 |
ஞாநி
பணமா? மனமா?
இந்த வார வேதனை 1: கொடிக்குளம்
நம் சமூக அமைப்பில் ஒரு பெண், ஊராட்சித் தலைவராவதே மகிழ்ச்சிக்குரியது. ஒரு தலித் பெண், தலைவர் ஆவது இரட்டை சந்தோஷம்!
ஆனால், அந்த மகிழ்ச்சி எல்லாம் நாம் விழா கொண்டாடிக்கொள்ள வும், எல்லா ஊர்களும் சமத்துவபுரங்களாகி வருகின்றன என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் மட்டும்தான் என்று முகத்தில் அறைந்து சொல்கிறது கொடிக்குளம் கிராமம்.
மதுரைக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள கொடிக்குளத்தின் புதிய ஊராட்சித் தலைவர் பாலாமணி, அதே கிராமத்தில் தலையாரியாக வேலை பார்த்து ஓய்வுபெற்ற வீமனின் மனைவி. எழுதப் படிக்கத் தெரியாதவர்.
ஊரில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள். அதில் 3 தலித் தனித் தொகுதிகள். தலைவர் பதவி தலித் பெண்ணுக்கென்று ரிசர்வ் செய்யப் பட்டதால், கோபமடைந்த மேல் சாதியினர் மீதி 6 இடங்களிலும் யாரும் போட்டியிடக் கூடாது என்று தேர்தலையே புறக்கணித்தார்கள். ஆனால், 3 தலித் வார்டு தேர்தல் மட்டும் நடந்து முடிந்து, தலித் பெண் மணி தலைவராகிவிட்டார்.
இப்போது ‘ஊர்ப் பெரியவர்கள்’ (அங்குள்ள மேல் சாதியினருக்கான இடக்கரடக்கல்) ஒன்று கூடி, ஒரு ஏலம் போட்டிருக்கிறார்கள். அந்த ஏலத்தில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வந்த கறுப்பு என்ற மேல் சாதி நிலச்சுவான்தார், தலைவி பாலாமணிக்கு உதவியாளராக ‘நியமிக்கப்’பட்டு இருக்கிறார்.
என்ன உதவி? எழுதப் படிக்கத் தெரியாத பாலாமணி, ஊருக்காக என்னென்ன திட்டங்கள் போட வேண்டும், அரசு நிதி உதவியை எப்படிப் பெற்றுத் தர வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுவதுதான் உதவி. படிக்காத பாலாமணிக்கு உதவியாளராக நியமிக்க, படித்த தலித் இளைஞர் ஒருவர்கூடக் கிடைக்க மாட்டாரா என்ன? ஏலம் விட்டு உதவியாளரை நியமிக்க என்ன காரணம்?
நீட்டிய இடத்தில் பாலாமணி கையெழுத்து... ஸாரி, கைநாட்டு வைப்பதைச் செய்தால் மட்டும் போதும் என்று எதிர்பார்ப்பதே காரணம். இதற்காகத்தான் ஏலத் தொகை! தொகையில் ஒரு பங்கு ஊருக்கும், மீதி ஊர்க் கமிட்டிக்கும் போகும் என்றும் செய்திகள் வெளி யாகி உள்ளன. அசலையும் வட்டியை யும் மீட்டுக்கொள்ளத்தான் அரசு வழங்கும் திட்டத் தொகைகள் இருக் கிறதே!
ஏலம் எதுவும் நடக்கவில்லை என்று கறுப்பு உள்ளிட்ட ‘ஊர்ப் பெரியவர்கள்’ மறுத்தாலும், தங்கள் எதிர்ப்பை மீறி ஏலம் நடந்தது என்று பாலாமணியின் கணவர் வீமன், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதே சமயம், கலெக்டரைச் சந்தித்து ஊர் நலத் திட்டங்களுக்காக மனு கொடுத்து, சால்வை போர்த்தச் செல்லப்போவது யார் யார் என்று கேட்டால்... தான், பாலாமணி, கறுப்பு மூவரும்தான் என்கிறார்!
பல இடங்களில் ஊர்த் தலைவர் பதவி, தேர்தலுக்கு முன்பாகவே பகிரங்க ஏலம் விடப்பட்டபோது, அது தெரியவந்து தடுக்கப்பட்டது. அல்லது, தடுக்கப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக நமக்குச் சொல்லப்பட்டது.
இப்போதோ, தேர்தலுக்குப் பின் ஏலங்கள் பகிரங்கமாக அல்ல, ரகசியமாக நடந்து வருகின்றன. பத்திரிகைகள் இது பற்றிச் செய்தி வெளியிட்டால், கலெக்டர்கள் விசாரித்து, மேலிடத்துக்குத் தகவல் அறிக்கை அனுப்புவார்கள்; அவ்வளவுதான்! ஆனால், அடிமட்ட யதார்த்தம் என்பது, ஏற்கெனவே இருந்து வரும் சாதி ஆதிக்க, பண ஆதிக்க நிலைமை அப்படியே நீடிப்பதேயாகும்!
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சி யேந்தல் கிராமங்களில் எல்லாம், தலித் தலைவர்களை ஏற்க முடியாது என்ற சாதி உணர்விலிருந்து மன மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற கவலையே தோன்றுகிறது. ஏனென் றால், கடந்த பத்தாண்டுகளில் இந்த மனமாற்றம் நடக்க வில்லையே!
இப்போது ஏற்பட்டிருப்பதற்கு இரண்டே காரணங்கள்தான் சரியெனப்படுகிறது. ஒன்று, இந்த ஒரு முறையோடு தலித்களுக் கென்று இந்த ஊர்களில் தலைவர் பதவி ரிசர்வ் செய்யப்படுவது கைவிடப்படும் என்ற ரகசிய உடன்பாட்டுக்கு அரசு நிர்வாகமும் மேல் சாதி ஊர்ப் பெரியவர்களும் வந்துவிட்டார்கள். இரண்டாவது காரணம், முன்பு எப்போதையும் விட இனி பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக, தானே செலவிடுவதற் கான நிதி ஒதுக்கீடு இந்த முறை அதிகம் கிடைக்கும் என்ற வதந்தி எல்லாக் கிராமங்களிலும் பலமாக இருக்கிறது. பத்தாண்டு தலித் தலைமையை எதிர்த்த ஊர்களெல் லாம், அந்த ஆண்டுகளுக்குரிய அரசு ஒதுக்கீட்டுத் தொகையை இழந்தன. அதாவது, பணம்தான் மனமாற்றத்தை, அதுவும் தற்காலிக மாக உண்டாக்கியிருக்கிறது! அதே பணம்தான், யார் பதவிக்கு வந்தாலும் பின்னாலிருந்து நாம் ஆட்டி வைத்துக்கொள்ளலாம் என்ற தெம்பையும் தந்திருக்கிறது.
இந்த வேதனைச் சூழலிலிருந்து விடுதலையே இல்லையா? ‘கல்வியின் மூலம்தான் இதற்கு விடுதலை’ என்று நம்புவோமானால், அதுதான் இந்த வார வேதனை 2.
இந்த வார வேதனை 2 : திருச்சி.
எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் பயிற்சிப் பிரிவுகள் உள்ளன. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு விஷயம் பற்றிப் புத்தொளி ஏற்படுத்த அவ்வப்போது ரெஃப்ரஷர் கோர்ஸ்கள், ஓரியன்டேஷன் கோர்ஸ்கள் நடத்தப் படுகின்றன.
சென்ற வாரம் ஒரு ஓரியன்டேஷன் கோர்ஸில் வகுப்பு நடத்த, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து அழைத்திருந் தார்கள். ஆண் , பெண் பாலின சமத்துவம் பற்றிய இந்த ஓரியன்டேஷனுக்கு வந்தி ருந்த ஆசிரியர்களில் கணிசமானவர்கள் (எல்லாரும் அல்ல) ஆசிரியர்களாக இருக் கவே தகுதியற்றவர்கள் என்று எனக்குத் தோன்றியது. அதை அவர்களிடமும் சொன்னேன்.
வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் காணப்படும் எல்லா ஒழுங்கீனங்களும் இவர்களிடம் இருந்தன. அதில் ஒரு சதவிகித ஒழுங்கீனத்தைக்கூட அவர்கள் தங்கள் மாணவர்களிடம் சகித்துக்கொள்ள மாட்டார்கள்! விருந்தினர் பேசும்போதே தமக்குள் உரக்க அரட்டையடிப்பது, ஒரே நேரத்தில் பலரும் பேசுவது, பேசிய கருத்தையே பத்து நிமிடத்துக்கு ஒருமுறை திரும்பத் திரும்பச் சொல்லியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிப்பது, சொல்லிக் கொள்ளாமலே வெளியேறுவது, வகுப் பையே ஒரு மணி நேரம் முன்னால் முடித்து விடும்படி கேட்பது என்று வகைவகையான ஒழுங்கீனங்கள்!
ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் கல்லூரிகளில் ஆசிரியராக இருப்பவர் களின் தரம் இப்படி இருந்தால், எப்படிப்பட்ட கல்வியை இவர் களுடைய மாணவர்கள் பெறுவார்கள்? அதிலும், ஆண்,பெண் சமத்துவத்தில் துளியும் நம்பிக்கையற்ற ஐந்தாறு பேர், மிகவும் பிற்போக்கான கருத்துக்களை ‘சமூக அக்கறை’யின் பெயரால் பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரு சில ஆசிரியை கள் இதே வகுப்பில் சகாக்களாக இருந்தபோதும், இவர்கள் சொன்ன முக்கிய கருத்து... ‘பெண் படிக்கலாம். ஆனால், வேலைக்குப் போகத் தேவை இல்லை. வீட்டையும் குழந்தை யையும் ஒழுங்காகப் பார்த்துக் கொண்டால் போதும். ஆண் பெண் சமத்துவம் பற்றி இப்படி கோர்ஸ் நடத்துவது தவறு. ஆபத்தானது. குடும்பம் அழிந்துவிடும். தேசமே நாசமாகிவிடும். இந்த ஆபத்தான விஷயங்களை எல்லாம் ஒரு பல்கலைக்கழகம் செய்துகொண்டு இருப்பது தப்பு.’ இப்படிப்பட்ட கருத்துக்களை உதிர்த்த ஆசிரியர்களை நம்பி நம் இளைஞர்களை ஒப்படைத்திருக் கிறோம். சாதி, மத, பாலின பேதங்களை நீக்கும் மனதை எப்படி இவர்களிடம் இருந்து நம் குழந்தைகள் பெறுவார்கள்?
பின்னர் விசாரித்தபோது, ஒரு தகவல் கிடைத்தது. ஓரியன்டேஷன் கோர்ஸில் பங்கேற்றதற்கான சான்றிதழ் இல்லா விட்டால் அடுத்தகட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வு எதுவும் கிடைக்காதாம். மறுபடியும் பணம்தான். மனம் அல்ல விஷயம்!
பணத்துக்காக எவ்வளவு பெரியவர் களையும் கொச்சைப்படுத்த நம் வணிகச் சமூகம் தயங்குவதில்லை என்பதுதான் இந்த வார வேதனை 3.
இந்த வார வேதனை 3:
எஸ்.எம்.எஸ். மூலம் ஓட்டளித்து கருத்தைத் தெரிவிக்கச் சொல்லும் போட்டிகள் இப்போது எல்லா ஊடகங்களிலும் அதிகரித்து வரு கின்றன. இப்படிப் போட்டிகள் நடத்து வது நேயர்களுக்கு உற்சாகத்தையும், நிறுவனங்களுக்கு லாபத்தையும் தருவது இயல்பு. ஆனால், இவை வரம்பு மீறும் போதுதான் வேதனையாக இருக்கிறது.
சி.என்.என். ஐ.பி.என். செய்தித் தொலைக்காட்சி, சிறந்த தமிழர் யார் என்ற எஸ்.எம்.எஸ். போட்டியை நடத்தி யது. இப்படிப்பட்ட கருத்துக் கணிப்பு களில், இறந்தவர்களையும் இருப்பவர் களையும் ஒரே பட்டியலில் போடுவது என்பதே அடிப்படையில் தவறானது.
அப்படிப்பட்ட ஒரு பட்டியலில் முதலிடம், அப்துல் கலாமுக்கு. இரண் டாம் இடத்தில் ரஜினிகாந்த். மூன்றாவது இடம் பெரியார்!
இப்படிப்பட்ட போட்டிகளை தயவு செய்து நடத்த வேண்டாமே!
இந்த வாரப் பூச்செண்டு!
கதர் துணிகளைப் பணக்காரர்கள் வாங்கி உபயோகிப்பதை ஊக்குவிப்பதற்காக நடந்த ஃபேஷன் ஷோவில், தானும் கதர் டிஸைனர் புடவையை அணிந்து, மாடலாக நடை நடந்து காட்டிய ராஜஸ்தான் முதல மைச்சர் வசுந்தராவுக்கு இ.வா. பூச்செண்டு. முதல மைச்சர்கள் என்றால் வெறுமே ரிப்பன் வெட்டிப் பேசித் தள்ளும் உம்மணா மூஞ்சிகளாக இருக்கத் தேவையில்லை என்றுகாட்டிய மிகச் சிலமுதல்வர்கள் வரிசையில் வசுந்தராவுக்கும் இடம் உண்டு!
இந்த வாரக் குட்டு!
ஒரு மாணவியின் மர்மமான மரணத்துக்கு நீதி கோருவதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்க உதவும் வகுப்பறைகளையும் கட்டடத்தையும் சின்னாபின்னமாக்கி நொறுக்கித் தள்ளிய ஓமலூர் கும்பலுக்கு இ.வா.குட்டு. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி பரிகார மல்ல!
ஆனந்த விகடன் 29 .11 .2006
|