின் அடிப்படையில் எரிக்கப்படும் போது கிடைக்கும் கலோரி திறன் அடிப்படையிலான விலை, 6500 கிலோ கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியின் 1 டன் விலை 261 டாலர். 5,500 கிலோ கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியின் 1 டன் விலை 153 டாலர். 4600 கிலோ கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியின் 1 டன் விலை 146 டாலர். 3800 கிலோ கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியின் 1 டன் விலை 87 டாலர். 3400 கிலோ கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியின் 1 டன் விலை 57 டாலர்.

நிலக்கரியின் தர அளவை பரிசோதிக்கும் பரிசோதனைக் கூடங்கள் முறையாக செயல்படுவதில்லை, இன்னும் மேம்படுத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான் தரம் குறைவான எரிதிறன் கொண்ட நிலக்கரி மற்றும் தரம் அதிகமான எரிதிறன் கொண்ட நிலக்கரி என்ற வேறுபாடின்றி சுலபமாக இறக்குமதி செய்துவிட முடிகிறது. இதன் இடைவெளியில் அதிகப்படியான டாலர்கள் வித்தியாசம் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரப் பற்றாக்குறை இருப்பது போன்ற பல மில்லியன் டன் அளவில், பல மாநிலங்களும் இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். 1 மில்லியன் டன் என்பது இந்திய மதிப்பில் 10 லட்சம் டன் ஆகும். எத்தனை மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறதோ, அவ்வளவிற்கும் தரம் குறைவான கலோரியைத் தந்து விட்டு, தரம் அதிகமானதற்கு விலை போடும் போது டாலர்களின் வித்தியாசத்தில் இந்திய பணத்தில் கணக்கு போட்டு பார்த்தால் மலைத்துப் போகும் அளவுக்கான ஊழல் நமக்கு புலப்படும்.

இந்திய நிலக்கரி நிறுவனமே (CIL) நிலக்கரியின் தரத்தில் மோசடி செய்வதாக ஒரு வருடத்திற்கு முன்பு சர்ச்சைகள் எழும்பியது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மத்திய அனல்மின் நிறுவனமும் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் (CIL) தரம் குறைந்த நிலக்கரியினால் ஆண்டுக்கு 10,000 கோடி இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் மின் கட்டணம் அதிகமாக மக்களின் மீது சுமை போட வழி வகுக்கிறது எனவும் மின்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதற்கு வானிலைக் கோளாறு, போக்குவரத்து குறைபாடு என நிலக்கரி நிறுவனம் காரணம் சொல்லியது. நிலக்கரியின் தரம் என்பது கொள்ளைகளின் முக்கியக் காரணியாகவும், மக்களின் மீது மின் கட்டண சுமையாகவும் இருக்கிறது என்பது இதன் மூலம் அறியலாம்.

சர்வதேசத்தில் நிலவும் நிலக்கரியின் விலை உயர்வுக்கு ஏற்றபடி நிலக்கரி பற்றாக்குறை செய்திகள் பரப்பப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பெய்த மழையினால் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்க முடியவில்லை என்று காரணம் சொன்னார்கள். ஆனால் மழைக்காலத்தில் மின்சாரத்தின் தேவை என்பது மிகவும் குறைவு, இருப்பினும் பற்றாக்குறையென பரப்பப்பட்டது. ஏனென்றால் உலகிலேயே அதிகமாக கிட்டத்தட்ட 3800 மில்லியன் டன் அளவு சீனாவிற்கு நிலக்கரி தேவைப்படுகிறது. சீனா ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி வாங்குவதை விடுத்து சர்வதேசக் கொள்முதலில் அந்த காலகட்டத்தில் இறங்கியது. அப்போது தான் 60 - 70 டாலர் விலையில் இருந்த நிலக்கரியின் விலை 160 - 200 விலைக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இது தனியார் நிறுவனத்தின் லாப வேட்டைக்காக நடத்தப்பட்ட செயற்கையான பற்றாக்குறையாகத் தானிருக்க முடியும்.

அதானி போன்ற நிலக்கரி நிறுவனங்களின் ஊழல் :

அதானி, எஸ்ஸார், டாடா போன்ற நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாடுகளிலும் சுரங்கங்களை வைத்திருக்கிறார்கள். நிலக்கரி சுரங்கம், அதனைக் கொண்டு வரும் கப்பல்கள், பல நாடுகளிலும் கிளை நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் அதானியிடம் இருக்கிறது. அதானி குழுமம் இப்படிப்பட்ட கிளை நிறுவனங்களை சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற நாடுகளில் வைத்திருக்கிறது. இந்தோனேசியாவில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி அனல்மின் நிலையங்களுக்கு வந்தாலும் அதன் விலைப்பட்டியல் மட்டும் அதன் கிளை நிறுவனங்களைச் சுற்றி வரும். அந்த விலைப் பட்டியல் இந்தோனேசியாலிருந்து சிங்கப்பூருக்கு, பிறகு துபாய்க்கு, இறுதியில் இறக்குமதியாக வேண்டிய அந்தந்த மாநிலத்தின் அனல்மின் நிலையங்களுக்கு வந்து சேரும் வரை ஒவ்வொரு நாடாக மாறிக் கொண்டே வருவதால் உண்மையான விலையை கண்டுபிடிக்க முடியாது. நிலக்கரி விலைக்கு அதிகமான விலையுடன் ஆவணம் தயாரித்து கிளை நிறுவனங்களுக்கு அனுப்பி விடுவதால், நிலக்கரிக்கு உரிய விலையைத் தவிர மற்ற பணங்கள் கிளை நிறுவனம் உள்ள அந்தந்த நாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கப்படும்.

அதானி நிறுவனங்களின் இந்த கொள்ளை ஒரு புறம் என்றால், மறுபுறம் தரம் குறைந்த நிலக்கரியை தரம் மிகுந்தது என்று அனுப்பி வைத்து அடிக்கும் கொள்ளைகளுக்கு எல்லைகளே இல்லை. இந்த கொள்ளையை மேற்கூறிய நிலக்கரி ஊழல் செய்யும் வாய்ப்பான நிலக்கரி தர அளவீட்டின் படி கணக்கிட்டு கொள்ளுங்கள். இவ்வகையில் பல ஆயிரம் கோடிகள் அதானியால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், கப்பல் நிறுவனங்கள் என அனைவரும் கூட்டு சேர்ந்து பங்கிட்டு கொள்ளும் இந்த கொள்ளையின் சுமையை மாநில மின்வாரிய நிலையங்கள் சுமக்கின்றன. அதனால் அதிகரிக்கும் மின் கட்டணம் ஊடாக மக்கள் மீது விழுந்து அந்த சுமையை மக்கள் சுமக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலக்கரி தேவை:

தமிழ்நாட்டில் மின்சாரத்தின் உற்பத்தி என்பது 30% அளவிற்கு இருக்கிறது. மத்திய தொகுப்பில் இருந்து 30% கிடைக்கிறது. மீதமுள்ள 40% அளவிற்கு தனியார் மின்சாரத்தை நம்பி இருக்கிறது. ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி வயல் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சிங்கனேரி நிலக்கரி வயல்களில் இருந்து தமிழகத்துக்கு பெரும்பாலான நிலக்கரி கிடைக்கிறது. தமிழ்நாட்டின் நிலக்கரித் தேவை என்பது நாளொன்றுக்கு 72,000 டன். ஆனால் ஏப்ரல் மாதத்தில் அதில் பாதியளவே மத்திய தொகுப்பிலிருந்து தரப்பட்டது என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் மின்சாரத்தையும் 750 மெகாவாட் குறைத்து விட்டதாகவும் கூறினார். காற்றாலை மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்றார்.

தமிழ்நாடு மட்டுமின்றி தொழில் நகரங்களை கொண்ட குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 10.5 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் கொள்ளை லாபம் ஈட்டுபவர்களாக அதானி, எஸ்ஸார், டாடா போன்ற பனியா, மார்வாடி நிறுவனங்கள் தான் இருப்பார்கள். இவர்களே இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கம் வைத்திருப்பவர்கள்.

2003-ம் ஆண்டு மின்சார சட்டப்படி மின்துறை வாரியத்தின் அத்தனைக் கதவுகளையும் தனியாருக்கு திறந்து விடுவதற்காக ஒழுங்கு முறை ஆணையத்தை உருவாக்கினார்கள். மின்சார வாரியம் உற்பத்தி, பகிர்வு, விநியோகம் என மூன்று பிரிவுகளாக பிரித்து தனியார் நுழைவதற்கு ஏற்றவாறு பிரித்தார்கள். 2015-ம் ஆண்டு இந்திய நிலக்கரி சட்டத்தை திருத்தி தனியாருக்கு சுரங்கங்களை ஏலம் விட்டார்கள். சந்தையை திறந்து விட்ட பின் கொள்ளை லாபமே முதன்மை நோக்கமாகக் கொண்ட தனியார்களால் தமிழ்நாடு மின்சார வாரியம் 1.80 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது.

தேர்தல் காலங்களில் பெருமளவில் நிதிகளைத் தரக்கூடிய பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தும் மோடி அரசினால், மின்சார உற்பத்தி நிலையங்கள், மின்சார உற்பத்திக்கான நிலக்கரி சுரங்கங்கள், அதற்கான ஒப்பந்தங்கள் என அனைத்திலும் தனியார்களின் ஆதிக்கம் பெருக, அவர்களுக்கான சந்தைக்காகவும், லாப நோக்கத்திற்காகவுமே செயற்கையான முறையில் மின் தட்டுப்பாடுகள் உருவாக்கப்படுகிறது.

சந்தைப் பொருளாதாரத்தின் மிகவும் சிக்கலான வலைப்பின்னலில் புகுந்து ஒருங்கமைக்கப்பட்ட களவாணித்தனம் செய்யும் அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பக்க பலமாக மோடி அரசு இருக்கிறது. மாநில அனல் மின் நிலையங்களும், மக்களும் இழப்பை சந்திக்க அரசு அதிகாரிகள், பெரு நிறுவனங்கள், மோடி அரசு கூட்டு சேர்ந்து லாபத்தை பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். இந்த கொள்ளையை மறைக்கவே கோடை காலத்தில் மக்களின் மின்சாரத் தேவை அதிகரித்து விட்டதால், பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது என திசை திருப்பி விடுகிறார்கள்.

ஒன்றிய அரசு அளித்த ஒப்பந்தத்தின் படி, மாநிலங்களுக்கு நிலக்கரியைத் தருவதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். கோடை கால மின் பற்றாக்குறையை சரிசமமாக அனைத்து பகுதிகளுக்கும் பங்கிட்டு கொடுக்க வேண்டும். அது தான் வெயில் கால மின் தட்டுப்பாடுக்கு சிறந்த வழியாக இருக்க முடியுமே தவிர இறக்குமதி மூலம் பூர்த்தி செய்ய நினைப்பது மக்களின் பணத்தை சுரண்டும் வாய்ப்பாக முடியும்.

தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டங்களும், மின்வாரியத்தின் 1,80,000 கோடி இழப்பு மட்டும் காரணமல்ல நிலக்கரி இறக்குமதி செலவும் ஒரு முக்கியக் காரணமாகும். நிலக்கரியின் மூலம் நடைபெறும் லாப வேட்டைகள் இவ்வளவு என்றால் மின்சாரத்தை தயாரிக்கும் மற்ற கட்டுமானங்கள் மூலமாக தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்தவை சொல்லி மாளாதவை. தனியாரின் கொள்ளைகள் எளிய மக்களின் தலையில் விழுகிறது. இதன் காரணமாக இப்போது நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் மின்சார கட்டண உயர்வு பற்றியும் விவாதிக்க மற்றொரு கட்டுரையில் இணைவோம்.

- மே பதினேழு இயக்கம்