Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மே - ஜூன் 2006
முழு அப்பம் கேட்கும் பார்ப்பன குரங்குகள்

அ.முத்துக்கிருஷ்ணன்

AIIMS, IIT, IIM ல் எல்லாம் எப்படி இடஒதுக்கீடு அளிக்க முடியும்’ என்று சமீபத்தில் பத்திரிகைகளை கரைத்து குடிக்கும் சுபாவம் உடைய ஒருவர் என்னிடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார். விவாதம் நடக்கும் பொழுது தான் புலப்பட்டது. அவருடைய புரிதலில், அந்த உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் பிராமனர் சங்கத்தால் நடத்தப்படுபவை என அவர் அதுகாறும் நம்பி வந்தது. மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்ற மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அறிவிப்பு மனிதவள மேம்பாட்டு துறையிலிருந்து வந்தது தான் நாடு முழுக்க தீப்பற்றியது போலான தோற்றத்திற்கும், தில்லியிலுள்ள அஐஐஙந ல் மட்டும் தீ பிடித்ததற்கும் காரணம்.

Anti reservation அர்ஜுன் சிங் தனது அறிக்கையை வெளியிட்டு இரண்டு வாரங்கள் வரை இது ஏதோ அவரது சொந்த பிரச்சனை அல்லது வீட்டு விவகாரம் போலத்தான் அரசியலாகவும், மீடியாவிலும் கையாளப்பட்டது. இந்த தேசத்தின் பூர்வகுடிகளான கோடானு கோடி ஜனங்களின் அடிமை வரலாறு தொடர்புடைய பிரச்சனையாக இதை மீடியாக்கள் மாற்றத் தவறியது. அதை விடுத்து ஆங்கில சேனல்கள் சர்ச்சையை தலைகீழாக மாற்ற முயற்சி செய்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் ‘உள்ளவா‘ தான் பெரும்பகுதி ஆங்கில சேனல்களில் பணிபுரிவதால் அவர்கள் அஐஐஙந டாக்டர்களின் போராட்டங்களை சுதந்திர போராட்டத்தை விட ஒரு படி மேலாக சித்தரிக்க ஒவ்வொரு நிமிடமும் பாடு பட்டார்கள். பார்ப்பன மனசாட்சி துடிதுடித்தது. இந்த துடிப்புகளுக்கு பின் உள்ள சுயநலத்தையும், இடஒதுக்கீட்டால் ஏற்படும் தேச பொது நலத்தையும் ஒரு பார்வை பார்க்கலாம்.

2000 ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனியத்தின் நிழலில், அடிமை சமுதாயமாகவே இந்திய சமூகம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களுடன் 400 ஆண்டுகால கூடாநட்பையும் நாம் வரலாறு நெடுகிலும் காணலாம். இந்த தேசத்தின் பூர்வகுடிகளை வந்தேறிகள் அடிமையாய் வைக்க இன்றளவும் துடித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது இங்கு நடக்கும் ஒவ்வொரு செயலும். சுதந்திர இந்தியாவில் மூச்சு திணறாமல் கொஞ்சம் சுவாசித்துக் கொள்ள அம்பேத்கரின் அரசியல் சாசனம் வழிவகை செய்தது. அரசு வேலைவாய்ப்புகளில், கல்வி நிறுவனங்களில் என யாவற்றிலும் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை வெளிக் கொணர்ந்து அவர்கள் உலகை ஸ்பரிசிக்கும் முயற்சிகள் துவங்கின. அதிகார வர்க்கத்தின் சகல தளங்களிலும இயங்கும் பார்ப்பனியம் முனைப்புடன் பல முயற்சிகளை மழுங்கடித்தது.

1955ல் நாடாளுமன்ற உறுப்பினர் கலேகர் (Kalekar) தலைமையிலான குழுவை மத்திய அரசாங்கம் நியமிக்கிறது. தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டபிறகு அந்த அறிக்கை 70% இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்கிறது. முழி பிதுங்கிய மத்திய அரசாங்கம் அந்த அறிக்கையை கண்டு கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்துக்குள் இயங்கும் பார்ப்பனியம் எந்த ஒதுக்கீடாக இருந்தாலும் அது மொத்தத்தில் 50%க்குள்தான் இருக்க வேண்டும் என தனது கடிவாளத்தைக் கட்டுகிறது. தொடர் போராட்டங்களின் விளைவாக 1978ல் பி.பி.மண்டல் (B.P.MANDAL) தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. 49.5% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்யும் தனது அறிக்கையை அந்த குழு 1980 டிசம்பரில் சமர்ப்பிக்கிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு 1990ல் அந்த அறிக்கையை தூசி தட்டி எடுத்தார் வி.பி.சிங். மண்டல் கமிஷன் என்ற சொல் ஊடாக புழக்கத்திற்கு அப்பொழுது தான் வந்தது. மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது. காங்கிரஸ் கூட அதை எதிர்த்து பி.ஜே.பியுடன் களமிறங்கியது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இல்லையெனில், போராட்டம் எதுவும் அன்று நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தங்களின் சுயநல அரசியல் பொய்களுக்காகவே, இதை அன்று பூதாகரமாக மாற்றினார்கள். (இன்று நிலைமை மாறி காங்கிரஸ் - பி.ஜே.பி. இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.) பி.ஜே.பி இந்திய அரசியலில் வேரிட்டது இரண்டு தளங்களில் - மண்டல் அறிக்கை மற்றும் பாபர் மசூதி விவகாரம்.

மண்டல் அறிக்கை இடஒதுக்கீட்டை மட்டும் பரிந்துரைக்கவில்லை. அது “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உகந்த கல்வி சூழல் இன்றைய அரசு கல்வி நிறுவனங்களில் இல்லை, அதனால் அவர்களுக்கான பிரத்யேக தொழில் கல்வி மையங்கள், மேற்படிப்பிற்கான சிறப்பு வகுப்புகள், என புதிய கல்வி மற்றும் கலாச்சார சூழலை உருவாக்கவும் உத்தரவிட்டது. நடப்பில் உள்ள கல்வி மையங்களை சீர்திருத்தாமல் அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அனுமதித்தால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று மிக நுணுக்கமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தது அந்த அறிக்கை.
மண்டல் பரிந்துரையை மிஞ்சுகிற வகையிலான 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே அமலில் உள்ளது. தென் இந்திய மாநிலங்களில் ஏறக்குறைய 49 - 50% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

தென் இந்திய சமூகம் மனம் உகந்து இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியது. நாராயண குரு, பெரியார், அயோத்திதாசர் வாழ்ந்த மண்ணுக்கான சான்றுகளே. இவை மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினருக்கான 22.5% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இப்பொழுது அதே நிறுவனங்களில் 27% ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்க வேண்டும் என்பது மண்டல் அறிக்கையின் மற்றொரு பரிந்துரை. 22.5% இடஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. ஆனால் 27% ஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் கெட்டு விடுமாம். பொது பிரிவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது தான் அவர்களின் மறைமுகக் கவலையே.

உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வு வகுப்புகளை FIIT, JEE நடத்துகிறது. வருடாந்திர கட்டணம் ரூபாய் நாற்பதாயிரம். இந்த தொகையை கொடுத்து மேட்டுக் குடியினர், பொருளாதார வசதி படைத்தோர் தான் சேர இயலும். இங்கு படிப்பவர்கள் தான் வருடந்தோறும் 30% இடங்களை கைப்பற்றுகிறார்கள்.

இவர்களை போலவே அனைவரும் நுழைவு தேர்வை எழுதுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எல்லா நடைமுறைகளும் பின்பற்றித்தான் மற்ற வகுப்பினர் அனுமதிக்கப்படுகிறார்கள். நம் பத்திரிக்கைகள் எழுதுவதையும் அந்த தில்லி மருத்துவர்கள் பேசுவதையும் பார்த்தால் ஏதோ மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள். தங்கள் ஜாதி சான்றுகளுடன் வந்தால் அனுமதிக்கப் படுவார்கள் என்பது போல் உள்ளது. உதாரணத்திற்கு, 3000 மாணவர்களை இந்த ஆண்டு இந்தியா முழுவதிலுமுள்ள IIT களில் அனுமதிக்கலாம் என்றால், அதில் 27% - 810 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். 810 இடங்களை கைப்பற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி இந்த இரண்டு லட்சம் மாணவர்களுமே முட்டாள்கள் இவர்கள் அனுமதிக்கப்பட்டால் தரம் கெட்டுவிடும்.

தனியார் மருத்துவ கல்லூரிகள், மற்றும் பல அரசு மருத்துவ கல்லூரிகள் மாணவர்களை பெரும் தொகை பெற்று கொண்டு சேர்த்துக் கொள்வதை நாம் நன்கு அறிவோம். கடந்த ஆண்டு கூட என்.டி.டி.வி ரகசிய காமிராவுடன் இந்த பேரங்களை அம்பலப்படுத்தியது. பட்ட மேற்படிப்பு அதை விட தறிகெட்டு கிடக்கிறது. M.Ch -80 லட்சம், M.S -60 லட்சம், M.D. -45 லட்சம் என தேசமெங்கும் கூவி விற்கப்படுகிற மருத்துவ படிப்புகளால் தரம் கெட்டு விடவில்லையாம். இதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்களாம்.

மருத்துவத்தை படித்தவுடன் இவர்களில் 99% பேர் தங்களின் சுயநல கொள்ளைக்கு மட்டுமே தொழிலை அர்ப்பணிக்கிறார்கள். மருத்துவ தொழிலின் எல்லா அறங்களையும், இந்துமகா சமுத்திரத்தில் கரைத்தாகி விட்டது. அரசாங்கம் ஆயிரம் கோடிகளை இவர்களுக்காக செலவிடும் பட்சத்தில், சில புதிய நடைமுறைகளை அமுல்படுத்தலாம். பயிற்சிக்கால மருத்துவர்களின் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அரசு தலைமை மருத்துவ மனைகளில் ஓராண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மலைவாழ் மக்களிடம், மருத்துவம் இன்னும் எட்டிப்பார்க்காத கிராமப் புறங்களில் சிகிச்சையளிப்பதை நடைமுறையாக்கலாம். இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தான் பட்டங்கள் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் காலத்தில், புறக்கணிக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்று மருத்துவர்களின் கொள்ளை வெறிகளைத் தணிக்கக் கூடும்.

AIIMS உள்பட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசு பணியிலிருந்து கொண்டே விதிகளுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களின் சொந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அரசு மருத்துவமனைகளிலிருந்து தான் கடத்தி செல்கிறார்கள். அந்த தரகர் வேலைக்கு அவர்கள் பயன்படுத்துவது இந்த பயிற்சி மருத்துவர்களையே. பயிற்சி காலத்திலேயே பணம் சம்பாதிக்கும் வழி. மொத்த நாட்டின் மருத்துவத்துறையை சீரழித்துவிட்டு, தரம், தரம் என யாரை ஏமாற்றுகிறார்கள்.

21 சதவிகித இந்தியர்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவச் செலவுகள் கிராமப்புறங்கள் கடன் வலையில் சிக்குவதற்கான மிக முக்கிய காரணம். தனியார் மருத்துவமனைகள் கந்துவட்டிக் கடைகள் போல் மாறிவிட்டது.

IIT, IIM, AIIM, படித்து வெளியேறுகிற மாணவர்களில் 70% பேர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். இந்த உண்மையை மறைக்கும் விதமாக பலர் கட்டுரைகளை தீட்டுகிறார்கள். கோர்வையுடன் பல பச்சை பொய்கள் IIT படித்து விட்டு மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்கு அம்பிகள் இந்தியா முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்துடன் மென்பொருள் குமாஸ்தாக்களாக பணிபுரிகிறார்களாம். அரசு செலவில் படித்து வெளிநாடு சென்றுவிடுகிறார்கள் என புலம்பிக் கொண்டேயிருப்பதில் பிரயோசனம் இல்லை. இந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் தருவாயில் இவர்களது கடவுசீட்டுகள் (பாஸ்போர்ட்) 10 ஆண்டுகளுக்கு முடக்கப்பட வேண்டும். MLA, MP, அமைச்சர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் (அதில் வரம்புகளை நியமித்துக் கொள்ளலாம்) என இந்த மேட்டுக் குடியினரை மொத்த ஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான (NRI) ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளின் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

Arjun Singh ஏற்கெனவே இந்த சலுகையை அனுபவித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட போராட்டங்களில் களமிறங்காமல் வேடிக்கை பார்ப்பது அபத்தமானது. இது ஒரு வகையான மேனிலையாக்கம். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட ஜனத்திரளை கல்வி வாய்ப்பளித்து, அரசு உத்யோகங்களில் அமர்த்தினால் தான் அவர்களுக்கு இது தங்கள் சொந்த நாடு, தங்களுக்கு இந்த நாட்டில் உரிமை இருக்கிறது என்கிற உணர்வு பிறக்கும் என திட்டமிடப்பட்டது தான் இந்த ஒதுக்கீட்டின் நோக்கம். 20 ஆண்டுகளுக்கு இந்த ஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும் என்பது மண்டல் பரிந்துரை. பின்பு குழு அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில் தேவைப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாக எடுத்துரைக்கிறது மண்டல் பரிந்துரை. நூறு சதவிகித எழுத்தறிவை (அரசு பதிவேடுகளில் அல்ல) நாட்டு மக்கள் மெய்யாக பெற வேண்டும், இடஒதுக்கீடு மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க உதவும் கருவி.

கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நிலப்பரப்புகளைச் சார்ந்த, சாதிகளைச் சார்ந்த, பொருளாதார நிலை சார்ந்த, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணையும் பொழுது தான் அங்கே கற்கும் சூழல் உருவாகிறது. அங்குதான் மிகப் பெரும் அனுபவப் பகிர்வு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நோக்கி, தீர்வுகள் நோக்கி பயணிக்கிறதென உலகளவிலான கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். அதுபோலவே இங்கும் பன்முகத் தன்மை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உருவாக இடஒதுக்கீடு தவிர்க்க முடியாத கருவியாகிறது.

பொதுப்பிரிவில் உள்ள இடங்களை குறைக்காமல், அந்த கல்லூரிகளின் மொத்த இருக்கைகளை கூட்டுகிறதாம் மத்திய அரசு. போகிற போக்கை பார்த்தால் IIT, IIMல் இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் அமைக்க கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். (பல உயர்கல்வி நிறுவனங்களில் தம்பி நல்ல படிக்கனும் டா, என பெருந்தன்மையாக கூறி சபாஷ் என முதுகில் தட்டி பூணூல் உள்ளதா என்பதை சோதிக்கும் பேராசிரியர்கள் இன்றளவும் சுதந்திரமாக உலவுகிறார்கள்).

தகுதி என்றால் என்ன. மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் கலையைத்தான் தகுதி என்கிறது இன்றைய தேர்வு முறை. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் வளர்ந்து வரும் 21ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட காலாவதியான தேர்வு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். சொந்தமாக சிந்திக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும். முடிவெடுக்கும் திறனின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ளது கல்வி கற்பதல்ல பயிற்சி அளிப்பதே.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதில் பிராமணர்கள் 70%. குடியுரிமை பெற்று அமெரிக்காவைத் தங்கள் தாய்நாடாக பாவித்தவர்களுக்கும், அடுத்து பாவிக்கவிருக்கும் இந்த அடிமைக் கூட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வரிப்பணம் ஏன் விரையம் செய்யப்பட வேண்டும். சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக நாள் கணக்கில் இந்த கூட்டம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் அமெரிக்கா சென்ற பிறகு அங்கும் இதுபோலவே அமெரிக்க குடியுரிமை பெற காத்துக் கிடக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தால் கோவில் தீட்டு பட்டுவிடும் என்பதற்கும் IIT, IIM ல் பிற்படுத்தப்பட்டவர்கள் நுழைந்தால் தரம் கெட்டுவிடும் என்பதற்கு எவ்வகையிலும் வேறுபாடு அல்ல. அடுத்து அர்ச்சகர்களாக அனைத்து சாதியினரும் வரலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை IITல் மொத்த பேராசிரியர்கள் 400 அதில் பிராமணர்கள் 282 பேர், இதை எப்பொழுது மாற்றப் போகிறோம்.

1830கள் வரை பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மராட்டிய (தஞ்சாவூர்) பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. அந்த காலத்தில் தான் சில சீர்திருத்தங்கள் அமுலாயின, அதில் மிகவும் முக்கியமானது வட்டார மொழிகளில் எல்லா அரசாங்க தொடர்புகளும் இருக்க வேண்டும் என்பது. இதனால் நவாபுகள் முதல் எல்லா உயர் பதவிகளில் உள்ளவர்கள் வரை அனைவரும் வட்டார மொழிகளை கற்க துவங்கினார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்பொழுதும் மாவட்ட ஆட்சியர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால், அவர்கள் தமிழ் கற்கத் துவங்கி, தக்க புக்க என தொகைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, சமயத்தில் சன் டிவி தமிழையும் (டமில்) விஞ்சி விடுகிறார்கள்.

Man மிஷனரிகள் பள்ளிகள் நடத்தி வந்தார்கள், 1838 முதல் அரசாங்கப் பள்ளிக் கூடம் துவக்கப்பட்டது. 1838ல் ரேவ். ஆண்டர்சன், கிறித்துவ மேல்நிலைப்பள்ளியை துவக்கினார். அதில் சில தலித் மாணவர்களை அவர் அனுமதித்தார். அனுமதித்த அடுத்த நாள் அந்த பள்ளியில் படித்த பிராமண மற்றும் வெள்ளாள மாணவர்களை ஒட்டு மொத்தமாக அவர்களின் பெற்றோர் விலக்கிக் கொண்டார்கள். உடன் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பச்சையப்பா அறக்கட்டளை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, பச்சையப்பா பள்ளி துவக்கப்பட்டது. ஏறக்குறைய 1840-1940 வரை ஒரு நூற்றாண்டு காலம் பச்சையப்பா பள்ளியில் தலித் மாணவர்களே அனுமதிக்கப்படவில்லை.

கேம்ப்ரிட்ஜில் படித்த பவேல் அரசு பள்ளியை சென்னையில் துவக்குகிறார், ப்ரோபிசியன்சி படிப்பு துவக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூபாய் நான்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பள்ளியில் நெருங்கவிடாமல் தடுக்கிறது. மிகச் சிலருக்கே அந்த வாய்ப்புக் கிடைக்கிறது. 33 மாணவர்களில் ஏறக்குறைய 30 பேர் பிராமணர், உயர்சாதியினர்களே. இவர்கள் தான் இந்தியா முழுவதும் திவான்களாக, உதவி கலெக்டர்களாக பல சமஸ்தானங்களில் நியமிக்கப்படுகிறார்கள். முழுக்க முழுக்க அரசு எந்திரத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களில் சமூக மாற்று அல்லது சீர்திருத்தம் என்ற வார்த்தைகளைக் கூட எவரும் உச்சரித்ததில்லை.

1890 - 91ல் செங்கல்பட்டு கலெக்டர் ட்ரேமன்ஹீர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கை, தமிழக சமூக வாழ்வில் தலித்துகளின் புறக்கணிக்கப்பட்ட நிலையை எடுத்துரைக்கிறது. அயோத்திதாசர் தனது குரலை, கேள்விகளை உரக்கப் பதிவு செய்கிறார். அந்த காலகட்டத்தில்தான் பிரம்மஞான சபை துவக்கப்படுகிறது.

1880ல் பல சமூகங்கள் அரசு கட்டமைப்புக்குள் ஊடுருவ முனையும் காலம். நாயக்கர்கள் காவல்துறை இராணுவம் ஆகிய துறைகளில் பெரும் பகுதியாக சேர்க்கப்படுகிறார்கள். இராணுவத்தில் நாயக் ரெஜிமென்ட்கள் உருவாக்கப்படுகிறது. இன்றளவும் அது தொடர்கிறது.

அடையாறில் ஆள்காட் பள்ளி துவக்கப்படுகிறது. அதுவே தலித் மாணவர்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்ட முதல் பள்ளி. நீதிக்கட்சி துவக்கப்படுகிறது. சர்.பிட்டி. தியாகராய செட்டி, சர். சங்கரன் நாயர் என புதிய சமூக மாற்றத்திற்கான அலை வீசத்துவங்குகிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்படுகிறது. ஜஸ்டிஸ், திராவிடன் இதழ்கள் துவக்கப்படுகிறது. காங்கிரஸ் பிராமணர்களால் நிரம்பி வழிவதை உணர்ந்து காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறுகிறார்.

1911ல் கல்கத்தாவில் இருந்து நாட்டின் தலைநகரம் தில்லிக்கு மாற்றப்படுகிறது. அம்பிகளின் (பார்ப்பனர்களின்) இடப் பெயர்வும் துவங்குகிறது. தில்லி, மும்பை என பெருநகரங்களை நோக்கி, அவர்களின் உறவினர்கள், சொந்தம், சுற்றாருடன் மொத்தமாக மூட்டை முடிச்சுக்களுடன் இடம் பெயர்ந்தனர். அங்கே தமிழ் சங்கங்கள் துவங்கப்படுகின்றது. புதிய தலைமை செயலகங்கள், அமைச்சக வளாகங்கள் என எதையும் விட்டுவைக்காமல் ஆக்கிரமிக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் தான் உள்ளது அதிகார வர்க்க (Bureaucratic) செயல்பாடு. அந்த வளாகங்களின் உள்கட்டமைப்பை அவர்களுக்குத் இசைவாக மாற்றிக் கொண்டு இன்றளவும் நிழலாட்சிப் புரிகிறார்கள். இவர்களைப் போலவே வங்கத்திலிருந்து சட்டர்ஜி, பானர்ஜிக்கள், கேரளாவிலிருந்து நாயர்கள், நம்பூதிரிகள், மகாராஷ்டிரத்திலிருந்து ராவ், தேஷ்முக்கள் என இந்த உயர்சாதி கூட்டத்தின் பிடியில், மூச்சுத் திணறுகிறது தேசம். வட மாநிலங்களில் இந்த பிராமணர்கள் செலுத்தத் துவங்கிய ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல்தான் பின்னாட்களில் சிவசேனா போன்ற இயக்கங்கள் உருவாக ஒரு காரணமாகயிருந்தது. மதராசி என தென் மாநிலத்தவர்களை அழைக்கவும் கேலி செய்யவும் துவங்கினார்கள். இன்றளவும் ஹிந்தி, மராத்தி சினிமாக்களில் மதராசிக்கள் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com