Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
நவம்பர் - டிசம்பர் 2006
வகுப்பறையில் இட ஒதுக்கீடு
ஆசிரியர்க்கு 50%, மாணவர்க்கு 50%

ச.மாடசாமி

ஒரு கூட்டம் கூடியதுமே “இது ஓர் இயக்கம்” என்ற கர்ச்சனை கிளம்பி விடுகிறது. இயக்கம் என்பதைக் கூட்டம் என்று புரிந்து கொள்வது பொது இயல்பு. இயக்கம் என்பதற்கு மேலும் பல பொருள்கள் உண்டு.
மிக முக்கியமாக “நகர்வது” என்ற பொருள் அதற்கு இருக்கிறது. (இயங்குவது என்ற பொருளில் இருந்து இது சற்று வேறுபட்டது)

நகர்வு - யாரிடமிருந்து யாரை நோக்கி? இந்தக் கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்வியின் தொடர்ச்சிதான் கூட்டமா? இயக்கமா? என்பதுவும்.

உதாரணங்களின் மூலம் விளக்கப் பார்ப்போம். மத்திய வர்க்க, உயர்மத்திய வர்க்க ஆண் அறிவாளிகளின் மூளையில் உதித்த சில அமைப்புகள் பெண்கள் இயக்கம் என்ற பெயரைப் பெற்றதுண்டு. தொடக்கம் இப்படி அமைவதில் தவறில்லை. மெல்ல மெல்ல ஆண் அறிவாளிகளின் கையில் இருந்து இயக்கத்தின் கருப்பொருள் உருவாக்கம் பங்கேற்கும் பெண்கள் கைக்கு நகர்ந்தால்தானே அது இயக்கம்! பெண்களைத் திரட்டுவதால் மட்டும் பெண்கள் இயக்கமா?

அறிவொளி இயக்கம் மிகப் பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அறிவொளி இயக்கத்திற்கான கருப்பொருள் - அறிவாளிகள் மூளையில் உதித்ததுதான். கற்கும் பொருள்கள் (Learning Materials) அனைத்தும் படிப்பாளிகளால் உருவாக்கப்பட்டவை. மத்திய வர்க்கத்தின் புழக்கத்தில் இருந்த வார்த்தைகளை எடுத்து, எடுத்துத் தயாரிக்கப்பட்ட முதனூல்களோடு (Primers) அறிவொளியில் பாடம் தொடங்கப்பட்டது.
இப்படித்தான் தொடங்க முடியும் - அரைகுறையாக, அவசர கோலமாக தொடக்கம்தான் முக்கியம்; முழுமையாக இருப்பது அல்ல. மக்களோடு அமர்ந்து மக்கள் பேசும் வார்த்தைகளைக் கண்டுபிடித்துத் தொகுத்து, கற்கும் நூல்களை உருவாக்குவதற்கான பொறுமையும், அவகாசமும், தெளிவும் தொடக்கத்தில் இல்லை.

ஆனால் அறிவொளியில் நகர்வு இருந்தது. படிப்பாளிகள் தயாரித்த பாடப் புத்தகச் சுமை தாங்காமல், அறிவொளி மையங்கள் நொறுங்கிய போது தெளிவு பிறந்தது. மக்கள் சொன்ன கதைகள், விடுகதைகள், சொலவடைகள் ஆகியவற்றைச் சேகரித்துப் பாடப் புத்தகமாக்கி மீண்டும் மக்களை அழைத்து அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த முடிந்தது. அறிவொளிப் பாடநூல்களின் மொழி கூட படிப்படியாக மாற்றம் அடைந்தது. கருப் பொருள் உருவாக்கத்தில், கற்போரின் பங்கு பெறுவது முன்னெப்போதும் நிகழ்ந்திராத மகத்தான நகர்வு அல்லவா? அறிவொளி மையத்தில் கற்பித்தலும் இருபக்க உரையாடலாகவே நடந்தது.
கற்போர் - கற்பிப்போருக்கு இடையிலான நெருக்கம் நம் வகுப்பறைகளில் காணமுடியாத அரிய காட்சி.
ஆசிரியத் தன்மை குறைந்த வகுப்பறைகளாக அறிவொளி மையங்கள் திகழ்ந்தன.

ஆசிரியத் தன்மை மிகுந்த - குமட்டுமளவுக்கு மிகுந்திருக்கிற - நம் வகுப்பறைக்கு வருவோம். பாடப் புத்தக உருவாக்கத்தில் (syllabus) மாணவர் பங்கேற்பு பற்றிக் கனவு கூட காணமுடியாத நிலை இருக்கிறது. அறிவு பெறுவதில் மாணவனுக்கு உரிமையும் சுதந்திரமும் மிகக் குறைவாக உள்ள இடம் என்று பாடத்திட்டம் பற்றிக் கருத்து தெரிவிப்பார் கல்வியாளர் கிருஷ்ணகுமார். சிலபஸ் எங்கெங்கிருந்தோ வருகிறது. சில நேரங்களில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து கூட பாடம் - பாடத்திட்டம் பற்றி மாணவர்களின் கருத்தறிதல் Feed back நடைமுறையில் கிடையாது. பாடப்புத்தகங்களை (Text books) வைப்பதில் உள்ள போட்டா போட்டி - வர்த்தக அணுகுமுறை குறித்து மாணவர்கள் அறியாமல் இல்லை.

வகுப்பறைச் செயல்பாட்டிலும் இன்னும் மாணவனை நோக்கிய நகர்வு தோன்றவில்லை. (விதிவிலக்கான வகுப்பறைகள் நிச்சயம் இருக்கின்றன). பாடப் பகுதிகளை வாசிக்க எழுப்பி விடுவது, கேள்வி கேட்டுப் பதில் சொல்ல எழுப்பி விடுவது, பாதிக் கணக்கை எழுதிப் போட்டு மீதிக் கணக்கை முடிக்க மாணவனை போர்டுக்கு அழைப்பது - போன்றவை எல்லாம் நகர்வின் அடையாளம் அல்ல. பாடத்தைக் கவனிக்கிறானா? என்று கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் துப்பறியும் வேலைகளை மாணவரை நோக்கிய நகர்வாகக் கொள்ள முடியாது. கொண்டு வந்த சரக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே காலியாகிவிட மீதி நேரத்தை ஓட்ட இன்னைக்குப் பேப்பர் படிச்சீங்களா? என்று கேட்டு ஒரு சத்தற்ற உரையாடலுக்குள் இறங்குவதும் மாணவனை நோக்கிய நகர்வு ஆகாது.

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல், சமூக, கலைத் துறைகளில் பெரிய மாற்றங்கள் உருவான காலமாக எழுபதுகளைச் சொல்கிறார்கள். கல்விக்கும் கூட இது பொருந்தும். அறுபதுகளின் இறுதியில் இருந்து தமிழகத்தில் புதிய கல்லூரிகள் தோன்ற ஆரம்பித்தன. எழுபதுகளின் தொடக்கத்தில் இதன் வேகம் அதிகரித்தது.
பெரிய நகரங்களின் வசம் இருந்த உயர்கல்வி சிறு நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்தது. 1970-இல் அருப்புக் கோட்டையில் மட்டும் இரு கலைக் கல்லூரிகள்.

பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நுழைவுக்காகக் கல்விக்கூட வாசல்கள் பளிச்சென்று திறந்து கொண்டன. ஆசிரியர்களும், மாணவர்களும் சாதாரண வீடுகளில் இருந்து வந்தார்கள். பலர், முதன்முறையாக விவசாயக் குடும்பங்களில் இருந்து!

1953-இல் மதுரையில் உள்ள பெரிய கல்லூரி ஒன்றில் இண்டர்மீடியட் பயின்ற ஒரு பெரியவர் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் சொன்னார்.

“நான் படிக்கிறப்ப ஆசிரியர்கள் எல்லாம் கோட்டும் சூட்டும் போட்டிருப்பார்கள். அல்லது வேட்டி கட்டி டர்பன் அணிந்திருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் உயர் சாதியினர். சிலர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆங்கிலோ இந்திய ஆசிரியர்களும் இருந்தார்கள். ஆசிரியர்களை நெருங்கவே பயமாக இருக்கும். இடைவெளி அதிகமாக இருக்கும். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள் அல்லது பணக்கார வீட்டுப் பையன்கள்தான் ஆசிரியர்களிடம் கிட்டப் போய்ப் பேசுவார்கள். அதுவும் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில்!”

அறுபதுகளிலேயே மாற்றங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. கிராமங்களில் இருந்து ஆசிரியராகவும் மாணவராகவும் வருவோர் கணிசமாக அதிகரித்தனர். எழுபதுகளிலோ - மேல்தட்டு வர்க்க ஆதிக்கம் வகப்பறைகளில் தகர்க்கப்பட்டு விட்டதைப் போலத் தெரிந்தது.

இப்போது - கற்போரும் எளிய குடும்பத்தில் இருந்து; கற்பிப்போரும் எளிய குடும்பத்தில் இருந்து செயற்கையாய் வரையப்பட்ட இடைவெளிக் கோடுகள் நீங்கி சகஜத்தன்மை வளர வேண்டிய காலம் இது. மேதைமை, நிபுணத்துவம், ஆசிரியத்தன்மை - இவை குறைந்து, தேடல், கூட்டு முயற்சி, மாணவத்தன்மை வகுப்பறையில் கூடியிருக்க வேண்டிய காலம். நடந்தது என்ன?

நான் பணியேற்றது 1971 இல். அறுபதுகளில் ஆசிரியரான என் கிராமத்து அண்ணன்மார்கள் ஏற்கனவே அங்கிருந்தனர். என் முதல் வகுப்பு - நான் பதற்றத்தோடும், ஆர்வத்தோடும் நீண்ட நேரம் உட்கார்ந்து தயாரித்த வகுப்பு. வகுப்பில் இடையிடையே மாணவரின் கைதட்டல். உற்சாகம், கேலி, வரவேற்பு எல்லாம் கலந்த கைதட்டல். வகுப்பை முடித்தபோது மனம் நிறைந்திருந்தது. ஆனால் உடனடியாக நான் விசாரணைக்குட்பட்டேன். கைதட்டல் ஒழுங்குக்கு விரோதமானதாம். அறுபது அண்ணன் ஒருவர் கரிசனத்துடன் எனக்குப் புத்திமதி வழங்கினார். “மாணவர்களிடம் இருந்து விலகியிரு! எழுபதில் பணியேற்றோருக்குக் கிடைத்த பூர்வீகச் சொத்து” keep distance

1977இல் மூட்டா ஆசிரியர் இயக்கம் தேர்வுப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியது. கல்லூரி ஆசிரியர்கள் முதன் முறையாகச் சிறை சென்றனர். இப்போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்றார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் சிறையிலிருந்தபடியே மாணவர் பங்கேற்பை ஆர்வமாகக் கவனித்தார்கள். மாணவர்கள் கேள்வி, விடைத்தாள்களைக் கிழித்தெறிந்தார்கள். 17 மாணவர்கள் கைதாகி மதுரை சிறைக்குள்ளும் வந்தார்கள்.
ஆசிரியர்களுக்கு உயர்வகுப்புச் சாப்பாடு; மாணவர்களுக்கு சாதாக் கைதிகளுக்கான சாப்பாடு. ஆசிரியர்கள் மிக்க தோழமையுடன் தங்கள் சாப்பாடுகளை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள். ஆசிரியர் மாணவர் உறவில் புதிய அர்த்தம் கொண்டு வந்த சிறைவாசம் அது. அன்று தொடங்கி இன்று வரை ஆசிரியர் மாணவர் உறவு குறித்த சிந்தனைகள் மெருகேறி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.

இருப்பினும், கிளர்ந்து வரும் இச் சிந்தனைப் போக்குகள், வகுப்பறைக்குள் பெரிய மாற்றங்களை உண்டு பண்ணவில்லை என்ற துரதிர்ஷ்டமான நிலையையும் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். இடைவெளி தொடர்கிறது. அதற்குக் கண்முன்னே தினசரி நாம் காணும் வகுப்பறைகளே சாட்சி. காரணம் என்ன?
சிறைச்சாலையிலே, கருத்தரங்குகளிலே விட்டு விலகும் ஆசிரியப் பிரக்ஞை வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஒட்டிக் கொள்கிறது. வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதைதான்.

70-இல் நுழைந்தவர்கள் 2000-ல் வெளியேறுகிறார்கள். வெளியேறுமுன் வகுப்பறையில் அவர்கள் கொண்டு வந்த மாற்றம் என்ன? தொடரும் ஆசிரியர்களுக்கு அவர்கள் விட்டுப் போகும் செய்தி என்ன?

முன்னோர்களின் பாதைதான் இவர்களின் பாதையும். இவர்கள் எளிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் காலத்தில் தொழிற் சங்கம் வந்துவிட்டது. இவர்கள் போராட்டங்களில் பங்கேற்று சிறைசென்றதும் மீண்டுவிட்டார்கள். இருப்பினும் மாணவனை நோக்கி நகராத வகுப்பறையைத்தான் இவர்களும் தந்தார்கள். எழுபதின் ஏமாற்றம் மிகப்பெரிய ஏமாற்றம்!

தியாகராஜன் கடும் உழைப்பாளி. திடகாத்திரமான உடம்பு. சிறு வயதில் கபடி வீரர். வகுப்பறைக்குள்ளிருந்து வெளியேறும் போது வியர்வையில் நனைந்து வருவார். அக்கறையுள்ளவர். மாணவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தன்னைக் கடுமையாக வதைத்துக் கொள்வார். திரும்பத் திரும்பக் கத்திப் பாடம் நடத்துவார். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கி இது ஐந்தாவது நாள்.

“சள்ளையா வருது!” என்கிறார் தியாகராஜன். வாயத் தெறப்பனாங்கிறான்ங்கே! என்று குமுறுகிறார்.

அவருக்கென்று ஒரு பாணி உண்டு. முதல் நாள் நுழைந்ததும் பெயர், படித்த பள்ளிக்கூடம், பிளஸ் டூவில் வாங்கிய மார்க் போன்ற விவரங்களைக் கேட்பார். இடையிடையே கேள்விகளை எழுப்பிப் பதிலைத் தெளிவுபடுத்திக் கொள்வார். இதற்கு இருபது நிமிடம் ஆகும். பிறகு அந்த செமஸ்டரின் சிலபஸ் எழுதிப் போடுவார். ம்! Take down பேசிக்கொண்டே எழுதுவார். பாடத்தின் உள்பிரிவுகளையும் எழுதிப் போடுவார். இது முதல் நாளில் முடியாது. மறுநாளும் தொடரும். எழுதி முடித்ததும் மாணவர்களை வரிசையாக எழுந்து சிலபஸின் பகுதிகளை வாசிக்கச் சொல்வார். உச்சரிப்பைத் திருத்துவார். நேற்று ஒரு பேப்பர், இன்றைக்கு ஒரு பேப்பரில் சிலபஸ் எழுதுகிறவனை எச்சரிப்பார் மொதல்லயே சொல்லீட்டேன். கரெக்டா இருந்துக்கங்க. ஏமாத்த நெனைக்காதீங்க. அப்புறம் வாங்கிக் கட்டுவீங்க! வேணுன்னா உங்க சீனியர் கிட்ட என்னைப் பத்திக் கேட்டுப் பாத்துக்கங்க!

மூன்றாவது நாள் பாடம் தொடங்கிவிடும். புரிஞ்சுச்சா! புரிஞ்சுச்சா! என்ற சத்தம், கல்லூரி முழுக்க ஒலித்து மற்ற வகுப்பு ஆசிரியர்களை உச்சூ! கொட்ட வைக்கும். கடைசி 10 நிமிடம் கேள்விகள் தெரியலையா?
“தெரியலைன்னா அப்பவே கேக்க வேண்டியதுதானே! வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்த?”

நாலாவது நாள் நடத்துன பாடத்தில டெஸ்ட். என்ன வேலையிருந்தாலும், ஐந்தாவது நாள் பேப்பரைத் திருத்திக் கொண்டு வந்து விடுவார். குட்! போதாது! இப்படியே போனா உருப்பட மாட்டே! என்ற அபிப்பிராயங்கள் மாறி மாறி உதிரும்.

இது ஐந்தாவது நாள் மாலை. தியாகராஜன் சலிப்பாக இருக்கிறார். இதுக்கு மேல நான் என்ன செய்ய? என்று கேட்கிறார். தியாகராஜனை மாற்றுவது கடினம். ஒரு சாட்டிலைட் டவுனை உருவாக்குவது போலக் கடினம்.

தான் சொன்னபடி கேட்டால் - தான் சொன்னபடி நடந்தால் மாணவன் உருப்படுவான் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கை.

வகுப்பறையில் மாணவனுக்குரிய இடத்தை அவர் உணரவும் இல்லை; கொடுக்கவும் இல்லை.

கல்வி மாணவனிடமிருந்து தொடங்குகிறது; ஆசிரியரிடம் இருந்து அல்ல.

மாணவர்களுக்குக் கற்பிப்பதைவிட அவர்கள் தம்மைத்தாமே கண்டுபிடித்துக் கொள்ள உதவுவதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி.

ஆசிரியரின் தலையீடு இன்றி, தங்கள் செயல்பாடுகளைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடிய சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

-என்று கல்வியாளர்கள் சொன்னதையெல்லாம் அவரோடு ஒருநாளும் உட்கார்ந்து பகிர்ந்து கொள்ள முடிந்ததில்லை. பாதி கேட்கையிலேயே, சார்! இருங்க! நான் சொல்றத கேளுங்க! எங்க குடும்பம் அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம் சார்! நான் எல்லாம் காலேஜ் லெக்சரர் ஆவேன்னு நௌச்சுக் கூடப் பாக்கல! நான் இந்த நிலைக்கு வந்திருக்கேன்னா... என்று பேச ஆரம்பிப்பார். பலமுறை அவர் வரலாற்றைக் கூறிவிட்டார்.
உணர்வுப் பூர்வமாகத்தான் பேசுகிறார். ஆனால் மிரண்டு கிடக்கும் மாணவர் கூட்டத்துக்கு, அவர் பேச்சில் இருந்து ஒரு தீர்வும் இல்லை!

கல்வியாளர் எவரெஸ்ட் ரெய்மர் (Everest W Reimer) எழுதிய நூலின் பெயர் ‘School is dead’ வகுப்பறை வழங்கும் அறிவில் இருந்து ஏராளமானோர் விடுபட்டு - அன்னியப்பட்டு - அதன் காரணமாகக் கல்விக் கூடங்களும் சமூகமும் நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், ரெய்மரின் கோபம் இயல்பானதுதான்!

முற்றிலும் நம்பிக்கையை இழப்பதற்கில்லை. இழப்பதால் பயனும் இல்லை. ஆசிரியர்களின் தனிச் சிறப்பு - அவர்கள் சிறந்த ரசிகர்கள். ஆசிரியர்கள் கண்டு ரசிக்கும் அளவுக்கு வளர்ந்த பிள்ளைகளைக் குடும்பங்களும் ரசிப்பதில்லை. ஆசிரியர்களின் ரசிப்புத்தன்மை தான், இளைய தலைமுறைக்கு உரமாக இருந்து வருகிறது. ரசிக்கிறவர்கள்தான் உருவாக்குகிறார்கள். தன்னைப் பிறர் ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் உருவாக்குவதில்லை.

ஆனால், ஆசிரியர்களும் தொடர்ந்து கற்க வேண்டும். தன் பணி தேங்கி நாறும் போது, சுயவிமர்சனத்துடன் மாறுதலைத் தேட வேண்டும். விமர்சன அறிவு (Critical Thinking) சீறிப்பாய வேண்டிய கல்லூரி வகுப்பறையை, தியாகராஜன் தொடங்குவது போல் தொடங்கக் கூடாது.

ஆசிரியர்களையே எதிர்பார்த்து எதிர்பார்த்து மாணவர்கள் கல்வியைத் தொடரப் பழக்கியாயிற்று. விடமுடியாத ஒரு கெட்ட பழக்கமாக அது பிடித்துக் கொண்டிருக்கிறது.

மாணவனிலிருந்து கல்வியைத் தொடங்குவதற்கும், மாணவர்களை ஒருங்கிணைத்து வகுப்பறையை நகர்த்துவதற்கும் ஆசிரியர் இப்போது தினசரி வகுப்புக்கு வருவதைப் போல வந்தால் முடியுமா? நிறைய தயாரிப்பு தேவை. கற்பனை வளம் தேவை. புதுப் புதுப் பரிசோதனைகள் தேவை. இதெல்லாம் பாடம் நடத்துவதை விடக் கடினம் அல்லவா?

ஆசிரியரையும் மாணவரையும் அவரவரின் சௌகர்ய உலகில் இருந்து மீட்க வேண்டும். பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாலோ பிரேயர் சொன்ன தீர்வு யோசிக்க வைக்கிறது.

ஒரு புதிய குழுவுடன் வேலை செய்யும் போது அந்தக் குழுவுடன் வேலை செய்யும் போது அந்தக் குழு நம் வார்த்தைகளைப் பெரிதும் எதிர்பார்க்கும் பட்சத்தில் 50% ஆசிரியர் 50% மாணவர் என்ற விகிதத்தில் நம் பணியைத் தொடங்குவது நல்லது! “(when we start working with a new group, if we find that they are expecting much more our word, it is better to start 50% as teachers and 50% as students - Reading and writing Realitg)”

இந்த 50% இட ஒதுக்கீடு மாணவர்கள் புதியவர்களாய் இருக்கும் போதுதான். பழகப் பழக அவர்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்.

நீங்களே தொடங்குங்கள்! ஆனால் உங்களுக்கு இடம் 50%தான். மீதம் மாணவர்களுக்கு. செக்கு மாட்டு வாழ்க்கையில் இருந்து விலகி மூளையைக் கசக்கிப் பிழிந்தால், மாணவனுக்குரிய 50% இடத்தை அற்புதமாகச் செதுக்கித் தர முடியும். வகுப்பறையில் நகர்வு தோன்றுவது சிறு புரட்சிக்குச் சமம். தியாகராஜன் சார்! ஒப்புக் கொள்வீர்களா?....

விவாதிப்போம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com