 |
ஞாநி
அடுத்த ஜனாதிபதி?!
வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவின் 12.வது குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மறுபடியும் அப்துல் கலாம் அவர்களையே அடுத்த குடியரசுத் தலைவர் ஆக்கலாம் என்று மீடியாவில் சிலர் பிரசாரம் தொடங்கியிருக் கிறார்கள். மறுபடியும் அதே பதவியில் நீடிப் பதை விரும்பாத அப்துல் கலாம், தனது பழைய ஆசிரியர் வேலைக்குச் செல்ல விரும்பு வதாகச் செய்திகள் வெளியான பிறகும்கூட, அவரே ஜனாதிபதியாக நீடிக்க வேண்டும் என்று பலமான கருத்துருவாக்கப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது.
அப்துல் கலாம், மீடியாவின் செல்லப்பிள்ளை என்பதில் சந்தேகம் இல்லை. அரசியல்வாதிகளுடன் அலுப்படைந்திருக்கும் நடுத்தர படித்த வர்க்கம், அவரைத் தங்களில் ஒருவராகப் பார்க்கிறது. அதைத்தான் மீடியாவும் பிரதிபலிக்கிறது. குழந்தைகள் மத்தியில் 2020 கனவு பற்றிப் பேசுவது, 74.ம் வயதில் வாலிப மிடுக்குடன் சுகாய் போர் விமானத்தில் பறப்பது போன்ற செயல்கள் அப்துல் கலாமின் பிம்பத்தை வளர்த்திருக்கின்றன.
அதே சமயம், குஜராத் முஸ்லிம் படுகொலை விஷயத்தில் மௌனம், இசை மேதை எம்.எஸ்.ஸுக்கு அஞ்சலி செலுத்தத் தமிழகம் வந்தவர், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சுனாமியின்போது வராதது ஆகியவை குறித்த விமர்சனங்களும் நடுத்தர வகுப்புக்கு வெளியே ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதற்குக் கட்சி அரசியலில் இருந்திராத அப்துல் கலாம் போன்ற சிறந்த படிப்பாளிகள் மட்டுமே வர வேண்டும் என்றும் படிப்பாளிகள் பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், ஜனாதிபதி பதவி என்பதே அரசியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் பதவிதான். 1947.ல் சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோவொரு அரசியல் காரணங்களுக்காகவே அதில் அமர்த்தப்பட் டார்கள் என்பதுதான் நிஜம்.
கட்சி அரசியல் என்பது சட் டென்று கண்ணுக்குத் தெரியும் அம்சம். கண்ணுக்குப் புலப்படாமல் அடிநாதமாக சில அரசியல் போக்குகள் எப்போதும் இருந்துகொண்டு இருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே அப்படி இருந்து வரும் சில போக்குகளைப் பார்ப்போம்.
ஹிந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம், பாரதிய ஜனதா கட்சி என்று தொடர்ச்சியாக வெவ்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வரும் இந்துத்துவ சார்பு என்பது ஒரு அரசியல்போக்கு. இதற்கு எதிராகவும் மாற்றாகவும் காந்தி, நேரு போன்ற தலைவர்களும் காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்திய மதச் சார்பின்மை இன்னொரு போக்கு. இதே போல பொருளாதாரத் துறையில் வலதுசாரி சிந்தனையாளர்களும் இடதுசாரி ஆதரவாளர்களும் விடுதலை இயக்கத்துக்குள்ளேயே தனித்தனியாக இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் இந்துத்துவா ஆதரவாளர். அதனால் நேருவால் அவருடன் இணைந்து போக முடியவில்லை. ஹிந்து பர்சனல் லா திருத்தங்கள் முதல் கோயில் புனருத் தாரணங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வது வரை இருவருக்கும் இடையே கடும் வேறுபாடுகள் இருந்தன. ராஜேந்திர பிரசாத்தை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேருவுக்கு விருப்பம் இல்லை. வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
ஒருவிதத்தில் இந்துத்துவ ராஜேந்திர பிரசாத்துக்கு மாற்றாகத் தான் தத்துவ போதகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை நேரு முன்னிறுத்தினார் என்று சொல்ல வேண்டும். எப்படி காந்தி ராமராஜ்யத்தை வலியுறுத்தினாலும், மதச் சார்பற்றவராக இருந்தாரோ... அதே போல ராதாகிருஷ்ணனும் இந்து தத்துவ வியாக்யானியாக இருந்தாரே தவிர, சடங்குகளை வலியுறுத்தி இதர மத எதிர்ப்பாளராக மாறவில்லை. அவர்தான் நேரு ஆதரித்த அடுத்த ஜனாதிபதியாக இருந்தார்.
முதல் மூன்று முறையும் ஜனாதிபதிகள் ஏதோவொரு வகையில் இந்து சாயமுள்ளவர்களாக இருந்த நிலையில், அதைச் சமன் செய்யவே அடுத்தவராக கல்வியாளர் அறிஞர் ஜாகிர் ஹ§சேன் கொண்டுவரப்பட்டார்.
இதற்கு அடுத்த கட்டம், பிரதமர் இந்திராகாந்தி காங்கிரஸுக்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள யுத்தம் நடத்திய காலம். சோஷலிஸத் தின் பெயரால் தன்னை வலுப்படுத்திக்கொள்ள முனைந்த இந்திரா, வலதுசாரி சக்திகளின் வேட்பாளரான சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக, காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவரான வி.வி.கிரியை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். தொழிலாளர்கள் ஆதர வுக்கு வி.வி.கிரி! முஸ்லிம்கள் ஆதரவுக்காக இந்திரா போட்ட கணக்கு, அடுத்த ஜனாதிபதியாக பக்ருதீன் அலி அகமது.
நெருக்கடி நிலைக்குப் பிறகு, இந்திரா தோற்று அவரை எதிர்த்த வலதுசாரிகள் மொரார்ஜி தலைமை யில் ஆட்சி அமைத்ததும், முன்னர் வி.வி.கிரியிடம் தோற்ற சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ரெட்டி யின் பதவிக் காலம் முடியும் முன்பே, அவரைக் கொண்டுவந்த மொரார் ஜியின் பிரதமர் பதவி பறிபோய் விட்டது. மறுபடியும் பிரதமரான இந்திரா, தன் விசுவாசியான ஜெயில் சிங்கை அடுத்த ஜனாதிபதி ஆக்கி னார். சிறுபான்மை சீக்கியர் என்பது கூடுதல் காரணம்.
அடுத்து ராஜீவ் காந்தி பிரதமரான போது, அதை எதிர்த்த ஜெயில்சிங்குக்கு நீட்டிப்பு எப்படிக் கிடைக்கும்? அப்போதுதான் காங்கிரஸ்காரரான ஆர்.வெங்கட்ராமனுக்கு ஜனாதிபதி வாய்ப்பு கிடைத்தது. ராஜீவுக்குப் பிறகு பிரதமரான நரசிம்ம ராவ் தனக்கு உகந்த கட்சிக்காரர் சங்கர் தயாள் சர்மாவை ஜனாதிபதியாக் கிக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்வு அரசியலில் வட இந்தியா, தென் இந்தியா, இந்தி பிராந்தியம், இந்தி அல்லாத மாநிலங்கள் என்ற போக்குகளுக்கும் அழுத்தம் உண்டு. ராஜீவ் பிரதமரான காலத்துக்குப் பிறகு, பிரதமர் வட இந்தியர் என்றால் ஜனாதிபதி தென் இந்தியர் அல்லது உல்டா என்ற அணுகுமுறையும் அமைந்தே வருகிறது. தென் இந்தியரான நரசிம்மராவுக்கு ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா. அதன் பிறகு தேவகவுடா தவிர, மற்ற எல்லா பிரதமர்களும் வட இந்தியர்கள். ஜனாதிபதி கள் தென் இந்தியர்கள்.
காங்கிரஸும் அல்லாத, பி.ஜே.பி.யும் அல்லாத மூன்றாவது அணி இடையில் கொஞ்ச காலம் ஆட்சியில் அமர்ந்தபோதுதான், முதல் தலித் ஜனாதிபதியாக கே.ஆர்.நாராயணன் பதவிக்கு வந்தார்.
அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டபோது ஆட்சியில் இருந்தது பி.ஜே.பி. என்பது குறிப் பிடத்தக்கது. இந்துத்துவா சக்திகள் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குத் தங்களை வலுப் படுத்திக்கொண்ட பின்னணியில், இந்தியாவில் பிரிவினை காலத்துக்குப் பிறகு மறுபடியும் இந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மோதல் என்பது தீவிரப்பட்டு இருந்தது. இந்த சமயத்தில் ஒரு முஸ்லிமை ஜனாதிபதியாக பி.ஜே.பி. முன்னிறுத்தியதே ஒரு அரசியல்தான். கே.ஆர்.நாராயணன் எப்படி தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக்கொண்டது இல்லையோ, அதேபோல அப்துல் கலாமும் தன்னை ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொண்டது இல்லை. அதே சமயம் அவருடைய நடை, உடை, பாவனை, சிந்தனை, பார்வை எல்லாமே பி.ஜே.பி. விரும்பும் அலை வரிசையில் இருந்தன.
நேரு முதல் ராஜீவ் காலம் வரை காங்கிரஸ் ஆட்சிகள், இந்தியா பகிரங்கமாக அணுகுண்டு தயாரிப்பதை விரும்பவில்லை. பி.ஜே.பி. அதை வலியுறுத்தி வந்தது. அதே கருத்தில் இருந் தவர் ராணுவ விஞ்ஞானியான அப்துல் கலாம். விஞ்ஞான மேலாளராக அவர் ஆயுதப் பெருக்கத்திலும் ஆயுத வலிமையிலும் நிறைய அக்கறை காட்டினார். அது பி.ஜே.பி க்கும் உடன்பாடான கருத்து!
இந்த நுட்பமான அரசியலின் தற்போதைய போக்குப்படி, அடுத்த ஜனாதிபதி யாராக இருக்க முடியும்? பிரதமர் சீக்கியராக இருப்பதால் ஜனாதிபதியும் சிறுபான்மை மதத் தினராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் இல்லை. அப்படியே சிறுபான்மை யினராக இருந்தாலும், மறுபடியும் முஸ்லிம் என்பதைவிட கிறிஸ்துவரே பரிசீலிக்கப்படுவார். ஜனாதிபதி பதவிக்கு ஏற்ற தென் இந்தியக் கிறிஸ்து வராகக் கடந்த காலங்களில் அதிகம் முன்னிறுத்தப்பட்ட பெயர் பி.சி.அலெக் சாண்டர். ஆனால், இப்போது அவருக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீர் ராஜ பரம்பரையைச் சேர்ந்த கரண் சிங் முதல் காங்கிரஸின் மூத்த பிராமணத் தலைவர் என்.டி. திவாரி வரை பலரது பெயர்கள் மீடியாவில் உலவவிடப்படுகின்றன. இன்ஃபோ சிஸ் நாராயணமூர்த்தி பெயர்கூட பிஸினஸ் பத்திரிகைகளில் முன் வைக்கப்படுகிறது.
வட்டார அடிப்படையில் இந்தி மாநிலங்களுக்கு வெளியே இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள ஜனாதிபதிகள் அமைந்திருக்கிறார்கள். ஆனால் கன்னட, மராட்டிய, வங்காள ஜனாதிபதிகள் தேர்வானது இல்லை. மராட்டிய காங்கிரஸ் தலித் தலைவர் சுஷீல் குமார் ஷிண்டே, வங்காளியான மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பெயர்கள் இதனால் கவனம் பெறுகின்றன. இடதுசாரி களுடன் நிழல் யுத்தம் செய்துகொண்டு இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரி சோம்நாத்தை விரும்புவார் என்று தோன்றவில்லை. சோம்நாத்தை முதலில் காட்டி, பிறகு ஜோதிபாசுவை ஜனாதிபதி ஆக்க இடதுசாரிகள் ரகசியத் திட்டம் வைத்திருப்பதாகவும் வலதுசாரி மீடியா செய்திகள் சொல் கின்றன.
எப்படியானாலும், இப்போதைய ஆள் பலத்தின்படி யாரை காங்கிரஸ், இடதுசாரிகள் இருவரும் ஒப்புக் கொள்கிறார்களோ அவரே ஜனாதி பதி ஆக முடியும். இந்தச் சிக்கலான அரசியல் சூழலில் சர்வ கட்சி சமரச வேட்பாளராக அப்துல் கலாமே மறுபடியும் வாய்ப்பு பெறவும் கூடும்.
அடுத்த ஜனாதிபதி பதவிக்கு எனது பரிந்துரை ஒரு பெண்!
அந்தப் பெண் யாராக இருக்கலாம்? எல்லோருமே யோசிக்கலாமே? -
இந்த வாரப் பூச்செண்டு!
உயர் நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா தமிழ்நாட்டு நீதி மன்றங்களில் இனி விசாரணைகளும் வாதங்களும் தமிழில் நடத்தலாம் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கும் அதை ஏற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவுக்கும் இ.வா. பூச்செண்டு!
இந்த வாரக் குட்டு!
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை தொகுதியின் ஏழைகளுக்குப் பயன்படும் கல்வி, மருத்துவத் திட்டங்களுக்குத் தராமல், வசதியான சென்னைத் தனியார் கல்லூரிக்குக் கொடுத்ததற்காக அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இ.வா.குட்டு!
இந்த வாரப் புதிர்!
மொத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் எத்தனை பேர் முஸ்லிம்கள்?
1. முப்பது சதவிகிதம்
2. பத்து சதவிகிதம்
3. ஆறு சதவிகிதம்
மூன்றும் சரி அல்ல. வெறும் 2.2 சதவிகிதம்தான். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தால்தான் தலித்களைப் போல ஓரளவேனும் அதிகாரத்தில் பங்கு பெற முடியும் என்று சில சமூக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதே சமயம், இட ஒதுக்கீடு மட்டும் போதாது; முஸ்லிம் குழந்தைகள் கல்வி பெறும் விகிதத்தை அதிகரிக்காமல் வேலையில் இட ஒதுக்கீடு பயன் தராது என்றும் சில அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆனந்த விகடன் 13 .12 .2006
|