Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
சீனாவின் முற்றுகையில் இந்தியா

சிங்கள ராணுவம் போர்க்களத்தில் அடைந்த வெற்றிக்கு காரணக் காரியத்தைக் கணக்கிட்டு அனைத்து உதவிகளையும் செய்தது இந்தியா. அதன் பலனை அனுபவிக்கும் வேளையும் தற்பொழுது வந்திருப்பதால் ஏகாதிபத்திய வெறியுடன் காத்திருக்கிறது. முடிந்த அளவு அனைத்து வணிக ஒப்பந்தங்களையும் இலங்கை அரசுடன் நிறைவேற்றி தனது நாட்டு முதலாளிகளுக்குச் சேவை புரிவதும். இலங்கைக்கு தொடர்ச்சியான ராணுவ உதவிகள் செய்து அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுமே இந்தியாவின் நோக்கம்.

ஆனால் நடைமுறையோ வேறொன்றாக இருக்கிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் இப்பொழுது இலங்கை இருக்கிறது. சீனாவினை மீறி இலங்கையின் அதிகார மட்டங்களில் எதுவும் நடக்காது. தன் நலன் சார்ந்து இயங்கும் அதிகார வர்க்கங்கள் மூலம் ஒட்டு மொத்த இலங்கையின் கட்டமைப்பையும் கைப்பற்றி விட்ட சீனா அடுத்தபடியாக இந்தியாவை தென் திசையில் முற்றுகையிட்டுள்ளது. இனி சீனாவின் முற்றுகையில் இருந்து இந்தியா மீள்வது எளிதில் நடைபெற முடியாத ஒன்றாகும். அது குறித்து பல்வேறு தரவுகளுடன் சமூக விழிப்புணர்வு பதிப்பகம் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்.

நூல் : சீனாவின் முற்றுகையில் இந்தியா
வெளியீடு : சமூக விழிப்புணர்வு, 68/15, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை, சென்னை & 18. பேசி : 24354142, விலை : ரூ.75 பக்கம் : 144

“கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் தொழில் செய்வதற்காக இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது அல்லவா... அதற்கு உடனடியாக அனுமதி வழங்குவதே இந்தியா செய்த உதவிக்கான சரியான பிரதி உபகாரமாக இருக்கும்” என்று அவர்கள் முடிவு செய்தனர். அவர்களது முடிவை நேரடியாகத் தெரிவித்திட புது தில்லிக்கு விரைந்தார் முதலீட்டு வளர்ச்சித் துறையையும், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத்துறையையும் ஒருசேரக் கவனித்துவரும் அமைச்சரான அனுராபிரியதர்சன யாப்பா.

அமைச்சர் யாப்பாவின் மூலம் செய்தியை அறிந்த இந்திய அரசு மகிழ்ந்தது. சீன அரசுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்காகவே ஏர்டெல்லை இலங்கைக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஆறு மாதங்களாக சிங்கப்பூர் நிறுவனமான சிங்டெல்லுடன் கூட்டுச் சேர்ந்து இலங்கை அரசு முயன்று வருகிறது என்பதை இந்திய அரசு அறிந்திருக்கவில்லை. அதி நவீன ராடார்களைத் தயாரிக்கும் சீன நிறுவனமான East China Research Institute of Electronic Engineering-இன் சகோதர நிறுவனமான ஹூவாவெய்-இன் தலைமை அலுவலகத்துக்கு - ஏர்டெல் நிறுவனத்தில் 30% பங்குகளைக் கொண்டிருக்கும் சிங்டெல் நிறுவனத்தின் தலைவராலும், சீன உளவுத்துறையின் தலைவராலும் அழைத்துச்செல்லப்பட்ட அமைச்சர் யாப்பாவுக்கும், அவர்தம் ஜனாதிபதிக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு மார்ச் 2 ஆம் தேதியன்று அளிக்கப்பட்டதை இந்திய அரசு அறிந்திருக்கவில்லை. தனக்கெதிராக மாபெரும் சதிவலை ஒன்றை சீன மற்றும் இலங்கை அரசுகள் பின்னிழு கொண்டிருக்கின்றன என்பதை அறியாத ஒரு ‘அப்பாவி’யாகவே இந்திய அரசு இருந்தது.

இலங்கையில் 200 மில்லி யன் டாலர் (1000 கோடி ரூபாய்) முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதியை ஏர்டெல் நிறுவனத்திற்கு ஜனாதிபதி ராஜபக்சே ஏப்ரல் 12 ஆம் தேதியன்று அதிகார பூர்வமாக வழங்கினார்.

2007 மார்ச் 28 ஆம் தேதியன்று இலங்கைக்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் செய்வதாக இந்திய வெளியுறவு செயலாளர் மேனன் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்குப் பிறகே ராஜபக்சே ஏர்டெல்லுக்கு அனுமதி கொடுத்தார். இருந்தாலும் இலங்கை முதலீட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் அது தன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து நான்கு மாதங்களாகியும் மந்திரி யாப்பாவின் கீழ் இயங்கும் முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் அதற்குக் கிடைக்கவில்லை. அதற்கான காரணம்?

அடுத்த மூன்றாவது நாளில் அதாவது செப்டம்பர் 18 ஆம் தேதியன்று இலங்கை ஏர்டெல் லின் அடிப்படைத் தகவல் தொடர் புக் கட்டுமானத்தை நாடு முழுதும் நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்குமான உரிமை சீன உளவுத்துறையான MSS-உடன் நேரடித் தொடர்பு கொண்ட நிறுவனம் என்று 2000 ஆண்டில் இந்திய உளவுத்துறை நிறுவனமான RAW-வால் சுட்டிக்காட்டப்பட்ட சீனாவின் ஹூவாவெய் நிறுனத் திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணிக்காக 150 மில்லியன் டாலரை (750 கோடி ரூபாய்) ஹூவா வெய் நிறுவனத் திற்கு இலங்கை ஏர்டெல் அளித்தது.

150 மில்லியன் டாலர் மழையில் ஹூவா வெய் நனைந்துகொண்டிருந்த அதே நாளில் இலங்கை இராணுவத்தின் புதிய தகவல் தொடர்பாளராக பிரிகேடியர் உதய நனயக்காரா நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் பலகாலம் பயிற்சிபெற்ற பிரிகேடியர் உதய நனயக்காராவுக்கு நெருங்கி யவரும், யூனிலிவர் நிறுவனத்தில் (இலங்கை மட்டுமல்லாமல்) பாகிஸ்தானிலும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவருமான திருமதி. அமலி நனயக்காராவை இலங்கை ஏர்டெல்லின் முதன்மை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஒலோஃப் பரிந்துரைத்தார். சுனில் மிட்டலும், கூங்கும் அதை ஆமோதித்தனர்.

அமலி பதவியில் அமர்த்தப்பட்டது குறித்து அறிந்த பலர், யூனிலிவர் சோப்புக் கம்பெனி நிர்வாகி செல்போன் கம்பெனியை எப்படி நிர்வாகம் செய்யப் போகிறார் என்றும், பாகிஸ்தானில் பலகாலம் இருந்த ஒருவர் இந்திய நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவதா என்றும் ஆச்சர்யப்பட்டார்கள். இருந்தாலும், அக்டோபர் 18 ஆம் தேதியன்று அமலி நனயக்காரா இலங்கை ஏர்டெல்லின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இலங்கை ஏர்டெல் எதிர்காலத்தில் எப்படி இயங்கப் போகிறது என்பதை அது துவங்கப்பட்ட விதத்திலிருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று ஈழத்தின் தலைநகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல மறுநாளிலிருந்து செய்தித்தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் ஏர்டெல்லின் “ஹலோ ஏர்டெல்” விளம்பரங்கள் வரத் தொடங்கின. அடுத்த மூன்றாம் நாள் அனைவருக்கும் இலவசமாக ஏர்டெல்லின் சிம் கார்டு வழங்கப்பட்டது. அதை அடுத்த ஏழாவது நாளில் அதாவது ஜனவரி 12 ஆம் தேதியன்று இலங்கை ஏர்டெல் தன் “சேவையைக்” கோலாகலமாகத் தொடங்கியது.ஹூவாவெய் நிறுவனம் இந்தியாவுக்குப் புதிதல்ல. அந்த நிறுவனத்தை இந்திய அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நன்கு அறிவர்.

1999 ஆம் ஆண்டில், வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹூவாவெய் இந்தியாவில் தன் கால்களைப் பதித்தது. பெங்களூரில் அது தன் முதல் தொழிற்கூடத்தை அப்போது தொடங்கியது. இயங்கத் தொடங்கிய முதல் வருடத்திலேயே இந்தியாவில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் செய்யத் துணியாத செயலொன்றை அது செய்தது.

இந்தியப் பயணிகள் விமானம் ஒன்றை ஆப்கானிஸ்தான் நாட்டின் நகரமான கந்தஹாருக்கு 1999 டிசம்பர் 24 ஆம் தேதியன்று பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். விமானக் கடத்தல்காரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாலிபான் அரசே முன் நின்று செய்து கொடுத்தது. இந்திய சிறையில் உள்ள தம் கூட்டாளிகளை விடுவிக்கவேண்டும் என்பதே விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகளின் கோரிக்கை. இறுதியில் வேறு வழியின்றி, இந்தியச் சிறையில் இருந்த நான்கு பயங்கரவாதிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங்கே ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து சென்று கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்த பின்னர்தான் விமானம் விடுவிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்குத் தேவையான அனைத்து உதவியையும் தாலிபான் அரசு செய்து கொடுத்தது.

தாலிபான் அரசின் மீது வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு உச்சக்கட்ட கோபத்தைக் கொண்டிருந்த அந்த நாட்களில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு சகல விதத்திலும் சீன அரசு உதவிக் கொண்டிருந்தது. அவ்வாறு உதவுவதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் 2000 ஆம் ஆண்டிலும் ஒரு குழுவை அது அனுப்பியது. அந்தக் குழுவில் பெங்களூரில் உள்ள ஹூவாவெய் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். தாலிபான் அரசுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப வசதியையும், மின்னணு உளவுக் கருவிகளையும் நிறுவுவதற்காகவே ஹூவாவெய்-இன் இந்தியக் கிளையைச் சேர்ந்தவர்கள் சென்றிருந்தனர்.

ஆப்கானிஸ்தானுக்குள் சென்ற ஹூவாவெய் இந்தியாவின் சீனப் பணியாளர்களை உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அவர்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது கடுமையாக எச்சரித்தார்.

“இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட்டால், பெங்களூரில் உள்ள ஹூவாவெய் கிளையில் பணி புரியும் சுமார் 150 சீனத் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் அனைவரையும் இந்தியா நாடு கடத்தத் தயங்காது” என்று அவர் கூறினார்.

இருப்பினும், அத்வானி அவர்களால் எச்சரிக் கையை மட்டுமே விடுக்க முடிந்தது. ஏனெனில் வளர்ந்து கொண்டிருந்த இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை முதலாளிகளுக்கு ஹூவாவெய் நிறுவனத்தின் சேவை மிகவும் அவசியமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த எரிக்சன், மோட்டரோலா போன்ற நிறுவனங்களின் சேவையைக் காட்டிலும் ஹூவாவெய்-யின் சேவை பாதிக்கும் குறைவான விலைக்குக் கிடைத்ததே இந்திய முதலாளிகளின் மனதில் ஹூவாவெய் இடம் பெற்றதற்கான காரணம். தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவையை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் எதிரி நாட்டின் முதலாளிகளின் மனதில் இடம் பிடித்து அதன் மூலம் தன் நீண்டகால இராணுவத் தேவைகளை சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற சீன அரசின் இராணுவக் கொள்கையைப் பற்றி சொந்த லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகள் ஏன் சிந்திக்க வேண்டும்?

2001 டிசம்பர் 11 ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாளில் பின்வரும் செய்தி வெளியாகியது:

“ஆப்கானிஸ்தானுக்குத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளையும், மின்னணு உளவுக் கருவிகளையும் கொடுத்ததாக ஹூவாவெய் நிறுவனத்தின் மீது சென்ற வருடம் குற்றம் சாட்டப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இன்று, ஆப்கானிஸ்தானின் மீது நடந்திருக்கும் அமெரிக்க இராணுவப் படையெடுப்பின் காரணத்தால் எவரும் எதிர்பார்க்காத விளைவு ஒன்று உருவாகியிருக்கிறது. இந்தியாவில் வியாபாரம் செய்துவரும் இரண்டு சீன நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென்று “தேசப் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சர்கள் குழு” (Cabinet Committee on Security - CCS) முடிவு செய்திருக்கிறது. இந்திய உளவு நிறுவனங்களான IB மற்றும் RAW கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் 1,30,000 பேருக்கு தொலைபேசி இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சீன நிறுவனங்களில் ஹூவாவெய் நிறுவனமும் ஒன்று. உலகிலேயே ஏழாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவெய்யின் உடைமையாளர் யார் என்பது எவருக்கும் தெரியாத விடயம். 1988 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தை சீன இராணுவத்தைச் சேர்ந்த ரென் ழெங்பெய் துவக்கினார். இன்றுவரை ஹூவாவெய்யின் தலைவராக அவரே இருந்து வருகிறார். 1999 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர் முதலீட்டில் இரண்டு மென்பொருள் மையங்களை பெங்களூரில் ஓசைப்படாமல் அவர் நிறுவினார். இந்த நிறுவனத்தில் இன்று 513 பேர் பணியாற்றுகிறார்கள். அதில் 178 பேர் சீன மென்பொருள் நிபுணர்களாவர்.”

2005 நவம்பர் 16 ஆம் தேதியன்று “ஏசியா டைம்ஸ் ஆன்லைன்” பத்திரிகையில் பின்வரும் செய்தி வெளியானது:

“சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் படையெடுப்பிலிருந்து தன்னைக் காத்துகொள்ள இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. பெங்களூரில் உள்ள ஹூவாவெய் நிறுவனம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 60 மில்லியன் டாலர் முதலீட்டில் தன் தொழிற்கூடத்தை விரிவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்தது. இருப்பினும், இந்திய உளவுத்துறையின் பரிந்துறைக்கேற்ப இந்தியாவின் வெளிநாட்டு மூலதன ஊக்குவிப்பு வாரியமும் (Forign Investment Promotion Board - FIPB), இந்தியத் தொலைதொடர்புத் துறையும் அதற்கு அனுமதி மறுத்திருக்கினறன. ஹூவாவெய் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.”

2008 ஆகஸ்டு 26 ஆம் தேதியன்று “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகை பின்வரும் செய்தியை வெளியிட்டிருந்தது:

“பெங்களூரில் உள்ள ஹூவாவெய் நிறுவனம் இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டதற்கும் கூடுதலாக சீன நாட்டினரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது என்று மத்தியத் தொழிலாளர் நல அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் அது கூறியதாவது:”அவர்கள் பலரிடம் இந்தியாவில் பணியாற்றுவதற்கான உரிமம் இல்லை. எனவே அவர்கள் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதை ஹூவாவெய் நிறுவனம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். செய்யத் தவறினால், நிறுவனத்தின் தலைவர் உட்பட அனைவரும் சிறைக் கம்பியை எண்ண வேண்டியிருக்கும். மேலும் ஹூவாவெய் நிறுவனத்தை இழுத்து மூடவும் தயங்க மாட்டோம்.”

இந்தக் காலகட்டத்தில் 2007 மே மாதம் வரை மத்தியத் தகவல் தொலைதொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் அவர்களே பதவி வகித்தார். இவரைத் தொடர்ந்து இந்தப் பதவியை வகித்து வருபவர் திரு.ஆ.ராசா. இந்த இரண்டு பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ஹூவாவெய் நிறுவனத்துடன் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியும் கூட, இந்தியாவின் பெருமுதலாளிகள் அதன் மலிவு விலைப் பொருட்களால் கவரப்பட்டு அதனுடன் கூட்டுவைக்கத் தவறவில்லை. மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சகமும் இந்தக் கூட்டணியைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அந்நிய மூலதனத்தை 49%-இல் இருந்து 74% ஆகக் கூட்டுவதனால் ஏற்பட வாய்ப்புள்ள நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து பின்வரும் கருத்தை தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தெரிவித்ததாக றிஜிமி செய்தி நிறுவனம் 2006 அக்டோபர் 26 ஆம் தேதி பின்வரும் செய்தியை வெளியிட்டது:

“நாட்டின் பாதுகாப்பு இன்றியமையாதது; தலையாயது. அதனை எந்த விதத்திலும் விட் டுக்கொடுக்க இயலாது. ஆனாலும் நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் நாம் அதிகம் அலட்டிக்கொள்ளக் கூடாது. உலக நடைமுறை என்னவோ அதையே நாமும் கடைப் பிடிக்க வேண்டும்”.

தகவல் தொலைத் தொடர்புத்துறைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் உள்ள உறவு குறித்து அந்தத் துறையின் அமைச்சரே எவ்வளவு அசிரத்தையாக இருந்தார் என்பதை மேற்கூறிய அவரது கருத்து வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாக உள்ளது. 2007 மார்ச் 25 ஆம் தேதியன்று அந்நிய நிறுவனங்கள் 74% பங்குகளை இந்திய தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வைத்துக்கொள்வதற்கான அனுமதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் அளித்தது. அந்நிய நிறுவனங்கள் குறித்த அவரது ‘அசிரத்தை’யான போக்கே இந்தியப் பெருமுதலாளிகளை சந்தேகத்துக்கு இடமளிக்கும் அந்நிய நிறுவனங்களுடன் கூட்டு வைக்க ஊக்கமளித்தது.

கோவா மாநில அரசு 2006 ஆம் ஆண்டில் மாநிலத்தின் “பிராட்பேண்ட்” சேவையைத் துவங்க முடிவு செய்தது. 227 மில்லியன் டாலருக்கான இந்தப் பணியை எடுக்க டாட்டா நிறுவனத்தின் அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் (Tata Teleservices Maharashtra Ltd, Videsh Sanchar Nigam Ltd and Tata Consultancy Services) ஹூவாவெய் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து களத்தில் குதித்தன.

2007 ஜூலை மாதம் “ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ்” நிறுவனம் தனது 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல்தொடர்பு விரிவாக்கப் பணியை ஹூவாவெய் நிறுவனத்திற்கு அளித்தது.

2007- 2008 ஆம் ஆண்டுகளின்போது பலநூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள கட்டமைப்புப் பணிகளை டாட்டா இன்ஃபோடெக் நிறுவனம் ஹூவாவெய் நிறுவனத்திற்குக் கொடுத்தது.

உலக நாடுகள் பலவற்றின் அரசுகள் இந்திய அரசைப் போலன்றித் தம் நாட்டு இராணுவப் பாதுகாப்புடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களை ஹூவாவெய்யுடன் கூட்டுவைத்துக் கொள்ளக்கூடாது என்று 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தடை விதித்தும், எச்சரித்தும் வந்திருக்கின்றன. “உலக நடைமுறை என்னவோ அதையே நாமும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று 2006 அக்டோபரில் தயாநிதி மாறன் கூறியது உண்மை வாக்காக இருந்திருந்தால் ஹூவாவெய் நிறுவனத்துடன் டாட்டாவும், ரிலையன்சும் சேர்ந்து இயங்கியதை அவர் அனுமதித்திருக்க மாட்டார்.

இலங்கைக்குள் ஹூவாவெய்-ஐ அழைத்து வந்த சிங்டெல் நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொலைத் தொடர்பு நிறுவனமான “ஆப்டஸ்”-ஐ வாங்கியது. அதன் பிறகு ஆப்டஸ்-இன் பழைய கட்டுமானங்களை மேம்படுத்தும் பணியினைத் தனது நட்பு நிறுவனமான ஹூவாவெய்-ற்கு அளித்தது. “ஆப்டஸ்”-சின் பயனாளர்களாக ஆஸ்திரேலிய இராணுவத்தின் சில நிறுவனங்களும் இருந்தன. ஹூவாவெய்-இன் சீன உளவுப் பின்னணியை முன் நிறுத்தி ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக மேற்கூறிய பணியினை ஹூவாவெய்-ற்குக் கொடுப்பதில் இருந்து சிங்டெல் பின் வாங்கியது.2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரபலத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 3COM-ஐ ஹூவாவெய் வாங்க முனைந்தது. இருப்பினும் அதற்கு எதிராக நாடு முழுதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக 3 COM-இன் விற்பனைக்கு 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தடை விதித்தது.

2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடா நாட்டின் முன்னணித் தகவல்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான “நார்டெல்” நிறுவனம் கடுமையான நிதிப்பிரச்சினையில் சிக்கிக்கொண்டது. அந்த நிறுவனத்தை வாங்கிட ஹூவாவெய் முயற்சி செய்தது. இருப்பினும் நார்டெல்லின் சில குறிப்பிட்ட லைன்களை அமெரிக்காவின் இராணுவம் உபயோகித்துக் கொண்டிருந்ததால் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் எதிர்ப்புகள் வலுத்தன. வழக்கம்போல ஹூவாவெய் நிறுவனம் தான் முன் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டது.

உலக அளவில் ஹூவாவெய்க்கு எதிராக இதுபோன்ற எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருந்த போதுதான் ஹூவாவெய் நிறுவனத்துடன் தன் கட்டமைப்புகளை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்குமான ஒப்பந்தத்தில் இலங்கையின் ஏர்டெல் நிறுவனம் கையெழுத்திட்டிருக்கிறது.

இந்திய உளவு நிறுவனங்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, 2000 ஆம் ஆண்டில் இந்திய விமானத்தை கடத்திச் சென்றவர்களுக்குப் பின்னால் நின்ற தாலிபான் அரசிற்கு தொலைத் தொடர்பு உளவுக் கருவிகளை நிறுவிய நிறுவனம்தான் ஹூவாவெய். இனி இந்தியாவின் ஏர்டெல் தனக்குக் கொடுத்த 150 மில்லியன் டாலர் பணத்தையும், இலங்கை அரசின் பேராதரவையும் துணையாகக் கொண்டு இலங்கை மண்ணில் தன் கால்களை நிலையாகப் பதித்து இந்தியாவை வேவு பார்ப்பதற்கான அனைத்து உயர்தொழில் நுட்பக் கருவிகளையும் அங்கு நிறுவப் போகிறது.

 2000-த்திலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் ஹூவாவெய்-க்கு எதிராகக் குரல்கொடுத்த எவரும் இலங்கையில் ஹூவாவெய்க்கு ஏர்டெல் கொடுத்த அனுமதியை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை?

 தற்போதைய மத்தியத் தொலை தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசா 3நி அலைவரிசைகளை ஸ்வான் மற்றும் யூனிடெக் போன்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார் என்று பாரதிய ஜனதா கட்சி, அண்ணா தி.மு.க., இடது சாரிகள், சன் தொலைக்காட்சி, தினகரன் நாளேடு ஆகியோர் பேசுகிறார்களே... அதைவிடப் பலமடங்கு முக்கியத்துவமானதும், நாட்டின் பாதுகாப்புடன் நேரடித் தொடர்பு கொண்டதுமான இலங்கை ஏர்டெல்- ஹூவாவெய் உறவைப் பற்றி ஏன் அவர்கள் பேசவில்லை?

 ஹூவாவெய் பற்றி தயாநிதி மாறன் வாயே திறப்பதில்லை. ஏன்?

 இலங்கை இராணுவத் தலைமைக்கு இந்திய அரசால் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.கே.நாராயணன், சிவ சங்கர மேனன், விஜய் சிங் போன்றோரும் இது குறித்து வாய் மூடி, மௌனமாக இருந்தது எதற்காக? யாரைக் காப்பாற்ற?

 ஏர்டெல் நிறுவனத்தின் தலைவராக - “பன்னாட்டு உளவாளியோ இவர்” என்று சந்தேகம் கொள்ள வைக்கிற அளவுக்கு நடத்தையைக் கொண்டிருக்கும் நபரான ஒலொஃப் ஹாக்-கை பதவியமர்த்திய போதும், இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு (செல்போன் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக எவ்விதத் தகுதியும் அற்ற) நெருக்கமான பெண்மணி ஒருவரை அவர் பாகிஸ்தானில் பல காலம் இருந்தவர் என்பது உலகமே அறிந்த விஷயமாக இருந்த போதும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக அமர்த்திய போதும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இருக்கும் இந்த மும்மூர்த்திகள் ஏன் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை?

 தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் ஹூவாவெய் பற்றிய மௌனத்தின்

பின்னணி என்ன?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com