Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
நவம்பர் - டிசம்பர் 2006
தெய்வக் குத்தம்

வே. மதிமாறன்

கனவில்
அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.

நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.

அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.

கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல் போல் நிற்பவன்
கணவனா என்றாள்.

புரியவில்லையே என்றேன்.
தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா
யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்

குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகிக் கேட்டேன்.

தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக் கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்...
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.

பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்துகொள்
அவமானம் புரியும் என்றாள்.

சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன் - மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ... இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?
உக்கிரமாகிப் போனாள் காமாட்சி.
கோபத்தோடே தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக, அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமா? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப்போல் போனாள்
காஞ்சி காமாட்சி.


தலித் முரசு இதழில் வெளியான கவிதை, சமீபத்தில் சபரிமலை அய்யப்பன் பெண்களுக்கு எதிராக எடுத்த அவதாரத்தை முன்னிட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள் என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும், கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள். பெண்கள் (பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)

நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத் தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள். உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும், என பெண்களுக்கு ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.

ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை. உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க, அய்யர், அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா?

நாடாள முடிகின்ற பெண்ணால் --- அர்ச்சகராக முடியாதா? சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?

பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது பக்தியினால் அல்ல.
சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள் மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல.
நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்

கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுய மரியாதை

அதிகாரத்தை விடவும் சுயமரியாதை முக்கியம் அல்லவா!?

தீட்டு என்று காரணம் சொல்லி பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர். தந்தை பெரியார் கேட்டார்.

மலம் கழித்து விட்டு கோவிலுக்குள் வரலாம்.

மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு!?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com