 |
ஞாநி
சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்?!
ஒவ்வொரு வாரமும் எழுதியது அச்சில் வந்த பிறகு, வாசகர்களிடமிருந்து நேரிலோ, கடிதம் தொலைபேசி வாயிலாகவோ விதவிதமான எதிர்வினைகள் எழுதியவருக்கு வந்து சேர்வது இயல்பு. அவற்றில் பூச்செண்டுகள், குட்டுகள் இரண்டையும்விட புதிர்களுக்கு வரும் எதிர்வினைகள் என்னை அதிகம் சிந்திக்கத் தூண்டுகின்றன. அப்படிப்பட்ட ஒரு புதிர்க் கேள்வி பல வாசகர்களிடமிருந்து... குறிப்பாக, இளம் கணினி உலக வாசகர்களிடமிருந்து அடிக்கடி எனக்கு வருகிறது.
‘அமெரிக்காவின் அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறீர்களே, அமெரிக்கா விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு எதுவுமே கிடையாதா?’ என்பதுதான் அந்தக் கேள்வி.
அமெரிக்கர்களிடமிருந்து பிறர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கலாம். உலகம் முழுவதும் ஒரு கலாசாரத் திடமிருந்து இன்னொரு கலாசாரம் கற்பதும் பகிர்வதும் இயல்பானது தான். ஆனால் அமெரிக்க அரசிடமிருந்து கற்க என்ன உள்ளது என்று பார்த்தால், அரசியல் ரீதியாகவோ தார்மிக ரீதியாகவோ பெரிதாக எதுவும் இல்லை. அதே சமயம் அமெ ரிக்க அரசியல் சட்டத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள பல விஷயங் கள் உள்ளன. அதில் ஒன்றைப் பார்ப்போம்.
எதையும் கேள்வி கேட்பதற்கான உரிமை மிக மிக அவசியம். அப்படிப்பட்ட உரிமையை, சில முக்கிய மான பதவிகளுக்கு நியமனம் செய்யும் விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்திருக்கிறது அமெரிக்க அரசியல் சட்டம்.
மன்மோகன் சிங் அண்மையில் பிரணாப் முகர்ஜியை புதிய வெளியுறவு அமைச்சர் ஆக்கினார். வேறு சிலரின் துறைகளை மாற்றி அமைத்தார். இதையெல்லாம் கேள்வி கேட்க முடியுமா? அது பிரதமரின் உரிமை என்பதுதான் நம் நாட்டில் நிலவும் கருத்து... வழக்கம்.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி புதிதாக ஒரு துறைக்கு அமைச்சரை நியமிக்கும்போது, அவர் அந்தப் பதவிக்கு ஏற்றவர்தானா என்று கேள்வி கேட்கும் உரிமை சட்டத்திலேயே செனட்டுக்குத் தரப்பட்டி ருக்கிறது. அண்மையில் இடைத் தேர்தல்களில் ஜனாதிபதி புஷ் பலத்த அடி வாங்கி, செனட் பெரும்பான்மை, காங்கிரஸ் பெரும்பான்மை இரண்டையும் எதிர்க்கட்சி தட்டிச் சென்றதும், முதல் வேலையாக தன் ராணுவ அமைச்சரை மாற்றினார்.
(இங்கே பிரதமருக்கு உள்ள அதிகாரம் அங்கே ஜனாதிபதியுடையது. இங்கே நாம் அமைச்சர் என்று சொல்பவர்களை அவர்கள் செயலாளர் என்று அழைப்பார்கள். நம் புரிதலுக்காக அவர்களை அமைச்சர் என்றே சொல்லிக்கொள்வோம்.)
தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம், இராக்கில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தை மக்கள் விரும்பவில்லை என்பதுதான். எனவே, அந்த யுத்தத்துக்கு தானும் பொறுப்பு என்றாலும், ராணுவ அமைச்சரை மாற்றி மக்கள் தீர்ப்பை தான் மதிப்பது போன்ற நாடகத்தில் புஷ் ஈடுபட்டார் என்பது அந்த ஊர் அரசியல்.
நாம் இப்போது கவனிக்க வேண்டியது புதிய நியமனங்களின்போது கேள்வி கேட்கும் உரிமை பற்றித்தான். பதவி நீக்கப்பட்ட ரம்ஸ்ஃபீல்டுக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர் ராபர்ட் கேட்ஸ். புஷ் அவர் பெயரை அறிவித்ததும், அவர் பதவிப் பிரமாணம் செய்து அமைச்ச ராகிவிட முடியாது.
அமெரிக்க அரசியல் சட்டப்படி, ஜனாதிபதி புது அமைச்சர் பெயர் அறிவிப்பை செனட்டுக்கு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். செனட் என்பது நம் நாட்டின் மக்களவைக்குச் சமமான அமைப்பு. அங்கே செனட்டர். இங்கே எம்.பி.
நம் மக்களவையில் இருப்பது போலவே அந்த செனட்டிலும் ஒவ்வொரு துறையையும் கண் காணிக்க ஒரு கமிட்டி உண்டு. கல்வி, ராணுவம், வெளியுறவு என்று ஒவ்வொரு கமிட்டியிலும் எல்லா கட்சிகளையும் சேர்ந்த சில உறுப்பினர்கள் இருப்பார்கள். நம் எம்.பிக்கள். கமிட்டிக்கு இல் லாத அதிகாரம் அங்கே செனட் கமிட்டிக்கு இருக்கிறது. அதுதான் நியமனத்தைக் கேள்வி கேட்கும் அதிகாரம்.
ஜனாதிபதியால் நியமிக்கப் பட இருப்பவரை அந்தத் துறையின் கமிட்டி உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பார்கள். அவற் றுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். பதில் வந்த பிறகு கமிட்டி தன் கருத்தை செனட் டுக்குத் தெரிவிக்கும். நியமனத் துக்கு செனட்டின் பெரும்பான்மை ஆதரவு இல்லையென்றால், அந்த நபரை பதவிக்கு நியமிக்க முடியாது.
அமெரிக்க அரசின் அமைச்சர் பதவி களுக்கு மட்டும் அல்ல; அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இதர நீதிபதிகள் நியமனமும் இதே போன்ற நடைமுறைக்கு உட்பட்டதுதான். அமெ ரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் தலைவர் பதவிக்கும் இதே போல செனட் ஒப்புதல் தேவை. அந்தப் பதவிகளுக்கு தான் நியமிக்க விரும்புவோர் பெயர்களை ஜனாதிபதி அறிவித்ததும் செனட் கமிட்டி விசாரணைகள் ஆரம்பமாகிவிடும்.
இந்த விசாரணைகளின் விளைவு என்ன? எப்படியும் ஜனாதிபதியின் கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை இருந்தால், அவர் விரும்புபவர் கடைசியில் பதவிக்கு வந்துவிடுவார்தானே?
ஆனால், அசல் பயன் அது அல்ல. எப்படிப்பட்டவர் நியமிக்கப்படுகிறார் என்பதை விசாரணை மூலமாகவும், அதையட்டி மீடியா வெளியிடும் செய்திகள் மூலமாகவும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடிவதுதான் உண்மையான லாபம்.
ஜனநாயகத்தில் இந்த பகிரங்கத் தன்மை மிக முக்கியமானது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் இந்த உயர் பதவி நியமன நடைமுறை அதை உறுதி செய்கிறது.
செனட் கமிட்டி விசாரணைகளில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்ப வர்களின் தனி ஒழுக்கம், கொள்கைகள் பற்றிய பார்வை முதல் ஊழல் குற்றச் சாட்டுகள் வரை விளக்கங்கள் கேட்கப் படுகின்றன. செனட் விசாரணை ஓட் டெடுப்பில் நிராகரிக்கப்பட்டவர்கள் பதவி பெற முடியாமல் போன வரலாறும் கணிசமாக உண்டு.
இந்த அருமையான நடைமுறை நம் நாட்டுக்கு அவசரமாகத் தேவைப் படுகிறது. மத்திய அர சின் அமைச்சர்கள், ஐ.பி., ரா போன்ற உளவு அமைப்புகளின் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் மட்டுமல்ல... ஒவ்வொரு மாநிலத்திலும் கூட அதே போன்ற பதவிகளுக்கு நியமனத் தின்போது முறையே மக்களவை, சட்டப் பேரவை கமிட்டி விசா ரணைகள் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
வருங்காலத்தில் ஒருவேளை, ராகுல் காந்தியை உள்துறை அமைச்சராக காங்கிரஸும், சசிகலாவை நிதி அமைச்சராக அ.தி.மு.கவும், கனிமொழியைக் கல்வி அமைச்சராக தி.மு.கவும் நியமிக்க நேர்ந்தால், அது எந்த அளவுக்குத் தகுதி உடைய நியமனம் என் பதை விசாரிக்கவும் மக்கள் தெரிந்துகொள்ள வும் சட்டப்படியான வாய்ப்பு கிடைக்குமே!
அமெரிக்காவிலிருந்து தனியார் கம்பெனிகளை வரவேற்று சலுகைகளைக் கொட்டிக் கொடுத்து ரத்தினக் கம்பளம் விரிக்கும் நம் தலைவர்கள், இப்படிப் பட்ட சட்டப் பிரிவுகளை இறக்குமதி செய்வது பற்றி ஏன் யோசிப்பதில்லை என்று நாம் யோசிப்போம்.
இந்த வாரப் பூச்செண்டு!
கிராமப்புறங்களில், பிரசவ நேரத்தில் உடனடி மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசுக்கு இ.வா.பூச்செண்டு! பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்ள வசதியாக 8,683 கிராம நர்ஸுகளுக்கும் செல்போன்கள் வழங்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. பலே!
இந்த வாரக் குட்டு!
சென்னையில் மத்திய அரசு அமைக்க இருக்கும் செம்மொழி நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு, அனுபவத்திலும் தகுதியிலும் மூத்த பல அறிஞர்கள் இருந்தும்கூட, தமிழக முதல்வரின் மகள் கனிமொழிக்கு அந்த உறுப்பினர் பதவி அளித்தமைக்கு இ.வா.கு!
இந்த வாரக் கேள்வி!
வாசகர்களிடமிருந்து சமூகச் சிக்கல்கள் முதல் தனி மனித உறவுப் பிரச்னைகள் வரையிலான முக்கியமான கேள்விகள் எனக்கு ஒவ்வொரு வாரமும் வருகின்றன. அப்ப டிப்பட்ட ஒரு கேள்வியைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வேன். இந்தக் கேள்விக்கு, நறுக்கென நான்கே வரிகளில் உங்கள் பதில் என்ன?
இந்த வாரக் கேள்வி:
தான் விரும்பும்போது செக்ஸ் உறவுக்கு மனைவியைக் கணவன் அழைப்பது சரி; அதே போல மனைவியும் தன் விருப்பத்தை கணவனுக்குத் தெரிவித்தால், அவள் அடக்கமில்லாத கெட்ட பெண்ணா?
ஆனந்த விகடன் 27.12.2006
|