Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006
அரவாணிகள் மனுஷிகள் தான்...

ப்ரியா பாபு - நேர்காணல்
சந்திப்பு: ராஜீவ் காந்தி, ஆனந்தராஜ், அரசு சட்டக்கல்லூரி, கோவை

Priya Babu அரவாணிகள் பெரும்பாலும் பிறப்பால் ஆணாகத்தான் பிறக்கின்றனர். ஆனால் உணர்வுகள் ரீதியாக அவர்கள் தங்களைப் பெண் என உணர்கின்றனர். இந்த மாற்றங்கள் வளர் இளம் பருவத்தில் மிகவும் வேகமாக உணர்வுக்குள் ஊடுருவுகின்றது. இதனால் குடும்பம் முதல் கல்வி நிலையம் வரை மிஞ்சுவது கேலியும் கிண்டலுமே. பெண் போன்ற பேச்சு, நடை, உடை, பாவனைகள் அவனை பொது வெளிச் சமூகத்திருந்து தள்ளி வைக்கின்றது.

தொடரும் தனிமைகள், கிண்டல்கள் போன்றவை மனோதத்துவ ரீதியின்படி தன்னை போன்ற உணர்வுடையோர் பக்கம் திருப்புகிறது. அதன் பிறகே தன் உணர்விற்கு மதிப்பளித்து தன் குடும்பம், உறவு, கல்வி, சொத்து இவைகளை விட்டுவிட்டு அரவாணிகள் குழுமத்தில் கரைகிறான். அரவாணிகள் குறித்து ப்ரியா பாபு நேர்காணல்

உடல் ரீதியான இந்த மாற்றத்தை (அதாவது அரவாணியாக மாறுதல்) எப்போது உணர்ந்தீர்கள்? அப்போது உங்கள் குடும்பம், சமூகம் எப்படி உங்களைப் பார்த்தது?

நான் 13, 14 வயசா இருக்கும் போது எனக்குத் தெரிஞ்சிச்சு நா மத்த பசங்கள மாதிரி இல்லன்னு எனக்குள்ள உணர்வுகள் ஒரு பெண்ணோட உணர்வுகள் மாதிரி இருக்குதுன்னு. அப்ப எனக்குப் புரியல. ஏன்னா பெரும்பாலும் பெண்கள் கூட நல்லா பிரண்ட்ஷிப் இருந்தது. ஆனா.... ஆண்களைப் பார்த்த வெக்கம் வரும், சில பேரு மேல காதலு கூட வந்திருக்குது.

அப்புறமா எனக்கு 15 வயசாகுறப்ப என்ன மாதிரி இருக்குற நிறையப் பேர பாத்தே. அப்புறமாத்தா புரிஞ்சது என்னோடது மாதிரி நிறைய பேர் இந்த மாதிரி பெண் உணர்வுகளோட இருக்குறாங்கன்னு. அதுக்கப்புறமா நாங்கள்ளாம் நல்ல ப்ரண்ட்ஸ் ஆயிட்டோம்.

இந்த நேரத்துல என்னோட குடும்பத்துக்கு என்னோட நடை, உடை பாவனைகள் ரொம்ப வித்தியாசமா இருந்தது. என்னோட மேக்கப் பத்திதான் வீட்ல பிரச்சனையே வரும். அதிலும் என்னோட சின்ன அண்ணன் ரொம்பவே என்ன திட்டுவான். ஆனாலும் என்ன மாத்திக்க முடியல.

அதுபோல என்னோட ஸ்கூல்ல 2 வாத்தியாருங்க என்ன அவங்களோட பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினாங்க. அத்தோடு என்னோட அண்ணனோட ப்ரண்ட்சும் என்ன பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கிட்டாங்களே தவிர என்னோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கல. என்னப் புரிஞ்சுக்கவும் இல்லை.

உடலில் மாற்றம் நிகழும் போது ஏன் நீங்கள் பெண்களைப் போல் உடையணிய விரும்புகிறீர்கள்?

இதென்ன கேள்வி ஆணாகப் பிறந்தாலும் உணர்வுகள் பெண் தானே. அந்த உணர்வுகள் மனசுல உள் ஆழத்துக்குள்ள உள் வாங்கப்பட்டு ஒவ்வொரு முறையும் என் பாலியத்தை கேள்வி கேட்கும். இந்த உணர்வுகள் வளர் இளம் பருவத்தில் வெடிக்கும் போதுதான் இந்த உணர்வின் மாறுபாட்டிற்காக எதையும் இழக்கத் துணிகின்றோம். அதில் ஒண்ணுதான் ஆண் உடை. பெண்ணாக வாழனுன்னுறதக்காக இவ்வனைத்தையும் இழந்த நாங்க பெண் உடையணிறது தானே நியாயம்.

Transgender உங்களின் உடல் உறுப்புக்கள் பெண்களைப் போல் எப்படி மாற்றமடைகின்றன? (அதாவது மார்பகம், பிறப்புறுப்பு, உடல்வாகு)

பெண் உடையணிஞ்சப்பும் ஒவ்வொரு முறையும் எங்கள சங்கடப்படுத்துறது எங்களோட ஆண் உறுப்புத்தான். மனுஷ தன்னோட உடலை முழுசாப் பாக்குறது குளிக்கிற போதுதான். அப்போ அந்த ஆண் உறுப்பு என்னோட பால் உணர்வுக்கு எதிராக இருக்குறதாலே அது என்னை ரொம்பவே சங்கடப்படுத்திச்சி. அதனால ஆண் உறுப்பு நீக்கும் அறுவை சிகிச்சையை செய்துகிட்டேன். மார்பகம் மாற்றத்திற்கு ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டோம்.

அ) அரவாணிகள் அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் எங்கெல்லாம் செய்யப்படுகின்றது? எவ்வாறு செய்யப்படுகின்றது? எவ்வளவு செலவாகிறது?

அரவாணிகள் அறுவை சிகிச்சை தற்போது முறையற்ற மருத்துவர்களால் செய்யப்படுவது. திண்டுக்கல் மாவட்டத்தில் இது பிரசித்தம். இது தவிர கடப்பா, பழமனேரிங்கற ஊர்லயும் செய்யுறாங்க. இது முழுக்க முழுக்க ஆண் உறுப்பை நீக்கும் சிகிச்சை மட்டுமே. இந்த அறுவை சிகிச்சை செய்யுறதுக்கு முன்னாடி முதுகு தண்டு வடத்துல மயக்க ஊசி போடுறாங்க. இந்த அறுவை சிகிச்சைக்கு கிட்டதட்ட 1 மணி முதல் 1.30 மணி வரை டையம் ஆகும். இதுக்கு 8,000 முதல் 10,000 வரை செலவாகுது. ஆனா இங்கு முறையான மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ தரப்பட்றதில்ல. இதனால 6 மாசத்துக்குள்ள சிறுநீரகப் பகுதியில பிரச்சன ஏற்படுது.

இதுல பழைய முறை ரொம்பவும் கொடுமையானது. அதாவது அறுவ சிகிச்ச செய்ய வேண்டியவங்கள ஊருக்கு ஒதுக்குப்புறமா உள்ள ஏதாவது அரவாணி குடிசயில கொண்டு போவாங்க. அங்க அரவாணிங்க தெய்வமான பேத்ராகி மாதா படத்துக்கு பூஜை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வாங்க. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அரவாணிய உடம்புல ஒட்டுத்துணி இல்லாம நிக்க வைச்சிட்டு அவங்க ஆண் உறுப்பு விதை கொட்டைகள ஒரு கயிறால இறுக்க கட்டிடுவாங்க. பின்னே பேத்ராகீ மாதாவுக்கு பூஜை ஆரம்பமாகும். பூஜை உச்ச கட்டம் போகும் போது சவரம் செய்ய சலூன்ல பயன்படுத்துற கத்தியில அவங்க ஆண் உறுப்ப வெட்டிடுவாங்க. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த வித மருந்து, மாத்திரை எதுவும் கிடையாது. இது முழுக்க முழுக்க அங்க பெண்ணாக மாறனும்ங்கிற உறுதி, தைரியத்தால தான் நடக்குது.

ஆ) அதுக்கப்புறம் என்ன செய்வீங்க?

அதுக்கப்பறம் 40 நாள் அவங்கள தனி ரூம்ல வச்சிருப்பாங்க. அவங்களுக்கு கருப்பு டீ அதிகமா குடுப்பாங்க. அப்ப வெளி ஆண்கள் முகத்த பாக்ககூடாது. கண்ணாடி பாக்ககூடாது. இப்படி பல கண்டிஷன்கள் இருக்குது. 40வது நாள் எல்லா அரவாணிகளையும் கூப்பிட்டு பெரிய விஷேசம் செய்வாங்க. இது ஒரு பொண்ணு வயசுக்கு வர்ற சடங்கு மாதிரி இருக்கும்.

பொதுவான ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள பாலியல் உணர்வுகளை விட அரவாணிகளுக்கு அதிகமாக இருப்பது போல் சமுதாயத்தில் நிலவும் கருத்து சரியா?

நிச்சயமா தவறு... இவர்கள் சிறுபான்மை சமூகமாக இருப்பதால் இது போன்ற கருத்துகள் நிலவுவது சகஜம்

அரவாணிகள் திருவிழா (கூத்தாண்டவர் கோவில்) நடைபெறுவது எதற்காக?

மகா பாரத கதையில் குருஷேத்திரப் போர்களத்தில் பாண்டவர்கள் பக்கம் வெற்றி கிடைக்க வேண்டுமெனில் சாமுத்திரிகா இலட்சணம் (32 இலட்சணங்கள்) பொருந்திய ஒருவனை காளி தேவிக்குப் பலியிட வேண்டும் என்பது யுத்த கடமை.

பாண்டவர் பக்கம் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனன், அவன் மகன் அரவான் ஆகிய மூவரும் சாமுத்திரிகா இலட்சணம் பொருந்தியவர்களாக இருந்தனர்.

அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் போருக்கு அவசியம் தேவையாகையால் அரவான் பலியிட முடிவுச் செய்தனர். அரவானும் பலிக்கு சம்மதிச்சா. ஆனா... ஒரே ஒரு கண்டிஷன் போட்டா. எனக்கு முதல்ல திருமணம், அப்புறந்தான் பலியாவேன்னா மறுநா சாகப் போறவன கலியாண செய்துக்க எந்த பொண்ணு ஒத்துக்காததால கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவாண கலியாணம் செய்துக்கிறாரு மறுநா அரவாண் பலியிடப்படுறா.

கிருஷ்ணரோட அவதாரமா தன்ன நெனக்கிற அரவாணி சமூகம் வருஷா வருஷம் சித்திரா பௌர்ணமி அன்னிக்கு கூத்தாண்டவர் கோயிலுக்கு போயி தாலிய கட்டிகிட்டு மறுநாள் தாலிய அறுத்துகிட்டு விதவை கோலம் ஆக்கிடுறாங்க. இந்த கோயில் விழுப்புரம் பக்கத்துல கூவாகம் கிராமத்தில் இருக்குது. இது தவிர பாண்டிச்சேரியில பிள்ளையார் குப்பம், மடுகரை, திண்டிவனத்துல தைலாபுரம், கிளயனூர், வில்யனூர், சிதம்பரத்துல கொத்தடை, அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் வேதியியல் பிரிவு வகுப்பின் பின்புறம், திருநெல்வேயில் தட்டார்மடம், நாகர்கோவில் குறுந்தங்கோடு இப்படி கிட்டதட்ட 49 இடங்கள்ல இருக்குது.

உங்கள் சமூகத்தில் நிலவும் குடும்ப உறவு முறை குறித்து கூறவும்?

Transgender ஒரு பையன் தன் உணர்வுகளால் உந்தப்பட்டு சமூகத்தோடு இணையும் போது அவன் அவனை விட மூத்த அரவாணி ஒருத்தருக்கு கட்டாயம் மகளாக ஆகியே தீரவேண்டும். அப்ப அவங்க ரெண்டுப் பேருக்கு இடையில தாய் மகள்ன்ற உறவு இருக்கும் அந்த தாய் இவளப் போல பல மகள்கள தத்து எடுப்பார். அவர்களில் மூத்தவங்கள அக்காண்ணு கூப்பிடுவாங்க. இளயவங்கள தங்கச்சின்னு கூப்பிடுவாங்க.

இந்த அக்கா, தங்கைள் தத்து எடுக்கும் மகள்கள் பெரியம்மா, சித்தி என அழைக்கும். இவளின் அம்மா நானி என அழைக்கப்படுகின்றார்.

அரவாணிகளுக்கென்று தனி மொழி உள்ளதா? அதன் வடிவம் எப்படி உள்ளது?

அரவாணி சமூகத்திற்கென்றே தனி மொழி உள்ளது. இது பல நூற்றாண்டுகளாக ஒரு அரவாணியிலிருந்து இன்னோர் அரவாணிக்கு அறியப்படுகின்றது. இந்த மொழி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே தன்மையுடனும் பேசப்படுகின்றது.

இது இன்னும் பேச்சு வழக்கிலேயே உள்ளது. ஆனால் எழுத்து வடிவம் பெறவில்லை. இது குறித்து எந்த மொழியியல் ஆய்வாளரும் கவலைப்படவும் இல்லை.

சில உதாரணம்?

பந்தி - ஆண்
நாரன் - பெண்
டெப்பர் - பணம்
டாக்னா - சாப்பாடு

1. இஞ்சி தர் மே டாக்னா சீசா - இங்க சாப்பாடு நல்லாயிருக்கும்.

2. கோடி அலக்ரா பத்தோ - போலீஸ் வருது ஓடு.

வெளிநாடுகளில் அரவாணிகளின் நிலை என்ன? அங்கு அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள்?

பெரும்பாலான வெளிநாடுகளில் அரவாணி மக்கள் மிக உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு என்று பாலின மாற்று அறுவை சிகிச்சை சட்ட பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால பெண்ணாக மாறுவது என்பது எளிதான விஷயம். இந்த நடைமுறை டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ளது. நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்க புரியாகவே உள்ளது. இங்கு சராசரி மனித இனம் போன்றே எல்லா விஷயங்களிலும் அரவாணிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் அறுவை சிகிச்சை முடிந்தப் பின்பு பெண் என்ற அடையாளத்துடன் மருத்துவ சான்றிதழ் தருகிறார்கள். அதனால அவங்க முன்னே பாத்துக்கிட்டிருந்த அதேவேலய மீண்டும் பார்க்கலாம்.

வெளி நாடுகளில் உள்ளதுபோல் ஆண், பெண் மற்றவர்கள் என எந்தப் பாலினத்தினை தேர்வு செய்ய விரும்புகின்றீர்கள்? ஏன்?

ம்... எந்த வெளிநாட்டுலேயும் Others ற கேட்டகிரி இல்ல. நாங்க விரும்புறது எங்கள பெண் (மாறியபானம்) Female (T.G) ன்னு அங்கீகரிக்கனும்னு கேக்குறோம்.

ஏன்னா ஒரு பொண்ணாகனுந்ததுக்காத்தானே இவ்வளவு பலி, வேதன, கிண்டல், எல்லாத்தையும் சகிச்சிக்கிறோம். ஒரு பெண்ணாகனுங்றதுக்காகத்தானே குடும்பம், உறவு, கல்வி, வேலை, சொத்து சுகமான வாழ்க்கை எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறோம். அதனாலத்தா பெண்ணுக்கு கோக்குறோம். மாறிய பாலின்ற அடையாளம் நான் இயற்கையில ஆண் ஆனா நா என் பாலினத்த மாத்திகிட்டேன்னு வெளிக்காட்டுற ஒரு அடையாளம்.

அதுமட்டுமல்லாம எதிர்காலத்துல எங்களோட ஒதுக்கீடுகள கேக்கும்போது SC/ST போல இந்த மாறிய பாலின்ற அடையாளம் எங்களோட கோரிக்கை வலு சேக்குறதா அமையும். அதனாலத்தான் Female T.Gங்குற அடையாளம் கேக்குறோம்.

எய்ட்ஸ், பால்வினை நோய் அரவாணிகளால் தான் அதிகமாக வருகிறது எனும் கருத்து உண்மையா?

நிச்சியமா இந்த கூற்ற நா மறுக்கிறேன். அரவாணிகங்க வேறு தொழில் இல்லாம பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களா இருப்பது என்னவோ உண்மைதான். ஆனா இது முன்ன சொன்ன மாதிரி சிறுபான்மை இனமா இருக்குறதாலேயும், அதிகமான எச்.ஐ.வி விழிப்புணர்வு பணிகள் இவர்கள் மூலமாக செய்யப்படுவதாலேயுமே இப்படி ஒரு கருத்து உருவாயிருக்கு.

உங்களுக்கு ஏற்படும் சட்ட பூர்வமான சிக்கல்கள் என்னென்ன?

1. சட்ட அங்கீகாரம்:

அரவாணிங்களோட பாலின அடையாளம் (Gender Identity) என்னங்குறதப்பத்தி இன்னும் எந்த இந்திய, தமிழக அரசும் வாய்திறக்கல.

2004 ஆண்டு ஓட்டுரிமைக்காக நானும், வக்கீல் ரஜினியும் சேர்ந்து ரிட் மனு போட்டப்ப. ஆண் (அ) பெண் எந்த காலம் போடனும்றதா நீங்களே முடிவுப் பண்ணிக்கங்கன்னு சென்னை உயரநீதிமன்றம் தன் பொறுப்புல இருந்து கழன்டிச்சி. ஆனா இதுவரைக்கும் எந்த சட்டமும் தெளிவா இது பத்தி சொல்லல. இதுவே பெரிய பிரச்சனை. இதனாலத்தான் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் குழந்தை தத்து, சொத்துரிமை இப்படி பல உரிமைகள் இன்னும் கிடைக்காமலே இருக்குது. அதனால எங்களோட பாலின அடையாளமே பெரிய பிரச்சனை.

2. மருத்துவ பிரச்சனை

அரவாணிகளோட பாலின மாற்று அறுவை சிகிச்சை இன்னும் இந்தியாவுல நடைமுறைப்படுத்தப்படல. இங்கு “Castration” அப்படிங்குற ஆண் உறுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை மட்டுமே இருக்குது. ஆனா பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமா ஆக்கணும், அதுபோல அறுவை சிகிச்சை முடிஞ்ச அப்புறம் மேலை நாடுகள்ல உள்ளதுபோல இனிமேல் பெண் என்ற மருத்துவ சான்றிதழ் தேவை.

3. சட்டம் இ.பி.கோ.377

இ.பி.கோ. 377ங்கிற சட்டப்பிவு அரவாணிகள், மற்றும் ஓரினைச் சேர்க்கையாளர்களின் உடலுறவு முறையை இயற்கைக்கு எதிரானதுன்னு சொல்றது. இது இவர்களுக்கு மட்டுமல்ல சாதாரண தம்பதியரே மாற்று புணர்ச்சிப் பண்ணும் போது அதையும் தப்புன்னு சொல்றது. எங்களோட படுக்கயறை சுதந்திரத்தில தலையிடுற இந்த சட்டம் எடுக்கப்படனும் அல்லது மாற்றப்படனும்றது எங்களோட கோரிக்கை.

1860ல் லார்ட் மெக்காலே வால போடப்பட்ட சட்டம் இந்த சட்டம் போடப்பட்ட இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே இல்லை. ஆனா நாம மட்டும் அத புடிச்சிகிட்டு இருக்கோம்.

இத்தகைய சிக்கல்களை களைய நீதிமன்றத்தை அணுகியும் தீர்வு என்ன?

1. ஆம். 2004ம் ஆண்டு நானும், மதுரை தலித் தோழமை மையம் நிறுவனர் ரஜினி அவர்களின் உதவியுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரவாணிகள் ஓட்டுரிமை குறித்து வழக்குத் தொடர்ந்தோம். ஆனால் நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கவில்லை.

2. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உட்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் அரசு இலவச தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் மிகுந்த போராட்டத்திற்குப் பின் வீடுகள் பெற்றுள்ளோம்.

உங்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போது அரவாணிகள் மீதானப் பார்வை சற்று மாறி உள்ளது என்று தான் கூறவேண்டும். ஆனா முழுமையான விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்லணும்.

1. அரவாணிகளுக்கு அரசு சட்ட ரீதியான அங்கீகாரம் தரணும்.

2. உயர் கல்வி நிலையங்களில் அரவாணிகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்.

3. அரவாணிகள் மீதான தவறானப் பார்வைகள் நீங்க அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.

அரவாணிகள் பற்றி சமூகத்தில் தற்போது நிலவிவரும் கருத்துக்களை மாற்ற நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

1. அரவாணிகள், ஓரினைச் சேர்க்கையாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து பாலியல் சிறுபான்மையினர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

2. கடந்த 9-08-06 அன்று பாலியல் சிறுபான்மையினர் அமைப்புகளை உள்ளடக்கிய பேரணி ஒன்றை சென்னையில் நடத்தியவுடன் மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை அவர்களை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளோம்.

3. எங்களின் சுடர் பவுண்டேஷன் அமைப்பின் மூலமாக கண்ணாடிக் கலைக்குழு என்ற கலைக்குழுவினை நிறுவி அதன்மூலம் 2 நாடகங்கள் (மனசின் அழைப்பு, உறையாத நினைவுகள்) வடிவமைத்து மாநிலம் முழுவதும் நிகழ்த்தி அரவாணிகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறோம்.

4. ஆஷா பாரதி, நான் (பிரியா பாபு) போன்றோர் பல்வேறு சிறு பத்திரிகைகளில் அரவாணிகள் குறித்து எழுதி வருகிறோம். கூடிய அளவில் எல்லாத் துறைகளிலும் கால்பதித்துப் பணியாற்றி வருகிறோம்.

உங்களின் எதிர்கால திட்டமென்ன?

1. அரவாணிகளுக்கான சட்ட ரீதியான பாலின அடையாளம் பெறுவது.

2. மேலவையில் நியமன உறுப்பினர் பதவி பெறுவது.

3. பாலியல் சிறுபான்மையினருக்கான நல வாரியம் அமைக்க அரசை நிர்பந்திப்பது.

4. அரவாணிகள் குறித்த குறும்படம், திரைப்படம், தொடர்கள் இயக்குவது.

5. அரவாணிகள் இனவரைவியல் நூல் எழுதுவது.

6. அரவாணிகள் குறித்த மாநில அளவிலான மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்வதும் அதனை அரசிடம் சமர்ப்பிப்பதும்.

7. அரவாணிகளின் ஆவண மையம் அமைப்பது.

8. வெகு ஜனம் மத்தியில் அரவாணிகள் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் உண்டாக்குவது.

9. அரவாணிகளின் பாலின மாற்று அறுவை சிகிச்சையினை சட்டபூர்வமாக்கப் பாடுபடுவது.

10. தேசிய அளவிலான பாலியல் சிறுபான்மையினர் கூட்டமைப்பை உருவாக்குவது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com