Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை - ஊடிழைப்பிரதியியல் நோக்கு
ஹெச்.ஜி.ரசூல்
.

பகுதி: 1

கொலை செய்யப்பட்ட உருவங்கள்

காட்சி:1

ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் நிகழ்ந்தது. அந்த உருவங்கள் சிலைகள் என்றழைக்கப்பட்டன.பதூயீன்கள், குரைசிகள், ஹதைல், ஸிமிட்டிக், பழங்குடிகளின் நம்பிக்கைகள் அதில் பொதிந்து கிடந்தன. மழையை பெய்விக்குமென ஒரு உருவம், நற்பலனைதருமென பிறிதொரு உருவம், வளமையைப் பெறுமென ஒரு உருவம், சக்திக்கு பிறிதொரு உருவம் ஹோபல், மனாத், லாத், உஜ்ஜாஉருவங்களாக, சிலைகளாக காட்சியளித்தன.

தொலைதூர அரூப கடவுள் தத்துவத்தின் மீது கலகம் செய்து மனித உயிர்ப்பின் ரூபம் கிறிஸ்துவிடம் உருவம் பெற்றது. தந்தையின் பிள்ளைகளாய் மனித குலத்தின் மாந்தர்கள் ஆயினர். தந்தைக் கடவுள் உருவம் பெற்றார். வணங்குவதற்கு மட்டுமே உருவங்களென்ற குறைத்தல்வாத கணிப்புகள் தீவிரமடைந்தன. உருவத்தின் கலைநுட்பங்கள் இறையியலின் காலடியில் விழ்ந்து கிடந்தன. நபி முகமதுவின் ஏகத்துவ வார்த்தைகளில் உருவமற்ற அல்லா வடிவம் பெற்றது. கஅபதுல்லாவில் காட்சியளித்த உருவங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள், நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் உருவமற்று அலைந்தன. மண்ணால் படைக்கப்பட்ட நம்பிக்கையின் முதல் மனிதன் ஆதத்திற்கு உருவம் உண்டு என்ன உருவமென்பது மட்டும் புதிராக மிஞ்சுகிறது.உருவமற்ற அல்லாவைச் சொன்ன நபிமார்களுக்கு உருவம் உண்டு. நபிமுகமதுவின் உருவம் எப்படி இருந்திருக்கும்?

காட்சி:2

அரபுமண்ணின் நஜ்துவில் முகமதுபின்சவுது ஆட்சியாளர், வகாபிச இயக்க முன்னோடி முகமது இப்னு அப்துல் வகாபின் வழிகாட்டுதலில் 1801ல் ஈராக்கின் கர்பலா மீது படையெடுத்து நபிமுகமதுவின் பேரர் இமாம்அலியின் புதல்வர் இமாம் ஹ÷சைனின் நினைவுச் சமாதி அடையாளங்கலையும் அழித்தொழித்தனர். 1802ல் மக்காவின்மீது படையெடுத்து நபிமுகமதுவின் மகளான பாத்திமா நாயகத்தின் நினைவிடங்களையும் தரைமட்டமாக்கினர். சமாதியில் தென்பட்ட உருவங்கள் நினைவின் தடங்களிலிருந்து துடைத்தெறியப்பட்டன. இமாம் ஹ÷சைனின் உருவம் எப்படி இருந்திருக்கும்? அன்னை பாத்திமாநாயகி உருவம் எப்படி இருந்திருக்கும்?

காட்சி:3

புத்தனின் உருவம் ஒளி பொருந்தியது. போதி மரத்தடியில் மனதை சாந்தப்படுத்திய அந்த உருவம் துலக்கமாய் சிரித்தது. ஆப்கன் மண்ணின் தலிபான் ஆட்சியாளர்கள் பாமீனியனின் வரலாற்றுச் சின்னங்களை, புத்தனின் உருவங்களை உடைத்தனர்.

காட்சி:4

ஜாகிர்ராஜாவின் கதையாடலில் இடம்பெறும் கருத்தலெப்பை உருவங்களின் அழகுகளை நேசிப்பவன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் உருவங்கள் விலக்கப்பட்டதாய் நிகழ்வதால் அதன்மீது தன் நுண்ணிய உரையாடல்களை செய்கிற மனோபாவம் வெளிப்படுகிறது. பால்ய காலத்தில் துவங்கிய விடைகாணமுடியாத கேள்விகள், முற்றுப் பெறாத வாக்கியங்கள் இவற்றில் நிறைய உண்டு.

நீளமான ஐந்தடிக் கொம்பின் நுனியில் ஜவ்வுமிட்டாய் உருண்டைப் பிடித்து ஊரை, தெருவை, சுற்றி வரும் மிட்டாய் அமீதுவிடம் உருவம் செய்த மிட்டாய் வாங்கி வீட்டிற்கு வரும் போது உருவமா செய்யிறத வாங்கிட்டு வாறியே உருவம் நமக்கு ஆகுமாடா என அம்மா கேட்ட கேள்விக்கு கருத்த லெப்பையின் பதில் நீயும் நானுங்கூட உருவம்தானம்மா என்பதுதான்.

மிட்டாய் அமீதுவின் கைவண்ணம் விதவிதமான உருவங்களில் ஜவ்வுமிட்டாய்களை புனைந்து விற்கிறது. கடிகாரம், மோதிரம், பஸ், சைக்கிள், பாம்பு, தேள் என பலவிதமான பொருட்கள், வாகனங்கள், பூச்சிகள், விலங்குகள் குழந்தைகளை ருசி கூட்டி மகிழவைக்கும் கருத்தலெப்பை இப்படியான பொழுதொன்றில் மிட்டாய் அமீதுவிடம் செய்யக் கேட்டது சைத்தானின் உருவம் அதிர்ச்சியுற்ற மிட்டாய் அமீது கைதேர்ந்த கலைஞன் சைத்தானுக்கு உருவம் தர பிரயத்தனப்பட்டு கலைத்து குலைத்து கடைசியாக உருவாக்கிய சைத்தானின் உருவத்தைப் பார்த்து தானே பயந்து போனான்.

கருத்தலெப்பையின் அப்பாவைப் பெற்றவள் ராதியம்மா. வயது முதிர்ந்த அவள் தஸ்பீகுமணி உருட்டியவாறு தொழுகை வணக்கத்தை மேற்கொள்பவள். கருத்தலெப்பை சின்ன வயதில் பயப்படுகிற காலத்தில் ஓதி ஊதுவாள் உடலோடு உறைந்து கிடந்த ஷைத்தான் பயந்து அலறி ஓடுவதை கைநீட்டி காண்பிப்பாள். அவள் காட்டியதிசையில் இருட்டு மட்டுமே தெரிந்திருக்கிறது. ராதியம்மாவுடனான கருத்தலெப்பையின் உரையாடல் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அறியப்படாத நுணுக்கங்களை லெப்பைக்கு கற்று தந்திருக்கிறது.

கருத்த லெப்பையின் மிக முக்கிய உரையாடலில் ஒன்று கனவுபற்றியது. ராதியம்மாவிடம் கேட்ட ஒரு அதிசயிக்கத்தக்க கேள்வி நாயகம் ரசூலுல்லாவை கனவில் நீங்க பார்த்ததுண்டா என்பதுதான். ஆம் பார்த்திருக்கேன் என்ற ராதியம்மாவின் பதில் கருத்தலெப்பைக்கு அதிர்ச்சியூட்டுகிறது. எப்படி ராதியம்மா நாயகத்தை கனவுல பார்க்கமுடியும் என்பதற்கு ராதியம்மா மரபு வழிப்பட்ட நம்பிக்கையை பதிலாகத் தருகிறாள்.

குரான்ல முஜம்மில் சூராவை தினமும் இஷா தொழுகைக்கு அப்புறம் தொடர்ந்து ஓதிவரணும். அப்புறம் நாயகத்தைப் புகழ்ந்து ஓதுற தாஜ÷ஸ் ஸலவாத்தை ஓதணும் ஒதுனா நாயகத்தோட தரிசனம் கனவுல கிடைக்கும். நாயகம் எப்படி இருப்பாங்க என வினவிய குரலுக்கு ராதிம்மா நபிகள் நாயகத்தின் தோற்றம் பற்றியவர்ணனைகளை விளக்க விளக்க கண்களை இறுக மூடிக் கொண்ட கருத்தலெப்பையின் மனம் நாயகத்தை வரைந்து கொண்டிருந்தது. ராதியம்மாவிற்கு தெரியாத ரகசியம் அது. விடிந்ததும் மனதில் தீட்டிய நபிகள் நாயகத்தின் உருவத்தை காகிதத்தில் பதிவு செய்து அமீதுவிடம் ஒடுகிறான் கருத்தலெப்பை, மாறுபட்ட மன உலகங்களின் விசித்திரமான பதிவு இது.

மிட்டாய் அமீது நுட்பம் பொருந்திய கலைஞன் பிறிதொருநாளில் கருத்தலெப்பையைப் பார்த்து பதட்டத்தோடு பேசுகிறான் காக்கையும் குருவியும் செஞ்சு பொழக்கிற என்னப் போயி ஏதேதோ செய்ய சொல்லிட்டியே நீ வரஞ்சு தந்த படத்தைப் போலவே உருவம் செஞ்சாச்சு. ராவுபடுத்தா தூக்கம் வரல்லடா கண்ணுக்கு முன்னாடி அந்த உருவம் வந்து நிக்குது.

மிட்டாய் அமீது கருத்தலெப்பையை அழைத்து தொறகுச்சியால் தோட்டத்து வீட்டை திறந்து அந்த களிமண்ணால் உருவாக்கிய சிலையை நெஞ்சம் படபடக்க காட்டுகிறான். ராதியம்மா சொல்லச் சொல்ல கருத்தலெப்பை வரைந்திருந்த நாயகத்தின் உருவம் அது. அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் சிலைக்கு அருகில் கருத்தலெப்பை நெருங்கிவர திடீரென சிலைமீது மழைத்துளிகள் விழுகின்றன. கூடவே எங்கிருந்தோ பல திக்குகளிலிருந்து வீசப்பட்ட கற்கள் அவன் மீது விழவிழ ரத்தம் பீறிட வீழ்கிறான். கொட்டும் மழையில் சிலை கரைந்து கொண்டிருக்கிறது.

மழையில் கரைந்த நபி முகமதுவின் உருவம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கால இஸ்லாமிய வரலாற்றின் ஓவியம் சிற்பம்சார் கலாச்சார இழப்பின் குறியீடு இது முஸ்லிம் மனோபாவத்தின் மறைக்கப்பட்ட அமுக்கப்பட்ட ஒன்றின் மீதான ஏக்கம். அதேநேரம் உச்சப்பட் காதலின் ஈடுபாட்டோடு நபிகள் நாயத்தின் உருவத்தை வரைந்து உருவாக்கிய கலைஞனின் மீது தொடுக்கப்படும் வன்முறையாகவே பல திக்குகளிலிருந்தும் வீசப்பட்ட கற்கள் அர்த்தம் பெறுகின்றன. ஹஜ் சடங்குகளில் ஒன்றான ஷைத்தானின் மீது கல்லெறிதல் இங்கு மறுவடிவம் பெறுகிறது. வீசப்படும் கற்களின் விளைவாக நிகழ்ந்த மரணம் யதார்த்தத்தை புனைவாக மீள்பதிவு செய்கிறது. இஸ்லாத்தின் சமய அதிகார வரம்புகளை மீறும் கலைமனம் எதிர்கொள்ளும் மரணமே இது.

பகுதி: 2

விளிம்பு நிலை எழுத்தின் புனைவு அரசியல்

இஸ்லாம் நிறுவனச் சமயமாக மைய நீரோட்டம் சார்ந்து இயங்குகையில் அடித்தள, விளிம்புநிலை மக்கள்திரளின் நம்பிக்கைகள், மரபுகள், தொன்மங்கள் பரந்துபட்ட அளவில் வெகுஜன இஸ்லாத்தில் இடம் பெறுகின்றன. இது அதிகார பூர்வ இஸ்லாத்திலிருந்து விலகியும் அதே நேரத்தில் பூர்வீக இஸ்லாத்தில் பிரிக்கமுடியாத அளவில் நெருங்கிய பகுதிகளை உள்வாங்கியும் கொள்கிறது. குர்ஆனின் அல்பலக் அத்தியாயம் முடிச்சுபோட்டு ஊதும் பெண் செய்த சூனியத்தால் துன்பம் நிகழ்வதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மீட்சிபெற இறையிடம் பாதுகாவல் தேடச் சொல்கிறது.

அறிவுப்புலனுக்கு உட்படாத வஹி, (தூதுத்துவம்) ஜின் கூட்டம் (சைத்தான்) மலக்குமார்கள்(தேவதூதர்கள்) லௌஹல் மஹ்பூழ் (மந்திரவாதிகளின் சூனிய வித்தைகளை எதிர்கொண்ட மூஸô நபியின் அஸô (கைத்தடி) நபிமார்களின் முஃஜிசாத்துகள் எனும் அதிசயசெயலர்கள் அனைத்தையும் குர்ஆன் முன்வைக்கிறது. முஸ்லிம்களின் ஹஜ் கடமைகளான ஸபாமர்வா குன்றுகளை வலம்வருதல், ஷைத்தானை கல்லெறிதல், ஆடு, ஒட்டகம் பலிகொடுத்தல், தலைமுடிகளைந்து மொட்டை போடுதலும் மைய இஸ்லாத்தின் செயல் வடிவங்களில் உண்டு.

நபி முகமது நோயுற்றிருந்தபோது சூன்யத்தால் இது ஏற்பட்டதென எண்ணப்பட்டது. இறுதியில் பேரீத்ததம்பாளை உறைக்குள் சீப்பிலும் தலைமுடியிலும் பதினொன்று முடிச்சுகள் போட்ட ஒரு மெழுகு பொம்மையில் ஊசிகள் குத்தப்பட்டு ஒரு கிணற்றின் அடியில் கல்லுக்கு கீழே சூன்யம் செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்புகடிக்கு, தேள்கொட்டியதற்கு மந்திரித்தல் சம்பங்களும் ஹதீஸ்கள் என்னும் வாய்மொழி வரலாற்றில் பதிவாகி உள்ளன.

மைய இஸ்லாம் கூறும் ஜின் மந்திரித்தல், நாட்டார் நம்பிக்கை மாறுபட்ட விதத்தில் அடித்தள முஸ்லிம்களின் இஸ்லாத்தில் பேசபடுகிறது ஜாகிர்ராஜாவின் விளிம்பு நிலை எழுத்து இத்தகையதான பல நுண் உலகங்களை தமிழ் வாசகனுக்கு வழங்குகிறது.

ஜின்னை வசியப்படுத்தும் நண்ணியம்மா

ஜின்னை வசியப்படுத்தமுயலும் நண்ணியம்மா கருத்தலெப்பையின் அம்மாவைப்பெற்றவள். மாலைநேரத்தில் நண்ணியம்மா மந்திரித்த கயிறை லெப்பை கட்டிக்கொள்வதென்பது ஒரு சாதாரணமான நிகழ்வே. நண்ணியம்மா இஷ்மு மந்திரவேலைகளில் ஈடுபடுபவள். வீட்டுமூலையில் குழிதோண்டி ஏதேனும் ஒன்றை புதைப்பது, விட்டத்தில் பாட்டில்களை தொங்கவிடுவது, தகடுகளில் மந்திரஎழுத்துக்களை பதித்து தாயத்துகளில் அடைப்பது, ஜின்னை வசியம் பண்ண முயல்வது என்பதான செயல்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். கேரளதங்கள்மார்களை, ஜோசியம், ஜாதகம், ராசிபலன் பார்க்க பண்டாரத்தெருவேலு குட்டியை பார்த்து திரும்பும் பழக்கமுள்ளவளாக படைக்கப்படுகிறாள். அதே சமயம் நண்ணியம்மா, ரத்தமூலம் வியாதிக்கு அத்தி தின்னச் சொல்கிறாள். ரத்தப்போக்கு நிற்கும் அவளது மருத்துவக் குறிப்புகள் ஊருக்குள் பிரபலமானதும் குரான் வைத்தியம் சொல்வதும் நண்ணியம்மாவின் மற்றுமொரு பரிமாணம்.

சூபியின் சாபம்

தூய்மை, அணி, வரிசை, அறிஞர், முரட்டுகம்பளி என மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்டும் மனோ இச்சைகளை அடக்கி எளிய வாழ்வின் சின்னமாக கம்பளியை அணிந்த இஸ்லாமிய சித்தர் என்பதான பொதுவான பொருளிலும் சூபி என்ற சொல் பயன்படுகிறது. கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் அடையாளம் காணப்பட்ட எகிப்தில் வாழ்ந்த துன்னுன்மிஸ்ரி, மன்ஸøர் ஹல்லாஜ், கஸ்ஸôலி, இப்னுஅல்அரபி முகியத்தீன் அப்துல்காதர் எதிர் ஜிலானி, காஜா முகினுதீன் சிஸ்தி, ஜலாலுத்தீன் ரூமி உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்ற சூபி தத்துவவாதிகள், சூபிகவிஞர்களாகும். இஸ்லாத்தின் அகம்சார் மறைஞான ஆன்மீக உளவியலின் பரிமாணமாக சூபிசம் தோற்றம் கொண்டு இன்று காதிரிய்யா, சிஸ்தியா, சுக்ரவர்த்தியா, நக்ஷபந்தியா, ஷாதிலியா உள்ளிட்ட பல ஞானவுழி மார்க்கப்பள்ளிகளாக உருவாகியுள்ளன.

சூபி பாடல், சூபி நடனம் வழியாக இஸ்லாமிய ஞானிகளின் உறைவிடங்கள், நபிகள் நாயக பிறப்புக் கொண்டாட்டங்களில் தங்களை வெளிப்படுத்தும் நாட்டார் சூபிகளும் உண்டு. சூபிகள் குறித்த வாய்மொழி வழக்காறுகளிலிருந்து கராமாத்துகள் என்னும் அதிசய செயல்கள் குறித்த புனைவுப்பரப்பும் விரிந்துகிடக்கிறது.

ஜாகிர் ராஜாவின் கதையாடலிலும் இந்த வகையில் ஒரு சூபி பதிவாகிறார். பித்துலெவ்வை குடும்பம் பரம்பரை பரம்பரையாக தீரா மனவியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு இஸ்லாமிய சித்தனான சூபி ஒருவர் போட்ட சாபம் காரணமாக இருந்திருக்கிறது. ஒரு தடவை வெகுதூரத்திலிருந்து நடந்து வந்த சூபி அந்த ஊருக்குள் வந்து குடிக்க தண்ணீர் கேட்க சூபியின் தோற்றத்தைப் பார்த்து தவறாக எடைபோட்டு, அவரை கட்டி வைத்து அடித்துப்போடுகிறார்கள் சூபி அதே இடத்தில் தொழுது ஆண்டவனிடம் துஆ கேட்டு திரும்பிப் பார்த்து பேசாமல் போய்விடுகிறார்.

அவர் ஊர் எல்லையை தாண்டிய மறு நிமிடமே சூபியை கட்டி வைத்து அடித்ததுல முக்கிய ஆளாயிருந்த அப்துல்லா லெவ்வைக்குமண்டைக்கு கிறுக்கு புடிச்சிருச்சு . சட்டையை கிழிச்சு கிட்டு தெருத்தெருவா ஒட்டம் புடிச்சதுனாலதான் பித்து லெப்பைன்னு அவருக்கு பேரு வந்தது. சூபி போட்ட சாபம் அந்த சந்ததியையே இப்பொழுதும் தொடர்ந்து வருகிறதா ஒரு நம்பிக்கை.

சாம்பான் மடம் பாவா

சூபியைப் போல சாம்பான் மடம் பாவா மற்றுமொரு கதாபாத்திரம். ஆரம்பத்தில் பொதுச்சாவடியில் பாவா உட்கார்ந்திருந்தபோது ஒரு பக்கிர் சிலும்பி அடித்து சீர்கேட்டை செய்கிறான் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது பாவா சொன்ன பதில் மாறுபட்டு இருந்தது. பார்வைக்கு பக்கிரியா திரியுற எங்க மூதாதைங்க எல்லாம் நாட்டோட சுதந்திரத்துக்காக உழைச்சவங்க, ஹைதர்அலி, திப்பு சுல்தானுக்கெல்லாம் வெள்ளைகாரன பத்தி துப்பு சொன்ன பரம்பரை, பிச்ச எடுக்கிறமாதிரி வீடு வீடாபோயி டேப்புத்தட்டி தேசபக்தியை தூண்டின ஆளுங்களாக்கும் நாங்க என்பதாக இருந்தது.

அதீத வாழ்வியல் நாட்டம், ஆடம்பர வாழ்வு, பணத்தின் மீதான வெறி சார்ந்த, வாழ்வியலுக்கு கட்டுப்படாமல், இவற்றிற்கு எதிர்திசையில் பற்றற்ற ஒரு பயணத்தை சூபிகளில் ஒரு சிலர் மேற்கொண்டனர் நிறுவனப்படுத்தப்பட்ட சமய மரபுகளுக்கு எதிர் நடவடிக்கைகளாகவும் அவர்களின் பல செயல்பாடுகள் இருந்தன. தங்களது உணர்ச்சிகளை, அறிவை பாடல்களாக வைத்திய நூல்களாக ஓலைச் சுவடிகளில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஒரு சாரார் தன்னை மறத்தலுக்கு போதையை பயன்படுத்தி கனவு நிலையில் சஞ்சாரம்செய்தனர். இறைவனிடத்தில் தன்னை அழித்தலான பனா நிலையை நனவுமன மறுத்தலின் அர்த்தத்தில் கடைபிடித்தனர். இவ்வாறான ஒரு கதாபாத்திரத்தை சகலவித வாழ்வியல் பலவீனங்களோடு சாம்பான் மடத்து பாவாவாக தனது கதையாடலில் ஜாகிர்ராஜா நடமாடவிடுகிறார்.

பாவா நிறைய ஓலைச் சுவடிகளை தோல்பைக்குள் பாதுகாத்தார். சாவடி மைதானத்தில் அஷ்டாவதானம் செய்துகாட்டி மக்களையே மிரளவைத்தார். அவரோடு நெருங்கி இருபவர்களிடம் தத்துவம் பேசி பரவசப்படுத்துவார். நப்ûஸ(மனம்) விட்டுவிடு, நப்ஸின் விருப்பத்திற்கு நீபோனால் நாயாகிவிடுவாய் நாயை துரத்தினாலும் நாக்கை தொங்கவிடும், துரத்தாமலிருந்தாலும் நாக்கை தொங்கவிடும்.

யஜர் வேதத்தில் ஸஷ்பம் சிறிய செடியைப்பற்றி குறிப்பு வரும். மலைப்பிரதேசங்களில் பாறை நிறைஞ்ச இடங்களில் பயிராகும் அந்தச்செடி கஞ்சா, தேவர்களுக்கு நித்திய மூலிகை இந்துவேதங்களில் தேர்ச்சிபெற்ற முஸல்மான் சிலும்பியில் துகள்நிரப்பி தீக்கொழுத்தி உள்ளிழுத்து ஒரு கனவு நிலை சஞ்சாரத்தை செய்பவராக உலவுகிறார்.

நிலவியல் ஒலிகளினூடே ஒரு பயணம்

இயற்கை வாழ்வுக்கும் நவீனமயமாதலுக்கும் இடையே நிகழ்கிற இடைவெளி கருத்தலெப்பைக்கதையாடலின் உள்ளீடாகிறது. பால்யகாலத்தின் ஞாபக அடுக்குகளும் அடித்தளமக்கள் கொள்கிற நம்பிக்கைகளும், பயங்களும் ஜாகிர்ராஜாவின் எழுத்துகளின் பதிவுகளாக மாறிவிடுகிறது. எனவே தான் சில்லென்ற நீரில் தொடைவரைக்கும் கைலியைத்தூக்கி மேடேறிப்போகிற சுகம் பாலத்தில் கால்பதித்து நடக்கையில் கிடைக்குமா என கேள்வி கேட்கவைக்கிறது.

ரம்சானுக்கும் பக்ரீதுக்கும் குத்பாதொழுகை முடித்து இளனிவாங்கி கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனால் அம்மா ஆரத்தி தட்டுடன் வாசலில் நிற்பது நிழலாடுகிறது. பாலம் கட்டுவதற்குள் ஆறு ரெட்டைபலி வாங்கிவிடுமென்ற நம்பிக்கையில் பாண்டியம்மா திடீரென்று மூழ்கி செத்துப்போனபிறகு இரண்டாவது பலி தானாகக் கூட இருக்கலாமென பயங்கொள்ளச் செய்கிறது.

அம்மா ஆணத்துக்காக கருவாடு கழுவிக் கொண்டிருக்கையில் அயிலமீன் கருவாட்டு வாசனைக்காக ஒரு மியாவ் போட்டு ஒடிவரும் ஹிட்லர் பூனை, பள்ளிக்கு நேர்ந்துவிட்ட சேவக்கோழியையும் முழுங்கிட்டு வருவதை மெல்ல பகடி செய்கிறது. குத்பா பள்ளியின் வாகைமரம், சதா பழங்கள் உதிர்க்கும் நவாமரம், வாய்க்காலை ஒட்டி சிவந்த பழங்களை சிதறவிட்டு நிற்கும் அத்திமரம், சாய்ந்து நிற்கும் தென்னைமரங்கள், கிளையில் மைனா உட்காந்திருக்கும் வீட்டுவேம்பு, முருங்கை மரத்தடி எனநிகழும் சித்திரங்கள் நிலவியல் ஒலிகளை புனைவுப்பரப்பாக்க முயல்கின்றன.

முக்கு முருங்கை மரத்தடி குடும்பங்களில் நிகழும் சண்டைக்கு பின் உருவாகும் சமாதானத்தை ஏற்படுத்தும் போதி மரத்தடியாக உருவகம் கொள்கிறது. முருங்கை இயல்பாக இலைகளையும், பூக்களையும் உதிர்க்கிறது. பூ உதிர்ந்தால்காரியம் வெற்றி பெறும், பழுப்பு இலை உதிர்ந்தால் தடையும் தாமதமும் ஏற்படும் என்பதாகவும் இந்த நம்பிக்கைகள் உருக்கொள்கின்றன.

வெற்றிலைக் கொடியால் ஒரு மாலை

விவசாய மண்ணின் ஈரத்தோடு தோன்றும் கொடிக்கால் மாமு ஒரு சமயம் ஏதேனும் ஒரு வரப்புமேட்டில் உட்கார்ந்திருப்பார். வெற்றிலைக்கு நல்ல நிழல்வேண்டி அகத்தியும் கலியாணமுருங்கையும் முதலில் பயிர்செய்து, அகத்தியை தழையவிட்டு ஐந்தாறு அடி வளர்ந்ததும் களிப்பசலை மண்பரப்பி, நீண்டகால் வெட்டி நீர்பாய வசதிசெய்து பிஸ்மில்லா என முதல் கொடியை நடுவார்

சண்முக நதியை தோழனாக்கியது, பாம்புகளின் இச்சாவெறியை பௌர்ணமி வெளிச்சத்தில் காட்டியது, ஒற்றைப்பனை முழுக்க விளக்கு பூத்ததுபோல தூக்கணாங்கூடுகளை, பொன்வண்டுகளை, எலிசேர்த்து வைத்த அரிசிமணிகளை எல்லைச்சாமிகளை கருத்தலெப்பைக்கு சொல்லித் தந்த கொடிக்கால் மாமு மரணித்து கிடக்கிறார்.

கொடிக்கால் விவசாயத்தோடு இயைந்து வாழ்ந்து முடித்த கொடிக்கால் மாமுவின் மரணத்தை கவுரவிக்க வெற்றிலையால் ஒரு மாலையோட நினைத்த கருத்தலெப்பைக்கு துயரமே மிஞ்சுகிறது. முஸ்லிம்களின் இறப்புச் சடங்கில் இவைகளுக்கு இடமில்லாமல் போனது.

வதைபடலம்

சிதைந்துபோன குடும்ப உறவுகளின் சிதிலங்களையும் ஜாகிர்ராஜாவின் நாவல் பரப்பெங்கும் காணலாம். அக்கா ருகியாவை சீர்செனத்திக்கு பயந்து மனவியாதி பிடித்த முக்காகிழவன் பத்ருதீனுக்கு கட்டிக்கொடுத்தது நடந்த துயரங்களில் ஒன்று பித்து லெப்பைக் கூட்டத்தில் சிக்கி சீரழிகிற அக்கா ருகையாவை யார் மீட்டெடுப்பது, எப்படி மீட்டெடுப்பது என்பதே கருத்தலெப்பையின் கேள்வியாக அடிக்கடி மேலெழும்பி வருகிறது. சூனியம் விரவிய வெளவால்கள் பறக்கும் பாழடைந்த கட்டிடத்திற்குள் வாழும் ருகியா, இவள்மீது ஒரு கண்வைத்து ரகசியமாய் காத்திருக்கும் பத்ருதீனின் சகோதரன் ஈசாக் என கதாபாத்திரங்கள் நகர்கின்றன.

ஒரு நள்ளிரவில் அத்துமீறி சாடி ஓடி, பள்ளி கபர்ஸ்தானுக்கு சென்று அங்குள்ள கபுறுகுழியை தோண்ட ஆரம்பித்து, கைகளில் எலும்புகளை எடுத்து வந்த போது தான் தொண்டு சங்கிலியால் பத்ருதீன் கட்டிபோடப்படுகிறான் ஓங்கி கிளம்பும் கூச்சலும், ஈசாக்கின் பிரம்பும் அவனை வதைபடச் செய்கிறது. மரணம் துரத்தும், பத்ருதீனை ருகையா பால சமுத்திரம் கன்னிபீவி தர்காவிற்கு அழைத்துச் செல்கிறாள். தர்கா அபயம் தேடும் விளிம்புநிலை மக்களின் புகலிடமாய் மாறிப்போகிறது.

தன் மார்பகத்தை அறுத்துக்கொண்டவள்

கொடிக்கால் மாமு மனைவி மைமூன் பீவியுடன் குடித்தனம் நடத்தினாலும் வெற்றிலைக் கொடிக்காலில் ஒத்தாசை செய்த சின்னப்பேச்சியுடன் உறவு ஏற்படுகிறது. செத்தாலும் இந்தாளின் மூஞ்சியில் முழிக்கமாட்டேன், என்றைக்கு கருகமணி கட்டுனகுடும்ப பெண்ணை விட்டுவிட்டு தோப்புக்காரி கூட சீவனம் பண்ணுனானே இவன் மாய்யித்து கூட ஆகாது என்றிருந்த மைமூனின் வைராக்கியம்கூட ஒரு கட்டத்தில் தளர்ந்து போகிறது. பாலியல் பிறழ்வுகளுடனேயே இந்த பயணங்கள் நிகழ்கிறது.

கொடிக்கால் மாமுவை சந்தூக்கில் தூக்கி மையத்தாங்கொல்லையில் அடக்க பெருங்கூட்டம் சென்று கொண்டிருக்கும் சமயம் சின்னப்பேச்சி புளித்த கள்ளை செம்பு செம்பாக கணக்கில்லாமல் குடித்து அதே வேகத்தில் ஆற்றிலிறங்கி நெஞ்சு நோக இடித்துக் கொள்கிறாள். பின்னர் போதையின் உச்சத்தில் இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து சேலைகளைந்து தன் ஒரு மார்பகத்தை அறுத்துக் கொண்டு கதறுகிறாள். வாசகனிடம் அதிர்ச்சியை உருவாக்கும் காட்சி இது. கணவன் இறந்துவிட்டால் சிதையில் தன்னுடம்பை மாய்ப்பதில் துவங்கி ஆணுக்காகவே இந்த பெண்ணுடம்பு என்பதாக கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க மதிப்பீட்டின் வெளிப்பாடே இது எனலாம் பாத்துமா, ருகியா, ராதியம்மா, மைமூன்பீவி, சின்னப்பேச்சி, முனியம்மா எனத் தொடரும் பெண்களின் துயரக் கதைகளின் உலகமாக இன்னுமொரு வாசிப்பில் கருத்தலெப்பை வதைபடலங்களாக உருமாறுவதையும் கவனிக்கலாம்.

வெவ்வேறு உலகங்கள்

தமிழ்முஸ்லிம் சமூகம் குர்ஆனையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளையும் பின்பற்றுகிற சமூகமாக கருதப்பட்டாலும் அதன் உள்அடுக்குகளில் தென்படுகிற சமூக படிநிலை மேல்,கீழ் தன்மைகொண்டதாகவே கருதப்படுகிறது. வடஇந்தியச் சூழலில் அஷ்ரபுகள், அஜ்லபுகள், அர்சால்கள் என்பதான படிநிலை வரிசை உறுதிபட காணக்கிடைக்கிறது. பாரம்பரிய தொழில்களின் அடிப்படையில் உருவான பிரிவினையாகவும் இதனைக் கருதலாம். தமிழ்சூழலில் இதுவே சற்றுமாறுபட்டு மரைக்காயர்கள், ராவுத்தர்கள், லெப்பைகள் என்பதான அடுக்குகளாக நடைமுறையில் உள்ளன.

இன்றுகூட முஸ்லிம்பெயரின் அடையாளங்களோடு இவை ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் புழக்கத்திலிருக்கும் அகமது மரைக்காயர், இபுராகீம் ராவுத்தர், உதுமான்லெப்பை என்பதான பெயர்களோடு இந்த சமூக அடுக்குகளின் இருப்பை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த அடுக்குகளுக்கு கீழே மிகவும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய நிலையில் முஸ்லிம் மீன்காரர், கசாப்புகடைகாரர் நாவிதர் உள்ளிட்ட பல தொழில் குழுக்களையும் அடையாளப்படுத்தமுடியும் இக் குழுக்களுக்கு இடையே திருமணஉறவுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டும், ஒரே குழுவிற்குள் திருமணங்களும் நிகழ்கிறது. தமிழக மன்னர்களிடத்தில் குதிரைவியாபாரிகளாக, குதிரைகளை பழக்குவதற்காக வந்து, உள்ளுர் பெண்களோடு திருமண உறவுகொண்டு அந்த மரபில் வந்தவர்கள் ராவுத்தர்கள் குர்ஆன் சொல்லிக் கொடுக்கும் ஏழைஎளிய மோதினர்கள், நெசவில் ஈடுபடுபவர்கள், விவசாயத்தொழில் மற்றும் கைவினைத்தொழில்களில் ஈடுபடுபவர்களாக லெப்பைகள் கருதப்படுகின்றனர். ஒரே பகுதியில் வாழும் இம்மக்கள் தெருக்கள் வாரியாக, இருப்பிடம் சார்ந்து தனித்தனி அடையாளங்களோடு வாழுவதை பார்க்கலாம்.

மய்யத்தாங்கொல்லைகளில் கூட வேறுபடுத்தப்படும் நடைமுறைகளும் உண்டு. ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை இத்தகைய சமூக பின் புலத்தை இனங் காட்டுகிறது. சமூக படிநிலையில் உயர்ந்தவர்களாக கருதப்படும் ராவுத்தர் சமூகங்களால் லெப்பைகள் அவஸ்தைப்படும் காட்சிகளும் இடம்பெறுகிறது.

முழுக்க முழுக்க ராவுத்தர்கள் சேர்ந்து கட்டிய பள்ளிவாசல், லெப்பையோ, மீங்காரனோ சொந்தங்கொண்டாட முடியாது அகமது கனி ராவுத்தரின் குரல் இது. ஆண்டவனின் சந்நிதியில் ஆண்டவனே முதலாளி என்றாலும், முதல் ஸப்பில் தோளோடு தோள்சேர்ந்து நிற்பதும், பேஷ் இமாம் முஸôபஹா முதலில் செய்வதும், பள்ளிவாசல் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ராவுத்தர்களிடமே என்பதாக இது வெளிப்படுகிறது.

கயிறுமண்டிகளின் முதலாளிகளான ராவுத்தர் கம்பெனிகளில் கடைநிலை ஊதியம் செய்பவர்களாக லெப்பை மார்கள் வாழ்கிறார்கள். ஊர் மகாசபை தேர்தலில் ராவுத்தர்களை எதிர்த்து லெப்பைகள் வெற்றிபெறமுடியாது. அபூபக்கர் லெவ்வை எதிர்த்து நின்ற தன் விளைவாக நஞ்சையோ புஞ்சையோ பத்துகாணி நிலம் உள்ளவர்களுக்கு தான் தேர்தலில் நிற்கமுடியும் என்பதாக விதியையே மாற்றிவிடுகிறார்கள். ராவுத்தர் ஒசத்தி, வெப்பை கீழ்மட்டம்னு காசுவந்து கலகம் பண்ணுது என்பதான பதிவுகளும் உண்டு.

மாட்டிறைச்சி அரசியல்

தமிழ் சமூகத்தில் சாதீய மேலாண்மையின் கூறுகள் வழிபடும் இடம், வாழுமிடம், சமூகஉறவுகள் ஒன்று கலக்குமிடங்களில் வெளிப்படையாக தென்படுவதை கவனிக்கலாம். கோவிலுக்குள் நுழைவதற்கு மறுப்பு, வாழுமிடம் சேரி, கீழத்தெரு பெயர்களோடு ஒதுக்கப்பட்டிருத்தல், டீக் கடைகளில் இரட்டை குவளைமுறை, பஞ்சாயத்து அரசியலில் நிராகரிப்பு உள்ளிட்ட பலப்பல நடவடிக்கைகளில் ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை தலித்துகளின் மீது வெளிப்படுகிறது. இந்த ஆதிக்க சாதீய மனோபாவம் மறுபுறத்தில் நுண்ணிய கலாச்சார வடிவங்களாகவும் ,ஒப்புக்கொள்ளப்பட்ட வெகுஜனமனோபாவங் களாகவும் தோற்றமளிக்கின்றன. இடதுகை லவலதுகை, கறுப்பு லவெளுப்பு சைவலஅசைவ, என்பதாக உடல் அரசியலிலும் இவை வெளித் தெரிகின்றன. இவற்றில் ஒன்றுதான் உணவு பழக்கத்தின் அடிப்படையில் மேல் கீழ் மனோபாவங்களின் கட்டமைப்பாகும்.

காய்கறி சைவ உணவை சாப்பிடுபவர் மேல் என்றும் அசைவ உணவு சாப்பிடுபவர் கீழென்றும் ஒரு நுண்பாகுபாடு. அசைவத்தில் ஆட்டுக்கறி உண்பவர் மாட்டுக்கறி உண்பவர், பன்றிக்கறி உண்பவர், செத்த மாமிசத்தை உண்பவர் என்பதான படிநிலை கட்டமைப்பு உணவு பழக்கத்தின் அடிப்படையில் சாதீய மேலாண்மையின் அடுக்குகளாக உள்ளன.

முஸ்லிம் சமூகத்திலும் ஆட்டுக்கறி சாப்பிடுபவர்களை உயர்ந்தவர்களாகவும், மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கீழானவர்களாகவும் கருதும் மனோபாவங்கள் நிறையவே உள்ளன. மிக நலிவடைந்த நிலையில் உள்ள அடித்தட்டு முஸ்லிம்களே மாட்டு கறி, காசாப்பு கடை வியாபாரம் செய்பவர்களாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகவும் உள்ளனர்.

இங்கு ராவுத்தர்கள் ஆட்டுக்கறியோடும், லெப்பைகள் மாட்டுக்கறியோடும் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்த வகை மேல் கீழ் கருத்தாக்கங்களையும் ஜாகிர்ராஜா கலைத்துப்போடுகிறார். இவை முஸ்லிம் சமூகங்களது விளிம்பு நிலை இருப்பின் அறியப்படாத பக்கங்கள்.

ஹெச்.ஜி.ரசூல், 21/105 ஞானியார் வீதி, தக்கலை 629175, அலைபேசி:9443172681.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com