Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே 2007
அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் கொடூர முகம்

அசுரன்

தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஆழிப் பேரலையிலிருந்து மக்களை மீட்பதற்காக அயல்நாடுகளில் இருந்து வந்த பலகோடி நிதியை சில "தொண்டு' நிறுவனங்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதை பார்த்த சாதாரண மக்கள் யாவரும் "இவர்களிடம் பணத்தைக் கொடுத்தால் இப்படித்தான். தேனெடுத்தவன் கையை நக்காமல் இருப்பானா?. உண்மையிலேயே உதவணும்னா செஞ்சிலுவை சங்கம் மாதிரி அமைப்புக்களுக்குத்தான் உதவணும். அதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்'' என்பதாக கருத்து தெரிவித்தனர்.

ஆனால், அண்மை ஆண்டுகளில் வெளிவரும் செய்திகளால் செஞ்சிலுவை சங்கத்தின் இந்த புகழுக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் அல்கொய்தாவினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செப்டம்பர் 11 விமான தாக்குதல்களின் பின்னர் வெளியாகியுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பான செய்திகள் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன. இதற்காக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பலகோடி ரூபாய் நன்கொடைகளில் பெரும்பகுதி அத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ அளிக்கப்படுவதற்குப் பதிலாக செஞ்சிலுவை சங்கத்தின் பிற நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது அந்த செய்தி.

அமெரிக்க மக்கள் மனதில் நீண்டகாலமாக குமுறிக் கொண்டிருந்த விசயங்கள் அண்மையில் ரிச்சர்ட் வால்டன் என்பவரால் எழுதப்பட்ட "வாசிங்டன் டைம்ஸ்' கட்டுரைகளில் வெளியாகியுள்ளது. ஆனால் செஞ்சிலுவை சங்கத்திற்கு இதுவொன்றும் புதிதல்ல. உண்மையில் செஞ்சிலுவை சங்கத்தின் மொத்த வரலாறுமே முறைகேடுகளின் வரலாறுதான். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீதான அதன் இனவெறி அணுமுறை, மனிதர்களை வணிகக் கண்டோட்டத்தில் பார்க்கும் அதன் தன்மை என்று இவற்றை பட்டியலிடலாம்.

பாரபட்சமான அமெரிக்க ஊடகங்கள், குடியரசுக் கட்சியுடனான செஞ்சிலுவை சங்கத்தின் சக்திவாய்ந்த கூட்டணி, என்பவற்றினூடான "உலக மனிதாபிமானி'' என்ற போர்வையில் செஞ்சிலுவை சங்கத்தின் மோசடிப்பயணம் தொடர்கிறது.

செஞ்சிலுவை சங்கமானது அமெரிக்க உள்நாட்டுப்போரின்போது அரச படையினர்க்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்டு சேர்ப்பதற்காக 1881 ஆம் ஆண்டு கிளாரா பார்ட்டன் என்பவரால் தொடங்கப்பட்டது.

1905ம் ஆண்டு தனது சாசனத்தில் “அமைதி காலத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பஞ்சத்தாலும் இயற்கை பேரிடர்களாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதை'' தனது இலட்சியமாகக் கூறியுள்ளது. பின்னாளில் அமெரிக்காவின் மொத்த இரத்த விநியோகத்தில் பெரும்பகுதி இதன் கையில் வந்தது.

இதன் நீண்டகால வரலாற்றைப் பார்க்கும்போது பேரிடர் மீட்புப் பணிகளில் இதன் இனவெறிக் கொள்கையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, 1929ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மிசிசிபி பள்ளத்தாக்கு மற்றும் லூசியானா பகுதி பாதிக்கப்பட்டபோது அங்குள்ள கறுப்பர்களான பண்ணைத் தொழிலாளர்களும் குத்தகை விவசாயிகளும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற தோட்ட உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். அப்பகுதியை விட்டு வெளியேற்றினால் மீண்டும் துயர்மிக்க, இந்த அடிமை போன்ற வேலைக்கு அவர்கள் திரும்பமாட்டார்கள் என்று அவர்கள் நம்பியதே காரணம். உண்மையும் அதுதானே.

செஞ்சிலுவை சங்கமும் அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றாமல் தற்காலிக வசிப்பிடங்களுக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது. சிறைபோன்ற அக்கொட்டடிகளில் அமைக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளையர்களாலும் இனவெறி தேசிய காவல் படையினராலும் அடித்து உதைக்கப்பட்டனர். உணவுகூட முதலில் வெள்ளையர்களுக்கு அளிக்கப்பட்டு விட்டு, ஏதும் மிஞ்சியிருந்தால் மட்டுமே கருப்பர்களுக்கு அளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது மிகச்சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் ‘சார்லஸ் டிரிவ்வால்’ உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செஞ்சிலுவை சங்கமானது பெருமளவு இரத்தத்தை இருப்பில் வைத்திருந்தது. இவரே 1941ல் செஞ்சிலுவை சங்க இரத்த வங்கியின் இயக்குநராகவும் இருந்தார். ஆனால், கறுப்பர்களின் இரத்தத்தையும் வெள்ளையர்களின் இரத்தத்தையும் தனித்தனியே வைத்திருக்க வேண்டும் என்று போர்த்துறை ஆணையிட்டதால் அவர் பதவி விலகினார். இது முட்டாள்தனமானது என்று அவர் கொதித்தார். ஆனால் செஞ்சிலுவை சங்கமோ இதற்கு இசைந்ததோடு, ஜிம் குரோ என்பவரை அப்பதவியில் அமர்த்தியது. போர் நடவடிக்கைகள் தொடங்கிய காலத்தில் செஞ்சிலுவை சங்கமானது கறுப்பர்களின் இரத்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவர்களிடமிருந்து கிடைத்த நிதியை மட்டும் பெற்றுக் கொண்டது. மேலும் போர்க்காலம் முழுவதுமே கறுப்பு சேவையாளர்கள் செஞ்சிலுவை சங்கத்தால் இனபாகுபாட்டுடனேயே நடத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் இந்த இரத்த பாகுபாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் 1960கள் வரையிலும் தென்பகுதியில் இந்நிலை தொடரவே செய்தது.

பலரும் செஞ்சிலுவை சங்கம் என்பது ஒரு தனியார் தொண்டு நிறுவனம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதன் சட்டபூர்வமான நிலையோ அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமெரிக்கப் பேராயமானது இது அரசின் கண்காணிப்பிலேயே இருக்குமாறு அமைத்துள்ளது. 50 பேர் கொண்ட செஞ்சிலுவை சங்க ஆட்சிமன்றக்குழுவில் 8 பேர் அமெரிக்க குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்களே ஆவர். அதோடு அமெரிக்க குடியரசு தலைவரும் இதன் கௌரவ தலைவராக உள்ளார். இப்போது அரசுச் செயலரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலரும் இந்த ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

இராணுவத்திடமிருந்து பொருட்களை வாங்கவும், அரசின் வசதிகளை பயன்படுத்தவும் அரசைப் போலவே செயல்படவும் செஞ்சிலுவை சங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இராணுவத்தினரும் செஞ்சிலுவை சங்கத்தில் பணியாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு, சுமார் 300 கோடி ரூபாய்களை அமெரிக்க அரசிடமிருந்து உதவியாகப் பெற்றிருக்கிறது. அமெரிக்க நீதிமன்றமொன்று செஞ்சிலுவை சங்கமானது சுயேச்சையானதாகவும் நடுநிலையுடனும் இருக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

செஞ்சிலுவை சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளும் அதிகாரிகளும் பெரும்பாலும் பெருவணிக நிறுவன இயக்குநர்களிலிருந்தோ அல்லது இராணுவத்தின் உயர் அதிகாரப் பொறுப்பிலிருந்தேதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் இதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில்7 பேர் முன்னாள் இராணுவ தளபதிகள் அல்லது கப்பற்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபருமாவர். தற்போதைய தலைவர் மார்ட்டி இவான்சும் ஒரு அöரிக்க கப்பற்படை துணைத்தலைவரே. அதோடு செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய இயக்குநரோ ஒரு பெருநிதி நிறுவனத்தின் இயக்குனர், செஞ்சிலுவை சங்கத் தலைவரான போனி மெக்கெல்வீன் ஹண்டர் யுனைட்டட் ஏர்லைன்ஸ், டெல்ட்டா ஏர்லைன்ஸ், ஏடிடி போன்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட பேஸ் கம்யூனிகேசன் என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநருமாவார். இந்நிறுவனம் தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதில் மிகவும் பேர் பெற்றதாகும்.

குறிப்பாக, கடந்த சில பத்தாண்டுகளாக செஞ்சிலுவை சங்கமானது குடியரசுக் கட்சியுடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது. மெக்கெல்வீன் ஹண்டர், இவான்ஸ் ஆகிய இருவருமே அதிபர் புஷ்ஷால் நியமிக்கப்பட்டவர்களே. மெக்கெல்வீன் ஹண்டர் 2000 ஆம் ஆண்டு முதல் குடியரசுக் கட்சிக்கு சுமார் 60 லட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவொரு ஆதாயம் கருதாத தொண்டு நிறுவனம் என்ற போதிலும் இதுவும் இலாபவெறி பிடித்தலையும் வணிக நிறுவனங்களைப் போலவே நடந்து கொள்கிறது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக 1980களில் எய்ட்ஸ் நோய் பரவல் குறித்த செய்திகள் வெளியானபோதிலும் அதனை செஞ்சிலுவை சங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாததைக் குறிப்பிடலாம். இன்றுவரையிலும் அமெரிக்காவிலேயே பெரிய இரத்த வங்கியாக செஞ்சிலுவை சங்கமே உள்ளது.

குறிப்பாக, 1982 மற்றும் 1983ல் தேசிய அளவில் தன்னிடமுள்ள இரத்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால் இரத்தம் செலுத்தப்படுவதன் மூலம் எய்ட்ஸ் பரவலை குறைந்தபட்சமாக தடுத்திருக்க முடியும். ஆனால், இதற்கு செஞ்சிலுவை சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்று அது எதிர்ப்பு தெரிவித்தது. புலனாய்வு பத்திரிகையாளரான ஜூடித் ரீத்மான் என்ற பெண்மணி எழுதிய "கெட்ட இரத்தம்' என்ற நூலில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்குவதையே மலிவானதாக செஞ்சிலுவை சங்கம் கருதியதாக எழுதியுள்ளார். கடந்த ஆண்டில், 1980களில் எய்ட்ஸ் மற்றும் ஹெப்பாடிடிஸ் சியால் பாதிக்கப்பட்ட இரத்தத்தை செலுத்தி ஆயிரக்கணக்கான கனடியர்களை நோயாளிகளாக்கியதற்காக கனடாவில் செஞ்சிலுவை சங்கம் குற்றவாளியாக ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனாலேயே 1990களில் பிற்பகுதியில் இரத்த வங்கிகளை நடத்துவதற்கு கனடாவில் செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முறைகேடான வரவு செலவு கணக்குகள், ஏமாற்றும் விளம்பரங்கள், வெளிப்படையான திருட்டு என்பன அண்மைய ஆண்டுகளில் செஞ்சிலுவை சங்கத்திற்கும் சொந்தமாகியுள்ளன. நீண்டகாலமாகவே, ஒரு பேரிடருக்காக வசூலிக்கப்படும் நீதி சங்கத்தின் பிற காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

எடுத்துக்காட்டாக, 1989ல் சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பூகம்பத்தின்போது செஞ்சிலுவை சங்கமானது சுமார் 225 கோடி ரூபாய்களை வசூலித்தது. ஆனால், அதில் சுமார் 45 கோடி ரூபாய்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் மீது 1995 ஓகலகாமா நகர குண்டு தாக்குதலின்போதும் 2001 சாண்டியாகோ தீயின்போதும் சுமத்தப்பட்டது. இதன் நியூஜெர்சி கிளை 1990களில் வசூலித்த பலகோடி ரூபாய் நன்கொடையில் பெரும் மோசடி நடந்ததும் சந்தி சிரித்த விசயங்கள். இவற்றை ஊடகங்கள் மறைத்த போதிலும், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி செஞ்சிலுவை சங்கமே மறைத்த போதிலும், செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் அவர்களால் உண்மையை மூடி மறைக்க இயலவில்லை.

1999ல் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் பெர்னாடின் ஹேலி அத்தாக்குதல்களின் பின்னர் அத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கும் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் உதவ நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனால், மிகக் குறுகிய காலத்தில் சாதனை அளவாக சுமார் 2500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

இதன்பின்னர்தான் உண்மை வெளியே வந்தது. இந்நிதி முழுவதும் பாதிக்கப்பட்டோருக்கே வழங்கப்படும் என்று கூறியதற்கு மாறாக நடந்து கொண்ட செஞ்சிலுவை சங்கத்தின் உண்மை முகம் அமெரிக்க பேராய விசாரணையின்போது வெளிப்பட்டது. “போதுமான நிதி திரட்டப்பட்டு விட்டதால் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது. அதோடு, இந்நிதி மூன்றில் இரண்டு பங்கு செஞ்சிலுவை சங்கத்தின் இதர தேவைகளுக்கே பயன்படுத்தப்பட்டது'' என்று அறிவித்தார் பில்லி தாசின்.

இதன் விளைவாக செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஹோலி பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதுடன் அந்த அம்மையாரை அடுத்து வந்தவர் இந்தி முழுமையாக வசூலிக்கப்பட்ட காரியத்திற்காகவே செலவிடப்படும் என்று உறுதி கூற வேண்டியதாயிற்று.

அமெரிக்காவை உலுக்கிய காத்ரினா சூறாவளியின்போது இதே சிக்கல்கள் ஏற்பட்டன. அட்லாண்டாவின் புறநகர் பகுதியிலிருந்த உதவி மையங்களிலிருந்து செஞ்சிலுவை சங்கம் வெளியேற்றப்பட்டது. நிதியுதவி தொடர்பாக தவறான வாக்குறுதிகளை அளித்ததே இதற்குக் காரணம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

விசித்திரமானதொரு நிகழ்வாக, சிகாகோவில் பல நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஒரு உதவி மையத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள் அமெரிக்க அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழியளிக்க கோரப்பட்டதால் அதிலிருந்து விலகினர். ரிச்சர்ட் வால்டன் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழில், “இவர்களால் திரட்டப்படும் நிதி வீணே. ஏனென்றால் அதில் சிறிதளவே பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக, நேரடியாக மருத்துவ உதவி அல்லது வீடு கட்டுவதற்காக கிடைக்கிறது அல்லது எதுவுமே கிடைக்கவில்லை'' என்கிறார்.

செஞ்சிலுவை சங்கத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவும் எத்தனை பேருக்கு இந்த உண்மைகள் தெரியும்?

உலக வரலாற்றிலேயே மிகப் பணக்கார நாடான அமெரிக்கா உயிர்கõப்பு நடவடிக்கைகளுக்கு இப்படியொரு கேடுகெட்ட அமைப்பை நம்பியிருப்பது உண்மையிலேயே நகைப்பிற்குரியதாக உள்ளது.

(இக்கட்டுரை ஜோ ஆலன் என்பவர் கவுண்டர் பஞ்ச் இதழில் எழுதி கட்டுரை அடிப்படையிலானது)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com