Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஏப்ரல் 2009
தோல்வியில் முடிந்த வழக்கறிஞர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த வழக்கறிஞர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டம் வெற்றியடைந்துள்ளதா? அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதா? ஒரு இணை ஆணையர் மற்றும் ஒரு துணை ஆணையர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் உயர்நீதிமன்ற உத்தரவு அவர்களுக்கு வெற்றிதானா? போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.


ஆசிரியர்

வழக்கறிஞர் காமராஜ்

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

சமூக விழிப்புணர்வு,
74, 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி எண்: 94434 23638
[email protected]

ஆண்டுக்கட்டணம்: ரூ.150
ஆயுள் கட்டணம்: ரூ.1000

இந்தப் போராட்டம் நமக்குச் சொல்லும் செய்தியைப் பார்ப்பதற்கு முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்ப்போம்.

High court attack சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டம் இரண்டு மையப் புள்ளிகளின் சந்திப்பின் துவக்கமாக கொள்ளலாம். ஒன்று காலம் காலமாக தங்களின் எதேச்சதிகார போக்கிற்கு ஏதேனும் ஒரு வகையில் இடையூறாக இருந்த வழக்கறிஞர்களின் மீது காவல் துறையினருக்கு ஏற்பட்டிருந்த தீராத வன்மம். இன்னொன்று மத்திய, மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு சமீப காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது ஏற்பட்டிருந்த தீராத ஆத்திரம். ஈழத்தில் உள்ள தமிழர்களை பூண்டோடு அழிப்பதையே தனது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையாகவும், தனது தனிப்பட்ட குறிக்கோளாகவும் வைத்திருக்கும் சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், அதன் இணைபிரியாத பங்காள¤ தி.மு.க.விற்கும், தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டங்கள் தீராத தலைவலியாக இருந்து வந்தது.

ஆரம்பம் முதல் ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, நடைபெறும் போராட்டங்களின் உடன் இருந்து பல்வேறு நாடகங்களையும், திசைதிருப்பல்களையும் செய்து இறுதியில் தற்பொழுது போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய முடியாது என்று கருதி, சற்று ஒதுங்கியிருந்தார். ஆனாலும், தானாக இந்தப் போராட்டங்கள் சிறிது சிறிதாக ஓயும் என்று எதிர்பார்த்து ஆட்சியாளர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் விரும்பும் வேளையும் கொஞ்சம் கொஞ்சமாக கனிந்து வந்தது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்களின் எழுச்சி அனைத்தும் சரியான தலைமை இல்லாத காரணத்தினாலோ, தலைவர்களின் துரோகத்தாலோ, அடக்குமுறைக்கு அஞ்சியோ ஏறத்தாழ ஊற்றி மூடப்பட்ட நிலையில் ஆட்சியாளர்கள் தங்கள் எண்ணம் நிறைவேறியது என்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நிறைவேற பெரும் இடையூறாக இருந்தது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தொடர்ச்சியான போராட்டங்கள். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம், ரயில் மறியல் போராட்டம், இராணுவத் தலைமையக முற்றுகைப் போராட்டம் போன்றவை ஏறத்தாழ தமிழக மக்கள் மனதிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருந்த ஈழத் தமிழர் பிரச்சினையை ஏதாவது ஒரு ரூபத்தில் மக்களிடம் நினைவு படுத்திக் கொண்டிருந்தது. இது ஆளும் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் விரும்பிய ‘அமைதியான’ தமிழகத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. அதிலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சோனியாவின் கொடும்பாவி, மத்தியில் உள்ள ஆட்சியாளர்களையும் தனது தள்ளாத 85 வயதிலும் சோனியாவை ‘வாஞ்சை’யுடன் ‘சொக்கத் தங்கம்’ என அழைக்கும் கலைஞரை ஏகத்துக்கும் சினம் கொள்ள வைத்திருக்க வேண்டும். இதற்கான பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக ஆட்சியாளர்கள் காத்திருந்தனர்.

இவர்களுக்கான வாய்ப்பை உருவாக¢கிக் கொடுத்தார் சு.சாமி. சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்நீதிமன்றத்திற்கு, ஈழத் தமிழர்களின் போராட்டங்களைக் கேவலமாகப் பேசுவதையே தொழிலாக வைத்திருக்கும் சு.சாமியின் வருகையின் போது, அழுகிய முட்டை வீச்சு அன்பளிப்பாகக் கிடைத்தது. வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் வேறு வழியின்றி கசப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பன ஊடகங்களும், ஆட்சியாளர்களும் தங்கள் கோர முகத்தை அம்பலப்படுத்திக் கொள்ள நல்வாய்ப்பாக அமைந்தது.

தமிழர்கள் மீது வீசப்படும் கிளஸ்டர் குண்டுகளுக்கு இறங்காத ஆட்சியாளர்கள் மனம், வானிலிருந்து கொத்துக் கொத்தாக வீசப்படும் கொத்துக் குண்டுகளுக்கு இரங்காத ஆட்சியாளர்கள் மனம் சாமி மீது வீசப்பட்ட அழுகிய முட்டை வீச்சுக்கு இரங்கியது. மருத்துவ மனையிலிருந்து உத்தரவுகள் பறந்தன. சென்னை உயர்நீதி மன்றம், காவலர்களின் வேட்டைக்காடாக மாறியது.

ஏறத்தாழ நான்கு மணி நேரம் உயர்நீதிமன்றம் முழுவதும் காவல் துறையினரின் காட்டு தர்பாரின்கீழ் இருந்தது. உயர்நீதிமன்றத்தில் அப்போது பாதுகாப்பு இருந்தது தலைமை நீதிபதியின் அறை மட்டுமே. மீதமுள்ள பகுதி முழுவதும் காவல் துறையினரின் தலைமையில் ‘சட்டத்தின் ஆட்சி’ நடந்தது.

அதன் பின்பு நடைபெற்றவை எல்லாம் கண்துடைப்பு அறிக்கைகள், கண்துடைப்பு விசாரணைகள், அழுகை நாடகங்கள், பெயரளவு கண்டனங்கள் மட்டுமே. தமிழகத்தின் தலைநகர் சென்னையின் மையப் பகுதியில், உயர்நீதிமன்றத்திலும், அதன் வளாகத்திலும் நாட்டின் அனைத்து ஊடகங்களும் குழுமியிருக்க, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்றப் பணிக்கு வந்தவர்கள் ஆகியோர் மீது ஏறத்தாழ நான்கு மணி நேரம் காவல்துறை நடத்திய கோர தாண்டவத்தை வெளிப்படையாக எந்த ஆட்சியாளர்களும் கண்டிக்கவில்லை. வெளிப்படையாக எந்த ஊடகங்களும் அம்பலப்படுத்தவில்லை.

காவல் துறையினரின் அராஜகத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கற்களை வீசித் திருப்பித் தாக்கிய வழக்கறிஞர்களின் தாக்குதலைப் படம் பிடித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட ஊடகங்கள் காவல் துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பணியாளர்கள் என அனைவரையும் வேட்டை நாய்களைப் போல குதறிய செய்திகளையும், படங்களையும் கண்துடைப்பாக வெளியிட்டன.

கருணாநிதியின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் ஜெயலலிதா காவல்துறையின் அராஜகத்தை வெளிப்படையாக கண்டிக்காமல் வார்த்தைகளில் விளையாடினார். காவல்துறையினரின் செயல்களுக்கு பெயரளவுக்குக் கண்டனம் தெரிவித்த மூன்று சீட்டு மார்க்சிஸ்டுகள் இலவச இணைப்பாக அதை விட மேலாக வழக்கறிஞர்களுக்கு கண்டனத்தை அளித்தனர். இந்திய நாட்டின் உச்ச நீதி மன்றமோ இறுதிவரை கள்ள மவுனம் சாதித்தது. பெயரளவுக்குக் கூட கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களை இன்றுவரை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

வழக்கறிஞர்களின் வழக்கு உயர்நீதிமன்றம் வந்தது, உச்சநீதிமன்றம் போனது, கிருஷ்ணா கமிஷன் வந்தது. ஆனால் எங்குமே நீதி கிடைக்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் உள்ளே நுழைய உத்தரவிட்டது யார்? என்று ‘ஆக்ரோச’ வினா எழுப்பியும் மாநில அரசு மறுநாள் பதில் தெரிவிக்காத சூழ்நிலையிலும் கண்டுகொள்ளவில்லை. ஓரிரவில் நீதிபதிகள் மனம் மாறிய மர்மம் தெரியவில்லை. சீறிய வேகத்தில் அடங்கினர். நமக்கோ அரசுப் பணியாளர்கள் பல்லாயிரம் பேரை எஸ்மா சட்டம் மூலம் வீட்டுக்கு அனுப்பிய அப்போதைய தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, ஆட்சியாளர்களைப் பற்றி சீறியதும், இரண்டு நாள் விடுமுறைக்குப்பின்பு அடங்கியதும் நினைவுக்கு வந்தது.

இறுதியாக, சுவற்றில் அடித்த பந்து போல உயர்நீதிமன்றத்தில் வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது. ஒரு மாத¢திற்கும் மேலாக வழக்கறிஞர்களின் போராட்டம் நீடித்த நிலையில் அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாத நிலையில், வேறு வழியின்றி கண்துடைப்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Attack on high court judge வழக்கறிஞர்களின் மீது ஏவப்பட்ட கொடூர வன்முறையும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் போராடிப் பெற்றதாக கூறப்படும் இந்த வெற்றியும் சொல்லும் செய்தி என்னவென்று பார்த்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தாக்குதலைக் கண்டித்து ஏறத்தாழ ஒரு லட்சம் வழக்கறிஞர்கள், தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். இது ஒரு மிகச் சாதாரண வெற்றி. ஆனால், உத்தரவு பிறப்பித்து பத்து நாட்கள் ஆகியும் இன்னும் தமிழக அரசு அவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. இந்தத் தீர்ப்பு இன்னும் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ உச்ச நீதிமன்றத்தினால் விலக்கிக் கொள்ளப்படலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினாலும், அவர்களால் அதிகபட்சமாக இவ்வளவு மட்டுமே சாதிக்க முடிந்துள்ளது. அரசு இவர்கள் கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்துவில் தலையங்கம் எழுதினால், அலறியடித்து நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வர் ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட பிரச்சினையில் கண்துடைப்பு நடவடிக்கை கூட மேற்கொள்ளவில்லை. தன் ஏவலுக்காக எதையும் செய்யத் துணிந்த காவலர்களுக்காக எதையும் தாங்கும் இதயம் கொண்டிருந்தார்.

தடியடியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கும், முன்னின்று நடத்திய உயர் அதிகாரிகளுக்கும், இனி வீரப்பனை பிடித்த காவலர்களுக்கு பதவி உயர்வும், பனிமனையும் கிட்டியது போல கிடைக்கக்கூடும்.

ஆனால், வழக்கறிஞர்கள் பட்ட அடிக்கும் வழிந்தோடிய ரத்தத்திற்கும் என்றும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. அதிகபட்சமாக பெயரளவு இழப்பீடும் என்றாவது ஒருநாள் காவல்துறை மீது நீதி அரசர்களால் பெயரளவு கண்டனம் மட்டும் தெரிவிக்கப்படும். மேலும் இந்தப் போராட்டத்தினால் அடித்து நொறுக்கப்பட்ட வழக்கறிஞர்களின் கௌரவமும் மதிப்பும் என்றும் திரும்பி வராது.

ஆனால் இந்தப் போராட்டத்தின் மூலம் அரசின் அடக்குமுறைக்கு முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதற்கு எந்த வழிமுறையையும் கையாளுவார்கள் என்பது வழக்கறிஞர்கள் போராட்ட விஷயத்தில் மீ¢ண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அது ‘புரட்சி’த் தலைவி அரசாக இருந்தாலும் சரி, தமிழினத் தலைவராக இருந்தாலும் சரி.

அன்று ஜெயலலிதா கல்விக் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்துப் போராடிய சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் அவர்களின் விடுதிக்குச் சென்று காவல்துறையினரை அனுப்பி வேட்டையாடினார். இன்று ஈழத் தமிழர்களுக்காக போராடிய வழக்கறிஞர்களை ‘தமிழினத் தலைவர்’ ஊரைக் கூட்டி, ஊடகங்களைக் கூட்டி காவல்துறையினரை வைத்து கோரதாண்டவம் ஆடியுள்ளார். காவல்துறையினருக்கு அவர்களே நினைத்துப்பாராத உச்சபட்ச சுதந்திரத்தை அளித்துள்ளார். இனிமேல் பொதுமக்கள் யாராவது காவல்துறையினரை எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, வக்கீல்களை அழைத்து வருவதாகக் கூறினாலோ, ‘ஜட்ஜுக்கே என்ன கதி தெரியும்ல’ என்று காவல்துறையினரின் பார்வை ஏளனம் செய்யும். காவல்துறையினரின் எதேச்சதிகார வளையத்தில் இதுவரை கட்டுப்படாமல் இருந்த வழக்கறிஞர்கள் இப்பொழுது உள்ளே கொண்டுவரப்பட்டுவிட்டனர்.

அரசு சொல்வது இதுதான். எதற்கும் போராடாதே. நாங்கள் நாட்டை தாரைவார்த்தாலும் சரி, ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தாலும் சரி. அப்படிப் போராடவேண்டும் என்றால் அரசுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுங்கள். தீக்குளித்து உயிரிழக்கும்போராட்டங்கள் நடத்தினாலும் சரி எத்தனை பேர் தீக்குளித்து இறந்தாலும் அரசுக்குக் கவலையில்லை. மீறி போராடினால் அரசு அதை ஒடுக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறது. அது போராடுபவர்கள் வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி, நீதிபதிகளாக இருந்தாலும் சரி.

இதுதான் வழக்கறிஞர்களின் போராட்டத்தின் தோல்வி நமக்குச் சொல்லும் செய்தி.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால் வழக்கறிஞர்களின் போராட்டம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் இழப்பு என்னவோ வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com