Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
சிறுகதை
முதல் தவறு
செங்கை ஆழியான்

விடியற்காலையின் வைகறைக் குளிர்ச்சியைப் பொருட்படுத்தாது, அடர்கானகத்தினூடாக கொனா நதியின் (கால ஓயா) மருங்கே மேற்குத் திசை நோக்கி முப்பது பேர் கொண்ட ஒரு மக்கட்கூட்டம் ஒருவர் பின் ஒருவராக எறும்புச் சாரியாகச் சென்றுகொண்டிருந்தது. கீழை வானில் எழத் தொடங்கிய சூரியக்கதிர்கள் அடர் மரங்களுடாக நதிக்கரையைத் தழுவ வலியற்றிருந்தன.

ஐந்து ஐந்தரை அடி உயரமும், ஆரோக்கியமான உடல்வாகும், கரிய நிறமும் கொண்ட அவர்கள் திராவிட இனத்தவர். நியோலிதிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில், தாமிரபரணி என்ற இலங்கை மண்ணில் நிலைகொண்டிருந்த மக்கட் கூட்டத்தினர். அவர்களைப் போன்ற மக்கட் கூட்டத்தினர் வடக்கே ஜம்புக்கோளம் (யாழ்ப்பாணம்), கிழக்கே கோகர்ணம் (திருகோணமலை), தெற்கே மகாமகம் (திசமாறகம), மேற்கே மகாதீர்த்தம் (மன்னார்) முதலான பகுதிகளிலும் நிலைகொண்டிருந்தனர். நாம் சந்திக்கும் இந்த மக்கட் கூட்டத்தினர் கல்யாணி நதிக்கும் (களனி கங்கை), கதம்ப நதிக்கும் (மல்வத்து ஓயா) இடைப்பட்ட தம்பபண்ணை என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

நதிக்கரையோரமாக மேற்குத் திசை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் அம் மக்கட் கூட்டத்தினரை, சரியான தடத்தில் வழிகாட்டி, அழைத்துச் சென்றுகொண்டிருந்த முதலாள் ஒரு பெண். வயோதிகத்தின் சுவடுகள் உடலில் பதிந்திருந்தாலும், கம்பீரமான உருவமும், விழிகளில் காண்போரை அடக்கும் தலைமைத்துவமும் அப் பெருந்தாயிடம் தெரிந்தன.

அவள் பெயர் நகுலி. தாய்வழிச் சமூகத்தின் நிலைப்பாட்டில் அக்கூட்டத்தின் தலைவியாக அவள் இருந்தாள். அவள் கரத்தில் கனமான ஈட்டியன்று இருந்தது. அவளை அடுத்து, காட்டு புஷ்பமாக அழகிய இளமங்கையருத்தி துள்ளல் நடையுடன் மானாகப் பின்தொடர்ந்தாள்.

அவர்களைப் பின்தொடர்ந்து ஆண்களும் பெண்களும் கரங்களில் ஈட்டி, வில், அம்பு ஏந்தி தோள்களிலும் தலைகளிலும் பொதிகளைச் சுமந்தவர்களாகப் பின்தொடர்ந்தனர். யானைத் தந்தங்கள், மான், சிறுத்தைப் புலி, கரடி என்பனவற்றின் தோல்கள், ஆமை ஓடுகள், கிராம்பு, ஏலக்காய்ப் பொதிகள் என்பனவற்றை அவர்கள் சுமந்து சென்றனர்.

“அம்மா! இன்னும் எவ்வளவு தூரம் இப்படியே நடக்க வேண்டும்? கால்கள் வலியெடுக்கின்றன”என்று அந்த அழகிய இளமங்கை சிணுங்கினாள். பொங்கிப் பூரித்துக் குவடு சரியா அவள் மார்பகங்கள் குலுங்கின.

தலைவி தரித்து நின்று, மகளைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் கண்டிப்பு சுடர்விட்டது. மறுகணத்தில் பாசம் சுரந்தது.

“என்ன பெண் நீ, குவேனி, காட்டில் சில பொழுது நடப்பதற்கே சோர்ந்து போகிறாய். நாளைக்கு நீ எப்படித்தான் இந்தக் கூட்டத்தின் தலைவியாக இருக்கப் போகிறாயோ? காட்டு விலங்குகளிடமிருந்தும், நம்மை அடிக்கடி தாக்கும் மோரியா (மயில்), பாலிப்கோயகா(காகம்) மக்கட் கூட்டத்தினரிடமிருந்தும் எப்படித்தான் காப்பாற்றப் போகிறாயோ?” நகுலி தொடர்ந்து நடந்தாள்.

“எனக்கு இது பிடிக்கவேயில்லை அம்மா. என்னிலும் பார்க்க தாரதத்தன் கம்பீரமானவன், பலசாலிஞ் உனக்குப் பிறகு அவனையே இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க வைப்பேன்”என்றாள் குவேனி.

“பைத்தியக்காரி போலப் பேசாதே. கேட்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள். ஆண்களினால் தலைமை தாங்க முடியுமா? பலம் என்பது உடல் வலிமையைப் பொறுத்தது அல்ல பெண்ணே! புத்திக்கூர்மையைப் பொறுத்தது. பெண்கள்தான் இயல்பாகவே புத்திசாலிகள். மதியத்திற்குள் நாம் சேரவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம். பேசாது வா”

தூரத்தில் யானை ஒன்றின் பிளிறல் எழுந்தது. நதியில் நீரருந்திக் கொண்டிருந்த காட்டெருமைகள் ஒரு கணம் தலைநிமிர்த்திப் பார்த்துவிட்டு, காட்டினுள் ஒதுங்கிச் சென்றன.

மதியம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் பெரியதொரு ஆலமர நிழலை அடைந்தார்கள். விழுதுகள் விட்டுப் பரந்த மாபெரும் விருட்சம் அது. அதனை நெருங்கியதும் நகுலி தன் கையில் இருந்த ஈட்டியை நிலத்தில் வைத்துவிட்டு, முழந்தாளிட்டு வணங்கினாள். அவளைப் பின்பற்றி ஏனையோரும் வணங்கினர். அடர்காட்டின் நடுவே, பெரியதொரு இராட்சதனாகக் கிளைபரப்பி வளர்ந்திருந்த அந்த விருட்சம் அவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அம்மரத்தின் கீழ் அவர்கள் இளைப்பாறினார்கள். தேனில் ஊறிய மாமிச வற்றலும் தினைமாவும் எல்லோருக்கும் மதிய உணவாக வழங்கப்பட்டன. தனக்கு வழங்கப்பட்ட உணவை இலையிலே தாங்கிய தாரதத்தன், குவேனியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“தாரதத்தா, சிறிது தள்ளித்தான் உட்காரேன்” என்று குவேனி சிரித்தாள். அவன் முகம் உச்சிவெயில் பட்டு உதிர்ந்த காட்டிலை போன்று சருகாகியது. என்றாலும் சிரிக்க முயன்றான்.

“ஏன் குவேனி!”

“உன் கண்கள் போகின்ற இடங்கள் எனக்குக் கூச்சத்தைத் தருகின்றன. மார்பகங்களை நீ கண்டதில்லையா? ஏன் அப்படி உற்றுப் பார்க்கிறாய்?”

அவன் தலையைக் குனிந்துகொண்டான். அவனைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாகவிருந்தது. அவளுடைய காதலைப் பெறுவதற்காக அவன் எத்தனையோ அசாதாரண காரியங்களைச் செய்திருக்கின்றான். செங்குத்தான மலைச்சாய்வுகளில் உயிரை மதிக்காது ஏறி தேன்வதைகளை அவளுக்காகக் கொண்டு வந்து தந்திருக்கிறான். ஒவ்வொருநாள் அதிகாலையும் அவள் தலையில் சூடுவதற்காக ஒவ்வொரு தாமரைமலரைத் தவறாது பறித்துத் தந்து வருகிறான்.

“தாரதத்தா, நாங்கள் மிருகங்களல்ல. நாகரிகமானவர்கள். கோகர்ண மக்களைப் போன்றோ, மகாமக மக்களைப் போன்றோ நாங்கள் தோல்களை ஆடைகளாக அணிவதில்லை. பருத்திப் பஞ்சில் நூல் இழைத்து அதனை நெய்து ஆடையாக அணிந்து வருகிறோம். அவர்களைவிட நாங்கள் முன்னேறியவர்கள்.”

“அதை ஏன் சொல்கிறாய் குவேனி?”

“காதலுக்கும் நாகரிகம் தேவை. ஏனோ எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இந்தக் கூட்டத்திலுள்ள ஒரு இளைஞனையும் பிடிக்கவில்லை. உங்கள் கரிய நிறம் எனக்குப் பிடிக்கவில்லை”

அவன் முகம் தொங்கிவிட்டது. அவள் அங்கிருந்து எழுந்து ஆற்றை நோக்கி நடந்தாள். அரையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துக் கரையில் வீசிவிட்டு, ஆற்று நீரில் மீனெனத் தாவினாள்.

சூரியன் மேற்கு வானில் சரியத் தொடங்கிய வேளையில், நகுலி கூட்டத்தினர் தம்பபண்ணைக் கடற்கரையை அடைந்தார்கள். அடர்காட்டை விட்டு வெளியேறியதும், வெள்ளை வெளேரெனப் பரந்து விரிந்து கிடந்த மணற் பரப்பும், அலையெறிந்து கரை தாவும் சமுத்திர விரிவும் குவேனிக்கு உற்சாகத்தைத் தந்தன. அவள் தாயை முந்திக்கொண்டு கடற்கரை மணலில் தாவியோட முயன்றாள்.

“பொறு குவேனி” எனத் தலைவி கட்டளையிட்டாள்.

“தாரதத்தா, அந்தியர்கள் எவராவது கடற்கரையில் தென்படுகிறார்களா எனப் பார்த்து வா”

தாரதத்தன் விரைந்து சென்றான்.

“எவராவது இருந்தால் எமக்கென்ன?”

“அந்நியர்கள் முன் நாங்கள் வருவதில்லை”

“அப்படியென்றால் அவர்களுடன் எப்படி வியாபாரம் செய்வீர்கள் அம்மா?”

“நீ இன்றுதான் இங்கு வந்திருக்கிறாய் எப்படியென இருந்துதான் பாரேன்”

“எப்படியென்று சொல்லுங்கள்”

“மரக்கலங்களில் அவர்கள் சமுத்திரத்தைத் தாண்டி வருவார்கள். நீரில் அவற்றை நிறுத்திவிட்டு, சிறிய தோணிகளில் கரைக்கு வருவார்கள்”

“அவர்கள் யார்? எங்கிருந்து வருவார்கள்?”

“யாருக்குத் தெரியும்? கடலுக்கு அப்பால் எங்கள் நாடுபோல வேறு நாடுகள் இருக்கிறதாம். அவர்கள்தான் வனியா (ரோமர்)களும், நவிகா (அராபியர்)க்களும். நாங்கள் அவர்கள் முன் செல்வதில்லை. நாங்கள் கொண்டுவந்திருக்கும் பொருட்களை கடற்கரையில் வரிசையாக வைத்து, நமக்குத் தேவையான பொருட்களை ஆமை ஓடுகளில் வரைந்து அவற்றின் முன் வைத்து விட்டு, காட்டிற்குள் மறைந்துகொள்வோம். அவர்கள் கொண்டுவந்த பொருட்களை எங்களுக்குக் காட்டி, நாங்கள் வைத்திருக்கும் பொருட்களைச் சுட்டிக்காட்டுவர். அவர்கள் காட்டும் பொருள் எங்களது பொருளுக்குச் சரியாகுமாயின் நாங்கள் காட்டோரமிருந்து வெள்ளைக்கொடியை அசைப்போம். அவர்கள் புரிந்துகொள்வார்கள். இவ்வாறுதான் நூறாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.”

“முன்னின்று வியாபாரம் செய்தால் என்ன?” என்று குவேனி கேட்டாள்.

“அந்நியர் முன்பா? அவர்களோடு நெருங்கக் கூடாது பெண்ணே, அது நமது நாட்டையும் நமது பழக்கவழக்கங்களையும் அந்நியமாக்கிவிடும்”

“அவர்கள் இப்போது வருவார்கள் என்பது எப்படித் தெரியும்?”

“வாடைக்காற்று வீசும்போது, கிழக்கே சென்றவர்கள் சோளகம் வீசும்போது திரும்பி வருவார்கள். சோளகம் வீசத் தொடங்கி இருபது நாட்களாகின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் அவர்களது மரக்கலங்கள் இக்கடற்கரையில் தரிக்கும்”

“அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டு, நாம் கடற்கரையில் வைக்கும் பொருட்களைக் கவர்ந்து சென்றுவிட மாட்டார்களா?”

“அவர்கள் வியாபாரிகள். கொள்ளைக்காரரல்லர். அப்படிக் கவர்வாராகில் தோணிகளில் ஏறுமுதலே எங்களது அம்புகளுக்கு இரையாவார்கள்.

தாரதத்தன் திரும்பி வந்தான். கடற்கரைப் பிரதேசத்தில் அந்நியர் எவருமில்லை எனத் தெரிவித்தான். அதன்பின் நகுலி சைகை செய்ய, அக்கூட்டம் கடற்கரையில் இறங்கியது. தாங்கள் காவிவந்த பொருட்களை வரிசையாகக் கடற்கரையில் வைத்தார்கள்.

கடற்கரையின் அழகு, குவேனியை மிகவும் கவர்ந்தது. சாய்கதிரின் மஞ்சள் நிறக் கதிர்களின் பரவலில், அது அவளுக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தந்தது.

கடற்கரை மணலில், கடலாமைகள் வந்து சென்றமைக்கான சுவடுகள் தெரிந்தன.

“குவேனி, வருகிறாயா? உனக்கு கடலாமை முட்டைகள் எடுத்துத் தருகிறேன்”எனத் தாரதத்தன் அவளை அழைத்தான்.

“சரி ஆனால், நீ என்னை அப்படி உற்றுப் பார்க்கக் கூடாது”

அவர்கள் இருவரும் கடற்கரையோரமாக நடந்தனர். தாரதத்தன் கடற்கரை மணலை அவதானித்து வந்தவன், ஓரிடத்தில் தரித்துநின்றான். கிளறி மூடிய மணல் திட்டு ஒன்றினை ஆவலோடு கைகளால் வாரித் தூர் எடுத்தான். அவன் கணிப்புப் பிழைக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஆமை முட்டைகள் அக் குழியினுன் கிடந்தன. பொறுக்கி எடுத்துக்கொண்டார்கள்.

“கடலாமைகள் கடற்கரை மணலில் வந்து, குழிதோண்டி அதில் முட்டையிடும்” என்றான் தாரதத்தன்.

“காட்டின் நடுவே குடியிருப்பு அமைத்து இருப்பதிலும் பார்க்கக் கடற்கரையில் குடில் அமைத்து வாழ்வது நல்லது. உணவுகள் இங்கு ஏராளமாகவுண்டு..”என்றாள் குவேனி.

“கடற்கரையோரம் பாதுகாப்பில்லை. அந்நியர்கள் வருவார்கள். கடற்கரையோரமாகக் குடியிருப்புகள் இருந்தால் அவர்கள் இந்த மண்ணில் நிரந்தரமாகத் தங்கவும் பார்ப்பார்கள். நமது உணவை அவர்கள் பங்கு போடப் பார்ப்பார்கள்”

குவேனி எதுவும் பேசவில்லை.

அவர்கள் திரும்பி வந்தபோது, இரவு படர்ந்திருந்தது.

“குவேனி, உன் மனம் மாறாதா?” எனத் தாரதத்தன் கேட்டான்.

“தாரதத்தா, எனக்காக நீ காத்திருக்காதே. எங்கள் கூட்டத்தில் நல்லதொரு பெண்ணாகத் தெரிந்தெடுத்துக்கொள்”

ஏழாம் நாள் அதிகாலை, தூரத்தில் மரக்கலங்கள் கரையை நோக்கி வருவது தெரிந்தது. பாய்கள் விரித்த பெருங்கலங்கள். மதியம்போல் அவற்றிலிருந்து, தோணிகளில் ஏறிக் கரைக்குப் பலர் வந்தார்கள். அவர்கள் அராபிய வர்த்தகர்கள்.

நகுலிக்கூட்டத்தினர் காட்டோரம் மறைந்துகொண்டார்கள். பார்வைபடும் தூரத்தில் யானைத் தந்தங்கள், தோல்கள் முதலான பொருட்கள் வரிசையாக இருந்தன.

“அவர்கள் யார் அம்மா?”எனக் குவேனி கேட்டாள்.

“நவிகாக்கள்”

குவேனி அவர்களை வியப்புடன் பார்த்தாள். ஆஜானுபாகுவான தோற்றப் பொலிவுடன், செக்கச்செவேலெனச் சிவந்த நிறத்தோடு அவர்கள் காட்சி தந்தார்கள்.

“இப்படியரு நிறத்தில் மக்கள் இருக்கமுடியுமா?”என வியந்தாள்.

நகுலி விவரித்தவாறே வியாபாரம் நடந்தது. வெள்ளி, செம்பு மாலைகள், பாத்திரங்கள், கண்ணாடிகள், மட்பாண்டங்கள், சிறிய கத்திகள், மஸ்லின் துணிகள், அரிசித் தானியம் முதலியன அவர்கள் கொண்டுவந்த பொருட்களுக்குப் பதிலாக அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்பொருட்கள் குவேனிக்கு வியப்பைத் தரவில்லை. அவற்றைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்ற நவிகாக்களின் சிவந்த எழில் நிறமே வியப்பைத் தந்தது.

மாரி கழிந்து கோடை பிறந்தபோது, தம்பபண்ணைக் கடற்கரையில், காட்டோர உட்புறத்தில் சில குடியிருப்புகள் உருவாகியிருந்தன. நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் அவற்றில் இருந்தார்கள்.

அக்கூட்டத்திற்கு இன்று குவேனி தலைவியாக இருந்தாள். ஒரு மழைக்காலத்தில் கூட்டத்தினரோடு உணவு தேடிக் கானகத்திற்குள் வந்த நகுலியை அரவந் தீண்டிவிட்டது. அவளைத் தூக்கி வந்தபோது வழியிலேயே நுரைகக்கி மரணித்துவிட்டாள். அதனால், அக்கூட்டத்தினரின் தலைவியாகக் குவேனி பொறுப்பெடுத்துக்கொண்டாள். தலைவியின் ஆவி, பழைய குடியிருப்பில் சுற்றி அலையும் எனப் பயந்ததால், அவர்கள் புதிய இடத்தில் குடியிருப்பை அமைத்துக் கொண்டார்கள்.

புதிய இடத்தைக் குவேனியே தேர்ந்தெடுத்தாள். காட்டு விலங்குகளால் ஏற்பட்ட மனித அழிவு, புதிய இடத்தில் குறைந்து இருந்தமையால், அக்கூட்டத்தினர் குவேனியின் முடிவினைப் பெரிதும் மதித்தனர். கடல் உணவுகளும் ஏராளமாகக் கிடைத்தன.

குடிலைவிட்டு குவேனி வெளியில் வந்தபோது, தாரதத்தன் ஒரு பெண்ணுடன் வாசலில் நிற்பது தெரிந்தது.

“அவள் என்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள் அம்மா”என்றான் தாரதத்தன்.

குவேனியின் நெஞ்சத்தில் ஒரு கணப்பொழுது ஏமாற்றம் கவ்வியது. அவள் தாரதத்தனை ஏறிட்டுப் பார்த்தாள். எதுவுமே அவளால் பேசமுடியவில்லை.

அந்தவேளை சமுதா என்பவன் விரைந்து ஓடிவந்தான்.

“அம்மா, கடற்கரையில் தோணிகள் சில வந்திருக்கின்றன. அவற்றில் அந்நியர்கள் உள்ளனர்”

“வனியாக்களா? நவிகாக்களா?” எனக் குவேனி வினவினாள்; “இது வர்த்தகக் காலமல்லவே?”

“யாரெனத் தெரியவில்லை தாயே! புதியவர்கள். இந்த மண்ணிற்குப் புதியவர்கள்”

குவேனியும் கூட்டத்தினரும் தங்களைக் காட்டோர மரங்களுள் மறைத்துக்கொண்டு கடற்கரையைப் பார்த்தார்கள். பலர் கடற்கரையில் இறங்கி நிற்பது தெரிந்தது. சமுகா கூறியதுபோல இந்த மண்ணிற்குப் புதியவர்கள்தாம்.

யார் அவர்கள்?

குவேனியின் அருகில் நின்றிருந்த அவள் வளர்க்கும் நாய், திடீரென அவர்களைப் பார்த்துக் குரைத்தது. அவள் அதை அடக்கினாள்.

நாயின் குரைப்பொலியை அந்த மனிதர்கள் கேட்டிருக்க வேண்டும். அவர்களின் தலைவன் போலக் காணப்பட்டவன், தனியனாக நாயின் குரைப்பொலி எழுந்த திக்கில் வரத் தொடங்கினான்.

கடற்கரை மணலில் கால்கள் புதைய அவன் நடந்து வந்தான். சிவந்த உயர்ந்த உருவம். அரையில் நீண்ட வாள் தொங்கியது.

தாரதத்தன் அம்பினை ஏற்றி வில்லினை வளைத்து, கட்டளைக்காக குவேனியைப் பார்த்தான். குவேனி ‘பொறு’எனத் தடுத்தாள்.

அதற்குள் அந்த மனிதன் காட்டோரத்தை அணுகிவிட்டான். அந்நியனை அன்றுதான் அவர்கள் முதன் முதல் வெகு அருகில் காண்கிறார்கள்.

“நீ யார்?”எனக் குவேனி கேட்டாள்.

அவள் கேள்விக்கு விடை கூறாமல், அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் வெட்கமின்றி அவள் திறந்த மார்புகளில் பதிந்து, ஒரு கணம் தடுமாறிப் பிரிந்தன.

“யார் நீ?”

“என் பெயர் விஜயன்” என்றான் அவன்.

“லாலா நாட்டிலிருந்து வருகிறோம். பசியால் என்கூட வந்தவர்கள் தவிக்கிறார்கள். நாங்கள் ஆரிய வம்சத்தவர்கள். நீங்கள் யார்? இது எந்த நாடு?”

“இவனை உடன் அனுப்பி விடுங்கள் தாயே?”என்றான் தாரதத்தன்.

“பசி என்கிறார்கள். சில நாள் தங்க இடமளித்து, உணவு கொடுங்கள்”எனக் குவேனி கட்டளையிட்டாள்.

இந்த மண்ணின் உணவில் முதன் முதல் அன்றுதான் அவர்கள் பங்குகொண்டார்கள்.

குவேனியின் குடிலில் விஜயன் அமர்ந்திருந்தான். அவன் தம்பபண்ணைக்கு வந்து நான்கு நாட்களாகிவிட்டன.

“உங்கள் மன்னன் யார்?” என ஆரிய விஜயன் கேட்டான். அக்கேள்வி அவளுக்கு வியப்பைத் தந்தது.

“மன்னனா? அப்படியென்றால்?”

“தலைவன் அரசன்”

“இந்தக் கூட்டத்திற்கு நான்தான் தலைவி. பெண்தான் இங்கு பெரியவள்”

“ஆண்களே எங்கள் சமுதாயத்தில் முதன்மையானவர்கள். நாங்கள் பெண்களைப் பூக்கள் போலப் பேணுவோம்”

அவள் அவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

“உங்கள் மக்கட் கூட்டத்தில் எத்தனை வர்ணங்கள், சாதிகள் உள்ளன?”

“சாதிகளா? அப்படியென்றால்?”

“பிரிவுகள்”

“மனிதருட் பிரிவுகளா?”எனக் குவேனி சிரித்தாள்.

“ஷத்திரியர், பிராமணர், வைசிகர், சூத்திரர் என நான்கு வர்ணப் பிரிவுகள் எம்மிடையே உள்ளது”

“அப்படியரு சாதிப்பிரிவு நமது இனத்துக்கு வேண்டாம். நாங்களென்ன மிருகங்களா மான், மரை, புலி எனப் பிரிப்பதற்கு? நாங்கள் மனிதர்கள்”

“நீங்கள் பயிர் செய்வதில்லையா? எவ்வளவு நதிகள், வளமான மண்பூமி இங்குள்ளன” எனக் கேட்ட விஜயனைக் குவேனி ஏறிட்டுப் பார்த்தாள்.

“நீ கேட்பது எனக்குப் புரியவில்லை விஜயா லாலா எங்குள்ளது?”

“வடக்கே பாரதம் என்ற பெருந்தேசத்தில் குவேனி. நீங்கள் தாஸ்யுக்கள் (கறுப்பர்) ஆயினும் கவர்ச்சியானவர்கள். நீ மிகவும் கவர்ச்சியானவள்.”

குவேனி தலைகுனிந்து சிரித்தாள்.

“நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய்! இப்படியரு நிறமா? நெருப்புப் போல உன் நிறம் பிரகாசிக்கிறது. உன்னை நான் தொட்டுப் பார்க்கலாமா?”

குவேனி தவறு செய்தாள். லாலா நாட்டிலிருந்து எக்காரணங்களுக்காக விஜயனையும் அவன் தோழர்களையும் அரசன் நாடு கடத்தினானோ, அக்காரியத்தை மீண்டும் புரிய, குவேனி வலிந்து காரணமானாள்.

ஏழு நாட்கள் கழிந்துவிட்டன. விஜயனும் அவனுடன் கூட வந்தவர்களும் தம்பபண்ணையை விட்டு வெளியேறுபவர்களாகத் தெரியவில்லை. இரவு வேளைகளில் விஜயன் குவேனியில் குடிலில் தங்கிப் பிரிந்த செய்தியும் பரவியது.

செய்தி அறிந்த தாரதத்தன் கொதிப்படைந்தான். குடியிருப்பில் வேறு சில பிரச்சினைகளும் தலைதூக்கின. விஜயனுடன் கூட வந்தவர்களுக்குத் தனிமையைப் போக்கத் துணை தேவைப்பட்டது.

தாரதத்தன் குவேனியின் குடிலுக்கு விரைந்து வந்தான்.

“தாயே, நீங்கள் நடந்து கொள்வது சரியாகவில்லை”

“எப்படி?”

“அந்நியனுடன் உண்டு, உறங்குவது”

“அதில் என்ன தவறு? அவர்களும் இனிமேல் எங்கள் கூட்டத்துடன்தான் இருக்கப் போகிறார்கள். நான் விஜயனை மணந்துகொள்ளப் போகிறேன்.”

“அவர்கள் ஆரியர்கள். இந்த மண்ணுக்கு அந்நியமானவர்கள். எங்களிலும் வேறுபட்டவர்கள்.”

“கடலில் திசைமாறி இங்கு வந்து அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இந்நாட்டில் இருக்க விரும்புகிறார்கள். நமது பெண்களை அவர்கள்”

வேகமாக தாரதத்தன் குறுக்கிட்டான்.

“வேண்டாம் தாயே வேண்டாம். இது விஷப்பரீட்சை. நமது இனத்தையே அழிக்கும் செயல். அந்தத் தவறினை மட்டும் செய்துவிடாதீர்கள். விஜயனை நீங்கள் மணந்து இந்த நாட்டில் ஆரியரின் வம்சம் நிலைபெறக் காரணமாகி விடாதீர்கள். வருங்காலச் சமூகம் உங்களைப் பழிகூற வைத்து விடாதீர்கள். அவர்களால் இங்கு தனித்து இருக்கமுடியாது. இங்கு அவர்களுக்குப் பெண்கள் கிடைக்காவிடில் இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடுவார்கள்.

குவேனி திடமாகச் சிரித்தாள்.

“நான் முடிவு செய்துவிட்டேன்” என்றாள் குவேனி.

விஜயனின் அரவணைப்புச் சுகத்தை இழக்க அவள் தயாராகவில்லை.

“நமது உணவில் அவர்களுக்கு முதலி;ல் பங்கு கொடுத்தீர்கள். பின்னர் உடலில் பங்கு கொடுத்தீர்கள். நாளை இந்த மண்ணில் பங்கு கொடுக்கமாட்டீர்கள், முற்றாகவே கொடுத்து இழந்து விடுவீர்கள். நீங்கள் செய்கின்ற இத்தவறு நமது இனத்தைக் காலம் காலமாக அழவைக்கப் போகின்றது.”

தாரதத்தன் மேற்கில் அஸ்தமனமாகும் சூரியனை ஏறிட்டுப் பார்;த்துப் பெருமூச்செறிந்தான்.

மறுநாள் அதிகாலை தாரதத்தனும் அவனோடு சேர்ந்த ஒரு பகுதி மக்களும் குவேனி கூட்டத்தை விட்டுப் பிரிந்து வடக்கே ஜம்புகோளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com