Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu January issueVizhippunarvu Logo
சனவரி-பிப்ரவரி 2006
சன்னலில் ஒரு சிறுமி

வெ. இறையன்பு

டோட்டோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி’ என்கின்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. அது டோமோயி என்கின்ற பள்ளியைப் பற்றிய நிகழ்வுகளைப் பதிவு செய்த நூல். வழக்கமான ஒரு பள்ளியில் தூக்கியடிக்கப்பட்ட டோட்டோ சான் என்கின்ற சிறுமி அந்தப் பள்ளியில் எப்படி மிகச் சிறந்த பெண்ணாக வளர்ந்தாள் என்பது தான் அந்நூலின் மூலக் கருத்து.

Girl குழந்தைகளைப் பாடத்திட்டத்திற்குள் முக்கி எடுக்காத பள்ளி அது. அந்த பள்ளி குழந்தைகளுக்கு மிருகக் காட்சி சாலையாக இல்லாமல் சரணாலயமாக இருந்தது. கூண்டாக இல்லாமல் கூடாக இருந்தது. அந்தப் பள்ளியில் பள்ளி நேரம் முடிந்தபின் கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. பள்ளி முடிவதற்குக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் அந்தப் பள்ளி தொடங்குகின்ற நேரத்திற்காக அவர்கள் எதிர்பார்ப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டு காத்திருந்தார்கள்.

அங்கே சக மாணவர்கள் முதல் இடத்திற்கு முந்துகின்ற பந்தயக் குதிரைகள் அல்ல. அவர்கள் ஒரே இலக்கு நோக்கிப் பயணம் செல்லும் ஒரே தேரின் சக குதிரைகள். அங்கு கனத்த மழையிலும் இயற்கை கை குவித்துப் பாதுகாக்கும் தளிர்களைப் போல பள்ளி சுயமரியாதையையும், குழந்தைகளின் தனித்தன்மையையும் வளர்க்க ஆதரவுக் கரங்களாய் ஆனது.

காலை நேரம் கற்பதற்கு - மாலை நேரம் உலவவும், உரையாற்றவும், பாடவும், படம் வரையவும் பயன்பட்டது. பயிர்களைப் பாதுகாக்கவும், மிருகங்களை சிநேகிக்கவும் அங்கு சொல்லித் தரப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் டோமாயி மீதும் குண்டு வீசப்பட்டன. பள்ளி அறைகளாகப் பயன்பட்ட ரயில்பெட்டி வகுப்புகளின் மீது விமானங்கள் ஏராளமான குண்டுகளை வீசின. குழந்தைகளின் சிரிப்பு, குழந்தைகளின் பாடல் சத்தம் ஆகியவை அந்த ராட்சதக் குண்டுகள் வெடிக்கும் ஓசையில் கரைந்து போயின.

வீழ்ந்தது ஒரு பள்ளி மட்டுமல்ல - ஒரு பாடமும் கூட.

எரிந்தது கட்டடங்கள் மட்டுமல்ல - ஒரு கனவும் கூட.

இடிந்தது ஒரு இடம் மட்டுமல்ல - ஓர் இலக்கும் கூட.

அது எரியும் போது கூட அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கோபயாஷி தன் கால்சட்டைக்குள் கைகளை நுழைத்தவண்ணம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அவலம் அதிகமாகும் போது அழுகை வியர்த்தமாகும். புழுக்கம் புகும் போது புலம்பல் வீணாகப் படும்.

‘நீங்கள் உங்கள் சக்தியைக் காட்ட பிஞ்சுகள் கனிகளாகும் இந்தப் பூந்தோட்டம் தானா உங்களுக்கு கிடைத்தது’ என அவர் நினைத்திருக்கக் கூடும். இந்தக் குழந்தைகளின் முகத்தில் நீங்கள் ஏன் முத்திரைகளைக் குத்துகிறீர்கள்? அந்தப் பள்ளியில் ஆங்கில மாணவர்களும் இருந்தார்கள். அந்நியர்களாக இல்லாமல் தோழர்களாக.

உங்கள் வெடிமருந்தின் கனத்தில் சில பென்சில் டப்பாக்கள் நசுக்கப்பட வேண்டுமா? உங்கள் ஏவுகணைகளின் எடை தாங்காமல் சில பிஞ்சுகளின் விரல்களின் நடுவில் இருக்கும் பேனா முனைகள் முறிந்து போக வேண்டுமா?

வெளியீட்டில் இந்தப் புத்தகம் 45 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாம். புத்தகங்கள் விற்கலாம் - எத்தனை லட்சம் வேண்டுமானால்.

ஆனால் நம்மிடமிருந்து ஒரு கோபயாஷியும், ஒரு டோமோயியும் எப்போது உருவாகப் போகிறார்கள்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com