Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே 2007
தொலைந்த கிராமியத் தடங்கள்
அரைக்காசு

கழனியூரன்

ஒரு காசுக்கு யாரிடம் போய்ச் சில்லரை வாங்க என்று தெரியவில்லை. நாசுவர் கூலியை வாங்காமல், இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஐயர் ஆத்துக்காரிக்கோ அரைக் காசை அதிகமாகக் கொடுக்கவும் மனசு வரவில்லை. அதனால் அந்த ஐயராத்தம்மா, நாசுவரிடம், "என் மகனுக்கு முடி சிரைத்ததற்கு கூலி அரைக்காசு, மீதம் உள்ள அரைக்காசுக்கு எனக்கு மொட்டை போட்டு விடு'' என்று சொல்லி தலையை நீட்டினார்.

நாட்டுப்புறத் தரவுகளைச் சேகரிப்பதாலும், அவைகளைப் பதிவு செய்வதாலும் தொலைந்து போன பல வழக்காறுகளையும், சமூகப் பழக்க வழக்கங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு சிற்பத்தைப் பார்க்கும் போது, அச்சிற்பத்தில் உள்ள கலை நயத்தை மட்டும் பார்க்காமல், அச்சிற்பத்தில் உள்ள பெண் அணிந்துள்ள நகைகள், அவள் உடை உடுத்தி இருக்கும் விதம் என்று பலவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் ரசிகமணி டி.கே.சி அவர்கள், “கோயில்களில் இருக்கும் சிற்பங்களுக்கு எண்ணெய் பூசியும், துண்டுகள் கட்டியும், அச்சிற்பங்களின் அழகை மறைக்காதீர்கள். அச்சிற்பத்தைச் செய்த சிற்பி ஏற்கனவே, அதற்கு ஆடை அணிகலன்களையும் அணிவித்துத்தான் அச்சிற்பங்களைச் செய்திருக்கிறான். நீங்கள், கோயில் சிற்பங்களின் மேல் எண்ணைய் பூசி அல்லது அச்சிற்பங்கள் மேல் வண்ணம் பூசி, அல்லது சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடித்து விடுகின்றீர்கள். அதனால், அச்சிற்பியின் கை வண்ணமும் மறைந்து போகிறது '' என்று அடிக்கடி கூறுவார்கள் என நேர் பேச்சின் போது கி.ரா அவர்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கின்றார்.

ரசிகமணி டி.கே.சி அவர்கள் சொன்னது உண்மை தான் என்பதை தற்போது சிறு தெய்வ வரலாறுகளைத் திரட்ட பல கோயில்களுக்குச் சென்று அக்கோயில்களில் உள்ள சிற்பங்களை மிக நெருக்கமாகப் பார்த்த போது தெரிந்து கொண்டேன்.

இரண்டு தலைமுறைக்கு முன்பு உள்ள ஒரு புகைப்படம் நமக்கு கிடைத்தால் அப்புகைப்படத்தில் இருந்து அப்பகுதி மக்கள் எத்தகைய ஆடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், எத்தகைய அணிகலன்களை அணிந்திருந்தார்கள், எப்படி சிகையலங்காரம் செய்திருந்தார்கள், எந்த மாதிரியான காலணிகளை அணிந்திருந்தார்கள் என்பன போன்ற சேதிகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதுவேதான் ஒரு பழமொழி அல்லது சொலவம் நமக்குக் கிடைத்தால் அப்படி மொழியை ஆய்வு செய்வதால் நமக்கு அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் சில பண்பாடுகளை பற்றித் தெரிய வரும்.

அதை இனி ஒவ்வொரு இதழிலும் பார்ப்போம்.

எங்கள் ஊரில் ஒருவர் பலசரக்குக் கடைக்கு சாமான்கள் வாங்க வந்திருந்தார். மொத்தம் தொண்ணூற்றி ஐந்து ரூபாய்க்கு சாமான்கள் வாங்கினார். கடைக்காரரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு மீதி ஐந்து ரூபாயைத் தாருங்கள் என்று கேட்டார். கடைக்காரர் மீதி ஐந்து ரூபாய்க்கு சில்லறை இல்லை. பிறகு கடைக்கு வரும் போது ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

சாமான் வாங்கியவர் மீதி ஐந்து ரூபாய்க்குப் பதில் ‘கடுகு' கொடுத்து விடுங்கள் என்றார்.

அப்போது கடையில் என்னருகில் நின்ற பெரியவர் ஒருவர் மீதி ஐந்து ரூபாய்க்குப் பதில் கடுகு கேட்டவரைப் பார்த்து, அரைக்காசுக்கு ஐயராத்தம்மா மொட்டை போட்டுக் கொண்ட கதையாக இருக்கிறதே! என்றார்.

அந்தச் சூழலில் பெரியவர் சொன்ன அந்த வாக்கியத்தை நான் வெகுவாக ரசித்தேன். பெரியவரைத் தனியே அழைத்து “நீங்கள் சொன்னது பழமொழியா?'' என்று கேட்டேன்.

பெரியவர், "தம்பி அது பழமொழி அல்ல... அது ஒரு சொலவம் என்றார். அப்பத்தான் எனக்குப் பழமொழிங்கிறது வேற.. சொலவம் என்கிறது வேற என்ற விபரம் புரிந்தது.

நான் பெரியவரை, ஒரு வேப்பமரத்து நிழலுக்கு கூட்டிக்கிட்டு போய், அந்தச் சொலவத்துக்கு என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலையேன்னு கேட்டேன்.

பெரியவர், அந்தச் சொலவத்துக்கான விளக்கத்தை ஒரு கதை போல சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்திச்சு. அந்தக் கோயில் காரியங்களைப் பார்க்கிறதுக்காக ஒரு ஐயரைக் குடும்பத்தோடு அந்த ஊர்ல கொண்டாந்து குடி வச்சிருந்தாங்க, அந்த ஊர் மக்கள்.

ஒரு நாள் ஐயர் பாம்பு கடிச்சு செத்துட்டார். ஐயர் பொண்டாட்டி தாலியை அறுத்திட்டு மொட்டைப் பிராமணத்தியா அந்த குக்கிராமத்துலயே இருந்தாள். அவளுக்கு ஒரு ஆம்பளப் புள்ளை இருந்தான்.

அது ஒரு குக்கிராமம்ங்கிறதால அந்த ஊர்ல வண்ணாரோ, நாசுவரோ கிடையாது.

வண்ணாரையோ, நாசுவரையோ கூப்பிடனும்னா தாய்க் கிராமத்துக்குப் போகிறவர்களிடம் சொல்லி விடனும் அல்லது யாராவது போய் கூப்பிட்டுட்டுத்தான் வரனும். தாய்க்கிராமத்துக்குப் போகனும்னா, நடுவழியில இருக்கிற ஆத்தைக் கடந்துதான் போகனும்.

ஐயர் பொண்டாட்டி ஏற்கனவே தாலிய அறுத்துட்டு தலையைச் சிரைச்சி போட்டுகிட்டு, வெள்ளைச் சேலை உடுத்திக் கிட்டு வீட்டுக்குள்ளே இருந்தாள். அவள் பையனுக்கு நிறைய முடி வளர்ந்துட்டு பையனுக்கு உச்சியில குடுமி வச்சிட்டு, மத்த முடியை எல்லாம் சிரச்சி விடனும்னு நினைச்சாள் தாய்க்காரி. தன் வீட்டுக்கு அழுக்கு எடுக்க வந்த பொம்பளைக்கிட்ட தாய்க்கிராமத்துல இருக்கிற நாவிதரை என் வீட்டுக்கு வந்து பையனுக்கு குடுமி வச்சி சிரைக்கச் சொல்லுன்னு தாக்கல் சொல்லி அனுப்பினாள்.

மறுநாள் தாய்க்கிராமத்தில் இருந்து நாசுவர் பெட்டியோடு ஐயராத்தம்மா வீட்டுக்கு வந்தார். கத்திப் பெட்டியை வீட்டுத் திண்ணையில் வச்சிட்டு, நாசுவர் குரல் கொடுத்தார்.

ஐயராத்துக்காரி மகனை முடிவெட்டிக் கொள்ள அனுப்பி வைத்தாள். நாசுவரும் பையனுக்கு நடுமண்டையில் குடுமி ஒதுக்கி, மற்ற இடங்களில் மொட்டை அடித்தார்.

மொட்டை அடித்து முடித்ததும் ஐயராத்துக்காரி, "பையனுக்கு முடி வெட்ட எவ்வளவு கூலி'' என்று கேட்டாள். நாசுவர் "அரைக்காசு கூலி என்று பதில் கூறினான்.

ஐயர் ஆத்துக்காரியிடமோ, ஒரு காசு முழுசாக இருந்தது. எனவே நாசுவரிடம் ஒரு காசை (நாணயம்) கொடுத்து "உனக்கு கூலி போக மீதி அரைக்காசைக் கொடு' என்று கேட்டாள்.

நாசுவரோ பாவம், அன்னன்னைய பாட்டிற்கு கிடைக்கும் கூலியைக் கொண்டு தான் ஜீவனைக் கழிச்சிக்கிட்டு இருந்தார். அவரிடம் எப்படி சில்லறை இருக்கும். எனவே, என்னிடம் அரைக்காசு மீதம் கொடுக்க சில்லரை இல்லை என்றார்.

அதோ ரொம்பக் குக்கிராமம். மொத்தமே, அந்தக் குக்கிராமத்தில் நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்தக் குக்கிராமத்தில், எந்தக் கடையும் கிடையாது. எந்த வியாபாரியும் அந்த ஊரில் கிடையாது. பணப்புழக்கமே, இல்லாத சிறு×ர் அது.

ஒரு காசுக்கு யாரிடம் போய்ச் சில்லரை வாங்க என்று தெரியவில்லை. நாசுவர் கூலியை வாங்காமல், இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஐயர் ஆத்துக்காரிக்கோ அரைக் காசை அதிகமாகக் கொடுக்கவும் மனசு வரவில்லை. அதனால் அந்த ஐயராத்தம்மா, நாசுவரிடம், "என் மகனுக்கு முடி சிரைத்ததற்கு கூலி அரைக்காசு, மீதம் உள்ள அரைக்காசுக்கு எனக்கு மொட்டை போட்டு விடு'' என்று சொல்லி தலையை நீட்டினாள்.

நாசுவன் பார்த்தார் எப்படியோ ஒரு காசு கூலியாகக் கிடைத்தது என்று நினைத்து ஐயராத்தமாளுக்கும் மொட்டை அடித்து விட்டு ஒரு காசு நாணயத்துடன் தன் ஊரைப் பார்த்துப் புறப்பட்டார்.

"இது தான் அரைக்காசுக்காக, ஐயராத்தம்மா மொட்டை போட்டுக் கொண்ட கதை' என்று அந்த சொலவத்துக்கான விளக்கத்தை ஒரு கதை போல சொல்லி முடித்தார் பெரியவர்.

இதிலிருந்து, பல சொலவங்களுக்கு பின்னால், ஒரு வாழ்வியல் சம்பவம், அல்லது நடப்பு அல்லது கதை இருக்கிறது என்பதையும், 'காசு என்ற பெயரில் ஒரு நாணயம் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்தது என்பதையும், கணவனை இழந்த பிராமணப் பெண்கள் தலை முடியைச் சிரைத்து மொட்டை போட்டுக் கொள்ளும் கொடுமையான வழக்கம் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது போன்ற சேதிகளையும் நாம் உணர்ந்து கொள்ள இடம் இருக்கிறது. அத்துடன் இந்தச் சொல்வளம் அல்லது அச்சொல்வளம் சார்ந்த நடப்பு நடைமுறையில் இருந்த காலத்தையும் ஒருவாறு நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com