 |
ஞாநி
எது நீதி? எது நியாயம்?
எது நீதி, எது நியாயம் என்று சிந்தனையைத் தூண்டும் மூன்று செய்திகள் இந்த வாரம் வெளியாகியுள்ளன.
செய்தி 1:
இது தேர்வு சம்பந்தப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் எப்போதும் எதையாவது தேர்வு செய்தே ஆகவேண்டிய நிலையில்தான் தனி மனிதர்களும் அமைப்புகளும் இருக்கிறார்கள். விகடன் இதழைக் கையில் எடுத்தவுடன் ஓ... பக்கங்களை முதலில் படிப்பதா அல்லது கடைசியாகப் படிப்பதா அல்லது படிக்காமல் விட்டுவிடுவதா என்று ஏதேனும் ஒரு தேர்வை வாசகரான தனி மனிதர் செய்தாக வேண்டும்.
எந்த சினிமா, எந்த ஓட்டல், என்ன டிபன், எந்தக் கடை, என்ன உடை இப்படிப்பட்ட தேர்வுகள் தனி நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்த ஓரளவு சுலபமான விஷயங்கள். ஆனால், அரசாங்கம் போன்ற அமைப்புகள் தேர்வுசெய்யும் விஷயங்களும், தேர்வு முறைகளும், கடினமும் சிக்கலும் நிரம்பியவை. காரணம் அவற்றில் எல்லா மக்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, நீதி வழங்கப் பட்டிருக்கிறது என்ற தோற்றமும் புலப்பட வேண்டும்.
அரசாங்க நூலகங்களுக்குப் புத்த கங்கள் வாங்குவதற்காகத் தேர்வு செய்ய ஒரு குழுவை மூன்று மாதம் தாமதமாக இப்போதுதான் தமிழக அரசாங்கம் நியமித்திருக்கிறது. இந்த நியமனம்தான் இப்போது கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
ஏனெனில், இந்த முறை ஒவ்வொரு டைட்டிலும் வழக்கமான 600 பிரதி களுக்குப் பதில் 1,000 பிரதிகளாக வாங்கப்படும். விடுதலைச் சிறுத்தை கள் எம்.எல்.ஏ. ரவிக் குமாரின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் கருணாநிதி செய்த இந்த அறிவிப்பு பரவலான பாராட்டுகளைப் (என்னு டையது உட்பட!) பெற்றது.
அரசு அறிவித்துள்ள தேர்வுக் குழுவில் அதிகாரி கள் தவிர, கட்சிக்காரர்கள், படைப்பாளிகள், கட்சிக்காரப் படைப்பாளி கள் பலரும் இடம் பெற்றுள் ளனர்.
குழு உறுப்பினர்களின் நூல்களும் கடந்த ஆண்டில் பதிப்பிக்கப்பட்டு தேர்வுக்கான விண்ணப்ப நிலையில் இருக்கின்றன என்பதுதான் நீதி நெறி பற்றிய சிக்கல்!
தங்கள் நூல்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி அவர்களுக்குத் தரப்படலாமா? பட்டி யலில் தங்கள் நூல் பரிசீலனைக்கு வரும்போது மட்டும் அவர்கள் ஒதுங்கி நின்று மற்றவர்கள் முடிவு செய்யட்டும் என்று நெறி வகுத்துக் கொண்டாலும், அதுவும் கண் துடைப் பாகத்தானே பார்க்கப்படும்? எப்படியும் குழுவில் உள்ள ஒருவரின் நூலை மற்றவர்கள் நிராகரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான். இத்தகைய குழுக்களில் ஒருவர் மற்றவருக்குச் சாதகமாகச் செயல்படுவதும் வசதி களைப் பங்கு பிரித்துக்கொள்வதுமே நடைமுறையில் அதிகம்.
தீர்வு என்ன? குழு உறுப்பினர்கள் நூல்கள் எதுவும் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப் படக் கூடாது என்று விதிக்கலாமா? குழு உறுப்பினர் ஆனதற்காக ஒருவரின் நல்ல படைப்புகளை நூலகம் இழப்பதும் நீதியாகாதே?
ஒரு தீர்வு இருக்கிறது. இப்படிப்பட்ட தேர்வுக் குழுவில் நல்ல ரசனை உடைய வாசகர்கள் மட்டும் இடம்பெற்றால் போது மானது. பரிசீலனைக்குத் தன் நூல் அனுப்பப்பட்டி ருந்தால் அந்த படைப்பாளி தேர்வுக் குழுவில் இடம் பெறக் கூடாது.
இந்த முன்னுதா ரணத்தைச் சில ஆண்டுகள் முன்பு, டெல்லி சங்கீத நாடக அகாடமி தேர்வுக் குழுவில் இருந்த, மறைந்த மலையாள நாடகாசிரியர் கவிஞர் சங்கரப்பிள்ளை செய்து காட்டினார். நாடகத் தயாரிப்புக்கான நிதி உதவிக்காக விண்ணப்பித்திருந்த சில நாடகக் குழுக்கள், அவர் எழுதிய நாடகங்களுக்காக விண்ணப்பித் திருந்தது தேர்வுக் குழுக் கூட்டத்தில் தெரிய வந்ததும், அவர் குழுவிலிருந்து விலகிக்கொண்டார். தவறான முன்னுதாரணமும் உண்டு. இதே போன்ற தேர்வுக் குழுவில் இருந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர் தன் படைப்பைத் தானே தேர்வு செய்து கொண்டார்.
சினிமா மான்யம், விருதுகளுக் கான தேர்வின்போது, தேர்வுக்காக வரும் படங்களின் படைப்பாளிகள், தயாரிப்பாளர்களைத் தமிழக அரசு தேர்வுக் குழுவில் நியமிப்பதில்லை.
நூலகத் தேர்வுக் குழுவில் இருக்கும் படைப்பாளிகளும் அரசும் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்பதை சக படைப்பாளிகள், பதிப்பா ளர்கள் மட்டுமல்ல, வாசகர்களும் கூர்மையாகக்கவனிப்பார்கள்!
செய்தி 2:
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது. இது பற்றி முன்பே நான் எச்சரித்தும், கருணாநிதி அலட்சியப்படுத்தினார் என்று ஜெயலலிதாவும், இது ஒன்றும் இறுதித் தீர்ப்பல்ல என்று கருணா நிதியும் தங்கள் வழக்கமான போட்டி அரசியல் போரையும் தொடங்கி விட்டார்கள். இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புதான் என்ன?
அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி யான 9 வது அட்டவணையை மட்டும் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற் பட்டதாக வைக்கமுடியாது. அந்த அட்டவணை தரும் உரிமையின் கீழ் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவையா இல்லையா என்பதையும் ஆய்வு செய்யும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்பது தான் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.
9 வது அட்டவணை எனப்படும் அரசியல் சட்டத்தின் 31 பி பிரிவு ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. நிலச் சீர்திருத்தம் போன்ற சமூகச் சமத்துவச் சட்டங் களை எதிர்த்து யாரும் நீதிமன்றம் போய்த் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர் இந்தப் பிரிவைக் கொண்டுவந்தார். இதன் கீழ் வரும் சட்டங்களை எதிர்த்து வழக்குப் போட முடியாது.
இந்த நிலையை 1973 லேயே கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் மாற்றிவிட்டது. அரசியல் சட்டத்தின் அடிப்படை வடிவத் தையோ வழிகாட்டு நெறிகளையோ மாற்றும் சட்டங்களைப் போட பார்லிமென்ட்டுக்கும் (சட்டசபை களுக்கும்) அதிகாரம் இல்லை என்பதுதான் அப்போதைய தீர்ப்பு.
அதே அடிப்படையில் இப்போ தைய தீர்ப்பும் தரப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை யையே மாற்றும் ஒரு சட்டத்தை 9 வது அட்டவணையின் கீழ் கொண்டு வந்துவிட்டு, அதை எதிர்த்து வழக்குப் போட முடியாது என்று தடுக்க முடியாது என்பதுதான் இப்போதைய தீர்ப்பு.
எனவே, 9 வது அட்டவணையின் கீழ் போட்ட சட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமா இல்லையா என்று ஆய்வு செய்ய வழக்குப் போட முடியும் என்கிறது இந்தத் தீர்ப்பு. அதில் ஒரு சட்டம்தான் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுச் சட்டமும்!
எந்த இட ஒதுக்கீடும் மொத்தத்தில் 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படை யில் 69 சதவிகிதச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போட முடியாமல் இதுவரை இருந்ததற்குக் காரணம், 9 வது அட்டவணை. இப்போது அந்தப் பாதுகாப்பு போய்விட்டது.
புதிய தீர்ப்பு 69 சதவிகித இட ஒதுக் கீட்டுச் சட்டத்துக்கு மட்டும் சவால் விடவில்லை. 34 வருட வரலாற்றையே புரட்டிப்போடக் கூடிய தீர்ப்பு இது. ஏனென்றால், 34 வருடங்களில் 9 வது அட்டவணையின் கீழ் 284 சட்டங்கள் போடப்பட்டன. இதுவரை கேள்வி கேட்கப்படாத அவை அத்தனையை யும் இப்போது கேள்வி கேட்கலாம்.
50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு தர முடியுமா, மத அடிப் படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அரசியல் சட்டத் துக்கு விரோதமா போன்ற சிக்கல் களை எழுப்புவது தவிர, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எழுப்பும் நீதி நெறிப் பிரச்னை என்ன?
யார் பெரியவர்? அரசியல் சட்டமா? பாராளுமன்றமா? நீதி மன்றமா?
அரசியல் சட்டம்தான் எல்லோரை யும் விடப் பெரியது; அதை மாற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இல்லை; அரசியல் சட்டப்படி எல்லாம் இருக்கிறதா என்று பார்க்கும் அதிகாரம் தன்னுடையது என்கிறது உச்ச நீதிமன்றம்.
மக்களுக்காகத்தான் சட்டம்; அதை முடிவு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான தாங்களே பெரியவர் கள் என்பது பாரளுமன்றத்தை நடத் தும் அரசியல் கட்சிகளின் வாதம்.
மக்களுக்காக ஏற்கெனவே உருவாக் கப்பட்டுவிட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படையை மக்களின் பெயரால் கூட இப்போது மாற்றமுடியாது என்கிறது நீதிமன்றம். இப்போதைக்கு முடிகிற சர்ச்சை அல்ல இது!
இதில் இறுதியில் யார் வெல் வார்கள்? இட ஒதுக்கீட்டுப் பிரச்னை தான் அதைத் தீர்மானிக்கும்.
செய்தி 3:
மக்கள் பெயரால் நீதிமன்றமும் பாராளுமன்றமும் மோதிக்கொள்ளும் சூழலில், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் முதலில் மக்களுக்கு இருக்கிறதா என்பதுதான் இன்னொரு தீர்ப்பு எழுப்பும் கேள்வி.
அண்மையில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில், ஆளுங்கட்சி யினர் பரவலான வன்முறையிலும் தில்லுமுல்லுவிலும் ஈடுபட்டார்கள் என்று கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகளே கொதித்து எழுந்தது வரலாறு. அப்படித் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் எப்படிமக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?
தேர்தலையே ரத்து செய்து மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குக்கான தீர்ப் பில், நீதிபதிகளே மாறுபட்ட இரு கருத்துக்களைச் சொல்லியிருக் கிறார்கள்!
நீதிபதிகளில் ஒருவர், ‘இந்த வழக்கைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்த சமயத்திலேயே தாக்கல்செய்யப் போதுமான காரணம் சட்டத்தின் கீழ் இல்லை. தேர்தல் ஆணையமே செயலி ழந்தது என்று சொல்ல வழி இல்லை. தேர்தல் முடிந்த பிறகு தொகுதி வாரி யாகவே தேர்தல் வழக்குப் போட முடியும். எனவே தேர்தலையே ரத்து செய்ய முடியாது’ என்று தீர்ப்பளித்தார்.
இன்னொரு நீதிபதியோ, ‘வன் முறை, தில்லுமுல்லு நடந்தது. அதைத் தேர்தல் ஆணையம் சரியாகத் தடுக்க வில்லை. எனவே 155 வார்டுகளில் 99 க்கு மறுதேர்தல் நடத்தியாக வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக் கிறார்.
சட்ட நடைமுறைப்படி, இனி மூன்றாவது நீதிபதி விசாரித்து, அவர் தீர்ப்பு எதனுடன் இயைந்து போகிறதோ, அதுவே தீர்ப்பாகும். அப்புறம் உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் இத்யாதிகள் தொடரும்.
யார் மக்கள் பிரதிநிதி? தேர்தலில் வெல்பவரா? அவர் நியமித்த நீதிபதியா? அல்லது, அரசியல் சட்டமா? எப்படிப்பட்ட சூழலில் நடக்கும் தேர்தல் நியாயமானது? அரசியல் சட்டம் தனி நபரின் உரிமைக்காகவா? பெருவாரி மக்க ளின் நன்மைக்காகவா? சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கா?
ஒன்றுக்கொன்று முரண் வரும்போது, எது முதன்மை பெறும்? தன் படைப்பைத் தானே தேர்வு செய்யும் அதிகாரத்தை எழுத் தாளருக்குக் கொடுக் கலாமென்றால், தன் மீதான வழக்கைத் தானே விசாரித்துக் கொள்ளும் வசதியை குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் கொடுத்து விட முடியுமா?
பல சிக்கலான கேள்விகளை விவாதிக் கும் வாய்ப்பை இந்த மூன்று செய்திகள் நமக்குத் தந்திருக்கின்றன. விவாதிப்போம். அப்போதுதான் தெளிவு வரும்.
ஒரு பின்குறிப்பு: இந்த முறை மாநகராட்சித் தேர்தல் வன்முறை பற்றிய வழக்கில் சில மாதங்களிலேயே தீர்ப்பு வந்துவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெசன்ட் நகர் வாக்குச்சாவடி வன்முறை பற்றிப் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் விசாரித்தே முடிக்கப் படவில்லை. அப்போது வென்றவர், அதன் முழுப் பதவிக் காலம் பதவியில் இருந்து முடித்து, கட்சிகூட மாறி விட்டார்! இது உணர்த்தும் நீதி என்ன என்றும் யோசிப்போம்!
ஆனந்த விகடன் 24 .1 .2007
|