Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஆகஸ்ட் 2007
அவளும் இவளும்
கழனியூரன்

உளவியலைப் பற்றியும், மனதின் காரியங்களைப் பற்றியும், தன் சொந்த அனுபவத்தால் தெரிந்து கொண்ட செய்திகளைக் கிராமத்துப் பெரியவர்கள் பழமொழிகளாகவும், கதைகளாகவும் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர். அவைகளை முதலில் நாம் எழுத்து மொழியில் பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்யும் ‘தரவு'களுக்கு யாராவது ஒருவர் விளக்கம் சொல்லவும் வேண்டும்.

Farmer ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்கிறது ஒரு பழமொழி ஆற்றின் இந்தக் கரையில் இருந்து கொண்டு ஒருவன் ஆற்றின் அந்தக் கரையை (எதிர்ப்புறம் உள்ள அக்கரையை) பார்க்கிறான். அப்படி பார்க்கும் போது ஆற்றின் இக்கரையில் உள்ள செழிப்பையும், ஆற்றின் அக்கரையில் உள்ள செழிப்பையும் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

பொதுவாக ஏதாவது இரண்டு பொருள்களை, அல்லது செயல்பாடுகளை ஒப்பிட்டு விடுவது இயற்கைதான். எனவே இக்கரையில் இருந்து கொண்டு அக்கரையின் செழிப்பைப் பற்றி மனதிற்குள் எடை போடுகிறவனுக்கு, அக்கரையில் உள்ள ‘பசுமை' பெரியதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அக்கறையில் உள்ள தாவர சங்கமங்கள் அப்படி ஒன்றும் செழிப்பாக இல்லை!

இதே கருத்தை விளக்குகிறது ‘தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி' என்ற ஒரு சொலவம். முந்தையது பழமொழி, இது சொலவம். பழமொழி என்பது வேறு, சொலவம் அல்லது சொலவடை என்பது வேறு. ‘இரண்டையும் எப்படி பிரித்தறிவது?' என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அந்த வேறுபாட்டை விளக்கத் தனிக்கட்டுரையே எழுத வேண்டும். இப்போதைக்கு நாம் இந்தக் கட்டுரையில் பழமொழிகளின் விளக்கத்தை மட்டும் பார்ப்போம்.

‘தூரத்தில் இருந்து பார்க்கும் போது ‘பச்சைப் பசேல்' என்று தெரிவதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் அங்குள்ள செழிப்பை முழுமையாக எடை போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து பார்த்து நாம் எந்தவிதக் கணிப்பிற்கும் வந்து விடக்கூடாது. அப்படி நாம் கணிப்பது தவறான முடிவுகளையே ஏற்படுத்தும்' என்கிறது இந்தச் சொலவம்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாகத் (குளுமையாக) தெரியும் ஒரு தோட்டத்தை நாம் அருகில் சென்று உற்றுக் கவனித்தால் தான் அத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் பரவியுள்ள நோயும், வாட்டமும் நம் கண்களுக்குத் தெரியும்.

தூரத்தில் இருந்து மேலோட்டவட்டமாகப் பார்த்து நாம் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்கிறது இச்சொலவம். இது பயிர் பச்சைகளைப் பற்றி மட்டும் கருத்துச் சொல்லும் சொலவம் அல்ல. இச்சொலவத்தில் பயிர் பச்சைகள் என்பது ஒருவித குறியீடு தான். இச்சொலவம் மனித வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது.

‘சிலர் வெளிப்பார்வைக்கு கார், பங்களா என்று தட புடலாக வாழ்வார்கள். ஆனால் அவர்களின் அருகில் சென்று சில நாட்கள் அவருடன் நெருங்கிப் பழகினால் தான் அவருக்கு உள்ள கடன், கண்ணிகள் பற்றியும், ஓட்டை உடைசல்கள் பற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியும்' என்ற வாழ்வியல் செய்தியையும் இச்சொலவம் பேசுகிறது.

இப்பழமொழியை வாழ்வியல் அனுபவத்தில் பல விஷயங்களோடு பொருத்திப் பார்க்க வாய்ப்புள்ளது. மேலோட்டமான விளம்பரங்களையும், ஆடம்பரங்களையும், படோபங்களையும் மட்டும் பார்த்து ஒருவர் மேல் அல்லது ஒரு அமைப்பின் மேல் அவசரப்பட்டு ஒரு முடிவெடுத்து விடுகிறோம். ஆனால் நிறுத்தி, நிதானமாக நாம் எடுத்த முடிவு சரிதானா என்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பதே நல்லது என்ற வாழ்வியல் செய்தியை இப்பழமொழி விளக்குகிறது.

ஒப்பிட்டுப் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு பழமொழி அவளுக்கு, இவள் எழுந்திருந்து உண்பாள்' என்பது ஒரு முறை கேட்டதும், அல்லது ஒரு முறை படித்ததும் இந்தப் பழமொழியின் பொருளை நாம் புரிந்து கொள்ள முடியாது. கிராமத்து வாழ்வியல் அனுபவம் உள்ள ஒருத்தர் விளக்கம் சொன்னால் தான் இப்பழமொழியின் பொருள் அனைவருக்கும் புரியும்.

ஒரு பண்ணையில் ஏற்கனவே ஒருத்தன் வேலை பார்த்தான். அவன் வேலை பார்க்கும் லட்சணம் பண்ணையாருக்குப் பிடிக்கவில்லை,. எனவே அவனை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு, இன்னொருவனை பண்ணையார் வேலைக்குச் சேர்த்தார். இரண்டாவது வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரன் வேலை செய்கிற லட்சணமும் பண்ணையார்க்குப் பிடிக்கவில்லை. ஆனால், 'முதலில் இருந்த வேலைக்காரனை விட இவன் பரவாயில்லை என்று நினைத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் பண்ணையாரைப் பார்த்து, ‘இந்த வேலைக்காரன் எப்படி?' என்று கேட்டார். அதற்குப் பண்ணையார் ‘அவனுக்கு இவன் தேவலை!' என்று பதில் சொன்னார்.

முதலில் இந்த விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் தான் அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்' என்ற பழமொழிக்கு உரிய உண்மையான பொருளை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

இனி இந்தப் பழமொழி தோன்றியதற்குப் பின் புலத்தில் உள்ள கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான். அவனுக்கு அப்பன், ஆத்தா என்று யாரும் இல்லை. அனாதையா இருந்தான். வேற, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி என்று அக்கு தொக்கு (சொந்தபந்தம்) எதுவும் இல்லை.

சொந்தத்துல கொஞ்சம் நிலபுலன்கள் இருந்திச்சு. அதில் சம்சாரித்தனம் செஞ்சி காலத்தை கழிச்சிக்கிட்டு இருந்தான். அவன் ஆள் இளந்தாரியா இருந்தான். ‘முழுத்த ஆம்பளைப் பயல் எத்தனை நாளைக்குத் தன் கையால கஞ்சி காச்சிக் குடிப்பான்?' என்று நினைச்ச ஊர்ப்பெரியவர்கள் நாலைந்து பேர் சேர்ந்து, பக்கத்து ஊர்ல உள்ள வசதி இல்லாத, ஏழை, எளிய ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி முடிச்சி அவனுக்கு தாலி கட்டி வச்சாங்க.

அந்தப் புள்ளை பார்க்கத்தான் ஆள் லெட்சணமா இருந்தாளே தவிர, உள்ளுக்குள்ள தீராத நோயாளியா இருந்திருக்கா. கட்டிட்டு வந்த பெண்டாட்டி நோயாளியா இருந்தா என்ன செய்ய முடியும்?

புருஷக்காரன் நோயாளியான பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு, வைத்தியர் வீட்டுக்கு நடையா நடந்தான். தன் வீட்டுக்கும் வைத்தியர் வீட்டுக்கும் நடந்ததுல சம்சாரியின் கால் தேய்ந்து; காசும் செலவானது. ஆனால் நோய் தீர்ந்த பாடாய்த் தெரியவில்லை. அக்கம் பக்கத்துக்காரர்கள் ‘நோய்க்கும் பார் பேய்க்கும் பார்' என்பது பழமொழி. இதுவரை நோய்க்குப் பார்த்துட்டே, இனி பேய்க்கும் பார்!' என்று யோசனை சொன்னார்கள். பேதலிச்ச மனசு பிறர் சொல்வதை எல்லாம் நம்பும். சொல்கிறவன் சரியாச் சொல்கிறானா? தப்பாச் சொல்கிறானா? என்று யோசிக்காது. எனவே சம்சாரி, கோடாங்கி வீட்டுக்கும், பூசாரி வீட்டுக்கும் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு அலைந்தான். அலைந்ததுதான் மிச்சம் அவளின் நோய் தீரவில்லை. நாளாக, நாளாக நோயின் உக்கிரம் அதிகமாகி விட்டது. புருஷக்காரனுக்கும் அலைந்து அலைந்து சலித்து விட்டது. கையில் மடியில் இருந்த காசெல்லாம் காற்றாப் பறந்து விட்டது.

இப்போது பெரும் கடன்காரனாகி விட்டான். நாளா வட்டத்தில் கட்டிய பொண்டாட்டி படுத்த படுக்கையாகி விட்டாள்.

‘பழைய குருடி கதவைத் திறடி' என்கிற பருவத்தில் அவன் தான் மீண்டும் அடுப்புப் பற்ற வைத்துச் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்துட்டு, கல்யாணத்துக்கு முன்னால, அவனுக்கு மட்டும் சமைத்தான். இப்ப கட்டின பொண்டாட்டிக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டிய நிலை வந்துட்டு.

பக்கத்து வீட்டுக்காரங்க சும்மா இருப்பாங்களா? சம்சாரியைப் பார்த்து, ‘அடப்பாவிப் பெயலே, உனக்கென்ன வயசா ஆயிட்டு? இல்லை வாலிபம் தான் போயிட்டா? இன்னொரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ' என்று யோசனை சொன்னார்கள்.

பிறகு என்ன செய்ய, அக்கம் பக்கத்துக்காரர்கள் இன்னொரு பெண்ணைப் பார்த்து ரெண்டாந்தரமாக அவனுக்குத் தாலி கட்டி வைத்தார்கள். மூத்த குடியாள் படுத்த படுக்கையாக இருந்ததால், அவளும், தன் புருஷன் ரெண்டாந்தரமாக இன்னொருத்தியைக் கட்டிக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கவில்லை!

ரெண்டாந்தரமாக வந்து சேர்ந்தவளும் நோக்காட்டுக்காரிதான் என்கிற விஷயம் சம்சாரிக்குப் போகப் போகத் தெரிந்தது. பிறகு என்ன செய்ய? ரெண்டாந்தாரத்துக்காரியையும் கூட்டிக்கிட்டு வைத்தியர் வீட்டுக்கும், கோடாங்கி வீட்டுக்குமாக நடையா நடக்க ஆரம்பித்தான் சம்சாரி. தன் விதியை நொந்து கொண்டே.

நாளாக, நாளாக நோயின் தாக்குதல் அதிகமானது ரெண்டாந்தாரத்துக்கும். அவளும் மூத்தகுடியாளின் அருகில் ஒரு பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். புருஷக்காரன் இப்போது தன்னோடு, தன் மனைவிமார்கள் ரெண்டு பேருக்கும் சேர்த்துச் சமையல் செய்ய ஆரம்பித்தான்.

மூத்த குடியாள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலையில் கிடந்தாள். எனவே சோறு, தண்ணீர் எல்லாம் ஊட்டித்தான் விட்டான் புருஷக்காரன். ஆனால் ரெண்டாந்தாரத்துக்காரி நிலமை சற்று பரவாயில்லை என்றிருந்தது. சோறு சமைத்துக் கொடுத்தால், தட்டில் போட்டுக் கொடுத்தால், தானே சாப்பிட்டுக் கொண்டாள்.

இந்த மாதிரிச் சூழ்நிலையில், நெருங்கிய சொந்தக்காரனான வெளியூரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சம்சாரியைப் பார்த்து ‘மூத்த குடியாளுக்கு இளைய குடியாள் எப்படிடே?' என்று கேட்டார்.

அதற்கு நம்ம சம்சாரி சொன்ன பதில் ‘அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்' என்பது. இந்தப் பழமொழியில் ‘அவள்' என்பது, மூத்தகுடியாள் என்றும், ‘இவள்' என்பது இளைய குடியாள் என்றும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சம்சாரி சொன்ன பதிலைக் கேட்ட பெரியவர் சக்களத்தியும், சக்களத்தியும் சீக்காளியாகப் படுத்துக் கிடக்கும் போது, சம்சாரியைப் பார்த்து, ‘இன்னொரு பெண்ணைப் பார்த்து மூன்றாந்தாரமாகக் கட்டிக்கிடச் சொல்வோமா' என்று மனதிற்குள் நினைத்துப் பார்த்தார். ஆனால் கேட்கவில்லை!

மூன்றாவதாகவும் ஒருத்தியைக் கட்டி அவளும் சீக்காளியாகப் படுத்துக் கிடக்கும் காட்சியை மனதிற்குள் கற்பனை செய்து பார்த்த பெரியவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை! சம்சாரியின் விதியை நினைத்து அழுவதா, சிரிப்பதா? என்று திகைத்த பெரியவர் அந்த இடத்தை விட்டு நகன்றார்.

இதுதான் ‘அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்' என்ற பழமொழிக்கான விளக்கம் என்று கதையைச் சொல்லி முடித்தார் தகவலாளர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com