Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. கவலைகள் ஓய்வதில்லை!

2. பணமா? மனமா?

3. பதில்களைத் தேடும் கேள்விகள்!

4. அடுத்த ஜனாதிபதி?!

5. பாரதி 125

6. சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்?!

7. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்

8. கல்விப் புரட்சி

9. எது நீதி? எது நியாயம்?

10. மூன்று பெண்கள்... மூன்று பாடம்!

11. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

***********

சிலிர்ப்பு நரம்பைத் தேடி: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

பாரதி 125

‘கனக்குஞ் செல்வம் நூறு வயது இரண்டையும் எனக்குத் தா’ என்று தான் தொழுத கடவுளிடம் ஓயாமல் கேட்டவன் பாரதி. இரண்டும் அவனுக்குக் கிட்டவில்லை. கிட்டியது வெறும் 39 வயதும், கடைசி வரை தீராத வறுமையும்தான்!

ஆனால், பாரதிக்கு வேறொரு செல்வம் கிட்டியது. கனக்குஞ் செல்வத்தை விடப் பெருஞ்செல்வம்... காலத்தால் அழியாத, காலந்தோறும் வளர்கின்ற புகழ்ச் செல்வம்! பாரதியின் படைப்புகள், பல நூறு வருடங்கள் உயிரோடு வாழ்ந்து, அவன் புகழ்ச் செல்வத்தை பெருக்கிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை!

படைப்பின் எந்தப் பிரிவானாலும் செய்யுள், வசன கவிதை, பாட்டு, குட்டிக் கதை, நீண்ட கதை, உருவகக் கதை, கருத்துக் கட்டுரை, பத்திரிகைச் செய்திக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, நாடகம் எனப் பல வகைகளையும் செய்துபார்த்து, முன்னேர் உழுதவன் பாரதி. எனவே, இன்றும் என்றும் படைப்பாளியாக விரும்பும் எவரும் பாரதியைப் பயிலாமல் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ள முடியாது.

எப்படி எழுத வேண்டும் என்பதற்கு பாரதி சொன்ன இலக்கணத்தைப் பின்பற்றினால், எளிதில் கருத்தை வெல்லும் எழுத்தாக நம் எழுத்து மலரும். ‘நீ எழுதியதைத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவனுக்கு வாசித்துக் காட்டு. அவனுக்கு விளங்கினதென்றால், நீ சரியாக எழுதியதாக அர்த்தம்’ என்கிறான் பாரதி. எழுதும் முறையையும், எழுத்தின் நோக்கத்தையும் ஒரே சமயத்தில் இது விளக்குகிறது. யாருக்காக எழுதுகிறாய், எப்படி எழுதுகிறாய் என்று வரையறுக்கச் சொல்லும் இன்றைய நவீன தகவல் தொடர்பியலின் சாரத்தையே இந்த அறிவுரையில் காணலாம்.

கடந்த 30 ஆண்டுகளில், சோர்வு வரும் தருணங்களில் எல்லாம், பாரதியின் கவிதையையோ கட்டுரையையோதான் நான் எடுத்து வைத்துக்கொள்கிறேன். சிறிது நேரம் பாரதியில் தோய்ந்ததும்,சோர்வுகள் நீங்கி மீண்டும் உற்சாகம் என்னைப் பற்றிக்கொள்ளும்.

ஓவியனாக வேண்டும் என்பது என் இளம் பருவக் கனவுகளில் ஒன்று. எல்லா பிரபல ஓவியர்களின் படங்களையும் பார்த்து அதுபோல வரைந்து முயற்சித்துப் பழகியதில், சொந்தமாக வரையும் கற்பனைத் திறன் முடங்கிவிட்டது. ஆனால், இன்றும் ஓவிய னாக நான் என்னைப் பற்றிப் பெருமைப்படும் ஒரே ஓவியம், 1982 ல் பாரதி நூற்றாண்டுக்குப் பின் சொந்தமாக பத்திரிகை தொடங்க முயற்சித்தபோது, அதன் சின்னமாக நான் வரைந்த பாரதி ஓவியம் தான்.

எங்கள் வீட்டுப் பிள்ளையார் பூஜைகளில், பாரதியின் ‘விநாயகர் நான்மணி மாலை’யைத்தான் நான் சிறுவனாக இருந்தபோது படித்து, மலர் தூவுவேன். அதுதான் என்னை நாத்திகத்தை நோக்கி நகர்த்தியது. காரணம், ஆன்மிகவாதியான பாரதியின் கடவுள், மத குருமார்கள் சொல்லும் கடவுளிலிருந்து வேறாக இருந்தார். கடவுளைத் தன் நண்பனாக்கி, கடவுளுக்கு உத்தரவுகள் போடுபவராக இருந்தார். பாரதியின் ஆன்மிகமும், வள்ளலாரின் ஆன்மிகமும், நாத்திகர்களின் மனித நேயமும் ஒன்றேதான் என்று உணர்த்தியது பாரதியின் ‘சரஸ்வதி வணக்கம்’.

உலகத்தில் வேறு எந்தச் சமுதாயத்திலும், பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுக்கு நிகரான ஆளுமை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட பாரதியின் 125 ம் ஆண்டை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்?

இன்று நம் சமூகத்தில் மூன்று முக்கிய எழுச்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று, மகளிர் எழுச்சி. அடுத்தது, தலித் எழுச்சி. மூன்றாவது, மத அடிப்படைவாத எழுச்சி. முதல் இரண்டும் காலத்தின் கட்டாயம். மூன்றாவது, கடிகாரத்தைத் திருப்பிவைக்கும் முயற்சி.

இந்த மூன்று எழுச்சிகள் தொடர்பாகவும் பாரதியிடமிருந்து நாம் அறிய ஏராளமாக உள்ளன. சக ஆண்களிடம் உறவு காரணமாக அன்பு காட்டவேண்டிய நிலையில் இருக்கும் பெண், அதே ஆண்களிடம் தனக்கான நீதியைப் பெறுவது எப்படி என்பதுதான் இன்றும் தொடரும் மயக்கம். பாரதி இந்த மயக்கத்துக்கு மருந்துகள் சொல்லி இருக்கிறான்.

தலித் எழுச்சி என்பது, சாதி அமைப்பை ஒழிப்பதற்கான நீண்ட நெடிய போராட் டத்தின் இன்னொரு கட்டம். எல்லாச் சாதிகளும் சம அந்தஸ்தைப் பெறுவது என்பது இதில் ஒரு படி. அதை அடைந்த பின், சாதிகள் இல்லாமல் ஆக்குவது அடுத்த படி. எல்லாரும் பூணூல் அணிந்து சமமான உயரத்தை அடையட்டும் என்று ஒரு தலித் இளைஞருக்குப் பூணூல் அணி விக்கிறான் பாரதி. நோக்கம், சமத்துவம் தானேயன்றி பூணூல் அல்ல! எல்லாருக் கும் பூணூல் அணிவிப்பது என்பது நூறாண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் மறுமலர்ச்சியாளர்களுக்குத் தோன்றிய தீர்வு. யாருமே அணிய வேண்டாமே என்ற மறுபக்க சிந்தனை, அடுத்த தலைமுறை மறுமலர்ச்சியாளர்களின் தீர்வு. இரண்டிலும் நோக்கம், சாதிகளின் சமத்துவம்தான்!

சாதி ஒழிய சமத்துவம் மட்டுமல்ல, அக மண முறை சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் முறை அகற்றப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதே கருத்தை பாரதி பல இடங்களில், சாதிகள் தமக்குள் வேறுபாடுகளை மறந்து கலத்தல் வேண்டும் என்று வலியுறுத்து கிறான்.

பாரதி வாழ்ந்த காலத்திலேயே நாற்று நடப்பட்டு, இன்று விஷ விருட்சமாக வளர்ந்திருப்பது மத அடிப் படைவாதம். அதற்கு எதிரானவன் பாரதி என்பதற்கு அவனுடைய ஏராளமான கட்டுரைகளில் ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக, இஸ்லாம் பற்றிய பாரதியின் நேசக் கருத்துக்கள், மதம் என் பதைக் கடந்து மானுடம் என்ற வள்ளலார் பார்வையின் தொடர்ச்சியாக ஒலிக்கின்றன.

மனித மனங்களை அன்பால் தான் வெல்லவேண்டும், அன்பால்தான் சமத்துவம் வரும் என்பதில் ஆழமான நம்பிக்கை பாரதிக்கு இருக்கிறது. இந்த அன்பை வளர்க்கும் அறிவை வளர்ப்பதுதான் பாரதியின் சாரம்.

இதையெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். வயது முதிர்ந்த மனங்களை மாற்ற முடியாது. இதுவும் பாரதியின் நம்பிக்கை. அதனால்தான் புதிய ஆத்திசூடி முதல் ஆரம்பக் கல்விக்கான சிலபஸ் வரை பாரதியின் மூளையும் பேனாவும் இயங்கியிருக்கின்றன.

பாரதியை தமிழ்ச் சமூகம் இன்னமும் முழுமையாக உணரவில்லை. யானையைக் கண்ட குருடர்கள் போலத்தான் இருக்கிறது. எனவே, நமது கொண்டாட்டங்களும் அப்படிப் பட்டவை ஆகிவிடுகின்றன. ‘பாரதி 125’ ஐ எப்படிக் கொண்டாடுவது? இன்னமும் பரவலாக அறியப்படாத பாரதியின் உரைநடைகளை பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் எல்லாம் இளைய தலை முறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கவிஞன், பத்திரிகையாளன் என்று மட்டும் பாரதி அறிமுகம் செய்யப்படலாகாது. காந்தியைப் போல, நேருவைப் போல, பெரியாரைப் போல, அம்பேத் கரைப் போல சமூக மாற்றத்துக்காக, மனித சமத்துவத்துக்காக முயற் சித்த சிந்தனையாளன் பாரதி. மற்றவர்கள் இயக்கம் கட்டினார்கள். பாரதியின் சூழலில், அவனே ஒரு நபர் இயக்க மாக இயங்கினான்.

இந்தி ‘முன்னாபாய்’ சினிமா, காந்தியை இளம் ஜீன்ஸ் தலைமுறைக்கு நெருக்கமானவராக ஆக்கியது போல, எல்லாத் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்க மானு டத்தைக் கூவி அழைக்கும் பாரதியை ‘நம்ம ஆளு’ என்று இன்றைய இளை ஞர்களை உணரச் செய்யும் முயற்சிகளில் சக படைப்பாளிகள், கலை ஞர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் இறங்க வேண்டும்!



இந்த வாரக் குட்டு!

அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங் களில் சமூக விரோதி கள் செய்யும் வன்முறை களுக்குக் கட்சிகளைப் பொறுப்பாக்க முடியாது என்று சொல்லி நஷ்ட ஈடு நோட்டீஸ்களை ரத்து செய்த தமிழக அரசுக்கு இ.வா.குட்டு! சமூக விரோதிகள் வளருவதற்கே ஒரு வகையில் அரசுகள் தானே பொறுப்பு! சமூகத்தில் எந்த ஒரு சமூக விரோதியும் அரசியல்கட்சிகள், அரசு இயந்திரம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஆதரவு இல்லாமல் இயங்கவே முடியாது என்பதுதானே யதார்த்தம்!



இந்த வாரப் பூச்செண்டு!

கூலித் தொழிலாளிகளான சவுந்தர்ராஜன், மணிமேகலை ஆகியோருக்கு இ.வா. பூச்செண்டு! மகள் சாந்தியைத் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் கருவியாகப் பார்க்காமல், அவள் விரும்பிய விளையாட்டுத் துறையில் அவள் விருப்பப்படி முன்னேறி சாதனையாளராக மலர ஊக்குவித்து, இதர பெற்றோர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற் காக!



இந்த வாரப் புதிர்!

அண்மையில் தன் 91 ம் வயதில் மரணம் அடைந்த முன்னாள் சிலி சர்வாதிகாரி பினோஷே, 17 வருடங்கள் சிலியில் கொடுங் கோல் ஆட்சி நடத்தியபோது அவரை ஆதரித்த நாடு எது?

1. சோவியத் யூனியன்

2. சீனா

3. அமெரிக்கா

4. பிரான்ஸ்

பினோஷே 1973 முதல் 1990 வரை சிலியில் சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது, அவரை எதிர்த்த தற்காக 2,500 அரசியல்வாதிகள் வன்முறையில் கொல்லப்பட்டனர். 24 ஆயிரம் பேர் சிறைகளில் சித்ரவதை செய்யப்பட்டனர். சுமார் 135 கோடி ரூபாய் மதிப்புக்கு அவர் ஊழல் சொத்து சேர்த்ததாக மதிப்பிடப் பட்டது. ஒருமுறைகூட அவர் நீதிமன்றத்தின் முன் மனித உரிமை மீறல்களுக்காகவோ ஊழலுக்காகவோ நிறுத்தப்படவில்லை. சிலியில் ஆட்சி செய்துவந்த சோஷலிஸ்ட் தலைவர் ஆலன் டேவைக் கொலை செய்து ஆட்சியைப் பிடிக்க உதவி செய்தது முதல், கடைசி வரை பினோஷேவை ஆதரித்த நாடு அமெரிக்கா!

ஆனந்த விகடன் 20 .12 .2006




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com