 |
பாஸ்கர் சக்தி
சிலிர்ப்பு நரம்பைத் தேடி
கிராமத்திலிருந்து புதிதாய் சென்னை வந்த சமயம். அனேகமாக அது 91ம் வருடம். சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். சென்னை பஸ் ஸ்டாப்புகளில் மனிதர்கள் நின்று கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பத்து செகண்டுக்கு ஒரு தரம் கடிகாரம் பார்ப்பார்கள். பதினோராவது செகண்ட் பஸ் வரும் திசை பார்ப்பார்கள். வருகின்ற பஸ் இவர்களுக்கானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில் உடனே கையை உதறுவார்கள். மிகையான பாவனை வாய்க்கப் பெறாதவர்கள் கண்களாலேயே அதனை நிகழ்த்தி தமக்குள் ‘உச்'சுக் கொட்டுவார்கள். ‘டென்ஷன்' என்ற வார்த்தையை மதிப்பிழக்கும் அளவுக்குச் சொல்லிச் சொல்லி, அதனை சீரழியப் பண்ணியவர்கள் மத்தியில் நான் வெறுமனே நின்று கொண்டு இருந்தேன். ஏதாவதொரு கூட்டம் குறைந்த பஸ்ஸில் ஏறி, சுற்றியலைந்து சென்னையை பழக்கப்படுத்திக் கொண்டிருந்த சமயம் அது. அதற்கு ஏதுவான ‘பஸ் பாஸ்' ஒன்று என்னிடமிருந்தது. அத்துடன் சாவதானமான மனநிலை அதிகமாய் வாய்த்திருந்தது.
ஆசுவாசடையவனின் அலட்சியத்தோடும், எரிச்சலுடனும் ‘டென்ஷன் பார்ட்டி'களை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த வழியே வந்த ஒரு பெரிய காரை அனைவரும் பிரமிப்புடனும், ஆர்வத்துடனும் அதோ, அதோ என்று கவனித்தனர். ரோமாஞ்சனம், மின்சாரம் எல்லாம் பஸ் ஸ்டாப்பில் வெளிப்பட, அந்தக் காரை நோக்கி கரங்கள் குவிய, நான் நூறு சதவீத பட்டிக்காட்டுச் சிறுவனாய் அந்தக் காரில் வந்தவரைப் பார்த்தேன். அவர் சாய்பாபா. கேரட் வண்ண உடை பளபளத்து மினுங்க, ‘பொம்'மென்ற தலை முடியுடன் முகத்தில் புன்னகை அமைதி தவழ அவர் கையசைத்தார். அவர் வந்த கார் மிக மெதுவாக எங்களுக்கருகே கடந்து சென்றது. அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொள்ள, கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தபடியே புன்னகையுடன் அவர் எங்கள் பஸ் நிறுத்தத்தைக் கடந்து சென்றார். கிட்டத்தட்ட அந்த பதினைந்து வினாடியும் பஸ் நிறுத்த மனிதர்கள் பஸ்ஸை மறந்து, மணி பார்க்காமல் எங்கோ சென்று மீண்டு வந்தது உண்மையிலேயே அவர் நிகழ்த்திய அற்புதம் தான் !
அவர் சென்றபின் பஸ் வர ... கன்னத்தில் போட்டவர்களே சகஜ நிலைக்குத் திரும்பி பஸ்ஸைத் துரத்தினார்கள். நான் டிப்போவிலிருந்து காலி பஸ் வரும் வரை காத்திருந்து பாரிமுனை சென்ற நினைவு. ஆனால் சாய்பாபாவை அடுத்த சில நொடிகளிலேயே மறந்து விட்டேன் ...
சில மாதங்கள் கழிந்திருக்கலாம். அடுத்து ஊருக்குச் சென்ற சமயம், ஒரு சாய்பாபா பக்தரை பார்க்க நேர்ந்தது. ஏதோ பேச்சுகளினிடையே அவர் பாபா பற்றிக் குறிப்பிட நான் பஸ் ஸ்டாப்பில் அவர் கடந்து சென்றதையும், கை உயர்த்தி ஆசிர்வதித்ததையும் சொன்னேன். அந்த நபர் மிரண்டு போனார். “நிஜமாவா! நிஜமாவா!'' என்று திருப்பித் திருப்பிக் கேட்டார். “ஆமாங்க அந்தப் பக்கமா போனாரு ... கொஞ்சப் பேர் கும்பிட்டாங்க. ஆசிர்வாதம் பண்ணாரு ...'' என்ற எனது பிரமிப்பற்ற, சாதாரணப் பேச்சு அவருக்கு உவப்பாயில்லை ...
“எவ்வளவு பெரிய பாக்கியம்! அவரோட தரிசனத்துக்காக நானெல்லாம் எத்தனை நாள் காத்துக் கிடந்திருக்கேன்... தெரியுமா? உனக்கு அந்த ‘வைப்ரேஷன்' இல்லை. அதான் இப்படிப் பேசற!'' என்றார். நான் ‘வைப்ரேஷன்' என்பதை ‘சிலிர்ப்பு' என்பதாகப் புரிந்து கொண்டேன். இந்த சிலிர்ப்பு சில நல்ல புத்தகங்களிலும், சினிமாக்களிலும் எனக்குக் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம் வருகிற மாதிரி நான் ஏதோ பதில் சொன்னேன். அந்த நண்பர் முகத்திலொரு தீவிரம் வந்தது. எனது முட்டாள்தனத்தை விலக்கி சற்றே வெளிச்சம் காட்டுகிற உத்தேசத்துடன் அவர் பேசத் தொடங்கினார். பாபாவின் அற்புதங்கள் பற்றி நிறையச் சொன்னார். அவர் தெய்வத்தின் அம்சம். அவருக்கு முதுமை கிடையாது என்றெல்லாம் சொல்ல, நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் கூறுவதைப் பற்றி பெரிய கருத்துகள் ஏதும் அப்போது எனக்கில்லை. தன் மனதில் இருந்தவற்றைக் கொட்டித் தீர்த்து விட்டு அவர் போய் விட்டார். எனது ஊனக் கண்களுக்கு தரிசனம் எட்டாக்கனி எனும் முடிவுடன்.
ஆனால் அதன் பின்பு மற்றொரு தரிசனம் எனக்கு நிகழ்ந்தது திருவண்ணாமலை விசிறிச் சாமியாரைப் பார்க்கிற அனுபவம் ஏற்பட்டது. பாலகுமாரன், இளையராஜா ஆகியோரால் அவர் மிகவும் குறிப்பிடப்பட்டு பிரபலமடைந்திருந்தார். இசை, இலக்கிய நட்சத்திரங்களால் சுட்டிக் காட்டப்பட்ட ஓர் இறைத் தூதராய் அவரை உணர்ந்திருந்தேன்.
திருவண்ணாமலைக்கு நண்பர் எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் வீட்டுக்குப் போய் விட்டு, கோவில் பக்கமாக நானும், நண்பன் ரமேஷ் வைத்யாவும் சுற்றிக் கொண்டு இருந்தோம். அப்போது கோவிலருகே உள்ள ஒரு வீட்டில்தான் ‘சாமி' இருந்தார். எனக்கும், ரமேஷுக்கும் அவரைப் பார்க்கும் விருப்பம் ஏற்பட்டு உள்ளே போனோம். தடைகள் ஏதும் இல்லை. உள்ளே சென்று அமர்ந்தோம். அவர் அமைதியாக அமர்ந்திருக்க, எதிரில் சில சீடர்கள். சாமி அமைதியாக இருந்தார். மற்றவர்களும் அமைதியாக இருந்தனர். சாமி திடீரென்று ஏதாவது பேசுவதும், பிறகு அமைதியடைவதுமாக இருந்தார். மிகவும் அந்நியோன்யமான ஒரு உறவினரைப் பார்க்கச் சென்று அமர்ந்திருப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. சமயங்களில் கோயில் கர்ப்பக்கிரகங்கள் கூட ஒருவித பீதி ஊட்டுவதை உணர்ந்ததுண்டு. ஆனால் இவரைப் பார்க்கையில் அன்னியமான உணர்வின்றி எனது தாத்தாவைப் பார்ப்பது போலத் தான் இருந்தது.
இவர் என்னையும், ரமேஷ் வைத்யாவையும் சிரிக்கும் கண்களுடன் பார்த்தார். லேசான சிரிப்பு தாடிக்குள் தெரிந்தது... “யார் நீங்கள் ... உங்கள் பெயரென்ன?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார். நாங்கள் சொன்னோம். அருகில் அழைத்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். “என் தந்தை உங்களை ஆசிர்வதிக்கட்டும்'' என்றார். நாங்கள் வணங்கி அதனை ஏற்றுக்கொள்ள, அருகிலிருந்த வாழைப்பழங்கள் இரண்டை எடுத்து இருவருக்கும் கொடுத்தார். வாங்கிக் கொண்டு சற்று நேரம் புரியாமல் நின்றோம். பிறகு வெளியில் வந்து விட்டோம். என் மனதில் ஒரு குதூகலம் இருந்தது ஞாபகத்திலிருக்கிறது. பிற்பாடு சில நாட்கள் கழித்து யோசித்துப் பார்த்தேன். அந்த சமயத்திலும் கூட எனக்கு மகிழ்ச்சி இருந்ததே தவிர சிலிர்ப்பு (வைப்ரேஷன்) ஏற்படவில்லை. நரம்புகளில் ஏதோ ஒன்று குறைகிறதென்று அபிப்ராயப் பட்டேன். ரேடியோ முள் போல் ஒன்றைத் திருகி சரியான அலைவரிசையில் நிறுத்தி தனக்கான அனுபவத்தை தேர்ந்தெடுக்கிற தன்மை எனக்கில்லை என்று தான் தோன்றியது.
சின்னத்திரை அனுபவமொன்று அடுத்து நிகழ்ந்தது. நானும், எனது தந்தையும் அமர்ந்து ஒரு நாள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். (அப்பா வேறுவிதமான பக்தர். நேரு, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோரைத் தொழுதவர், இந்திரா, ராஜீவ் மரணத்தின் போது அழுதவர் ... ஆனால் கறுப்பு, சிவப்பு சிந்தனைகளின் பாதிப்பின்றியே அவர் ஒரு தொண்ணூற்று ஐந்து சதவீத நாத்திகராயிருந்தார். அம்மாவிடம் சண்டை தவிர்க்கவே அவர் சடங்குகளின் போது விபூதி போன்றவற்றை இட்டுக் கொள்வார். மற்றபடி மாலை, விரதம் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கை கொண்டவராயும், தனது எளிய மொழியில் அவற்றை விமர்சிக்கிறவராகவும் இருந்தார். தனது இறுதி நாட்களின் போதும் கூட அவர் சாமி கும்பிடவில்லை).
டி.வி.யில் ஒரு நிகழ்ச்சி. பின்னர் அது மிகவும் பேசப்பட்டது. சிவசங்கர் பாபாவும், யாகவா முனிவரும் நிஜமாகவே மோதிக் கொண்ட ஆன்மீக மோதல். “நீ திருடன், நீ ஊரை ஏமாத்துற'' என்று இருவரும் பரஸ்பரம் திட்டிக் கொண்டு, எதிராளியின் ஆன்மீக மோசடியை கோபமான குரலில் விமர்சித்தனர். உச்சகட்டமாக தனது தோள் துண்டை சுழற்றி பாபாஜியை யாகவா முனிவர் தாக்கினார். பெரும் நகைச்சுவையுடன் இதனை நாங்களிருவரும் பார்த்தோம். எனது தந்தை சிரித்தபடியே சில கமெண்டுகளை அடித்து விட்டு இவர்களைப் பற்றி ஒரு வாக்கியம் சொன்னார். “ஜனங்களுக்கு கஷ்டத்தை மறக்கிறதுக்கு என்னமாவது வேணும். அதை வச்சு இவங்கள்லாம் ஆடுறாங்க... உள்ளது பாதி. இருக்கறதா நினைச்சுக்கறது பாதி. நம்ம ‘கந்தல் ராணி' மாதிரி தான்'' என்றார்.
கந்தல் ராணியை நானறிவேன். தேனி வீதிகளில் கந்தல் ராணி வெகு பிரபலம். உடல் பூராவும் அழுக்குத் துணி சுற்றியிருப்பாள். நான் அவள் பேசிப் பார்த்தது இல்லை. கழுத்துக்குக் கீழே உடலின் வடிவம் முற்றிலும் மறைந்து போகுமளவிற்கு அழுக்குத் துணிகள் அப்பியிருக்கும். நடந்து வருகையில் ஒரு ஆளுயர சோளக்கொல்லை பொம்மை நகர்ந்து வருவது போல் தோன்றும். மஞ்சள் பூசிய முகம், வாயில் வெற்றிலை, மிகப் பெரிய குங்குமப் பொட்டு. தேனியின் வியாபாரிகள் ‘கந்தல் ராணி'யை தெய்வாம்சம் பொருந்திய பெண்மணியாகக் கருதினார்கள். கந்தல் ராணி வந்து கடை வாசலில் நின்றால் அகமகிழ்ந்து உணவும், பணம் தருவார்கள்.
கந்தல் ராணியின் பிரசித்தம் குறித்த காரணத்தையும் அப்பாவே சொன்னார். ஒரு முறை அதிகாலை நேரமொன்றில் கேரளாவுக்கு செல்லும் பஸ், பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கையில், கந்தல் ராணி வழி மறித்தாளாம். ‘போகாதே' என்பது போல் கையாட்டினாளாம். ஆனால் டிரைவர் ஆரனை அடித்து கந்தல் ராணியை ஒதுக்கிவிட்டு, பஸ் மேற்கொண்டு பயணத்தைத் தொடர, மலைப் பகுதியில் சென்ற பஸ் மூணாறு அருகே உருண்டு இருபது பேர் வரைக்கும் இறந்து போய் விட்டார்களாம்.
இந்த நிகழ்ச்சி எல்லோராலும் சொல்லப்பட்டுப் பரவி... கந்தல் ராணி கடவுளின் பிரதிநிதியாகிப் போனாளாம்.
என் அப்பா இதனைச் சொல்லி விட்டு தனது அபிப்ராயமாகச் சொன்னார். “அந்த விபத்து நடந்தது உண்மை... இந்தம்மா தற்செயலா எதித்தாப்ல வந்திருக்கும். சுவாதீனமில்லாமல் இருக்கிறது தானே! அது பாட்டுக்கு கையை ஆட்டியிருக்கும். அதை வச்சு சாமியாக்கிட்டாங்க'' என்றார்.
தெய்வாம்சமுடையவராக கருதப்பட்ட கந்தல் ராணி நூறு சதவீதம் சாமியாகவே ஆனார். எப்படித் தெரியுமா? தனது இறுதி நாட்களில் நடமாட்டமின்றி ரோட்டோரத்தில் ஓரிடத்தில் நிரந்தரமாக அமர்ந்து இருந்தார். ஒரு நாள் மரணமடைந்தார். அந்த அம்மாவின் இறுதி ஊர்வலத்தை நான் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் வெகு பிரம்மாண்டமாக அது நடந்ததாகவும், அந்த ஊர்வலத்தில் பல முக்கியஸ்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேன்.
கந்தல்ராணி கடைசியாக அமர்ந்திருந்த இடத்தில் ஒரு குட்டிக் கோவில் கட்டப்பட்டு விட்டது. உள்ளே கந்தல் ராணியின் புகைப்படம். கண் முன்னே ஒரு தெய்வம் (!) இருந்து வாழ்ந்து உருவாகி குடிகொண்டும் விட்டது.
சமீபத்தில் டி.வி.யில் சாயிபாபாவைப் பார்த்தேன். உடல் தளர்ந்து மெதுவாக நடந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். விசிறிச் சாமியார் மறைந்துவிட்டார், யாகவா முனிவரும் கூடத்தான். காலம் தனது சக்தியை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமின்றியே அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.
காலம் நிகழ்த்திய மற்றொரு முக்கிய சுவாரஸ்யம். சமீப ஆண்டுகளில் தேனியின் தெருக்களில் இன்னொரு பெண்ணை நான் பார்க்கிறேன். உடல் முழுக்கத் துணி சுற்றிக் கொண்டு, கடை கடையாக நின்று யாசகம் பெறக் காத்திருக்கிறாள். இவள் மீது இன்னும் புனைவுகள் தோன்றவில்லை. மக்கள் இந்தப் பெண்ணை ஒரு யாசகப் பெண்ணாக மட்டுமே பார்க்கிறார்கள். இந்தப் பெண்ணுக்கு ஏதாவது ‘பிரேக்' கிடைக்குமா என்று யோசித்த போது சாத்தியங்கள் குறைவு என்று தான் தோன்றுகிறது. (எனக்கு ‘வைப்ரேஷன்' கிடைப்பதற்கான சாத்தியங்கள் போன்றே)... காரணம் மக்களுக்குப் புதிதாகத் தான் ஏதாவது தேவைப் படுகிறது. என் தந்தை குறிப்பிட்டது போல் மக்கள் ‘இருக்கிறதா நினைச்சுகிறதுக்கு' ஏதாவது சுவாரஸ்யமாக வேண்டும். அது பழைய ஐடியாவாக இருக்கக் கூடாது என்பது தான் வழிபாட்டின் நிபந்தனை போலும்.
- பாஸ்கர் சக்தி [email protected]
|