Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே - ஜூன் 2006
மரபணு மாற்றுத் (மரண) தொழில்நுட்பம்
உயிர்க்குடுவையை உலுக்கிப் பார்க்கும் ஒரு விபரீத விளையாட்டு


ரேவதி

போகிறபோக்கில் எல்லாரும் உதிர்த்துச் செல்கிற ஒரு வார்த்தை ‘காலம் மாறிப்போச்சு’. உலக்கையை விழுங்கி ஜீரணிக்க வேண்டியிருக்கும் போது, தலைகீழ் மாறுதல்களையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிவரும் போது, சமாதானத்திற்காகச் சொல்லப்படுவது, “மாற்றம் ஒன்று தான் மாறாதது”. சுற்றிலும் அசுரவேகத்தில் நிகழ்ந்து வரும் மாறுதல்களைப் பற்றி ஒருமுறை ஒரு நகைச்சுவை நடிகரிடம் கருத்து கேட்கப்பட்டது. எளிமையாய் அவர் சொன்ன பதிலில் சிந்தித்துப் பார்க்க நிறைய விஷயங்கள் இருந்தன. அவர் இப்படிச் சொன்னார், “நான் சின்னப்பையனாக இருந்தபோது ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பார்கள். அப்போது ஆட்டுஉரல் அசையாமல் இருக்கும். குழவிதான் சுழன்று அரைக்கும். இப்போது மாவரைக்கும் இயந்திரத்தில் குழவி அப்படியே நிற்கிறது. உரல்தான் ஓயாமல் சுற்றுகிறது”. தலைகீழ் மாற்றம் என்பதைச் சொல்லாமல் சொன்னது இந்தப் பதில். இப்படிப் பலதலைகீழ் மாற்றங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மைச் சுற்றிலும் நடக்கும்போது, பல நேரம் நாம் - குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையராகவும், வெறும் வேடிக்கை பார்ப்பவராய் மட்டுமே நின்றுவிடுகிறோம். அந்த மாற்றம் அதிரடியாய் நம் வாழ்வைப்புரட்டிப் போட்டு, உருக்குலைத்து, சிதைத்த பின்னர்தான் கொஞ்சமாய் நாம் தூக்கத்திலிருந்து சற்றே கண் திறந்து பார்க்கிறோம். அதற்குள் பெருமளவு சீரழிவு நிகழ்ந்து விடுகிறது.

Farmer எடுத்துக்காட்டாக 10,000 ஆண்டுகளாய் வெற்றிகரமாய் உழவு நடந்துவந்த ஒரு தேசத்தில் - 661/2 கோடிமக்கள் இன்னமும் விவசாயத்தையே தங்கள் முழு முதல் வாழ்க்கை ஆதாரமாய் நம்பியிருக்கும் ஒரு நாட்டில் சென்ற நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சி என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு வந்த ஒரு வணிகத் தொழில்நுட்பம் ‘பசுமைப்புரட்சி’. நமது உழவர் வாழ்க்கையை தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருப்பதை காலங்கடந்துதான் - அதுவும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் தற்கொலை மூலம்தான், இந்தச் செய்தியைப் பற்றி கொஞ்சம் நம்மை யோசிக்க வைத்திருக்கிறார்கள் இவ்வளவு விலைகொடுத்த பின்னரும், நமது போராளி விதைகளையெல்லாம் இழந்து, கடனுக்குள் தேசமே மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், இன்னமும் பலருக்கு இந்த விஷயங்கள் போய்ச் சேரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

“இளைதாக முள்மரம் கொல்க,”

நம் முப்பாட்டான் வள்ளுவன் சொன்ன வாக்கை மறந்தே போனோம். முள்மரம் சிறியதாக முளைக்கும் போதே வெட்டிக்களைந்துவிடு என்று நம் தமிழ்மறை தலை தலையாய் அடித்துச் சொல்லியும், நம் தலைவிதியை ‘பச்சைப்புரட்டோடு’ பிணைத்துக் கொண்டதன் விளைவால், இன்று உயிர்ப்பலி மயானத்தீயில் வெந்து கொண்டிருக்கிறோம்.

‘பச்சைப்புரட்டு’ வர்த் தகர்கள் பார்த்தார்கள் இவ்வளவு சதிவேலைகளைச் செய்தபின்னரும், சூழலின் கற்பைச் சூறையாடிய பின்னரும், பாரம்பரிய அறிவை யெல்லாம் குரல்வளை நெறித்துக் கொன்ற பின்னரும், மண்ணை மட்டுமல்ல விஞ்ஞானி களாய் இருந்த விவசாயிகளின் மண்களையும் சிந்திக்கவிடாது மலடாக்கிய பின்னரும் - அவர்களின் ஏகாதி பத்தியப் பேராசை ஓய்ந்து விடவில்லை. இந்த ப(பி)ணம் தின்னிப்பேய்கள், பராசுரக் கம்பெனிகளின் ஒரே மதம் - சர்வாதிகாரம், ஒரே பிரார்த்தனை- மறுகாலனியா திக்கம், ஒரே வழிபாடு - நிரந்தர அடிமை, ஒரே பிரச்சாரம் - தொழில்நுட்பப்புரட்சி.

இந்த இரத்தம் குடிக்கும் ஓநாய்க் கம்பெனிகளுக்கெல்லாம், இப்போது, கொஞ்ச காலமாய் கடவுளாகும் ஆசை வந்திருக்கிறது. இலட்சோப இலட்சம் வருடமாய், ஒரு பெரும் ரிஷியைப்போல் ஆழ்ந்த தவத்தில் மூழ்கி, இயற்கை - பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறதே அந்த ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படையிலேயே கைவைத்து, புதிய கடவுளர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டு, கிளம்பியிருக்கிறது இந்த விபரீதக் கூட்டம்.

உயிர்க்குடுவையின் உள்ளே நுழைந்து, திறக்கக் கூடாத பூட்டுக்களையெல்லாம் திறந்து, விஷத் தொழில்நட்பத்தை உள்ளே விதைத்து உயிர்க்கோலமாம் பூமியையே ‘கோமாவில்’ முடக்கிப் பார்க்க மும்முரமாய் முனைந்திருக்கிறது படைப்புக் கடவுளின் மீதே கைவைக்கத் துணிந்திருக்கும் இந்த இதயமற்றவர்களின் குழு.

எப்போதும் போல எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், ஏன்? எதற்கு இந்தப்பாதை? இந்தப் பயணம் சரியானதுதானா என்று யோசிக்க மறுத்து, போகிற போக்கில் இந்தியாவும் இந்த விஷவியாபாரப் பதிவேட்டில் தன் பெயரையும் எழுதிக் கொண்டது மற்றுமொரு அடிமைச் சாசனத்தின் முதல் அத்தியாயம் அதுதான்“மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்.”

BT காட்டன் என்ற பெயரில் உள்ளே நுழைந்த மரபணு மாற்று விதைகள் ஆயிரமாயிரம் உழவர்களை கைப்பிடி சாம்பலாக்கி, தாங்கள் எப்படிப்பட்ட மரண விதைகள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு மஹாராஷ்டிராவின் வார்தா பிரதேசம் ஒவ்வொரு நாளும் தன் மண்ணின் மைந்தர்களை தற் கொலைப் படையலாக்கி, பத்திரிக்கைகளின் முதல் பக்கங் களை கண்ணீரால் அச்சுக் கோர்க்கிறது. உயிர் விட்டவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது, மரண விதையை விதைத்திருந்தார்கள்.

“சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே!

செம்மை மறந்தாரடி,”

- இப்படிக் கதறினானே பாரதி, அந்த நடிப்புச் சுதேசிகள் பல ஆயிரமாய் பெருகிப்போயிருக்கும் இன்றைய இந்தியாவில், இவ்வளவு மரணங்களுக்குப் பின்னரும், மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மகத்தானதொரு விஞ்ஞான சாதனையாக முன் வைக்கப் படுகிறது, ஒரு விபரீத வியாபாரத் தொழில்நுட்பம் அறிவியல் வளர்ச்சியாக, வளர்ச்சியை நோக்கிய நல்ல மாற்றமாக பொய்ப்பிரச்சார அங்கி அணிந்து, பேயாட்டம் போடு கிறது, கடந்த சில ஆண்டு களாகவே உயிரித் தொழில் நுட்பப்படிப்பிற்குத்தான் ஆண்டுக்காண்டு மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சுயநிதிக் கல்லூரிகளுக்கு அட்சய பாத்திரமாகவும், பேராசிரியர்களுக்கு வருங்காலத்திற்கான உலகை ஆளும் கல்வியாகவும், காட்சிதந்து கொண்டிருக்கும் ‘மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்’ என்பது உண்மை யிலேயே எந்த அடிப்படையில் இயங்குகிறது. அதன் உண்மை முகம்தான் என்ன? எங்கோ நடக்கும் ஏதோ ஒரு தொழில்நுட்ப மாற்றம் ஒரு தனிமனிதனான என்னை என்ன செய்யும்? இந்த வினாக்களை எழுப்பும் விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இந்த நிமிடம் மிகவும் அத்தியாவசியமானது.

ஒவ்வொரு உயிரியும் அடிப்படையில் ‘செல்’ என்னும் கட்டமைப்பினால் தான் ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவியல் ஆழமாய் நிரூபித்திருக்கிறது. கட்டடங்கள் செங்கற்களால் அடுக்கப்பட்டிருப்பதைப் போல, உருவாகியிருப்பது போல ‘செல்’ உயிரின் ஆதாரம்.

இந்த மந்திர செல்லுக்குள்ளே குரோமோசோம்கள் என்று கொஞ்சம்பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் - விலை மதிப்பில்லா ஒரு பொக்கிஷத்தோடு. அவைதாம் மாண்புமிகு மரபணுக்கள் (ஜீன்கள்).

எதிர்வீட்டு நாய்க்குட்டி எப்போதும் தன்னைப்போல் முடிக்குள் முகத்தை தேட வேண்டியிருக்கும் சடை நாய்க்குட்டியையே பெற்றெடுப்பதற்கும், உங்கள் தாத்தாவைப்போல நீண்ட காந்தி காதுகளோடு நீங்கள் பிறந்திருப்பதற்கும், இந்த கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணியவையான மரபணுக்கள் தான் பொறுப்பாளிகள். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பரபரப்பாய் எல்லா வேலைகளும் பல நாட்கள் நடந்து முடிந்தபின் பத்திரிகைகள் ஒரேபோல் அச்சாகி வெளியே வந்துவிழுமே சுடச்சுட. அதுபோல ஒரு கத்தரிச் செடியின் காய்கள் எல்லாம் ஒரே மாதிரி வயல்களில், அரையடி நீளத்தில் காய்த்திருப்பதற்கும், விதை குறைந்து சதைப் பிடிப்பு அதிகமாய் இருப்பதற்கும், குறைந்த தண்ணீரில் நிறையக்காய் பிடிப்பதற்கும் இப்படி அதன் தலையெழுத்து முழுவதும் ஜீன்கள் பாஷையில் தான் எழுதப்பட்டிருக்கிறது.

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக - வெளியே தெரியும் இயற்கைப் படைப்புக்களோடு இணைந்து வாழ்வது எப்படி என்று முயற்சிக்காமல் ஊழிக்கூத்து நடத்தி பேரழிவை நோக்கி பூமியை உருட்டிக் கொண்டிருக்கும் - இந்த பகாசுர வியாபாரிகள் இப்போது கையிலெடுத்திருப்பது மரபணு மாற்றுத் தொழில்நுட்பம். ஜீன்களுக்குள் புதைந்து கிடக்கும் உயிர் இரகசியங்களை வெடித்துப்பிளந்து, தங்கள் வங்கிப் பாஸ்புக்கை உள்ளே புதைத்து, உயிர்ச் சங்கிலிகளில் பெரும் குழப்பத்தை விளைவித்து, மரபணு மாசுபாட்டை (Gena pollution) எங்கும் பரப்பி சுற்றும் உலகை ஸ்தம்பிக்க வைப்பது தான் இந்த ஏகாதிபத்தியக் கம்பெனிகளின் நச்சுக்கனவு.

இவர்கள் விதைக்கும் இந்த மரபணு உலகில், எது - யாரால் உருவாகியிருக்கிறது என்றோ, யாருக்குள் வேறு எது உள்ளேயிருக்கிறது என்றோ அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாது. பாக்டீரியாவிற்குள் மனித ஜீன்கள் - குரங்கின் மரபணுக்குள் எலியின் உடலில் - மரத்தின் உயிர் அணுக்கள் வாழைப் பழத்துக்குள் - சாப்பிடும் சோற்றில் தவளையின் மரபணுக்கள்.

இனி உயிர்கள் பிறக்க அப்பாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம்; எந்த மதக் கடவுளுக்கும் இனி இங்கே வேலை எதுவுமில்லை; டாலியைப்போல அப்பா, அம்மா இல்லாமல் அச்சடித்தாற்போல ஒரேமாதிரி ஆட்டுக்குட்டிகளை சிறு ஆய்வுக் குழாய்களில் ‘படைக்க’ முடியும். மகனும் தேவையில்லை; மகளும் தேவையில்லை - உங்கள் சந்ததி நிலைத்திருக்க. உங்கள் உடலிலிருந்து ஒரே ஒரு செல், வேர்செல் கிடைத்தால் போதும், எத்தனை அடிமைகள் உங்களுக்குத் தேவை - ஆய்வுக்கூடத்திற்கு உடனே ஆர்டர் செய்யலாம்.

இனிவரும் நாட்களில் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டி வந்தால், கொஞ்சமும் அச்சப்படாதீர்கள் மார்க்கெட்டில் உங்கள் பாக்கெட்டிற்குத் தகுந்தபடி எந்த ஒரு உயிரியின் எந்த ஒரு பகுதியும் உங்களுக்குப் பொருத்தப்படலாம் என்ன கொஞ்சம் முன்கூட்டியே தெரிந்தால்தான், உங்கள் உறுப்புக்களின் மரபணுவை, குரங்குக்குள்ளே, கழுதைக்குள்ளே புதைத்து, உங்களின் உபரி உறுப்பு ஒன்றை அங்கே வளர்த்து வர முடியும். என்ன ஒன்று; உண்மையிலேயே மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் சொன்னது போல், “எல்லாரும் எல்லாமாகவும் இருப்போம் காண்டாமிருகத்தின் தம்பியாகவும், கரப்பான் பூச்சியின் அக்காவாகவும் இனிநாம் இருக்க வேண்டி வரலாம்”.

இனிமேல் யாரும் தங்களை சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்றெல்லாம் அடையாளப்படுத்த முடியுமா என்பது கொஞ்சம் ஆராய வேண்டிய கேள்விதான். தக்காளிப்பழம் சந்தித்திருக்கும் சவால்கள் நிறையக் கேள்விகளை நமக்குள் அலை அலையாய் எழுப்புகின்றன. தக்காளியை கீழே போட்டாலும், உடையாமல் இருக்க வைக்க குதித்துக் குதித்துப்போகும் தவளையின் காலில் உள்ள மரபணுக்ககளைச் சேர்த்து ஆய்வுகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

லேசாக இருக்கும் தக்காளியின் மேல்தோல் வெடிக்காமல் இருப்பதற்காக, குப்பையைக் கிளறினாலும் கிழிந்தபோகாத கோழிகளின் கால்சவ்வு ஜீன்களை தக்காளிக்குள் பொருத்தும் வேலை நடந்துவருகிறது. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பனி நீரூற்றுக்களின் ஐஸ் கட்டிகளுக்குள்ளேயும் உயிர்பிழைத்திருக்கும் ஒருவகை மீன்களின் மரபணுக்களை தக்காளியில் இப்போது திணிக்க முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. இந்தத் தக்காளிகள் அதிகநாள் குளிர்பதனக்கிடங்கில் கிடந்தாலும் ஒன்றும் ஆகாமலிருக்கும் என்பதற்காகத் தான் இந்த ஆய்வுகளாம்.

விழிப்புணர்வோடு தேடிப்பார்த்து விட்டேன். விடை விளங்கவில்லை. என்ன பெயரிடுவது? இந்தப் ‘புதிய பழம்’ - சைவமா? அசைவமா? அதற்கு என்ன பெயர் தக்காளியா? மீன்களா? ப்ளீஸ் கொஞ்சம் உதவுங்களேன்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com