களைகட்டத் தொடங்கி விட்டது தமிழகத் தேர்தல் களம்.

திராவிட முன்னேற்றக் கழக அணியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அணியும் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவிட்டன.

நாளிதழ்களில் கட்சித் தேர்தல் செய்திகள் எந்த அளவுக்கு முன்னுரிமை பெறுகிறதோ அதே அளவுக்குத்தேர்தல் ஆணையத்தின் செய்திகளும் முதன்மை பெறுகிறது.

jayalalitha_300‘தினமணி’ (26.03.2011) நாளிதழின் முதல் பக்கச் செய்தியின் தலைப்பு, “எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க ஆணையம் முயற்சி - கருணாநிதி குற்றச்சாட்டு”. இந்தத் தலைப்புச் செய்தியை ஒதுக்கிவிட முடியாது.

சென்ற தேர்தலில் எழுந்த முழக்கம் ‘ இது ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான போராட்டம் ’. இந்தத் தேர்தலிலும் அது நீடிக்கத்தான் செய்கிறது.

இதை மூன்று நிலைகளில் பார்க்கலாம். ஒன்று தேர்தல ஆணையம் ‡ ஊடகங்கள், இரண்டாவது தமிழ்த் தன்ணுணர்வாளர்கள், மூன்றாவது அரசியல் கட்சிகள்.

திருச்சியில் 26ஆம் தேதிப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் பேசும்போது, “ இப்போதுள்ள தேர்தல் கமிசன், எதிர்க்கட்சியாக இருப்பவர்களை ஆள விடவேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு தேர்தல் கமிசன் இந்தியாவில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம் அதிலுள்ள உறுப்பினர்கள், அதிகாரிகள், அவர்களின் போக்கு எப்படிப்பட்டது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றமே எச்சரித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். உயர்நீதிமன்றம் எச்சரிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது என்றால், எந்தக் கட்சியிலும் இடம் பெறாத, யாருக்கும் வக்காலத்து வாங்காத, நடுநிலையான ஆணையம்தான் தேர்தல் ஆணையம். உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகாவது, இந்த ஆணையம் நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறேன் ” என்று பேசியிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், இறுக்கமான சோதனைகள், சோதனையில் வணிகர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகப் பணம் பறிமுதல் செய்ததில் மக்களே அதிர்ந்து போனார்கள். வணிகர்கள் வேலை நிறுத்தம் செய்யும் அளவுக்குப் போய்விட்டார்கள்.

கட்சிகளின் பிரச்சாரங்களுக்குக் கெடுபிடி மிக அதிகம். சுவரொட்டிகள், பேனர்கள், சுவரெழுத்து என்று எல்லாவற்றுக்கும் தடை. செங்கல்பட்டில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றில், “ நாங்கள் வாக்காளர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் காதில் ரகசியமாகத்தான் இனி ஓட்டு கேட்க வேண்டுமா ” என்று கட்சிக்காரர்களே கோட்டாட்சியரிடம் கேட்டுப் பொறுமியிருக்கிறார்கள். இது நாளிதழிலும் செய்தியாக வந்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கூட தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள. ஆனால், அதிமுக தலைவி ஜெயலலிதா மட்டும், “ தேர்தல் ஆணையம் இன்னும் கூடுதலாக, வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று செய்தியாளர்களிடம் (24.03.2011) பேசியிருக்கிறார்.

அண்மையில் தி.மு.கவைச் சேர்ந்த தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் வீட்டில், சேலைகள், வேட்டிகள் இலவசமாகக் கொடுக்கப் பதுக்கிவைத்திருக்கிறார் என்று சொல்லி தேர்தல் ஆணைய ¼அதிகாரிகள் சோதனை செய்துள்ளார்கள். இது ஜெயா தொலைக்காட்சியில் பலதடவைகள் ஒளிபரப்பாகியுள்ளன.

இப்பிரச்சனை சென்னை உயர்நீதி மன்றத்திற்குப் போனபோது “ அமைச்சர் ஒருவரின் வீட்டைச் சோதனை நடத்தியுள்ளனர். எந்தப் பணமும் பறிமுதல் செய்யப்பட வில்லை. ஆனால் அமைச்சரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இது தவறானது ” என்று நீதிமன்றமே கண்டிக்க வேண்டியதாகிவிட்டது.

ஊடகங்களில் வரும் உளவுத்துறை உயர்அதிகாரி ஜாபர் சேட் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதுகுறித்து ‘ நக்கீரன் ’ ( 2011, மார்ச் 25) இதழ் தரும் செய்தியின் படி

உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட்டை தேர்தல் ஆணையம் டில்லிக்கு அழைத்துக் கண்டிப்பு காட்டியிருக்கிறது. ஜாபர்சேட் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சி சொல்வதாகவும், அதனால் அவர் வங்காளத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையர்கள கூறியிருக்கிறார்கள். இதனை ஏற்க மறுத்த ஜாபர்சேட் தான் விடுமுறையில் போவதாகக் கூறியிருக்கிறார். அந்த விடுமுறைகூட இன்னும் விவாதத்திற் குரியதாக இருப்பதாக சில இதழ்கள் தகவல் தருகின்றன.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் இயல்பான நடவடிக்கை என்று ஆணையம் சொன்னாலும், “  தீவி நடவடிக்கை எடுக்க வேண்டும்  ” என்று ஜெயலலிதா சொன்னதற்குச் சான்று பகர்வதாக இருப்பதைப் பார்க்கலாம்.

இரண்டாவதாக தமிழ்நாட்டின் ஊடகங்களில் பெரும்பாலானவை ‘அவாள் ’களின் ஊடகங்களாகவே இருக்கின்றன. இந்த ஊடகங்களின் ஒட்டு மொத்த நோக்கம் கலைஞரை ஆடசிக்கு வரவிடாமல், ஜெயலலிதாவை எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவிட வேண்டும் என்பதுதான். அதாவது ஜெயாவுக்கு ஆதரவு என்பதை மறைமுகமாகவும், கலைஞருக்கு எதிரான செய்தி என்பதை நேரடியாகவும் காட்டும் ஊடகங்கள் அவை.

திமுக ‡ காங்கிரஸ் கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்தது உண்மை. அதை ஊதிப்பெருக்கி, ஏதோ தமிழ்நாட்டில் பிரளயமே வந்தது போல அந்த ஊடகங்கள் எழுதித் தீர்த்தன.

அதேசமயம் அதிமுக, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளுமன்ற மக்கள் கட்சி என்ற இந்த கூட்டணியில் முதலில் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசினார்கள். பிறகு தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அய்யோ எங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளையும் ஜெயலலிதா அறிவித்து விட்டாரே என்று எதிர்க்கட்சிகள் புலம்பின. தே.மு.தி.க. அலுவலகத்துக்கு ஓடினார்கள். பேசினார்கள். ஜெயாவின் பிரச்சாரப் பயணத் திட்டம் மாற்றப்பட்டது. மீண்டும் செங்கோட் டையன், ஓ.பன்னீர் செல்வம் தூது, பேச்சு வார்த்தை, ஒப்பந்தம் ‡ கடைசியில் மதிமுக விரட்டப்பட்டது. தே.மு.தி.க ‡ அதிமுக தேர்தல் ஒப்பந்தம் கூட பேக்சில்தான் கையயழுத்தாகியது.

இவ்வளவு பெரிய களேபரத்தை ஏதோ தவறுதாலாக நடந்துவிட்டது போல, “ தினமணி ” “ தினமலர் ” போன்ற ஏடுகள் எழுதியதே ஒழிய, இதை ஏன் அவர்கள் வெளிச்சம் போட்டுக் கட்டவில்லை?

திமுக அரசு இலவசங்களை மக்களுக்கு வழங்குவதால் மக்களைப் பிச்சைக்காரர்கள் அளவுக்கு துக்ளக் சோ எழுதினார். பார்ப்பனச் சார்பு ஏடுகள் எல்லாம் இலவசங்களை ஏளனம் செய்து எழுதின. என்னாயிற்று?

இந்தத் தேர்தலை முன்னிட்டு கலைஞர் வெளியிட்ட, தேர்தல் அறிக்கையில் இலவச மிக்சி, கிரைண்டர், லேப்டாப், திருமண உதவித்தொகை, கருவுற்ற பெண்களுக்கு உதவித்தொகை என்று அறிவித்ததை அடுத்து, அப்படியா? ஒன்றுக்கு இரண்டு, இரண்டுக்கு மூன்று மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று அறிவித் தாரே ஜெயா தன் தேர்தல் அறிக்கையில். இவர்தானே கலைஞரின் இலவசத் திட்டங்களை முன்பு கண்டித் தவர் !

ஜெயாவின் இந்த இலவ சங்களுக்கு துக்ளக் என்ன சொல்லப்போகிறது? பார்ப்பன ஏடுகள் என்ன சொல்லப்போகின்றன?

“ இருகழகங்களும் இலவசங்களை வழங்குவது சரியல்ல ” என்று பட்டும்படாமலும் ஓர் ஏடு எழுதுகிறது. ஏன் இரு கழகங்கள்? முன்பு கருணாநிதி என்று பெயரைச் சொன்னது போல, இப்பொழுது ஜெயலலிதா என்று பெயரைச் சுட்டி அவர் வழங்க அறிவித்துள்ள இலவசங்களைக் கண்டித்திருக்கலாமே !

ஆக ஊடகங்களின் வேலை கருணாநிதி வரக்கூடாது, ஜெயலலிதாவே ஆட்சியில் அமர வேண்டும் என்பதுதான்.

தெளிவாகச் சொன்னால், மீண்டும் திராவிட ஆட்சி தமிழ் நாட்டில் வரக்கூடாது ; ஆரியத்தை ஆட்சியேற்றியே தீர வேண்டும் என்பதுதான் பார்ப்பனீயத்தின் திட்டமும், செயலுமாக அமைந்துள்ளது.

அடுத்துத் தமிழ் உணர்வாளர்கள்

vijayakanth_302திராவிட இயக்கத் தமிழர் பேரவை, “ திமுக ஆட்சி தொடர வேண்டும் ‡ ஏன்? ” என்ற சிறு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபகுதி இது :

இன்று ஈழத்தை ஆதரிக்கின்றவர்களும், ஈழத்தை எதிர்க்கின்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக ஜெயலலிதா அணியில் போய்ச் சேர்ந்து விட்டனர். சிலர் நேரடியாக அதிமுகவை ஆதரிக்கிறார்கள். சிலர் ‘ இலை மலர்நதால் ஈழம் மலரும் ’ என்று கூறி, தங்கள் ஆதரவை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ தங்களை நடுநிலை என்று கூறிக்கொண்டு, திரை மறைவில் அதிமுக ஆதரவு வேலைகளைச் செய்து வருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து தூக்கில் போட வேண்டும் என்று கூறிய ஜெயலலிதாவை, போரென்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பேசிய மனிதநேயமற்ற ஜெயலலிதாவை ஆதரிக்கின்றவர் களுக்கு ஈழம்பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது.

எனவே அவர்களின் நோக்கம், ஈழத்தைக் காப்பது அன்று, கலைஞரை எதிர்ப்பதுதான் என்பது தெளிவாகிறது. அவர்களின் வழிகாட்டு தலை ஏற்றால், எதிர்காலத் தமிழகம் இன்னலுக்கு உள்ளாகும். ஈழமக்களைக் காப்பாற்ற முடியாத நாம் தமிழக மக்களையும் காப்பாற்ற முடியாதவர் களாக ஆகிவிடுவோம்.

இந்த வரிகள் பொருள் பொதிந்தவை.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்ன நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சொல்கிறார், காங்கிரசை தோற்கடிக்க அதிமுகவுக்கு வாக்குக் கேட்போம் என்று. தலைவர் பிரபாகரனைத் தூக்கில போடச்சொன்ன ஜெயலலிதாவுக்குத்தானே அவரின் ஆதரவு.

ஐயா நெடுமாறன், தியாகு, மணியரசன் போன்ற தமிழ் உணர்வாளர்களை நாம் பெரிதும் மதிக்கிறோம். அவர்கள் ஈழத்தை ஆதரித்ததை விட கலைஞரை விரட்ட வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களால் உணர்வூட்டப்பட்டவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் ஒன்று நமக்கு வந்தது. அது இதுதான். “ இந்தத் தேர்தலில் திமுக வென்றால், தமிழ்நாடு “ கருணாநாடா ”கும், தமிழ்மொழி “ கனிமொழி ” ஆகும். மதுரை

“ அழகிரி நகர் ” ஆகும் ”. எப்படி இருக்கிறது இச்செய்தி ?

இதில் அரசியல் இருக்கிறதா அல்லது கலைஞர் எதிர்ப்பு இருக்கிறதா? தமிழர்களே தமிழருக்கு எதிராகத் திருப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இச்செய்தி சான்று

தமிழ் உணர்வில், இன உணர்வில், அறிவில், ஆற்றலில் சிறந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ! அவர்கூட கலைஞர் மீதான தனிப்பிரச்சினையில் விலகி, இலையோடு உண்மையாகவும், நம்பிக்கையாகவும் கடந்த 5 ஆண்டுகள் இருந்தார்.

இன்று நிலை மாறிவிட்டது. நேற்றுப்பிறந்த தேமுதிகவுக்கு கொடுத்த மரியாதை கூட, தோள் கொடுத்து நின்ற மதிமுகவுக்கு ஜெயலலிதா கொடுக்கவில்லை. தூக்கி எறிநது விட்டார்.

எறியப்பட்ட வைகோவுக்கு கலைஞர் சொன்னார், எதிரணியில் “ இந்திரஜித்தனைக் ” காணவில்லையே, காரணம் புரிகிறது என்று !

“ நீரடித்து நீர்விலகாது ” என்று இனமான ஆசிரியர் கி.வீரமணி கூறினார். இங்கே கடந்தகால கசப்புகளையும் தாண்டி திராவிட இன உணர்வு மேலிட்டதைக் காணலாம். அங்கே “ திராவிடம் ” தலைதூக்கக்கூடாது என்று வைகோவை அவமதித்து மதிமுகவை அழிக்க முயன்றதைப் பார்க்கலாம்.

மற்றொரு புறம் கம்யூனிஸ்டுகளுக்கு அவமானம் ‡ தன்மானம் பற்றி எல்லாம் கவலை இல்லை. அதிமுக அலுவலகம் போவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “ நீங்கள் வேண்டுமானால் போங்கள். நாங்கள் போக மாட்டோம் ” என்று வீரவசனத்தை தேமுதிக அலுவலக வாசலில் வைத்துப் பேசிய தா.பாண்டியன் அடுத்த நாளே தேமுதிகவைத் தனியே விட்டுவிட்டு, ஜெயலலிதாவிடம் ஓடியதை ஊரறியும் நாடறியும். இதற்கு மேல் அவர்களைப் பேசிப் பயனில்லை.

இவர்களைவிட நடிகர் கார்த்திக் சுயமரியாதை உடையவர் என்றால் மெத்தவும் பொருத்தமாக இருக்கும்.

தொகுத்துச் சொன்னால், இந்தத் தேர்தல் இரண்டு தளங்களில் நிற்கிறது. கலைஞரா? ஜெயலலிதாவா? திராவிடமா? பார்ப்பனியமா? என்பதுதான்.

பார்ப்பன ஊடகங்களும் அதிகாரிகளும் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்க முயல்கின்றன.

“ நான் பாப்பாத்திதான் ” என்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா மீண்டும் வரவேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.

மக்கள் நோக்கம் வேறு !

சென்ற தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்தார் கலைஞர். இந்தத் தேர்தலில் சொன்னதைச் செய்வார் அவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு.

காரணம், கலைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள். அவை நேரடியாக மக்களுக்குச் சென்று சேர்ந்து பயன் அடைந்தவர்கள் மக்கள்.

“மக்களை மதிக்கும் ஆட்சியை, மக்களுக்கான ஆட்சியை மக்கள் உருவாக்குவார்கள். ஆணவமிக்க பிரபுக்களும், மன்னர்களும் தூக்கி எறியப்படுவார்கள்”  - “குடியரசு” நூலில் கிடக்கும் இந்த வரி அறிஞர் பிளேட்டோவின் சிந்தனை.

அமையப்போகும் அரசுக்கு இவ்வரிகள் கட்டியங் கூறுகின்றன.

அது தலைவர் கலைஞரின் திமுக அரசு

ஆம் திராவிடர்களின் ஆட்சி !

Pin It