Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
அக்டோபர் 2008
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
கொல்லப்பட்ட நீதி
யாக்கன்

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் கொடூரத் தாக்குதல்களுக்கும், படுகொலைச் செயல்களுக்கும் அரசு நிர்வாகமும் காவல்துறையும், நீதிபதிகளும் உறுதியான நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை என்பதை இந்தியா முழுவதிலும் காணமுடிகிறது. இரு நூறாண்டுகளைக் கண்டுவிட்ட இந்திய நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதும் கூறப்படாத ஒரு தீர்ப்பை, மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி. எஸ்.எஸ்.தாஸ், கடந்த செப்டம்பர் 24 அன்று வழங்கியிருக்கிறார். பந்தாரா மாவட்டத்தில் கயர்லாஞ்சி என்ற கிராமத்தில் கடந்த 2006 செப்டம்பர் 29&ல் இரண்டு பெண்கள், ஒரு பார்வையற்ற இளைஞர் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு தலித்துகளைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஆறு சாதி இந்துக்களுக்கு மரண தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகாலம், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வரும் தலித்துகள், தங்களின் எதிரிகளுக்கு எதிராக இதுவரை இப்படியரு நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றதில்லை. 1968&ல் தஞ்சை கீழ்வெண்மணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 44 பேர்கள் ஒரே குடிசைக்குள் வைத்துப் பூட்டப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். அந்த கொடுமை மிகுந்த படுகொலைக்காக குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனைதான் வழங்கப்பட்டது. ஆனாலும் முதன்மைக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை அவர் ஒரு பண்ணையார் என்பதால் அப்படிப்பட்ட கொலைச் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார் எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்னும் எத்தனையோ சாதிய வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளை விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு வழக்கு விசாரணைகளையும் தீர்ப்புகளையும் அதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட முடியும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உளவியலுடன் நீதித்துறையும், நிர்வாகத்துறையும் இயங்கிக் கொண்டிருப்பதை எவரும் அறிவர். இத்தகைய சூழலில், தலித் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு இந்திய நீதிபதி ஒருவர் மரண தண்டனை அளித்திருக்கிறார் என்றால், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டில் கூறியதைப் போல அது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாகத்தானே இருக்க முடியும். இந்துப்பார்ப்பன& உயர்சாதி ஊடகங்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் தீர்ப்பை வரவேற்று, அதை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு எனக் கொண்டாடினர். கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு மிக்கொடூரமான முறையில் வதை செய்யப்பட்ட, பாலியல் வல்லுறவு செயப்பட்ட கயர்லாஞ்சி தலித் குடும்பம் படுகொலை செய்யப்பட்டபோது, அதே ஊடகங்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் வாய் மூடிப் பதுங்கிக் கிடந்தனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

அரிதினும் அரிதாகக் கருதப்பட்ட கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில், பந்தாரா மாவட்ட நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையதுதானா? நாடு முழுவதிலும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் பிற தலித் வன்கொடுமை வழக்குகளில் அளித்துவரும் தீர்ப்புகளிலிருந்து கயர்லாஞ்சிப் படுகொலை தீர்ப்பு மாறுபட்டதுதானா? இந்தியா முழுவதிலும் நீக்கமற நிறைந்து கிடக்கும் சாதிவெறியர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதுதானா? நீண்ட நெடுங்காலமாக தாங்கள் சந்தித்து வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான நீதியைப் பெற்றுத்தரும் வலிமை, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்டு என்ற நம்பிக்கையை தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாக்கும் திறன் கொண்டதுதானா அந்தத் தீர்ப்பு.

கயர்லாஞ்சியில் நடந்த படுகொலை சாதியக் கண்ணோட்டத்துடன் நடத்தப்பட்ட பெருங்குற்றம் என்பதால்தான் பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மரணதண்டனை அளித்தாரா? இனிமேல் சாதிப் பின்புலத்துடன் நடைபெறும் படுகொலைகளுக்கு இத்தகையத் தீர்ப்பை நாம் பிற நீதிபதிகளிடமும் எதிர்பார்க்கும் வாதத்துடன்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழும்புகின்றன. உண்மையில், தாழ்த்தப்பட்ட மக்கள், தனித்தனியாகவோ, கும்பலாகவோ, தாக்கப்படும்போது, இழிவுக்குள்ளாக்கப்படும்போது, வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, குற்றமிழைப்பவரின் உள் உணர்விலும், சமூகப் பின்புலத்திலும் சாதி அதிகாரமே தீவிர வினையாற்றுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள, இந்திய நீதித்துறையினரும், காவல்துறையினரும் பிடிவாதமாக மறுத்துவருகிறார்கள். கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள மரணதண்டனைத் தீர்ப்பிலும் அதுதான் வெளிப்பட்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ள கயர்லாஞ்சிப் படுகொலையின் பின்னணியைப் புரிந்து கொள்வது நமக்குப் பலனளிக்கும்.

பய்யலால் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த விவசாயி கயர்லாஞ்சியில் கொஞ்சம் நிலபுலன்களுடன் இருப்பதைக் கண்டு புழுங்கிய கயர்லாஞ்சி கிராமத்தின் இடைநிலைச் சாதி சமூகத்தலைவர், பய்யலாலின் நிலங்களை அபகரிக்க முயற்சித்துள்ளார். அதை எதிர்த்துப் போராடிய பய்யலாலுவுக்கும் அவரது துணைவியார் சுரேகாவுக்கும் அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த சித்தார்த் உதவியுள்ளார். அதனால் ஆத்திரமுற்ற கயர்லாஞ்சி ஊர் தலைவர் தனது அடியாட்களுடன் சென்று சித்தார்த்தை கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்தாக்குதல் குறித்து பய்யலாலும் அவரது துணைவியாரும் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர் கயர்லாஞ்சி கிராமத்தின் சாதி இந்து தலைவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறிது நாட்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்த ஊர்த்தலைவர் அவரது கூட்டாளிகளுடனும் கயர்லாஞ்சி கிராம சாதி இந்துக்களுடனும் திரண்டு சென்று, பய்யலாலின் துணைவியார் சுரேகாவையும், அவரது மகள் பிரியங்காவையும் இழுத்து வந்து ஊர் பொது இடத்தில் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி அடித்து வதைத்து, பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்தனர். பய்யலாலின் பார்வையற்ற 21 வயது மகன் சுதிரையும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மூத்த மகன் ரோஷனையும் அடித்து வதைத்து மயக்கமடையச் செய்தனர். மயக்க நிலையில் இருந்த இரண்டு இளைஞர்களையும், பலமுறை மேலே தூக்கியெறிந்து கீழே தரையில் மோதி விழச் செய்து படுகொலை செய்தனர்.

ஆடைகளின்றி பிணமாகக் கிடந்த சுரேகாவையும் பிரியங்காவையும் கட்டை மாட்டு வண்டியில் ஏற்றி கால்வாயில் வீசிவிட்டுத் திரும்பிய பின்னர்தான் சாதி இந்துக் கும்பலின் சாதிவெறி தணிந்திருக்கிறது. படுகொலை நடந்தபோதும், பாலியல் வல்லுறவு நடந்தபோதும் கயர்லாஞ்சி கிராமத்தில் உள்ள சாதி இந்து சமூகப் பெண்களும் முதியவர்களும் கூட தாக்குதலில் ஈடுபட்டனர்.
பய்யலால் கொடுத்த புகாரின் பேரில் மூன்று நாட்களுக்குப் பிறகு 35 பேரைக் கைது செய்தது காவல்துறை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்& 1989&ன் கீழ் வழக்கைப் பதிய மறுத்ததும் காவல்துறையினர் சாட்சியங்களையும் அழிக்கத் தொடங்கியதும், மகாராஷ்டிரா மாநில தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரும் கலவரம் மூண்டது.

வழக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றும்படி கோரிக்கை எழுந்தது. அதனால் அப்போது ஆட்சியலிருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், மத்தியக் புலனாய்வுத் துறைக்கு, கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கை விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். வழக்கை மத்திய புலனாய்வுத்துறை ஏற்றுக்கொண்டது. கைது செய்யப்பட்டிருந்த 35 குற்றவாளிகளில், 24 பேரை வழக்கிலிருந்து அதிரடியாக விடுவித்தது மத்திய குற்றப் புலனாய்வுத்துறை. மிகப்பலவீனமான முறையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 11 பேரை குற்றவாளிகளாகச் சேர்த்தது.

அவற்றையெல்லாம் விட, பய்யலாலின் துணைவியாரும் இளவயது மகளும் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று புலனாய்வுத்துறை விசாரணை அதிகாரி தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்தார். முன்னதாக வழக்கை விசாரித்த, மாநில குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரி பாலியல் வல்லுறவு நடந்திருப்பதாக மாநில அரசுக்கு அறிக்கை அளித்திருந்தார். ஆனாலும் மத்திய புலனாய்வு நிறுவன விசாரணை அதிகாரி அதை மறுத்து குற்ற அறிக்கையை சமர்பித்தார். பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து இரண்டாண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஆறு பேர்களுக்கு மரணதண்டனையும், இருவருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், அளித்துத் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், மூவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

தீர்ப்பில் மிக கவனமாக பார்க்க வேண்டியது எதுவெனில், படுகொலை செய்யப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தும், நாட்டின் மிக உயர்ந்த புலன்விசாரணை அமைப்பு வழக்கை விசாரித்தும் கூட, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி கூறியிருப்பதுதான். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ்தான் தண்டனைகளை வழங்கியுள்ளார் நீதிபதி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நீருபிக்கப்படாததால்தான் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதி கூறியுள்ளார்.

மேலும், பய்யலாலின் குடும்பமே படுகொலை செய்யட்டதற்குக் காரணம், சாதி இந்து ஊர் தலைவரின் பழிவாங்கும் நோக்கம்தான் என்றும், நிலபுலன்களோடு தற்சார்பாக தன்மானத்துடன் வாழ்ந்த பய்யலாலின் மீது கொண்ட சாதிவெறியுணர்வு அல்ல என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். கொலையாளிகளின் சாதி ஆதிக்கப் பின்புலம் தீர்ப்பெழுதும்போதும், ஏன் விசாரணையின் போதும் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனடிப்படையில் பார்த்தால், கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கு ஒரு சாதாரண கொலை வழக்காகவே கையாளப்பட்டிருப்பது புரியும்.

பாதிக்கப்பட்டவரின் சமூகப் புலமும், குற்றவாளிகளின் சாதி ஆதிக்கமும்தான் குற்றம் நடப்பதற்கான அடிப்படைக் காரணிகள் என்பதை நீதிபதி ஏற்க மறுத்ததினால்தான், சாதி உணர்வோடு கயர்லாஞ்சி கிராமவாசிகள் கொலை செய்யவில்லை என்று நீதிபதியால் தீர்ப்பெழுத முடிகிறது. மேலும், நீதிபதி குற்றம் நடப்பதற்கான சமூகக் காரணிகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பாரானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் தீர்ப்பெழுதி இருப்பார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்மேயானால் நிச்சயம் கயர்லாஞ்சித் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்திருக்கும்.

பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வழங்கியிருக்கும் தீர்ப்பு இறுதியானதல்ல என்றும், வழங்கப்பட்டுள்ள தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின்போது, உயர்நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையானாலும் வியப்பதற்கில்லை. தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும் கூட, உச்சநீதிமன்ற மேல்முறையீடு, கருணை மனுக்கள் போன்றவைகளும் இருக்கின்றன. மரண தண்டனை, ஆயுட்காலச் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது. இச்சூழலில், கயர்லாஞ்சிப் படுகொலைத் தீர்ப்பு, சமூகத்தின் தீண்டாமைக் கண்ணோட்டத்திற்கு எதிராக தீவிரமான விளைவுகள் எதையும் உருவாக்கப் போவதில்லை.


அரசமைப்புச் சட்டத்தின் 366, 24, 25 ஆகிய பிரிவுகளின் படி ‘பட்டியல் சாதியினர்’ என்று அறியப்படும் தலித் மக்கள், நூறு கோடிகளுக்கும் மேலாக உள்ள இந்திய மக்கள் தொகையில் ஒரு பங்கினராவர். மனித உரிமைகள், குடியுரிமைகள் ஆகியவற்றை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அறிவிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் ஏற்று 58 ஆண்டுகள்ஆகியும் கூட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தீண்டாமைக் கொடுமைகள் குறையவில்லை. தீண்டாமைக் கருத்தியலை இந்தியச் சமூகம் இன்றுவரை கைவிடவில்லை. தீண்டாமை எண்ணத்தோடு செய்யப்படும் எந்தவொரு செயலும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆனாலும், அமைச்சர்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நிர்வாக உயர்அதிகாரிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவரும் அன்றாடம் தீண்டாமைக் குற்றங்களைச் செய்து வருகிறார்கள். அக்குற்றத்திற்காக அவர்களில் எவரும் தண்டிக்கப்பட்டதில்லை.

அனைவரின் உள்ளங்களிலும் தீண்டாமைக் குற்ற உளவியல் தேங்கி நிற்கிறது. எனவே, தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அதனால், தீண்டாமைக் குற்றங்களிலும் வன்கொடுமைகளிலும் ஈடுபடுவோரைத் தண்டிக்கும் சக்தியை அரசமைப்புச் சட்டம் இழந்து நிற்கிறது என்று பொருளில்லை. தீண்டாமைக் கொள்கையை தங்களின் வாழ்க்கை நெறிமுறையாக ஏற்று அன்றாடம் தீண்டாமைக் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில், அரசமைப்புச் சட்டம் சிறை வைக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

தீண்டாமைக் குற்றங்களுக்கு என தனியாக இயற்றப்பட்ட குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்&1955, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்&1989 ஆகிய இரு சட்டங்கள்தான், தலித் மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் சட்டங்களாகும். அவ்விரு சட்டங்களும் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு மூலகாரணமாய் இருப்பவர்கள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் காவல்துறை அதிகாரிகள்தான். அவர்களின் தலித் விரோத மனநிலைதான் அவர்களைச் சட்டவிரோதமாக இயங்கச் செய்கிறது. தீண்டாமைக் குற்றங்கள், வன்கொடுமைகள் நடக்கும்போது வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையினர் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகளைப் பதிவு செய்வதில்லை.

தீண்டாமைக் குற்றங்களைப் பொறுத்தவரை நீதிபதிகளும் சட்டவிரோதமாகவே நடந்து கொள்கிறார்கள். தீண்டாமை உளவியலுடன் காவல்துறை அதிகாரிகளும், விசாரணை நீதிபதிகளும் செய்துவரும் இத்தகையக் கூட்டுக் குற்றச்செயலுக்கு மிகப்பெரும் அளவில் பலியாகிக் கொண்டிருப்பது தலித் மக்கள்தான். பேரதிர்ச்சியளிக்கும் படுகொலைக் குற்றங்களைக்கூட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகள் பிடிவாதமாக மறுப்பதுதான் கொடுமையினும் கொடுமை. பாதிக்கப்பட்டவர்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்திய பிறகே வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்கின்றனர்.

அப்படியே பதிவு செய்தாலும் தீவிர விசாரணை செய்து சாட்சியங்களைக் கண்டறிந்து காப்பாற்றுவதில்லை. பாதிக்கப்பட்டோருக்கும் சட்டத்தின்படி கிடைக்க வேண்டிய இழப்பீடுகளைப் பெற்றுத் தர முயற்சிப்பதில்லை. வழக்கு விசாரணைக்கு அக்கறையோடு ஒத்துழைப்பதில்லை. விசாரணை அறிக்கையை காலவரையறைக்குள் சமர்ப்பிப்பதில்லை. சாட்சிகளைக் கலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தீண்டாமைப் படுகொலைகளைச் செய்த குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறையினர் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றனர்.

வழக்கைப் பலவீனப்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்ய அனைத்து முயற்சிகளையும் காவல்துறை விசாரணை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். சட்டத்தைப் புரிந்துகொண்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சிலர், காவல்துறையினரின் அடாவடித்தமான சட்டவிரோதச் செயல்களுக்காக அவர்களைக் கடிந்துகொள்கிறார்களே தவிர தண்டிப்பதில்லை. அதனால், வன்கொடுமை வழக்குளில் காவல்துறை அதிகாரிகள் அட்டகாசம் செய்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும். முறையான வழக்கு விசாரணையை உறுதி செய்யவும் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே, மிகத் தீவிரமான வன்கொடுமை வழக்குகளில், புலன்விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும்; சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும், நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் உயர்நீதி மன்றங்களிடம் வழக்குப்பதிவு செய்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக மிக நீண்டகாலத்தாமதம் ஆகிறது. அந்த தாமதத்தினால் வழக்கு மேலும், மேலும் பலவீனமாகி, வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பித்து விடுகிறார்கள். இவ்வாறாக, காவல்துறையினரும் நீதிபதிகளும் சேர்ந்து நின்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளைச் சாகடித்து வருகிறார்கள். அதைவிட, சட்டத்தையே சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சமூக நீதிக்கும் பகுத்தறிவுக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை குழி தோண்டிப் புதைத்துவிட அனைத்து சக்திகளும் துடிப்பாய்ச் செயல்பட்டு வருகிறார்கள். சாதி இந்துக்களின் அரசியல் கொள்கையாகவே அது இருந்து வருகிறது. குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, போராட்டங்கள் இங்குதான் நடத்தப்படுகின்றன. காவல்துறையினர் அந்தத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நீதித்துறையினர் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்னணிப் படையாக நின்று செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய மதுரை சென்னகரம்பட்டி, படுகொலை வழக்கில் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. அரசியல் கட்சிகள்& காவல்துறையினர், நீதித்துறையினர், குற்றவாளிகள் ஆகிய நான்கு சக்திகளும் கூட்டாகச் சேர்ந்து நின்று வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். சாதிவெறியின் பயங்கரம் எத்தகையது என்பதை வெளிக்காட்டிய சென்னகரம்பட்டி படுகொலை வழக்கில் கூட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில, பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கயர்லாஞ்சி படுகொலை வழக்கில் எப்படி தீர்ப்பு எழுதியுள்ளாரோ, அதேபோல்தான் சென்னகரம்படி படுகொலைத் தீர்ப்பும் எழுதப்பட்டுள்ளது.

கயர்லாஞ்சியில் நடந்ததைப் போலவேதான் சென்னகரம் பட்டியிலும் நடந்தது. சாதிவெறியுணர்வும், தீண்டாமைக் கருத்துணர்வும் கொண்ட கள்ளர் சாதியைச் சார்ந்த பெரும் கும்பல், திரண்டு சென்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் இருவரை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்தது. குரூரமான சாதிய மண்டபங்களாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி இந்துக்கள் மிகப் பயங்கர ஆயுதங்களுடன் ஊரோடு திரண்டு சென்றுதான் தாக்குகிறார்கள். படுகொலையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையானது சாதிவெறியுணர்வும், தீண்டாமைக் கொள்கையும்தான். இந்த அடிப்படையான சமூக அறிவில்லாமல்தான் விசாரணை நீதிபதிகளும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பெழுதி வருகிறார்கள்.

1987ஆம் ஆண்டிலிருந்தே சென்னகரம்பட்டி சாதி இந்து கள்ளர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கோயில் நிலத்தை குத்தகை எடுப்பது தொடர்பான சிக்கல்கள் இருந்து வந்தன. சென்னகரம்பட்டியில் உள்ள அம்மச்சியம்மன் கோயில் நிலத்தை நீண்டகாலமாகவே கள்ளர் சாதியினர்தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். கள்ளர்கள் தாட்டிக்கமாக இருந்ததினால் வேறு சாதியைச் சேர்ந்தவர் எவரையும் குத்தகை ஏலத்தில் பங்கேற்க அனுமதிப்பதுகூட இல்லை. இந்த சாதி ஆதிக்கத்தை எதிர்த்து கோயில் நில குத்தகை ஏலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் 1987&ல் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்து கொண்டதினால் ஆத்திரமடைந்த கள்ளர் சாதி இருந்துக்கள் மூன்றாண்டு காலம் ஏலம் நடத்தாமலேயே தங்களுக்குள் ரகசியமாக நிலத்தை பங்கிட்டுப் பரிமாறி உழுது வந்தனர். சென்னகரம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் கடும் முயற்சியினால், அம்மச்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 9.24 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத்துறை 1991&ல் வெளிப்படையான குத்தகை ஏலத்திற்கு கொண்டு வந்தது. சென்னகரம்பட்டியில் உள்ள 200 குடும்பங்களும் கூட்டாகச் சேர்ந்து கோயில் நில குத்தகை ஏலத்தில் பங்கேற்று நிலத்தை குத்தகைக்கும் எடுத்தனர். கள்ளர் சாதி இந்துக்களிடையே நிலத்தை குத்தகைக்கு யார் எடுப்பது என்ற போட்டி ஏற்பட்டதினால் ஏலத்திலிருந்து வெளியேறினர்.

தலித் மக்களுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டதை எதிர்த்து கள்ளர் சாதி இந்துக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துப் போராடி, நீதிமன்றத்தில் தலித் மக்கள் வெற்றி பெற்றனர். சென்னை உயர்நீதிமன்றம் அம்மச்சியம்மன் கோயில் நில குத்தகை ஏலம் செல்லும் எனத் தீர்ப்புக் கூறியது. அதனால் மேலும் ஆத்திரமடைந்த கள்ளர்கள், நேரடியான தாக்குதல்களில் ஈடுப்பட்டனர். 200 தலித் குடும்பங்களையும் ஊர் விலக்கம் செய்து ஒதுக்கி வைத்தனர். தலித் மக்கள் செய்துவந்த விவசாயத்தை இரவோடு இரவாக அழித்தனர்.

வேலைக்குச் செல்லும் இடங்களில் கொலை மிரட்டல் செய்தனர். ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊரில் கலவரச் சூழல் நிலவியது. எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற பீதியில் தலித் குடும்பங்கள் தவித்து வந்தன. மிக மோசமான சூழ்நிலை நிலவிய போதிலும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் சென்னகரம்பட்டி தலித் குடும்பங்களுக்குப் பாதுகாப்புத் தர மதுரை மாவட்ட காவல்துறை மறுத்துவிட்டது. இறுதியில், தலித் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கொலைவெறித் தாக்குதலை கள்ளர் சாதி இந்துக்கள் தொடங்கினர். 1992ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில் அந்த சாதிவெறித் தாக்குதல் தொடங்கியது. வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த நான்கு தலித்துகளை சென்னகரம்பட்டிக் கள்ளர்கள் சரமாரி வெட்டினர். கண்ணில்படும் தலித் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் படுகொலை செய்யும் திட்டத்துடன் கள்ளர் சாதி வெறிக்கும்பல் அலைந்து கொண்டிருந்தது.

நான்கு பேர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் குறித்து மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் தலித்துகள். மேலூர் காவல்துறை ஆய்வாளர் தலித்துகள் அளித்த புகாரின் பேரில், கள்ளர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தார். ஆனால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் எதிலும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பாதிக்கப்படப் போகிறவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதை அறிந்தே தான் கள்ளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சொத்துக்களை அழித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். அந்தக் குற்றங்களைச் செய்ததற்காக, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 10க்கும் மேற்பட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேலூர் காவல் நிலைய அதிகாரி அப்படி எதையும் செய்யவில்லை.

சென்னகரம்பட்டியில் நிலவிய கலவரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், ‘சென்னகரம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதி’ என அறிவித்து போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். தேவைப்பட்டால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஆயுதம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் வன்கொடுமை சட்டத்தின் படி செயல்பட மறுத்து, வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டனர். அமைதிக் கூட்டத்திற்கு அறிவிப்புச் செய்தனர். அதன்படி மதுரை மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5.7.1992 அன்று மாலை 4 மணிக்கு அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நாளன்று அமைதிக் கூட்டத்தில் பங்கேற்க மேலூர் வட்டாட்சியர் அலுவலத்திற்கு வந்த சென்னகரம்பட்டி தலித்துகள் மாலை 7 மணிவரை காத்திருந்தனர். கள்ளர்கள் எவரும் கூடத்திற்கு வராததால் வட்டாட்சியர் அமைதிக் கூட்டத்தை ரத்து செய்து, கூட்டதிற்கு வந்திருந்த தலித் மக்களை ஊருக்குத் திரும்பிச் செல்லும்படி கூறினார். மிக அபாயகரமான சூழ்நிலையில் அமைதிக் கூட்டத்திற்கு வந்து திரும்பிய தலித்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வட்டாட்சியர் நாகராஜனுக்கு ஏற்படவில்லை. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தலித்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்க அவர் தவறினார்.

அமைதிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், ஊர் திரும்புவதற்காக மதுரை&மேலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர் தலித்துக்கள். இரவு 10 மணிக்கு சென்னகரம்பட்டிக்குச் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினர். அந்த பேருந்தில் சென்னகரம்பட்டிக்கு காவலுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களும் பயணம் செய்தனர். பேருந்து சுந்தரராஜபுரம் என்ற ஊர் நிறுத்தத்தில் நின்றபோது 60க்கும் மேற்பட்ட கள்ளர் சாதி இந்துக்கள், பேருந்தை தடுத்து நிறுத்தி, அடித்து நொறுக்கி தலித்துக்களில் அம்மாசி, வேலு ஆகிய இருவரை பேருந்திலிருந்து இழுத்துத் தரையில் போட்டு வெட்டிப் படுகொலை செய்தனர். உடன் பயணித்தவர்கள் அந்த நள்ளிரவில் உயிருக்குப் பயந்து ஓடி, தப்பித்து, மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தலித்துகளோடு பேருந்தில் பயணம் செய்த காவலர்கள் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, அதைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல், பேருந்தை ஓட்டும்படி ஓட்டுநரை வற்புறுத்தித் தப்பித்துள்ளனர். படுகொலை நடந்தபிறகும் கள்ளர்களின் சாதிவெறி தணியவில்லை. இரவில் தனியாக வரும் தாழ்த்தப்பட்டவரைக் கொலை செய்ய ஆயுதங்களுடன் அன்று இரவு சுற்றிக் கொண்டிருந்தார்கள். அப்படிச் சுற்றிக் கொண்டிருந்த சிலரை ஆயுதங்களுடன் கைது செய்தது காவல்துறை.
சதி ஆலோசனை செய்து, திட்டமிட்டு மறைந்து நின்று நள்ளிரவில் நடத்தப்பட்ட அந்த படுகொலையை, மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதற்குப் பிறகு நடந்தவைகளெல்லாம் பெரும் வேதனை அளிக்கக் கூடியவைகள். தாக்குதலில் ஈடுபட்டவர்களும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மேலூர் காவல் நிலைய ஆய்வாளரும், அமைதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த வட்டாட்சியரும், அனைவரும் கள்ளர் சாதியினராக இருந்ததால், குற்றவாளி களைக் காப்பாற்ற அனைத்து முயற் சிகளையும் மேற்கொண்டனர் இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், சாதாரண கொலை வழக்காக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. படுகொலையானவர்களின் குடும்பங்ளுக்கு இழப்பீடுகள் வழங்கப் படவில்லை. மிக மெதுவாக விசாரணை நடைபெற்றது. சாட்சியங்களைக் காப்பாற்ற காவல்துறையினர் முனைப்புக் காட்டவில்லை. மாறாக வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட தலித்துகளை காவல்துறையினர் மிரட்டிய கொடுமை நடந்தது.

வழக்குரைஞர் பொ.ரத்தினம் தலைமையிலான வழக்குரைஞர் குழு ஒன்று, வழக்கின் தொடக்க நிலையிலிருந்தே தீவிரமாகப் போராடியது. படுகொலை செய்யப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் வழக்கை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989&ன் கீழ், மறுவிசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்தனர். முன்னதாக அந்த முறையீட்டை மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டை ஏற்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி மாவட்டக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், முறையான விசாரணை இல்லை. மேம்போக்கான முறையில், மிகப் பலவீனமான வழியில் குற்ற அறிக்கையை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் தாக்கல் செய்தார்.

வழக்கைச் சீர்குலைப்பதற்கு மதுரை மாவட்ட நிர்வாகத்துறையினரும், காவல்துறையினரும், நீதித் துறையினரும் கூட்டாகச் சேர்ந்து முயற்சித்ததையடுத்து, மதுரை மாவட்டத்திலிருந்து வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றும்படி, மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்று கரூர் கோட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. அதையடுத்து கரூர் அமர்வு நீதிமன்றத்தில் 31.8.2007 அன்று வழக்கு எண் வழங்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

12 மாதங்களாக நடந்த விசாரணையை அடுத்து கடந்த 2008 ஆகஸ்ட் 4&ஆம் நாளன்று கரூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 26 எதிரிகளுக்கும் ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். ஆனாலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்புக் கூறி, அந்த பிரிவுகளிலிருந்து குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்தார்.

தங்களை எதிர்த்து குத்தகை ஏலத்தில் கலந்து கொண்டதால், தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டு விலக்கம் செய்து, அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி, அழித்தொழித்து, பத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்ய முயற்சித்து, சதி செய்து திட்டமிட்டு கூட்டாக இருவரைப் படுகொலை செய்த குற்றவாளிகள் மீது மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் கணேசபெருமாள் மேற்கண்ட குற்றங்களுக்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய குற்றத்தை மட்டும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தார். அந்தக் குற்றச்சாட்டையும் கரூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தள்ளுபடி செய்தார்.

காவல்துறையினரும், நீதிபதிகளும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முற்றாக முடக்கி வைக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறார்கள் என்பதை சென்னகரம்பட்டி கொலை வழக்குத் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது. மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை மறுவிசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில்தான், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வழக்கு விசாரணையை மேற்கொண்டு குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் மாவட்ட கண்காணிப்பாளருக்குத்தான் உத்தரவு அளித்தது என்றும், மாவட்டக் கண்காணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஆணை இல்லாமல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை செய்ததை ஏற்க முடியாது என்றும் கூறி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் செய்த விசாரணையை முற்றிலுமாக நிராகரித்தது கரூர் அமர்வு நீதிமன்றம்.
இவ்வாறாக எந்தெந்த வழிகளிலெல்லாம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்க வேண்டுமோ அந்த வழிகளில் எல்லாம் முழு அரசு ஒத்துழைப்புடன் சாதி வெறியுணர்வு உடையவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

இதேபோன்று, தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகையைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் மறுத்ததினால், கிராம மக்களுக்கு தண்டோரா அடித்துத் தெரியப்படுத்தினார் கருப்பையா.

அப்போது அவருடன் ராமசாமி, முருகேசன் என்ற இரு தலித் சமூகத்தவரும் சென்றுள்ளனர். அதை அறிந்த ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் தங்களைக் கேவலப்படுத்திவிட்டதாக ஆத்திரம் கொண்டு, கருப்பையாவை வீட்டுக்கு அழைத்து வரச் செய்து கடுமையாகத் தாக்கினார். கருப்பையாவோடு தண்டோரா அடித்துச் சென்ற ராமசாமியையும் முருகேசனையும் கடந்த 2002 மே மாதம் 15ஆம் நாள் வீட்டிற்கு அழைத்து வந்து அடித்துக் கொடுமைப்படுத்தி மனித மலத்தை உண்ணச் சொல்லி, செருப்பால் அடித்துச் சித்ரவதை செய்தனர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போட்டு, தங்களின் அடங்காத சாதிவெறியை வெளிப்படுத்தினர்.

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக அத்தனை கொடுமைளையும் அனுபவித்த தலித்துகள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூட துணிவில்லாத பிள்ளைப் பூச்சிகளைப் போல் இருந்துள்ளனர். செய்தியை அறிந்த வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட கருப்பையா, ராமசாமி, முருகேசன் ஆகியோரை அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மனித மலத்தை மனிதனை உண்ணச் செய்த அந்த படுகேவலமான சாதிவெறிச் செயலை அறிந்து தமிழகமே உறைந்து போனது. அநேகமாக அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு, குற்றவாளியான சுப்பிரமணியனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தது. ஆனாலும் அதற்குரிய ஒப்புதலைத் தர மறுத்து விடுதலை செய்தது.

வழக்கை லால்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணை செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். சுப்ரமணியன், அவரது துணைவியர் ராஜலட்சுமி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, கடந்த 10.9.2007 அன்று தீர்ப்பளித்தார்.

திண்ணியம் வன்கொடுமை வழக்கில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், திண்ணியம் கிராமத்தில் சாதி இந்து கள்ளர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதால், தீண்டாமைக் கருத்துடன் குற்றவாளிகள் குற்றமிழைக்கவில்லை என்றும் தீர்ப்பெழுதினார் கள்ளர் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி ராமமூர்த்தி. அதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு எதுவென்றால், திண்ணியம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் கள்ளர்களும் தலித் சமூகத்தவரும் இணையான மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். இரு சமூகத்தவரும் இணைந்து திருவிழா கொண்டாடுகிறார்கள். எனவே, திண்ணியம் கிராமத்தில் சாதிப் பாகுபாடு இல்லை என்று காரணம் கூறுகிறார் ராமமூர்த்தி.

குறைந்தபட்ச சமூக அறிவின்றி தீர்ப்பு எழுதி இருக்கும் ராமமூர்த்தி, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவரிடம் பணம் பெற்று, வீடு ஒதுக்கித்தர மறுத்து, பணத்தையும் திருப்பித் தராமல், மனித மலத்தை உண்ணச் செய்து, செருப்பால் அடித்து, பழுக்கக் காய்ச்சிய கம்பியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரைச் சூடுபோட்டு சித்ரவதை செய்த குற்றவாளிக்கு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? ரூபாய் இரண்டாயிரம் அபராதம், ஒரு மாத சிறைத்தண்டனை மட்டும்தான். குற்றம் சாட்டப்பட்ட மீதி ஏழு பேரை விடுதலை செய்து தீர்ப்பெழுதினார் ராமமூர்த்தி.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் அற்பமான முறையில் விசாரித்து, நெஞ்சறிய கள்ளத் தீர்ப்புகளை எழுதி வருகிறார்கள். வழக்கை புலன் விசாரணை செய்ய அரசால் நியமிக்கப்படும் காவல் துறை அதிகாரிகள் வழக்கை நாசப்படுத்தும் சதித் திட்டத்தோடு, குற்ற அறிக்கையிலும் சாட்சியங்களிலும், சாட்சிப் பொருட்களிலும் ஏராளமான குளறுபடிகளைச் செய்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். கீழ் நீதிமன்றங்களிலோ, உயர்நீதிமன்றத்திலோ அப்படிப்பட்ட வழக்குகள் தோல்வியுறச் செய்யப்படும் போது, அரசு மேல்முறையீடுகளைச் செய்வதில்லை. மிக நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டுவிடுவது அல்லது கள்ள மௌனம் காத்து வருவது என்ற போக்கை அநேகமாக அனைத்து மாநில அரசுகளும் கடைபிடித்து வருகின்றன. அவற்றில் தமிழக அரசு முதலாவது மாநிலமாக விளங்குகிறது.

இனப் படுகொலைக்கு இணையான மதுரை & மேலவளவுப் படுகொலை நாட்டையே உலுக்கிய நிகழ்வாகும். சமூக நடைமுறைகளைச் சாதாரணமாகக் கவனித்து வரும் எவரும், மேலவளவுப் படுகொலையின் பின்னணியைப் புரிந்து கொண்டிருப்பர். நீண்டகாலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த மேலவளவுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சாதி வெறியுணர்வடைந்த மேல்வளவு கள்ளர்கள், கடந்த 30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகளை சென்னகரம்பட்டிப் படுகொலை ‘பாணி’யிலேயே பயணம் செய்த பேருந்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்தனர்.

முருகேசனை பேருந்திற்குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தலையை எடுத்துக் கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு ‘பர்லாங்’ தொலைவிலிருந்த கிணற்றில் வீசினார்கள். நாட்டில் உள்ள அனைத்து சமூக நலச் சிந்தனையாளர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். மேலவளவு கிராமத்தில் வசித்து வந்த அத்தனை தலித் மக்களும் கொலை பீதியில் ஊரைவிட்டே வெளியேறினர்.

பத்தாண்டு கழித்து எண்ணிப் பார்த்தாலும் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் உருவாக்கும் மேலவளவு படுகொலை வழக்கை, தமிழக ஆட்சியாளர்களும் காவல்துறை அதிகாரிகளும் நீதிபதிகளும் கையாண்ட விதத்தை அறிந்தவர்கள் வேதனையில் துடித்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டும். படுகொலையை விட வழக்கு கையாளப்பட்ட விதம் பெரும் கொடுமையானது. கொந்தளிப்பை உருவாக்கக் கூடியது. ‘இரட்டை இலை’ ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. கள்ளர் சாதியினரின் கைப்பிடியில் இருக்கும் கட்சி அது என்பதால் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் நீதிபதிகளும் கொலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்பட்டனர்.

41 கள்ளர் சாதி இந்துக்கள் மீது குற்றப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையற்ற பிணையில் வெளிவந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். பலர் மேலவளவு கிராமத்திலேயே தங்கினர். பிணையை ரத்து செய்ய வழக்கறிஞர் பொ.ரத்தினம் தலைமையில் 75 வழக்கறிஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து முறையிட்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் வழக்கறிஞர்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முடிவு தவறானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்தது. ஆனாலும் பிணையை ரத்து செய்யவில்லை. பிணையை ரத்து செய்யவே உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலையை ஜெயலலிதா அரசு உருவாக்கியது.

இந்நிலையில் நேர்மையாக வழக்கு விசாரணை நடைபெறாது என்பதை அறிந்த வழக்கறிஞர்கள், வழக்கை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் நீதிபதிகள் வழக்கை சேலத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். பல்வேறு கொலை மிரட்டல்களைச் சந்தித்த வழக்கறிஞர்களும் சாட்சிகளும், மன உறுதியோடு நின்றனர். வழக்கறிஞர் பொ.ரத்தினம் ஆவேசத்துடன் போராடினர். இறுதியில் 26.7.2001 அன்று 17 பேருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனையும், 23 பேரை விடுதலை செய்தும், சேலம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலவளவுப் படுகொலை வழக்கிலும் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆயுள்தண்டனை பெற்ற 17 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

தாழ்த்தப்பட்ட மக்களை மிக பயங்கரமான முறையில் படுகொலை செய்த கள்ளர் சாதி குற்றவாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நெறிகெட்ட முறையில் பிணை வழங்கிய போது, தமிழக அரசு வழக்கறிஞர் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. பின்னர் வழக்கறிஞர்கள் பிணையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். உச்சநீதிமன்றம் பிணையை ரத்து செய்து 17 ஆயுட் சிறை குற்றவாளிகளை சிறையிலடைக்க உத்தரவிட்டது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதனாலேயே மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஜெயலலிதாவும், கருணாநிதியும், சேலம் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்த 23 பேர்களைத் தண்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. மாறாக தண்டிக்கப்பட்ட 17 குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தண்டனையை உறுதி செய்து கடந்த 19.4.2006 அன்று தீர்ப்பளித்தனர். விடுதலை செய்யப்பட்ட 23 பேர்கள் மீதும் குற்ற ஆதாரங்கள் இருந்தாலும் தமிழக அரசு மேல் முறையீடு செய்யாததால் நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறி கை கழுவினர் நீதிபதிகள். மேலவளவு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க செய்ய அனைத்து முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு செய்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் கொடூரத் தாக்குதல்களுக்கும், படுகொலைச் செயல்களுக்கும் அரசு நிர்வாகமும் காவல்துறையும், நீதிபதிகளும் உறுதியான நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை என்பதை இந்தியா முழுவதிலும் காணமுடிகிறது. அதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் உள்ளன. கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் கடந்த 26.5.2000 அன்று காந்தி, வெள்ளையன், மதியழகன் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள், இரவில் மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலவளவுப் படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிய அப்படுகொலை வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த 2000&த்தில் சென்னையில் மிகப்பெரும் பேரணியை நடத்தியது. பல்வேறு தலித் அமைப்புகளும் போராடின. அதன்பிறகே அச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கே தலித் மக்கள் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபடவேண்டிய சூழல் நாடெங்கிலும் நிலவுகிறது.

மிகப்பெரும் படுகொலைகள் கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. நெல்லை தாமிரபரணி ஆற்றில் தலித் மக்கள் 17 பேர், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டனர். தமிழகத்தின் மிகப் பெரும் அரச வன்கொடுமையாக் கருதப்பட்ட தாமிரபரணிப் படுகொலையை விசாரிக்க ஒரு ‘கமிஷனை’ அமைத்ததோடு ஆட்சியாளர்கள் நின்றுவிட்டனர். அந்த ‘கமிஷனோ’ தலித் மக்கள்தான் தவறு செய்தனர் என அறிக்கை தந்தனர். புதிய தமிழகம் உட்பட பல தலித் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஆட்சியிலிருந்த கருணாநிதி படுகொலைச் செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்தார்.

அதேபோல், 1992&ல் ஆகஸ்ட் 6ஆம் நாள் ஆந்திரா சுண்டூர் கிராமத்தில் ஆதிக்க சாதி ரெட்டியார்கள் ஊரோடு திரண்டு சென்று, எட்டு தலித் இளைஞர்களை வெட்டிப் படுகொலை செய்தனர். உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் போட்டுக் கட்டி, துங்கபத்ரா நதியின் வாய்க்கால்களில் வீசினர். உலகம் முழுவதிலும் பேரதிர்ச்சியை உருவாக்கியது சுண்டூர் படுகொலை அப்படுகொலையையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்து போராடினார். ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆந்திர அரசு துப்பாக்கிச் சூடு நடத்திய அந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருதலித் இளைஞர் கொல்லப்பட்டார். அதன்பிறகுதான் சுண்டூர் படுகொலையை ஆந்திர அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தது.

கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு கொலை மிரட்டல்களைச் சந்தித்து சாட்சிகள் மனஉறுதியோடு நின்று, போராடியதன் விளைவாக, கடந்த 31.7.2007 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கு ஆயுட்காலத் தண்டனையும், 35 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறையும் அளித்துத் தீர்ப்புக் கூறியது விசாரணை நீதிமன்றம். ஆனாலும், சுண்டூர் படுகொலை வழக்கிலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி தீர்ப்பு எழுதியிருந்தார்.

அதேபோல், கர்நாடாக மாநிலத்தில் கம்மளப்பள்ளி கிராமத்தில், தேர்தலில் எதிர் வேட்பாளருக்கு வாக்களித்ததற்காக, ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஏழு தலித்துக்களை, மத்திரெட்டி என்ற சாதி இந்து, தனது அடியாட்களுடன் சென்று, கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம்நாள் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டை பூட்டி, குடிசைக்குத் தீவைத்து உயிரோடு எரித்துக் கொன்றான். அப்படுகொலையைக் கண்டித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்யக் கோரியும் கர்நாடக தலித் அமைப்பான ‘தலித் சங்கர்ஷ் சமீதி’ மிகப்பெரும் பேராட்டத்தை நடத்தியது. ஆனாலும் அரசு குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் தீவிரமடையவே அரசு பணிந்து வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தது.

ஆட்சி அதிகாரங்களில் இருப்போரும், நீதித் துறையில் பணியாற்று போரில் பெரும்பாலானோரும் ஆதிக்க சாதியினராகவே இருக்கின்றனர். எனவேதான் தலித் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு & காவல்துறை & நீதித்துறை ஆகிய மூன்று கடுமையான சக்திகள் ஒன்றிணைந்து நிற்கின்றன. அதன்மூலம் வன்கொடுமை செய்யும் சாதி இந்துக்கள் உற்சாகமடைகின்றனர். சாதாரணமான குடிஉரிமைகளைக்கூட தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கக் கூடாது என்ற மனநிலை வன்கொடுமையாளர்கள் மத்தியில் வலுவடைகிறது. அதன்மூலமே நாடெங்கிலும் தலித்துக்களின் மீதான பழம்பெரும் சாதியக் கொடுமைகள் தொடர்கின்றன.
இத்தகைய போக்குத் தொடர்வதைத் தடுக்கவே 1989&ல் மத்திய அரசு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மிகக்கடுமையான சட்டப் பிரிவுகளுடன் இணைத்துத் தண்டனையை அதிகப்படுத்தி உருவாக்கியது. அச்சட்டத்தைப் புரிந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் தண்டனை அளிப்பதிலும் அரசு, காவல்துறை, நீதித்துறை ஆகிய மூன்று துறைகளில் பணியாற்றும் சாதி இந்து அதிகாரிகளுக்கு ஏற்பட்ட குழப்பத்தினால், 1995&ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டு அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டன. ஆனாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பெரும் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் கூறினாலும், காவல்நிலையத்தில் உள்ளவர்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்லை.

இவ்வாறு, பல்வேறு படுகொலை வழக்குகளைக் கவனத்தில் கொண்டு ஆராய்வோமேயானால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், படுகொலைகளும், பொறுப்புணர்வுடன் சட்டரீதியாக கையாளப்படுவதில்லை என்பதை அறியமுடிகிறது. தீண்டாமை மற்றும் குடியுரிமைகளை சாதி இந்து சமூகம் நீண்டகாலமாக மறுத்து வருகிறது. அதை எதிர்த்துப் போராடும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படுகிறார்கள்; படுகொலை செய்யப்படுகிறார்கள். சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் குடியுரிமைகளைப் பாதுகாக்கவும் பல்வேறு சட்டங்களும் நடைமுறைவிதிகளும் இருந்தாலும் கூட, நாட்டில், தீண்டாமை வன்கொடுமை மற்றும் படுகொலைச் செயல்களிலிருந்து தலித் மக்கள் தப்ப முடியவில்லை.

வன்கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசுகளும், நீதிபதிகளும் செயல்படுவதில்லை. மாறாக, நீதியைப் பெறுவதில் தலித் மக்களுக்கு ஏராளமான தடைகளை ஏற்படுத்துகின்றன. எது சரியானது அல்லது சட்டப்படியானது என்பதை நன்றாக அறிந்திருந்தும் காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் படும் கொடுமைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது துயரமானது. அவர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினராக இருப்பதினால், சாதிய உளவியலில் இருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. காவல்துறையினரின் சிந்தனையிலிருந்து சாதிப் பாகுபாட்டுணர்வை விரட்ட, மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்மூலம் அரசும் நீதித்துறையும் காவல்துறையினரின் சாதிப் பாகுபாட்டுணர்வுக்கு ஆதரவாகவே நிற்கின்றனர் என்பது புலனாகும்.

தமிழகத்தில் பதிவான வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகள் குறித்த விபரங்களை வேலூர் பேராசிரியர் அய்.இளங்கோவன் 2008 செப்டம்பர் மாத தலித் முரசு இதழில் வெளியிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில், கடந்த 1990 முதல் 2006 வரை 16 ஆண்டுகளில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பதிவான வழக்குகள் 6157 மட்டுமே. அரை நிலவுடைமைச் சாதி வன்கொடுமைகள் தலைவிரித்தாடும். சேலம் மாவட்டத்தில் வெறும் 30 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட 6157 வழக்குகளில் 207 வழக்குகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டவையாகும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவை, 3 சதவீதம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட 6157 வழக்குகளில், 1657 வழக்குகள் புலன்விசாரணை செய்த காவல்துறை அதிகாரியாலும், 2297 வழக்குகள் நீதிபதிகளாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மிக அண்மைக் கால புள்ளி விபரம் இது. அவற்றின் அடிப்படையில் பார்த்தால், நிலைமை மேலும் மோசமாகி வருவதை அறிந்து கொள்ள முடியும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டறிக்கையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு விகிதத்தின்படி இந்தியாவில் உள்ள காவல்நிலையங்களில் ஒரு ஆண்டுக்கு ஒரு வழக்கு கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகவில்லை எனக் கூறப்பட்டிருந்தது. அந்த நிலை இப்போது வேறுவடிவில் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் கொஞ்ச நஞ்ச வழக்குகளையும், விசாரணை அதிகாரிகளும், விசாரணை நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்கிறார்கள். அதன்மூலம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே நாட்டில் ஒழித்துக் கட்டும் வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

காவல் நிலையம் வரை எடுத்துச் செல்லப்படும் வன்கொடுமைகள் தவிர, காவல்துறையினரின் மிரட்டலுக்குப் பயந்தும், வழக்குரைஞர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்திற்கு வழியில்லாமலும், வன்கொடுமை செய்த சாதி வெறியுணர்வாளர்களுக்குப் பயந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் வன்கொடுமைகள் எழுதி மாளதவைகள். இந்தியா எனும் கொடுமைமிகு ‘சாதி நரகத்தில்’ தவித்துக் கொண்டிருக்கும் தலித் மக்களைக் காப்பாற்றும் வழி கண்களுக்கு எட்டியவரை புலப்படவில்லை.

தலித் மக்களின் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், இந்தியாவிலேயே முதன் முதலாக ஆந்திர மாநில அரசுதான் சட்டப்பூர்வ ஆய்வு நடவடிக்கைகளையும், தனிப்பட்ட குற்றவியல் விசாரணையையும் அறிமுகப் படுத்தியது. 1976&லேயே, ஆந்திர மாநில அரசு, குற்றப்பிரிவு மற்றும் குற்றவியல் விசாரணைத் துறையில், ‘சிறப்பு தலித் மற்றும் பழங்குடியினர் மையத்தை’ நிறுவியது. தீண்டாமை தொடர்பான வன்கொடுமைக் குற்றங்களை உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும், வழக்கை புலன் விசாரணை செய்யவும், நீதிமன்ற விசாரணை நடத்தவும் அந்த மய்யம் அமைக்கப்பட்டது.
அந்த மையத்தின் மூலம் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடும், மறுகட்டமைப்பிற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தந்தது.

பின்னர், 1989&ல் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, அச்சட்டத்தின்படி வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் மறுகட்டமைப்பு வாய்ப்புகளை வழங்கும் பணியை அந்த மய்யத்திடம் ஒப்படைத்தது. இந்த வகை முயற்சிகள் எதுவும் பெரியார் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் கருணாநிதி ஆட்சியிலும், செய்யப்பட்டதில்லை; ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்று பெரியார் இயக்கத்தின் கடைசி வாரிசாகக் கருதப்படும் வீரமணியால் புகழப்பட்ட ஜெயலலிதா ஆட்சியிலும் செய்யப்பட்டதில்லை.

1996&ல் ஆந்திர மாநிலத்தில் நிலவும் தீண்டாமைகள் மற்றும் வன்கொடுமைகள் பற்றியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தும் விதம் குறித்தும் ஆய்வு செய்ய, நீதிபதி புன்னையா தலைமையில் புன்னையா ஆணையத்தை நிறுவியது ஆந்திர அரசு. அனைத்துத் தரப்பினரிடமும் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, கடந்த 2001 மே மாதம் சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை புன்னையா ஆணையம் ஆந்திர மாநில அரசிடம் அளித்தது.
அவ்வறிக்கையில், வன்கொடுமை நடந்த இடங்களில் காவல் துறையினரும், வன்கொடுமை செய்த குற்றவாளிகளும் எவ்வாறெல்லாம் இணைந்து நின்று செயல்பட்டு குற்றத்தை மூடி மறைக்கிறார்கள் என்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மூலம் தலித்துகள் பெற வேண்டிய இழப்பீட்டைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என்றும் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.
அறிக்கையில் இடம் பெற்றிருந்த கவனத்திற்கு வராத வன்கொடுமைகள் பற்றிய குறிப்புகள், நாடு முழுவதிலும் சொல்லித் தீர்க்க முடியாத கொடுமைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை வெளி உலகிற்கு அறிவித்தன. ஆந்திராவில் என்ன நிலைமையோ அதுவே நாடு முழுவதற்கும் வாழும் தலித் மக்களின் நிலைமை.

இந்தியாவில் சாதி அடிப்படையிலான படுகொலைகள் எதுவும் நடப்பதில்லை என்று அய்க்கிய நாடுகள் அவையில் வெட்கமற்ற முறையில் அறிக்கை அளிக்கிறார்கள் இந்திய வெளிஉறவுத்துறை அதிகாரிகள். உலகில் வேறு எங்கும் காணமுடியாதபடி, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய வகுப்பினருக்கு ஏராளமான வாய்ப்புகளும், சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன என அய்க்கிய நாடுகள் அவைகளில் அடிக்கடி பேசி வருகிறார்கள் நமது பிரதமர்கள். ஆனால், இன்றும் இந்தியக் கிராமங்களில் சாதி இந்துக்களின் தெருக்களிலும் கிராமத்தின் பொது இடங்களிலும் தலித்துக்கள் காலில் செருப்பணிந்து நடக்க முடியவில்லை. பொதுக் குளங்களில் குளிக்கவும், நீரெடுக்கவும் முடியவில்லை.

சாதி இந்துக்களின் தெருக்களில் சைக்கிள் ஓட்டிச் செல்லமுடியவில்லை. தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நீடிக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூவாயிரம் கிராமங்களில் இரட்டைக் குவளைகள் முறை இருப்பதை கருணாநிதி தனது வாயால் சட்டசபையில் கூறினார். கோயிலுக்குச் செல்லமுடியவில்லை. பொதுச் சொத்துக்களில் ஏலம் எடுக்கமுடியவில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் வேறு வடிவங்களில் தீண்டாமை நடைமுறையிலிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடுகள் வாடகைக்குக் கிடைப்பதில்லை. அலுவலகங்களில் யாரும் நெருங்கிப் பழகுவதில்லை. பெண்கள் மிக வன்முறையான முறையில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். இன்னும் எத்தனையோ கொடுமைகள் உருமாறி நிறம்மாறி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

சாதி உணர்வின் வெளிப்பாடு வியப்பினும் வியப்பாக உள்ளது. வேதனையிலும், வேதனையைச் சுமந்து திரிகிறார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் நீதிபதிகளும் மக்களைக் காக்கும் சட்டத்தைக் கொன்று சாதி வளர்க்கிறார்கள். ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்து வரும் தீண்டாமைப் பாகுபாடுகளையும், வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தாமல் நாட்டின் வளர்ச்சியில் வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்காமல் இந்த நாடு வளர்ந்து விடும் என்று சொல்வோரின் முகத்தில் காறித் துப்பினாலும் அது தவறாகி விடாது என்றே சொல்லத் தோன்று கிறது.

காவல்துறையினரின் புறக்கணிப்பும்& மோசடிக்கு உடந்தையாய் இருத்தலும்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறியடிப்பதில், சாதி உணர்வுடைய / தீண்டாமைப் பாகுபாட்டுணர்வுடைய வன்கொடுமையாளர்களை விட காவல் துறையினர்தான் அதிகம் முனைப்புக் காட்டி வருகிறார்கள். அவர்கள் பின்பற்றுகிற முதல் யுக்தி என்னவென்றால், வன்கொடுமைகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வரும்போது, அவர்கள் தாழ்த்தப்பட்டவர் / பழங்குடியினர் என்று நன்றாகத் தெரிந்தும் கூட வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதில்லை.

மிகச் சாதாரணமான பிரிவுகளில் கூட வழக்குப் பதிவு செய்ய முன் வருவதில்லை. மாறாக, புகார் கொடுக்கப்பட்டவுடன், குற்றவாளிகளை உடனே தொடர்பு கொண்டு தகவல் அளிக்கின்றனர். புகார் கொடுத்தவரை சமாதானமாகப் போகும்படி வற்புறுத்துகின்றனர். பல இடங்களில் மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக புகார் தரும்படி குற்றவாளிகளுக்கு அறிவுரை கூறி, கேட்டுப் பெற்றுக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து அவர் அளித்த புகாரைத் திரும்பப் பெறும்படி வற்புறுத்துகின்றனர்.

புகாரைப் பதிவு செய்யும்படி தாழ்த்தப்பட்டவர் பிடிவாதமாக இருப்பாரேயானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பொருத்தமில்லாத பிரிவுகளில் பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், விசாரணையை மிகத் தாமதமாக தொடங்குகின்றனர். அதனால் குற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆண்டுக் கணக்கில் ஆகிறது. அந்த காலக் கட்டத்தில் சாட்சிகளை கலைக்கவும், சாட்சியங்களை அழித்துவிடவும் குற்றவாளிகளுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். பெரும்பாலான வழக்குகளில் காவல்துறையின் ‘‘கட்டப் பஞ்சாயத்து’’ செய்து சாட்சிகளைக் கலைத்து, வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்கள் என்று ஆந்திராவில் ‘சக்ஷி’ என்ற அமைப்பு கடந்த 2006&ல் நடத்திய ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன.

ஆதிக்க சாதியினருடன் இணைந்து கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட / பழங்குடி மக்கள் நீதி பெறுவதைத் தடுத்து வருகிறார்கள். மேலும், அதிக எண்ணிக்கையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதிலும், புகாரை விசாரிப்பதிலும், குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்வதிலும், பெருமளவு பணம் லஞ்சமாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. வன்கொடுமைகளுக்காக, பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அரசு தரும் இழப்பீட்டுத் தொகையை கூட, காவல்துறையினர் 50% சதவீதம் வரை பறித்துக் கொண்டுவிடுகின்றனர். மறுகட்டமைப்புப் பணிகளைத் தீவிரமாகச் செய்து தர முன் வருவதில்லை. ‘சக்ஷி’ அமைப்பு ஆய்வு செய்த பல வழக்குகளில் 50 சதவீதத்திற்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீதும், புலன் விசாரணை நடத்தி குற்ற அறிக்கை சமர்பிக்கும் அதிகாரி மீதும், கடமை தவறிய குற்றத்திற்காக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 5 (3) ஆவது பிரிவின்படி கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் எந்த பகுதியிலும், எந்த காவல்துறை அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

நீதிபதி புன்னையா ஆணையத்தின் பரிந்துரைகளில் முக்கியமானவைகள்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரின் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடந்த இடங்களில், நேரடி கள ஆய்வு நடத்தி, அந்த இடத்தை ‘வன்கொடுமை நடந்த இடமாக’ அனைத்துச் செய்தி ஏடுகளிலும் மாவட்ட ஆட்சியர் அவசர கால அறிவிப்பாக அறிவிக்க வேண்டும். காவல்துறை உயர்அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் ‘வன்கொடுமை நடந்த இடத்தை’ வைக்க வேண்டும்.

வன்கொடுமை நடந்த இடங்களில் இடைவிடாமல் சூழ்நிலையை மதிப்பீடு செய்வதும், உயர்மட்ட அளவிலான விழித்திருப்புக் குழுக்களும், கண்காணிப்புக் குழுக்களும் அமைத்து மேலும் வன்கொடுமை நடக்கும் சூழ்நிலையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் சரகத்திலும் வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்யவும், புலன் விசாரணையைக் கண்காணிக்கவும் தனியான தலித்/பழங்குடியினர் மையம் அமைக்கப்பட வேண்டும். அந்த மையத்தில் தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகள்& 1995&ல், விதி எண்&7 ஐ, விரிவுபடுத்தி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளருடன் காவல் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் கூட வன்கொடுமைகளை விசாரிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும். அதன்மூலம் புலன்விசாரணைக்கு ஆகும் தாமதத்தைத் தடுக்க முடியும்.

வன்கொடுமை நடந்த கிராமங்களில் உடனடியாக அனைத்து சமூகத்தவரும் உள்ளடங்கிய சமாதானக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சமாதானக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடாதபடியும், சாட்சியங்கள் கலைந்து விடாதபடியும் கண்காணிப்பது உட்பட முக்கியமான பணிகள் சமாதானக் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிவாரண மாதிரித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட வேண்டும். இழப்பீடுகளை வழங்க வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அனைவருக்குமான சமூக சமத்துவம், சகோதரத்துவம் குறித்த சமூகக் கல்வியை, விழிப்புணர்வு மையங்களும், பயிற்சிப் பட்டறைகளும் அமைத்து சமூக ஆதிக்கம் செய்யும் சாதி இந்து சமூகத்தவருக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் குறித்த விரிவான கல்வியை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீது வன்கொடுமை நடத்தும், தீண்டாமைக் கருத்துணர்வுடைய சாதி இந்துக்களுக்கு அரசு கற்றுத் தர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com