Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
அக்டோபர் 2008
ஈழம் & தொடரும் துயரம்

கடந்த 30 வருடங்களாக சிங்களப் பேரினவாத அரசுகளால் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வந்த ஈழத்தமிழர் பிரச்சனை சமீப காலங்களில் இப்பொழுது மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஈழ விடுதலைப் போரில் இறுதிக் கட்டம் என்று இரு தரப்பும் கூறுமளவுக்கு போர் உக்கிரம் அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான இந்தப் போரில் சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களை விமானம் மூலம் குண்டு வீசிக் கொலை செய்கிறது. அவர்களின் குடியிருப்புகள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் என்று திட்டமிட்டு தாக்குதலைத் தொடர்கிறது. தமிழர் பகுதிகளில் போக்குவரத்துக்கான அனைத்து வழிகளையும் துண்டித்து விட்டு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் செய்து தமிழர்களைத் தாங்கொணாத் துயரத்திற்கு உள்ளாக்குகிறது.

சிங்கள அரசின் இனவாத நடவடிக்கையால் கிளிநொச்சிப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி, உடைமைகளைத் துறந்து சொந்த நாட்டிலேயே வனாந்திரங்களில் குடியிருப்புகளை உருவாக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதி முகாம்களின் மீதும் சிங்கள ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறது. அவர்களுக்கு உணவுப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் அளிக்காமல் பட்டினி போட்டுக் கொலை செய்கிறது. இவ்வாறு இரு தலைமுறைகளாகப் போரின் ஊடாக தங்களது வாழ்க்கையை நடத்தும் ஈழ தமிழ்ச் சமூகம் நமது கண் முன்னே சிறிது சிறிதாகச் செத்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம் இவ்வளவு காலத்தில் விடுதலை புலிகளை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாத சிங்கள ராணுவம் உத்வேகம் அடைந்துள்ளது போன்றும், முன்னேறிச் செல்வது போன்றும் பிம்பங்களைக் கட்டியமைக்கிறது. உயிருக்கு பயந்து ராணுவத்தை விட்டு ஓடிச் செல்லும் ராணுவ வீரர்களுக்கு தண்டனை அளிக்காமல் வெகுமதி அளித்து அவர்களைத் தனது படையில் திரும்பவும் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு ‘வலிமை’ வாய்ந்த இலங்கை ராணுவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்று வசனங்களையும், வீரச் சவடால்களையும் உதிர்த்து வருகிறது. இதன் மூலம் அது தான் வெற்றியை நெருங்கிவிட்டது போன்ற தோற்றத்தை உலகிற்கு ஏற்படுத்துகிறது.

‘‘பிரபாகரனை விரைவில் உயிருடனோ,
பிணமாகவோ பிடிப்போம்’’.
‘‘பிரபாகரன் மரணமடைய வேண்டும்.
அல்லது அகதியாக வாழ வேண்டும்’’

என்பது அத்தகைய வசனங்களில் சில. இத்தகைய வசனங்கள் அனைத்தும் திரைப்பட வசனத்தை ஒத்ததே என்பது ஏற்கனவே பதவியிலிருந்த சிங்கள அதிபர்களின் வீர வசனத்தைப் படித்தாலே புரியும். ராஜபக்ஷேவின் வசனமும் அத்தகையது தானா என்பதை காலமும் விடுதலை புலிகளின் எதிர்த் தாக்குதலும் நிரூபிக்கும்.

ஆனாலும் சிங்கள அரசின் இத்தகைய புதிய ‘திமிர்’த்தனத்திற்குப் பின்னணியில் தெற்காசியாவில் வல்லரசாகத் தன்னை முடிசூட்டிக் கொள்ள ஆசைப்படும் இந்திய அரசின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆம். கடந்த மூன்றாண்டுகளில் சிங்கள இனவாத அரசுக்கு இந்திய அரசு எண்ணிலடங்கா ஏராளமான உதவிகளைச் செய்துள்ளது. பல நூறு கோடிக்கணக்கான மதிப்புள்ள நவீன ஆயுதங்களையும், ரேடார் கருவிகளையும் வழங்கியுள்ளது. இது போதாதென்று இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சியும் அளித்தது. இப்பொழுது இலங்கைக்கே சென்று ராணுவப் பயிற்சி அளிக்கிறது. இவ்வளவும் போதாதென்று ஐநூறு கோடி ரூபாய் கடன் உதவியும் சமீபத்தில் அளித்துள்ளது. இத்துடன் முடியவில்லை. சென்ற வாரத்தில் இந்திய & இலங்கை அரசுகள் இடையே, ‘‘இந்திய & இலங்கை தகவல் தொடர்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்’’ என்ற ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2013 வரை அமலில் இருக்குமாம்.

இந்த ஒப்பந்தம் ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை முற்றிலும் கேள்விக்குரியதாக்கும் ஒன்று. இதன் மூலம் இந்திய அரசின் செயற்கைக் கோள்கள் மூலம் தமிழர்கள் எங்கெங்கு வசிக்கிறார்கள் என்ற துல்லியமான தகவல்கள் உட்பட அனைத்துத் தகவல்களும் சிங்கள ராணுவம் பெற முடியும். இதன் மூலம் சிங்கள ராணுவம் தனது தாக்குதலைத் திட்டமிடவும் தமிழர் பகுதிகளில் துல்லியமாக குண்டுகளை வீசவும், உதவிகரமாக அமையும். இது ஈழ விடுதலைப் போரில் மிகப் பெரிய உதவியாக சிங்கள ராணுவத்துக்கு அமையும்.

மொத்தத்தில் இந்திய ராணுவம் இன்னும் பகிரங்கமாக நேரடியாக களத்தில் குதிக்கவில்லை. மற்றபடி அனைத்து வகைகளிலும் ஈழத் தமிழரை பூண்டோடு அழிப்பதற்கு உதவி செய்கிறது. இந்தியாவில் நடைபெறும் தொடர் குண்டு வெடிப்புகளில் இருந்து தனது மக்களைப் பாதுகாக்க முடியாத இந்திய அரசு, இந்திய மக்கள் பசி, பட்டினியால் வாடித் தவிக்கையில் அவர்களைக் காப்பாற்ற முடியாத இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஐநூறு கோடி கடன் உதவியும் நவீன ஆயுதங்களும் வழங்குகிறது. இலங்கை இறையாண்மையின் மீது அதிக அக்கறைப்பட்டு ஈழத் தமிழர்களைக் கொல்லும் சிங்கள அரசுக்கு பக்க பலமாக இருக்கிறது. கடைசித் தமிழன் வரை சென்று விட்டால் இலங்கை ‘இறையாண்மை’ பாதுகாக்கப்படும் அல்லவா அதுதான் இத்தகைய உதவி.

இந்திய அரசின் உதவியுடன் இலங்கையினால் திட்டமிட்ட தமிழ் இனப் படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாட்டிலோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முணுமுணுப்புகளை தவிர, சிறு சிறு சலசலப்புக்களைத் தவிர கனத்த மௌனம் நிலவுகிறது. மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்துக் கொண்டு, ஈழத்தமிழர் பிரச்னையில், ‘மத்திய அரசின் அணுகு முறையே, தி.மு.க.வின் நிலைப்பாடு’ என்று கூறி மத்திய அரசு செய்த அனைத்து உதவிகளையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க., ஈழத் தமிழர்களைக் கொல்வதுதான் மத்திய அரசின் அணுகுமுறை என்று ஊருக்கும் உலகுக்கும் வெளிச்சமான பின்பு கலைஞர் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் போட்டு எம்.எல்.ஏ., பதவியை ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா செய்த பழைய பெருமையைப் பேசுகிறார். அனைவரும் தந்தி அடியுங்கள் என்கிறார். இப்பொழுது இறுதியாக அனைத்துக் கட்சி கூட்டம் என்று போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார்.

எப்பொழுதும் ஈழத்தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஜெயலலிதா இந்த விஷயத்தில் கலைஞர் மெத்தனம் காட்டியதால் மக்களிடையே திமுக எதிர்ப்பு அதிகரிக்கவே அதனை ஓட்டுக்களாக அறுவடை செய்யும் வண்ணம் ஈழத் தமிழர் ஆதரவு அறிக்கை வெளியிட்டார். ஆனால் அறிக்கையின் மை காயும் முன்னர் மறுநாள் மீண்டும் வழக்கமான பாணியில் வன்முறைக் கலாச்சாரம், ஈழத் தமிழர் நலன் என்று மற்றொரு வளவளா அறிக்கை வெளியிட்டு தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார். ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதாவின் அக்கறை என்பது திமுக எதிர்ப்பு என்பதாகவே இருக்கிறது. உண்மையான அக்கறை துளியும் கிடையாது. பா.ம.க.வோ மத்திய அரசின் மனம் கோணாமல் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிக்கிறது. பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரசாரோ சோனியாவே மறந்து போன விஷயத்தை இன்னும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

இவ்வாறு ஈழத் தமிழர் பிரச்னையை கட்சிகள் தங்கள் நலனுக்குத் தகுந்த மாதிரி ஆளுக்கொரு நிலைப்பாடு வைத்துள்ளன. அதற்கு ஏற்ற மாதிரி வெற்றுக் கொஷங்களை எழுப்புகின்றன. ஆனால் அங்கு சிங்கள அரசோ ‘கருமமே கண்ணாக’ இந்தியாவின் உதவியுடன் தமிழர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர் நலனைப் பாதுகாக்கும் இந்தப் பிரச்சனையில் மற்ற எவரையும் விட மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மற்ற கட்சிகளால் அறிக்கை விடுவதைத் தவிரவும், ஆலோசனை வழங்குவதைத் தவிரவும் வேறு எதுவும் செய்ய முடியாது. ஈழப் போராட்டம் முக்கியமான கட்டத்தில் இருக்கையில் அத்தகைய போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதில் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசின் ஆயுதங்களும் தொழில்நுட்ப உதவியும் பண உதவியுமே முக்கியப் பங்காற்றுகின்றன. திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசே இந்த பணியைச் செய்கிறது. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.

திமுக தனது செல்வாக்கை பயன்படுத்தி சிங்கள அரசுக்கு மத்திய அரசு செய்து வரும் அனைத்து உதவிகளைத் தடுத்து நிறுத்துவதும் துயரப்படும் தமிழ் மக்களுக்குத் தேவைப்படும் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புவதுமே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் தலையாய உதவி.

மற்றதை அங்குள்ள போராளிகள் பார்த்துக் கொள்வார்கள். அவ்வாறில்லாமல் தந்தி அடிப்பதும், கூட்டம் போட்டு பேசுவதும் பழம் பெருமையைப் பேசுவதும், எதற்கும் உதவாது. நம் தமிழ் இனம் கண் முன்னே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய சூழலில் இத்தகைய பணியைச் செய்யத் தவறிவிட்டால் தீராப்பழியை ஆட்சியில் இருப்போர் என்றும் சுமக்க வேண்டி வரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com