Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூலை 2007
பெரியாரியம் அன்றும் இன்றும்
தா.செ.மணி, தலைவர் - பெரியார் திராவிடர் கழகம்

தங்கள் கடும் உழைப்பால் நாட்டின் அனைத்து வளங்களையும் உருவாக்கித் தரும் கிராமப்புற, உழைக்கும் அடித்தட்டு மக்கள், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்தாலும் சமூகத்தில் இழிந்தவராய், பொருளாதாரத்தில் வலியவராய், அரசியலில் அடிமையாய் இருக்கும் இழிநிலை கண்டு உள்ளம் குமுற கொதித்தெழுந்து, அவர்களின் விடுதலைக்கு உழைத்தவர் தலைவர் பெரியார்.

Kolattur Mani தன்னையே அழித்துக் கொள்ளவும் தயங்காத அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்டாலும் கள யதார்த்தங்களைக் கருத்தில் கொள்ளாமலும், பொருத்தமான போர் முறைகளை வகுத்துக் கொள்ளாமலும் போராடுவது எதிர்பார்த்த வெற்றிகளை அளிப்பதில்லை.

பனி மிகுந்த துருவக் காடுகளில் ஊசியிலை மரங்களைக் கண்டு மகிழ்ந்தவர், வெப்பம் வாட்டும் நம்மூர் பொட்டல் காடுகளில், கொதிக்கும் கோடை காலத்தில் அவற்றை நட்டு வளர்க்க எவ்வளவுதான் முயன்றாலும் எந்த அளவு வெற்றியை அவர் பெற முடியும்?

அதுபோல் தமிழ்நாட்டில், இந்தியாவில் வாழும் மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும், மன உணர்வுகளையும் ஆதிக்கவாதிகளின் மன இயல்புகளையும், அவர்களின் சூழ்ச்சிகளையும் இரு சாராரோடும் கலந்து பழகி, உணர்ந்து, ஆய்ந்து துல்லியமாகப் புரிந்து கொண்டு, தீர்வுகளை நடைமுறை புரிதலோடு முன்வைத்தவராகவும், அவற்றை செயல்படுத்தி உழைக்கும் மக்களின் உயர்வில், உரிமை மீட்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியார். அதுவே அவரின் தனித்த சிறப்பு.

பெரியாரின் வகுப்புரிமை கோரிக்கைக்காக, அவருக்கு கிடைத்த பட்டம் ‘வகுப்பு துவேஷி'. ஆரியர் - திராவிடர் ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டியதற்கு ‘இனவாதி' பட்டம். இந்திய ‘விடுதலை'யை, ‘துக்கநாள்' என்றதற்கு ‘தேச துரோகி' பட்டம். இந்துமத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ராமாயண எரிப்பு இவைகளுக்காக ‘கலை, இலக்கிய உணர்வற்ற கொச்சை பொருள்முதல்வாதி' என்ற பட்டம்.

அன்று இந்த பட்டங்களை வாரிவழங்கியவர்கள்தான் இன்று பெரியாரின் அதே கருத்துக்களை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கல்வியறிவு என்பது வேலைவாய்ப்புக்கு உதவுவது என்பதற்கும் மேலாக நமது முன்னவர்களின் அறிவள மட்டத்திலிருந்து தொடங்கி மேலும் உயரவும் உதவும். பல தடைகள் மிகுந்த கிராமப்புறங்களில் உழைக்கும் அடித்தட்டு மக்கள் தலைமுறை தலைமுறைகளாக கல்வியறிவோடு விளங்குகிற, வாய்ப்புகள் மிகுந்த நகர்ப்புற உயர்தட்டு மக்களோடு போட்டியிட்டு கல்வியும், வேலைவாய்ப்புகளும் பெற முடியாத நிலையுணர்ந்து அதை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் முதன்மையானதுதான் இடஒதுக்கீட்டு முறை.

1902 இல் கோலாப்பூர் சமஸ்தானத்தில் அரசுப் பணிகளில் 50 விழுக்காட்டை பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு வழங்கிய சத்ரபதி சாகுமகராஜின் நடவடிக்கைகளும், 1909 இல் அரசியல் அரங்கில் 25 விழுக்காட்டு தனித்தொகுதிகளை இசுலாமியர்களுக்கு வழங்கியதும் அவ்வழிப்பட்டதே. பழைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921 இல் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1927 நவம்பரில் பதிவுத் துறையும், 1928 இறுதிக்குள் அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்பட்ட வகுப்புவாரி உரிமை 100 இடங்களையும் பார்ப்பன, பார்ப்பனரல்லாத இந்துக்கள், தாழ்த்தப்பட்டோர், கிறித்தவர், இசுலாமியர் என வகை பிரித்து வழங்கப்பட்டது. காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதோரிலிருந்து பிற்படுத்தப்பட்டோரைத் தனியாக பிரித்தெடுத்து அப்பிரிவுக் கென தனியாக 14 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

மாகாண அரசில் மட்டுமல்லாது, சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கி வந்த இந்திய (மத்திய) அரசின் துறைகளான வங்கிகள், அஞ்சல் துறை போன்றவற்றிலும் தனியார் உடைமையாக இருந்த தென்னிந்திய இரயில்வே, மராட்டிய இரயில்வே ஆகியவற்றிலும் 1944ல் அரசுடைமையாக்கப்பட்டபின்னரும் 1935 இல் பிறப்பிக்கப் பட்ட சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் தனி ஒதுக்கீட்டு ஆணைப்படி 1936லிருந்து நடைமுறையில் இருந்து வந்தது.

பெரியாரால் ‘வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பன கொள்ளைக்காரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாற்றம்' என முன்னுணர்ந்து சொல்லப்பட்ட ‘சுதந்திரம்' வந்த 45 நாட்களில் மத்திய அரசில் நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணைகøளை ரத்து செய்து, உள்துறையிலும், இரயில்வே துறையிலும் அவசர அவசரமாக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கவனக்குறைவாக ரத்து செய்யாமல் விடப்பட்ட ஒற்றைப் பணி வாய்ப்புகளுக்கான வகுப்புவாரி சுழற்சி முறையும் (Communal Rostar System)கூட இரயில்வேயில் 27121948லும், உள்துறையில் 1991950லும் ரத்து செய்யப்பட்டன.

மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயதைக் கடந்துவிட்ட (விண்ணப்பிக்காத) செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன பெண் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதன் விளைவாக சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடைமுறையிலிருந்து வந்த ‘கல்வியில் வகுப்புரிமை' ஒழிந்தது.

உரிமையியல் நீதிமன்ற நடுவர் பணிக்கு முயன்று தோற்ற வெங்கட்ராமன் என்ற பார்ப்பனர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், அரசியல் சட்ட விரோதமானதாக அறிவிக்கப்பட்ட 100 இடங்களையும் பிரித்து வழங்கி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவமுறை ரத்தானது. அதனால், இசுலாமிய, கிறித்தவர் ஆகியோர் பெற்று வந்த வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு செல்லாததாக்கப்பட்டது.

ஆக தலைமுறை தலைமுறைகளாக வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் அடிதட்டு மக்களுக்கு அந்நிய, ஏகாதிபத்திய, பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்டிருந்த சிறு வாய்ப்புகளும் கூட, ‘சுதந்திரம்' பெற்ற இந்தியாவில் நமக்கு நாமே வழங்கிக் கொண்ட ‘இந்திய அரசியல் சட்ட'த்தைக் காட்டி மறுக்கப்பட்டது.

செண்பகம் துரைராஜன் தொடுத்த வழக்குத் தீர்ப்பால் இழந்த கல்வி உரிமைகள், நாடாளுமன்றம், சட்டமன்றம் என்ற எந்த மன்றத்திலும் நுழையாத பெரியார் முன்னெடுத்த கிளர்ச்சிகள்தான் பின்தங்கிய மக்களுக்கு சிறப்புரிமை வழங்க ஒப்புதல் வழங்கும் அரசியல் சட்ட முதல் திருத்தத்துக்கு வழிவகுத்தது.

29.5.1951 கூட்ட முன் வரைவை அறிமுகப்படுத்திய இந்திய தலைமை அமைச்சர் நேரு சென்னையில் நடக்கும் ‘சில நிகழ்வுகள்' இந்தச் சட்டத் திருத்தத்துக்கு காரணமாயின என்று குறிப்பிட்டதும், ‘சமூகத்திலும், கல்வியிலும்' என்பவற்றோடு ‘பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்' என்ற சொல்லைச் சேர்க்க வேண்டுமென்று இன்றைய மதவெறி அமைப்பான பாரதீய ஜனதா கட்சியின் தாய்க் கட்சியான ஜனசங்கத்தைத் தோற்றுவித்த மூலவரான சியாம்பிரசாத் முகர்ஜியும், கூக்கும் சிங் என்பவரும் முன்மொழிந்தனர். அந்தத் திருத்த முன்மொழிவுகள் 161951 இல் வாக்குக்கு விடப்பட்டபோது 243க்கு 5 என்ற வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தால் புதிதாக இணைக்கப்பட்ட 15(4) என்ற புதிய உட்பிரிவுதான் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உட்பட்ட அனைத்து வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி உரிமையை வழங்கியது.

1951 இல் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையால் (1952 இல் தான் வயது வந்த அனைவரும் வாக்களித்து உருவாக்கிய நாடாளுமன்றம் உண்டானது) ஏற்பளிக்கப்பட்ட கல்வி உரிமை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 2006 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 93வது அரசியல் சட்டத் திருத்தத்தால் மீள் உறுதி செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது. இன்றுவரை இந்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படாமல், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையையும் பயன்படுத்தி நுழைய விடாமல் தடுக்கிறது உச்ச நீதிமன்றம்.

1946 இல் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டவுடன் பெரியார் அதை எதிர்த்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பெற்றிருந்தவர்கள் 4 விழுக்காடு மக்களே. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றோர் 10 விழுக்காட்டினரே. ஏற்கெனவே தொடர்ச்சியாக காங்கிரசு கட்சி கூறி வந்ததைப் போல அந்நிய தலையீடின்றி வயது வந்த அனைவரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களைக் கொண்டு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்படாததும், சென்னை மாகாணத்திலிருந்து காங்கிரசு அனுப்பி வைத்த 47 பேரும் பொதுமக்களின் பிரதிநிதிகள் அல்லர் என்று கூறி அவர்கள் உருவாக்கும் அரசியல் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று 1946லேயே அறிவித்து, 1973 இல் அவர் மறையும் வரை தொடர்ந்து அதை வலியுறுத்தி வந்தார் பெரியார்.

இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் பேசப்படும் இந்தி மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழியாக்கிய 343, 344, 346, 347 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை இந்திய அரசு தன் விருப்பம்போல் ஆட்டிப்படைக்க வல்ல வகையில் உள்ள 249, 257, 268, 356, 365 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும், இந்தியப் பண்பாட்டைப் பாதுகாக்கும் போர்வையில் வருணாசிரம தர்ம அமைப்பைப் பாதுகாக்கும் 13, 25, 372 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும், ஒரு மாநில மக்கள் முழுவதும் விரும்பினாலும் தங்களுக்குப் பாதகமான பிரிவைத் திருத்த முடியாமல் தடுக்கும் 368 பிரிவையும், எதிர்த்து பல்வேறு கட்சிகள் பல்வேறு கட்டங்களில் போராடியிருக்கின்றன.

291953 இல் ஆந்திர மாநிலம் அமைப்பது குறித்த விவாதத்தின்போது டாக்டர் அம்பேத்கர் "வாடகை ஆள்போல இருந்தேன். என் விருப்பத்திற்கு எதிரானவற்றைகூட அவர்கள் செய்யச் சொன்னதற்காக செய்ய நேரிட்டது'' என்றும், "சட்டத்தை எழுதிய நானே எதிர்க்கும் முதல் ஆளாகவும் இருப்பேன். இந்தச் சட்டம் யாருக்கும் பொருந்தவில்லை'' என்று மாநிலங்கள் அவையில் பேசியது குறிப்பிடத்தக்கது. தொடக்கம் முதலே அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட முறையைக் கடுமையாக விமர்சித்த பெரியார், அது உருவாக்கிய வருணாசிரமக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை 1957 இல் எரிக்கச் செய்தார்.

இந்திராகாந்தி ஆட்சியில் நீதிபதி சர்க்காரியா தலைமையிலும், பாரதிய ஜனதா ஆட்சியில் நீதிபதி வெங்கடாச்சாரியா தலைமையிலும் அரசியல் சட்டம் குறித்து ஆராய ஆணையங்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டன. படிக்காத பெரியார் அன்று கூறியதைத்தான் ஏராளம் படித்த அரசியல் சட்ட அறிஞர்கள் காலங்கடந்து கூறினார்கள்.

1919ன் பின்பாதியில் காங்கிரசில் சேர்ந்து, கோவை மாவட்டத் தலைவரான பெரியார், 1920 முதல் காங்கிரசை விட்டு வெளியேறிய 1925 வரை தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகவும், செயலாளராகவும் இருந்தபோது மாறி மாறி நடந்த மாகாண காங்கிரசு மாநாடுகள் அனைத்திலும் வகுப்புவாரி உரிமைகளுக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத்தீர்மானம் பார்ப்பனர்களால் வஞ்சகமாக தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், தன்னோடு ஒத்த கருத்துடன் வகுப்புரிமை ஒதுக்கீட்டிற்காக நின்ற திரு.வி.க.வே 1925 நவம்பரில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புரிமை தீர்மானத்தை விவாதத்துக்கு கூட ஏற்க மறுத்து தள்ளியதை எதிர்த்து கோபத்தோடு காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.

எந்தக் காங்கிரசு பெரியாரின் வகுப்புரிமை கொள்கையை ஏற்க மறுத்ததோ, அதே காங்கிரசு தலைமையிலான மத்திய அரசு இப்போது இடஒதுக்கீட்டுக் கொள்கையை உயர்த்திப் பிடித்துப் பேசுவதும், ஒரு காலத்தில் பெரியாரை "வகுப்புவாதி' என வசை பாடிய பொதுவுடைமையரும் இப்போது பெரியாரை ஆதரிப்பது பெரியாரின் ஆளுமையை, அறிவுவீச்சை உணர்த்துகிறது அல்லவா?.

நெருக்கடிகள் வரும்போது இராமாயணத்தை ஒருமுறை படித்தால் நமக்கு புதிய வழி புலப்படும் என்று ராஜாஜியால் பார்ப்பனர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ராமாயணத்தைப் பெரியார் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சித்தார். ராமாயணத்தை எரித்தார். ராமன் படத்தை எரித்தார். அவர் தொண்டர்களால் ராமன் செருப்படியும் பெற்றார். ராமாயணக் குறிப்புகள், ராமாயண பாத்திரங்கள் என்று ராமனின் காலம், கதைப்படியே பார்த்தது இராமனின் இழிசெயல்களை எடுத்துக் காட்டினார். அவை சச் ராமாயண் என இந்தியில் மொழிபெயர்த்து உத்திரப்பிரதேசத்தில் வெளியிட்டபோது மாநில அரசு தடை ஆணை பிறப்பித்தது. ஜனநாயக உணர்வுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரிடம் வழக்கு வந்தபோது தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

அதை தடை செய்த காங்கிரசின் மத்திய அரசுதான் சேது கால்வாய் திட்டம் தொடர்பான வழக்கில் பெரியாரின் இராமாயண நூல்களில் காணப்படும் யுகங்கள் குறித்த விமர்சனத்தை அவை எழுதப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏற்றுக்கொண்டு பதிலறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாத்திகரான பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் நடத்திய போராட்டங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்காகவே இருந்துள்ளன. ஆனால், 1953 இல் புத்த ஜெயந்தியன்று நடத்திய விநாயகர் சிலை உடைப்புக் கிளர்ச்சியும் 1956 இல் புத்தரின் 2500வது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டு நடத்திய ராமர் பட எரிப்புக் கிளர்ச்சியும்தான் நாத்திக கொள்கையின் பாற்பட்டவை.

‘திருமணம் என்ற ஏற்பாடே இல்லாததாக எதிர்கால குடும்ப வாழ்வு நிகழும்' என்று முன்னுரைத்தும், திருமணம் என்பதே கிரிமினல் குற்றமாக்கப்படலாம் என்ற கருத்துரைத்தும் வந்த பெரியார், வேடிக்கை மனிதராக பழிக்கப்பட்டார். ஆனால், இன்று நடைமுறைக்கு வந்திருக்கிற குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் இணையரையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது, சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.

கடவுள், மதம், சாமியார்கள் குறித்த பெரியாரின் கடும் தாக்குதல் இன்று சாயிபாபா, அமிர்தானந்த மயி, பங்காரு அடிகள் போன்றோர் தந்திரங்களை நம்பி இயங்கிய நிலையை மாற்றிக்கொண்டு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நலத்திட்ட உதவிகள் வழியாகவே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அவ்வழியில் செயலாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

சாதியத்தை, மதம் என்ற வகையினத்துக்கு இணையாகப் புரிந்து கொண்டு, மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய வரையறைக்குள் வைத்துக் கொண்டு கருத்தியலாக மட்டுமின்றி தொழில்தேர்வு, திருமணம் என்ற உற்பத்தி, மறு உற்பத்தியிலும் சாதியம் வகிக்கும் தீர்மானகரமான பங்கினை அறியத் தவறிய மார்க்சியர்கள், மார்க்சிய லெனினியர்கள் 1990ல் நடந்த மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் சாதியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏணிப்படி சாதியமைப்பில் மேலே இருப்பவர்கள் மட்டுமே ஏகபோக முதலாளிகளாக உள்ளதும், மார்க்சியர்கள் கண்ணுக்கு இப்போதுதான் தெரிகிறது.

பொது உரிமை இல்லாத மண்ணில் பொதுவுடைமை மலராது என்ற பெரியாரின் எளிய சூத்திரம் இப்போதுதான் மார்க்சியர்கள் கண்ணுக்குப் புரிகிறது.

தங்களின் ஆதிக்க நிலையை வைத்து ஒரு தானியங்குப் பொறியாக (Auto functioning unit) சாதியக் கட்டமைப்பை பார்ப்பனர்கள் நிலைபெறச் செய்ததையும், அந்தப் பொறியின் இயக்கத்தில் சிறு தடையோ, வேகக் குறைவோ நிகழ்கிற போது மட்டும் அதன் இயக்கத்தை மீண்டும் சரிசெய்து விட்டு ஒதுங்கிக் கொள்கிற பார்ப்பனர்களை மறைத்துக் கொண்டு அறியாமையிலும், ஆதிக்கவாதிகளின் கருத்தியல் தாக்கத்தாலும் இயங்கும் ஆதிக்க பிற்பட்ட சாதிகளை, தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகக் காட்டி உரிமை இழந்த வெகுமக்களை, பகுஜன்களை பிரித்து வைப்பதில் பார்ப்பனியம் ஏதேனும் வழியில் வெற்றி பெற்றே வருகிறது.

பார்ப்பனியத்தின் சூழ்ச்சி நிறைந்த வெற்றிகளை முறியடிக்க, "பறையர் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது'' என்று 1930களில் பெரியார் சொன்னதை பின்பற்றி பெரியார் பாதையில் சாதி ஒழிப்புப் போராட்டத்தை தீவிரமாக நடத்துவதே பார்ப்பனியத்தின் முதுகெலும்பை முறிக்கும் ஒரே வழி.

********

இன்றளவும் உயர்சாதியினரின் கூடரமாக விளங்குகிறது உச்சநீதிமன்றம். அதன் நீதிபதிகள், அரசியல் சட்டம் வகுத்து வைத்திருக்கிற பிரிவு 312ன்படி இந்திய பணித்துறை உருவாக்கப்பட்டு அதன்வழியே தேர்வானவர்கள் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, மாநில அரசின் ‘பரிந்துரைக்கும்' அதிகாரத்தைக் கூட பறித்து நீதிபதிகள் நியமன அதிகாரத்தை தன்னிடமே முழுமையாக வைத்துக் கொண்டது உச்சநீதிமன்றம்.

கடந்த 10, 15 ஆண்டுகளாக சமுதாய நலன் என்பதற்கு மேலாக தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்ப்புகள் வழங்குவது நடைமுறையாகிவிட்டது.

சங்கராச்சாரிக்கு வழங்கிய பிணை, இடஒதுக்கீட்டுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்த இந்திய மருத்துவ ஆய்வுக்கழக பயிற்சி மருத்துவர்களுக்கு வேலைக்கு வராத 20 நாட்களுக்கும் சம்பளம் வழங்கி பிறப்பித்த ஆணை போன்றவைகளால் நீதித்துறையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

********

நான்காம் வகுப்பே கல்வித் தகுதியாகக் கொண்ட திராவிடர் கழகத் தலைவரான பெரியார், ‘விடுதலை' நாளை ‘துக்க நாளாக' அறிவித்தபோது முதுகலைப் பட்டங்கள் பெற்ற அறிஞர் பட்டத்தை பெயருக்கு முன்னொட்டாக வைத்தே இன்றளவும் அறியப்படுகிற திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த அண்ணா அவர்கள் ‘விடுதலை' நாளை மகிழ்ச்சியான நாள் என மறுப்பறிக்கை விட்டார். ("தலைவரும் கட்சியும் என் போக்கு தவறென்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை'' என்று அண்ணா குறிப்பிட்டார்) ஜனநாயக வழியை ஏற்காத தான்தோன்றித்தனமாக தடாலடியாக செயல்படும் எதேச்சதிகார மனப்படிமத்தோடு சித்தரிக்கப்படுகிற பெரியார் ‘இந்திய விடுதலை' குறித்து அண்ணாவோடு முரண்பாடு தோன்றிய பின்னரும் (1947 ஆகஸ்டிலிருந்து பெரியார், மணியம்மை திருமணத்தை வெளிப்படையாகவும், தேர்தல் அரசியல் ஈடுபாட்டை உள்ளுக்குள்ளும் வைத்துக்கொண்டு அவராகவே வெளியேறிய 1949 ஆகஸ்டு வரை) இரண்டாண்டு காலம் அண்ணாவையே தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலராகவே வைத்திருந்தார். இடைப்பட்ட இரண்டாண்டுகளில் அண்ணா எழுதிய ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு போன்ற கிண்டல் உருவகச் சிறுகதைகளை மீண்டும் படித்தால் பெரியாரை மேலும் புரிந்து கொள்ள உதவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com