உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத வேலைவாய்ப்பின்மையை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனினும் அதை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

nirmala seetharaman and poor boyகிராமப் புறங்களில் நுகர்வை அதிகரிக்க, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி போன்ற பொருளாதார வல்லுநர்கள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அதிக ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை வைத்தும், அவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 100 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் போதுமான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக (Panchayat Raj) 2019-20 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையான 871 கோடி, இந்த பட்ஜெட்டில் வெறும் 900 கோடியாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சென்ற ஆண்டு அந்த 871 கோடியிலும் வெறும் 500 கோடி மட்டுமே அரசால் செலவழிக்கப்பட்டுள்ளது.

2022-ல் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. ஏனென்றால், சென்ற பட்ஜெட்டை விட வெறும் 2.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த ஆண்டில் வெறும் 25% விவசாயிகள் மட்டுமே மூன்று தவணைகளிலும் பணம் பெற்றனர் என்று அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன (down to earth, பிப்ரவரி 2020). எல்லாவற்றிற்கும் மேலாக, உரங்களின் மீதான மானியத்தைக் குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது மோடி அரசு.

கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றரை லட்சம் கோடி வரிவிலக்கைக் கொடுத்துள்ள அரசு, உணவு மானியத்திற்கான நிதியைப் பட்ஜெட்டிலிருந்து ஒதுக்காமல் தேசிய சிறுசேமிப்பு நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகள் விழுக்காடு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (ICDS) நிதி ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது சாமானியர்களின் மீதான அரசின் இரக்கமற்ற தன்மையையே காட்டுகிறது.

இந்திய மருத்துவர்களுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனை மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே இந்தியாவில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை இருக்கும் நிலையில் அவர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து பணிபுரிவதற்கான சூழலை மேம்படுத்துவது குறித்து ஆராயாமல், அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளது அறியாமையின் உச்சகட்டமாகும்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, அது யாருக்கான கல்வியாக அமையும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

2005-ஆம் ஆண்டு 36.7% ஆக இருந்த உழைக்கும் பெண்களின் விழுக்காடு, 2018-இல் 26% ஆகக் குறைந்துள்ள நிலையில், பெண்களின் வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

இவை மட்டுமல்லாது, மாநிலங்களின் உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் கை வைத்துள்ளது ஒன்றிய அரசு. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை மதிக்காத பாஜகவின் போக்கு கண்டிக்கத்தக்கது. இது மிகவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். 

இலாபத்தில் இயங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்றுவிட்டு, சாமானியர்களின் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கும் பாஜக அரசை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Pin It