Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே - ஜூன் 2006
தமிழுக்கு அறிவென்று பேர்?

இரா. சிவக்குமார்

தமிழின் தொன்மை குறித்த செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்த தமிழ்க்குடி, தற்போது சென்னையிலிருந்து தென்கோடிக் குமரி முனை வரை தனக்கான எல்லையைச் சுருக்கிக் கொண்டு, மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் உண்மை. அடுத்து வருகின்ற தலைமுறை கொஞ்சமும் தமிழ் அடையாளமின்றி உளவியல் ரீதியாக ஆங்கில அடிமைகளாய் வாழ்வதற்கான அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் தமிழ் தனக்கான இருப்பை இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நீதி மன்றங்களில் தமிழ் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கோவில்களுக்குள் நுழையமுடியாமல் தீட்டுப்பட்டு வாசலில் அணிவகுக்கும் மிதியடிகளுக்குக் கீழே தமிழ் நசுங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுத் திரைப்படங்களெல்லாம் தமிழ் பேசி வரும் சூழலில், தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் இன்னமும் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கின்றன.

முதன்மைப்படுத்தப்படும் பொருளியல் சார்ந்த வாழ்வின் காரணமாய், தமிழரின் மெய்யியல் இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது. எங்கும் தமிழ் மங்கும் தமிழாகி, தலைநிமிர்ந்து நின்ற தமிழர் வாழ்நிலை துரும்பாகி, வந்தேறிக் கூட்டத்திற்கு விருந்தாகி, மொத்தத் தமிழினமும் ஏவல் பணிக்கு ஆளாகி வாழ்ந்து கொண்டிருக்கிறது. நுனி நாக்கு ஆங்கிலமே நாகரிகத்தின் அடையாளம் என்பது போன்ற தோற்றத்தை “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலகளாவிய தத்துவத்தை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே உணர்ந்துரைத்த ஓரினம் இன்று வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

Sindhu culture உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில், வரையறுக்கப்பட்ட விதிகளின் அனைத்துக் கூறுகளையும் கொண்டு இயங்கும் ஒரே மொழியான தமிழைச் செம்மொழியாக்குவதற்கும், அதன் கால மூப்பை நிர்ணயிப்பதற்கும் பெரும் போராட்டத்தையே முன்னெடுத்தும் கூட நடுவணரசிலுள்ள சில புல்லுறுவிகளால் இன்னமும் தமிழுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படும் நடுவணரசின் அலுவலகங்களிலும், நடுவணரசு கொண்டு வரும் திட்டங்களிலும், அதன் செயல்பாடுகளிலும் அத்துமீறி இந்தி திணிக்கப்படுகிறது. நடுவணரசில் எந்தக் கட்சிகள் பங்கேற்றாலும் அவைகளின் இந்தி மொழி வெறியில் சிறிதும் மாற்றமில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிஜி, ரியூனியன், மொரிசீயசு உள்ளிட்ட நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அந்த நாடுகள் தமிழை மொழிப்பாடமாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க தமிழ்நாட்டில் சட்டம் கொண்டு வரவேண்டிய இழிநிலை ஏற்பட்டமைக்காக தமிழர்களாகிய நாம் எந்த விதத்திலேனும் வருத்தம் கொண்டிருக்கிறோமா? புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் கணினித் தொழில்நுட்பத் துறையில் தமிழை அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “தமிழைச் சொல்லி,” இனத்தின் பெருமையைச் சொல்லி உண்டு கொழுக்கும் ஒரு கூட்டம் மொழிக்கு நேர்கின்ற அவலம் குறித்துக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

கடந்த சில மாதங்களில் தமிழின் பழமை குறித்த சில தொல்லியல் கண்டுபிடிப்புகள் தமிழினத்தின் எதிரிகளை மூச்சுடைக்கச் செய்திருக்கின்றன. தமிழ் பிராமி என்றழைக்கப்படுகின்ற முந்தைய தமிழ்க் கல்வெட்டுப் பொறிப்புகள், சமணப்படுகைகள் என்று அறியப்படும் சமணப் பள்ளிகளிலேயே இதுவரை கிடைத்து வந்தன. அவைகளனைத்தும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை ஆகும். அதற்குப் பிறகு கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்தும் வட்டெழுத்து வகையைச் சார்ந்தவையே. முந்தைய தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அனைத்தும் சங்க காலம் மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் உருவானவை. பழந்தமிழ்ச் சமூகம் செழுமையான இலக்கண, இலக்கிய வளத்தைக் கொண்டும், பொதுமக்களும் பங்கேற்ற புலவர் மன்றங்கள் பலவற்றைக் கொண்டும் இயங்கியிருப்பதை நமது சங்கப் பாடல்களில் பெரும்பாலானவை பதிவு செய்துள்ளன. கற்றறிந்த புலவர்களும், ஆய்ந்தறிந்த சான்றோர்களும் மக்களுக்கு கல்வியறிவு புகட்டுவதில் மிகப் பெரும் ஈடுபாடு கர்டடியுள்ளனர். இதனை சிலப்பதிகாரத்தில் வரும் “அறிவன் தேயம்” என்றொரு சொற்றொடர் மூலம் நாம் உணரலாம். தொல்காப்பியத்தைத் தொகுத்தளித்த தொல்காப்பியர் தனது ஒவ்வொரு பாடல்களின் இறுதியிலும் என்மனார் புலவர் என்ற வரிகளைக் கொண்டு முடித்திருப்பதிலிருந்தே அன்றைய அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் கல்வி நிலையை அறியலாம்.

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியத் தொல்லியல் துறை - சென்னை வட்டத்தின் கண்காணிப்பாளரும் முனைவருமான திரு.சத்தியமூர்த்தி தலைமையில் அகழாய்வு நடத்தப்பட்டது. அங்கே கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றின் உட்புறத்தில் பொறிக்கப்பட்ட காரி அறவ(ன்)த என்ற முந்தைய தமிழ் எழுத்தால், தமிழின் பெருமை மேலும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. அது மட்டுமல்ல, தமிழரால் உருவாக்கப்பட்ட, உலகமாந்தரின் நல்வாழ்வினை முன்னிறுத்திய நெறியொன்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் மெய்யியலுக்கு உறுதி சேர்க்கும் ஆசிர்வகம் என்ற சிந்தனை மரபின் நீட்சியே தற்போது ஆதிச்ச நல்லூரில் கிடைத்த முந்து தமிழ்ப் பொறிப்பு. இன்று தமிழகத்தின் குன்றுப் பகுதிகளில் காணப்படும் சமணப்படுக்கைகள் அனைத்தும் ஆசிர்வகத் துறவிகளுக்கானவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைதீக மரபுகளைத் தகர்ப்பதற்காக உருவான சமணம், புத்தம் போன்ற அவைதீக சமயங்களுக்கான தோற்றுவாயாக ஆசீர்வகம்தான் இருந்துள்ளது என்பதை தற்போதைய தொல்லியல் ஆய்வுகள் உணர்த்தத் தொடங்கியுள்ளன. வடக்கேயிருந்து தமிழகம் வந்த சமணத் துறவிகளால் தான் முந்து தமிழ் எழுத்துக்கள் கொண்டுவரப்பட்டன என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்றையும் இவ்வாராய்ச்சி தகர்த்துள்ளது. ஆசீர்வகத்தின் வேர்கள் தமிழகத்தில் தான் நிலை கொண்டுள்ளன என்று வரலாற்றாய்வாளர் ஏ.எல்.பாஷம் கூறிய கருத்து மேலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆசிர்வகமே தமிழரின் நெறியாக நின்று நிலைத்து உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தது என்பதை தற்போதைய கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.

தமிழ்ப்பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர், பழந்தமிழ் எழுத்துக்கள் பொறித்த சங்ககால நடுகற்கள் மூன்றினை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலுள்ள புலிமான் கோம்பை எனும் சிற்றூரில் கண்டுபிடித்துள்ளனர். இவை கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தமிழின் பழமைக்குச் சான்றாக இதுவரை கிடைத்த கல் எழுத்துக்கள் அனைத்தும் குன்றுப் பகுதியிலிருந்த சமணர் படுக்கையில்தான் அறியப்பட்டுள்ளன. அந்த நிலை மாறி தற்போது முதன் முறையாக மக்கள் வாழிடங்களில் முந்து தமிழ் எழுத்துக்கள் கிடைத்து வருகின்றன. அந்தக் காலத் தமிழ்ச் சமூகம் பரவலாக எழுத்தறிவு பெற்றுத் திகழ்ந்திருந்தது என்பதற்கு இதைவிட வேறு எது சான்றாக இருக்க முடியும்? புலிமான்கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்நடுகற்கள், இந்தியாவிலேயே காலத்தால் முந்தையது என்ற பெருமையைப் பெற்றுள்ளன.

அதுமட்டுமல்ல சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடுகற்கள் முதல்முறையாக தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் கறிப்பிடத்தக்கது. புலிமான்கோம்பைக்குச் சற்று அருகிலுள்ள “தெப்பத்துப்பட்டி” என்ற ஊரில் பழங்கால ஈமச்சின்னங்களும் கிடைத்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள தாண்டிக்குடி எனும் சிற்றூரில் நடத்திய அகழாய்வில் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள், பானைகள், பவளமணிகளையும் கண்டெடுத்துள்ளனர். தாண்டிக்குடி மலைப்பகுதியில் மிகப்பெரும் மக்கள் வாழிடம் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தமிழின் சிறப்பிற்கு மையமாய் அமைந்த மற்றுமொரு நிகழ்வு நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள். எழுத்துப் பொறிக்கப்பட்ட இக்கற்கருவிகள் ஒன்றில் தமிழர்களின் தொன்மைத் தெய்வமான முருகன் அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளான். இவற்றில் சிந்துவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கூறினாலும் கூட, அதிலுள்ள முருகனின் உருவம் தமிழரின் நாகரிகத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இக்கற்கருவி கி.மு.1500க்கு முற்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே ஊரில் இரும்புக் காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளும், கறுப்பு, சிவப்பு வண்ணத்திலான மட்கலங்களும், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஒடுகள், எலும்புத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்காகக் குழிகள் வெட்டுவதற்கும், விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கிழிப்பதற்கும் பயன்படும் இந்தக் கற்சருவிகள் கடினமான பாறைகளால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அது போன்ற கடினப்பாறைகள் அமைந்த பகுதி மயிலாடுதுûறையைச் சுற்றி இல்லாதபோதிலும் கடினப்பாறைகள் அதிகம் காணப்படும் சேலம், தென்னாற்காடு போன்ற பகுதிகளிலிருந்த பாறைகள் மூலமே அந்தக் கற்கருவி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று புவியியலாளர் சிங்கநெஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது. இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டி அதற்கப்பாலும் பரவியிருந்தது என்பதை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், வடக்கிலிருந்து வந்த நாகரிகத்தின் எச்சமே பழந்தமிழர் நாகரிகம் என்பதாகக் காட்டுவதில் சிலர் முனைந்து நிற்கிறார்கள். ஆனால் அந்தப் பொய்களுக்கு மத்தியிலும் கூட தமிழ் தன்னை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழின் தொன்மை அழிந்துபோன குமரிக் கண்டத்திலிருந்துதான் தொடங்குகிறது என்பதும், முதல் தமிழ்ச்சங்கமும், இடைத் தமிழ்ச் சங்கமும் அங்குதான் உருவாயின என்பதும் நமது சங்க இலக்கியங்கள் சுட்டும் உண்மை. தமிழ் மொழியின் எழுத்து வடிவம் எப்போது உருவானது என்பதற்கான ஆதாரமே இன்னும் கிடைக்காத நிலையில் உலகத்தில் உள்ள மொழிகளிலெல்லாம் மிக நீண்ட வரலாற்றையுடைய மொழியாகத் தமிழ் இன்றளவும் திகழ்கிறது. இதனை மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணரும், மேற்கத்திய தமிழ் அறிஞர்கள் கால்டுவெல்லும், பேராசிரியர் எமினோவும், ஜி.யு.போப்பும் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர் பேராசிரியர் நாம்சோம்ஸ்கி, இன்று உலகத்தில் அனைத்து மக்களாலும் வழங்கப்படுகின்ற மொழிகளெல்லாம் இரண்டு தொல் மொழியிலிருந்துதான் உருவாகின. தென்னாப்பிரிக்கப் பழங்குடி மக்களால் வழங்கப்படுகின்ற சுவாகிலியும், இன்றும் வழக்கிலிருந்து காலத்திற்கேற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் தமிழும்தான் அவ்விரு மொழிகள் என்று பதிவு செய்திருக்கிறார். தொன்மைப் பெருமையும், உருக்குலைந்த கட்டமைப்பும், சொல் வளமும், இலக்கண, இலக்கியச் செழுமையும் கொண்டு திகழ்கின்ற நம் தமிழ் அதன் பிறப்பிடத்தில் எங்ஙனம் தொலைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் அடையாளமாய்த் திகழும் மொழியை அழிக்க வேண்டும் என்று சொன்னான் ஹிட்லர். அதன் பொருளை உணர்ந்த ஹிட்லரின் சிஷ்ய கோடிகள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனத்தைக் கருவறுக்கும் அந்தக் கூட்டத்தை தமிழர்களாகிய நாம் அடையாளம் காணத் தவறிவிட்டால், தமிழன் என்றொரு இனமிருந்தது என்றே வரலாறு நாளை பதிவு செய்யும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP