Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
உதிரிகள் பேசட்டும் ஊடகப்போர் முடியட்டும்
ஆழியூரான்

அதிகாரங்கள் உற்பத்தி செய்த சொல்லாடல்கள் காற்றெங்கும் அலைந்து திரிகின்றன. அவற்றை உச்சரிக்கவும், அவற்றால் சிந்திக்கவும் நமது மனங்கள் வலிந்து பழக்கப்படுத்தப்படுகின்றன. தான் விரும்பும் திசைநோக்கி உரையாடலை இட்டுச்செல்லும் தர்க்கங்களை மட்டுமே அதிகாரம் மறுமறுபடியும் உலவவிடுகிறது. இன்றைய நமது பேச்சும் செயலும் கருவிகளாக இருக்க, ஒரு தொலையியக்கி மூலம் அதிகாரம்தான் நம்மை செலுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு தேசிய இனத்தின் வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம் இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்டிருக்கிறது. அமைதியின்பால் பெருவிருப்புக் கொண்ட ஓர் இனம், ஆயுதம் தரிக்க வேண்டியதன் பின்னுள்ள நியாயங்களை உலகம் பேசத் தொடங்கும் முன்பே அந்த இனத்தின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்களத் தீவின் காற்றில் பிணவாடை வீசிக்கொண்டிருக்க, நாம் துயரத்தின் மொழியுடன் தோல்வியை எழுதிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த கொடுஞ்சமரின் பங்காளிகள் சிங்கள பேரினவாதமும், தெற்காசிய, உலக வல்லாதிக்க தேசங்களும் மட்டும்தானா..? ஒரு பெருந்திரளான மக்கள் கூட்டம் செத்து மடிவதை தன் மௌனத்தால் அங்கீகரித்த ஊடகங்களும் இந்த கொலைகளில் கை நனைத்திருக்கின்றன. வன்னித் தமிழனை பிணமாக்கி புதைத்ததில் ஊடகங்களுக்கும் பங்குண்டு.

மற்ற மொழி ஊடகங்களை விட, ஈழப் போராட்டத்தின் நியாயங்களை உலக்குக்கு உரத்தக் குரலில் எடுத்துச் சொல்ல வேண்டிய பெரிய கடமை தமிழ் ஊடகங்களுக்குதான் இருக்கிறது. ஒரே மொழி பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை அந்த மொழி ஊடகங்களை விட வேறு யார் அதிகம் அறிந்திருக்க இயலும்? ஆனால் தமிழகத்து ஊடகங்கள் ஈழப் போர் பற்றிய செய்திகளை, ஒடுக்குபவனின் பக்கம் நின்று அவன் குரலில் பேசின/பேசுகின்றன. விடுதலைப் புலிகள் தங்களின் பெரும்பகுதி நிலப்பரப்பை இழந்துவிட்ட நிலையில் மிச்சமிருந்த இரண்டு விமானங்களைக் கொண்டு கொழும்பு அரசாங்க கட்டடத்தின் மீது தற்கொலைத் தாக்குல் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் சிங்கள வான் படைகள் தமிழர் பகுதிகள் மீது மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டன. உடனே, ‘புலிகளின் விமானத் தாக்குதலுக்கு சிங்கள ராணுவம் பதிலடி’ என்று ஸ்க்ரோலிங் செய்தி வெளியிடுகிறது சன் டி.வி. ‘பதிலடி’ என்ற வார்த்தையை சிங்களனின் பக்கம் நின்றுகொண்டு சன் டி.வி. பேசுகிறது. புலிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதில்லை என்பது உங்கள் கொள்கை முடிவு என்றால் ‘சிங்கள ராணுவம் எதிர் தாக்குதல்’ என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்..?

இலங்கைப்போர் பற்றிய பெரும்பகுதி உண்மைகள் மக்களை சென்றடையவிடாமல் தடுக்கும் பணியை தமிழகக் காட்சி ஊடகங்கள் முன்னின்று செய்தன. அருகாமை தேசத்தில் இவ்வளவு பெரிய யுத்தம் நடக்கிறது, அத்தனை லட்சம் மக்கள் உறுப்பிழந்து, உணர்விழந்து, பசியாலும், பட்டினியாலும் செத்து மடியும்போது அதைப்பற்றி இந்த ஊடகங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எத்தனையோ காட்சிப் பதிவுகள் வெளிவந்தும் அவற்றில் ஒரு சிறுபகுதியையும் எந்த தொலைகாட்சியும் ஒளிபரப்பவில்லை. எவன் எங்கு செத்தால் நமக்கென்னவென எந்த கவலையும் அற்று தனது வழக்கமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மூழ்கியிருந்தன. இலங்கைப் பிரச்னைக்காக தி.மு.க. அரசு ஒரு நாள் பந்த் நடத்தியபோது கலைஞர் டி.வியும், சன் டி.வி.யும் ‘விடுமுறை நாள் கொண்டாட்டம்’ என்று சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பி அதைக் கொண்டாடின. எல்லாவற்றையும் பொழுதுபோக்காக மாற்றிவைத்திருக்கும் இந்த மீடியாக்கள் தமிழர்களின் பிணங்களையும் பொழுதுபோக்காக மாற்றின. ஐ.பி.எல். விளம்பர இடைவேளையிலும், மானாட மயிலாட விளம்பர இடைவேளையிலும் மட்டுமே இலங்கைப் பிரச்னையின் நடப்பு நிலையை அறிந்துகொள்ள பார்வையாளர்களின் மனங்களைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். மக்கள் சாவதன் அரசியல் நியாயங்களைப் பேசுவதற்கு பதிலாக கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதுபோல் எத்தனை பேர் செத்தார்கள் என்று இழவு செய்தி சொல்வதுடன் ஊடகங்கள் ஒதுங்கிக்கொள்கின்றன.

சற்றே காட்சிகளை பின்னோக்கி நகர்த்தி கருணாநிதி கைதின்போது இவர்கள் நடத்திய நாடகங்களை நினைத்துப்பாருங்கள். காலையில் எழுந்து டி.வி-யைத் திறந்ததும் ‘ஐயோ கொல்றாங்களே..’ என்று கருணாநிதி அலறிய காட்சிகள் திரும்ப, திரும்பக் காட்டப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய பதட்டத்தை உருவாக்கினார்கள். அன்றைய நாள் தமிழகத்தின் துக்க தினமானது. வாகனங்கள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் காட்சிகளைப் பார்த்த தீவிர தி.மு.க. அனுதாபிகள் கருணாநிதிக்கு நேர்ந்து நிலைகண்டு மனம் கலங்கி செத்தும் போனார்கள். ‘இது ஒரு சன் டி.வி. தயாரிப்பு’ என்று இறுதியில் போடவில்லை என்பதைத் தவிர அது சகல எடிட்டிங் நுட்பங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு நாடகம். அந்த நாடகத்தை வைத்தே அவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக சன் நெட்வொர்க் இருக்கிறது. ஆனால் இலங்கையில் இத்தனை ஆயிரம் மக்கள் செத்தபோது என்ன மயிறைப் பிடுங்கியது சன் டி.வி.? போர் உச்சத்தில் இருந்தபோதுதான் இவர்கள் ‘சிரிப்பொலி’ தொடங்கினார்கள். ‘என்னைத் தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாவேன், கட்டுவிரியனாவேன்’ என்று தினமும் தொலைகாட்சியில் வந்து அறுபதுகளின் வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கும் கருணாநிதி நாளையே இறந்துபோனால் அந்த நாளை இந்த தேசத்தின் துக்க நாளாக மாற்றும் பலம் சன் நெட்வொர்க்குக்கு உண்டு. நிச்சயம் செய்யவும் செய்வார்கள்.இன்னொருபுறம் இலங்கைத் தீவின் தேசிய இனப் போராட்டத்தை அனைத்து ஆங்கில காட்சி ஊடகங்களும் தொடர்ந்து ஒரு தீவிரவாதத் தாக்குதலாகவே சித்தரிக்கின்றன. ராஜீவ்காந்தியை கொலை செய்வதற்காகவே புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டதான தொனியில் தொடர் பிரச்சாரம் செய்கிறார்கள். புலிகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் அடக்கப்பட்ட விதம், அதற்காக அவர்கள் போராடிய வரலாறுகள் எதையும் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. தமிழர்களுக்கான அரசியல் நியாயங்களைப் பேசாமல் உரிமைகளுக்காகப் பேசும் துப்பாக்கிகளின் தோட்டாக்களை மட்டுமே பார்ப்பது என்ன வகையான ஊடக அறம்? ‘ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது ஏன்?’ என்ற கேள்வியை ஆத்ம சுத்தியுடனும், அரசியல் தர்க்கங்களுடனும் இந்திய ஊடகங்கள் இதுவரைக்கும் அணுகியதே இல்லை. தன் இயக்கத்தின் அடிப்படையைக் கட்டமைத்துக்கொடுத்த இந்திரா காந்தியின் புதல்வனை, தன் இன விடுதலைக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய தெற்காசியப் வல்லாதிக்கத்தின் பிரதமரை புலிகள் ஏன் கொல்ல வேண்டும்? இந்த கேள்வி இதுவரைக்கும் இந்திய ஊடகங்களால் காத்திரமான குரலில் எழுப்பப்படவில்லை. விவாதங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப்படையினர் ஈழத் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய சித்திரவதைகள் பற்றியும் பேசுவதில்லை.

அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் போரில் செத்தபோது அதைப்பற்றி எவ்வித அக்கரையும் அற்று கள்ள மௌனம் சாதித்த இவர்கள்தான் ‘பிரபாகரன் மரணம்’ என இலங்கை ராணுவம் அறிவித்த உடனேயே அதைப்பற்றியே அலறினார்கள். சிறப்பு நிகழ்ச்சிகள் வெளியிட்டார்கள். பிரபாகரனை ராஜீவ்காந்தி கொலையாளி என தொடர்ந்து சித்தரித்தனர். சிங்கள பேரினவாதத்தின் குண்டுகளுக்கு பலியானவர்கள் அனைவருமே புலிகள் என்றார்கள். ஆனால் இதே இந்தியாவுக்குள் நரேந்திர மோடி என்றொரு இந்து பாசிஸ்ட் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய படுகொலைகளை அரங்கேற்றினான். ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் எதற்கு சாகிறோம் என்பதுக்கூட தெரியாமல் சூலாயுதத்தின் வெறிக்கு பலியானார்கள். இந்த கொலைகளை செய்தவர்களின் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் பெற்று நாடறிய வெளியிட்டது தெஹல்கா இதழ். ஆனால் இதுவரைக்கும் நரேந்திர மோடி என்னும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலைகாரன் பற்றி இந்திய ஊடகங்கள் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. அவனைப்பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகளையோ, அவனை கைது செய்ய வேண்டும், தூக்கில் போட வேண்டும் என்ற விவாதன்களையோ நடத்தவில்லை. மாறாக ‘விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா..?’, ‘பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமா..?’, ‘இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தனி நாடு வேண்டுமா..?’ என்பதுபோல கேள்விகளை எழுப்பி பார்வையாளர்களை வாக்களிக்கச் சொல்கிறது. இதன்மூலம் தங்களது கருத்தை பொதுக்கருத்தாக்க முனைகிறது.

ஆங்கில ஊடகங்களுக்கு இலங்கைப் பிரச்னைப்பற்றி பேச வேண்டும், கருத்துச் சொல்ல வேண்டும் என்றால் உடனே ‘லங்கா ரத்னா’ புகழ் என்.ராம், மாலன், சுதாங்கன், சோ, சூனா சாமி இவர்கள்தான் கிடைப்பார்கள். ஆறரை கோடி தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாய் மாறி இந்த பார்ப்பனர்கள் முன்வைக்கும் கருத்துக்களையே ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து முன்னிருத்தி வருகின்றன. இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் பற்றி பேசவே பேசாமல், ‘பிரேமதாசா கொலை, ராஜீவ்காந்தி கொலை’ என தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் புள்ளியில் இருந்து விவாதத்தைத் தொடங்குகின்றனர். புலிகள் மீது தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் கூட விமர்சனம் இருக்கிறது. ஜனநாயகமற்ற தன்மை, அரசியல் தெளிவின்மை, உயிர்களை மதிக்காமை, கடுமையான கலாசார அடிப்படைவாதம் என புலிகள் மீதான அந்த விமர்சனங்கள் அனைத்துமே, புலிகளின் அடிப்படையான ஆயுதப் போராட்டத்தை நிராகரிப்பதாக இல்லை. ‘தனி நாடு’ என்னும் கோரிக்கையின் நியாயங்களை ஒதுக்குவது இல்லை. ஆனால் மேற்சொன்ன என்.ராம், மாலன், சுதாங்கன் வகையறா ஊடக பாசிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் நியாயங்களை முற்றாக புறமொதுக்கின்றனர். அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி வாழும் தங்களின் பச்சோந்தித்தனத்தையே பிறரிடமும் எதிர்பார்க்கின்றனர், அதையே பரிந்துரைக்கின்றனர். ‘வைதீகப் பார்ப்பானைவிட சவுண்டிப் பார்ப்பானிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று பெரியார் சொன்னதைப்போல இதில் முற்போக்கு பேசும் ஊடகப் பார்ப்பனர்களிடம் இரண்டு மடங்கு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

மனித உரிமைக்கான மாற்றுக்குரலாக தன்னை ஊடகங்களில் தொடர்ந்து முன்னிருத்தி வரும் ஞாநி ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து திரும்ப வேண்டும் என்று போராடிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆனால் இன்று இத்தனை லட்சம் மக்கள் செத்து மடியும்போது, அதைப்பற்றி எழுதாமல் சமச்சீர் கல்வி பற்றி எழுதுகிறார். ‘புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும்’ என்று மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் பேசியதற்காக ப.சிதம்பரத்துக்கு பூச்செண்டு கொடுக்கிறார். முற்போக்கு புத்தகங்களுக்கான முகவரியாய் கிழக்குப் பதிப்பகத்தை சொல்லிக்கொள்ளும் பா.ராகவன் என்னும் பார்ப்பனர் குமுதத்தில் ‘வல்வெட்டித்துரை வேலுப்பிள்ளை பிரபாகரன்’ என்ற தலைப்பில் பிரபாகரனைப்பற்றி தொடர் எழுதினார். ஒரு இயக்கத்தின் வரலாற்றை எதிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம், ஆனால் பா.ராகவன் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பித்திருந்தார். இப்போது ‘பிரபாகரன் மரணம்’ என்ற செய்தியை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெருவிருப்பத்தோடு பக்கம், பக்கமாய் எழுதி வருகிறார். ‘நமது நிருபர்’ என்ற போலிப்பெயரில் ஒழிந்துகொண்டு இன்னும் நாலு பக்கத்துக்கு எழுதுகிறார். விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் இந்த பார்ப்பன ஊடகவியலாளர்களும், கன்வர்ட்டட் பார்ப்பனர் கருணாநிதியும்ம் சம அளவுக்கு சந்தோஷம் அடைகிறார்கள்.

தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் ஊடகங்கள் இந்த அளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. நேரடியாக அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடகங்களும், அவ்வப்போதைய ஆளும்கட்சியை ஆதரிக்கும் ஊடகங்களுமே இங்கு இருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து இயங்கும் சுயேச்சையான ஊடகம் என எதுவும் கிடையாது. இருக்கும் ஓரு சில பத்திரிகைகளும் யாவற்றையும் ஒரே மாதிரி பாவித்து விற்பனைப் பொருளாக்குகின்றன. பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி விமானப்படைக்கு தலைமை ஏற்கிறார், போர்முனையில் நிற்கிறார் என ஒருபோதும் புலிகள் அமைப்பு சொல்லியதில்லை. ஆனால் ‘கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் தி.மு.க.வின் தலைவர்’ என்ற தமிழக மனநிலையோடு ஒரு போராளி இயக்கத்தின் தலைமைக்கும் வாரிசை நியமிக்கிறார்கள் இவர்கள். சார்லஸ் ஆண்டனியை, பிரபாகரனுக்கு அடுத்த புலிகள் இயக்கத் தலைவராக சித்தரித்து ஒரு மாய பிம்பத்தை உருவாக்கியது தமிழக ஊடகங்கள்தான். கடைசியில் சார்லஸ் ஆண்டனியின் புகைப்படத்தைப் பார்த்ததும் மக்களின் மனங்களில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த பிம்பம் உடைந்துபோனது. இதற்கு முழுக்க, முழுக்க ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும். இல்லாத ஒன்றை பொய்யாக கட்டமைத்து, அப்புறம் அதை கீழே போட்டு உடைத்து இவர்களின் விற்பனை தந்திரத்துக்காக ஒரு இயக்கத்தின் தலைமையை கொச்சைப்படுத்துகிறார்கள்.இன்னொரு பக்கம் கால் நூற்றாண்டு கால ஈழப் போராட்டத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் மீடியா பாசிஸ்ட் இந்து ராம், இப்போது என்.டி.டி.வி-யுடன் இணைந்து NDTV HINDU என்ற பெயரில் காட்சி வழியாகவும் விஷம் பரப்பிவருகிறார். ராஜப«க்ஷவுக்கான அதிகாரப்பூர்வ இந்திய அச்சு ஊடகமாக ‘இந்து’வும், அதிகாரப்பூர்வ காட்சி ஊடகமாக NDTV HINDU-வும் இருக்கின்றன. போர் நடக்கும் பகுதிக்கு அனைத்துலக ஊடகங்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் போர் முனையில் இருந்து ரிப்போர்ட்டிங் செய்த ஒரே ஆள் தி இந்துவின் முரளிதர ரெட்டிதான். வட இந்திய ஊடகங்கள் ‘தி ஹிண்டு’வின் செய்திகளை அப்படியே பின்பற்றுகின்றன. சி.என்.என்.ஐ.பி.என்., ஆஜ்தக், டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே என அனைத்து சேனல்களும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஒரே அணியில் நின்று சிங்களனின் குரலிலேயே பேசத் துணிவதன் பின்னால் ஹிண்டுவின் பலமான லாபி இருக்கிறது. ‘ராஜீவ் கொலையாளி’ என்ற ஒற்றைக் கோணத்தில் பிரபாகரனைப் பார்க்கும் இவர்கள், ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழ் மக்களின் போராட்டங்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தவும் செய்கிறார்கள். மறுபடியும் மறுபடியும் ஆங்கில அச்சு, காட்சி ஊடகங்களால் ‘Pro-Tamils’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. (இதில் ஹிண்டு மட்டும் ரொம்பத் தெளிவாக Pro-LTTE என்றே எழுதும்). தமிழ்நாட்டில் இருப்பவன் தமிழ் ஆதரவாளனாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்? Pro-Tamils ஆக இல்லை என்றால்தானே தவறு? இப்படி சொல்வதன் மூலம் போராட்டங்களில் பங்கேற்காத மற்றவர்களை ‘Anti-Tamils’ என்று மறைமுகமாக சொல்ல விழைகிறது. தமிழ்நாட்டில் தினம், தினம் இப்படி Pro-Tamils என்ற வார்த்தையை உச்சரிக்கும் இவர்கள் Pro-Hindi என்று பீகாரிலோ, Pro-Maratti என மும்பையிலோ எழுதிவிட்டு உயிருடன் இருக்க முடியுமா..?

உண்மையில் தமிழகத்தில் தமிழ் இன உணர்வு என்பது கொஞ்சமும் இல்லை. ஆனால் எங்கோ ஒரு மூலையில் உணர்வுள்ள ஐம்பது பேர், நூறு பேர் சேர்ந்து நின்று கோஷம் போடுவதையும், ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் கூட இந்த ஆங்கில ஊடகங்கள் Tamil Chauvinism என்று வர்ணிக்கின்றன. தமிழ் இனவெறியாக பரப்புரை செய்கின்றன. சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது ‘ஒருவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. குற்றம் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில் தமிழக பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் அவரைக் குற்றவாளிபோலவே சித்தரிக்கின்றன’ என்று ‘கல்கி’யின் ஆசிரியர் சீதாரவி ரொம்பவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். ஜீவஜோதி வழக்கில் சரவணபவன் அண்ணாச்சி சிக்கியபோது அவரது பூர்வீகம் வரைக்கும் தோண்டி எழுதிய தமிழக புலனாய்வு இதழ்கள் சங்கராச்சாரியார் கைதின்போது மௌனித்துக்கிடந்தன. ‘மடத்தின் பாரம்பரிய பெருமை கெட்டுவிட்டது. அதை மறு சீரமைக்க வேண்டும்’ என இலக்கியப் பத்திரிகை காலச்சுவடு தொடங்கி அரசியல் பத்திரிகைகள் வரைக்கும் எழுதியன. ஆனால் இப்போது பிரபாகரன் மரணத்தில் எத்தனையோ மர்மங்கள் கிளப்பப்படுகிறபோதும் அவற்றை ஒரு செய்தியாகக் கூட வெளியிட மனமில்லாமல், ‘கிடைத்தது உடல், தீர்ந்தது சந்தேகம்’ என எழுதுகிறது தினமலர். இந்திய காட்சி, அச்சு ஊடகங்களில் பெரும்பான்மையது சிங்கள தரப்பு வெளியிட்ட காட்சிகளையும், புகைப்படங்களையும் கேள்விகளின்றி வெளியிட்டன. போரை நிகழ்த்தும் ஒரு தரப்பு செய்தியை நடுநிலைபோல வெளியிடும் இவர்கள் புலிகள் தரப்பு வெளியிட்ட காட்சிகளையோ, படங்களையோ அதே முக்கியத்துவத்துடன் வெளியிடவில்லை.

ஊடகங்களுக்கு சுயேச்சையான, சுய சார்புள்ள கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால் இந்திய ஊடகங்கள் இலங்கைப் பிரச்னையில் மட்டும் இந்திய அயலுறவுக் கொள்கையையே பின்பற்றுகின்றன. காஷ்மீர் பிரச்னையில் காஷ்மீரிகள் என்ற தேசிய இனத்துக்கான நியாயங்களைப் பேச அருந்ததி ராய், தீஸ்தா செடல்வாட் என எத்தனையோ புத்திஜீவிகள் இருக்கிறார்கள். ஆனால் இலங்கைப் பிரச்னைப்பற்றி அவ்விதம் பேச யாருமில்லை. இருப்பதெல்லாம் என்.ராம், மாலன் வகை கழிசடைகள் மட்டுமே.

இலங்கையில் 1983 ஜூலை இனக் கலவரம் நடந்தபோது இவ்வளவு ஊடகங்கள் கிடையாது. தூர்தர்ஷனைத் தவிர வேறு டி.வி.கள் இல்லை. ஆனாலும் மக்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கமும், எழுட்சியும் உருவானது. பெரும் எண்ணிக்கையிலான தொலைகாட்சிகளும், அச்சு ஊடகங்களும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், இலங்கையில் நடக்கும் போர் சாதாரண பாதிப்பைக் கூட மக்கள் மனங்களில் உண்டாக்கவில்லை. இதன் காரணம் என்ன? இடைப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் உலகமயமாக்களும், நுகர்வு கலாச்சாரமும் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை நாம் கவனமாக கணக்கிட வேண்டும். எல்லாவற்றையும் வெறும் பொழுதுபோக்காகவும், நுகர்வு பண்டமாகவும் மாற்றியிருக்கும் உலகமயம் மக்களை சுயமோகிகளாக்கி வைத்திருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மழுங்கடிக்கப்பட்ட மனநிலையுடைய மக்கள் தன் சொந்தப் பிரச்னைக்காகக் கூட போராட முன் வருவதில்லை. ஐ.டி. ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது அதை எதிர்த்துக் கேள்விகேட்க திராணியற்றவர்களாகவே இருந்தார்கள். இவற்றை எதிர்த்துப் பேசி சீர்படுத்த வேண்டிய ஊடகங்கள், அதே படுகுழியில் வீழ்ந்துகிடக்கின்றன. எதையும் பணமாக்கும் புத்தியுடனும், எல்லாவற்றையும் பொழுதுபோக்காக மாற்றும் மனநிலையுடனுமே இன்றைய ஊடகம் செயல்படுகிறது. தனது இந்த அரசியலுக்குத் தோதான ஆட்களை முன்னிருத்தி எளியவர்களின் நியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த ஊடகப்போரை அடித்து நொறுக்காமல் நாம் எதையும் சாதிக்க முடியாது. இன்றைய வணிக ஊடகங்களுக்கு எதிரான ஓர் அரசியலை நாம் இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இருக்கும் ஊடகப்போரை ஊடறுக்கும் அதேநேரம் அதிகாரங்களுக்கு எதிரான மாற்றுக் குரலை உயர்த்திப் பிடிக்கும் மாற்று ஊடகங்களையும் நாம் உருவாக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு பத்திரிகைகளில் வெளிவரும் ஒன்றிரண்டு கட்டுரைகள், தொலைகாட்சிகளில் வெளியாகும் ஒன்றிரண்டு செய்திகள் இவற்றில் மட்டுமே திருப்தியுற்று ஒதுங்கிவிடாமல் தங்களுக்கு என தனியான ஊடகங்களை உருவாக்க வேண்டும். உதிரிகள் பேசத் தொடங்கும்போதுதான் உண்மைகள் வெளிவரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com