Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu January issueVizhippunarvu Logo
சனவரி-பிப்ரவரி 2006
இடர் மேலாண்மை எங்கிருந்து தொடங்குகிறது?

சுகதேவ்

இந்தப் புத்தாண்டின் தொடக்கம் வரை, ஆழிப் பேரலையின் கோரத் தாக்குதல் - ஓராண்டு கடந்த பின்னரும் - நமக்குள் கனமான அசைவுகளை ஏற்படுத்தி வந்தது. இப்போதும் கூட நெஞ்சை உலுக்கிய அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பலர் விடுபட வில்லை. நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கியவர்கள் கூட, பின் தொடரும் அச்சத்தின் பிடியில் சிக்கியிருப்பது போல ,அவ்வப்போது, அந்த கறுப்பு ஞாயிறை திரும்பிப் பார்த்தவாறே நடை போடுகிறார்கள், இல்லை, நகர்கிறார்கள்.

நாகப்பட்டினத்திலும், கடலூரிலும், கன்யாகுமரியிலும், சென்னையிலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே தங்கியிருக்கிறார்கள். சமீபத்திய அடை மழையில் சூழ்ந்த வெள்ளத்தால் இந்த தற்காலிக குடியிருப்புகளில் இருந்தும், அவர்கள் பிறிதொரு தற்காலிக இடத்தை தேடிச் செல்ல வேண்டிய அவலம் நேர்ந்தது. மத்திய மாநில அரசுகளும், மனித நேய மிக்கவர்களும் , சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டதை மறுப்பதற்கில்லை. என்றாலும் பாதிக்கப் பட்டவர்களின் மறுவாழ்வுக்கான அல்லது அவர்களின் எதிர்காலத்துக்கு குறைந்தபட்சம் உத்தரவாதம் அளித்தும் நிரந்தர ஏற்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் - நிதியிலிருந்து, நிவாரண உதவிகளை பெறும் மக்களின் உளவியல் சார்ந்த எதிர்வினைகள் வரை பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

Woman in Flood சுனாமி நிவாரண நடவடிக்கைகளுக்கப் பின்னடைவு ஏற்படுத்துவது போல தமிழகம் தழுவிய கன மழையும் அதை தொடர்ந்த வெள்ளமும், அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, நிவாரணம் அளிக்கவும் சேர்த்து மொத்தம் 35,000 கோடி தேவைப்படுகிறது என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். தமிழகத்தில் தொடர் கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம், சுனாமியின் பாதிப்பை விட அதிகம் என்றும், இழப்பைச் சரிக்கட்டி மீண்டும் பழைய நிலையை எட்ட அதிக நிதி தேவைப்படும் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளச் சேத நிவாரணத்துக்கு மட்டும் 13,000 கோடி ரூபாய் தேவை என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும் இது வரை சுமார் 1000 கோடி ரூபாய் வரை தான் தமிழக அரசின் கையை எட்டியிருப்பதாக தெரிகிறது.

சென்னையில் வெள்ள நிவாரணம் பெறச் சென்றவர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் முதலில் 6 பேர் பலியானார்கள். பிறகு தமிழகமே அதிர்ச்சி அடையும் விதத்தில் 42 பேர் ஒரே சமயத்தில் மாண்டார்கள். ஆக மொத்தம் 48 பேர் வெள்ள நிவாரணத்துக்காக காத்திருந்து, இன்னொரு சோகத்தை தங்கள் குடும்பத்திற்கு உருவாக்கி விட்டார்கள். நிவாரண வினியோகத்தை அரசு முன்னெச்சரிக்கையுடன் கையாளவில்லை என்றும், இல்லை, எதிர்க்கட்சி தரப்பில் இருந்து பரவிய தவறான தகவல் தான் இந்நிலைமைக்கு காரணம் என்றும், பதிலுக்கு பதிலான குற்றச்சாட்டுகள். இவை தவிர்த்து நிவாரணம் பெறுவதற்குரிய மற்றும் பெறுவதற்கு சென்றவர்களின் தரப்பிலிருந்தே பிரச்னையைப் பார்த்தால், முற்றிலும் வெளிப்படுத்த முடியாத கசப்பு தான் மிஞ்சுகிறது.

வெள்ளநிவாரண நெரிசலில் அடிபட்டு, காயத்துடன் பிழைத்த ஒரு ஆட்டோ டிரைவர், ‘யாரைக் குற்றம் சொல்வது? எல்லாம் நாங்களாக போய் தேடிக் கொண்டது..’ என்று மனம் பதைந்திருக்கிறார். காலை ஒன்பது மணிக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தும் அதிகாலை மூன்றரை மணியிலிருந்தே மக்கள் கூடியிருக்கிறார்கள். நேரம் ஆக ஆக எங்கே தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற படபடப்பு எல்லோருக்குள்ளும் எகிறியிருக்கிறது. யாரும் யாரையும் பற்றி கவலைப்படாமல் நிவாரணம் தேடி ஓடியிருக்கிறார்கள். மிதிபட்டவர்களின் கூக்குரல் யாருடைய காதிலும் விழுந்த பாடில்லை. அரசு அளிக்கும் நிவாரண உதவியின்றி நிலைமையை சமாளிக்க வல்லவர்கள் கூட நெரிசலில் கலந்திருந்தார்கள் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. ‘வருவதை விடுவானேன்..’ என்ற சரிந்த மனத்தின் நீளம் தான் வரிசையையும் நீட்டி வரிசை பிறழ்வையும் ஊக்குவித்ததோ?

சுனாமி நிவாரணம் ஆகட்டும் அல்லது வெள்ள நிவாரணம் ஆகட்டும் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கான பங்கை தட்டிப் பறிப்பது போல, அத்தகைய பாதிப்புக்கு உள்ளாகாதவர்களும் பெற முனைவது நலிந்த மனத்தின் அடையாளமே. இவ்வாறே எண்ணிக்கை பெருகினால் அரசாங்கம் நினைத்தாலும் எதுவும் செய்துவிட முடியாது. ஒரு நிவாரண ஏற்பாட்டுக்கும் இன்னொரு நிவாரண ஏற்பாட்டுக்கும் இடையே தத்தளிப்பதன்றி வேறொன்றும் சாத்தியமில்லை.

அரசியல்வாதிகள் தான் அத்தனைக்கும காரணம் என்று பிழிந்த துணியையே மறுபடி மறுபடியும் பிழிய வேண்டிய அவசியமில்லை. அது அனைவருக்கும் தெரிந்ததே. பிரச்னைகளை மறு முனையிலிருந்தும் பார்ப்பது சரியானதாக இருக்கும்.

ஆழிப் பேரலையின் தாக்குதலில் இருந்து கரையோரப் பகுதிகளை காக்கத் தடுப்புச் சுவர் கட்டுவது முதல்.. இடர் பேரிடர் நிவாரண ஏற்பாடுகளில் வரிசை நிலைநாட்டுவது வரை எல்லாமும் அரசாங்கத்தின் கடமை. குடிமக்கள் கடமை எது?

குடிமக்களின் பங்கேற்பின்றி அரசாங்கம் வெற்றிகரமாக செயல்படுவது சாத்தியமில்லை. அவ்வாறே அரசாங்கத்தின் ஆதரவின்றி குடிமக்களின் நலனும் மேம்பட்டுவிட முடியாது. ஆக, சிற்றிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களின் மனத்தையும், நோகாமால் பதப்படுத்துவதில் தொடங்குகிறது.

பேரிடர் மேலாண்மையில் ஆக்கப் பூர்வமாகப் பங்கேற்க விரும்பும் ஒவ்வொருவரும் இவ்வாறே தொடங்கலாம். மற்றபடி... அதிகார வர்க்க மற்றும் அரசாங்கச் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் எப்போதும் போலத் தொடரட்டும்.

இனியொரு இடர் கூடாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com