Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே 2007
‘மக்களே போல்வர் கயவர்' - உண்ணாவிரதம் உடம்பு இளைக்கவா?
கதிரவன்

அண்மைக்காலமாக " உண்ணாவிரதப் போராட்டம்'' என்ற பெயரில் விளம்பர போஸ்டர்களானது சென்னை நகரின் சுவர்களுடன் அன்றாடம் கூட்டணி கட்டிக் கொள்கின்றன. தினம் ஒரு நபர், அமைப்பு, கட்சி போட்டி போட்டுக் கொண்டு இறங்குகின்றனர். இவர்களின் முழுப்பரிமாணத்தையும் ஆராய்ந்தால் எள்ளி நகையாடுவதை தவிர வேறு என்ன செய்ய?

போராட்டத்தில் பல வடிவங்கள் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த சூழலில் என்ன வகையான போராட்டங்களை கைக்கொள்ள வேண்டும் என்பதை போராட்டம் நடத்துபவர்களின் சமூக உணர்வும், அக்கறையுமே தீர்மானிக்கிறது. அதே வேளையில் போராட்டம் நடத்துபவர்கள் எல்லோருக்கும் சமூக உணர்வு இருப்பதாகவோ, போராட்டங்கள் எல்லாமே சமூக நலனுக்கானவையாகவோ இருக்கும் என்பதாகவோ கருதினால் அது சிறு பிள்ளைத்தனாமானது அல்லது அரைகுறை பார்வையுடையது ஆகும். அவ்வகையில் சமூக நலன் என்பது அதற்காக முன் நிற்பவர்கள் சொந்த நலனை இழப்பதையும் உள்ளடக்கிய முழுமையாகும். மேலும் போராட்டம் என்பது யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாக நடத்தப்படுகிறது? போராட்டத்தின் இலக்கு என்ன? அந்த இலக்குக்கு எதிரிகள் யார்? அவர்களின் நோக்கம், தன்மை, பின்னணி என்ன? போன்றவற்றை ஆராய்வதோடு மட்டுமின்றி அதை மக்களிடம் அம்பலமாக்க வேண்டும். மக்களுக்கு இனம் காட்ட வேண்டும். அதன் மூலம் போராட்டம் நியாயமானது என்பதை உணரவைத்து மக்களை போராட்டத்தின் பக்கம் அணி திரளச் செய்ய வேண்டும். இது தான் போராட்டத்திற்கான இலக்கணமாகும்.

இதன்படி நடக்கும் போராட்டங்கள் 10 சதவீதத்துக்கும் குறைவே ஆகும். 90 சதவீத போராட்டங்களானது அதன் இலக்கணத்தையே கொச்சைப்படுத்தும் வகையில் நடப்பதாகும். போராட்டம் என்பது முரண்பாடுகள் இருப்பதனால்தான் ஏற்படுகிறது. முரண்பாடுகள் இன்றி போராட்டங்கள் இல்லை. ஆனால் 90 சதவீத போராட்டங்கள் யாருக்கும் எதிரானதல்ல என்ற பகிரங்கமாக அறிவித்து நடத்தப்படுகின்றன. இவை "போராட்டம்'' என்பதை சொல்லாமல் "பொழுதுபோக்கு'' என்று சொல்லிக் கொள்வதே சரியானதாகும்.

அதிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் நடக்கும் அரட்டை அரங்கங்களை என்னவென்று விவரிப்பது? உண்ணாவிரதப் போராட்டம் எந்த சூழலில் நடத்தப்பட வேண்டியது என்பதற்கும், உண்ணாவிரதப் போராட்டம் என்றால் என்ன என்பதற்கும் "பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திரநாத்தாஸ்'' மற்றும் ஈழத்தில் திலீபன், கணபதி பிள்ளை போன்றவர்களும் மணிப்பூரின் சர்மிளா போன்ற போராளிகள் விடையளித்துள்ளனர். இவர்களையெல்லாம் கொச்சைப்படுத்தும் நோக்கத்திற்காகவே நடப்பதுதான் அண்மைக்காலமாக நடக்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்'' என்ற விளம்பரங்கள்.

இந்தியாவில் 30 கோடிமக்கள் ஒரு வேளை கஞ்சியுடன் அனுதினமும் உண்ணாவிரதமிருப்பதை யாரறிவார்கள்? இந்நாட்டின் பெருவாரியான விவசாய மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கியதோடு அவர்களை குப்பைத் தொட்டி முன்னால் எச்சில் இலைகளை கிளறும் உண்ணாவிரத அவலத்தை யாரறிவார்கள்? உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அறிஞர் பெருமக்கள் (!) வர முடியாது. காய்ந்த வயிறுகள் தான் இவர்களின் அன்றாட உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் விருந்தாளிகள். ஆனால் பல சமயங்களில் திடீர் மரணங்களும், தற்கொலையும் தான் இவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களை முடித்து வைக்கின்றன. இவை வேறு வடிவத்தில் விதர்பாவில் அரங்கேறி வருகின்றன.

ஆம். லட்சக்கணக்கில் இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டுதான் இந்த நாட்டு அரசின் கவனத்தை திருப்ப முடியும் என்ற நிலையில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூரின் இராணுவ வெறிச் செயல்களை எதிர்த்தும், அங்கு நடக்கும் இராணுவ வெறியாட்டங்கள் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக அம்மாநிலத்தின் தாய்மார்கள் உலகத்தின் முன்னால் நிர்வாணமாக வேண்டிய அவலம் இருக்கிறது. அதைப் பார்க்கும் போது இன்றைய உண்ணாவிரத விருந்தினர்களின் கையலாகாத போராட்டங்களை பார்த்து எள்ளி நகையாடுவதை எப்படி விவரிக்க?

ஆம், பசி என்பதை அறியாத அறிஞர் பெருமக்கள்; மூன்று வேளையும் விதவிதமான உணவை அசை போட்டு அஜீரணமான வயிற்றை சீர் செய்ய ஒருவேளை உணவை காலம் தாழ்த்தி சாப்பிடக் காத்திருக்கும் கனவான்கள், கட்சித்தலைவர்கள்; மாடமாளிகைகளின் சர்க்கரை நோயாளிகள் இவர்களனைவரும் சேர்ந்து ஒரு நாளில் சந்தித்துத் தங்களின் குசலம் விசாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என்பது தான் மாபெரும் உண்ணாவிரதங்களின் பரிபூரண உண்மையாகும். இனி வரும் காலத்தில் மேற்கண்ட நோயாளிகள் காலை, மாலை நேரங்களில் நடக்கவோ, ஓடவோ, குனிந்து நிமிரவோ அவசியமில்லை. வள்ளுவர் கோட்டத்தில் பரந்த பந்தலை போட்டு ஒரு மைக்செட்டை ஏற்பாடு செய்து காலை முதல் மாலை வரை கத்தினால் உடலுக்கு நல்ல பயிற்சியாகும். கூடவே தாங்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்ற பேரும் கிடைத்து விடும். மருத்துவர்கள் கூட இனி டயட் கண்ட்ரோலுடன் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கெடுக்கச் சொல்லி எளிய முறையை பரிந்துரைக்கலாம்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது எப்படி என்பதை இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

வள்ளுவர் கோட்டத்தின் வாடைக்காற்று நீலாம்பரி பாடிவர, மாண்புமிகுக்கள், வந்து மரியாதையுடன் மாம்பழச்சாறு கொடுத்து கவுரவிக்க வீட்டிலோ அல்லது நட்சத்திர ஓட்டல்களிலோ கலர் கலரான உணவு வகைகள் இவர்களின் கவந்தப் பசிக்கு இரையாக கவலையோடு காத்திருக்கும். எறும்பு கூட தன் தேவைக்கு தன்னால் இயன்ற வரை பலாத்காரத்தைப் பிரயோகிக்கும். கேவலமாகப் போய்விட்ட இவர்களைக் கண்டு

"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்ட தில்''

என்ற தன் குறளுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இலக்கணமாக இருக்கிறார்கள் என்று கல்லாய்ச் சமைந்து நிற்கிறார் வள்ளுவர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com