Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே 2007
ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
ச.தமிழ்ச்செல்வன்

ஆண்கள் சமைப்பது இனிது. இந்த நூலில் இடம் பெற்ற பகுதியே நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருப்பதால் அதனையே வெளியிடுகிறோம். பக்கங்கள் 108, விலை ரூ.45/, வெளியீடு: வாசல் பதிப்பகம், 40டி/4, முதல் தெரு, வசந்த நகர், மதுரை 625 003.

சொல்லித் தெரிவதில்லை சமையற்கலை என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. சொல்லி சொல்லித் தான் பாட்டியிடமிருந்து அம்மாவுக்கும், அம்மாவிடமிருந்து மகளுக்கும் என தலைமுறை தாண்டி வந்து கொண்டிருக்கிறது சமையற்கலை ரகசியம்.

வாய்வழியாகப் பரவிவரும் இக்கலை அடுப்புப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காத ஆண்களாகிய நமக்குச் "சொல்ல'ப்படவில்லை. ஆகவே நமக்கு சமைக்கத் தெரியவில்லை. நமக்கு மட்டுமல்ல. இன்று பெண்களும் பள்ளிக்கூடம், கல்லூரிக்குப் போய் படிக்கலாம் என்ற மாற்றம் நம் சமூகத்தில் ஏற்பட்டு விட்டதால் படிக்கிற காலத்தில் சமையல் கற்றுக் கொள்ள பெண்களுக்கும் வாய்ப்பு குறைந்து விட்டது.

வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டுத் தான் கல்லூரிக்கு கிளம்ப முடியும் என்கிற நிலையில் உள்ள பெண்கள் இன்றும் ஏராளமாக உள்ளனர். அது தனிக்கதை. கல்யாணத்துக்குப் பிறகு எப்பேர்ப்பட்ட படிப்பாளியாகஅறிவாளியாக அதிகாரியாக இருந்தாலும் புருசனுக்குச் சோறாக்கிப் போட வேண்டிய கடமை பெண்ணுக்கு உரியதாகிவிடுவதால் ஏதாவது சமையல் குறிப்பு கிடைக்காதா என்று பெண்களும் புத்தகங்களைத் தேட வேண்டிய அவசியம், விற்பனையாகும் புத்தகங்களாக சமையற்கலை நூல்களே அமைகின்றன.

பெண்கள் இப்புத்தகங்களைத் தேடுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம், தினசரி அதே சாம்பார் அதே ரசம் என்றால் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் சாப்பாடே சலிப்பாகி விடுகிறது. புதுப்புது "வெரைட்டி'கள் தேவைப்படுகிறது. அதைத்தேடியும் பெண்கள் இப்புததகங்களை நாடவேண்டியிருக்கிறது. தன் கைச் சமையல் குறித்த பெருமிதம் குறைந்து விடாமலிருக்க பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் இது ஒன்றாகவும் அமைகிறது.

இன்று கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மனைவியின் சம்பளம் வேண்டும் என்றால் கணவனும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. ரெண்டு பேரும் சேர்ந்து அடுப்படியில் நின்றால் தான் "டயத்துக்கு' பிள்ளைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட்டு இருவரும் அவரவர் வேலைத் தளங்களுக்குப் போய்ச்சேர முடியும். இப்படி நிர்பந்தம் காரணமாக நிறைய ஆண்கள் இன்று அடுப்படிக்கு வரத் தொடங்கியுள்ளனர். நம் தந்தையர் காலம் போல காலையில் பேப்பர் படித்தபடி ஏண்டி... இன்னொரு கப் காப்பி கொண்டா.. என்று காலாட்டிக் கொண்டிருக்க முடியாது.

இது தவிர ஒரு சிறு எண்ணிக்கையில் மனைவியை அகாலத்தில் இழந்துவிட்ட ஆண்கள் சிலரும் குழந்தைகளுக்காகவும் தனக்காகவும் சமைக்க வேண்டியுள்ளது. வயதான பெரிசுகள் சிலர் மருமகள் கஞ்சி ஊத்தவில்லை, மனைவியும் காலமாகிவிட்டாள். ஆகையால் நானே சமைத்துச் சாப்பிடுகிறேன் என்று புலம்பலுடன் சமைக்க வருவதுண்டு. அப்புறம் இருக்கவே இருக்கிறது. கல்யாணமாகாத, ஆனால், வெளியூரில் வேலை பார்க்கிற நம்ம இளைஞர் பட்டாளம். கொஞ்ச நாள் கண்டபடி ஹோட்டல்மெஸ் என்று அலைந்து வயிறு ரிப்பேரான பிறகு தனியாகவே ரெண்டு மூணு பேர் சேர்ந்தோ ரூமில் சமைத்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

குறைந்த சம்பளத்துக்கு தூர தேசங்களில் போய் மாட்டிக் கொள்ளும் இளைஞர்களும் வரவுக்குள் வயிற்றை நிரப்ப அறைகளில் சமைத்தே ஆக வேண்டும். இவர்களில் வெகுசிலர் கல்யாணத்துக்கு பிறகும் சமைப்பதை இயல்பாகத் தொடர்வதுண்டு. ஆனால பெருவாரி கல்யாணம் எப்போடா ஆகும் என காத்திருந்து “ஏண்டி... காப்பி கொண்டா..'' வகையறாவில் அடக்கமாகி விடுவார்கள்.

இன்னொரு பக்கம் சமைப்பது ஆண்பெண் இருவருக்கும் பொதுவான கடமைதான் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சமைக்க வந்துள்ள ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும் பெருகி வருகிறார்கள். இவர்கள் தங்கள் மனைவிமார் வேலை பார்க்கிறவர்களாக இருந்தாலும் வீட்டு மனைவியாக இருந்தாலும் சமைப்பார்கள்வீட்டு வேலைகளில் பங்கேற்பார்கள்.
ஆக கட்டாயத்தின் பேரிலோ மனம் ஒப்பியோ ஒப்பாமலோ பல ஆண்கள் இன்று சமைக்க வந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் நடந்துள்ள மிக முக்கியமான வரவேற்க வேண்டியது மாற்றம் இது.

ஆகவே சமையல் குறிப்புகள் இன்று இருபாலாருக்கும் தேவைப்படுகின்றன. ஆனால் வந்து கொண்டிருக்கும் சமையல் புத்தகங்கள் எல்லாமே "வாணலியை அடுப்பில் øவைக்கவும் சமையல் எண்ணெயை அதில் ஊற்றவும்'' என்கிற பாணியில் ஏற்கனவே சமைத்துக் கொண்டிருப்பவர்களை நோக்கியே பெண்களை நோக்கியே பேசுகின்றன. புதிய வரவுகளான ஆண்களின் "சமையல் அறியாமை' யைக் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று இல்லையே என்னும் வசை இன்று என்னால் கழிந்தது.

ஆதியிலிருந்தே மனிதர்கள் சமைக்கவில்லை என்பது நமக்குத்தெரியும். நமது முன்னோர்கள் காடுகளிலும், மலைகளிலும் இரை தேடி அலைந்தார்கள். கிடைத்ததில் உண்பதற்கு லாயக்கான எல்லாவற்றையும் ஆடு மாடுகளைப் போல அப்படியே சாப்பிட்டார்கள்.

உணவைப் பாதுகாக்கும் விஞ்ஞானத்தை அப்போது மனிதர்கள் கண்டு பிடித்திருக்கவில்லை. ஆகவே சாப்பிட முடிந்தவரை சாப்பிட்டு விட்டு மீதியை சக மனிதர்களுக்குப் பங்கு போட்டுக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லாவிட்டால் சேகரித்த உணவு அழுகிக் கெட்டுப் போய்விடும். இது அன்றைய மனிதர்கள் உணவைச் சமமாகப்பங்கிட்டுக் கொள்வதை ஒரு சமூகக் கடமையாக மாற்றியது மனிதர்கள் அன்று ஏராளமானவர்களாக இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய கற்காலத் துவக்கத்தில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் சேர்த்து மொத்தமே 250 பேர்தான் இருந்தார்கள். அவர்களும் 10 சிறு சிறு குழுக்களாக பிரிந்து வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தனர். இந்தியாவில் அதே காலகட்டத்தில் பத்து சதுர மைலுக்கு ஒரே ஒரு மனிதன் கணக்கில் தான் ஜனத்தொகை இருந்தது.

இருந்த அந்த மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் உணவு தேடி அலைவதிலேயே கழிந்தது. தங்கமான ருசிக்காக அவர்கள் காடுமேடெல்லாம் அலையவில்லை. அரை வயிறாவது நிறைய வேணுமே என்று அலைந்தார்கள்.

அதில் கிடைத்த உணவில் சில குறிப்பிட்ட உணவு வகையை அதாவது ஒரு மீன், ஒரு மிருகம் அல்லது ஒரு குறிப்பிட்ட கிழங்கு பழத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் உட்கொள்கிற பழக்கம் ஏற்பட்டது. இப்படி ஒரே உணவை உண்பவர்கள் அல்லது அதைத் தேடி அலைபவர்கள் ஒரு குழுவாக மாறத் தொடங்கினார்கள்.

ரத்த உறவினால் மட்டுமின்றித் தின்ற உணவின் அடிப்படையிலும் இனக்குழுக்கள் தோன்றின என்பார் வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பி. இந்த குறிப்பிட்ட உணவு ஒரு கட்டத்தில் குலச் சின்னமாகவும் மாறியது.

இயற்கையில் தானாக விளைந்து கிடக்கும் உண்ணத்தக்க எல்லாவற்றையும் அப்படியே உண்டுவிட முடியாதல்லவா. குறிப்பாக தானியங்கள் சில கிழங்குவகைகள், தண்டுகள் இவற்றை வேக வைக்காமல் அப்படியே சாப்பிட முடியாது. எனவே இவ்வகை உணவுப் பொருட்கள் தம்மைச் சுற்றி அபரிமிதமாக விளைந்து கிடந்தாலம் மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் நாள் வரும் வரை அவற்றை சும்மா வெறித்துப் பார்த்தபடி அதை மிதித்து நடந்தபடி வெகுகாலம் அதை உண்ணக் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்த இடத்தில் இந்தியாவில் மட்டும் சைவச்சாப்பாடு எப்படி வந்தது என்பது பற்றி ஒரு தகவலைப் பதிவு செய்து விடுவோம். அந்தக் காலத்தில் சைவம் அசைவம் என்ற வேறுபாடெல்லாம் மனிதர்களுக்குக் கிடையாது.

கிடைச்சதையெல்லாம் வெளுத்து வாங்கினாத்தான் அன்னன்னக்கி வயிறு நிறையும் என்கிற பதட்ட நிலை இருந்த போது, "நாங்கள்ளாம் சைவாள். வேட்டையாடிக் கொண்டு வந்த மட்டன், பீஃப் அயிட்டம் எல்லாம்தொடக்கூட மாட்டோம்' என்று எந்த இனக்குழுவும் அன்று வாயைத் திறந்து பேசியிருக்க முடியாது.

அசைவம் உண்ணாமல் உயிர் வாழ்ந்து விட முடியும் என்கிற அளவுக்கு பழம் காய், கிழங்கு வகைகள் கிடைத்தால் தானே சைவச சாப்பாடு பற்றி யோசிக்க முடியும்.

அந்த நிலை இந்தியாவில் இருந்தது. உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது இந்தியா மிக விரிந்த அகன்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவின் எல்லாத் தானிய வகைகளையும் சேர்த்தாலும் கூட ஐந்தாறு வகைக்கு மேல் தேறாது. பட்டாணி, பீன்ஸ் போன்ற தானிய வகைகளையும் சேர்த்தே.

ஆனால் இந்தியாவில் ஒரு மாகாணத்தில் விளையும் பழ, தானிய வகைகளின் எண்ணிக்கையே இதை விட அதிகம். உதாரணமாக சராசரி வளமுடைய மகாராஷ்டிரத்தில் மட்டுமே அரிசி, கோதுமை, சோளம், பார்லி மற்றும் பல்வேறு திணை வகைகள் உட்பட 40 வகையான உள்நாட்டில் பயன்படும் தானிய வகைகள் விளைகின்றன.

காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள், எள் போன்றவை தனி. ருசியும் வைட்டமின்களும் தரும் மிளகு போன்ற பொருட்களும் உண்டு. பால், மோர், வெண்ணெயும் கிடைக்கிறது.

ஆகவே இந்தியாவில் உயிர்க்கொலை செய்யாமலே சரிவிகித கலப்பு உணவு பெறுவது சாத்தியம் என்ற நிலை கற்காலத்திலேயே இருந்தது.

இந்த சாத்தியப்பாடுதான் இந்த பொருளியல் அடிப்படைதான், பிற்கால இந்தியாவில் கொல்லாமைபுலால் மறுப்பு போன்ற சமயம் சார்ந்த கோட்பாடுகள் உருவாக மூல காரணமாகும்.

எந்த ஞானி அல்லது யோகியின் சிந்தனையிலும் உதித்தது அல்ல சைவச் சாப்பாடு என்கிற கோட்பாடு.

அப்புறம் பிற்காலத்தில் யாகங்களின் மூலம் ஆடு மாடுகளை அழித்து வந்த பிராமண மதம் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பின் செல்வாக்கிழந்தது.

மேய்ச்சல் காலகட்டத்தை விட விவசாய காலத்தில் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு ஏற்பட அப்போது கொல்லாமையை வலியுறுத்திய சமணபௌத்த மதங்களின் பக்கம் மக்கள் சாய்ந்தனர்.

எனவே மீண்டும் அதிகாரத்துக்கு வரத்துடித்த பிராமண மதம் பௌத்தர்களையும் சமணர்களையும் விடக் கடுமையான சைவர்கள் நாங்கள் தான் என்று காட்டிக் கொண்டு சைவவைணமாக சைவச்சாப்பாட்டைத் தலையில் தூக்கிக் கொண்டு மக்களிடம் வந்தார்கள். சைவம் உயர்ந்தது என்கிற கருத்தை மக்களின் தலையில் தொடர்ந்து திணித்தார்கள்.

ஏற்கனவே காய்கறிகளும், பழங்களும் அபரிமிதமாகக் கிடைத்த இந்தியப் புவியியல் சூழலும் பிராமண மதத்தின் இந்தத் தேவையும் சேர்ந்து
வெஜிடேரியனுக்கு ஜே என்று வெற்றிக் கொடி நாட்டின.

இந்த நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாகத்தான் அசைவ உணவரிடத்தும் அடுக்குகள் பிறந்தன. அய்யர் அசைவம் தொட மாட்டார். ஆகவே அவரு ரொம்ப ஒசத்தி.

அடுத்து சில கறுப்பு சாதிகளும் அசைவத்தை ஒதுக்கி நாங்கள் அய்யக்கு அடுத்த ஆட்கள் என்றனர். சில சமயம் நாங்க அய்யரை விட ஒசத்தி என்று இவர்கள் சொல்வதும் உண்டு.

மிச்ச சாதியெல்லாம் கறி தின்னும் சாதிகள் தான். அதிலும் நாங்க மாட்டுக்கறி பன்றிக்கறியெல்லாம் தொடவே மாட்டோம். ஆகவே அதைத் தின்கிற மற்ற சாதியாரை விட நாங்க ஒசத்தித்தானே என்று சில சாதிகள் பிரிந்தன. கடைசியில் ஆதி உணவுப் பழக்கத்தை விடாமல் தொடர்கிற சாதிகள் தான் இருப்பதிலேயே அடிமட்டம் என்கிற நிலை ஆகிவிட்டது. உணவு சாதி அடையாளங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.

ஆனால் கோமாமிசம் தின்னும் மிலேச்சர்கள் என்று திட்டப்பட்ட ஆங்கிலேயர்களின் கால்களைக் கழுவித் தண்ணி குடிப்பதற்கு இந்த உயர் சைவச் சாப்பாட்டுச் சாதியார் போட்டிக்கு நின்றார்கள் என்பது சரித்திரத்தின் நகைச்சுவை.

வேதகால பிராமணர்கள் நாக்கில் எச்சில் ஒழுக மட்டன், பீஃப் சாப்பிட்டதைப் பற்றி ஆதாரங்களுடன் ஏராளமாக புத்தகங்கள் வந்துள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படித்துக் கொள்ளலாம்.

நம்மைப் பொறுத்தவரை சாப்பாட்டில் உயர்வு தாழ்வென்று ஏதும் இல்லை. பழக்கம் தான் காரணம். எந்த உணவையும் பழிப்பது சாதித் திமிர் அல்லாமல் வேறில்லை. அது நமக்குத் தேவையில்லை.

கிடைத்ததை அப்படியே தின்ற காலத்தில் சமையல் கிடையாது. அடுத்து வந்த வேட்டைக் காலத்தில் ஆரம்பத்தில் அப்படியே தின்று வர, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட நெருப்பு சமையலுக்கு வித்திட்டது. காட்டுத்தீயை மனிதன் ஏற்கனவே அறிந்திருந்தாலும் ஆரம்பத்தில் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை அறியாதிருந்தான்.

மனிதனுக்குக் கட்டுப்பட்ட நெருப்பு எப்போது வந்ததோ அப்போதிருந்துதான் மனிதகுல நாகரீகம் பாய்ச்சல் வேகம் பெற்றது. அதற்கு முன் வெயிலில் சூடாகியிருக்கும் பாறைகளில் போட்டு இறைச்சியை சுட்டுச் சாப்பிட்டிருக்கிறாள் (ன்).

நெருப்பை இஷ்டம் போல நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் தேவைப்படும் சைஸில் உண்டாக்கும் வித்தையை அறிந்த பிறகு தான் உணவை நெருப்பில் வைத்துச் சமைக்கும் யோசனை மனிதனுக்கு வந்திருக்க முடியும்.

துவக்கத்தில் மிருகத் தோலால் ஆன பாத்திரத்தை மண்பூசி நெருப்பில் (அடுப்பில்) வைத்துச் சூடுபண்ணிய மனிதர்கள் பின்னர் மண்பாண்டங்கள் செய்யக்கற்றுக் கொண்ட பிறகு முறையான சமையல் துவங்கியது.

ஆதியில் பெண்கள் தான் சமைத்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சேர்ந்து வேட்டையாடி சேர்ந்து தீ மூட்டி சேர்ந்து சமைத்துத்தான் சாப்பிட்டார்கள்.

வரலாற்றின் ஒரு கட்டத்தில் மேய்ச்சல் காலத்தில் தனிச் சொத்து என்பது உருவாகி ஆண் பெண் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியபிறகு தான் சமைப்பது பெண்ணின் வேலை என்றானது.

இன்னொரு பக்கம் பார்த்தால், நமக்கு இதுகாறும் சொல்லப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் ஆண்கள் வேட்டைக்குப் போய் அரும்பாடுபட்டு உணவைக் கொண்டு வர பெண்கள் சௌகரியாக குகையில் இருந்து பிரசவம் மற்றும் குழந்தைப் பராமரிப்பில் ஈடுபட்டபடி சமைத்துக் கொண்டிருந்தது போல ஒரு சித்திரம் நம் மனங்களில் இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்று தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

மாதத்தில் ஒரு வாரத்துக்கு மேல் ஆண்கள் வேட்டைக்குப் போனதேயில்லை. மிச்ச நேரமெல்லாம் வெட்டி ஆபீசராகத்தான் அன்றைக்கே சுற்றிக் கொண்டு அலைந்திருக்கிறான்.

பெண்கள் தான் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் பல சமயம் கூட இருக்கும் ஆண்களுக்கும் சேர்த்து உணவு சேகரித்து வந்திருக்கிறார்கள். ஜோல்னாப்பை போல ஒன்றை தன் தோள்களில் அல்லது முதுகில் போட்டுக் கொண்டு கைக்குழுந்தையையும் சுமந்தபடி அவள் உணவுச் சேகரிப்பில் மாலை வரை ஈடுபட்டிருக்க வேண்டும்.

தன் பை நிøயாமல் குகையில் இருக்கும் தன் குழந்தைகளின் பசி முகத்தை அவள் எப்படிச் சந்திக்க முடியும்?

முப்பது நாளும் இரை தேடிப் போனவள் பெண்தான். தாய் வழிச் சமூகமாக இருந்த அந்நாட்களில் பெண்தானே குடும்பத் தலைவி. ஆண்களை அனுமதிப்பதும், வெளியேற்றுவதும் அன் அவள் கையில் இருந்தது. கடற்கரை ஓரங்களில் உப்பைக் கண்ட பிறகு தாவர எண்ணெயைக் கண்ட பிறகு உணவைப் பதப்படுத்தக் கற்றுக் கொண்டனர். நெருப்பு, உப்பு, எண்ணெய் எனப் படிப்படியாக சமையற்கலை மனித வாழ்வில் மலர்ந்தது. மனம் வீசியது.

ஆகவே வரலாற்றின் பக்கங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே தொத்திக் கொண்டு ஏமாற்றித் திரிந்துள்ள நமது ஆண்வர்க்கம் பெண்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் எக்கச்சக்கமாக இருக்கிறது. சமைப்பது அதில் ஒன்று.

இந்தத் தலைமுறையின் அறிவுள்ள ஆண்களாகிய நாமாவது அக்கடனைத் திருப்பிச் செலுத்தும் பணியை இப்போதாவது துவங்கி விடுவோம்.

பெரும்பாலும்
தனக்குள்ளாகவே வசிக்க
நேரும் நானும் என் மொழியும்
சற்று
கடுமையாகவே வெளிப்படக்ககூடும்
என்றைக்கேனும்.
சல்மா.
(நம் உணவைப் பற்றி சில குறிப்புகள், கவிதையில்)

அதற்கு அவசியமின்றி சீக்கிரம் நாம் சீக்கிரம் திருந்தி விடுவோமே? என்ன சொல்கிறீர்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com