Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே 2007
பிபிசி தமிழோசை ஆனந்தியுடன் ஒரு சந்திப்பு
பூங்குழலி

ஆனந்தி .. பிபிசி தமிழோசை என்றாலே ஞாபகத்திற்கு வரும் பெயர்.. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக.. தனது இனிமையான குரலாலும்.. துணிச்சலான செய்தி சேகரிப்பினாலும் தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்தவர். ¬முதன் ¬முதலாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் குரலில் அவரது நேர்காணலை உலகறிய ஒலிபரப்பியவர். அதிலும்.. மிகவும் போர் நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில், பலவித ஆபத்துகளுக்கு துணிந்து ஈழக் களத்திற்கே சென்று நேர்காணலை பதிவு செய்தவர்.. ஒரு முறை அல்ல மூன்று முறை.

தொடர்ந்தும் ஈழத்தில் நிலவும் உண்மை நிலைகளை உலகறிய செய்வதில் பெரும் பங்கு வகித்தவர்.. தமிழகம் வந்திருந்த அவரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்து உரையாடினோம்.. அந்த உரையாடல் நெடுகிலும் ஈழ மக்களின் துயரங்கள் குறித்த அவரது வேதனையும், தமிழக மக்களின் பாரா மும் குறித்த ஆதங்க¬மே அதிகமாக வெளிப்பட்டது. அந்த உரையாடலிலிருந்து சிலப் பகுதிகள் சமூக விழிப்புணர்வு வாசகர்களுக்காக..

உங்களுடைய பிறந்த ஊர், படித்து வளர்ந்த அந்த சூழல் பற்றி சொல்லுங்கள்?

நான் பிறந்தது 1946இல், இலங்கையில் யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரி என்ற ஊரில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய அம்மா ஒரு குடும்பத் தலைவி. என்னுடைய தந்தையார் தமிழிலும், ஆங்கிலத்திலும் வல்லுநர். ¬முதலில் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். பின்னர் அரசின் மொழிபெயர்ப்பு திணைக்களத்தில் தமிழ் பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக இருந்தவர். அத்துடன் பல ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர். பாடப்புத்தகங்களை மொழி பெயர்த்தார். நாங்கள் உடன் பிறந்தவர்கள் ஏழுபேர். இப்போது என்னுடைய இரண்டு சகோதரிகள் கனடாவில், ஒரு சகோதரி இலண்டனில். அப்புறம் நான். பின்னர் இரண்டு சகோதரர்கள் இலண்டனில் இருக்கிறார்கள். நான்கு பெண்கள். மூன்று ஆண்கள். நான் முதலில் படித்தது கொழும்பில். பின்னர் நான் ஆங்கிலத்தில் பொருளாதாரம் பட்டம் பெற்றேன்.

தமிழ் ஆர்வம் எப்படி வந்தது?

நான் கல்வி பயின்றது எல்லாம் ஆங்கிலத்தில்தான். ஆனால் தமிழார்வம் என்னுடைய அப்பாவிடமிருந்து பெற்றுக் கொண்டதுதான். நான் சிறுவயதில் நிறைய தமிழ் நூல்களை படிப்பேன். அந்தக்காலத்திலேயே கம்பராமாயணத்தில் ¬முதலில் இருந்து கடைசி கவிதை வரை எனக்கு பாடம். அப்போது தமிழை ஒரு பாடமாகத்தான் எடுத்தேன். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம். தவிர மற்ற அனைத்தும், பொருளாதாரம், வரலாறு, புவியியல் எல்லாம் ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொடுத்தார்கள். தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் இந்த இரண்டும் மட்டும்தான் நான் பள்ளியில் படித்த தமிழ். ஆனால் சிறுவயதிலிருந்தே தத்துவப் புத்தகங்கள், இலக்கிய ஈடுபாடு வந்ததற்கு காரணம் எனது தமிழாசிரியை புவனேஸ்வரி சச்சிதானந்தம். அவர் ஒரு தமிழ் உணர்வு மிக்க ஆசிரியை. தமிழ் உணர்வையும், தமிழ் இனிமையையும் எனக்கு உணர்த்தியவர் அவர்தான். அப்போதிருந்தே எனக்கு தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு.

நீங்கள் இலங்கையில் வாழ்ந்த காலங்களிலும், படித்த காலங்களிலும் அங்கு இருந்த அரசியல் சூழ்நலை என்ன?

அப்போது அரசியல் சூழல், சிங்களதமிழர் மோதல் அவ்வளவு தீவிரமாக இல்லை. ஆனால் அந்தக் காலகட்டத்திலேயே துவங்கிவிட்டது. ஏனென்றால், பல்கலைகழகத்தில், கோட்டா சிஸ்டம் வந்துவிட்டது. அப்போது இரண்டு மூன்று பல்கலைக் கழகங்கள்தான் இருந்தன. தொண்ணூறு சதவீதம் சிங்களவர்களுக்கு கொடுக்கப்பட்டால், பத்து சதவீதம் தான் தமிழருக்கு கொடுக்கப்பட்டது. சிங்கள மாணவர்களைக் காட்டிலும் தமிழ் மாணவர்கள் எவ்வளவு மிகத்திறமையாகச் செய்தாலும், அவர்களுக்கு இடம் கிடைக்காது. அதுமட்டுமல்ல, பிரிட்டிஷார் காலத்தில் அலுவலகங்களில் அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் மேற்தொகையான தமிழர்கள். ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது நீங்கள் போய்ப் பார்த்தீர்களானால் எந்த அரசு அலுவலகங்களிலும் தமிழர்களை காணவே ¬முடியாது. தமிழர்களை காண்பது அரிது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நீங்கள் படிக்கின்ற காலத்தில் இதை உணர்ந்தீர்களா? நீங்கள் உணரக்கூடியதாக இருந்ததா?

படிக்கிற காலத்தில் சின்ன வயதில் நான் அதை உணரவில்லை. அந்தக் காலத்தில் அவ்வளவு மோசமாக இல்லை. சிங்களம் ஒரு தனிமொழியாக அறிவிக்கப்பட்டதும், சிங்களம் மட்டும்தான் என்று பண்டாரநாயகா அறி¬முகப்படுத்தி அதற்குப்பிறகு இந்த அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இன உணர்வுகளைத் தூண்டி தாங்கள் அரசியல் பதவிக்கு வரவேண்டும் என்பதும் அப்போதே துவங்கிவிட்டது.

அக்காலங்களில் இதனை எதிர்த்து போராட்டங்கள் இருந்ததா? அதன் வடிவம் எப்படி?

முதலில் தமிழரசு கட்சி என்று ஒன்றுதான் முதலில் இருந்தது. அதை நிறுவியவர்களில், அமைத்தவர்களில் ஒருவர் என்னுடைய தாத்தா. கமிஷன் கனகசபை என்று சொல்லுவார்கள். எங்களுடைய தாத்தாவின் மனைவி அவரை நாங்கள் ஆச்சி என்று சொல்லுவோம். அவர் பெண் பிரிவில் இருந்தவர். அந்தக்காலந்தொட்டே அவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. அதிலிருந்து எனக்கு கொஞ்சம் தொற்றிக் கொண்டது.

தந்தைக்கு அந்த மாதிரி ஈடுபாடு இல்லையா?

தந்தையார் இலக்கியத்துறையில் போய்விட்டாரே ஒழிய, சிங்களவர்கள் அகிம்சை என்ற வார்த்தையின் அர்த்தம் புரியாதவர்கள். எனவே, அவர்களுக்கு பின்னால் அகிம்சைப் போராட்டம் நடத்துவது விரயம் என்று மட்டும் சொல்லுவார்கள். நாங்கள் எப்போதுமே எங்கள் வீட்டில் பணிபுரிபவர்களை வேலைக்காரர் என்ற விளிச்சொல்லை பயன்படுத்துவது இல்லை. நாங்கள் சாப்பிட்ட தட்டை ஒருநாளும் அவர்களை கழுவ விடமாட்டோம். என் தந்தை சொல்லுவார், உன் எச்சைத் தட்டை நீபோய் கழுவு. அவர்கள் ஏழை என்ற படியால் உன் வீட்டில் வந்து வேலை செய்கிறார்கள். அந்த ஏழ்மையை நீ அசிங்கப் படுத்தாதே என்று.

நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய சமத்துவவாதி என் தந்தை. சாதி என்பதையே பாராட்டாதவர். எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், எங்கள் சமுதாயத்தினாரால் தாழ்த்தப்பட்டவர் என்று கருதப்படும் மக்களைக்கூட வீட்டுக்கு வந்தால் தனக்கு சமமாக இருக்க வைத்து எங்களுடனேயே சேர்ந்து சாப்பிட வைத்த ஒரு அற்புதமான மனிதர்.

சிங்களர் தமிழர் பிரிவினையை தாங்கள் நேரடியாக உணர்ந்தது எந்த வயதில்?

1958ல் நாங்கள் அப்போது சிறுகுழந்தைகள். என் தந்தையின் பணி நிமித்தமாக நாங்கள் கொழும்பில் இருக்க நேரிட்டது. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ்ப்பாணத்திற்கு போய்விடுவோம். அப்போது எல்லாம் கோட்டையில் இருந்து காலையில் ஆறு மணிக்கு இரயிலைப் பிடித்தோமேயானால் ஒரு மணிக்கு சாப்பாட்டிற்கு சாவகச்சேரிக்குப் போய் விடுவோம். ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணிக்கு புறப்பட்டால் அங்கு இருந்து இரவு பத்துமணிக்கு கொழும்பிற்கு வந்து விடுவோம்.

அப்போது கொழும்பில் எங்கள் வீட்டில் சமையலுக்கு உதவியாளராக இருந்தவர் ஒரு சிங்களப் பெண்மணி. அவர் சாதாரண படிக்காத பெண். அவள் எங்களைக் கூப்பிடுவது என்றால், மூத்த மகளே, இளைய மகளே, நடு மகளே என்றுதான் கூப்பிடுவார். நாங்கள் அவரை அம்மா என்று கூப்பிடுவோம்.

1958 இல் கொழும்பில் மிகப்பெரிய இனக்கலவரம் நடந்தது. அன்று நாங்கள் வீட்டில் இருந்தோம். அச்சமயம் மீன்காரி வந்து சொன்னார், வீட்டிற்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு இருங்கோ, இங்கே தமிழர்கள் வீட்டில் எல்லாம் போய் அடிக்கிறார்கள், நீங்கள் கவனமாய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார். அன்றைக்கு என்று எங்களுடைய வேலைசெய்த அம்மையுடைய கணவர் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது என்னுடைய தாத்தாவிற்கு வயது 75. வீட்டில் என்னுடைய தாத்தா, என்னுடைய குடும்பம், சின்னப் பிள்ளைகள் எல்லாம் இருந்தோம். அப்போது அறுபது, எழுபது பேர் வந்தார்கள். அப்போது என் தாத்தா ஆண்பிள்ளைகள் தவிர நீங்கள் எல்லாம் அடுத்த வீட்டுக்கு போங்கள் என்று சொன்னார். நாங்கள் சின்னப்பிள்ளைகள் எல்லாம் அடுத்த வீட்டுக்குப் போய்விட்டோம்.

அந்த சிங்களத்தம்மாவும், அவருடைய கணவரும் வாசலில் வந்து நின்று கொண்டார்கள். நீங்கள் இந்த வீட்டிற்குள் வந்து இவர்களுக்குத் துன்பம் செய்வது என்றால், எங்கள் பிணத்தின் மீதுதான் அதைச்செய்யலாம். உங்களுக்குச் சம்மதம் என்றால் எங்களைக் கொன்று விட்டு வாருங்கள் என்றார்கள். உடனே அவர்கள் திரும்பப் போய்விட்டார்கள். ஆனால் எனக்கு இப்போதும் என்னுடைய மூளையில் அப்படியே இருந்து கொண்டு இருகிறது. இரவில் ஏதாவது சத்தம் கேட்டால் நாங்கள் அப்படியே நடுங்கி விடுவோம்.

அது என்ன என்று புரிந்ததா? எதற்காக இந்த தாக்குதல் என்று புரிந்ததா?

அதுதான் தெரியவில்லை. தமிழருக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டம், அப்புறம் அதன் கொடுமையை நான் உணர்ந்தேன். எப்போது என்றால் கலவரத்தின் காரணமாக நாங்கள் எல்லோரும் ஒரு கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு போனோம். ஒரு கப்பலில் ஆயிரத்துக்கும் மேலே மக்கள் சென்றோம். அதிலே கழிவறை வசதி ஒன்றும்இல்லை. ஆடுமாடுகள் மாதிரி நாங்கள் போய் யாழ்ப்பாணத்தில் இறங்கினோம். அப்போது எங்களுக்கு வீடு இருந்தது. நிறைய உறவினர் வீடுகளும் இருந்தன. ஆனால் வீடு இல்லாத தமிழர்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா? ஆனால் திரும்ப எங்க போறது.. மீண்டும் நாங்கள் கொழும்பு வந்தோம்.

ஊடகத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

பட்டம் பெற்ற பிறகு இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தில் அறிவிப்பாளராக இருந்தேன். இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தில் பாலர் நிகழ்ச்சி என்று ஒன்று உண்டு. அப்போது அங்கே சர்வத்து மாமா என்று ஒருவர் இருந்தார். அவர் சிறு வயதில் என் அப்பாவின் நண்பர். நாங்கள் எங்களுடைய அந்த பாலர் பகுதியில் நான் நிகழ்ச்சிகள் செய்தேன். பின்னர் பகுதிநேர அறிவிப்பாளராக இருந்தேன். பின்னர் இலங்கையை விட்டுச்சென்று மேற்படிப்புக்காக லண்டன் வந்தேன். கொழும்பிலேயே நான் பகுதிநேர அறிவிப்பாளராக இருந்தபடியால் அங்கு இருந்த பெரிய அதிகாரி எனக்கு ஒரு கடிதம் தந்தார். அந்தக் கடிதத்துடன் சங்கர்அண்ணாவை பார்த்தேன். அவர் மிகப்பெரிய தமிழ் கடல். தமிழின் இனிமையை நீங்கள் பூரணமாக அனுபவிக்க வேண்டுமென்றால் சங்கருடன் பேசவேண்டும். அவ்வளவு அழகான தமிழருவி. 1974 ல் ¬முதலில் பகுதிநேர அறிவிப்பாளராக முதுகலை படிப்பு படித்துக்கொண்டே அங்கு வேலைசெய்தேன். பின்னர் முழுநேர வேலையில் சேர்ந்து, பின்னர் நிரந்தர தயாரிப்பாளராக அமர்ந்து பின்னர் மூத்த தயாரிப்பாளராக பணியாற்றினேன்.

1972 இல் நீங்கள் இலண்டனுக்கு வந்த காலகட்டத்தில் ஒரு பெண் தனியாக வெளிநாடு சென்று படிப்பது என்பது தமிழ்ச் சமூகத்தில்.. மிகப் பெரிய விசயமாக பார்க்கப்பட்டிருக்கும் இல்லையா?

எனக்குத் திருமணம் நடந்தது 1966ல். திருமணத்திற்குப் பிறகுதான் வந்தேன். ஆனாலும் தனியாகத் தான் வந்தேன். அப்போது அங்கு இலங்கைத் தமிழர்கள் வெகு சிலர்தான். அவர்களும் டாக்டர், என்ஜினியர், அக்கவுண்டன்ஸ், அப்படி வந்தவர்கள், அல்லது அதற்காக படிக்க வந்து அங்கு குடியிருந்தவர்கள். அப்போ எல்லாம் தமிழ்க் கடைகள் இல்லை. அப்போது எல்லாம் அங்கு ஒரே ஒரு கோவில்தான் இருந்தது. தமிழ் மக்கள் என்று பெருந்தொகையில் இல்லை. ஆனாலும் நான் மிகவும் துணிந்தவள். அப்போதே யாராவது ஏதாவது சொன்னால், இல்லை! இதுதான் எங்களுடைய வாழ்க்கை, இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, நான் தனியாக போவேன்! வருவேன். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது என்னுடைய கணவன். என்னுடைய கணவனுக்கு என்னை நன்றாகத் தெரியும், என்னுடைய கொள்கைகளை எதிர்த்தால், என்னுடைய நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நான் அதைப் பற்றிச் சட்டைச் செய்ய மாட்டேன். விருப்பமிருந்தால் இரு, இல்லாவிட்டால் போ என்று சொல்லக் கூடிய துணிவு வாய்ந்தவள். ஆனால் எனக்கு வாய்த்த கணவர் மிகவும் நல்லவர். அவருடைய பெயர் சூரிய பிரகாஷ். எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர்களையும் அவர் தான் பார்த்தார். அவர்தான் எங்களுடைய குழந்தைகளுக்கு தந்தை. குழந்தைகளுக்கு தாயைவிட அப்பாமீதுதான் மிகப் பாசம்.

அவர் எனக்கு நல்ல கணவர் மட்டுமல்ல. நல்ல நண்பரும் கூட எனக்கு. என்னுடைய சொந்த நண்பர் உலகில் என்றால் அவர்தான். என்னுடைய குறைகளை எல்லாம் மறந்து, நிறைகளை மட்டும் போற்றி எனக்குத் துணையாக எல்லாவிதத்திலும் இருந்தவர். சிலவேளைகளில் நான் சீறுவேன் ஏனென்றால் வேலை முடிந்து வரும்போது அந்த களைப்பால் நான் சீறுவேன். சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபிப்பேன். ஆனால் அவர் எல்லாம் பொறுத்துக் கொள்வார். நல்ல மனிதர்.

நீங்கள் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டதுண்டா?

1977ல் பெரிய கலவரம் நடந்தது. அப்போதுதான் ¬தான் முதலில் நான் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தேன். இலண்டனில். இலங்கைத் தூதரகத்திற்கு ¬முன்னால், அங்கே நின்ற போலிஸ்காரன் சொன்னான், நான் கட்டப் பொம்பளை தானே? சின்னவள். அப்பா, இந்த சின்ன உடம்பிற்குள் இவ்வளவு பெரிய தொண்டையா? என்று சொன்னார்கள். அப்போது படித்துக் கொண்டு வேலையும் செய்துகொண்டு தான் இருந்தேன்.

அப்படி படித்துக் கொண்டு பணிக்கும் போய் கொண்டிருந்தபோது உங்களுடைய அரசியல் நடவடிக்கைகளால் உங்களின் பணிக்கு எந்த ஒரு பிரச்சினையும் வரவில்லையா?

வந்தது. ¬முதலில் வந்தது. செய்தித்தாள்களில் இலங்கைத்தூதரகத்திற்கு மு¬ன்னால் ஆர்பாட்டம் நடத்தியது கொட்டை எழுத்துக்களில் வந்துவிட்டது. அடுத்த நாள் நான் ஆபீசுக்கு போனால், அந்த செய்தித்தாள் என்னுடைய மேசையில் இருந்தது. என்னுடைய அதிகாரி, ஒரு வெள்ளைக்காரன்.

நான் சொன்னேன் அய்யய்யோ! இது நான் இல்லை சார்? என்னுடைய ட்வின் சிஸ்டர். அந்த நேரத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். ஆனால் என்றும் தொழில் தர்மத்தை மீறியதே கிடையாது.

பணி நிமித்தமாக நீங்கள் போர்ச் சூழல்களில் பயணப்படும் காலங்களில் நீங்கள் சந்தித்த சவால்கள்..?

எல்லாமே சவால்கள்தான்.. நான் போவேன்.. வருவேனா என்பது தெரியாது.. ஆனால் பெண் என்பதால் எனக்கு எந்த வித சிக்கல்களும் இல்லை.. நான் எதற்குமே பயப்படாதவள்.. எத்தனையோ ஆபத்துகளைத் தாண்டி.. ஆபத்துகளுக்கு அஞ்சாமல்.. நான் தம்பியை பேட்டி எடுக்க போகும் போதெல்லாம்.. நான் எவ்வளவோ ஆபத்துகளுக்கு இடையில் தான் போய் வந்து இருக்கிறேன்.. என்னுடைய கணவர் சொல்வார்.. நான் எங்கே என்றால்.. வெளியே போயிருக்கிறாள்.. ஒரு மாதமோ இரண்டு மாதமோ.. எப்போது வருவாள் என தெரியாது.. வந்தால் மகிழ்ச்சி.. ஆனால் அவள் எங்கேயும் சமாளித்துக் கொள்வாள் என்பார்.. அவருக்கே தெரியாது.. நான் எங்கு எப்படி செல்கிறேன் என்று.. ஏனென்றால் அத்தனை ஆபத்து.. கிளாலியா செல்வேன்.. அங்கு தொலைபேசி இல்லை.. ஒரு தொடர்பும் இல்லை.. யார்கிட்டயும் ஒன்றும் கேட்கவும் ¬முடியாது அப்போ.. அந்த 93, 94, 95 காலகட்டத்தில்.. பொருளாதாரத் தடை.. அப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலைகளில் எல்லாம் நான் வேலை செய்தவள்.. பயமில்லாமல் போய்.. அதற்கு காரணம்.. நான் ஒரு யாழ்ப்பாண தமிழச்சி.. பயம் என்பதே அறியாதவள்.. என்னுடைய தாரக மந்திரம்.. "நாமார்க்கும் குடியல்லாம் நமனை அஞ்சோம்..'' அஞ்சுவது யாதொன்றுக்கும் இல்லை.. அஞ்ச வருவதும் இல்லை.. நான் எதற்குமே பயப்படாதவள்..

நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளை நாங்களே எடுத்து, நாங்களே தயாரிக்க வேண்டும். அப்போது பல தடவை இலங்கை, இந்தியாவிற்குச் சென்று கொண்டு இருந்தேன். ஒருத்தரும் யாழ்ப்பாணம் போகாத நேரத்தில் நான் சென்றேன். நான் அனுமதி வாங்கியது கிளிநொச்சி வரைக்கும் செல்லத்தான். அப்போது பொருளாதாரத் தடை இருந்தது. 1983 இல் பொருளாதாரத்தடை வந்துவிட்டதே. அதற்கு மு¬ன்னாடியே நான் மட்டக்களப்பு அங்கேயெல்லாம் போய் நிகழ்ச்சிகளைச் செய்தேன். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளு கெல்லாம் தடை. ஆனால் அதற்கும் களவாய் போய் நிகழ்ச்சிகள் செய்தேன். யாழ்ப்பாணத்திற்குப் போனது மிகப் பெரிய கஷ்டம். ஏனென்றால் கிளிநொச்சி(வன்னி) வரைக்கும் போய்விட்டு அங்கிருந்து கிளாலி ஏரியூடாக போக வேண்டும். கிளாலியில் போவதற்கு தடை இருந்தது. அதற்கு அனுமதியும் தரமாட்டார்கள். ஏனெனில்.. அவர்கள் கிளாலியில் சுடுவார்கள்.. ஒவ்வொரு நாளும்.. அப்போ யானையிறவு இராணுவத்திடம் இருந்தது. யானையிறவிலிருந்தும்.. பூநகரியிலிருந்தும் சுடுவார்கள்.. ஒரு பக்கம் இராணும்.. மறுபக்கம் கடற்படை.. சுட்டுக் கொண்டே இருப்பாங்க.. அன்றாடம் அஞ்சு பேர்.. பத்து பேர் கொல்லப்படுவார்கள்.. அந்தச் சூழலில் நான்போய் பாதுகாப்பு துறையிடம் அனுமதி வாங்க சென்றேன். அவர்கள் கேட்டார்கள்.. நீ யாழ்ப்பாணத்திற்கு போகப் போகிறாயா என்று..? நான் சொன்னேன்.. அய்யோ.. நான் போகவே மாட்டேன்.. அது எப்படி கிளாலியால போக ¬முடியும் என்று.. நான் உயிருக்கு பயந்தவள்.. நான் போகவே மாட்டேன் என்றுதான் அனுமதி வாங்கினேன்.. அப்புறம் கிளிநொச்சி போய் சேர்ந்தேன்.. கிளிநொச்சியில் என்னை யார் கேட்கிறது.. கிளிநொச்சி புலிகளின் கட்டுப்பாடு.. யாழ்ப்பாண¬ம் அவர்களின் கட்டுப்பாடு.. இடையில் கிளாலி ஏரி மட்டும் தான் சிக்கல்..

அப்போ எல்லாம் பெட்ரோல் கிடையாது.. பஸ்செல்லாம் எப்படி ஓடுறது என்றால்.. மண்ணெண்ணெய்யும் சமையல் எண்ணையும் கலந்துதான் பஸ் ஓடும்.. டொக்கு.. டொக்கு.. டொக்கு என்று.. ஒரு காலத்தில் ஆறே மணி நேரங்களில் நாங்கள் கடந்த தூரத்தை .. ஒன்றரை நாள் செய்து கடக்க வேண்டியதாக இருந்தது. ஏனென்றால் கிளாலியால படகு புறப்படுவதே இரவு பனிரெண்டு மணிக்குதான்.. பகலில் புறப்படாது.. அதுவும் நெருப்புக் குச்சி கூட கொளுத்த கூடாது. லைட்டர் போடக் கூடாது.. ஏனென்றால்.. கடற்படைக்கு தெரிந்து விடும்.. எல்லாம் ஆபத்தான பயணங்கள்.. அந்த காலத்தில் அங்கு போய் பார்த்தால் தான் தெரியும்.. அங்கே மின்சாரம் இல்லை, மருந்து இல்லை, உணவுப் பொருள்கள் இல்லை. பிள்ளைகள் எல்லாம் மெழுகுவர்த்தியிலும் அரிக்கேன் விளக்கிலும் படிப்பார்கள்.. நோட்டு புத்தகம் இல்லை.. எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் எங்கள் மக்கள்.. நான் கண்ணால் கண்ட தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்று உண்டு.. ஒரு பையனும் ஒரு பெண்ணும்.. இளவயதினர்.. ஒரு அதிகாரி.. இளைஞர்களை இழுத்துக் கொண்டு போய் சித்ரவதைகள் செய்வதில் பெயர் பெற்றவன்.. அவனை கொல்ல இவர்கள் வந்திருந்தனர்.. கொழும்பின் புறநகர் பகுதியில் அவன் இருப்பிடத்திற்கு அருகில் காத்திருந்தார்கள்.. அவன் வெளியே வருவதைப் பார்த்து இவர்கள் அவனை நோக்கி பாய்ந்தார்கள்.. ஆனால் அவன் சட்டென்று சுதாரித்து உள்ளே சென்று விட்டான்.. இதுகள் வெடிச்சிட்டுது.. நான் அங்கு போகையில் ஆம்புலன்சில் ஏத்தறாங்க.. அப்ப சரியான மழை வெள்ளம்.. நனைந்து நனைந்து கொண்டு வந்து நான் ரிப்போர்ட் பண்ண வந்தேன்.. கை ஒரு பக்கம் அந்த வெள்ளத்தில் மிதக்குது.. கால் ஒரு பக்கம்.. தலை.. எல்லாம் அந்த தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதக்குது.. நேரில் பார்த்தேன்.. அப்பெண்ணிற்கு பதினெட்டு வயசு இருக்கும்.. என்னுடைய மகளை நினைத்துக் கொண்டேன்..

ஒரு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்து பிபிசியில் பணிக்கு சேர்ந்த சில பார்ப்பன ஊடகவியலாளர்களால் உங்களுக்கு சிக்கல்கள் நேர்ந்ததாக இங்கு ஒரு செய்தி வந்தது.. அது உண்மையா?

இதற்கு பதில் உங்களுக்கே தெரியும்.. நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் பிபிசி ஒரு நல்ல நிறுவனம்.. அதுதான் எனக்கு பெரிய வாய்ப்புகளை தந்தது.. இலங்கையில் இருந்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்புகளோ.. புகழோ கிடைத்திருக்காது.. இவ்வளவையும் எனக்கு தந்தது பிபிசி.. எனக்கு திறமை இருக்கிறதோ என்னவோ.. அயராத உழைப்பு உண்டு.. நான் மிகவும் கடுமையாக உழைத்தவள்.. எனக்கு மக்களின் அவலங்கள் தெரிய வேண்டும்.. அந்த நேரத்தில வேறு ஒரு ஒலிபரப்பும்இல்லை.. இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தை தவிர வேறு ஒரு ஒலிபரப்பும் இல்லை.. தொலைக்காட்சிகளும் இல்லை.. ஆக பிபிசி மட்டும் தான்.. அந்த பணியில் எனக்குக் கிடைத்த நிறைவு அதுதான்.. என்னிடம் சொல்வார்கள்.. நாங்கள் பங்கருக்குள் போகும் போது கூட உங்கள் ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டுதான் போவோம்.. மின்சாரம் இல்லாதபடியால்.. சைக்கிள் டைனமோவில் வைத்து நன்கு கேட்பார்கள் தமிழோசையை.. நான் போயிருக்கும்போது எனக்கு ஒரு பெண் காட்டினாள்.. தையல் மெசினைப் போட்டுக் கொண்டு எப்படி தமிழோசையை கேட்பதென்று.. எல்லாருமே தமிழோசையைக் கேட்பார்கள்.. ஆனால் இப்போது அப்படி இல்லை.. எத்தனையோ தமிழ் ஒலிபரப்புகள் வந்துவிட்டன.. ஆனால் நான் சரியான காலகட்டத்தில் சரியான இடத்தில் இருந்தேன்.. அத்துடன் நான் யாழ்ப்பாணத் தமிழச்சி என்றபடியால் எனக்கு அந்த உணர்வு இருந்தது.. உணர்வுப் பூர்வமாக செய்ய ¬முடிந்தது.. என்னுடைய மக்களின் இன்னல்களை கண்டு நான் எத்தனையோ ¬முறை அழுதிருக்கிறேன்.. நித்திரை வராமல் தவித்திருக்கிறேன்..

மரத்தினடியில். சேலைகளை விரித்து.. இதுதான் வீடு என்று வாழ்கிறார்கள்.. நல்ல கல் வீட்டில் வாழ்ந்த மக்கள்.. உப்புக்குக் கூட நாங்கள் அடுத்த வீட்டிற்குச் சென்று கையேந்தியதில்லை.. ஆனால் இன்று அவர்கள் வாழும் நிலை.. இதையெல்லாம் என்னால் வெளிக் கொணர ¬முடிந்தது..

நான் பிபிசியில் வேலை செய்தபடியால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது... அந்த வகையில் நான் பிபிசிக்கு என்றும் கடமைப் பட்டவள்..

தனிப்பட்ட முறையில் நீங்கள் அந்த போராட்டத்தோடு உடன்பட்ட கருத்துடையவர்.. அத்தோடு.. அந்த மண்ணிலிருந்து வந்தவர் வேறு.. அந்தச் சூழலில்.. உங்கள் மீது சந்தேகம் வரவில்லையா.. தமிழோசையில் ஈழக் களச் செய்திகளைக் கொண்டு வருவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் என்ன மாதிரியான ஒத்துழைப்பு இருந்தது?

நான் தமிழோசையில் சேரும்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராகத்தான் சேர்ந்தேன். பின்னர் மூத்த தயாரிப்பாளராக ஆனேன். அந்த காலத்தில் பிபிசி என்பது ஒரு மிக அற்புதமான ஒரு நிறுவனம்.. இப்படித் தான் போட வேண்டும்.. அப்படிப் போடக் கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை.. ஆனால் நான் என்னுடையத் தொழிலை செய்யும் போது.. என்னுடைய நிகழ்ச்சிகள் தயாரிக்கும் போது.. செய்திகளை எடுக்கும் போது.. நான் அலுவலகத்திற்கு சென்ற பிறகு.. அலுவல் கூட்டம் ¬முடிந்த பிறகு.. நான் ஒவ்வொரு நாளும்.. யாழ்ப்பாணத்திற்கு பேசுவேன்.. கொழும்பிற்கு தொலைபேசுவேன்.. செய்திகள் எடுக்கிறதற்கு.. அவர்களே தருவார்கள்.. யாருமே இதைப் போடாதே.. இதைப் போடக் கூடாது என்று சொன்னதில்லை.. ஆனால் ஏதாவது புகார் வந்தால்.. அவர்கள் கேட்பார்கள்.. அவர்கள் எடுத்துப் பார்ப்பார்கள்.. தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து.. பார்ப்பார்கள்.. அது நடுநிலைமையைத் தவறியதா? என்று. எனவே.. அவர்கள் முதலில் எங்களுக்குச் சொல்வதில்லை.. நீ அப்படி செய் இப்படி செய் என்று.. தொழில் தர்மத்தில் நாங்கள் தவற மாட்டோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.. அந்த நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொள்வதில்லை.. நான் மட்டுமல்ல.. ஏனையோர்களும் அப்படித்தான்.. மன உணர்வுகள் என்பது வேறு..

மிக கவனமாக நடந்துக் கொண்டேன்.. என்னை நம்பின என்னுடைய ஸ்தாபனத்திற்கு இழுக்கு வரக் கூடாது. என்பதில் கவனமாக இருந்தேன்.. உதாரணத்திற்குச் சொன்னால்.. 1993 இல்.. தம்பி பிரபாகரனை நேர்காணல் செய்துவிட்டு வந்துவிட்டேன்.. நான் இலண்டன் திரும்பி.. ஒப்படைத்த பிறகு... இவர்கள் அறிவித்துவிட்டார்கள்.. நாளை பிரபாகரனுடைய பேட்டி ஒலிபரப்பப்படும் என்று..

அந்த நேரத்தில்.. அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒலிபரப்பாகும் வண்ணம் ஆங்கிலத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள்.. உலகத்தலைவர்களை நேரடியாக பேட்டி காண்பது என்று.. இந்தியா.. பாகிஸ்தான்.. போன்ற ஆசிய நாடுகளின் தலைவர்களை எந்த நாட்டிலிருந்தும் நேயர்கள் கேள்வி கேட்கலாம்.. அதற்கு அப்போ இலங்கை அதிபராக இருந்த பிரமதாசா ஒப்புதல் தெரிவித்து இருந்தார்.. அப்படிப்பட்ட நேரத்தில்தான்.. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டி நாளை ஒலிபரப்பாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.. உடனே பிரதமர் பிரேமதாசா அவர்களின் அலுவலகத்திலிருந்து பேசி.. நீங்கள் பிரபாகரனுடைய பேட்டியை ஒலிபரப்பினால்.. எங்கள் அதிபர் உங்களுக்கு பேட்டி தர மாட்டார்.. என்று சொன்னார்கள்.. அதற்கு இவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள்.. உங்கள் அதிபரின் முடிவு குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம்..பிரபாகரன் அவர்களுடைய பேட்டி என்பது.. முக்கியமானதொரு பேட்டி.. மிக ¬முக்கியமானது என்று கருதுகிறோம்.. ஏனென்றால்.. அவர் இதுவரை யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை.. அவருடைய கருத்து என்ன.. அவர் என்னச் சொல்கிறார் என்பதை அறிய தமிழ் மக்கள்.. எங்களுடைய நேயர்கள் விரும்புகிறார்கள்.. எனவே அவருடைய பேட்டியை நிச்சயமாக ஒலிபரப்ப விரும்புகிறோம்.. எனவே இந்த நிலைமையை உணர்ந்து.. நீங்கள் வாக்குறுதி அளித்தபடி உங்களுடைய பேட்டியை எங்களுக்குத் தர வேண்டும்.. என்று நாங்கள் மிகவும் விரும்புகிறோம்..

ஆங்கிலேயருக்கு ஒரு பழக்கம் உண்டு.. எல்லா விசயத்தையும் மிகவும் கண்ணியமாக, ஆனால் உறுதியாக.. சொல்லிவிடுவார்கள்.. ஆனால் இதையும் மீறி நீங்கள் பேட்டி தர மறுத்தால்.. எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.. பிரபாகரனின் பேட்டி அறிவித்தபடி ஒலிபரப்பாகும்.. என்று கடிதம் அனுப்பிவிட்டார்கள்.. பிறகு பிரேமதாசா அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு சம்மதம் சொல்லிவிட்டார்கள்.. பின்னர் பிரபாகரனின் பேட்டி நடந்தது.. அது நேரடி பேட்டி.. நான்தான் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தேன்.. முதலாவது கேள்வியே.. ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஒரு கறுப்பின நேயர்.. முதல் கேள்வி கேட்டார்.. பிரபாகரன் அவர்கள்.. பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில்.. இவ்வாறு குறிப்பட்டிருந்தார்.. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று.. அப்படி பிபிசி என்ற ஸ்தாபனம் யாருக்கும் பணிந்து போகாது.. யாராக இருந்தாலும்.. விடுதலைப்புலிகளும் அதற்கு அழுத்தம் கொடுக்க ¬டியாது.. அரசும் அழுத்தம் கொடுக்க முடியாது.. அந்த அளவிற்கு சுதந்திரமாக செயல்பட எங்களை அனுமதித்தது.. அதே போல அங்கு பணிபுரிபவர்களும் தொழில் தர்மத்தை தவறாமல்தான் பணிபுரிகிறார்கள்.. அவர்களுக்குத் தெரியும் நான் புலி ஆதரவு என்று.. ஆமாம்
நான் புலி ஆதரவுதான்.. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.. என்றுதான் நேரே கேட்பேன்.. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு எனக்கு காரணம் இருந்தது.. ஏனென்றால் மக்கள் படும் துன்பத்தை நான் நேரில் கண்டவள்..

போர், மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவுகளில் நீங்கள் முக்கியமாக எதைக் கருதுகிறீர்கள்?

யாழ்ப்பாணத் தமிழர்களைப் பார்த்தீர்கள் என்றால் கடும் உழைப்பாளிகள். ஒரு ஏழை விவசாயி கூட தன்னுடைய மகனையோ மகளையோ ஒரு மருத்துவராக்க வேண்டும் என்ஜினியராக்க வேண்டும்...ஒரு அக்கவுண்டன்ட்டாக வேண்டும் என்று விரும்புவார். அதற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்வார்.. கல்வி என்ற விசயத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் மிகவும் அக்கறை செலுத்துபவர்கள். இன்னைக்கு இந்த போர்க்காலச் சீரழிவுகளிலிருந்து கல்வி....மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் குழந்தைகளுக்கு படிக்க நேரமில்லை. படிக்க நேரமில்லை ஏன்னா எந்த நேர¬ம் குண்டு விழும் என்று தெரியாது. குண்டு விழும்போது அவர்கள் பதுங்கு குழிக்குள் ஓட வேண்டும். மின்சாரம் இல்லை. பள்ளிக்கூடங்களுக்குப் போக ¬முடியாது. ஏனென்றால் குண்டு வீச்சு. போதிய உணவில்லாததால் உணவுப் பற்றாக்குறை.

எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிள்ளைகள் ஸ்கூலுக்கு வந்தா காலம்பர வரைக்கும் அப்படியே...சோர்ந்து உக்காந்துருவாங்களாம். ஏனென்றால் காலமே சாப்பாடு சாப்படாம. நான் ஒருமுறை பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்தபோது 16 வயசு பையனைப் பார்த்துக் கேட்டேன். உனக்கு எத்தனை வயசுன்னு கேட்டேன். 12 என்றேன்? இல்லை... 16ன்னான். அந்த 16 வயசில் 12 வயசுப் பையன் மாதிரி ... இருந்தான். யாழ்ப்பாணத் தமிழர்கள் கல்விக்கு மிக ¬முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மிகவும் கடும் உழைப்பாளிகள். அப்படிப்பட்ட மக்கள் இப்படி அல்லல்பட்டு குழந்தைகள், பெண்கள் நல்ல வசதியாக வாழ்ந்தவர்கள் அகதியாக மரங்களுக்கு கீழே... அதை நேரடியாகப் பார்த்தவள் நான். என்னுடைய மண் சிதைக்கப்படுகிறது. என்னுடைய மக்கள் சீரழிக்கப்படுகின்றனர். எங்களுடைய குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கபடுகின்றார்கள். எங்க ளுடைய ச¬முதாயம் பல சீரழிவுகளுக்குள்ளாகிறது.

போர்க்காலச் சூழல், சமுதாயச் சீர்கேடுகளையும் சீரழிவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இளைஞர்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இந்தியாவுக்கு, மேலை நாடுகளுக்கு அங்கிங்கு என சென்றுவிட்டார்கள். பெண்கள்,? நீங்களெல்லாம் சரியான இளவயசில் கல்யாணம் கட்டி புள்ளை பெத்து... அங்கே பார்த்தீர்கள் என்றால் 35 வயசு, 45 வயசு வரை கல்யாணம் கட்டாமல் இருக்கிறார்கள். இளமைப் பருவத்துக்கு என்று சில ஏக்கங்கள், தாபங்கள் உண்டு. அது இயற்கை. ஆனால் அவர்கள அப்படி இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை வாழ வேண்டி வருகிறது. அந்தச் ச¬முதாயத்தில் நான் ஒரு டீச்சரை சந்தித்தேன். ஆசிரியை. அவர் ஒரு வறுமையானவரைத்தான் கலியாணம் கட்டியிருக்கிறார். காடுகளில் விறகு வெட்டி... விறகுகளை சந்தைக்குக் கொண்டு போய் விற்று வருகிறவர். இவர் பட்டதாரி. நான் கேட்டேன். நீங்கள் பட்டதாரி. அவர் கல்வி அறிவு அற்றவர். கூலித் தொழிலாளி. உங்களுக்கு உணர்வுகள் எப்படி இருக்கிறது..? அவர் சொன்னார்...இங்கே இளைஞர்கள் இல்லை. இங்கே எங்கே இளைஞர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் எல்லாம் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள். இருக்கின்ற இளைஞர்கள் எல்லாம் போராளிகளாக இருக்கிறார்கள்.

அப்போ....கலியாணம் கட்டாமல் இருப்பதை விட கிடைத்தது வைத்து சமாளிக்க வேண்டியிருக்கிறது. கிடைத்ததை வைத்து திருப்தியடைய வேண்டியிருக்கிறது என்று அந்த ஆசிரியை சொல்லும் போது எப்படி இருக்கும்? மற்றவர்கள் இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுகிறார்கள். அந்த வன்முறையைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள். அந்த, வன்முறைக்கான அடிப்படைக் காரணமான அவலங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. நான் அதை நேரில் பார்த்தவள்.

அடுத்த இதழிலும் தொடரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com