Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மார்ச்-ஏப்ரல் 2006
பாழாகும் பாலாறு

வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சனை இன்றைக்கு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. காவிரி தென்பெண்ணை பாலாறு வைகை...என்று மகாகவி பாரதி, தமிழகத்தின் ஆறுகளைக் குறிக்குமிடத்து பாலாறை மூன்றாவதாகக் காட்டுவார். அதாவது, வரைபடத்தில் மேலிருந்து கீழ் வரிசையாக... கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் உள்ள நந்தி துர்க்க மலைத் தொடரில் திப்ப கிரி, பிரம கிரி, சென்னகேசவ மலை, அரிகரேசுவர மலை, கலவர துர்க்கம், நந்தி துர்க்கம் எனப் பல மலைகள் உண்டு.

சென்ன கேசவ மலை, கடல் மட்டத்திலிருந்து 4762 அடி உயரம் உள்ளதாம். இம்மலையில் அடர்ந்த காடுகள் உண்டு. இம்மலையின் வடபகுதியில்தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவர்க்கும் தெரிந்திருக்கும். ஆனால் நமது பண்டைய இலக்கியக் குறிப்புகளின்படி, பாலாற்றின் போக்கு தற்போது உள்ளபடி அமையவில்லை. மலைகள் குறுக்கீடு, புவியியல் மாற்றம், அணைகள் புதிதாகக் கட்டப்பட்டமை, தங்கள் ஊருக்குள் பாலாறு வருவதற்காக செயற்கையாக ஆற்றின் போக்கை மாற்றியமை என்று பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கின்றன. காவேரிப்பாக்கத்துக்கு அருகிலுள்ள கொண்டாபுரம் சிற்றூரில் உள்ள கோவில் கல்வெட்டின் படி, அக்கோயில், பாலாற்றுக்குத் தெற்கில் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று அக்கோயில் பாலாற்றுக்கு வடக்கில் உள்ளது. இதைக்கொண்டு பார்த்தால், காவிரிப்பாக்கத்துக்கு அருகிலிருந்து பாலாற்றின் போக்கு வடக்கிலிருந்த தெற்காக மாறியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆற்றின் போக்குதான் மாறியதா? அல்லது கோவிலின் இட அமைப்பு மாறியதா? ஆனால் கோவில் இடம் பெயர சாத்தியமில்லை என்றும் ஆற்றின் போக்கு மாறியிருத்தல் கூடும் என்றும் அனுமானிக்க ஒரு செவிவழிச் செய்தி இடம் தருகிறது.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில், திருத்தணிகையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இது உண்மையாய் இருத்தல் கூடும் என்று கொள்வதற்கு, தீரமுறைப்பாடல்கள் சிலவும் திருப்பாசூர்க் கல்வெட்டும் ஆதாரமாக விளங்குகின்றன.

திரையார் பாலியின் தென்கரை மாற்பேறு - என்ற திருஞான சம்பந்தரின் பதிக வரிகளின்படி - திருமால்பேறு என்ற சிவத்தலம், பாலாற்றின் தென்கரையில் இருந்தது என்பதே! திருமாற்பேறு - காஞ்சிக்கு வடமேற்கில் உள்ளது. சம்பந்தர், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கி.பி.12 ஆம் நூற்றாண்டில் சைவப் பெரியார்களின் வரலாற்றை பெரிய புராணமாக்கிய சேக்கிழார்பிரான், திருஞான சம்பந்தர் புராணம் செய்யுள் 1002 இல் இதே செய்தியை மீண்டும் தெரிவிக்கிறார். திருமாற்பேறு தலபுராணத்தின்படி இத்தலத்திற்கு அண்மையில் உள்ள கோவிந்தவாடி அகரம் எனும் ஊரில் பழைய பாலாறு எனும் பெயரில் ஒரு ஆறு இருப்பதை அறிகிறோம். கலிங்கத்துப் பரணியில் முதல் குலோத்துங்கனின் (கி.பி.1070 - 1120) படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும் போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில், அவன் கடந்த முதல் ஆறு பாலாறு என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி.11,12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை, பூந்தமல்லிக்கு அருகிலுள்ள திருவேற்காடு திருத்தலத்தைப் பாடிய சேக்கிழார், இத்தலம் பாலாற்றின் வடகரையில் இருந்தது என்று குறிக்கிறார். திருவேற்காட்டிற்கு வடகிழக்கில் சற்று தொலைவில் வடதிருமுல்லைவாயில் எனும் சிவத்தலம் உள்ளது. அது பாலாற்றின் வடகரையில் இருந்ததாக சுந்தரர் பதிகம் பாடியுள்ளார். (கி.பி.9ஆம் நூற்றாண்டு) பதிகச் செய்யுள்...(15) இதிலிருந்து திருப்பாசூர்க்கு அண்மையில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. இம்மாதிரியான திருமுறைச் சான்றுகளையும் கல்வெட்டுச் செய்தியையும் காணும் போது, கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை, பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்திருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்கு தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. இதற்கு மனிதர் மனமும் காரணமாயிருத்தல் செவிவழிக் கதைகள் மூலம் தெரிய வருகிறது. டாக்டர் மா. இராஜமாணிக்கனாருடைய ஆராய்ச்சிக் குறிப்புகளில் பாலாற்றின் போக்கின் வரலாறு நமக்குத் தெரிகிறது.

தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால், இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஒரு ஆறு இருந்தது என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனம் எழுதத் தூண்டலாம். இந்த துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சனையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகின்றது.

காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தோடு தமிழகம் போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஆந்திர ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை துவக்கியுள்ளது.கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11,000 கி.மீ. பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன்பெறுகின்றனர். வேலூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டும் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதி பெறுகின்றன.இராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழை காலத்தில்தான் அதிகமாக இருக்கும்.

பல சமயங்களில்தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை. ஏனெனில் கர்நாடகமும், ஆந்திரமும் வழியில் வருகின்ற தண்ணீர் தொடர்ந்து காலகாலமாக தடுத்து வருகிறது. ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்தி கொள்கின்றன. 1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையை கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரை கொண்டு சென்றனர். நீண்ட காலமான கோரிக்கை 1855ல் ஒரு நிலையான அணை கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதாரம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சி பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

1920ல் மைசூர் அரசாங்கம் சென்னை - மைசூர் அரசாங்கம் ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகள் கட்டி பாலாற்று நீரை தடுத்து விட்டது. இப்பிரச்சினை குறித்து சென்னை மாகாண கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு 3 சட்டமன்ற உறுப்பினர்களும் 3 அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரினை தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் இல்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு ஆக்கி விட்டது.

நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு நங்குளி ஏரிக்கு வந்து செட்டிக்கல் ஏரி வழியாக மேலும் 5 ஏரிகள் அடைந்து தொடர்ந்து மல்லி நாயக்கர் அள்ளி என்ற துணை நதியோடு 4 ஏரிகளில் சென்றடைந்து பின் பெட்டமடு என்ற பகுதியில் 4 ஏரிகளுக்கு வந்து பின் தான் தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் தண்ணீர் விடப்படுகிறது. பாலாற்றின் நீர்வரத்தே குறைவு. இவ்வாறு ஏரிகளின் தண்ணீர் நிரப்பப்பட்ட பிறகு தமிழக பகுதி பாலாற்றுக்கு நீர் எப்படி வரும்? திட்டமிட்டு ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

1802ல் சென்னை மாகாணம் - மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளோ, நீர் தேக்கங்களோ, நீர் அமைப்புகளோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது.இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு துவக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1933ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னை மாககாண கவுன்சிலில் வி.எம்.ராமசாமி முதலியார், பாலாற்று பிரச்சினை குறித்து எழுப்பியுள்ளார். பாலாற்றின் நீர் வரத்து குறைந்து விட்டதென்றும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மைசூர் அரசுகளிடம் பேச வேண்டும் என்று கேட்ட பொழுது அரசு தரப்பில் முறையான பதில் வரவில்லை.

1954ல் வடாற்காடு - செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தினர். முண்டாசுக்கவி பாரதி பாடிய தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்றது. இருக்கின்ற மணலையும் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ.250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளை துவக்கி விட்டனர். இதில் ஆந்திரத்திற்கு முழு உரிமை இருக்கின்றது என்று சென்னை - மைசூர் அரசாட்சிகளின் ஒப்பந்தத்தை மீறி அணை கட்டும் தலைமை பொறியாளர் சிவசங்கர் ராவ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதை எவராலும் தடுக்க முடியாது என்று அகந்தையில் பேசி உள்ளார்.

இந்த அணையின் மூலமாக ஆந்திர பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் - திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்திற்கு பாலாறுமூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் வேலூர் மாவட்டத்தில் தமிழகத்திற்கு பொன்னை நதியிலும் ஆந்திர அரசு அணை கட்ட சமீபத்தில் தீர்மானித்துள்ளது.

நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து கொண்டு இருக்கின்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களின் மெத்தனப் போக்கினால் திருவனந்தபுரம், பாலக்காடு, தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, கச்சத்தீவு போன்ற தமிழகப் பகுதிகளை இழந்தோம்.

அகண்ட காவேரி, வறண்ட காவேரியாகி விட்டது. அதிலும் நமது உரிமைகளைப் பறி கொடுத்தோம். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தில் உச்சநீதி மன்ற உத்தரவிற்குப் பின்பும் செய்யறு நிலையில் இருக்கிறோம்.

பாலாறு பிரச்சனையில் என்ன செய்யப் போகிறோம்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP