Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
ஈழம்! நம்பிக்கை இன்னும் மீதம் இருக்கிறது

ஈழத்தில் வாழும் தமிழர்களால், தனிநாடு கோரி முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டம் ஆதிக்கத்தின் இராணுவக் கால்களால் மிதித்துத் துவம்சம் செய்யப்பட்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடியலை வேண்டி முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம், இறுதியில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இனவாதத்திற்குக் காவுகொடுத்து வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்துநிற்கிறது. விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். சிங்கள இனவாதம் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தோல்வி விடுதலைப் புலிகளின் தோல்வி மட்டுமன்று உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் தோல்வி. ‘தமிழீழத்தை அங்கீகரி’என்ற குரலுக்குச் செவிடாயிருந்த உலகம், சிங்கள இனவாதத்தின் தமிழின அழித்தொழிப்புக்கு முற்றுமுழுதாகத் தன் செவிகளைக் கொடுத்ததன் விளைவே இந்த வீழ்ச்சி. உலகம் முழுவதும் போராடும், ஒடுக்கப்பட்ட மக்களின் இனவிடுதலைக்குக் குரல்கொடுக்கும் அமைப்புகளின் மீது விழுந்த மிகப்பெரிய அடியெனவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

மாறாக, சிங்கள இனவாதம் பெற்ற வெற்றியோ இனவாதத்திற்கும் அதிகாரத்திற்கும் கிடைத்த வெற்றியெனலாம்.


ஆசிரியர்

வழக்கறிஞர் காமராஜ்

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

சமூக விழிப்புணர்வு,
74, 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி எண்: 94434 23638
[email protected]

ஆண்டுக்கட்டணம்: ரூ.150
ஆயுள் கட்டணம்: ரூ.1000

விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்விக்கு, அவர்கள் தரப்பிலிருந்த சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அதாவது, போர்க்கள வெற்றிகளை சர்வதேச அளவில் அரசியல் வெற்றிகளாக மாற்றாமை, இயக்கத்தில் பிளவு போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றினோடு புறக்காரணங்களையும் நாம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளவே வேண்டும். அதில் முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம், - வழக்கம்போல ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை, - சீன, இந்திய அரசுகள் பிராந்திய வல்லாதிக்கப் போட்டி காரணமாக இலங்கை அரசுக்குப் போட்டா போட்டி போட்டுக்கொண்டு செய்த உதவிகளைக் குறிப்பிடலாம்.

மேற்கண்ட தரப்பினரது பல்வேறுவகைப்பட்ட உள்நோக்கங்-களில் அடிபட்டுச் சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருப்பது ஈழத்தமிழினமே.

இந்த இனப்படுகொலையில் மேற்குலக நாடுகளின் பங்களிப்-பையும் புறந்தள்ளிவிட இயலாது. இலங்கையில் சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது, போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தது போல வெளிக்குத் தோற்றம் காட்டினாலும், போருக்குப் பின் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு கச்சை கட்டுவதுபோல தோன்றினாலும், அவையெல்லாம் கண்ணை ஏமாற்றும் மாயத்தோற்றங்களே!

விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தோல்விக்கு அன்றேல் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.

நார்வே அரசை மத்தியஸ்தமாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, பெருமளவி-லான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்து, புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா. சபையும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் பொழிந்து தாக்கப்பட்டபோது, அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்டபோது, அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது, பசியில் சிறுகச் சிறுகச் செத்துமடிந்தபோது, வெறுமனே அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாத ஐ.நா. சபை, ‘போர் முடிந்தது’என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் அரங்குக்கு வருகிறது. ஐ.நா.பொதுச் செய-லாளர் பான்-கீ-மூன் இலங்கை அர-சி-னால் ‘ஆசீர்வதிக்கப்பட்ட’ மக்-களைப் பார்வையிட அகதி முகாம்களுக்கு விஜயம் செய்ததன் மூலமாக, ஐ.நா. என்றொரு அமைப்பு இன்னமும் இருக்கிறது என்று அந்தப் பரிதாபத்திற்குரிய மக்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த நிகழ்வு எப்படியிருக்கிறதென்றால், கொத்திவிட்டு, தன்னால் கொத்தப்பட்டவன் இறந்துவிட்டானா என்று சுடுகாட்டு வழியிலுள்ள மரத்தில் தலைகீழாகத் தொங்கும் கொம்பேறி மூர்க்கன் என்ற பாம்பை நினைவுபடுத்துகிறது.

கம்யூனிச நாடு என்று தன்னைப் பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ளும் சீனாவோ முழுக்க முழுக்கத் தனது வர்த்தக நலன்கள் சார்ந்தும், இந்தியாவை உளவு பார்ப்பதற்கு மிகப் பொருத்தமான கேந்திர நிலையமாக இலங்கையைப் பயன்படுத்தும் பொருட்டும் தமிழின மக்களை அழிக்கும் இலங்கைக்கு பல்வகை உதவிகளை இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டு செய்து-வருகிறது. இலங்கையை இன்று சர்வதேச அரங்கில் எவருடைய கேள்விக்கும், விசாரணைக்கும் உட்படாமல் காப்பதென்பது சீனாவின் இன்றைய தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

சிங்கள அரசின் இனவாத வெற்றியில் இந்தியாவிற்குத்தான் முதன்மையானதும் முக்கியமானதுமான பங்கு இருக்கிறது. (ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பின்) இந்தியாவின் ராணுவத் தலையீடு பெரிய அளவில் வெளிப்படையாக இருக்கவில்லை. அது பா.ஜ.க. அரசானாலும் சரி, காங்கிரஸ் அரசானாலும் சரி. ஆனால், அப்போதும் அதிகாரிகள் மட்டத்தில் இலங்கைப் பிரச்சனை தன் கையை விட்டுப் போகாமல் பார்த்துக்கொண்டனர். போர் நிறுத்த ஒப்பந்தமானாலும் சரி, விடுதலைப் புலிகள் போரில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளைப் பெற்றபோதும் சரி அது அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுத்ததில் இந்தியாவின் பங்கு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. மேலும், நார்வே பேச்சுவார்த்தையின்போது அதில் தலையிடாதபோதிலும், பேச்சுவார்த்தை விபரங்கள் உட்பட அடுத்த நகர்வு முழுவதையும் தன் கண்காணிப்பின் கீழே, விரல்நுனியில் இந்தியா வைத்திருந்ததை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

2004ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டின் 40 எம்.பி.க்கள் துணையுடன், ‘தியாகத் திருவிளக்கு’ சோனியா தலைமையில் ஆட்சிபீடமேறியது. அதன்பிறகு இலங்கை தொடர்பில் இந்தியா தனது சுயரூபத்தை வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்தது. வெளிப்படையான காரணங்களாக இந்திய ஏகாதிபத்திய தொழிலதிபர்களின் நலன் காக்கப்படவேண்டுமென்பதும், தெற்-காசி-யாவின் வல்லரசாக உருவாகிவரும் சீனாவை இந்தப் பிராந்தியத்தில் தலையெடுக்க விடக்கூடாதென்ற எச்சரிக்கையு-ணர்-வும் இருந்தபோதிலும், உள்ளார்ந்த மேலதிக காரண-மொன்றும் இருந்ததை வரலாற்றை அவதானித்துவரும் அனைவரும் அறிவர். தனது கணவர் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற வன்மம் சோனியாவை உள்நின்று இயக்கியது. தம் நாட்டில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்க, இந்தியா இலங்கைக்குக் கடனுதவி வழங்கியது. தன் நாட்டு மக்களைக் கடல் வழியாகப் பாதுகாக்கத் துப்பில்லாத இந்தியா, இலங்கைக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது. தாராளமாக ஆயுதங்களையும் ஆள்படையையும் வாரிவழங்கியது. தனது ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்படும்பொழுதெல்லாம் வேடிக்கை பார்க்கும் இந்தியா, விடுதலைப் புலிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க தனது கடல் எல்லைகளைப் பலப்படுத்தியது. சுனாமியை முன்கூட்டி அறிவித்து தனது நாட்டு மக்களுக்கு உதவ முடியாத இந்தியா, இலங்கைக்கு தகவல் தொழில்நுட்ப உதவி வழங்கியது. உண்மையில் இந்தியாவே இலங்கையின் இனவாதப் போரை நடத்தியது. இலங்கையின் சிங்கள அரசு இந்தியாவின் உதவியோடு அதை முன்னெடுத்துச் சென்றது. சர்வதேச நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிடும் சூழல் உருவாகும்போதெல்லாம் தனது இருப்பைக் காட்டவும், அந்நாடுகளுக்கு முட்டுக்கட்டை போடவும் இந்தியா தவறுவதில்லை.

இவ்வாறு, சிங்களப் பேரினவாத அரசின் இனச்சுத்-திகரிப்-புக்குப் பல வெளிச்சக்திகள் உறுதுணையாக இருந்தி-ருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியானது, ஆதிக்கமையங்களுக்குக் கிடைத்த வெற்றியென்றால் அது மிகையில்லை.தொடர்ச்சியான 30 வருடப் போரின் இறுதியில், இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர், பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர், இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டபிறகு, போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்-சக்-கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்-ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்-படப்போகிறது? இத்தனை அனர்த்தங்களுக்கும் பிறகு சிங்கள இனவாத அரசு ‘எடுத்துக்கொள்’என்று எறியவிருக்கும் பிச்சையாக, அவர்களுக்கான தீர்வு சுருங்கிவிட்டிருப்பது எவ்வளவு பெரிய மானுட அவலம்! எவ்வளவு பெரிய துயரம்! இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரமென்றால் இதைத்தவிர வேறில்லை. இந்தத் தோல்வி தந்த வேதனையும் கையறு நிலையுந்-தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மருளச் செய்துள்ளது. புலம்பெயர்ந்துபோன தேசங்களில் அந்-நிய முதலாளிகளின் உணவகங்களைத் துடைத்தும், அவர்-களது தொழிற்சாலைகளில் நேரகாலம் மறந்து கடுமையாக உழைத்தும் போராட்டத்திற்குப் பின்பலமாக, பக்கத்துணையாக நின்ற தமிழர்கள் இன்று வேதனையில் விம்முகின்றனர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஈழத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டோடு இருந்தபோதிலும், அதனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுதியுடைய தலைமை இல்லாத காரணத்தால் கண்முன்னே நமது இனம் அழிபடப் பார்த்திருக்க விதிக்கப்பட்டோமே என்று மனமிடிந்துபோயிருக்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள இனவுணர்வு மிக்க தமிழர்கள்.

இந்-தத் -துயரங்களையும் தோல்விகளையும் கண்டு துவண்டுவிடத் தேவையில்லை. நம்பிக்கை எல்லாம் கரைந்து போய்-விடவில்லை. இதற்கு முன்பு போர்க்கள வெற்றிகளை ஈட்டி வந்த விடுதலைப் புலிகள் இப்பொழுது போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டாலும் அவர்கள் முன்னெடுத்துச் சென்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் பிரச்னைகளுக்காக போராடுகிறார்கள். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்னை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பொருளாக மாறி இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறியும் இருக்கிறது. ஈழ தமிழர் பிரச்னையில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியும் கூட. உலகின் எந்தவொரு இனவிடுதலைப் போராட்டத்தையும் ஆயுதங்களாலும் அடக்குமுறைகளாலும் ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் படிப்பினை. இந்தத் தோல்வி தரும் பாடங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. தோல்விக்கான காரணங்களை இனங்கண்டு களைவதன் வழியாக, வெற்றியின் பாதையில் விரைந்து நடப்பதற்கு இந்நேரத்தில் உறுதிகொள்வோம்.

ஆயுதங்களாலும் அடக்குமுறையாலும் ஒரு இனவிடுதலையை வேரறுத்துவிடமுடியாது என்பதற்கு, ஈழத்தை முன்னுதாரணமாக மாற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நம் எல்லோர்முன்பும் விரிந்துகிடக்கிறது.

ஆம். நம்பிக்கை இன்னும் மீதம் இருக்கிறது. நாம் ஆற்ற வேண்டிய கடமையும் அதிகம் இருக்கிறது.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com