Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhi
VizhiVizhi logo
டிசம்பர் 2007

அம்பேத்கரின் பேசப்படாத உரை
சு.பொ.அகத்தியலிங்கம்

‘இன்னும் அழுகிப்போனச் சாதிச்சனியனைத் தூக்கிச் சுமந்து திரிவது ஏன்?’ என்கிற ஆவேசமான கேள்வி நியாயமானது. இது குறித்து மாணவர்கள் ஒவ்வொருவரும் உரக்கச் சிந்திக்கவேண்டும், உரக்கப் பேசவேண்டும். இனியும் கனத்த மவுனம் சாத்தியமில்லை.

‘சாதி ஒழிக!’ என முழக்கம் இடுவது சுலபமானது. ஆனால், சாதியை எப்படி ஒழிப்பது என யோசித்தால் விடைகாண்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில், சாதியைப் போல் இந்திய சமூகத்தை பீடித்துள்ள பெருநோய் எதுவும் இல்லை. சாதி போல் இந்திய சமூகத்தில் சிக்கலாகியுள்ள பிரச்சினையும் எதுவும் இல்லை.

‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கரால் 1936ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்ட உரையை சமீபத்தில் ‘தலித் முரசு’ ஏடு மீண்டும் முழுமையாக மறுபிரசுரம் செய்துள்ளது. 1936ஆம் ஆண்டு லாகூர் ‘ஜாத்_பட்_தோடக் மண்டலம்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆனால், பேசப்படாத உரை இது. இம்மாநாட்டுக்கு டாக்டர் அம்பேத்கர் தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக்குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டதையே ரத்து செய்து விட்டது அந்த அமைப்பு.

ஆயினும் அம்பேத்கர் தன் சொந்த முயற்சியில் அதனை நூலாக வெளியிட்டார். அந்நூலில் அந்த அமைப்போடு நடந்த கடிதத் தொடர்பையும் வெளியிட்டிருந்தார். பின்னர் ரிஜன் ஏட்டில், காந்தி பதிவு செய்த எதிர்வினையும் அதற்கு அம்பேத்கர் அளித்த பதிலும் இப்புத்தகத்தில் இடம் பெறச் செய்தார். 1936ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்தவுடன் பெரியார் அதனை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட் டார் என்பது அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய வரலாற்றுத் தகவல். பல பதிப்புகள் வெளி வந்துள்ள இந்நூலை மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இக்கேள்வி சிலருக்கு எழும். ஆனால், சாதியம் இன்னும் வலுவாக இந்தியர்கள் மண்டையில் வேரூன்றி இருப்பதால் இந்நூலின் தேவை மீண்டும் மீண்டும் எழுகிறது.

சாதியைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகிற எந்த ஒரு மாணவனும் அம்பேத்கரின் ஆய்வை புறக்கணித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாது. ஆகவே, அந்த நூலை இப்போது மறுவாசிப்பு செய்வது மிக அவசியம். அப்படி செய்கிறபோது திறந்த மனதோடு இன்று வரை ஏற்பட்டு உள்ள வளர்ச்சி போக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘சாதி ஒழிப்பு’ என்பது ஒற்றை அஜண்டாவாக _ ஒரே மூச்சில் அமலாக்கக் கூடிய விசயம் அல்ல என்பதை மனதில் பதிய வைக்கவேண்டும். ‘சுயராஜ்யத்துக்கான போராட்டத்தில் தேசம் முழுவதும் உங்கள் அணியில் திரண்டு நிற்கிறது. சாதி ஒழிப்புப் பிரச்சினையிலோ, நீங்கள் தேசம் முழுவதையும் எதிர்த்து நின்று அதுவும் உங்கள் சொந்த இந்திய தேசத்தையே எதிர்த்து நின்று போராட வேண்டி இருக்கிறது என அம்பேத்கர் அந்நூலில் கூறியிருப்பது மிகையல்ல.

உதாரணமாக, ‘மாணவர்களை சாதி அடிப்படையில் பிரிக்காதீர்கள்’ என தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள் சமீபத்தில் முழக்கமிட்டனர். தங்களை ‘சமத்துவத்திற்கான மாணவர்கள்’ என அழைத்துக்கொண்டனர். வெளிப் பார்வையில் நியாயம் போலும் முற்போக்கு போலும் தோற்றம் அளிக்கும் இந்த வார்த்தைகள் உண்மையில் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டவே என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காதே’ எனப் போராடுகிறார்கள். அதற்காகத்தான் சாதி அடிப்படையில் பிரிக்காதே என்கிறார்கள்.

Caste System இந்த நிறுவனம் முழுவதும் உயர்சாதி மாணவர்களால் நிரம்பி வழிவதை, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உரிய பங்கீடு பெறவில்லை என்பதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். சமத்துவம் என்று அவர்கள் கூறுவது ஒரு ஏமாற்றுச் சொற்றொடரே. ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்ற தகுதி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்களோடு அமெச்சூர்களும் சமமாக போட்டியிட வேண்டும் என்பது உண்மையில் ஏற்கெனவே முன்னணியில் இருப்பவர்களை ஆதரிப்பது என்றே பொருள். ‘சமூகநீதி’ இல்லாதவரை ‘சமநீதி’ அர்த்தம் உள்ளதாக இருக்காது. ஆயினும் மேல்சாதி உணர்வு மிக்க மாணவர்கள் தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிராக நிறுத்தப்படுகிறார்கள்.

சாதி இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளிக்கூடங்களில் சாதி கேட்பது ஏன்? என இராமகோபாலன் , சோ வகையறாக்கள் மென்மையாக கேட்கும் கேள்வியின் பின்னால் இடஒதுக்கீடு வழங்கவேண்டாம் என்கிற வெஞ்சினம் ஒழிந்து கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும். இதையெல்லாம் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் சாதி ஒழிப்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. சாதி என்பது வெறும் பெயர் அல்ல. சாதி என்பது சமூகப் பிரிவினை மட்டும் அல்ல. இந்திய சமூகத்தைப் பாழ்படுத்தியதில் சாதியை விட கொடுமையானது, சிக்கலானது, புரையோடிபோனது வேறு எதுவும் இல்லை.

எனவே, சாதியை ஒழிக்க வேண்டும் எனில் முதலில் இந்தியா இப்போதும் சாதியால் பிளவுப்பட்டு கிடக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். இந்த சாதியின் வேர்களை அடையாளம் காணவேண்டும். இதன் வரலாற்று சுவடுகளைத் தேடி பயணிக்க வேண்டும். இந்தியாவில் சாதி ஆதிகாலம் தொட்டிருக்கிறதா? இடையில் வந்ததா? எப்போது வந்தது? யார் இதன் பிதாமகன்கள்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி விடை தேடவேண்டும். இது ஒரு நெடிய முயற்சி. இந்த வரலாற்று தேடலில் ஒரு சிக்கல் எழும். சாதி இந்தியாவில் பாரம்பரியமாக இருந்ததா? ஆரியர்கள் கொண்டுவந்ததா? ஆரியர்கள் கொண்டுவந்தது வர்ணம் அல்லவா? அப்படியானால், சாதி இந்தியாவில் அதற்கு முன்பே இருந்ததா? வர்ணமும் சாதியும் ஒன்றா? இந்த கேள்விகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆய்வு செய்யாமல் சாதியின் மூலத்தைக் காண முடியாது.

ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன் திராவிட நாகரிகம் சிந்து சமவெளியில் ஓங்கியிருந்தது. திராவிடர்களும் பழங்குடிகளும் இங்கே இருந்தனர். அவர்களிடம் ஒரு வகையான தொழில் பிரிவினை சார்ந்த சமுதாயப் பிரிவு இருந்தது. இதனை சாதியின் குறைந்தபட்ச மூலவடிவம் என்பர் சமூகவியலாளர்கள். இப்படி திராவிட சமூகத்தில், தமிழ் சமூகத்தில் சாதியின் குறைந்தபட்ச மூலக்கூறு இருப்பினும் தீட்டு, தீண்டாமை இல்லை. அது சாதி ஆகாது. ஆரியர்கள் இங்கே வந்தபோது போரிட்டுத் திராவிடர்களை, பல குழுக்களை வென்றனர்; அழித்தனர். அதோடு பண்பாட்டு ஊடுருவல் மூலம் இங்கே இருந்தவர்களோடு கலந்தனர். அவர்களிடம் இருந்த வர்ணமும், இங்கே திராவிடர்களிடமும் இதரர்களிடமும் இருந்த சமூகப்பிரிவும் கலந்து சாதியாக மாறியது.

அதாவது, ‘ஆரியர்கள் கங்கை யமுனை இடைப்பட்ட பகுதியில் பரவியபோது அவர்கள் கருப்பையில் சாதி உருவானது’ என சுருக்கமாக சாதியின் மூல வரலாற்றைப் பற்றி முடிவுக்கு வரலாம். அதாவது, தீட்டு தீண்டாமை என்கிற கருத்தியல்களால் ‘சாதியம்’ என்கிற கருத்தோட்டம் உருவாக்கப்பட்டு, ‘வர்ணாஸ்ரமம்’ என்கிற தத்துவம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. மனுதர்மம் என்கிற நூல் மூலம் வர்ணாஸ்ரம வாழ்க்கை சட்டமாக்கப்பட்டது. அர்த்தசாஸ்திரம் எனும் சட்ட நூல் அதற்கு அரசமைப்பு ரீதியான நியாயம் வழங்கியது. பகவத் கீதை இந்த அக்கிரமத்துக்கு ஒரு தெய்வீக முத்திரை வழங்கியது.

ஆக, மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களால் சாதியம் இந்திய மூளையில் வலுவாக விதைக்கப்பட்டது என்பதே உண்மை. எனவேதான் ஒரு கட்டத்தில், “என் கைகளில் மட்டும் அந்த மனு கிடைத்திருப்பானாகில் அவனை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். ஆனால், அவனுடைய ஆவி வடிவம் அல்லவா சாதி அமைப்பு முறையை இன்றளவும் பாதுகாத்து வருகிறது’’ எனச் சீறிச் சினந்து டாக்டர் அம்பேத்கர் கூறியது நியாயமே.

இப்படி சாதியத்தின் மூலக் கருவாக மனுதர்மம் இருப்பதை மிகவும் நுட்பமாக அடையாளம் காட்டிய அம்பேத்கர் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது பாட்டாளி மக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. அடிமைச் சங்கிலியைத் தவிர என்றார் மாமேதை கார்ல் மார்க்ஸ். ஆனால், இந்திய பாட்டாளி இழப்பதற்கு சாதி இருக்கிறது அல்லவா? இந்த கேள்வி பொருள் பொதிந்தது. இதனை உதாசீனம் செய்துவிட முடியாது. இந்தியாவில் சுரண்டப்படும் பாட்டாளி மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு வகையில், ஓர் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. இதனை மனதில் கொள்ளாமல் சாதியை ஒழிப்பது சாத்தியம் இல்லை.

‘ஒரு கருத்து மக்களை கவ்விப் பிடிக்கும்போது அது பௌதீக சக்தியாகிவிடும்’ என்பார் காரல் மார்க்ஸ். இது நல்லதற்கும் கெட்டதற்கும் பொருந்தும். சாதி என்கிற விஷக்கருத்து இந்திய மக்களின் மூளையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உறைந்து கரடுத்தட்டி ஒரு மிகப்பெரிய பௌதீகத் தடையாக மாறிவிட்டது. இத்தனையும் அழுத்தமாக மனதில் பதியாமல் சாதியை எதிர்த்து போரிட முடியாது. எனவே, சாதி ஒழிப்பு என்பதை சாதியம் என்கிற கருத்தோட்டத்திற்கு எதிரான தத்துவ போராட்டமாகவும் நடத்த வேண்டியுள்ளது.

‘சாதிதான் இந்துக்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை’ என உறுதியாக கூறிய அம்பேத்கர், இந்துமதம் உள்ள வரை சாதியை ஒழிக்கமுடியாது. எனவே, இந்து மதத்தில் நீடிப்பது அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்து புத்தமதத்திற்குமாறியதை வெறும் மதமாற்றமாகப் பார்க்காமல் சாதிக்கு எதிரான ஒரு கலக நடவடிக்கையாகவும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாதியை வேரறுக்கும் மார்க்கம் புலப்படும். இதனையும் சாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஊன்றி பயில வேண்டும்.

சாதியை ஒழிக்க முயற்சித்த தந்தை பெரியார் சாதிக்கு அடிப்படையான சாஸ்திரம், சடங்குகள், தத்துவம், மதம், எல்லாவற்றிற்கும் அடிப்படையான கடவுள் என அனைத்தையும் மறுதலிக்கிற சமூகப் புரட்சியாளராக நிமிர்ந்தார். அவரையும் சாதியை ஒழிக்க முயல்பவர்கள் நன்கு கற்று உணர வேண்டும்.

இப்படி வரலாறு நெடுகிலும் சாதி ஒழிப்பிற்காக ஏதாவது ஒரு வகையில் தன் பங்கைச் செலுத்திய ஒவ்வொரு சிந்தனையாளரையும் நாம் மறந்துவிட முடியாது. மறந்துவிடக்கூடாது. அவர்கள் அனைவரையும் பயில வேண்டும். அவர்கள் தோற்ற இடம் எது என்பதை தெளிவாக வரையறை செய்வதன் மூலமே நாம் அடுத்தகட்டப் பயணத் ப் பிசிறின்றி நடத்தமுடியும்.

நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் நாளிதழில் 1853ல் எழுதிய கட்டுரையில் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற வார்த்தைகளில் அறிவித்தார்: “ரயில்வே அமைப்பைத் தொடர்ந்து உருவாகும் நவீனத் தொழில் அமைப்பானது இந்திய சாதிகளின் மீது அமர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் பரம்பரைத் தொழில் பிரிவினையைக் கரைத்துவிடும். இப்பிரிவினைதான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் வலிமைக்கும் தீர்மானகரமான தடையாக விளங்குகிறது.’’ இதையே தனது எளிமையான வார்த்தைகளால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடினார். “சாதியை ஒழித்தது ரயிலே! ரயிலே!’’ ஆயினும், சாதி ஒழியவில்லை. இதை சுட்டிக் காட்டுகிற சமூக ஆய்வாளர்கள் மார்க்ஸ் தோற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

மேலோட்டமாக பார்த்தால் சரி போல் தோன்றும். ஆனால், உண்மையல்ல. மார்க்ஸ் சொன்னதின் பொருள் தொழில்துறை வந்ததினாலேயே சாதி ஒழிந்துவிடும் என்பது அல்ல. மாறாக, பரம்பரை வழிப்பட்ட தொழில் பிரிவினை மெல்ல மறையும் என்பதுதான். நாம் காண்பது என்ன? இடஒதுக்கீடு காரணமாகவும் தொழில்வளர்ச்சி காரணமாகவும் எல்லா தொழிலிலும் எல்லா சாதிகளும் பங்கேற்கும் நிலை உருவாகி வருகிறது. அதேசமயம், இன்னும் வெகுதூரம் போக வேண்டியிருக்கிறது என்பதும் உண்மையே. அதே நேரத்தில் மலம் அள்ளுதல் போன்ற அழுக்கான தொழில்களில் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களே உள்ளனர் என்கிற கசப்பான உண்மையையும் மறந்துவிட முடியாது.

கம்ப்யூட்டர் யுகத்திலும் சாதி நீடிக்கிறது. கொள்வினை கொடுப்பினை மட்டும் அல்ல. வாழ்வின் சகல மட்டங்களிலும் சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் கோலோச்சுகிறது என்பதை அன்றாடம் வரும் செய்திகள் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் வந்தபின்னும் இன்னும் தீண்டாமை நிலவுகிறது. இங்கே தான் சிலர் குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். அதாவது சாதி படிக்கட்டில் உச்சாணியில் இருக்கிற பிராமணர்கள் எங்காவது தலித்துகளோடு மோதுகிறார்களா என விஷமமாகக் கேட்கிறார்கள். அவர்கள் ஓர் உண்மையை மறைத்துவிடுகிறார்கள். சாதி அமைப்பு படிக்கட்டுகளை போல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சாதியும் அடக்கும் சாதியாகவும், அடக்கப்படும் சாதியாகவும் ஓர் இரட்டை பாத்திரம் வகிக்கிற வகையில் படிநிலையுள்ளது. இந்த சமூக அடக்குறை உளவியல் சுரண்டல் சமூக அமைப்பிற்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. எனவே இதை பாதுகாப்பதில் ஆளும் வர்க்கம் உறுதியாக இருக்கிறது. இந்த அடக்குமுறை கருத்தோட்டத்தை காலம் காலமாய் தத்துவ ரீதியாக போற்றி வளர்க்கும் பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஒரு பகுதியாகவே உள்ளனர். அவர்கள் உருவாக்கிய தத்துவம் கீழே இருப்பவர்களை மோதவிடுகிறது. இந்த தத்துவத்தை அவர்கள் புத்தகம் மூலம் நேரடியாக படித்து அறியாமல் இருக்கலாம். ஆனால் சடங்குகள் சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் அகமணமுறை என பலவகையில் இது அவர்களின் ரத்தத்தோடு கலக்கும்படி செய்யப்படுகிறது. எனவே, மோதல் யாருக்கு இடையே இருப்பினும் அதன் அடியாழத்தில் இருப்பது வர்ணாஸ்ரமமே. இந்நிலையில் தலித் முரசு சுட்டிக்காட்டும் ஒரு செய்தி முக்கியமானது.

‘சாதியை ஒழிக்கத் தங்களையே இழக்கத் தயாராக இருக்கும் போராளிகள் கூட, அதை எப்படி ஒழிப்பது என்று திக்கற்று, நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களும்கூட, சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களைத்தான் மூர்க்கத்துடன் எதிர்க்கின்றன. ஆனால், சாதியின் மூலத்தை ஆராதிக்கவே செய்கின்றன. பல நூற்றாண்டுகளாக நிலைத்து நீடித்து இயங்கும் சாதி அமைப்பின் வெளிப்பாடுதான் தீண்டாமை. ஆனால், இதை மட்டுமே எதிர்த்துப் போராட தலித் இயக்கங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இச்சதித் திட்டத்திற்கான முக்கிய காரணங்கள்: 1. தலித்துகளின் இழிவுக்கும் வன்கொடுமைக்கும், சாதிப் படிநிலையில் அவர்களுக்கு சற்று மேலிருக்கும் மக்களையே காரணமாக்கி, எளிதில் தலித்துகளின் சீற்றத்தை தனிமனிதர்கள் மீது திசை திருப்பமுடிகிறது. 2. தலித்துகளின் இழிவுக்கு மூல காரணமான பார்ப்பனியம் சேதாரமின்றி இந்து மத உதவியுடன் பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்படுகிறது. தலித் முரசின் இந்த அணுகுமுறையோடு மாறுபட முடியாது.

பெரியார், தலித்துகளுக்காகப் போராடவில்லை என்று குற்றஞ்சாட்டுவதும், அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் பற்றிக் கவலைப்படவில்லை என்று பழிபோடுவதும், கம்யூனிஸ்டுகள் சாதி பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர் என்று புகார் காண்டம் வாசிப்பதும் உண்மையில் குறுக்குச் சால் ஓட்டும் வேலையே. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பிராமணிய கருத்தாதிக்கத்துக்கு எதிராக சுரண்டலுக்கு எதிராக இவர்கள் ஒன்றுபட்டுப் போராடிவிடக் கூடாது என்கிற கீழ்த்தரமான வஞ்சக எண்ணத்தால் தான் மேற்கண்டவாறு விமர்சிக்கின்றனர். இதற்கு இரையாகி விடக்கூடாது.

ஆம். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் யாரையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பிரத்யேகமான சூழ்நிலையில் கூறப்பட்ட சில கருத்துகளை அந்தந்த வரலாற்றுச் சூழலோடு பொருந்திப் பார்க்கவேண்டுமே தவிர, வறட்டுச் சிமிழுக்குள் அடக்கிவிடக்கூடாது. அவர்களின் சிந்தனை பற்றிய அடிப்படைப் புரிதலோடு அடுத்த காலகட்டத்துக்கு உயர்த்திச் செல்லவேண்டும். இந்திய சமூக சூழலை சரியாக கணிக்கிற யாரும் கீழ்கண்ட முடிவிற்குத் தான் வரவேண்டியிருக்கும். “இன்றைய இந்திய சமூகமானது ஏகபோகங்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோதக் கலவையாக உள்ளது’’, இந்திய சமூகம் வினோதக் கலவை. அதிலும் உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல் என்ற முப்பெரும் சூறாவளி உலகச் சுரண்டலுக்காக மூன்றாம் உலக நாடுகளைப் பிய்த்து எறிகிறது. இந்தியா அந்தச் சூறாவளியில் தள்ளப்பட்டு விட்டது. எனவே, இப்போது தலித்துகள் பிரச்சினை மட்டுமல்ல, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினை என்பது மிகவும் சிக்கலாகி உள்ளது.

“உலகில் உருவாகிவரும் புதிய அரசியல் பொருளாதார முறைமையால் தலித் மக்களின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பு வழக்கமான நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எதிர்சக்திகளின் தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் உணரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலித் மக்கள் தங்களை நினைக்கவில்லை என்றால், அது கேலிக்குரியதாகி விடும். அமைப்பு ரீதியிலான துறைகளிலிருந்து பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறியிருக்கும் ஒரு சிறுபிரிவினர் ஒட்டுமொத்த தலித் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. கிராமப்புறங்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்களும், நகரங்களில் அமைப்பு ரீதியாக இல்லாத தொழிலாளர்களும்தான் அதைச் செய்யமுடியும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆயுதங்கள் இவர்களுக்குத் தேவைப்படுகின்றன. இந்தப் போராட்டம் ஒரே நேரத்தில் இரு முனைகளில் நடத்தப்பட வேண்டும். ஒன்று சாதி; மற்றொன்று வர்க்கம்’’ என்கிறார் ஆனந்த் டெல்டும்ப்டே.

மேலும் அவர் கூறுகிறார்: “இவை ஒரு சார்பு நிலையில் பயன்படுத்தப்பட்டதால் தவறு தலாகப் பிரிந்து நிற்கின்றன. மற்றவர்களைவிட தலித் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிவகைகளை அம்பேத்கர்தான் உருவாக்கியிருக்கிறார். இதனால்தான் அவர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார். எனவே, அவரது படைக்கலக் கொட்டிலில் உள்ள ஆயுதங்கள் தூசு துடைக்கப்பட்டு கூர்மைப்படுத்தப்பட வேண்டும். மாறி வரும் சூழ்நிலையில் இவற்றைப் பயன்படுத்துவது பற்றியும் மறுஆய்வு செய்வது அவசியம். அவரது கைகளிலேயே உள்ள புத்த தத்துவம் போல அம்பேத்கருக்கும் மறுவிளக்கம் தர வேண்டியுள்ளது. மரபு வழியிலான அம்பேத்கர், முற்போக்கு அம்பேத்கர் மூலம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.’’ஆனந்த் டெல்டும்ப்டேயின் புரிதலோடு அம்பேத்கர் எழுதிய “சாதியை ஒழிக்கும் வழி என்ன?’’ என்ற புத்தகத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். திறந்த மனதோடும் தொலைநோக்கு பார்வையோடும் அடுத்த தலை முறையாவது சாதியற்ற தலை முறையாக மலரவேண்டும் என்கிற கனவோடும் மாணவர்கள் இந்த மறுவாசிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com