Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhi
Vizhi logo
ஜனவரி 2008

அன்று நக்சல்பாரி, இன்று நந்திகிராம்
( சிவப்பு இயக்கத்துக்கு ஒரு சிவப்பு விளக்கு )
- தியாகு

ஆங்கில வார ஏடு ஒன்று தன் புத்தாண்டு இதழில் இந்தியாவின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்களின் கருத்துகளை ‘வருங்காலக் குடிமக்கள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றவர்களில் மேற்குவங்கம் சிலிகுரியைச் சேர்ந்த ரத்னப்ரியா (வயது 17) என்ற மாணவியும் ஒருவர். “அண்மைக் காலத்தில் உங்களைச் சினங்கொள்ளச் செய்த செய்திகள் எவை?’’ என்ற வினாவிற்கு குவாகாத்திக் கலவரங்களுக்கு அடுத்தபடியாக நந்திகிராமைச் சொல்கிறார் ரத்னப்ரியா.

புகழ்மிக்க வங்கத் திரைக்கலைஞரும், இடதுசாரி ஆதரவாளருமான அபர்ணா சென் நந்திகிராம் நிகழ்ச்சிகளால் வெறுப்புற்று மேற்கு வங்க மார்க்சியர்களை ‘பாசிஸ்டுகள்’ என்று சாடுகிறார். சென்ற ஆண்டு மார்ச் 14இல் நந்திகிராமில் நடைபெற்ற படுகொலையைக் கண்டித்து கொல்கத்தாவில் அறுபதாயிரம் மக்களுடன் சேர்ந்து ஊர்வலமாகச் சென்றதை அவர் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

நந்திகிராம் குறித்துச் சீற்றம் கொண்டிருப்பது இளம்பெண் ரத்னப்ரியாவும் இடது சாரிக் கலைஞர் அபர்ணா சென்னும் மட்டுமல்லர். இவர்களைப் போல ஏராளமானவர்களின் எதிர்ப்பை மேற்கு வங்க இடது முன்னணி, குறிப்பாக சிபிஎம் கட்சி நந்திகிராமில் விளைவாக ஈட்டியுள்ளது. நந்தி கிராமத்து நிகழ்ச்சிகள் எல்லாமே மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும், மாவோயிஸ்டுகளும், ‘சுசி’க்காரர்களும் முஸ்லீம் தீவிரவாதிகளும் செய்த சூழ்ச்சியின் விளைவே என்று சொல்லி சி.பி.எம். கட்சி எல்லோரையும் ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை இனி எடுபடாது.

நந்திகிராமின் நெருப்பை அறிக்கைகளால் பொட்டலம் கட்ட சி.பி.எம். செய்த முயற்சிகள் யாவும் தோற்றுப் போய் விட்டன. இந்த நிலையில்தான் “நாங்கள் தவறு செய்துவிட்டோம்’’ என்று அரை மனதோடும், அரைகுறையாகவும் ஒப்புக் கொள்ளும் முயற்சி தொடங்கியுள்ளது. தொடக்கத்திலிருந்தே நிலப்பறிப்பையும், மக்கள்மீது காவல்துறையும், ஆளுங்கட்சிக் காடையினரும் நிகழ்த்திய கொலைத் தாக்குதலையும் நியாயப்படுத்திப் பேசிவந்த முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவே “தவறு செய்துவிட்டேன்’’ என்று மெதுவாகச் சொல்கிறார்.

இந்தக் குற்ற ஒப்புதலுக்குப்பின் புத்ததேவரே நந்தி கிராமுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து “உங்கள் நிலங்களைக் கையகப் படுத்த மாட்டோம் ’’ என்று சத்தியம் செய்துள்ளார். அப்படியானால் நந்தி கிராமுக்கு முற்றுப் புள்ளி விழுந்து விட்டது என்று நம்பலாமா? முடியாது. நந்திகிராமம் எதற்கெல்லாம் குறிப்பீடாகியுள்ளது என்பதை வைத்துப் பார்த்தால் அதன் கதை முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற 2007 மார்ச் 14ஆம் நாள் நந்திகிராமில் மேற்கு வங்கக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியே அதிர்ச்சி தெரிவித்தார். கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்தத் துப்பாக்கிச் சூடு பற்றி மையப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்க ஆணையிட்டது.

இடது முன்னணி ஆட்சிக்கு எதிரான கட்சிகள் எல்லாம் திரிணாமூல் காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரசு, பாரதிய ஜனதா, இந்திய சோசலிச ஐக்கிய மையம் நில அமைப்புகள் நந்திகிராம் அடக்குமுறையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளும் இடது முன்னணிக் கட்சிகளான சிபிஐ, பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்டுக் கட்சி (ஆர்எஸ்பி) ஆகியவையும் நந்திகிராம் அடக்கு முறையைக் குறைகூறின.

தமிழகத்தில் சிபிஐ நாளேடாகிய ‘ஜனசக்தி’ (16.03.2007) ‘மார்க்சிஸ்டுக் கட்சியினரின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் ஆசிரியவுரையே தீட்டிவிட்டது. ‘ஜனசக்தி’ வருத்தப்பட்டுச் சொல்கிறது. “நிலத்தைக் கையகப்படுத்தக் காவல்துறையை ஒரு கம்யூனிஸ்டு தலைமையிலான அரசு பயன்படுத்தியது எண்பதாண்டுத் தியாக வரலாற்றின்மீது ஒரு கரும்புள்ளியைக் குத்திவிடக் காரணமாகிவிட்டது.’’

நந்திகிராம் படுகொலை குறித்து சிபிஎம்மைக் குறை கூறாத கண்டிக்காத ஒரே ஒரு கட்சி சிபிஎம் தான். நந்திகிராம் துப்பாக்கிச் சூட்டைக் காவல் துறையின் பெயரால் நடத்தியவர்களே சிபிஎம் கட்சியினர்தான் என்ற குற்றச்சாட்டைக் கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆணைப்படி நடைபெற்ற விசாரணை உறுதி செய்துள்ளது.

ஆனால் நந்திகிராமில் வன்முறையும் உயிரிழப்பும் மார்ச் 14 உடன் முடிந்துவிடவில்லை. நந்திகிராம் வட்டத்தில் அடங்கிய ஐந்து சிற்றூர்களிலும் அமைக்கப்பட்ட நிலப்பறிப்பு எதிர்ப்புக் குழுவிற்கும், நிலப்பறிப்பை ஆதரித்து அரசுக்கு உடந்தையாக இருந்த சிபிஎம் கட்சியினருக்கும் இடையே மார்ச்சு 14க்கு முன்னும் பின்னும் பல மோதல்கள் நடந்துள்ளன. காவல்துறையோடு சேர்ந்து மக்களுக்கு எதிராகச் செயல்பட்ட சிபிஎம் ஊழியர்கள் ஊரைவிட்டே துரத்தப்பட்டனர்.

சிபிஎம் ஊழியர் சங்கம் சமந்தாரின் வீட்டுக்கு மக்கள் தீ வைத்தனர். அவர் கொல்லப்பட்டார். பேராசிரியர் சுமித் சர்க்கார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வஸ், மூத்த பத்திரிகையாளர் சுமித் சக்கரவர்த்தி, தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண மஜீம்தார், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனிகா சர்த்தார் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழுவினர் நந்திகிராம் சென்று மக்களைச் சந்தித்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் கூறினார்களாம் ...

“நாங்கள் எப்போதுமே சிபிஎம் உறுப்பினர்கள் அல்லது இடதுசாரி ஆதரவாளர்களாகவே இருந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் நாங்கள் மாறிவிட்டோம்’’. உள்ளூர் சிபிஎம் அலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டு அவர்கள் சொன்னார்களாம் ...“நாங்கள் கட்டியதை நாங்களே அழித்து விட்டோம். ஏனென்றால் அது பாவத்தின் குடி யிருப்பு ஆகிவிட்டது’’

நந்திகிராமம் பகுதியில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பலரும் நிலப்பறிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்ற உண்மையை சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தே ஒப்புக் கொண்டார். நந்திகிராமில் நிலப் பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்த கட்சிகளில் திரிணாமூல் காங்கிரசு, பாரதிய ஜனதா போன்றவற்றின் நிலைப்பாடு சந்தர்ப்பவாதத் தன்மையிலானது என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் குஜராத்திலோ ராஜஸ் தானிலோ சிறப்புப் பொருளியல் மண்டலங்களை இக்கட்சிகள் எதிர்ப்பதில்லை.

இந்த முரண்பாட்டைச் சுட்டிக் காட்டிக் குற்றாய்வு செய்வதில் தவறில்லை. ஆனால் மாவோயிஸ்டுகளை இவ்வாறு குற்றம் சொல்ல வழியில்லை. அவர்கள் எங்கும் எப்போதும் சிறப்புப் பொருளியல் மண்டலங்களை எதிர்த்துப் போராடக் கூடியவர்களே. போராட்ட வடிவங்களில் அவர்களுக்குள்ளேயே வேறுபாடு இருக்கலாம் என்பது வேறு செய்தி.

இந்த அமைப்புகள் எல்லாம் நிலப்பறிப்புக்கு எதிரான குழுவில் இடம் பெற்றிருப்பதை வைத்து நிலப்பாதுகாப்புப் போராட்டத்தை சிபிஎம் கட்சியின் அரசியல் பகைவர்கள் நடத்தும் நாடகம் என்று காட்ட அக்கட்சித் தலைமை முயன்றது. இன்றும் இந்தப் பரப்புரை தொடர்கிறது.

நந்திகிராம உழவர்கள் தங்கள் நிலத்தையும், உழவையும், சிறு தொழில்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கட்சி கடந்து ஒன்றுபட்டவர்கள் என்பதே உண்மை. திரிணாமூல் நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களுக்கு, வாழ்வுரிமைக்காகப் போராடும் உரிமை இல்லை என்பதுதான் சிபிஎம் நிலைப்பாடா? கட்சிகடந்தும், சாதி,மதம் கடந்தும் மக்கள் ஒன்றுபட்டு நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடுவதை மக்கள் ஜனநாயகப் புரட்சியைத் தன் வேலைத் திட்டமாகச் சொல்லிக்கொள்ளும் பொதுஉடைமைக் கட்சி வரவேற்க வேண்டாமா?

புரட்சியின் நோக்கில் மாநில அரசாங்கம் நடத்துவதைக் காட்டிலும் இந்த மக்கள் ஒற்றுமை முக்கியமானது அல்லவா? நந்திகிராம் நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடும் இசுலாமிய அமைப்பு தொடக்கத்தில் இருந்தே இடது முன்னணியை ஆதரித்து வருவதை மறைத்து, முசுலிம் தீவிரவாதிகளும் கலவரத்தில் சேர்ந்திருப்பதாக சிபிஎம் அவதூறு பரப்பி வருவது வேதனைக்குரியது.

நந்திகிராமில் பாதிக்கப்பட்ட உழவர்களில் இசுலாமியர்கள் ஒரு பெரும் தொகையினர் என்பது உண்மை. நந்திகிராமிற்குச் சென்ற பா.ஜ.க தலைவர் அத்வானியிடம் முறையீடு செய்தவர்களில் இசுலாமியத் தாய்மார்களும் உண்டு. இடது சாரி இயக்க ஆதரவாளர்களாக இருந்த இசுலாமியர்களைக்கூட இந்துத்துவக் கொடியவர்கள் பக்கம் தள்ளிவிட்டதற்கு, சிபிஎம் கட்சியின் நிலப்பறிப்புப் கொள்கையும், அடக்குமுறை _ வன்முறையுமே காரணம்.

எல்லாம் ஓய்ந்து அமைதியாகிவிட்டது போல் இருந்த நிலையில் அண்மையில் சிபிஎம் நந்திகிராமை மீளக் கைப்பற்றுவதாகச் சொல்லி ஆயுதமேந்திய கட்சித் தொண்டர்களைக் காவல்துறை பாதுகாப்போடு நந்திகிராமம்மீது ஏவியபோது மீண்டும் உயிரிழப்பும், குருதியிழப்பும் நேரிட்டன. இத்தனைக்கும் பிறகுதான் புத்ததேவ் நந்திகிராமில் தவறு (வெறும் தவறுதான்!) செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.

நந்திகிராமம் தொடர்பான விவாதத்தைத் திசை திருப்ப சிபிஎம் பல தந்திரயுத்திகளைக் கையாண்டு வருகிறது. உண்மையான விவாதப் பொருளை வெளிப்படுத்தி விளங்கச் செய்வதற்குப் பதிலாக மூடிமறைத்துக் குழப்புவதே அந்த முயற்சிகளின் சாரம். சனவரியில் என்ன நடந்தது? மார்ச்சில் என்ன நடந்தது? நவம்பரில் என்ன நடந்தது? எந்தத் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர்? எத்தனை பேர் காயமடைந்தனர் ஊரைவிட்டு வெளியேற்றப்படுபவர்களின் துன்பம் எத்தகையது? நிலப்பறிப்பை எதிர்க்கும் கட்சிகள் எவை? அவற்றின் தன்மை என்ன? இவற்றிற்கும், இவை போன்ற பிற கேள்விகளுக்கும் விடைகாண வேண்டும்தான். அது ஒருமித்த விடையாக இல்லாமற் போகவும் கூடும்தான்.

ஆனால் உண்மையான விவாதப்பொருள், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் தேவையா? அவற்றிற்காக நிலப்பறிப்புச் செய்யும் கொள்கை சரியா? எனபதே. என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதைப் பற்றி மட்டுமே பேசி, இந்நிகழ்ச்சிகளுக்கு இட்டுச் சென்ற கொள்கை -நடைமுறை பற்றிய விவாதத்தைத் திசைதிருப்ப முயல்கின்றனர் சிபிஎம் தலைவர்கள்.

சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் தேவை என்பதுதான் அன்றும், இன்றும் சிபிஎம் தலைமை யின் நிலைப்பாடு. சிங்கூரிலும், நந்திகிராமிலும்
எழுந்த எதிர்ப்பினால் இடதுமுன்னணி அரசு சற்றே பின்வாங்கியுள்ளதே தவிர, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் தேவையற்றவை என்று எவ்விதக் கொள்கை முடிவும் எடுத்து அறிவிக்கவில்லை.

சிறப்புப் பொருளியல் மண்டலத்திட்டத்தை இப்போதுள்ள வடிவத்தில் செயல்படுத்த முடியாது என்று பிரகாஷ் காரத்தும், சீத்தாராம் எச்சூரியும் நந்திகிராமம் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு அறிவித்தார்கள். அப்படியானால் சிங்கூரிலும், நந்திகிராமிலும் புத்ததேவ் அமைக்க முனைந்த சிறப்புப் பொருளியல் மண்டலம் இப்போதுள்ள வடிவத்தில் இல்லையா? இல்லை என்றால், எப்போதுள்ள வடிவத்தில்? சிறப்புப் பொருளியல் மண்டலத்தை எந்த வடிவத்தில் ஆதரித்தாலும் அது பன்னாட்டு மூலதனச் சுரண்டலுக்குப் பாதந் தாங்குவதே! வல்லாதிக்க உலகமயத்துக்கு வக்காலத்து வாங்குவதே! சிறப்புப் பொருளியல் மண்டலம் தொழில் வளர்ச்சிக்காகவே என்று இன்றளவும் சிபிஎம் ஊதுகுழல்கள் வாதிடுவது வெட்கக் கேடானது.

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று முழங்கிய கட்சி இன்று ‘டாட்டாவுக்கே நிலம் சொந்தம்! சலீம் குழுமத்துக்கே நிலம் சொந்தம்!-’ என்று குரல் எழுப்பும் நிலைக்கு இழிந்து போனதேன்! நிலச் சீர்திருத்தங்களை நிறைவேற்றிப் பெருமைகொண்ட நாயகனாய்த் திகழ்ந்த கட்சி நிலப்பறிப்பு செய்யும் கேடனாக (வில்லனாக) மாறியது ஏன்?

நியாயப்படுத்த முடியாத, நியாயப்படுத்தக்கூடாத ஒன்றை நியாயப்படுத்தும் முயற்சியில் சிபிஎம் தலைமை ஈடுபட்டிருப்பதற்கு ஒரு சான்றுதான் சென்ற ஆண்டு டிசம்பரில் சிபிஎம் அதிகாரபூர்வ ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ எழுதிய ஆசிரியவுரை. ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மறுபரி சீலனை தேவை’ என்ற தலைப்பில் இந்த உரையைத் ‘தீக்கதிர்’ (26.12.2006) வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகள் ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாய நிலத்தைக் கொடிய முறையில் கையகப் படுத்துவது கைவிடப்பட வேண்டும்.’

‘தற்போதைய சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் மற்றும் விதிகள் நிலங்களைக் கையகப் படுத்துதல், வரிச் சலுகைகள், நிலத்தின் உபயோகம், தொழிலாளர் நலச் சட்டங்களை அமுல்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்கள் திருத்தப்பட வேண்டும்.’ (இந்த முக்கிய அம்சங்களைத் திருத்தி விட்டுத்தான் புத்ததேவ் சிங்கூரிலும், நந்தி கிராமத்திலும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைக்க முற்பட்டாரா?)

‘சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் முன்மொழிவுகள் அதிகரித்திருப்பது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்த கொள்கை மீதே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக விளைநிலங்கள் ஏராளமாகக் கையகப் படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவானதால், பெருமளவில் மக்கள் புலம்பெயர்தல் அரசின் வரிவருவாய் பெருமளவில் இழப்பு ஏற்படல், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ரியல் எஸ்டேட், வர்த்தகர்களால் மோசடியாகப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஆகிய அனைத்தும் உருவாகியிருக்கின்றன.’ (இவை அனைத்தும் சிங்கூருக்கும், நந்தி கிராமத்துக்கும்கூடப் பொருந்தும்தானே?)

‘அரசு சந்தைச் சக்திகள் மேல் வைத்திருக்கிற குருட்டுத்தனமான நம்பிக்கைகள் இந்த அணுகுமுறை மேலும் தொடருமானால் நாட்டில் மாநிலங் களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதீதமான முறையில் அதிகரிக்கும். மேலும் மாநில அரசுகள், தனியார் முனைவோரிடம் ‘எங்கள் மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்திடுங்கள். உங்களுக்கு ஏராளமான சலுகைகளை அளிக்கிறோம்’ என்று கூறி அழைத்திடும்’
(சந்தைச் சக்திகள் மேல் குருட்டுத்தனமான நம்பிக்கை வைக்க ஜோதிபாசுவுக்கும், புத்ததேவுக்கும் மட்டும் சிறப்புரிமை வழங்கியுள்ளதா சிபிஎம்? டாட்டாவையும், சலீமையும் அழைத்தபோது புத்ததேவ் ‘யாருக்கும் சலுகைகள் தரமாட்டோம்’ என்று சொன்னாரா?) தொட்டிலையும் ஆட்டிவிட்டுப் பிள்ளையையும் கிள்ளி விடும் சிபிஎம் தந்திரம் புரிகிறதல்லவா?

சிறப்புப் பொருளியல் மண்டலத்திட்டத்தை முழுமையாக ஏற்காதது போலவும் அதில் திருத்தங்கள் கேட்பது போலவும் பாசாங்கு செய்யும் சிபிஎம் சிறப்புப் பொருளியல் மண்டலச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது என்ன செய்தது? திருத்தங்களை முன்மொழிந்ததா? எதிர்த்து வாக்களித்ததா? எதுவும் இல்லை.

நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியும் சிறப்புப் பொருளியல் மண்டலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதே உண்மை. இந்தச் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டது. இத்தனைக்கும் அந்தச் சட்டத்தை முன்மொழிந்து உரை யாற்றிய இந்திய வணிகத் துறை அமைச்சர் கமல்நாத் வெளிப்படையாகச் சொன்னார்:

‘‘வணிக நடவடிக்கைகளுக்கும், வரிகள், தீர்வைகளுக்கும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அயல்நாட்டு ஆட்சிப் பரப்பாகக் கருதப்படும்.’’
காஷ்மீர் மக்களுக்கும் பிற தேசிய இனங்களுக்கும் எதிராக இந்திய இறையாண்மைக்குக் குரல் கொடுக்கும் சிபிஎம், தமிழீழம் மக்களுக்கு எதிராக சிறீலங்காவின் இறையாண்மையை வலியுறுத்தும் சிபிஎம் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்காக வங்க இறையாண்மையை மட்டுமல்ல இந்திய இறையாண்மையையும் பன்னாட்டுக் குழுமங்களிடம் விட்டுத் தரும் திட்டத்துக்கு வக்காலத்து வாங்குவது கேவலம் அன்றோ?

1960 களின் பிற்பகுதியில் மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி வட்டத்திலுள்ள நக்சல்பாரி என்ற சிற்றூரின் பெயர் இந்திய அளவிலும், உலக அளவிலும் பரவிப் புகழ் பெற்றது போலவே, இப்போது மேற்கு வங்கம் கிழக்கு மெதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரும் இந்திய அளவிலும் உலகளவிலும் புகழ் பெற்று விட்டது. இந்தியாவின் சட்டவாத மார்க்சியர்களுக்கு அப்போது நக்சல்பாரி என்ற பெயர் எரிச்சலூட்டியது போலவே இன்று நந்திகிராம் என்ற பெயரும் குடைச்சலாக இருந்துவருகிறது. நக்சல்பாரி போலவே நந்திகிராமமும் சிவப்பு இயக்கத்திற்கு ஒரு சிவப்பு விளக்கு வரலாறு ஏற்றியிருக்கும் எச்சரிக்கை விளக்கு.

இறுதியாக எழுப்ப வேண்டிய வினாக்கள் சில உள்ளன: மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைக்கும் திட்டத்தை இடது முன்னணி அரசு அறவே கை விட்டுவிட்டதா? இந்தியாவெங்கும் சிறப்புப் பொருளியல் மண்டலங்களை எதிர்த்துப் போராட சிபிஎம் முன்வருமா? சிறப்புப் பொருளியல் மண்டலச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்கத் தவறியதற்காக மக்களிடம் அக்கட்சி மன்னிப்புக் கேட்குமா? தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவையும் அயல்நாடுகளையும் சேர்ந்த பன்னாட்டுப் பெருங்குழுமங்களின் கொள்ளை இலாப வேட்டைக்குத் துணைபோகும் பொருளியல் கொள்கையை அது கைவிடுமா? இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் இறையாண்மை ஏதுமற்ற ஒரு மாநில அரசை நடத்துவது எங்குப் போய் முடியுமென்பதை இப்போதாவது சிபிஎம் மும் அதன் இளைய பங்காளிகளாக இருக்கும். இடதுசாரிக் கட்சிகளும் உணருமா? நந்திகிராமின் சிவப்பு விளக்கு தரும் எச்சரிக்கை, சிவப்பு இயக்கத்தை சிந்திக்க வைத்து, செம்மையை மீட்டுத்தருமா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com