Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள்
த.செந்தில்பாபு
.

காலனியாதிக்கத்தின் மாற்றங்களுக்கு இடையில், இந்தியாவில் குறிப்பிட்டதொரு பிரதேசத்தில், கணித நடைமுறையின் சமூக வரலாற்றை ஆய்வுசெய்ய முனைந்தபோது எனக்கு சில தமிழ் கணித ஆவணங்கள் கிட்டியது. இந்த கணிதச்சுவடிகளை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று, எண்சுவடி எனப்படும் தொடக்ககால கணிதக் கல்விக்கான வாய்ப்பாட்டு புத்தகங்கள். இவை கடந்தகாலத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களின் கல்விமுறை சார்ந்து எழுந்தவை. இரண்டு, சற்றே உயர்மட்ட அளவில் கணிதம் பயில்கின்ற கணக்கதிகாரம் எனப்படும் சுவடிகள். கணக்கதிகாரம் பல இருப்பினும், இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுவடிகள் தமிழ்ச் சமூகம் அறிவியலை எதிர்நோக்கியதன் சான்றாக விளங்குகிறது. அப்படியெனில், இச்சுவடிகளின் பொருளடக்கத்தைக் கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கும் அறிவியலுக்கும் வரலாற்றுரீதியான உறவைக் குறித்து விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் சிலகேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இச்சுவடிகளின் கணிதம் சார்ந்த பொருளடக்கம் பல கேள்விகளைத் தூண்டுகிறது. இக்கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகள் மிகக் கடினமானதாக அமைந்தன. இது வரலாற்று ஆவணங்கள் தரவுகளாக கணிக்கப்படும் பொழுது எழும் கஷ்டங்கள் மட்டும் அல்ல. மேலாக, அறிவுமரபுகளை வரலாற்றுக் காலத்தில் வரையறுக்க பயன்படுத்தப்படும் வரலாற்று உத்தி கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் எனக்கு எழுந்த கஷ்டங்களுக்கு காரணமாக இருக் குமோ என்று எண்ண முற்படும் பொழுதுதான் புதிய கேள்விகள் சாத்தியமாயிற்று.

உதாரணமாக, நம் அனைவருக்கும் இந்தியக் கணித மரபு என்றதும் நினைவுக்கு வருவது என்ன? சுல்ப சூத்திரங்கள் துவங்கி ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கரர் என்று நீளும் பண்டைக்கால இந்தியக் கணித மரபு தானே. இப்பாரம்பரியம் சமஸ்கிரு தத்தில் அமைந்திருந்ததால் மட்டுமே நமக்கு இது இந்தியக் கணிதம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.இது மொழி சார்ந்து எழும் பண்பாட்டு அதிகாரப் பிரச்சினை அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. மாறாக, இந்தப் பாரம்பரியத்தில் உள்ள கணிதவழிமுறைகளின் அறிவுப்புலம் ஒரு உயர்மட்ட சிந்தனை முறையைக் கடைபிடித்து, சமகால உலகளாவிய கணித அறிவுப்புலத்தோடு தொடர்பு படுத்தியும் ஒப்பிட்டும் காணவல்ல ஒன்று என்ற கூற்றும் சேர்ந்துதான் இந்தக் கணித மரபு நம் பார்வையில் வேறுபட்டு நிற்கிறது. ஆனால் எண் சுவடிகள் மற்றும் கணக்கதிகாரத்தில் காணப்படும் கணித வழிமுறைகள் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றன. மொழியில் மட்டுமல்ல, உள்ளடக்கத் திலும் கூட.

சமஸ்கிருதக் கணிதமரபில் கையாளப் படும் உயர்சிந்தனை முறையின் தன்மைக்கு கூடுதல் வசதியை பெற்றுத் தருவது என்ன? அதன் அடித் தளம் ஒருங்கிணைந்த உற்று நோக்கல் (organized observation),தேற்றங்கள் உருவாக்குதல், வானியல் சார்ந்த கணிதம் போன்றவற்றில் உள்ளது. கணக்கதிகாரம் சார்ந்த கணித வழிமுறைகள், மாறாக, மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையிலிருந்து எழுந்தவை. - நிலம் அளத்தல், தானி யங்கள் அளவிடுதல், வரி கட்டுதல், கூலிக்கணக்கு - எனினும், கணித வழி முறைகள் தோன்றி, சிந்தனைத் தளங் கள் மாற்றம் பெற்று, உலகளாவிய கணித செயல்பாட்டைச் சாத்தியமாக் கும் கூறுகள் இந்த மரபிலும் தெளிவாக இடம் பெற்றுள்ளன.

இது, வரலாற்று மாணவனுக்கு அசாதாரண கேள்வியை எழுப்புகிறது. இருவேறு தளங்களில், தனித்தனி யாகத் தோன்றி, தனித்தனி வட்டங்க ளுக்குள் சுழலும் இவ்விரு மரபுகளுக் கும் எத்தகைய உறவு இருந்து வந்துள் ளது?அதாவது, அவதானிப் பிலிருந்து தோன்றும் அறிவுப்புலத்தின் வழி முறைகளுக்கும், செயல்பாட்டிலி ருந்து தோன்றும் அறிவுப்புலங்களின் வழிமுறைகளுக்கும் என்ன உறவு?

இருவேறு தளங்களுக்கும் பொது வான கணிதக் கோட்பாடுகள் இருந்தா லும், வெறும் கோட்பாடுகளை வைத்து மட்டும் இவ்விரு மரபுகளுக் குள்ளே பரிமாற்றங்களின் தன்மை யைப் புரிந்துகொள்ள முடியுமா? அல்லது, குறிப்பிட்ட கணித வழி முறைகள் எப்படி வித்தியாசமாகக் கையாளப்படுகின்றன என்பதைக் கொண்டு மரபுப் பரிமாற்றங்களை உணர முடியுமா? அல்லது மொழியும் மொழி சார்ந்து ஆய்வு செய்யும் உத்தி களும் நமக்கு இத்தேடலில் உதவுமா? இந்த இருதளங்களின் நோக்கங்களை எப்படி புரிந்துகொண்டு ஒவ்வொன் றின் தன்மையை, அவற்றின் தனிப் பட்டக் கூறுகளை எப்படி பிரித்துக் கையாள்வது? மொழி மற்றும் மொழி சார்ந்த உத்திகள் குறித்து சற்றே சந்தேகத்துடன் அணுக வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மரபுகளின் நோக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?

காலப்போக்கில் வரலாற்றில் தனி நபர்களும் இயக்கங்களும் கொள்கை சார்ந்து இத்தகைய கணித மரபுகளை மீட்டுருவாக்கம் செய்துவந்துள்ளனர். அப்படியானால், உண்மையான கணிதத்துறை சார்ந்த செயல்பாடுகள், இந்த மரபுகளிலிருந்து எழுந்த கணிதக் கோட்பாடுகளை எப்படி புரிந்து கொண்டு தத்தம் செயல்பாட்டை வகுத்துக் கொண்டன?

இப்படிப்பட்ட கேள்விகளை ஏராள மாக எழுப்பிக்கொண்டே செல்ல லாம். அவ்வாறு எழுப்புவதன் மூலமாக எனக்குத் தோன்றுவது என்னவென்றால்,உயர்மட்டச் சிந்தனை என்பதன் வடிவம் மற்றும் அடக்கத்திற்கு நாம் ஏதோ ஒரு தரத்தை மட்டும் நிர்ணயித்துக் கொண்டோம் என்றால்- அதாவது நவீனக் கணிதம் சார் உயர்மட்டச் சிந்தனை மட்டுமே உயர்ந்தது-என்பதை மீறி நாம் யோசிக்க முயற்சி செய்தால், உயர் மட்டச் சிந்தனை என்பதன் அடிப் படைத் தன்மைகள் பன்முகத்தன்மை கொண்டவை என்று நமக்குப் புரியும். ஆனால், உயர்மட்டச் சிந்தனைகள் உருவாகும், செயல்படும் இடத்தைக் குறித்து உன்னிப்பான கவனம் தேவை. அந்த செயல்பாட்டு இடத்தி லிருந்துதான் உயர்சிந்தனைகள் செயல் படும் விதங்களைக் கொண்டு, அவற்றின் பல்வேறு வடிவங்களைப் புரிய முடியும்.

இக்கண்ணோட்டத்தின்படி, ஒரு மரபு பிராமணிய மரபு என்றும், மற்றது பிராமணியமற்ற மரபு என்றும் வித்தி யாசப்படுத்திக் காண்பதை விட வேறு ஆழ்ந்த வேறுபாடுகளைக் கண்டு ணர்ந்து, சிந்தனை மரபுகள் குறித்து நம்மால் தெளிவு பெறவே முடியாதா என்ன? உதாரணத்திற்கு, தமிழ்ச்சுவடி கள் உணர்த்தும் கணிதமரபு சார்ந்த உயர்சிந்தனை, நடைமுறையிலும் செயல்பாட்டிலும் தோய்ந்து, திறன் வளர்ச்சிக்காகவும் குறிப்பிட்டப் பிரச் னைகளுக்கு குறிப்பிட்ட தீர்வு காணக் கூடிய ஒன்றாகவும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மற்றது, அவதா னிப்பில் தோய்ந்து துவங்கி, அறிவுத் தேடலில் இன்பம் காணும் அளவிற்கு ஈடுபட்டு சடங்குரீதியில் அமைந்த சமூகத்தரத்தை தக்கவைத்துக் கொள்ள உதவிய ஒன்றாக புரிந்துகொள்ள முடி யும்.இப்படி,உயர்சிந்தனை பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதல் ஒருபுறம் இருந்தாலும், சமகாலத்தில் அறிவுத்தேடல் நிகழ்ந்த அதே சமூகத் தளத்தில்,அடக்குமுறை சார்ந்த செயல் பாடுகளை புறந்தள்ளிவிட்டு, சிந்த னையை மட்டும் தேடிச் செல்வதில் உள்ள சிக்கல்கள் வரலாற்றில் அநேகம் பேர் செய்துள்ளதின் மூலம் நமக்குத் தெரியும். நாம், அதையும் மீறி, சமகால-தற்கால சமூக அடக்கு முறைகளை கண்டு, உணர்ந்து அவை சார்ந்த புரிதலை ஆழப்படுத்தி, சிந்தனை மரபுகளின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதும் முயற்சியில் ஈடுபட வேண்டிய தேவை இன்று அதிகம் உள்ளது.

மேற்கூறிய தமிழ்ச்சுவடிகளை ஆய்ந்த போது, உயர்சிந்தனை குறித்த புரிதல் எவ்வளவு சிக்கலான ஒன்று என்று புரிந்து கொண்டதுடன், மேலும் பல கேள்விகள் முன்னுக்கு வந்தன. இச்சுவடிகள், எண்சார்ந்த நடைமுறை களை தரப்படுத்தி, வடிவம் கொடுத்த ஒரு சமூகவெளியை உணர்த்தின. சுவடிகள் 17/18ம் நூற்றாண்டை சார்ந் தவையாதலால் அறிவை ஓலையிலோ பின்னர் காகிதத்திலோ பதிவு செய்யக் கூடிய வாய்ப்பு கொண்ட சமூகமாக அது மாற்றம் பெறும்போது என்ன ஆயிற்று என்ற கேள்வியும் வந்தது. அப்போது, குறிப்பிட்ட மொழித் திறன் கொண்ட சிலர், அதுவரை வாய் மொழியால் மட்டுமே சுழற்சியில் இருந்த கணித உயர் சிந்தனையை ஓலையில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், வெறும் சுவடிகளை மட்டும் வைத்துக்கொண்டு, இவற்றை சமூக வரலாற்றிற்கான முழுமையான தரவு களாக கொள்ள முடியாது அல்லவா? ஏனென்றால், இச்சுவடிகளை யார் எழுதினார்கள், எப்படி சுவடிகள் சுழற்சியில் பரவி, கைமாறி, அறிவுப் பரிமாற்றத்தில் கருவிகளாக மாறின என்பதெல்லாம் நமக்குத் தெரிந்து கொள்ள முடியாத ஒன்று. இப்படி தரவு சார்ந்த சிக்கல்கள் இருப் பினும், கணிதரீதியான கோட்பாடுகள் சார்ந்த வெளிப்பாட்டிற்கும், நடை முறை சார்ந்த செயல்பாட்டில் தோய்ந் துள்ள கணிதச் செயல்பாடுகளுக்குமிடையில் ஒரு போராட்டம் நிகழ்ந்து வந்துள்ளது என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. இந்தப் போராட்டத்திற்கு மையமாகத் தெரிவது ஒன்று - எழுத்தறிவு பெற்றவர்கள் மட்டுமே எண்கணித வழி முறைகளில் ஈடுபடுபவர்கள் அல்ல.

கணக்கதிகாரத்தில் உள்ள நிலம் சார்ந்த கணக்குகள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி, சமகால தொழில்சார் சமூக ஏற்றத்தாழ்வுடன் ஒப்பிட்டு ஆய்ந்தோமானால், உடல் உழைப்பை மட்டும் செலுத்தி வாழ்ந்த மனிதர்கள் தம் தொழில் சார்ந்தும், தொழில் சாராத தினசரி வாழ்விலும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கி யுள்ளனர் என்பதும் தெரிகிறது. உதாரணமாக, வெட்டியான் (நிலம் அளப்பவர்) நீர்க்காரன், தோட்டி, தலையாரி போன்றவர்கள் தொழில் சார்ந்து, உடலுழைப்பில் ஊறிப்போன செயல்பாட்டின் ஊடாகவே கணிதச் செயல்பாட்டிலும் ஈடுபட்டனர். தொழிலுக்கு அப்பால் ஊர் சந்தையில், அடுப்படியில், அரசுடன் வரி கட்டும் செயல்களில் என்று பலவகைகளில் கணித ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கினர் என்பதை 18ம் நூற் றாண்டு சுவடிகளும் ஆவணங்களும் தெரியப்படுத்துகின்றன. கணிதத் திறனுக்கு எழுத்தறிவு) அத்தியாவசியமான ஒன்றல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால் இதேசுவடிகளில் இம்மனிதர் களின் உடல் உழைப்பும் செயல்பாடு களும் கணக்குப் போடுவதற்கான பொருட்களாக மாற்றப்பட்டு, பொருட்சார்ந்த மக்கள் வாழ்க்கை கணிதப்பொருட்களாக பாவிக்கப் பட்டு, அதிலும் ஒரு உயர்மட்ட சிந்தனை மரபை உருவாக்கி உள்ளனர் என்ற வரலாறு வெளிவருகிறது.

இப்பிண்ணனியில், ஒருவகையான அறிவுப்புலம் பொருட்சார் வாழ்க்கை யிலிருந்து உருவாகி இருப்பினும், அது கோட்பாட்டுரீதியான வெளிப் பாடுகளாக மாறும்பொழுது, அவை செயல்பாட்டுத்தளத்திலிருந்து விலகிச் செல்வது தவிர்க்கமுடியாமல் போய் விடுகிறதா? ஒரு வடிவம் சார்ந்த உயர் சிந்தனைத்தளம், தனக்கான சலுகை களைப் பெற்றுக்கொண்ட அதே சமயம், அச்செயல்பாட்டிற்கு காரண மாய் அமைந்த உடல் உழைப்புசார் மனிதச் சுயங்களை தன் தளத்தில் சம அளவில் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்து தன் உயர்சிந்தனை என்ற அளவையை தானே நிர்ணயித்துக் கொண்டு அதிகாரம் பெறுவது இந்தக் கணித மரபின் வரலாற்றின் வளர்ச்சி யில் காணலாம். ஆனால், நம் அனை வருக்கும் ரொம்பவே பழக்கமான அனுமதி மறுப்பு, சலுகை சார்ந்த அறிவுச்சுழற்சி என்பது மட்டும் எனக்கு பெரியதொரு கேள்வியாகப் படவில்லை. மாறாக, ஏன் இப்படிப் பார்க்கக்கூடாது?

எந்த ஒரு அறிவுப்புலத்தையும் மொழி சார்ந்த வெளிப்படுத்தும் அதேசமயம் அந்த அறிவுப்புலத்தின் வடிவமும் அடக்கமும் மாற்றம் பெறுகிறது என நம்பினோம். ஆனால், எந்தெந்த செயல்பாட்டுத் தளத்தின் வெளிப் பாடுகளிலிருந்து எந்தெந்த அறிவுப் புலங்கள் தத்தம் வடிவத்தையும் அடக் கத்தையும் பெறுகின்றன? இதனால் ஏற்படும் மாற்றங்கள் மேலும் அறிவு சுழல்வதற்கான அடித்தளங்களையும் எப்படி உருவாக்கித் தருகின்றன? இந்த தமிழ் கணிதச்சுவடிகளின் 19ம் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டு இப்படிப்பட்ட மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

19ம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்த தமிழ் கணிதச்சுவடிகள் இருவகை யான வெளிப்பாட்டினரின் அறிவுப் புலத்தை எதிர்கொண்டன. கிழக்கிந் திய கம்பெனி பிரதிநிதிகள் மற்றும் கிறித்துவ மிஷனரிகள். இந்த இரு தரப்பினர் முழுவதுமாக தமக்குள்ளா கவே அறிவுரீதியாக ஒன்றுபட்டவர்களல்ல என்றாலும் ஐரோப்பிய அறிவி யலின் வாகனங்களாக செயல்பட்ட னர் என்பது நாம் அறிந்த ஒன்று.

எண்சுவடிகள் தான் முதன்முதலில் இவர்களை எதிர்கொண்டன. கம்பெனியும் மிஷனரிகளும் தனித் தனியாக புதுவகையான ஆரம்பக் கல்வியை நிறுவ முற்பட்டபோது எண்சுவடி மாற்றத்துக்குள்ளாக வேண்டிய கட்டாயம் எற்பட்டது. ஆனால், ஐரோப்பியருக்குள்ளேயே பலவிதமான கொள்கை சார்ந்த வேறு பாடுகள் கல்வித்துறையில் அவர் களின் தாய்நாட்டிலேயே சமகாலத்தில் நிலவியது. அவ்விவாதம் சார்ந்த அனுபவங்கள் இந்திய ஆரம்பக் கல்வியில் நடந்த மாற்றங்களில் பெரிய பங்கு வகித்தன. இக்கலவை யின் ஊடாகத்தான் காலனிய அரசின் பொருளாதார தொழில்நுட்ப அரச மைப்பு உருவாகி 19ம் நூற்றாண்டு முழுவதிலும் முழுக்க முழுக்க உள்ளூர் சார்ந்து, உள்ளூருக்காக தன்னை வடிவமைத்துக் கொண்ட திண்ணைப் பள்ளிக்கூடங்களை எதிர் நோக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசமைப்புக்கு ஏற்பட்டது.

திண்ணைப் பள்ளிக்கூடமும் அரசும் தத்தம் பிடிவாதத்துடன் ஒருவரை ஒருத்தர் எப்படியாவது மாற்றி அமைக்க வேண்டும் என்று நிகழ்த் தியப் போராட்டத்தின் வழியாக ஒரு புதுவகையான எண்கணித அறிவுப் புலம் உருவாகி இருக்க வேண்டும். பல பண்பாடுகள் சார்ந்த அறிவுப் புலங்கள் ஒன்றோடொன்று எதிர் கொண்டு, மாற்றம் பெற்று, நதிக் கிளைகள் ஒன்றிணைவதுபோல் நவீன அறிவி யல் - நவீன கணிதம் என்ற ஒரே நதியில் சங்கமித்திருக்க, ஒட்டுமொத்த உலக மக்களுக்கு சொந்தமான உலக ளாவிய அறிவுப்புலம் அப்படிதானே சாத்தியமாயிற்று.கீழைநாட்டு அறி வியல்-மேலைநாட்டு அறிவியல், இந்து அறிவியல்-இஸ்லாமிய அறிவி யல், இந்திய அறிவியல்-சீன அறிவி யல் என்றில்லாது பலநதிகள் ஒன்றி ணைந்து உலகத்திற்கும் பொதுவான நவீன அறிவியல் என்றுதானே நாம் அறிவை - அறிவுசார் மரபுகளை புரிந்து கொள்ள வேண்டும்?4

ஆனால், திடீரென ஒரு நதிக்கிளை பெரியநதியோடு சேராது எங்கேயோ, பல காரணங்களால் மடிந்து போவது முண்டு. அந்தநதியின் சாவிற்கு சமூகக் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்று ஆராய்வதே நவீன அறிவிய லின் சமூக வரலாற்றுக்கு மிகப் பெரிய சவாலாக அமைகிறது. நமது தமிழ்க் கணிதச்சுவடிகளின் கணிதம் நவீனக் கணிதத்துடன் இணைந்ததா என்ற தேடலில் எந்த ஒரு தடமும் எனக்கு கிட்டவில்லை.

இச்சுவடிகளின் பதிப்பு வரலாற்றை உற்று நோக்கினால் ஒருவேளை இதற் கான சமூகரீதியான காரணங்கள் கிடைக்கலாம் என்று நினைத்தேன். ஏனெனில் சுவடிகள் பதிப்பு அச்சு நூல்களாக வெளிவரும்பொழுது அதன் அடக்கம் சார்ந்த மாற்றங்களை கண்டு கொள்வதின் மூலமாக அறிவுத் தளத்தின் மாற்றங்களையும் புரிந்து கொள்ளலாம் என்ற உத்தி கை கொடுக்கலாம் அல்லவா?

எண்சுவடிகளின் பதிப்புவரலாற்றைப் பொருத்தவரை தமிழ் எண்களையும், எண் குறியீடுகளையும், அப்படியே சுவடியில் இருப்பதுபோல் அச்சிடப் பட்டு எண்சுவடிகள் 19ம் நூற்றாண்டு முழுவதிலுமாக வெளியிடப்பட்டன. சிறுநகரங்களில் இருந்து வெளிவந்த இந்தப் பதிப்புகளுக்கும் ஓலைச்சுவடி களுக்கும் எந்த வித்தியாசமும் தென் படவில்லை. 1830களில் சரஸ்வதி பதிப்பகம் பதிப்பித்த எண்சுவடித் துவங்கி 1930கள் வரை தமிழ் எண் சுவடிகள் தஞ்சாவூர், திருவள்ளூர், வேதாரண்யம், கும்பகோணம், சிதம்பரம் போன்ற இடங்களிலிருந்து வெளிவந்தன. குறிப்பாக இவற்றின் பல பதிப்புகளுக்கு பின்னணியில் சைவ மடங்கள் பல பொருளாதார ரீதி யாக உதவியது தெரிய வருகிறது.

ஆனால் ஒரு வரலாற்று மாணவ னுக்கு என்ன ஆச்சரியமாக உள்ளது என்றால் ஏதாவதொரு பதிப்பில்,ஏதேனுமொரு வகையில் இத்தகைய பதிப்புகள் தம் ஊரிலேயே அவர்களின் சூழலிலேயே அறிமுகப்படுத்தி நிறுவனப்படுத்தப் பட்ட கல்வியில் மையமான நவீனக் கணித வழிமுறைகளைக் குறித்து ஒரு குறிப்புகூட சொல்லாமல், இந்த எண் களுக்கும் நவீனப் பள்ளிகளில் பயிற்சி யளிக்கப்படும் கணிதத்திற்கும் என்ன உறவு என்று குறிப்பிட்டு நான் கண்ட தில்லை. இருவேறு உலகங்களில் இந்த இரு தளங்களும் இயங்கியதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பதிப்புத்துறைக்கு ஆதாரமான வர்களையும் அதை வாங்குபவர் களின் சமூகப்பின்னணியையும் சற்று சிந்தித்தோமானால், அவர்கள் புதிய தாக தமிழ்ச்சமூகத்தில் உருவாகி வந்த ஒரு சிறு முதலாளி சார்ந்த வர்க்கம் என்றே கூறமுடியும். பாடப் புத்தகங் களுக்கு என்று ஒரு மிகப்பெரிய சந்தை உருவாகி வருவதை அவர்கள் நவீன அச்சுத் தொழில்நுட்பத்தின் உதவியு டன் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களின் வியாபார உழைப்புக்கு காலனிய அரசும் துணை புரிந்தது. ஒன்று, அரசு தான் மட்டுமே பாடப்புத்தகங்களை அச்சடிக்க முடியுமென்ற கொள் கையை 1870களில் தனியார்மயப் படுத்தியது. இரண்டாவதாக, திண்ணைப்பள்ளிகளையே அரசுப் பள்ளிகளாக மாற்றும் முயற்சியில் 1820களிலிருந்து அரசு எடுத்து வந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தன.

வண்டிவண்டியாக இப்பள்ளிகளுக்கு சென்ற பள்ளி ஆய்வாளர்கள் திண்ணை வாத்தியார் களை நவீனப் பாடத்திட்டத்திற்கு மாற்ற பலவிதங்களில் எடுத்த முயற்சி, உள்ளூர் மக்களால் எதிர்க்கப்பட்டது. ஏனெனில், மக்களுக்கு உள்ளூர் சார்ந் துள்ள திண்ணைப்பள்ளித் திட்டமே தேவையானதாகத் தோன்றியதே ஒழிய, நவீனப்பாடத்திட்டம் வாழ்க் கைக்கு தேவையான கல்வி அல்ல என்ற எண்ணம் பரவலாக நிலவிய தற்கு பல சான்றுகள் உண்டு. 5 இந்தப் பின்னணியில்தான் காலனிய அரசு, நவீன கணிதப் பாடப்புத்தகங்களின் பின்னிணைப்பு மாதிரி எண்சுவடி வாய்ப்பாடுகளை சேர்த்து சமரசம் செய்து கொள்ள முயற்சி செய்தது. எண்சுவடியின் வடிவமைப்பும் உள்ளடக்கமும் திண்ணைப்பள்ளிக்கு உரித்தான மனக்கணக்கு முறையை சார்ந்தே இருந்துவந்த ஒன்று. அதைப் பற்றி எந்தவொரு புரிதலுமின்றி, மனக்கணக்குப் பாரம்பரியத்தை சந்தைக்கணக்கு என்று பெயரிட்டது ஆங்கிலேய அரசு. மக்கள் எதிர்ப்பை சரிகட்டுவதற்காகவும் திண்ணைப் பள்ளி ஆசிரியர்களை கவர்வதற்காக வும் அரசு பாடத்திட்டத்தின் கடைசிப் பகுதியில் சேர்த்துவிட்டது.

ஆனாலும், தமிழ்ச்சமூக வியாபாரிகள் இரு வாய்ப்பாடுகளையும் அரசு கூறி யது மாதிரியே அச்சிட்டு சந்தையில் இடம்பெற வைத்தனர். இதில் ஒருவர் கூட நவீனக் கணிதத்திற்கும் எண்சுவடி யின் வடிவமைப்பிற்கும் உள்ள உறவு குறித்து யோசித்ததே இல்லையா? எதேச்சையாக, 1825ல் பதிப்பிக்கப் பட்ட முதல் தமிழ் எண்கணிதப் பாடப் புத்தகமான கணித தீபிகை எனக்கு கிட்டியது. பந்துலு ராமசாமி நாயக்க ரால் எழுதப்பட்ட இதன் பாயிரத்தில் நாயக்கர் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் செம்மொழி, சொல்மொழி இரண்டையும் புத்தகத்தில் பயன் படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.6

ஆனால் நாயக்கருக்கு எழுந்த முக்கிய சிக்கல் வேறுவகையானது. தமிழ் எண் களில் பூஜ்யத்திற்கு குறியீடு கிடை யாது. ஆனால் வாய்மொழியால் வடி வமைக்கப்பட்ட எண்முறை என்ப தால் பூஜ்யக்குறியீடு இல்லாமலேயே பெரிய எண்களுக்கான குறியீட்டைக் கொண்டது. உதாரணமாக, பத்துக்கு ய என்றும் நூற்றுக்கு ள என்றும் குறியீடு இருந்ததே ஒழிய 0 என்ற குறியீடு இல்லை. ஆனால் இந்தக் குறியீட்டு அமைப்பிற்கும் எண்தான கொள்கைக்கும் முக்கிய உறவுண்டு. அதாவது ஒரு எண்ணின் இடப்பக்கத் தில் அவ்வெண்ணின் மதிப்பு பத்து மடங்கில் கூடும் என்றும் அதுவே வலப்பக்கத்தில் சென்றால் பத்து மடங்கு குறையும் என்றும் சொல்லக் கூடிய எண்தானக் கொள்கை தமிழ்க் குறியீட்டு அமைப்பில் இல்லை. ஆனால் தமிழ் எண்களின் வாய்மொழி உச்சரிப்பில் இது அமைந்துள்ளது. இந்த விவாதத்திற்கு நாயக்கர் செல் லவே இல்லை. மிக சுலபமாக அவர் மாணாக்கர்களுக்கு கூறியது என்ன தெரியுமா? எண்தானம் முக்கிய கணிதக்கருத்து. எனவே, நீங்கள் அதை கடவுளின் விதியாகக் கருதி அதை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி ய என்ற பத்துக்கான குறியீட்டை க0 (10) என மாற்றி புத்தகத்தை கம்பெனி யின் மூலமாக வெளியிட்டார்.

வரலாற்று மாணவனுக்கு என்ன தோன்றும்? இம்மாதிரியான கணித மரபுகளின் சந்திப்பில்தான் புதுவகை யான உரையாடல்கள் சாத்தியமாகி மரபுகள் தம்மை செழுமைப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி உலகக் கணித மரபையே வலுவடையச் செய்யும் என்ற உணர்வு எழுமல்லவா? ஆனால் அந்தத் தருணம் நழுவி விட் டது. தமிழ் எண்கணித முறைக்கும் ஐரோப்பிய எண்கணித முறைக்கும் உள்ள உறவு முறைகள் பற்றி எவ்வித விவாதமும் உரையாடலும் அந்தச் சூழலில் நடை பெறவில்லை. உரையாடலுக்கும் விவாதத்திற்கும் எல்லாவிதமான சாத்தியங்களிருந்தும்,மொழி ஆளுமை குறித்து இருந்த அக்கறை கணிதமரபுகள் குறித்து இல்லாமல் போய்விட்டது.

ஒரே ஒருவர் மட்டும் தன் கல்விப் பின்னணி, சுயமுயற்சி காரணமாக எண் சுவடியை நவீன கணிதத் தேவைக் கேற்ப முற்றிலும் சீரமைத்து எண் விளக்கம் என்று பெயரிட்டு, தான் கற் பித்த சில பள்ளிகளில் பயன்படுத்தி யிருக்கலாம் என்பதை வேதநாயகம் சாஸ்திரியாரின் கையெழுத்துப் பிரதி யான எண் விளக்கம் சுட்டிக் காட்டு கிறது. இருப்பினும் இது வரலாற்றின் பார்வைக்கு கிட்டாமல் ஒரு சிறிய ஆவணக் காப்பகத்தின் பெட்டியில் துவக்கத்திலிருந்தே முடங்கிக் கிடந்த தேயன்றி பொது வெளிக்கு வந்ததே இல்லை.

கணக்கதிகாரச் சுவடிகளுக்கு சுவாரஸ் யமான வரலாறுண்டு. 19ஆம் நூற் றாண்டு முழுவதிலும் கணக்கதிகாரம் அச்சுப் பதிப்புக்குள்ளாகியது. முதன் முதலில் 1854ல் தஞ்சையில் பதிப் பிக்கப்பட்டது. பின்னர், அதே சுவடி 1899, 1938ல் வெவ்வேறு பதிப்பகத் தாரால் வெளியிடப்பட்டது. 1958ல் சைவ சித்தாந்தக் கழகம் ஒரு பதிப்பை வெளியிட்டது. 1998ல் தஞ்சை சரஸ் வதி மகால் நூலகம் ஒரு தொகுப்புப் பதிப்பை வெளியிட்டது. 1958 கழகப் பதிப்பின் முன்னுரையில் சுவடியின் ஆசிரியர் அறியாதவர் என்று குறிப் பிடப்பட்டுள்ளார். ஏன் தெரியுமா? கணக்கதிகாரப் பாயிரத்தில் நூலாசிரி யர், பிற மொழியிலிருந்தும் சில கணக்கு வழிமுறைகள் தமிழுக்கு வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டி யதால். 1998 சரஸ்வதி மகால் பதிப்பு சிறு உரைகளை ஒவ்வொரு கணித வெண்பாவிற்கும் வழங்கியுள்ளது. ஆனால் 1854 துவங்கி 1998 வரை எந்தப் பதிப்பும், எந்த முயற்சியும் கணக்கதிகார நூல்களிலுள்ள கணித வழிமுறைகளுக்கும் நவீனக் கணிதத் திற்கும் என்ன உறவு இருக்கக்கூடு மென ஒரு சூசகமான கேள்வியைக் கூட எழுப்பியதில்லை என்பது தெளிவான உண்மை.

இது சற்றே வியப்பூட்டக்கூடிய விசய மில்லையா? 19ஆம் நூற்றாண்டு முழு வதிலும் நவீனக் கணிதத்தில் பயிற்சி பெற்று வேலைக்குச் சென்றும், கணித ஆய்வில் நிறையபேர் ஈடுபட்டுள்ள னர். அதில் ஒருவர்கூட தன் சமூகத் தின் பாரம்பரியத்தை நவீனத்துடன் எதிர்கொண்டு அறிவுப்புலத்தை நோக்கவேயில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? ஆவணக்காப்பகத் திற்குச் சென்றால் எத்தனைபேர் நவீனக் கணிதம் பயின்றார்கள் என்ற எண்ணிக்கை கிடைத்துவிடும். யார் என்ன பணிக்குச் சென்றார்கள், யார் யார் கணிதத்துறை தொடர்புடன் வாழ்ந்தார்கள் என்றுகூட ஆவணக் காப்பகம் கூறிவிட்டது. அதில் சிலர், அகில இந்திய அளவில் இந்திய கணித மரபுக்கும் ஐரோப்பிய கணித மரபிற்கு முள்ள நட்புறவை, வேறுபாடுகளைப் பற்றி எழுதியுள்ளனர். ஆனால் அத்தகு முயற்சிகள் பெரும்பாலும்,ஒரு தேசிய வாத அரசியல் தேடலின் அங்கமாக, தேசத்தின் உயர்ந்த மரபுகளின் தோற்று வாய்களைத் தேடித்திரியும் முயற்சி களில் ஒன்றாகவே அமைந் தது

ஆனால் நவீனத்திற்கும் பாரம்பரியத் திற்கும் அறவே உரையா டல் இல்லை என்றும் ஆணித்தரமாக கூற முடியாது. ஏனெனில் 1920களில் சென்னையில் இருந்த அரிய கணித மேதைகளில் ஒரு வரான எம்.டி.நாரணயையங்கார் கணித மாணவன் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எதைப் பற்றி எழுதி னார் தெரியுமா? ஒரு வைணவ பிராமண வாழ்வின் வடிவ கணிதத் தேற்றம். இக்கட்டுரையில், தன் கணிதத் தொழிலுக்கும் சடங்குசார் செயல்பாட்டின் மூலம் அதிகாரம் பெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அறம்சார் வாழ்விற்குமுள்ள உறவை மிக அன்னியோன்னியமாக சித்தரித் துள்ளார். நவீனத்திற்கும் பாரம்பரியத் திற்குமாக உரையாடலின் பரிமாணங் கள் எப்படிப்பட்டதாக தமிழ்ச் சமூகத் தில் இருந்தது என்பதைச் சுட்டவே இவற்றை குறிப்பிடுகிறேன்.

ஏன், இந்த மிக அரிய தமிழ்க்கணித மரபு எவரின் கண்ணுக்கும் அகப்பட வில்லை என்ற கேள்வி உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஐரோப் பிய இந்தியவியலாளர்கள், கிறித்துவ ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தேசியத்தை வரலாற்றியல் மூலமாக கட்டமைத்தவர்கள் என்ற பலதரப் பட்டவரின் பார்வைக்கு கணக்கதி காரம் அறவே தென்படவே இல்லை. இது ஏதோ ஒரு பெட்டியில் முடங்கிக் கிடந்த சுவடி என்றால்கூட நியாயம் உள்ளது. ஆனால் மிகப்பரவலாக கிடைத்த இந்நூல் நவீனத்தின் வரை யறைக்குள் அகப்படாமலேயே போன தென்பது தமிழ்ச்சமூக வரலாற்றில் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விக்கு ஆதாரமாக விளங்கும்.

மற்றொரு சுவாரஸ்யமான உதாரணம். 20ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் அரசு முன்முயற்சியில் சில முக்கியச் சுவடிகளை செம்பதிப்பு செய்வதென கமிட்டி போட்டு முடிவுசெய்த பின்னர் 1951ல் திருமயிலை சைல சர்மா அவர் கள் கணக்கதிகாரம் நூலை ஒத்ததொரு சுவடியை ஆஸ்தான கோலாகலம் என்ற பெயரில் வெளியிடுகிறார்.10 முதல் 20 பக்கங்களுக்கு அவர் சிறந்த பதிப்பாளராக மூலநூலிலுள்ள தமிழ்க் கணிதச் செய்யுட்களுக்கு உரை எழுதி உதாரணம் தந்து விளக்குகிறார். பின் திடீரென அடுத்த 80 பக்கங்களுக்கு வட்டத்தின் விட்டம் குறித்த ஒருபகுதி வரும்பொழுது, அதை ஒருவிதியை வைத்துக்கொண்டு பை) என்பதன் கொள்கைக்கு விளக்கமளிக்கும் வகை யில் ஆரிய பட்டர், பிரம்மகுப்தர் என்று போய் கடைசியில் கணக்கதிகா ரத்தை இந்தியக் கணித நூலாக சித்தரிக்கிறார். இங்கே தமிழ்நூல் இந்திய நூலாகிவிட்டது. சைவ சித் தாந்தக் கழகத்திற்கோ, மூலநூலின் ஆசிரியர் தமிழ்க் கணிதத்திற்கும் பிற மொழிக்கும் சம்பந்தமுண்டு என்று தன் பாயிரத்தில் குறிப்பிட்டதாலேயே அவர் அறிவிலியாகி விட்டார். மறுபக்கம், இராகவையங்கார் வெளி யிட்ட செந்தமிழ் பத்திரிகையில் 1904ல் முத்துத்தம்பிப்பிள்ளை என்ப வர் தமிழ்தான் உலகத்திற்கே எண் களை கொடுத்தது என்ற மிக மேலோட்டமாக வாதிடுகிறார்.11

ஆக, உலக அறிவியலுக்கே தோற்று வாயாக தூயத் தமிழ்ப் பாரம்பரியமே என்று ஒரு தமிழ் நடுத்தர வர்க்கம் இயங்கிவந்த அதே சூழலில் அதே வர்க்கத்தை சார்ந்த மற்றொருப் பிரி வினர் உலக அறிவியலின் தோற்று வாயாக இந்திய நாகரிகமே என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் காலந்தான் யாருக்கு யார் பெரியவர், யாருக்கு யார் தூயவர் என்ற காலக் கட்டம். தமிழ்ச்சமூகத்தில் சர்ச்சைகள் நிறைந்த 20 ஆம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளின் காலம்.

இது கணிதத்திற்கு மட்டும் குறிப்பான வரலாறு அல்ல. தமிழ்ச் சமூகம் எந்த அறிவியல் துறையை எதிர்கொண்ட போதும் இதுவே நடந்துள்ளது. நவீன அறிவியலை விமர்சனப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு மாறாக, தமிழ்ச் சமூகம் அதன் ஈடுபாட்டை மொழி மீது அபரிமிதமாக செலுத்தி வந்துள் ளதோ என்ற கேள்வி வருகிறது. எந்த ஒரு அறிவுத்தளத்தையும் அரசியல் பூர்வமாக, பண்பாட்டுரீதியாக பல சமூகங்கள் காலனியாதிக்கத்தின் போது எதிர்கொண்டு அறிவியலை தமதாக்கிக் கொண்ட அனுபவங்கள் உலக வரலாற்றிலும் நம்நாட்டின் பிற பகுதிகளில்கூட ஏராளம்.12 பாரம்பரிய அறிவுச்சொத்துக்களை காலத்திற் கேற்ப நவீன அறிவியலுடன் ஒப் பிட்டு மேம்படுத்தி பொதுச் சொத்தாக அறிவியலை நிறுவனப்படுத்தி தன் சமூகத்தினரின் மொத்த வளர்ச்சிக்கு வித்திட்ட அரசியல் கண்ணோட்டங்க ளும் முயற்சிகளும் தமிழ்ச்சமூக வர லாற்றில் காண முடியவில்லை. தேடித் தேடி பார்த்ததில் 1907, தமிழர் கல்வி இயக்கம் என்று சென்னையில் உரு வாகி 8வருடங்கள் செயல்பட்ட குழு ஒன்றின் நோக்கம்: தமிழர்களை மேற் கத்திய நாடுகளுக்கு அறிவியல் பயில அனுப்பி வளர்ச்சிக்கு வித்திடுவது என்பது. 1915ல் இவ்வியக்கம் மடியும் வரை ஒருவரைக்கூட அந்த நோக்கத் திற்காக அவர்களால் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியவில்லை.13

அறிவுத்தளத்தை விமர்சனப்பூர்வமாக தகவமைக்கும் பலகூறுகளில் ஒன்றே மொழி என்றில்லாமல் மொழியே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி யாக தமிழ்ச்சமூகத்தின் சமூக வரலாற் றில் உருவாகிறது. வரலாற்றுக் கால உணர்வின் தேவையைக்கூட மறக் கடிக்கச் செய்யும் மொழி சார்ந்த சமூக, அரசியல் ஈடுபாடுகளும் பார்வைக ளும் அறிவியலை விமர்சன வட்டத் திற்கு வெளியிலேயே தழைக்கவிட் டுள்ளன. அறிவியலையும் அறிவுசார் மரபுகளையும் சனநாயகப்படுத்த வேண்டிய அரசியல் அற்றுப்போய் அதற்கான சமூக உணர்வைத் தூண்ட வேண்டிய முயற்சிகளை தொடர்ந்து தமிழ்ச்சமூகம் புறக்கணித்து வந்துள் ளது என்றே கருதுகிறேன்.

ஏன், இன்றும் எண்சுவடிகளும் கணக் கதிகாரங்களும் அப்படியே அச்சுப் பிறழாது வெளியிடப்பட்டுக்கொண்டு தானிருக்கும். தமிழ்ச் சமூகத்தில் கடந்தகாலமும் தற்காலமும் எதிர்கால மும் பலருக்கு மாற்றமே இல்லாத ஒரு நெடியகாலப் பாதையாக, வரலாற்றுக் காலம் என்ற உணர்வு துளியுமின்றியே சிந்தனை மரபுகள் குறித்த சர்ச்சைகள் வலம் வந்துகொண்டுதான் உள்ளது.

பலகாலமாக தமிழ்க்கணித ஆர்வல ராக இருந்து வரும் மதிப்பிற்குரிய ஆசிரியர் செங்கம் வெங்கடாசலம் தமிழ்க்கணித நுணுக்கங்களை நன்கு கற்றுணர்ந்தவர். ஆனால் அவருக்கு தலையாயப் பணியாக முன்னிற்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் தமிழ்க் கணிதத்தின் சுவடுகள் காணப்படு வதை நிச்சயப்படுத்தி அந்த நாகரிக மும் தமிழருக்குச் சொந்தம் என்று நிரூபிப்பதே.15 ஏன் பல்லாண்டுகளாக எந்தவிதப் பலனும் எதிர்பாராமல், தள்ளாத வயதில்கூட வெறியுடன் தமிழ்க் கணிதத்தை பரப்புவதற்கு முயன்று வரும் மதிப்பிற்குரிய புலவர் கண்ணையனுக்கு16 ஆதாரமாக இருக் கும் கருத்து - சமஸ்கிருத மொழியால் தமிழின் வல்லமை அழிந்துவிட்டது, ஆகவே அந்த வல்லமையை மீட்க வேண்டும் என்பதே. பாரம்பரிய கணக்குப்பிள்ளையாக இருந்த புலவர் கண்ணையனுக்கு தமிழ்க்கணித வழி முறைகள் எப்படி நிலத்திலும் உழைப்பிலும் தோய்ந்து வளர்ந்தது, காலனியாதிக்க நிலச் சம்பந்தப்பட்ட தலையீடுகளால் நடந்த மாற்றங்களில் இந்தக் கணித மரபு என்ன ஆயிற்று என்ற அடிப்படையான கேள்வி எழவே இல்லை. மொழியே அவர் முன்னுள்ள பிரதான சவால்.

ஏன், நம் கண்முன் நடுத்தர வர்க்கம் கூட்டம்கூட்டமாக தம் இளம்பிள்ளை களை புதியதாக தோன்றியுள்ள புரோக் கர்களிடம் அனுப்பி வைப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். அபேகஸ் அல்லது கணிதப் பயிற்சி மையங்கள் என்று தெருத்தெருவாக கிளம்பியுள்ள இவற் றில் பயன்படுத்தப்படும் உத்திகள் எண் சுவடிகளிலும் கணக்கதிகாரத்தி லும் மையமான கோட்பாடுகள் என்பதை இந்த பேயாட்டம் ஆடும் நடுத்தர வர்க்கத்தினர் எப்படி அறிவர்? அதற்கு சீன முத்திரை குத்தியதும் பறந்தோடும் இவர்கள், தம் இளம் பிள்ளைகளை வெறித்தனமான சர்வ தேச மூலதனத்தின்-மலிந்த கூலிக்காக மந்தை மந்தையாக- தேவைக்காக திறன் படைத்த உழைப்பாளிகளை உருவாக்கும் இயந்திரத்தில் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியை அடகு வைக்கும் இவர்களுக்கு தமிழ்க் கணித மரபு தெரியவேண்டிய அவசியம் என்ன உள்ளது? உலகளவில் நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் இந்தப் புத்தி பொருந்துமா? அல்லது, இந்த அனுபவத்தில் குறிப்பாக தென்படும் தமிழ்க்கூறுகள் என்ற தேடலில் நாம் ஈடுபட வேண்டுமா?

தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் சந்திப்பு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் மொழியின் மூல மாக மட்டுமே. சமீபத்தில், அறிவியல் தமிழ் என்ற பாடத்தை கட்டாயப் பாட மாக அரசுப்பள்ளிகளில் அறிமுகப் படுத்திய தமிழக அரசு, பிஞ்சுள்ளங் களின் அறிவுத்தேடலுக்கு முற்றிலும் புறம்பாக, அவர்கள் வாழ்ந்து விளை யாடும் சமூகத்தில் புரையோடும் அறிவுக் களஞ்சியத்தை ஒதுக்கிவிட்டு மொழியாக அறிவியலை பயிற்றுவிக் கும் முயற்சி குறித்து என்ன விவாதம் நடந்தது? ஆனால் இது தமிழ்ச் சமூகத் திற்கு புதிதல்ல. 1930களிலேயே தமிழ்ப்பேரகராதி திட்டத்தில் அறிவி யல் சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் முயற்சியில் முதன்மை யான சர்ச்சையாக வெளி வந்தது அறிவியலின் கோட்பாடுகள் அல்ல - மாறாக எந்த மொழி அறிவியலை உள்வாங்கும் திறன் கொண்டது - வட மொழியா, தமிழா? என்பதே.

இந்தப் பின்னணியில் எனக்கு எழும் மிகப் பெரிய கேள்வி: அறிவியல் ஒரு உலகப் பொதுச்சொத்து என்ற வரலாற் றுப்பார்வைக்கும் அதன் உள்ளூர்த் தன்மையை நிர்ணயிக்கும் பலகூறு களுக்கும் எந்தமாதிரியான உறவுகள் இருந்திருக்க முடியும் என்பதே. அறிவியலின் வரலாறு என்று இன்று தனித்தியங்கும் பாடத்துறையின் நியா யமானத் தேடலாக இக்கேள்வி அமைந்தாலும் அறிவியலை பண்பாட்டில் நிறுத்தி, அதன் சமூகத்தளங் களைக் கண்டறிந்து, அறிவியலின் வளர்ச்சியை எதிர்நோக்கும் முயற்சிகள் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருப்பது ஏன்? இக்கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகள் அத்தனை கஷ்டமான காரியமாக ஏன் இருக்கிறது? ஒருவேளை, எந்தப் பண்பாடு, அதன் குழந்தைகளையும் மாணவர்களையும் ஒருசேர அதன் ஒருமித்த பண்பாட்டுச் சூழலில் அறிவுத்தேடலை தோழமை யுடன் அணுக மறுக்கிறதோ, அந்த பண்பாட்டிற்கெல்லாம் அறிவியல் பொதுச்சொத்தாவது கடினம்தானோ? ஊரென்றும் சேரியென்றும் இடத்தை வேற்றாக்கும் சமூகத்தில் பொது என்பது சாத்தியமா? பலகாரணங்க ளால் காலத்தால் உருவாகி நிற்கும் நிறுவனப்படுத்தப்பட்ட அனைத்து விதமான அறிவுத்தேடலுக்கான தளங் களிலும் வேற்று வெளிகள் புரை யோடிக் கொண்டிருப்பதால் தான் அறி வியல் பொதுச்சொத்தாக மறுக்கிறதா?

இதனால்தானே, எதிர்ப்பியக்கங்கள் பல நிறுவனப்படுத்தப்பட்ட அறிவுத் தேடல் தளங்களில் எண்ணிக்கை வாரி யான பிரதிநிதித்துவம், எண்ணிக்கை சார்ந்த அனுமதி என்ற அளவில் தங்களை கட்டுப்படுத்திக் கொள்கின்ற னவோ? கடந்தகால அடக்குமுறை, அனுமதி மறுப்பு சார்ந்து வரும் எதிர்ப் பண்பாட்டு இயக்கங்கள் எந்த மாதிரி யான அறிவுத்தளங்கள் தேவை என்ற கேள்விக்குள் முடங்கிக் கிடப்பது எதனால்? பொதுப்பண்பாட்டுச் சொத் தாக இருக்கவேண்டிய அறிவுத்தளங் களின் அடித்தளத்தை உடைத்து, கேள்விக்குள்ளாக்கி, மாற்றியமைத்து உழைப்பு- பொருட்சார்ந்த செயல் பாடு- அனுபவம் என்பதன் அடிப் படையில் அறிவின் அடித்தளத்தை நிர்ணயிக்க வேண்டிய எதிர்ப் பண் பாட்டு இயக்கங்கள், மீண்டும் மீண்டும் மொழிசார்ந்த கட்டமைப்புக் குள் சிக்கித் தவிப்பது ஏன்?

தமிழின் அரும்பெரும் பாரம்பரியத் தில் தனக்கானத் துண்டைத் தேடி அலையும் ஒருங்கிணைக்கப்பட்ட போட்டியில் அடக்குமுறைக்கும் அனு மதி மறுப்புக்கும் எதிரான இயக்கங் கள் மூழ்கி சரணடைவது எதனால்? அறிவின் அடித்தளத்திற்கு வித்திட்ட உடல் உழைப்புச் சார்ந்த அனுபவத் திற்குச் சொந்தக்காரர்களுக்கு ஒரு மொழியின் தூய்மையை தோள்மேல் தூக்கி பல்லக்கு ஆட வேண்டிய நிர்ப் பந்தம் எதனால் வருகிறது?எழுச்சிக்கு வித்திட்ட மனிதச்சுயங்களின் கோபங் களை, வரலாற்று மாற்றத்திற்கான மனிதச்சுயங்களுக்கு பெயர் மாற்றம் செய்துதான் அறிவுத்தேடலுக்கு அனுமதி கோர வேண்டுமா என்ன?

ஆனாலும் இப்படித் தொடர்ச்சியாக அறிவியலையும், அறிவுசார் மரபு களையும் அரசியல்ரீதியாக பண் பாட்டு ரீதியாக கேள்விக்கு ஆட்படுத் தாமல், வரலாற்றை வெறுத்து வெற்றி காண முயலும் சிறிய எண்ணம் கொண்ட இயக்கங்களும் மாறும். நிறு வனங்களுக்கு அப்பாற்பட்டு நின்று, மனித உழைப்பின் சாராம்சத்தை உணர்ந்து, அதன் சமூகப் பொருளாதார மாற்றங்களில் முழுமையான ஈடுபாட் டுடன் பங்கெடுக்கும் தளங்களில் தான் உலகளாவிய அறிவுச்சொத்து என்ற உயர்சிந்தனை சாத்தியமாகி உள்ளது. இந்த உழைப்பு சார்ந்த தளத்தில்தான் உழைப்புக்குச் சொந்தக்காரர்களை சிதறடிக்கும் சக்திகளுக்கு எதிரான வைராக்கியம் வலுப் பெறுகிறது. எந்தச் சாயத்தை சார்ந்த அரசியல் ஈடு பாடாக இருந்தாலும் சரி, மனித உடல் உழைப்புச் சார்ந்த தளத்திலிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொண்டு உலகத்தளங்களை மறுபுறம் போற்றிக் கொண்டதானது, உழைப்பிற்கும் அதற்கு ஆதாரமான உலகத் தத்துவங்க ளுக்கும் துரோகமிழைக்கும் அரசிய லாகவே அவை இருக்க முடியும்.

இறுதியில் எனக்குப் பிடித்த பெரியாரின் கூற்றைக் கூறி, என் வாதத்தை விவாதத்திற்கு முன்வைக்கி றேன். தமிழ்மொழியின் மேன்மைகள் குறித்து அவர் பேசும்போது, ...நமது ரிஷிகளும் முனிவர்களும், ஆழ்வார் களும், நாயன்மார்களும் நமக்கு அரிய வரலாற்றை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்றால், நம்மால் ஏன் இதுவரை வளைக்க முடியாத ஒரு குண்டூசியை செய்ய முடிய வில்லை?

குறிப்புகள்:

1)கணக்கதிகாரச் சுவடிகள் பல இருப்பினும் நான் படித்த நூல்கள் இவை. சத்தியபாமா கரிமஸ்வரன், கணக்கதிகாரம், தொகுப்பு நூல், தஞ்சை சரஸ்வதி மஹால் பதிப்பு எண் 388, தஞ்சாவூர், 1998. பி.சுப்பிரமணியன், கே.சத்தியபாமா, கணிதவியல் பகுதி-மி, மிமி ஆசியவியல் நிறுவனம், சென்னை,1999 மற்றும் திருமலை சைல சர்மா, ஆஸ்தான கோலாகலம், சென்னை,195

2)மேற்கூறிய பதிப்புகளில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். இவற்றிலுள்ள பல கணக்குகள் இன்றும் கிராமப்புறங்களில் விடுகதைகளாக வலம் வருகின்றன.


3) திண்ணைப்பள்ளிக் கூடங்கள் குறித்த ஒரு சமூக வரலாறு இன்றும் இல்லை. ஆனாலும் அவற்றின் பரவலான செயல்பாடு குறித்து பல்வேறு ஆதாரங்களைத் தொகுத்து வழங்கியது, Dharampal, The Beautiful Tree Indigenious Indian Education in the Eighteenth Century, Other India Press, Goa 2000


4)இதுமாதிரியான பார்வையோடு அறிவியலின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம் என்று ஆழ்ந்த ஆய்வுப் புலத்துடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஆங்கில விஞ்ஞானி மற்றும் வரலாற்று ஆசிரியர், ஜோசப் நீட்ஹாம் அவர்கள்.

5) இது குறித்து ஆய்வேடுகள் இதுவரை இல்லை. எனினும் சென்னை ஆவணக் காப்பகத்தில் பல சான்றுகள் கிடைக்கும். உதாரணத்திற்கு, Evidence Taken before the Madras Provincial committee of Education. Government of Madras 1881.


6) பந்துலு ராமசாமி நாயக்கர், கணித தீபிகை, சென்னை 1825, பக்.6

7) வேதநாயகம் சாஸ்திரி, எண்விளக்கம், கையெழுத்துப் பிரதியான இது பெங்களூரில் உள்ள United Theological Center ஆவணக்காப்பகத்தில் கிடைக்கும்.


8) A.A.Krishnasamy Ayyanger. A Peep into Indian Mathematical Past. The Educational Review. Vol. 27, no.2, Feb. 1921 and vol. 28, Nos. 1-12, Jan-Dec 1922.


9) M.T.Naraniengar, The Geometrical Projection of the Life Sketch of a Vaishnavite Brahmin, Mathematics Student. Vol. I. No. 1, 1933

10) திருமலை ஸ்ரீ சைவ சர்மா, ஆஸ்தான கோலாகலம், சென்னை கீழ்த்திசை சுவடியியல் நிறுவனம், 1951, சென்னை.


11)ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை, தமிழ் உலகிற்கு அளித்த எண்கள், செந்தமிழ், பக்.2. 1904, 11. 120 -124.

12)இந்திய அனுபவங்கள் குறித்து தெரிந்து கொள்ள, Dhruv Rama & S.Irfan Habib. (ed).Domestication Modern Sciences. A Social History of Science and culture in Modern India. Tulika Books. Delhi.2004

13)இதே காலக்கட்டத்தில் தமிழில் வெளி வந்த விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் இதுகுறித்த தகவல்கள் கிடைக்கும். இந்த இதழ் சென்னை ஆவணக் காப்பக நூலகத்தில் உள்ளது.

14) இதற்கான பலவிதச் சான்றுகளை தற்கால தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிவரும் சிந்த னைகளைக் கொண்டு தெரிந்து கொள்ள லாம். முற்போக்கு இயக்கங்களும் பண்டையத் தமிழ் என்ற கற்பிதத்தில் மாட்டிக் கொண்டு, அதை தெரிந்து கொள்ள முகாம்கள் நடத்தி வருவது இதற்கு முக்கிய சான்று.

15) புலவர் வெங்கடாசலம் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் வசித்து வருகிறார். தமிழ்க் கணித மரபு குறித்து இடைவிடாத ஆர்வத்து டன் தொடர்ச்சியாக எழுதியும் பல இடங் கள் சென்று அறிமுகப்படுத்தியும் வருகிறார். அடிப்படையான தமிழ்க் கணிதத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியரும் அவரே.

16)புலவர் கண்ணையனை பலருக்கு தெரிந்திருக்கலாம். திண்டிவனம் அருகில் உள்ள மயிலத்தில் வசித்து வரும் இவர் பலவிதங்களில் உற்சாகத்துடன் ஈடுபாடு உள்ளவர். 18ஆம் நூற்றாண்டு கிராமக் கணக்கு சுவடிகள் குறித்து ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்தவர். தமிழ்க் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றவர். என் ஆய்விற்கு பலவிதங்களில் உற்றத் துணை யாக இருந்து வருபவர்.

17)வெ.ஆனைமுத்து,பெரியார் சிந்தனைகள், பா.மிமி, திருச்சி, 1974, பக்.1122.