Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006
மலைகள் சார்ந்த கானகங்கள்

ச. முகமது அலி

அண்மையில் வெளியான உலக வன வரைபடத்தில் காட்டுப் பகுதிகளைக் குறிக்கும் உலக அறிவியல் ஆய்வகத்தின் பட்டியல் ஒன்றைப் பார்த்தேன். இதற்கு முன்பு வெளியான எந்தப் பட்டியலும் தென் அமெரிக்க அமேசான் காடுகள், ஆப்பிரிக்காவின் கென்யா, உகாண்டா காடுகள், நமீபியக் காட்டுப் பகுதிகள், தென்கிழக்காசியாவின் இந்தோனேசிய, மலேசிய வனப்பகுதிகளே முதன்மையானதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் புதிய இப்பட்டியல் குறிப்பாக சுட்டிக் காட்டிய மற்றொரு பகுதி நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந்த கானகங்களே.

நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடிப்படையான இயற்கை வளத்தின் முக்கிய அங்கமான காடுகளின் - காட்டுயிர்களின் அரிய, அபூர்வ, அத்தியாவசியத் தன்மைகளை நாம் துளியும் அறியாத நிலையில் இந்த வரைபடத்தில் குவிமையம்ப் படுத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கருங்குரங்கு, காட்டுத் தவளைகள், பறக்கும் பாம்பு, மலைமுகட்டில் வாழும் வரையாடு, பல நன்னீர் மீன்கள், வண்டினங்கள், ஆவுளி, ஆற்று ஓங்கில், மற்றும் பற்பல மூகைத் தாவரங்கள் என ஒரு பெரிய பட்டியலே இதில் அடங்கியுள்ளது. பெருமைப்படத்தக்க இந்த வெளியீட்டின் வழியே நாம் சிறுமைப்பட ஒரு முக்கிய விஷயம் உண்டு: ஆம், பல்லுயிரின் பட்டியல், முக்கியத்துவம், இருப்பு, நிலை போன்ற யாவும் மேற்குலக நாடுகளின் கண்டுபிடிப்பாகவும், ஆங்கில வழிப் புரிதல்களாகவுமே நமக்குத் தெரியவருகின்றன. சுயமாக நமக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

கி.பி. 1600க்கு பிற்பாடான தமிழகத்தின் கலை, இலக்கிய, இயற்கை வரலாறு மீண்டும் எழவே இயலாதவாறு சிதைக்கப்பட்டதன் காரணமே இயற்கை என்ற தலைப்பினுள் பிரவேசிக்கும் நமது எழுத்தாளர்கள் மேதாவிகள் பலருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களில் எதற்கும் இனம் தெரியாது. பெயர் புரியாது, வகை அறியாது வெறுமனே குருவி, குயில், கழுகு, அன்றில் அன்னம், பாம்பு, சங்கு, மரம், மலர், மண்ணாங்கட்டி என்ற பொதுச் சொற்களை மட்டுமே போட்டு கதை, கவிதை, கட்டுரைகளை எழுதி காகிதங்களை வீணாக்கி காசைக் குவித்து வருகிறார்கள். குயில் குடும்பத்தில் 127 வகைகள் உள்ளன. அன்றில் என்பது ஒரு வகை அரிவாள் மூக்கன் - கொக்கு அன்னம் பறவை ஏறத்தாழ இந்தியாவில் இல்லை, 250 இந்தியப் பாம்பு வகைகளில் 3 வகைக்கு மட்டுமே நஞ்சு உண்டு.... போன்ற அடிப்படை உண்மைகள் கூட தெரியாதவர்கள் இவர்கள். யானையைத் தொட்டுப் பார்த்த குருடர்கள் கதைதான்.

இதோ அமெரிக்காவிலுள்ள உலக அறிவியல் ஆய்வகத்தின் ஆசியப் பிரிவு வெளியிட்ட இந்திய வன வளங்கள் குறித்ததோர் புள்ளி விவரத்தைப் பாருங்கள்

1. நுண்ணுயிர்கள் (Bacteria) - 850இனம்
2. நீர்ப்பாசம் (Algae) - 6500 இனம்
3. பூஞ்சை (Fungi) - 14500 இனம்
4. கல்பாசம் (Lichens) - 2000 இனம்
5. பாசிகள் ((Bryophytes) - 2850 இனம்
6. பெரணிகள் (Heridophytes) - 1100 இனம்
7. ஒரு வித்திலைத் தாவரம் (Gymnosperm) - 64 இனம்
8. பூக்கும் தாவரம் (Flowering plants) - 17500 இனம்
9. ஒரு செல்லுயிரி (Protista) - 2577 இனம்
10. கணுக்காலிகள் (Arthopoda) - 60383 இனம்
11. சங்கு சிப்பிகள் (Mollusca) -5050 இனம்
12. ஒரு செல் முதுகுத் தண்டுள்ளவை (Proto chordata) - 116 இனம்
13. மீன்கள் (Fishes) - 2546 இனம்
14. தவளைகள் (Amphibia) - 206 இனம்
15. ஊர்வன (Repritles) - 485 இனம்
16. பறவைகள் (Birds) - 1330 இனம்
17. பாலூட்டிகள் (Mammals) - 372 இனம்
18. மற்ற முதுகெலும்பிகள் (other Invertibrates) - 8329 இனம்

என இதுவரை 1,26,761 உயிரின வகைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 4,00000 இனவகைகள் கண்டறியப்பட வேண்டிய கண்டம் (மட்டும்) வெள்ளைக்காரர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு இருந்தும் கூட இயற்கை என்ற தலைப்பை நமது மேட்டுக்குடி சமூகம் செயல்படுத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தால் தெரிவதுதான் என்ன? மீண்டும் நம்மை வரலாற்றின் பின்னோக்கி இழுத்துப் போய் வேதகாலத்தின் நாத ஒலியில் நிறுத்திடும் சதி புரிய வருகிறது.

எனவே நமது முன்னேற்றம், முற்போக்கு, பாணி, வாழ்வியல் எல்லாம் அகத்தில் சமஸ்கிருதமும், புறத்தில் ஆங்கிலமுமாகவே தடம் புரண்டு அசலான தமிழ்மரபுகள், பெயர்கள் யாவும் திட்டமிட்டு தீர்த்துக் கட்டப்பட்டு வருகின்றன. இப்போதும் நம்மவர்களாலேயே அறிவியலை மோசடியாக்கும் வேஷம் வெளிப்படையாகவே களைகட்டுகிறது. உதாரணம் இயற்கை மருத்துவம்.

ஜிப்பாவும், குர்த்தாவும், பர்தாவும், சுடிதாரும், குஜராத்தில் நாட்டியங்களும், ஆயுர் வேதங்களும், எண்ணெய் உளிச்சல்களும், சப்பாத்தியுமே ஆங்கில மோகத்திற்கு மாற்றாக ஜோடிக்கப்படுகின்றன. இதைப் பற்றி மட்டும் சிந்திக்க ஏனோ நமது எந்த சமூக சிந்தனையாளரும் முன் வருவதே இல்லை. எல்லாம் போக கடைசியில் மிச்சமிருப்பது குதறிச் சிதைந்துபோன தமிழ் மட்டுமே. ஆக நமது அரிய பெரிய இயற்கை வளம் அழிந்து போகும் போக்கிலேயே நமது மொழி வளமும் அற்றுப்போய் கொண்டிருக்கிறது. எனவே நாம் மொழி, அறிவியலை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொள்வது எப்போது?

தொடர்பான குறிப்புகள்:

வரையாடு - மலையாடு (Tahr)
ஆவுளி - கடல்பசு (Dugong)
ஆற்று ஓங்கில் - River Dolphin
பல்லுயிரியம் - Biodiversity
அன்றில் - அருவா மூக்கன் (Black lbis)

அன்னம் என்பது Swan ஐ குறிப்பதல்ல

மூன்றே வகை நச்சுப்பாம்புகள் : 1. நல்ல பாம்பு (Cobra) 2. வீயன் (Vipers)-3. கடற் பாம்புகள் (Coral) 4. காட்டுயிர் (wild life)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com