 |
ஞாநி
மூன்று பெண்கள்... மூன்று பாடம்!
உலகம் முழுவதும் செய்திகளில் தற்போது பரபரப்பாக அடிபடும் மூன்று இந்தியப் பெண்கள்... சுனிதா வில்லியம்ஸ், ஷில்பா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய்!
காரணங்கள் வெவ்வேறானவை. இவர்களுடைய வாழ்க்கையில் இருந்து இதர இந்தியப் பெண்கள் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா?
சுனிதா, பஞ்சாபைச் சேர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை என்றாலும்... பிறந்தது, வளர்ந்தது, மணந்தது எல்லாமே அமெரிக்காவில்! அந்த நாட்டின் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றிய சுனிதா, இப்போது விண்வெளி அமைப்பான நாசாவில் இருக்கிறார். இன்றைய அவருடைய புகழுக்குக் காரணம், விண்வெளியில் நிலைகொண்டு இருக்கும் ஆய்வு நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கியிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதுதான். கடந்த ஒரு மாதமாக அண்டவெளியில் வசித்துக்கொண்டு இருக்கிறார் இவர்.
விண்வெளியில்கூட மாதக்கணக்கில் வசித்துவிடலாம். ஆனால், ஒரு சிலருடன் ஒரே கூரையின் கீழ் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது என்பதும் வாழ்க்கை யதார்த்தம்தான்!
அப்படிப்பட்ட ஒரு சவாலை எதிர்கொண்டு வென்றிருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்காக, கடந்த ஒரு மாதமாக ‘பிக் பிரதர்’ என்னும் தொடர் நிகழ்ச்சிக்காக ஒரே கூரையின் கீழ் முன்பின் தெரியாத சிலருடன் வசித்து, ‘தாக்கு’ப்பிடிக்கும் போட்டி யில் பல கோடி ரூபாய் பரிசு ஷில்பா வுக்குக் கிட்டியிருக்கிறது.
வீட்டுக்குள் அடை(க்கப்)பட்டுக் கிடக்கும் பிரபலங்களின் அந்தரங்க நேரங்கள் போக, மீதி சுமார் 18 மணி நேரமும் அவர்களுடைய நடவடிக் கைகள் வீடியோ கேமராக்களில் பதிவாகி, தினசரி ஒளிபரப்பு செய்யப் படும் தொடர் இது.
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையே, இன்னொருத்தர் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ள விரும்பும் சராசரி வம்பு மனப்பான்மையைப் பார்வை யாளர்களிடம் உசுப்பிவிட்டு, நிகழ்ச் சியைச் சுவாரஸ்யப்படுத்துவதுதான்.
எப்படி? தங்கியிருக்கும் பிரபலங்களுக்கிடையில் காதலோ மோதலோ ஏற்பட்டால்தான் பார்வையாளருக்கு சுவையாக இருக்கும். டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறும். ஆகவே, ஷில்பாவுக்கு காதல், மோதல் இரண்டும் நிகழ்ந்தன. ஷில்பாவும், ஒரு சக பிரபலமும் சிறிது காலம் ஒருவரோடொருவர் வழிந்தார்கள். இன்னொரு சக பிரபலம் ஷில்பாவை கேலி, கிண்டல், இனத் துவேஷ வசவு களால் துன்புறுத்தினார்.
அசல் வாழ்க்கையில் காதலும் மோதலும் கல்யாணத்திலோ கொலையிலோ முடியலாம். டி.வி. வாழ்க்கையில் அது நிராகரிப்பிலும், மன்னிப்பிலும் முடிக்கப் பட்டது.
டி.வி. வீட்டுக்குள் வசிப்பவர்களை ஒவ்வொரு சுற்றிலும் சிலரை வெளியேற்றுவதில் பார்ப்பவர் களின் ஓட்டும் முக்கியம். கடைசியில் எஞ்சியிருந்தவர்களில் ஷில்பா அதிக ஆதரவுடன் போட்டியில் வென்றார்.
சுனிதா, ஷில்பா வெற்றிகளுக்கு அர்த்தம் என்ன? அமெரிக்க வாழ்க்கை முறை, அமெரிக்க மனோபாவத்துடனே வளர்ந்த வரான சுனிதா, ஓர் அமெரிக்கக் குடிமக ளாக அமெரிக்காவுக்குத் தன் கடமையை ஆற்றிக்கொண்டு இருக்கிறார். அவரது இந்திய அடையாளம் விண்வெளிக்குக் கூட எடுத்துச் சென்ற பிள்ளையார் சிலை, பகவத் கீதை, ஸ்பெஷல் பேக்கில் கட்டிய சமோசாக்கள் ஆகியவை!
சுனிதாவின் வாழ்க்கை இந்தியப் பெண் களுக்குத் தரும் உடனடிச் செய்தி... அறிவு, திறமை, உழைப்பு இருந்தால் நீங்களும் உயரத்தை, சிகரத்தை எட்ட முடியும் என்பதுதான்.
ஷில்பாவின் சாதனையின் அர்த்தம்தான் என்ன? அழகும் அறிவும் திறமையும் உழைப் பும் உள்ள ஒரு நடிகை உள்ளூரில் மட்டு மல்ல, வெளியூர் டி.வி யிலும் வர்த்தக வெற்றி பெற முடியும் என்பதுதான்.
சுனிதா, ஷில்பா இருவருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இருவரின் ‘சாதனை’ களும் குடும்பம், தன் வீடு என்ற அமைப் புக்கு வெளியே சென்று நிகழ்த்திய சாதனை கள். பரபரப்பான செய்திக்குச் சொந்தக் காரரான மூன்றாவது பிரபலம் ஐஸ்வர்யா ராயின் போராட்டமோ இதற்கு நேர் மாறானது.
தனக்கென்று ஒரு குடும்பத்தை திருமணத்தின் மூலம் ஏற்படுத்திக்கொள்ளத் தான் அவர் இப்போது போராடிக்கொண்டு இருக்கிறார்.
ஓர் ஆணின் வாழ்க்கையில் திருமணம் என்பது பல மைல்கல்களில் இன்னும் ஒன்று. ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவள் வேறு எதைச் சாதித்திருந் தாலும், திருமணம்தான் உச்சமான மைல் கல் என்பது இந்திய மரபு.
அந்த மரபின்படி ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டம், இந்தியாவின் சிறந்த மாடல், சிறந்த நடிகை விருது, கேன் உலகப் பட விழாவின் நடுவர் பதவி, ஒலிம்பிக் தீபமேந்தும் சிறப்பு, டுஸ்ஸாட் மெழுகுச் சிலை அரங்கில் இடம் என எத்தனையோ சாதித் திருந்தாலும், திருமணம் செய்யும் சாதனைக்காகத்தான் தவிக்க வேண்டி யிருக்கிறது. விதவிதமான யாகங்கள், ஊர் ஊராக வெவ்வேறு கோயில்களில் பிரார்த்தனைகள், பரிகாரங்கள் என்று திருமணத்துக்குத் தடையாக இருக்கும் செவ்வாய் தோஷத்தைப் போக்கப் போராடுகிறார் ஐஸ்வர்யா ராய்.
உண்மையில் இந்த மூவரிடம் இருந்தும் இந்தியப் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என நான் கருதும் மூன்று விஷயங்கள் வேறு.
சுனிதா வில்லியம்ஸ் தம்பதிக்குக் குழந்தை இல்லை. இந்தியாவில் இந்தப் பிரச்னைக்காகக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் சென்று வேதனையோடு போராடுபவர்கள் ஏராளம். ஒரு பிரிவில் நிறைவு இல்லை என்றாலும், வேறு பிரிவில் நம் சக்தியையும் உழைப்பையும் செலுத்திச் சாதிக்கலாம் என்று தனக்கான பாதையைத் தேர்வு செய்த சுனிதாவின் பார்வை, இதில் பாடம்!
ஷில்பாவுக்கு வயது 32. திருமணம் ஆகவில்லை. சினிமாவிலும் டி.வி யி லும் அவர் ஒன்றும் நம்பர் ஒன் நடிகை அல்ல. கல்லூரிக்குச் சென்றதில்லை. ஆனால், அவருக்கு ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட பத்து மொழிகள் தெரியும். கராத்தேவில் பிளாக் பெல்ட். எல்லா வற்றுக்கும் மேலாக எய்ட்ஸ் நோய் விழிப்பு உணர்வுக்காகவும், மிருக வதைத் தடுப்புக்காகவும் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நமக்குப் பிடித்ததை, சமூக அக்கறையுடன் செய்ய விரும்பினால் அதற்கு எதுவும் தடையல்ல என்பதுதான் ஷில்பா தரும் பாடம்.
ஐஸ்வர்யா தரும் பாடம் சற்றே வித்தியாசமானது. அழகாலும், அறிவாலும் திறமையாலும் உழைப்பாலும் எவ்வளவுதான் சாதித்தாலும், உணர்ச்சியின் பெயரால் மரபுச் சுமைகளுக்கு அடிமையாகிவிட்டால், எல்லா சாதனைகளும் அர்த்தமற்றுப் போய்விடும் என்பது தான் அந்தப் பாடம்.
உணர்ச்சிகளுக்கு இடம் தராத அறிவைப் போலவே, அறிவுக்கு இடம் தர மறுக்கும் உணர்ச்சி களும் ஆபத்தானவை!
இந்த வார பூச்செண்டு!
பொது மக்களுக்குத் தகவல் தரத் தவறியதற்காக, பல்கலைக்கழகப் பதிவாளர் முதல் தாசில்தார் வரை அபராதம் விதித்துள்ள மாநில தகவல் உரிமை ஆணையருக்கு இ.வா. பூச்செண்டு!
இந்த வார குட்டு!
தமிழகம் முழுவதும் வெறி நாய் கடிகளால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசின் மருத்துவமனைகளில் போதுமான ஊசி மருந்துகள் இல் லாமல், பாதிக்கப்பட்டவர்களை தனி யார் மருத்துவர்களிடம் துரத்தி அடிக்கும் நிலையை ஏற்படுத்தி யிருக்கும் அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு இ.வா.குட்டு!
இந்த வார பரிதாப விருது!
விஜயகாந்த்தை பயந்தாங்குளி, கறுப்புப் பணக்காரன் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்ததன் மூலம், விஜயகாந்த்தின் மூன்றாவது அணி வளர்ச்சியைப் பற்றிய தங்கள் பயத்தை அம்பலப்படுத்தியிருக்கும் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இ.வா. பரிதாப விருது!
ஆனந்த விகடன் 7 .2 .2007
|