Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

பிரளயனின் பாரி படுகளம்
பிரபஞ்சன்
.

தமிழ் நாடகத்துறைக்கு பெருமைமிக்க பங்களிப்புகளை ஈந்திடும் சென்னை கலைக்குழு தொடங்கப்பட்டதின் 25 வது ஆண்டு இது. இக்குழுவினை தனது படைப்பாளுமையால் இயக்கிவரும் பிரளயன் புதுவை பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு உருவாக்கி நிகழ்த்திய பாரி படுகளம் நாடகம் குறித்து பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளரும் நாடகப்பிரதியாளருமான பிரபஞ்சன்.

நாடகக்கலைஞரும் இயக்குநருமான பிரளயன் அண்மையில் இயக்கி அரங்கேற்றிய நாடகம் பாரி படுகளம். முடியுடை மூவேந்தர் எனப்படும் சேர சோழ பாண்டியர் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட மிகப் புகழ்பெற்ற வேளிர்குலத் தலைவனும் பறம்பு மலை மன்னனுமான பாரியின் கதையை உள்ளடக்கமாகக் கொண்ட நாடகம் இது. வள்ளல்தன்மைக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்பட்ட பாரி, உட்பகையற்று மக்களை வழி நடத்திய குலக்குழுத் தலைவன், எத்தகைய சுமத்தப்பட்ட கற்பனைக் குற்றச்சாட்டுகளால் சாய்க்கப்படுகி றான் என்று சொல்லிக் கொண்டு போகும் நாடகப்பிரதி, ஆதிக்கங்கள் வழக்கமாகச் சொல்லும் வடிகட்டிய பொய்கள், சாதி மேலாண்மை நாடு வோர் உருவாக்கும் போலி தர்க்கங்கள், பெண்களைப் பயன்படு பொருளாகக் காணும் சந்தை மனோபாவம் முதலான தமிழ், இந்திய வாழ்க்கையைச் சீரழித்த சகல அரசியல் பண்பாட்டுத் தடயங்களைத் தழுவிக் கட்டமைத்து அவைகளை மிகக் கடுமையாக விமர்சித்தபடி நடக்கும், மிகுந்த கலாபூர்வமாகச் செய்யப்பட்ட நாடகமாக விரிகிறது பிரளயனின் பாரி படுகளம்.

சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன் பாரி. வேளிர்குல மன்னர் களில் மிகுபுகழ் பெற்றவன். ஓரியக் குடியைச் சேர்ந்தவனாக அறியப்படு கிறான். இன்று பிரான்மலை எனப் படும் பறம்புமலை மற்றும் அதை யடுத்த முன்னூறுக்கும் மேலான ஊர் களுக்கு மன்னனாக அறியப்படுபவன். சங்கத் தமிழின் மிக முக்கியப் புலவர் கபிலர், இவனது அவைக்களப் புலவராகவும் நண்பனாகவும் இருந் துள்ளார். பாரிக்கு இரண்டு பெண்கள் அங்கவை சங்கவை என்ற பெயரினர். ஆடும் விறலியர்க்கும் பொன்னரி மாலை, பொற்றாமரைப் பூ முதலான அணிகலன்கள் அளித்தும், பாணர்களுக்கு தேரும் யானையும் (யானையைக் கட்டி சோறுபோடும் வசதியையும்) வழங்கிய செய்திகளை சங்கப் பாடல்கள் சொல்கின்றன.

நிழலற்றப் பாலைவெளியில், நிழல் தரும் ஒற்றை மரமாக அவன் இருந் தான் என்கிறது ஒரு கவிதை. பாரி பாரி என்று கொடையாளியை மட்டும் சொல்கிறீர்களே, மாரி மாரி (மழை) என்ற ஒன்றும் இருப்பதை ஏன் மறந்து போகிறீர்கள் என்று கேட்கிறது ஒரு கவிதை. பற்றிப் படரக் கொழுகொம்பின்றி வாடி மெலிந்த முல்லைக் கொடிக்குத் தன் தேரையே ஈந்தான் என்று இவன் கொடைத்திறம் மிகுத்து பேசப்படுகிறது. இதைக் கொடை மடம் என்று அக்காலமக்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன்பொருள், பேசும் சக்தி அற்ற சிற்றறி உயிர்க்கும் சௌகர்யம் செய்துகொடுத்தான் என்ப தாகவோ சுற்றுச்சூழலை இசைவாக்கி வைத்தான் என்பதாகவோ வைத்துக் கொள்ளலாம். பேரரசர்கள் இவன் பால் பொறாமை அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டு போர் செய்து முதலில் தோற்று, சில ஆண்டு கள் சென்றபின் பெரும் படையுடன் மீண்டும் வந்து போரிட்டுப் பாரியைக் கொல்கிறார்கள்.

பாரி படுகளம் காண்பதோடு நிறை வடைகிறது நாடகம், இங்கு பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய சித்திரங் களையும் தொகுத்துக் கொள்ளலாம். சங்ககாலத்தில் பறம்பு எனப்பட்ட இம்மலையைத் தேவார காலத்தில் திருஞான சம்பந்தர் பாட்டில் திருக் கொழுங்குன்றம் என்றழைத்துள்ளார் அவர். வளைந்த உச்சியை உடையது கொடும் குன்றம். கொடு என்பது வளைவு. சங்ககாலத்தில் (கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற் றாண்டுக் காலப்பகுதி) பறம்பு மலையைப் பாரி நாடு, பறம்பு நாடு, பற நாடு, பறம்பு மலைச் சுனை, பனிச்சுனை என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஔவை, மிளைக்கந்தனார், நக்கிரர்,நன்னாகன்,பெருஞ்சித்திரன், நல்லூர் நத்தத்தனார் முதலிய புலவர்கள் பாரியையும் அவன் நாட்டையும் பாடியுள்ளார்கள்.

பிறமலைக் கள்ளர் வகுப்பார், பிரான் மலை என்ற பறம்பு நாட்டிலிருந்து மதுரை நோக்கி வந்து அமைந்தார்கள் என்றும் பறம்பு நாட்டு அல்லது பற மலைக் கள்ளர்கள் என்றழைக்கப்பட் டவர்களே பின்னாளில் பிறமலைக் கள்ளர் என்றானார்கள் என்கிற கருத்து வரலாற்றாய்வாளர்களிடம் உண்டு. பாரிவேட்டை என்று தமிழக அளவில் நடத்தப்படும் சடங்கு, இந்து மதத் தோடு இணைக்கப்பட்டு சென்ற நூற் றாண்டுவரை நடந்துள்ளது. புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை டயரிக் குறிப்பு களில் புதுச்சேரியில் பாரிவேட்டை நடந்துள்ள குறிப்பு இடம் பெற்றுள் ளது. பறம்புப்பகுதியில் அது இன்றும் நடக்கிறது. மலைக்காடுகளில் நிலை பெற்ற வேட்டைச் சமூகம் வேறுவேறு வாழ்க்கைப் பயணங்களில் பயணப் பட்டாலும் தம் பூர்வ வாழ்க்கையை நினைவு மனத்தின் ஊடாகச் சுமந்து சென்ற புனைவின் வெளிப்பாடு பாரி வேட்டை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பறம்புமலை-திருக்கொழுங் குன்றம் வரலாறு எனும் தலைப்பில் குன்றக்குடி ஆதின வித்வான் பெரும் புலவர் மரு.பரமகுரு எழுதிய (கபிலன் பதிப்பகம், ராஜசக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தியால் பேட்டை, புதுச்சேரி-3) மிகுந்த சுயமான ஆராய்ச்சி கொண்ட அருமையான புத்தகத்தில், பாரியின் பறம்பு நாட்டு எல்லைகள் முதல்முறையாகக் கண்டடையப்பட்டுள்ளது. நாடுகளின் எல்லைப் பிரச்னை மேலெழும் இன்று இது தேவையான ஆய்வாகும்.

பறம்புநாட்டுத் தென்எல்லை திரு மோகூர், பரமக்குடி எனப்படும் பறம்புக்குடி, கிழக்கெல்லை காளை யார் கோயில், அனுமந்தக்குடி, வடக் கெல்லை, கானாடுகாத்தான், குடுமி யான்மலைப்புறம், மேற்கெல்லை மருங்காபுரி துவரங்குறிச்சி, அழகர் மலைக் கிழக்குப் பகுதி. இந்தப் பகுதிக்குள் இருந்த ஊர்கள் 300 என்று அக்காலத்தில் கணக்கிடப்பட்டிருக் கிறது. இந்த பூகோள அமைப்புப்படி பாரியின் பறம்பு நாடு, சேர சோழ பாண்டிய எல்லைப் பிரதேசங்களுக் குள் உள்ளங்கை போல இருந்துள் ளது. மூவேந்தரின் போர் இந்த எல்லை குறித்தும் ஏற்பட்டிருக்க மிகுந்த வாய்ப்புண்டு.

இன்றும் ஒரு மக்கள் வரலாற்றுத் தகவல். முல்லைத்குத் தேரீந்த பாரி யின் கொடைமனம், மக்களின் மன சாட்சியாகிக் கொம்பின்றிக் தளும்பும் கொடிகளைக் காணும் போதெல்லாம் மனம் தளும்பி, கொடி தளும்பினால் குடி தளும்பும் எனும் ஒரு சொல வடையே இப்பகுதியில் நிலவுகிறது என்கிறார்கள் பேராசிரியர்கள் சேது பதியும், அருணனும். இன்றும் இப் பகுதிக்குழந்தைகளுக்குப் பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்ல மங்கை, அங்கவை, சங்கவை என்று பெயர் வைக்கப்படுவதையும் குறிப் பிட்டுள்ளார்கள் பேராசிரியர்கள். சமகாலத்தில் மறைந்த குன்றக்குடி அடிகளார் பாரி விழா எடுத்து இறவாத பாரிக்கு இறவாமை ஏற்படுத்தினார். பிரளயனின் நாடகம், வசந்தகாலப் பறம்பில் தொடங்கி வேனிலில் முடிகிறது. அல்லது பாரி தீம்பெரும் பைஞ்சுனை தொடங்கிப் பாரியின் மரணம் எனும் பாலையில் முடிகிறது.

முறையான அரசும், சட்டதிட்டங்களும் இன்னும் உருவாகியிராத குழு அரசனாக இருந்த பாரி, பறம்பு வனத்தை கேட்போர்க்கும் கேளா தோர்க்கும் வாரி வழங்குகிறான். குறிப்பாக பாணர் விறலியர் புலவர் அவனின் சுற்றமாக இருக்கின்றனர். பாணர் மரபு சிறந்து, புலமை மரபு தோன்றாத காலமும் அது. பாரியின் குடிலுக்கு வந்து அவன் தந்த கள்ளைக் குடித்து, இறைச்சி தின்று பற்பலப் பரிசுகளையும் பெற்ற பாணரும் விறலி யரும் பலகாதம் நடந்து சோழ மன்னனின் மாளிகைக்கு வருகிறார் கள். சோறுடைத்த சோழநாட்டிலும் விருந்தெதிர்தல் ஆகிவந்த வழக் கம். சோழன் பாணர் விறலியர் கூட்டத் துக்கு விருந்தோம்பல் செய்கிறான். கள்ளும் இறைச்சியும் பரிமாறப்படுகிறது. உண்டு மகிழ்ந்த அவர்கள் காவிரி நாடனைப் பாடிப் புகழ் கிறார்கள். கலைஞர்கள் கண்டு மகிழ்ந்த வினோதங்களைச் சொல்லச் சொல்கிறான் சோழன். மனதில் பதிந்திருந்த பாரியின் இனியநட்பை, நட்போடு கலந்து பழகிய அவன் எளிமை, அவன் மலையின் வளமை ஆகியவை முந்துறுத்த அவர்கள் அந்நினைவில் ஆழ்ந்து பாரியின் புகழ் பாடுகிறார்கள்.

இது ஒரு நுட்பம் பொருந்திய இடம். நாடகம், பாரியிடமிருந்து தொடங்கவில்லை. மாறாகச் சோழனிடமிருந்து தொடங்குகிறது. சோழனிடம் முந்தைய தங்கள் பாரியின் மகிழ் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் பாணர்கள். சோழ வேந்தன் முன்னமர்ந்து அவன் தந்த உணவைத் தின்ற அவர்கள், அவனைக் காட்டிலும் பாரியையே வியந்து பாராட்டுகிறார்கள். அதிகார பீடத்துக்கு முன் நின்று வாயில் எச்சில் ஒழுக அவனை முகஸ்துதி செய்ய வில்லை அப்பாணர்கள். அதிகாரக் கட்டமைப் பில் மூவேந்தர்களே உச்சம் பெற்றவர்கள். அவர்கள் தரும் பரிசிலும் பெரிதாகத்தான் இருக்கும் என்ற போதும் பாணர்கள் ஒரு சிறிய மலைத்தலைவனையே வியக்கிறார் கள். இந்த முரணே முதல் காட்சியாக நாடகத்தில் அமைகிறது. பாரியின் படுகளத்துக்கான முதல்கல் நாட்டப் படுகிறது. அதிகாரக் கற்கோட்டையில் அணுக்கம் பெறாத, பெற முடியாத பாண மக்கள், ஓலைவேய்ந்த பாரியின் சிறு குடிலில் இணக்கம் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்பதே இக்காட்சியின் இறைச்சிப்பொருள் அல்லது த்வனி. பாணர்கள் அகன்ற பிறகு, அதுவரை நாகரீகம் கருதி அடக்கிவைக்கப்பட்ட அழுக்காறு கரை உடைத்துப் பொங்குகிறது. பறம்பு மலைக்கு அனுப்பப்பட்ட ஒற்றர்கள் கொண்டுவந்த சிறப்புச் செய்தியைப் பற்றி உசாவுகிறான் சோழன்.

இந்த ஒற்றைவரி, பல அனுமானங் களை, நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகளை நமக்குக் குறிப்புணர்த்து கிறது. வேந்தர்கள், சதா சர்வகாலம் தம் நாட்டைப் பற்றி கவலைப்படுவதைக் காட்டிலும், (புஷ்மாதிரி) மற்ற நாடுகளில் நடக்கும் சங்கதிகள் பற்றி, எவ்வாறு லாபம் காணலாம் என்பது பற்றியே சிந்திக்கிறார்கள் என்பது பார்வையாளர்க்கும் பெறப்படுகிறது. வரலாற்றுப்பூர்வமாக, இது மிகச்சரி யான தரவும்கூட. வேந்தர்கள் பற்றி இவ்விடத்தில் நாம் தெரிந்து கொள்வது முக்கியம். வேந்தர் என்ற சொல் சேர சோழ பாண்டியர்களைத் தவிர வேறு யாருக்கும் தப்பித் தவறி கூட சாற்றப்படுவதில்லை. கிழார், அரசர், மன்னன், என்று பொருள் சார்ந்த பொருளில் ஓரிடக் குவிப்பு காரணமாக அதிகாரம் சார்ந்த படி முறைப் பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது. குடி என்ற சாதாரணக் குழு பற்றிய ஒரு சொல், பிறகு பெருங்குடி என்றும் சிறுகுடி என்றும் கட்டமைக்கப்படுகிறது. சிறுகுடி தாழ்ந்த பொருள் தரும் சொல்லாகத் தாழ்ந்த சாதி, சின்னசாதி என்று வைதீகம் முற்றிய காலத்தில் கி.பி.5முதல் 10 நூற்றாண்டில் - பொருள்படுகிறது.

வேந்தர்களில், சோழனே பாரியின் பகையைத் தோற்றுவிக்கிறான். நெல் லும் வயலும் மிகுவளமும் நகர நாகரீ கமும், அடிமை, வினைவலர்கள், இழிந்த சாதியினர் என்று வகுக்கப் பட்டவர்கள் எல்லாம் இணைந்த ஆகப்பெரும் சக்தியாக உருவம் எடுக் கிறவர்கள் சோழப் பெருமன்னர்களே ஆவார். உழைக்கும் மக்களிடம் இருந்து விலகிய சிறுகுடிப் பண்ணை யம், கிழாராகி மேலும் விலகி பெருங் குடிக்கிழாராக மேலும் விலகி, அரசனாக மேலும் விலகி, மன்னனாக மேன்மேலும் விலகி, வேந்தர்களாக முற்றாக விலகிய ஆளும் சக்தியே, இந்தப் படிமுறையை அங்கீகாரம் செய்து வளர்க்கிறது.

இந்தச் சோழ மன்னனே, தனக்கு விரோதமாகப் போகக்கூடும் என்று நினைக்கிற ஒரு ஒற்றனை சிறுகுடி என்று இகழ்கிறான். மேலும் போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு அடிமைப் பெண்ணின், தாசியின் மகன் என்றும் வைதல் செய்கிறான். அப்படிப்பட்ட இழிசனனை அரசுப் பதவியில், ரகசியம் காக்கும் துறையில் ஏன் அமர்த்தினாய் என அமைச்சனைக் கேட்கிறான். அந்த இழிசினன், தகுதி யும் திறமையும் கொண்டவன் என்று அமைச்சர் கூற,தகுதி திறமை... இவையா நமக்கு முக்கியம். அவன் பிறந்த குலம், அதுதான் அவனது தகுதி யையும் திறமையையும் தீர்மானிக்கி றது. அவன் அடிமையின் மகன். சிறு குடி மாந்தன். அவனுக்கு ஒற்றர் பணியைச் செய்கின்ற தகுதி எப்படி வரும் என்கிறான் சோழன். கடைசி யில் பூனைக்குட்டி வெளியே வந்து விடுகிறது.

நாடகத்தின் பிரதி அமைப்பு மிகவும் கச்சிதமாக அமைந்துவிடுவதால், மையத்திலிருந்து நான்கு திசை விளிம் புக்கும் பிரளயனால் மிகச் சௌகரிய மாகச் சஞ்சாரம் செய்ய முடிகிறது. கட்டமைக்கும் பிரதியின் தத்துவத் தளம் குறித்த சரியான தெளிவு இருந் தால் மட்டுமே இது சாத்தியம். எடுத்த எடுப்பில் குவிமையத்தில் இருப்பது ஒரு அச்சம் ஒழிந்த போர்வீரனின் செயல். பெரியார் மற்றும் அம்பேத் கரின் பிரதிகளில், இந்தச் சிறப்பைக் காணலாம். எடுத்த எடுப்பில், விவாதிக்க எடுத்துக்கொண்ட விஷயங் களின் மையத்தில் இருப்பார்கள் அவர்கள்.

சோழன் மேலும் சொல்கிறான். பாரி வேள்.. எனது பேரரசுக் கனவின் ஒரு நெருஞ்சிமுள்.. சங்ககாலத்தின் பிற்பகுதி பேரரசுகள் உருவான காலம். மன்னர்கள், அரசர்கள், கிழார்கள் எல்லாம் பேரரசுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது, அந்த வளையத்துக்குள் வராது, பிடிவாதமாக ஒரு சுதந்திரச் சிற்றரசு நடத்திய வேளிர்கள், குறுநில மன்னர்கள் இருந்தார்கள். இது அதிகாரபீடத்துக்கு முள்ளாய்க் குத்தி இருக்கிறது.

உலகத்தை ஒருகுடைக் கீழ் கொண்டு வருவதை வீரம் என்று புனைந்திருக்கிறார்கள் சமூகப் பொறுப்பற்ற புல வர்கள். ஆட்சி நிலம் சிறிதென்றும் நினைப்பு. ஊக்கத்தை ஏற்படுத்தி மற்றநாட்டின் மீது படையெடுத்திருக் கிறார்கள் மூட மன்னர்கள். இந்த ஆதிக்கவெறியை விசிறி இருக்கிறது புலமை வர்க்கம். ஆக, காணும் இட மெல்லாம் என்னுடையது என்று சொல்ல விரும்பிய தற்காமமே யுத்தங் களைத் தோற்றுவித்திருக்கிறது. எல்லா வேந்தர்களின், மன்னர்களின் கண்களில் பேரரசுக் கனவே நிறைந்தி ருக்கிறது. அந்த வட்டத்துக்குள் பாரி யின் நிலம், அவன் புகழ், அவனது சுதந்திர ஆர்வம் வேந்தர்களின் கண்ணை உறுத்தி இருக்கிறது.

ஆதிக்கத்தின் உடல்ரீதியான வன் முறைக் குரூரமே பாலியல் வன் புணர்ச்சிகள். ராணுவம், ஆதிக்கம் செய்த ஊரில் முதலில் இறங்குவது வன்புணர்ச்சியில்தான். அகிம்சை பேசும் தேசத்து ராணுவமும் இதையே செய்கிறது. செய்யும். மன்னர்கள், தாம் வென்ற நாட்டுப் பெண்களை- பெண் களில் உயர்ந்தவர்களைத் தம் அந்த புரத்திலும், மற்றவரை தாழ்வுற்ற பணிகளிலும் ஈடுபடுத்தினர். வேளிர் குலப் பெண்களுக்கு அப்படியென்ன அழகு என்று வியக்கிறான் சோழன். பாரி மகளிரை, மனைவிகளாக அல்ல, ஆடல்மகளிராக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறான் சோழன்.

யுத்தத்துக்கு முந்தைய பாரியின் அறிமுகம், மிகவும் அர்த்தச் செறிவும், கலாபூர்வமாகவும் காட்சிப்பட்டிருக் கிறது. பாரி, நச்செள்ளை, அங்கவை சங்கவை இசையை அனுபவிப்ப தாகக் காட்சி.மலைப்புலத்து யாழைப் புகார் நகரம் மாற்றி அமைத்திருந் ததைப் பாரிக்கு அறிமுகம் செய்கி றாள் நச்செள்ளை. காலமாற்றம் கருவி மாற்றத்தைச் செய்கிறது.

யவனர்களின் அறிமுகம் நடக்கிறது. பறம்புமலையின் சந்தன மரங்களை விலைக்குக் கேட்கிறார்கள் யவனர் கள்.வெட்டியெடுத்துச் செல்ல விரும் புகிறார்கள். பொற்காசுகளும் பொரு ளும் கூடவே யவனப் பெண்களையும் தரத் தயாராகிறார்கள். அதற்கு பாரி யின் பதில் இவ்வாறு அமைகிறது: பறம்பு மக்கள் பறம்பு மலையின் எஜமானர்கள் அல்ல. பறம்பின் புல் பூண்டு மரம் செடிகொடி பறவை விலங்குகள் போன்ற பல்லுயிர்களில் பறம்பு மக்களும் ஓருயிர். மரங்கள் செடிகள் தரும் கனிகளைக் கொய்ய லாம். மலர்களைப் பறிக்கலாம். ஆனால் மரங்களை வெட்ட முடி யாது. தாயின் தனத்தில் உயிர்ப்பால் குடிக்கலாம். நீங்கள் தனமறுக்கச் சொல்கிறீர்கள்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணில வில் என்று பாரிமகளிர் பாடிய (இப் பாடலைக் கபிலர் பாடினார் என்கிறார் கள் சில ஆய்வாளர்கள். பாரி மகளிர் பாடியதற்குத்தான் நியாயங்கள் இருக் கின்றன. பாரிமகளிரின் படைப்பாற் றலை ஏற்றுக்கொண்டால் ஆண்கள் குறைந்துபோய்விடுவார்களா என்ன?) அந்தப்பாட்டின், பாரி உயிரோடு இருந்த அந்தக் கடைசி முழுநிலா நாளை மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்திக் காட்டியிருக்கிறார் பிரளயன். பின்னால் நடந்ததை அறிந்த பார்வை யாளர்களாகிய நமக்குப் பதைபதைக் கிறது. அவலம் பேரெழுச்சியாக முகத் தில் அறைகிறது. உலகம் இதுகாறும் கண்ட யுத்தங்களால் மகிழ்ச்சியை, உயிரை,உறவை, வாழ்வை இழந்த அந்தக் கோடானகோடிப் பேர்களின் முகங் கள், அதில் சிக்கிய குழந்தைகள், மிருகங்கள், கருகிய இயற்கை எல்லாம் நினைவுக்கு வருகின்றன. ஒரு போபாலும்கூட. கூடங்குளம் மட்டுமல்ல, விமான நிலையத்தில் இருந்தே பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு கையெழுத்து போட அலையாய் அலைந்த மன் மோகன் சிங் எல்லாம் நினைவுக்கு வந்து மனம் உறைகிறது.

கோரயுத்தம், மூன்றுபேர் நடனத்தின் மூலம், உடல் அசைவு மூலம் சிறப் பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. யுத்தத்தினூடேமுதலில் தோல்வியைச் சுவைத்த மூன்று வேந்தர்களும் பேசிக் கொள்கிறார்கள். போர் தொடங்கி ஒரு வார காலமாகியும் இன்னும் பறம்புக் குள் ஓரடியும் எடுத்து வைக்க முடிய வில்லையே என்று சோழன் கூற்றுக்குப் பதிலாக ஒரு அருமையான வசனம் வருகிறது. அது பாண்டியன் சொல்வதாக அமைந்திருக்கிறது: நமது வீரர்கள் மாற்றான் மண்ணை அபகரிக்கப் போரிடுகிறார்கள். பறம்பின் வீரர்களோ தங்கள் உரிமைக்காகப் போரிடுகிறார்கள்.

நாடகத்தில், முக்கிய அசமுக்கியப் பாத்திரங்கள் என்று யாரையும் சொல்ல முடியவில்லை. வாய் பேச முடியாத, ஒடுக்கப்பட்ட, அழுத்தி வைக்கப்பட்ட பெருந்திரள் மக்களின் கலையும் சோகமும், எரியும் வாதை யுமே நாடகத்தின் ஊடுபாவாக இருக் கிறது. அவலம் என்கிற உணர்ச்சியே முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கிறது. அதற்கு ஒத்துழைத்து ஒத்திசைந்து நடித்துள்ளனர் நடிகர்கள். ஒளி அமைப்பு இந்த நாடகத்தின் சிறப்பு களுள் ஒன்று. ஒளியின் மூலமாக காட்சியின் தொனியைக் கொண்டுவர ஒளிச்சிதறல்கள், நாடகத்தின் குரலாகப் பேசுகின்றன.

ஒரு கருத்து. பாரிக்கும், அவன் எதிரி களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் கபிலருக்கும் இருந்திருக்கலாம் என்று பட்டது. அதோடு, மிகச் கூர்மையாக மூவேந்தரைக் கேலியும் கிண்டலும் செய்த கபிலரின் பேச்சுக்களை மேலும் சேர்த்திருக்கலாம். உதாரணமாக, மூவேந்தர்களே, சண்டை போட்டா பறம்பு மலையை நீங்கள் வெற்றி கொள்ளப் பார்க்கிறீர்கள்? போர் செய்தல்ல. பேசாமல், பாணர் மாதிரியும், விறலி மாதிரியும் வேஷம் போட்டுக்கொண்டு அவனைப் புகழ்ந்து பாடுங்கள். அவனே அவன் நாட்டை உங்களுக்கு கொடுத்து விடுவான்.

பிரளயனின் இந்த நாடகம், பல யதார்த்தங்களை நினைவுபடுத்துகி றது. சர்வதேச அரசியல், இந்திய இந்துத்துவ ரௌடி அரசியல், தமிழ் உணர்ச்சிப் பீறிடு அரசியல், சுற்றுப்புற அக்கறை, பெண் குறித்தான மாநுட அக்கறை என்று பல பரிமாணங்களில் நாடகம், அதன் வரம்பை மீறாமல், நாடகக்கலை அடக்கத்தோடு நிகழ்கிறது. தமிழ் நாடகப் பரப்பில் முக்கிய நாடகம் இது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com