Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே - ஜூன் 2006
முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை

வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மதுரை மாவட்டத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சங்களின் பாதிப்பால் மக்கள் மடிந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் சேதுபதி மன்னர் வைகையாற்றில் வருகின்ற வெள்ளத்தை தடுத்து நீர்ப்பாசன திட்டங்களை நிறுவிட திவான் முத்து இருளப்ப பிள்ளையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் நிதி வசதியில்லாமல் திட்டம் நிறைவேறவில்லை.

Periyar dam 1808 ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் கால்டுவெல் இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்து தண்ணீரை திரும்ப வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார், அதுவும் நடைபெறவில்லை. 1850 ஆம் ஆண்டு சின்ன முல்லை ஆற்றில் அணைகட்டும் பணிகள் துவக்கப்பட்டன. கொடிய நோய் பரவியதால் அப்பணியில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. மேஜர் ரைவீஸ், மேஜர் பெயின் இப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர். 1867ல் 162அடி உயரத்திற்கு பெரியாற்றில் ரைவிஸ் முயற்சியால் காடு மலைகளை வெட்டி மண் அணை கட்டப்பட்டது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.17.49 லட்சம் ஆகும். அதன் பின்பு லெப்டினட் பென்னிகுயிக் பொறுப்பேற்றார். பென்னிகுயிக் தன்னுடைய சொந்த செலவில் தேனி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயன்படும் முறையில் அணைகட்ட உத்தேசித்தார். சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில் அணை பணிகள் கற்களாலும், செங்கற் கொடியாலும் உருவாக்கப்பட்ட இந்த அணையை பாராட்டி அவர் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்தது அப்போதைய ஆங்கில அரசாங்கம்.

கிட்டதட்ட நூறாண்டுக்கும் மேலாக பெரியாறு திட்டம் எவ்வித பிரச்சனையில்லாமல் இருந்த போது 1963ல் இந்த அணை பலவீனமாக உள்ளது என்று “மலையாள மனோரமா” பத்திரிகை எழுத கேரள அரசு இதனை பிரச்சனையாக்கியது. மத்திய அரசு குழு பார்வையிட்டு, தமிழக - கேரள அதிகாரிகள் பேசி அணை வலுவாக உள்ளது என அறிவித்தது.

1978ஆம் ஆண்டு திரும்பவும் கேரள அரசாங்கம் முரண்டு பிடித்தது. 152 அடியிலிருந்து 145 அடி வரை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரளம் உத்தரவு கேட்டதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. 1979ஆம் ஆண்டு மத்திய நீர்வள கவுன்சில் தலைவர் டாக்டர் கே.சி.தாமஸ் அணை நல்ல முறையில் இருப்பதாக அறிவித்தார். மேலும் அவர் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தல், அணையின் எடையை அதிகரிக்க மற்றும் அதற்கான மேற்புறத்தில் வலு சேர்க்கவும், அணையின் பின் பகுதியில் காங்கிரிட் தடுப்பை அமைத்தலும் என்ற யோசனையை தெரிவித்தார். தமிழக அரசும் தனது செலவிலேயே இந்த யோசனைகளை ஏற்றுக் கொண்டு கட்டுமான பணிகளை செய்தது. கேரளாவின் பல தடங்கல்களையும் தாண்டி பணிகள் நடைபெற்றன. அணையில் 152 அடி அளவுக்கு நீர் தேக்க அணை பலப்படுத்தப்பட்டது. 9அடி அணை சுவரை உயர்த்தி நீர் தேக்க அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது.

அணையில் இயற்கை சேதாரங்கள் பூகம்பம், நில அதிர்வு குறிதது அறிய வேண்டிய வசதிகளும் செய்யப்பட்டன. ரூ 12.5 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு செலவு செய்து அணையை நல்ல நிலையில் மராமத்து செய்தும் கேரள அரசு இறங்கிவரவில்லை. பெரியாறு அணையால் கேரளாவில் ஐந்துச் மாவட்டங்களுக்கு பாதிப்புள்ளது என்ற தேவையற்ற குற்றச்சாட்டு எழுப்பி, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை 27-2-006 அன்று வழங்கியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 6 அடி உயர்த்தினால், கூடுதலாகக் கிடைக்கும் தண்ணீர் 1.55 டி.எம்.சி., 100 ஆண்டு காலமாக அணையில் சேர்ந்த சகதியும் வண்டலும் 15 அடி படிமானம் உள்ளது. அது 0.86 டிஎம்சி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. நீர் மட்டத்தை 6 அடியாகக் கூட்டுவதால் கிடைக்கும் 1.55 டிஎம்சி நீரில் சகதியையும் வண்டலையும் கழித்தால் 0.69 டிஎம்சி தண்ணீர்தான் கிடைக்கும். இந்த அளவு தண்ணீரைக்கூட தர கேரள அரசுக்கு மனமில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல் செய்யாமல் இருப்பதற்காக, சட்டபேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (சட்ட திருத்த) மசோதா 2006 என்ற பெயரில் நிறைவேற்றி உள்ளது கேரள அரசு. இதன்மூலம் மாநில அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை அதிகரிக்க இயலாது.

தனக்கு சாதகமாக இல்லை என்பதால் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி கேரள அரசு செயல்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவது இந்த நடவடிக்கை. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசிய பின்பு அளித்த செய்தியாளர் பேட்டியில் முல்லை பெரியாறு பிரச்சனையில் இரு மாநில அமைச்சர்கள், மட்டத்திலான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

இங்கு அச்சுதானந்தனைப் பற்றிய செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. முல்லை பெரியாறு மற்றும் தமிழக நதிநீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு எதிரான மிகவும் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருபவர் அச்சுதானந்தன் ஆவார். இதே அச்சுதானந்தன் முன்பு கம்பி, கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் முல்லை பெரியாறு அணையைத் தாக்கச் சென்றவர் ஆவார்.

மேற்கண்ட அச்சுதானந்தன் இன்று கேரள மாநில முதல்வராக இருக்கிறார். ஆகவே இந்தப் பிரச்சனையை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஏற்கெனவே பலமுறை பேச்சு வார்த்தை பல மட்டங்களில் நடத்தியும் தோல்வி கண்டு தான் பிரச்சனை நீதிமன்றம் சென்று ஓரளவு நியாயம் கிட்டியுள்ளது. ஆகவே மீண்டும் பேச்சுவார்த்தை என்று கூறுவது முல்லை பெரியாறு பாசன விவசாயிகளுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்

ஆகவே தமிழக அரசு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப் படுத்த மத்திய அரசினை வலியுறுத்தி தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்.

தமிழகக் கிராமங்களில் தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருட்கள் தான் கேரளாவுக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியார் அணையிலிருந்து தண்ணீர்விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட தமிழக விவசாயிக்குக் கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன். பெறுவதை எல்லாம் மட்டும் பெற்றுக் கொண்டு கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று அங்கங்கே அணைகள் கேரள அரசியல்வாதிகள் கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுகள். இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியார் அணை, பவானி என்று சுற்றிச் சுற்றி தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தான் தமிழனின் குணம். பாவம் தமிழன்.


08-07-1980 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் திரு.பழ நெடுமாறன் அவர்கள் இந்தப் பிரச்சனையை முதன்முதலாக எழுப்பினார். நீர்மட்டம் 136 அடியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 13.5 டிஎம்சி தண்ணீர் இழப்பு ஏற்படுவதுடன் 80,000 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை என்பதையும் விளக்கினார். அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.

கேரள அமைச்சரான பாலகிருஷ்ணபிள்ளை மாதந்தோறும் அணைக்கு வந்து பணிகளில் குறை சொல்லிவிட்டு இடையூறும் செய்வார். வருகைக் குறிப்பேட்டிலும் எழுதுவார். ஆனால் தமிழக அமைச்சரோ வருவதேயில்லை. பாலகிருஷ்ணபிள்ளை செய்வதைச் சொல்லி தமிழக அலுவலர்கள் அமைச்சரை அணைக்கு அழைத்துக் சென்றனர். அமைச்சரோ கீழ்க்கண்டவாறு எழுதினார். “பெரியாறு அணையைப் பார்த்தேன் அதன் இயற்கை எழிலில் மயங்கினேன்” இதற்குப் பின்னால் அமைச்சர்களை அழைக்கும் எண்ணத்தையே அனைவரும் கைவிட்டனர். பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பாலகிருஷ்ணபிள்ளை பதவி விலகிச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.

தீர்ப்பும் விளைவுகளும்

உச்ச நீதிமன்றம் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை நீதிபதிகள் சபர்வால் தக்கர் மற்றும் பாலசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச் 27-02-2006 தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பிலிருந்து சில பகுதிகள்:

நில நடுக்கம் உட்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.

மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனைகளின்படி சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்ய கேரள அரசு சம்மதிக்கவில்லை.

“அணையின் எல்லாப்பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அணையின் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கான எந்தக் காரணமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.”

“மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனைகளின்படி அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதியளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பைத்தரும் என்று நம்புகிறோம்.”

ஆனால் கேரள அரசு சட்டமன்றத்தில் இதனைத் தடுக்க அவசரச் சட்டம் போடப்போவதாகக் கூறியுள்ளது. 1886 மற்றும் 1970 ஒப்பந்தங்களின்படி அணையும் அதனைச் சார்ந்த இடங்களும் தமிழ்நாடு குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த 8100 ஏக்கர் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் தமிழகத்திற்குச் சொந்தம். கேரள சட்டமன்றம் இதனைத் தடுக்க முடியாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அணையின் கதவுகளை (Shutters) இறக்கிவிடுவதும் அணைப்பகுதிக்கு யார்வந்தாலும் அனுமதிக்கக்கூடாது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணைக்கு அரசு அலுவலர்கள் உட்பட யாரும் நுழைய வேண்டுமென்றால் அவர்களது பெயர் அணைக்குச் செல்வதற்குக் காரணம் என்பதை பல நாட்களுக்கு முன்னால் கொடுக்க வேண்டும். கேரள அரசு அனுமதி அளித்தால்தான் போகலாம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com