Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

மச்சக்காரன் கதை
ம.மணிமாறன்
.

கதை சொல்வோன் கூற்று: சொல்லே புனைவினை நடத்தும் சூத்திரதாரி. சொல் ஒன்றைப் பின் தொடர்ந்தபடி கதாசகாரத்திற்கு உலவித் திரியும் வாசகா! நுன் எழுத்தாளன், சிசுவான நாளில் இருந்து துவங்கிடும் கதையைச் சொல்லிட சொல்லின்றி சொல்லற்று அலையும் என் நாவிற்கு...

வாசகன் கூற்று: கதையிதுவென கதைத்தீரே கதைசொல்லி, காலத்தை உருட்டும் காரியத்தில் இறங்குதல் ஏனோ?

கதைசொல்லி: புதிய சொல்லின்1 கதையையும், புதிது புதிதாக புரண்டு வரும் வார்த்தை2யின் ரகசியத்தையும் இப்புனைவின் வழியே கட்டுடைத்து அறியும் நுட்பம் அறிந்த வாசகா!

கதைகேட்போன் கூற்று: பீடிகை போதும் பிரியமான கதைசொல்லியே... நீர் கதைக்குள் நுழையும் காலதாமதமின்றி.

கதைசொல்லி: பின்வரும் சொற்றொடர்களை கதைதான் என்று நம்பி பின்தொடர்க...

நிலவும், நட்சத்திரங்களும் அற்ற குளிர் இரவில் இருட்டைக் கிழித்த சிசுவின் அழுகையொலியில் விழித்தது மலையூர். பனியை ஊடுருவிப் படர்ந்த அழுகையின் குரலில் எரிந்தன விளக்குகள். புருவம் நெளித்து புரண்டெழுந்த ஊர் தன் வீட்டின் முன் திரள்வதைக் கண்ட குழந்தையின் தந்தை ஏதுமறியாது கைபிசைந்து நின்றான். அழுகையை அடக்கும் சூதறிந் தவன் சடைச்சாமியார்தான் என ஊரின் மூதாய் சொல்லிட மௌனமாக வீட்டிற்குள் நுழைந்தது ஊர். வலதுகையின் பெருவிரலும், நடுவிரலும் எதற்காகவோ விரிந்தபடி ஏந்தி நிற்க தன்னைச் சுற்றி நின்று தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் ஊரை ரசித்தபடி விடாது அழுது கொண்டி ருந்தது குழந்தை. அழுகை நின்றால் தான் கவனிக்கப்படப் போவதில்லை என்பதை முற்றிலும் உணர்ந்த குழந்தையின் அழுகையொலி விடியும்வரை நீண்டது.

பட்சிகள் துயிலெழுப்பும் பொழுதில் துவங்கி ஊரின் சாபத் தையோ, வரத்தையோ தினமும் விதைத்தபடி தன் பணி துவக்கும் சடைச் சாமியார் ஆணிச் செருப்புகள் அதிர சிசுவின் வாசலை அடைந்த நொடியில் சூரியன் உதித்துவிட்டது. நெடிய இரவில் விழித்துச் சிவந்த சாமியாரின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்ட தந்தை குழந்தையை ஏந்தி வர துணியைத் தேடிட, விதியின் சாபத்தால் வெள்ளைத்துணியற்ற வீடானது குழந்தை யின் வீடு. சுழன்ற கண்களுக்குள் சிக்கிய காகிதப்பொதிக்குள் சிசுவை பொதிந்தபடி வெளியேறினார் தந்தை. வாசகன் கூற்று: குட்டை உடைக்கும் தேவை இல்லையோ? யார் இவன் என்பதை சூசகமாக காகிதத்திற்கும் இவனுக்குமான கால காலத்திற்குமாக தொடர்ந்து வரப்போகும் தொடர்பின் வழி உணர்த்துகிறீரோ!

கதை சொல்வோன் கூற்று: கனவைப் பின்தொடரும் நிழலைப் போல என் குரலைப் பின்தொடரும் பிரிய வாசகா, இடைநிறுத்தம் தவிர்த்திடு நீ. . . துர் ஆவிகள், பேய்கள், மற்றும் சூனியக்காரிகளின் உலகமென இவ்வூரை கட்டமைத்துத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் சடைச்சாமியார் முன் தடதடவென அடித்துக் கிடந்த குழந்தையின் நெற்றியை உற்றுப் பார்த்த மூதாய் திடுக்கிட்டாள். சாபத்தின் அடையாளமா இந்த சங்கடம் என்றாள், சிசுவின் நெற்றியில் கருத்துச் சிறுத்திருந்த மச்சம் பார்த்து. எல்லோரும் கவனித்த பொழுதினில் நெற்றி மச்சம் இதற்கு முன் ஊரும் உலகமும் அறிந்திராத புதுவடிவில் வளரத் துவங்கியது. மச்சம் ஆதிசிவனின் நெற்றிக்கண் என வளர்வது கண்டு திடுக்கிட்ட தந்தையை தேற்றியபடி ஊருக்கு சொன்னான் சடைச் சாமியார்: பயம் வேண்டாம், இதனை மேற்குலகில் ஸ்வஸ்திக் எனப் பெயரிட்டு அழைப்பர்.



கிர்மானிய தேசத்தின் ராஜா கோட்லரின் விதூஷகன் கோயனுக்கும் நெற்றி யில் தோன்றிய மச்சம் பிறந்த அன்றே மறையும்படியான சூதறியப்பட்டு மறை உள் இறங்கியதை அறிவேன் நான். பேச்சின் நடுவே வளர்ந்த மச்சம் மரத்தின் உச்சியை தொட்டுவிடும் என்ற அச்சத்தில் சூழ்ந்திருந்த ஜனத்திடம் வளர்ந்து மிரட்டும் மச்சத்தை நெற்றியின் அடியாழத்திற்குள் அடித்து இறக்கும் சூட்சுமம் கைவசம் இருப்பதாக பிரஸ்தாபித்த சாமியார், நொடியும் தாமதிக்காது மந்திர உச்சாடனம் செய்திட சிசு வின் செவிக்குள் மந்திரம் இறங்கிய மறுநொடியில் மச்சம் மிச்சமின்றி நெற்றியினுள் இறங்கியது. மகிழ்ந்த ஊரைப் பார்த்த சாமியார், வரமல்ல இது சாபம். இச்சாபம் பெற்ற குழந்தைகள் உலகின் நாற்திசைகளிலும் தோன்றி தமக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றியபடி மச்சம் வள ராது மகிழ்ந்து வருகிறார்கள்.

உலகெங்கும் இவர்களின் நிறமும், செயலும் வேறுவேறாயிருப்பினும், மன்னர் களாக, மந்திரிகளாக, பொருளாதார அடியாளாக, எழுத் தாளராக உலககெங்கும் செயல்பட்டாலும் இக்குழந்தை களின் மனம் ஒன்று, ருசி ஒன்று. அது இடது எதிர்ப்பு. திசையில், தேசத்தில் ஏன் தன் உடலின் இடது பாகத்தைக் கூட வெறுக்கும் மனம் கொண்டவர்கள். அவரவர் மச்சத் தின் அளவையும் சாபத்தின் கொடூரத்தையும் கணக்கிட்டு காரியமாற்ற விதிக்கப்பட்டிருக்கிறார்கள். பச்சிளம் தளிருக்கு பெயர்சூட்டி மகிழ்ந்த பிறகுதான் சாபம் நீங்கும், வரம் வலிமை பெறும் என்ற சாமியாரின் திருவாய் மலர்ந் தருளும் ஒரு சொல்லிற்கு காத்திருந்தது ஊர். சிசுவினை விளித்திட சிறப்பான பெயர் கண்டேன். அது அவனின் முற்பிறவியின் கர்மயோக வினைகளால் விளைந்த பெயர் என்றறிக என சடைச்சாமியார் உரைத்த நொடியில் அயர்ந்து தூங்குவதுபோல பாவனை கொண்டது குழந்தை.

தன் சுயமே எல்லாமென வளரப்போகும் சுத்த சுய சுயம்புவான இச்சிசுவினை இவ்வுலகம் சுயமோகன் என்று அழைக்கும் என சாமியார் ஊருக்குச் சொன்ன நொடியில் ஓம் சத், அரிஓம் சத், அரிஓம் சுயமோகா என பஞ்சபூதங்களும் திணறிடும்படியாக சரண கோஷம் முழங்கியது ஊர். சுயமோகா சுயமோகா என்ற ஊரின் பேரொலியில் தன் சுயம் மகிழ்ந்த நாளில் துவங்கியது இவனின் தத்துவமும், பெரும் பிழைகளும். பெயர் பெற்றக் குழந்தை சாமியாரின் மடியிலிருந்து தந்தையின் கைகளுக்குள் தவழ்ந்தது. பிள்ளையாக வந்து பிழையாகப் போகிற சுயமோகனை ஊரின் கண்கள் உற்றுப் பார்த்தபடியிருந்த துர்ப்பொழு தில் தன் பிறவியின் பயனான பெருஞ்செயலைத் துவக்கினான். தனது இடது மார்பின் இடது மூலையை தன் கையாலே மடார், மடார் என அறையத் துவங்கினான். அதிர்ச்சியுற்ற ஊருக்கு சடைச்சாமியார் சாபம் அகற்றும் வரம் தன் கை வரப் பெற்றதென்றான். இது உலகில் பலமுறை நிகழ்ந்த திருவிளையாடல்தான். நடந்த நிகழ்வு மீண்டும் நிகழ்வதும் நடக்காது என நம்பிக் கொண்டிருந்த செயல்கள் மறு நொடியில் நடந்தேறுவதும் உலக நியதி மட்டுமல்ல, உள்ளூர் நியதியும்தான்.

தன் பிறப்பின் சாபம் நீங்கிட தன்னையே துன்புறுத்தி உலகையே தன்பால் கழி விரக்கம் கொள்ளச் செய்யும் சுயமோகிக் குழந்தைகள்4 உலகின் நாற்திசையிலும் பிறந்து கொண்டேயிருக்கின்றன. இடதின் மீதான வெறிகொண்ட காழ்ப்பேறிய மனமே இப்படியான குழந்தைகளை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது வரலாற்றிற்கு தெரிந்த ரகசியம் தான். எப்போதும் போல பலமுறை பின்பற்றப்பட்ட விதியின்படி சுயமோகனின் கைகளில் மசிதடவிய எழுதுகோலை தாருங்கள் என உத்தரவிட்டான் சாமியார். மறுநொடியில் சிசுவின் கை எழுதுகோலிற்காக விரல் அகற்றியது. ஆச்சர் யம் தாங்காதக் கூட்டம் வழமைபோல் கோஷமிட்டது. சுயமோகா சுயமோகா என்றரற்றிய ஊரைக் கிழித்தது சாமியாரின் கத்தல்: இனி தன் இடது காழ்ப்பை எழுதியே ஆற்றிக் கொள்ளும் இந்தக் குழந்தை. தன் சாபம் நீக்கிட வரம் எனப்பெற்ற எழுதுகோலை தவறாக பயன்படுத்தினால்- இடது எதிர்ப்பு எனும் நிலையில் இருந்து வழுவிடும் எழுத்தை முன்வைத்தால்- ஸ்வஸ்திக் மச்சம் வளர்ந்து விண்ணைத் தொடுவதை இந்த மண்ணில் தடுக்க எந்த சக்திக்கும் துப்பில்லை என்றறிக நீங்கள் என்றவாறு சடைச்சாமியார் மேற்கு நோக்கு நடந்தேகினான்

வரமெனப் பெற்ற மசி தடவிய எழுதுகோல் துப்பிய வார்த் தைகளை வடிவமைத்து கதைகளாக்கினான், கட்டுரைகள் வடித்தான், ஹேஸ்யங்களை எழுதிப் பார்த்தான். எழுது தல் ஒன்றே பெரும் நோக்கமென கண்டடைந்தான். எழுதிக் கொண்டேயிருந்தான். எழுத மறந்திடும் பொழுதினில் நெற்றி மச்சம் வளருமோ எனும் அச்சம் அவனை வாட்டிட தன்வீட்டு ரசமழிந்த கண்ணாடியில் முகம் பார்க்கத் துவங்கினான். பிறகு வந்த நாட்களில் வழமையான உடை களுடன் மற்றொரு உடையாக கண்ணாடியையும் வடிவ மைத்துக் கொண்டான். கையின் உடையான கையடக்க கண்ணாடியில் மணிக்கொரு தரம் யாருமறியாது முகம் பார்ப்பான். நடக்கும்போதும், ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும் இவன் அறியாது இவனே தன் நெற்றியை தடவிப் பார்த்து நிம்மதியடையும் பழக்கம் வியாதியாகி இவனை துன்புறுத்தியது.

நிம்மதி குலைந்த நிமிடங்களில் எழுதிக் குவித்த காகிதங் கள் வீட்டை நிறைத்தன.மாடர்ன் டைம் படத்தில் ஸ்குரு முறுக்கும் தொழிலாளியாக சாப்ளின் நடித்திருப் பார். அதன் முதல்காட்சியின் மனநிலையை அடைந்தான் சுயமோகன். தன் கனவிலும் எழுதிக் கொண்டேயிருந்த சுயமோகன், தன் எழுத்தின் வல்லமையைப் பரப்பிட மைக்செட் முழுங்கிய மனிதர் இருவரை களத்தில் இறக்கி விட்டான். இவர்கள் அடித்த லூட்டியையும், பிரதாபத்தை யும் கண்டு சக எழுத்தாளர்கள் எரிச்சலுற்றனர். எழுத்தை எழுத்தால் எதிர்கொள்ளும் மனநிலை அடைந்த எழுத் தாளர்கள் சுயமோகனைப் பகடித்து எழுதிய காகிதங்கள் ஒரு கதைத்தொகுப்பு போடுமளவிற்குத் தேறியது. வாசகர் களும் ஏதொன்றையும் கட்டுடைக்காமல். இவனின் கைங்கர்யத்தை அந்த கதைகளின் வழி கண்டடைந்தனர். அதிலும் குறிப்பாக சிசிபஸ் கதையில் வரும் தந்திரமும், சூதும் நிறைந்த எழுத்தாளன் இவன்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாது சகல சாட்சியங்களும் இறுதியோடு உறுதி செய்கின்றன.

தன் மகன் எழுதுவதை நிறுத்தினால் வளரும் ஸ்வஸ்திக் மச்சம் தங்களை கனவிலும் மிரட்டுவதைக் கண்டு கலங்கிய பெற்றோர் கண்ணீர் உதித்தபடியே காலத்தை கழுவினர். வரமா? சாபமா என்றறியாது எழுதிக் கொண்டேயிருந்த சுயமோகனை காணச் சகிக்காத பெற்றோர் இதிலிருந்து தப்பித்திடும் மார்க்கமென அமைதியைக் கண்டனர். பெற்றோரின் அமைதியும் ஊரின் பரிகாசமும் துரத்திட மலையூர் விட்டகன்ற சுயமோகன் தேசாந்திரியானான். காவிமணம் கமழும் மடங்களைத் தஞ்சமடைந்தான். ரிஷி களென அறியப்பட்டவர்களுடன் திரிந்தான். எங்கு சென்றா லும் எழுதுவதை மட்டும் மறக்கவில்லை. எழுதிக் குவித்த கப்சாக்களையும், கதைகளையும் இன்னபிற வஸ்துக் களையும் தர்மசக்கரா6 எனும் பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தான். தர்மசக்கராவுக்கு தத்துவவிசாரம் எழுதியும் அதன் தத்துவ ஒழுங்கை தான் பெற்றும் தத்துவ பேரொளி பெற்றான் சுயமோகன். தன் அகத்துள் பாய்ந்திட்ட ஒளி வெள்ளத்தில் தான் கற்றவற்றை நீண்ட தத்துவமென கொள்ள மறுத்து அகண்ட தத்துவமெனக் கண்டான். இந்நாள்வரையிலும் தர்மச்சக்கரத்திற்கும் இவனுக்குமான தொந்தம் விடாது நீடித்திருப்பதை நுண் வாசகா நீ உணர்ந்திருக்கக்கூடும். இன்ன பிற வெகுஜன பத்திரிகை களுக்கும் வேறுவேறு பெயர்களில் எழுதிக் குவித்தவற்றை அனுப்பி வைத்தான்.

தடுத்திட முடியா அதிவேகத்தில் தொடரும் தன் எழுத்தைக் கண்டு இவனே எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்ததுண்டு. அப்படியான கணங்களில் தன்னுடன் பயணிக்கும் கையடக்கக் கண்ணாடிக்குள் அடைக்கலமாவதைத் தவிர யாதொரு வழியும் அவனுக்கு வாய்த்ததில்லை. உள்ளிறங்கி உறைந்து கிடக்கும் வதிக் சின்னம் வளருமோ எனும் பதட்டத்தை வெளித்தெரியாதபடி தனக்குள்ளேயே சேகரமாக்கினான். நடுவான திசை எனும் கதை எழுதிய நாளிலும் அழிப்பான் எனும் நாவலை தெகிலாமா7 சமூகத்திற்கு அர்ப்பணித்த பொழுதிலும் இவன் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளானான். கையடக்க கண்ணாடியின் போதாமையை உணர்ந்த நாளில் தன் வீட்டில் (மடத்தில்) நிலைக்கண்ணாடி ஒன்றை நிலை நிறுத்தினான். அதீத குற்றவுணர்ச்சி அடையும் நாட்களில் முகத்தில் நீரை வாரியிறைத்து நெற்றியை அழுந்த துடைத்து மச்சத்தின் எச்சத்தை தேடுவதும், நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து நிம்மதியிழப்பது எனவுமாக காலம் அவனை பித்த நிலைக்குத் தள்ளியது. பித்தம் அகன்று சித்தம் தெளிந்து வெளிக்கிளம்பிய நாட்களிலும் தன் நெற்றியை தடவிக் கொண்டிருக்கும் விசித்திரக் குணம் பெற்றான்.

கேட்போன் கூற்று: அரட்டைக் கச்சேரிகளில் நெற்றியைத் தடவியபடி அவன் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு அதீத அர்த்தம் உண்டு என அவனின் அடிப்பொடிகள் வதந்தி களை பரப்பிக் கொண்டிருப்பதை நானும் அறிவேன். காடு மேடு என தேசாந்திரியாக அலைந்து பெற்ற ஞானத்தையும், ஞானசூன்யத்தையும் சரிவிகிதத்தில் கலந்ததால் அது ஏற்கனவே இந்நிலத்தில் அறியப்பட்ட கிந்துத்துவம்8 எனும் அதத்துவ முறைக்குள் ஐக்கியமானது. அதத்துவ முறையையே தன் வாழ்வென வரித்துக்கொண்ட சுய மோகன், அதன் தத்துவ வீச்சைக் கொண்டு தன் கதைகளைக் கட்டமைத்தான். தன் கதைகளில் மறை பொருளாகவும், நேர்படவும் இத்தத்துவத்தை அள்ளித் தெளித்தான். பச்சையாகவும், மஞ்சளாகவும்கூட வெளிப் படுத்தினான் காவிநிறத்தை, மறந்தும்கூட சிவப்பு நிறம் தன் கதைகளில் இறங்குவதை அவன் அனுமதித்தில்லை யென்பதற்கு நமக்கு நாம் அறிந்த காரணங்களே காரணம். இவனின் நிறத்தை இவனே மறைக்க விரும்பிய போதும் இவனின் படைப்புகளுக்குள் நதியின் சுழிப்பில் வெளிரும் கூழாங்கற்கள் என காவிநிறம் பளிச்சிடுவதை மறைக்க வியலாது. அவன் கதைகளே அவனின் தத்துவ சாட்சி.

தன்னையும் தன் கதைகளையும் பெரும் சுமையென கொண்டலைந்த சுயமோகன் தற்செயலாகவோ, அல்லது திட்டமிட்டோ நின்ற இடம் தெகிலாமா நாட்டின் கடை கோடி குறுநகரின் நூல்கடை வாசலில். நூல் கடையில் கல்லா கட்டிக்கொண்டிருந்த நடுவயதுக்காரர் இவனை எழுத்தாளன் என முதல் பார்வையிலேயே தெரிந்து கொண்டார். ஏற்கனவே சிற்றிதழ்களில் கவிதை, கதை களை இறக்கி மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர் குழாமை தனக்கானதாக வரித்துக் கொண்டவர் அவர். அவரும் நோக்கிட இவனும் நோக்கிட பிறந்ததொரு புதிய பந்தம் நொடிப்பொழுதில். உருகிப் பெருகிற அன்பெனும் நதியில் திளைத்த இருவரும் பரஸ்பரம் சுயமோகன், அழகு ராமசாமி என அறிமுகமாகிக் கொண்டனர். மொத்த தெகிலாமா சமூகத்தையும் புரட்டப் போகிற புதுக்கடப் பாரையை கண்டடைந்த மகிழ்ச்சியில் ராமசாமி தூங்கவில்லையென அவரின் பதிப்பாக்காது விடப்பட்ட டைரிக் குறிப்புகளின் வழியாக அறிய முடிகிறது.

பிறகான நாட்களில் இலக்கிய ஆறு தெகிலாமா சமூகமெங்கும் பெருக்கெடுத்து ஓடியது. கடையில் கல்லா கட்டிய பிறகும், கல்லாவில் நின்றபடியும் இருவரும் விவாதித்த விஷயங்களாக உன்னதம், உள்மனம், தத்துவ விசாரம், தத்துவ விகிசிப்பு, சாயைகள், சாக்கடைகள் சீசீ...(சும்மா ஒரு ஃப்ளோவுல வந்திருச்சு. தப்பா நினைக்காதீங்க, ஆமா ஏன் சாக்கடைன்னதும் மூக்கைப் பொத்திக்கீறீங்க...) என்பதாக இருந்தன. அழகு ராமசாமியின் தலைமைச் சீடானாகும் தகுதி தனக்குத்தான் உண்டு என்றும், சில விஷயங்களில் தனக்கிருக்கும் விஷேச தகுதியை அவர் கூடு இன்னும் அடையவில்லை என்றும் அப்போது குருவி களின்9 கூட்டிற்குள் அடைக்கலமாகியிருந்த சரஸ்வதி மணாளனிடம் தோளில் கைபோட்டபடி சொல்லிக் கொண்டலைந்தான். தன்னுடைய இடத்தை அடைய எந்த கீழ்த்தரமான எல்லைக்கும் செல்லும் சுயமோகனின் வருகையால் குருவிகள் கூட்டம் கூடும் அழகுவிலாஸின் மாடிப்படி திணறிக் கொண்டிருந்தது.

தான், தன்னுடையது, தனக்கானது என்கிற நோய்க்கூறு அவனுக்குள் செயலாற்ற துவங்கிய நாட்களில் தெகிலாமா சமூகமெங்கும் நாவல் குறித்த தன் அபிப்ராயத்தை துப்பத் துவங்கினான். இதுவரை அகிலாமா மொழியில் நாவல் எழுதப்படவில்லை. எழுதி முன்வந்த நாவல்கள் எல்லாம் நாவலுக்கான எத்தனிப்புகளே என்று சலம்பித் திரிந்தான். யார் இவன் என்பதை முன் உணர்ந்த வாசக மனம் இவன் தொப்பென தூக்கிப் போடப்போகும் நாவலுக்கான தந்திரம் தான் இது என்பதையறிந்து கொண்டது. ஆனால் சுயமோகன் பதட்டமடைபவனல்ல, நிதானமானவன். எதையும் திட்டமிட்டு தேர்ந்தெடுத்து செய்வதில் கெட்டிக்காரன். முதலில் நாவலை வெளியிடவில்லை. நாவல் என்றால் என்ன எனும் குறிப்புகளை சிறுபத்திரிகை களில் எழுதிக் கொண்டிருந்த நாட்களிலே குறிப்புகளை விவரித்து விவரித்து எழுதி புத்தகமும் ஆக்கினான்.

தன்னையும், தன் படைப்பையும் முன்னிலைப்படுத்திட களம் தயாரானது. அன்று அவனுள் உறைந்து நிற்கும் சுய மான நோய்கூறு கட்டளையிட்ட பிறகே நாவலை வெளி யிட்டான். கிருஷ்ணன் எனும் மாயன் ஒருமுறை புரண்டு படுத்ததால் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பூமிப்பந் தில் ஏற்பட்ட பிரளயம் மீண்டும் ஒருமுறை நிகழும் என சகல கப்சாக்களையும் கலந்துக் கட்டி எழுதினான். சகல அதத்துவ விசாரணைகளையும் படைப்பிற்குள் நிரவி கிந்துத்துவ வெளிச்சக்கீற்றை வாசக மனங்களில் விதைத் திடும் காலத்தின் கண்ணாடியென முன்வைத்தான். தன் படைப்பிற்கு கிருஷ்ணபுரம் எனவும் பெயரிட்டுக் கொண்டான். புரட்சி குறித்தும், வாழ்க்கை குறித்தும் மனிதம் குறித்தும் ஒருவித குழப்பத்திற்கு ஆட்பட்டிருந்த அழகு சுந்தரமும் இன்னபிற நவீனர்களும் நாவலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பாராட்டு மழை தொப்பலாக நனைந்த சுயமோகன் உடைமாற்ற மறந்து அலைந்து கொண்டிருந்தான். பெற்ற சாபவரம் நினைவிற்கு வந்த நாளில் நெற்றியைத் தடவி னான், கைகளில் கருப்புமசை ஒட்டியதைக் கண்டு அதிர்ச் சியுள்ளான். எழுதுகோலை இயக்கினான். ஏற்கனவே பிறரால் எழுதி வைக்கப்பட்டிருந்த இடது எதிர்ப்பு பிரதி களை தன் மனதில் ஓடவிட்டான். அவனுள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த இடது காழ்ப்பும் இணைந்திட படைப்பொன்று பிறந்தது. அதற்கு பின் தொடரும் சாயையின் குரல் என்றும் பெயரிட்டான். காலம் தப்பி வந்த பிரதியென கண்டு கொண்ட தெகிலாமாக்கள் இதை கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல. பின் தொட ரவும் இல்லை. பிறகென்ன சுயம் குறித்த நோய்க்கூறு அறிந்திட தன் அடிப்பொடிகளை ஏவிவிட்டான். விமர்சகர் எனும் போர்வையில் சிற்றிதழ்களில் சில்லறைச் சவடால்களை அடித்திட போதும் நகர மறுத்து நிழல் கருப்பென நின்றது. அதனால் என்ன? எழுத்தின் நோக்கம் துர்சாபத்தின் துயரம் போக்கிடத்தானே என மனதைத் தேற்றினான்.

மச்சம் வளராது தடுத்திடவே எழுத்து என்று தான் மறந்து போகாதிருந்த விசயம் நினைவிற்கு வர, இருக்கட்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். இருந்தபோதும் கொதிப்படங்கிடவில்லை. எழுதியெழுதித் தள்ளிய பிரதிகளும் அச்சடித்து அடுக்கப் பட்ட கதைகளும் அசையாது கிடந்தநாட்களில் குழப்ப முற்றான். இவ்வுலகில் மிகவும் சிநேகிதமென அவன் இது நாள்வரை நம்பிக்கொண்டிருக்கும் ஆவிகளும் பேய்க ளும் அலைக்கழித்தன. பிரதிகள் குழவிக்கல்லென சலன மற்று கிடந்தநாட்களில் இவன் அடைந்த மனக் கொதிப் பிற்கு மாத்திரைகளோ குளிகைகளோ இதுநாள்வரை கண்டறியப்படவில்லை என மருத்துவர் கை விரித்தார். மருத்துவம் கைவிட்டாலும் கிந்துத்துவ மகத்துவம் கை விடவில்லை. புத்தகம் கிடக்கட்டும் விடு, புது ரூட்டைக் கண்டெடு என கிந்துத்துவம் கிசுகிசுத்த கணத்தில் கண்ட டைந்தான் கொதிப்படைக்கும் தனிவழியை. இயங்கிக் கொண்டுள்ள சமூகநதியின் போக்கில் அதிர்ச்சியலையை ஏற்படுத்த கூழாங்கற்கள் வேண்டாம், பாறாங்கல்லை தூக்கிப்போடு, சமூகம் தடுமாறி கிடக்கட்டும், நாம் குளிர் காய்வோம் என்ற தத்துவச்சரடை நிரவிவிடுவான். இதை நுண்வாசகனான நீ அவனின் படைப்புகள் காரியமாற்றாது தேங்கிய எல்லாக்காலத்திலும் அறிய முடியும். ஒன்றா இரண்டா உனக்கு வரிசைப்படுத்திச் சொல்ல?

மார்க்ஸ் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்த சிறுவனைப் போல உதவியாளருக்கும் இவருக்கும் ம்ம்ம்... என 16 வயதினிலே பரட்டையைப்போல தினசரி பத்திரிகை யொன்றில் உளறிக் கொட்டினான். சூத்திர இழிவை அகற்றமுடியாது சாகிறேனே என மனம் வெதும்பிய பெரியாரின் சமூகப்பணியை கொச்சையாக விமர்சித் தான். திராவிட இயக்கத்திற்கும், இலக்கியத்திற்கும் துளி யும் தொடர்பில்லை என்றான். இலக்கிய ஆளுமைகளின் படுக்கையறையில் கூச்சமின்றி நுழைவான். இலக்கிய மேதை என விதந்தோதப்படுபவரை சுத்தக் கிறுக்கு என்பான். இவையெல்லாம் விவாதங்கள் என எவரும் எடுத்துக் கொள்ளவேண்டாம். தந்திரங்கள், தன்னை முன் னிலைப்படுத்திட சமூகத்தை யாசிக்கும் சூட்சுமங்கள். இதன்மீது விவாதமும், விவாதமற்ற சூழலும் நிகழ்ந்த துண்டு. வேறொன்றும் இல்லை. கல்யாண வீடா இருந்தா மாப்பிள்ளை, இழவுவீடா இருந்தா பொணம் என நான் தான் இருக்கனும் எனும் மையத்தத்துவம் அவன் மூளையை உசுப்பேற்ற இவ்வகையான தந்திரங்களை தானே உற்பத்தி செய்து செயல்படுத்துவான்.

நிலைக் கண்ணாடி மிரட்டிய நிமிடங்களில் எழுதி நிறைத்த காகித மலைக்குள் எலியென அமர்ந்து தான் எழுதிய காகிதத்தை தானே தின்றுத் தீர்ப்பான். தின்றது போக தேங்கிய காகிதங் கள் மலையென குவிந்திட்ட நாளிலும் எழுதியதை நிறுத்தவில்லை. இந்தச் சவத்த எங்கேயாவது கொண்டு போய்த் தொலைங்களேன் என சுயமோகனின் மனைவி அவனை நச்சரிக்கத் தொடங்கினாள். குவிக்கப்பட்ட காகித மலைகளும் எழுதப்பட்ட காகிதங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிட வீட்டிற்கு நடுவே டிராபிக் ஜாம் ஆனது. சுயமோகனின் வீடடைந்த பதிப்பக சிகாமணிகள் மதிப்பிற்குரிய காகிதங்கள் இவையென்று எண்ணி கொண்டு சென்றனர். அவர்கள் அள்ளஅள்ளக் குறையாத எழுத்து மலைகளை எழுதிக் குவித்தப்படி இருந்தான் சுய மோகன். பிறகென்ன மொட்டைத்தலை கிடைத்தாலே சூப்பரா மொளகாய் அரைக்கும் சுயமோகன், வாகாகக் கிடைத்த குடுமிகளை விட்டு வைப்பானா. பெயர்த் தெடுக்கப்பட்ட மலைகள் புத்தக ரூபம் கொண்டன. விவாதம் நொறுங்கியது.

இவனின் சுயமனம் இயங்கியது. தலைமைச் சீடனான தான் எப்போது தலைவனாவது? தனியே கண்டான் தனக்கான குழு ஒன்றை. என் குழு, என் படைப்பாளி, என் இலக்கியம் என சிக்கியவர்களை சிறைப்படுத்தியபடி அழகுவிலாசிற்கு டாட்டா காட்டி னான். குருவிகள் அல்ல அவர்கள் கோட்டான்கள் என்றான். பாவம் அழகு சுந்தரம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். குரு சிஷ்ய உறவு கசந்தது. ஆட்சசேபமற்று குருவைப் பின்தொடரும் நியதி எல்லாம் பிறருக்கே என அறிந்தவன் நம் சுயமோகன். விலாசின் ரகசியங்களை அம்பலப்படுத்தி இவனின் அடிப்பொடிகள் நடத்தி வந்த புதிய சொல்லில் கதையொன்று எழுதினான். எழுதப் பட்ட பிரதியை இலக்கியப் பகடி என்றே கொள்ளுங்கள் என்றான். கதையின் நடுவில் சகலரையும் தன் குயுக்தியால் வீழ்த்தப் பார்த்தான். அதிலும் தன் இனிய நண்பனான மக்கள் மைந்தனை வைத வசை இருக்கிறதே... வார்த்தை களால் வடிந்திட முடியாத வசைகள் அவை. உருது பேசும் நொண்டி நாயென்றான். பேசும் மொழியையும் உடலின் சிறு மாறுபாட்டையும் கிண்டல் செய்து நவீன இலக்கிய உலகின் கவுண்டமணியென உலவித் திரிந்தான்.

முகம் சுழித்த 343 பேரில் தன்னை நேசிப்பவர்களென கண்டதில் பாதி தென்பட கலக்கமுற்றான். கலக்கத்தின் உச்சமென அவன் அடித்த அந்தர் பல்டி இருக்கிறதே, குரங்கின் நிலைமாற்றம் என அறியப்படும் குட்டிக்கரணம் கெட்டது போங்கள். இவனின் எழுத்தின் வாசம் கண்ட நுண்வாசகர்களும் இலக்கிய பிதாக்களும் அறிந்து கொண் டனர், கதைகளை கட்டமைத்தது யாரென. ஆனால் உறுதி யான குரலில் இது இவர் எழுதியது என்று தன் விசுவாச அடிப்பொடியை காட்டிக் கொடுத்தான். இதுவே இந்நாள் வரை அறிந்தே செய்யும் பச்சைத் துரோகத்தின் அடையாள மென சிற்றிதழ் வட்டாரத்தில் நிலை கொண்டுள்ளது.

மனஉறுத்தல் தொடர்ந்தபடியே இருந்தபோதுதான் அழகு ராமசாமியின் மரணம் நிகழ்ந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ? இவனுக்கு அது நல்லதொரு வாய்ப்பென அமைந்தது. மரணம் தின்ற மாமனிதன் குறித்த இரங்கற் கட்டுரையை எழுதத் துவங்கிய நாளில் துவங்கிய அதிர்ச்சி அது புத்தகமாக விரிவு பெற்றது வரை நீண்டது. அதுவரை அழகுராமசாமி குறித்து கட்டமைக்கப்பட்டிருந்த புனித பிம்பங்களை சிதைக்கும் சித்துவேலையை அந்த புத்தகம் செய்ததை அவனும் அறிவான். வாசகா நீயும் அறிவாய். அதுவல்ல விஷயம் இப்போது. மரணத்திற்கு முன்பே எழுதி முடிக்கப்பட்ட புத்தகம் அவரின் அஸ்தி கரைத்திட அரைமணி நேரம் இருந்ததற்கு முன்பே வெளிவந்ததைக் குறித்த வதந்திகளும் குழப்பங்களும் சுயமோகனின் அடிப் பொடிகள் வட்டத்தில் இன்றுவரை சுழன்று கொண்டிருக்கிறது. அவனின் தலைமை அடிப்பொடியன் சுயமோக னின் பித்தலாட்டத்தையும், அதிரடி ஆட்டத்தையும் குறித்தபடியே இவனைப் பின் தொடர்கிறானாம். விரை வில் கூடாரத்திலிருந்து வெளித் தள்ளப்பட்டோ அல்லது வெளியேறியோ வெளியிடும் கதைத்தொகுப்பே இலக் கிய பகடியெனும் இலக்கிய வகைமைக்கு எடுத்துக்காட் டாக நீடித்து நிலை பெறப் போவதாக நம்பத் தகுந்த சுயமோக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசியத் தொடங்கி விட்டன. அந்த புனைவிலக்கியப் பகுதியில் இருந்து கொசுறுப் பகுதி ஒன்றை உனக்கு ரசிக்கத் தருகிறேன் வாசகா! கவனமாக பின் தொடர்க.

வாசகன் கூற்று: அவனின் கதையா அல்லது நீ கூறிக் கொண் டிருக்கும் அவனின் கதையா, அவன் அடிப்பொடிகளின் ஒருவன் கூறப்போகும் கதையின் கதையா எதுவென இருந்தபோதும் திறந்தேன் மனதை தெளிவுற எடுத்து இயம்பு கதை சொல்லியே.

கதைசொல்லி: தான் எழுதப்போகும் நாவலுக்கோ கதைத் தொகுப்பிற்கோ ரஜினியின் வெளிவரப்போகும் திரைப்படத்திற்கு தரும் விளம்பரத்தில் இம்மியும் குறையாத அதே தந்திரத்தை பின்பற்றுவது சுயமோகனின் வழக்கம். ஐம்பெரும் காப்பியங்களின் அடுத்த வரிசையில் நிற்கப் போகிற புத்திலக்கிய புதுவகைக் காப்பியம் இதுவென துர்க்கவை குறித்து அவன் அடித்துவிட்ட பில்ட் அப்புகள் இருக்கிறதே, சிற்றிதழ்களின் பக்கங்களில் ஜிகினா மின் னாத குறைதான். இவனுக்கு இணையாக அல்லது மிகுதியாக அவனின் அள்ளக்கைகள் அவிழ்த்துவிட்ட சரக்குகள் மலைபோல குவிந்து என்னையும் உன்னையும் மிரட்டியதை அறிவோம். பெருங்காப்பியம், முதல் பெருங்காப்பியமிது...தெகிலாமா மொழியின் தொல் சடங்குகளை உச்சத்தில் நிறுத்தப் போகும் பனுவல் இது என்ற பீடிகைக்கு நடுவே துர்க்கவையும் வெளிவந்தது.

எப்போதுமே இவனுக்கு ஜே.லதாவைப் போல நம்பர் ஒன் மீதான காய்ச்சலும், ஈர்ப்பும் இன்றுவரை நீடிக்கிறது என்பதை இந்த கதையின் உள் நுழைந்து நீவிர் உணரக் கூடும். வந்த காப்பியம் தெகிலாமா வாசகனின் புத்தக அலமாரியில் சேகரமானதுதான் மிச்சம். புத்தகத்தைக் குறித்து எழுதிப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அவனுடைய சகாக்களின் சர்க்கஸ் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. போட்ட இடத்தை விட்டு நகர மறுத்து அடம்பிடித்தது பிரதியின் பிரதி. சிலம்பிற்கு பதவுரை, பொழிப்புரை எழுதி பெருங்காப்பியமென பீற்றித் திரிந் தால் என்ன செய்யமுடியும் என்ற விமர்சனமும் யதார்த்த மாக முன் வைக்கப்பட்டது. பதட்டமடைந்த சுயமோகன் அதிரடியாக திட்டமிட்டான். எல்லாம் முடிந்தது, இனி தெகிலாமா சமூகத்தோடு பேச்சு, எழுத்து, விவாதம் என எதுவுமில்லை எனக்கு என்று சிற்றிதழ் ஒன்றில் பிரியா விடையைப் பகர்ந்தான். ஒரு மாதம்தானே பொறுத்துக் கொள்வோம் என்று நினைத்திருக்கலாம், அல்லது படைப்பாளப் பெரும்படை கிளம்பி வந்து இவன் வீட்டு வாசலில் நின்று போகாதே, போகாதே பெரும் புலவா என ஒப்பாரி பாடப்போகிறார்கள் என்று நினைத்திருக்க லாம். ஒரு மண்ணும் நடக்கவில்லை.

விடைபெறல் கடிதம் வெளியிட்ட சிற்றிதழ் அலுவலகத்தின் தொலை பேசி எண்களை சுயமோகன் தேய்த்ததுதான் மிச்சம். எந்த தகவலும் வராது கண்ட சுயமோகன் தன் வாழ்நாளில் முதன்முதலாக அதிர்ச்சியுற்றான். யாதொரு எதிர்வினையும் நிகழாதது கண்டு கலங்கிடவில்லை. கடுப்பின் உச்சத்தில் தானே வேறொரு பெயரில் கடுதாசி எழுதிப் போட்டான். தீர்மானத்தை திரும்பப் பெறுங்கள் என்ற இவனின் விருப்பத்தை அக்கடிதம் வெளிப்படுத்தியது.

வாசகர் கூற்று : அப்பப்பா ஒருவழியா சாபம் நீங்கிருச்சு, ஆதியில் பெற்ற வரம் இயக்கிட சுயமோகன் சுகமடைந் தான்னு கதையை முடிக்கப் போகிறீர் அப்படித்தானே!

கதைசொல்லி: சுத்தக் கவனக்குறைவான ஆளய்யா நீர். முடிந்தது அனைத்தும் என்பதெல்லாம் சுயமோகனுக் கில்லை. மூச்சுவிடக் கிடைத்த நேரத்தை கோடம்பாக் கத்து கதை டிஸ்கஷனில் கழிக்கத் துவங்கினான். அதன் படோடோபத்தில் விளிம்பிலும் விளிம்பாக விளிம்போ ரத்தில் நின்ற நிலை அவனை எரிச்சல் அடையச் செய்தது. பிறகென்ன எடுத்தான் அவனின் இயல்பான ஆயுதத்தை, வெகுஜனத்தின் நேசத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் உரிய திரைக்கலைஞர்களை பகடி செய்தான். முதல்வராக ஆன நடிகரின் உச்சரிப்பை கிண்டல் செய்தான். நடிப்பின் இலக்கணம் என நிறுவப்பட்டவரின் நடிப்பாற்றலை குற்றம் சொன்னான். யார்ரா அது என கோடாம்பாக்கத்துப் பெருசுகள் திரும்பிப் பார்த்திடும் வரை நிறுத்தவில்லை இந்த சலம்பல்களை.

வாசகன் கூற்று:படைப்பிலக்கியத்திற்கு தொல்லை விட்டது என்று மகிழும் அய்யா.

கதைசொல்லி:அதுதான் இல்லை சினிமா சிட்டிங்குகளில் இருந்து திரும்பிய பிறகான பொழுதில் எழுதிக் குவித்த கதாசாகரம் விரைவில் வெளிவரப் போகிறதாம். ஒவ் வொன்றும் 1000 பக்கங்கள் கொண்டு 10,000 பக்கத்தில் அமையப் போகிற அந்த சோகவனத்தை எதிர்கொள்ள முடியாது தவிக்கப் போகிற தெகிலாமா சமூகத்தின் சோக சித்திரம் சுயமோகனின் கனவில் இப்போதெல்லாம் அடிக்கடி நிழலாடுகிறதாம்.

வாசகன் கூற்று : நிறுத்துமய்யா, பின் தொடரமுடியாத பெருந்துயரை சொல்லிச் செல்கிறீரே, எப்படி சாமி 10,000 பக்கத்தை படிச்சு முடிக்க, நூறாவது பக்கம், எட்டாவது பாகத்தை எட்டும் போது மறந்து போகுமய்யா.

கதைசொல்லி: இதெல்லாம் உன் பிரச்சனை. நம்மாளுக்கு சிக்கலே வேறு. எழுதாவிட்டால் அதிலும் இடது காழ்ப்பைக் கலந்து எழுதாவிட்டால் வளரும் மச்சம் கனவில் அவனை மிரட்டுவதை எவர் அறிவர்? எனவே தான் வளர்கிற மச்சத்தின் உயரம் அவனை மிரட்டிட எழுதிக் கொண்டேயிருக்கிறான். ஒன்றும் முடியாதபோது உட்காந்து யோசித்து கிச்சுக்கிச்சு தொடர் எழுதுவான். ஆளுமைகளை விமர்ச்சிக்கச் சொன்ன மூளை அரிப்பிற்கு இயங்கிய சுயமோகன் ஆளுமையாக வளர்ந்து வருகிற அமைப்புகளின் பக்கம் பைய திரும்பியுள்ளான். உரிய நேரத்தில் செயலாற்றச் சொல்லிடும் கிந்துத்துவ மூளை அரிப்பின் உத்தரவின்படியே இப்போது முன்னேற்ற எழுத்தாளர் சங்கத்தின் பக்கமும் தன் மையத் தத்துவ பார்வையைத் திருப்பியுள்ளான்.

வாசகன்கூற்று: கட்டமைக்கப்பட்ட ஆளுமைகளை, தத்து வங்களை கோட்பாடுகளை அமைப்புகளை எதுவுமில் லையென சொல்வதின் மூலம் எதன் மீதும் பற்றற்று இருங்கள் என்கிறான் என்று கொள்ளலாமா?

எழுத்தாளன் கூற்று: தவறாக கணித்திட வேண்டாம் எல்லாக் கோட்பாடுகளையும் பகடி செய்ததில்லை அவன். மிகக் கவனமாக கித்துத்துவத்தை விமர்சிக்காமல் தவிர்த்தும் வைதீக நெறிகளை மேன்மைப்படுத்தியும் கதையெழுதிட தவறவில்லை என்பதையும் கவனிக்க. மனநோய் விடாது உந்தித் தள்ள தன் பிறப்பின் ரகசிய மறிந்து எழுதிக் கொண்டேயிருக்கும் சுயமோகனின் விசித்திர செயல் கண்டு எனக்கோ அல்லது உங்களுக்கோ யாதொரு வருத்தமும் இல்லை. பாவம் சாபவிமோசனம் பெற எழுதிக் கொண்டேயிருக்கும் அவனை விட்டு விடுங்கள். அவனை தொந்தரவு செய்யாதீர்கள் அவன் எழுதிக் கொண்டேயிருக்கட்டும். அடிக்குறிப்புகள்:

1.எழுத்தாளன் துவங்கி நடத்திய சஞ்சிகையின் பெயர்.

2.தன் அடிப்பொடிகளை ஏவிவிட்டு பின்னிருந்து எழுத் தாளனே இயக்கிக் கொண்டிருக்கும் இலக்கிய இதழின் பெயர்.

3.கோயனுக்கும் நெற்றியில் தோன்றிய மச்சம் பிறந்த அன்றே மறையும் படிய என சூதறியப்பட்டது

4.2ம் உலக யுத்தத்தின் போது கிர்மானிய தேசத்து ராஜன் கோட்லரின் தலைமை விதூஷகனாக இருந்தவன் கோயன். மச்சம் மறைந்த தகவலை கர்வீன் நகரத்து ஆவண காப்பக தஸ்தாவேஜீக்கள் உறுதி செய்கின்றன்.

5.1900களின் துவக்க காலங்களில் மேற்குலகில் தன் இடது பக்கம் அறைந்த குழந்தைகள் பிறந்ததையும் அவற்றின் கைகளில் மசிதடவிய எழுதுகோலை தந்தபிறகு அந்த சிசுக்கள் வளர்ந்து எழுத்தாளர்களாகி மிருகப்பண்ணை கோட்லரின் வதை முகாம்களை மறந்து அல்லது மறைத்து நாவல் எழுதி தன் இடது காழ்ப்பை போக்கியதற்கும் அதற்கு ஈடாக ஒற்றர் ஈட்டுத்தொகையை டாலரில் பெற்றதையும் காஷிங்டன்னின் ஒரிஜினல் ரெக்கார்டுகள் அறிவிக்கின்றன.

6.சிசிபஸ் என்ற புனைகதை எம்.ஜி.சுரேஷால் எழுதப் பட்டு பன்முகம் எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது.

7.தர்மச்சக்கரம் கிந்துத்துவம் என்று அறியப்பட்ட அதத்துவத்தை பின்புலமென கொண்ட பத்திரிக்கை.

8.தெகிலாமா சமூகம் தான் பேசும் தெகிலா மொழியால் அழைக்கப்படுகிறது. சங்கம் கட்டி மொழி வளர்த்த பெருமையும், கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி எனும் பெரு மிதமும் கொண்ட ஒரு தொல்குடிச் சமூகமாகும்.

9.குருவிகள்: அழகு விலாஸின் மாடியில் அவரின் சிஷ்யர் கள் இலக்கிய விவாதித்திற்காக கூடுவர். எழுத்தாளர் களுக்கு அமைப்பு தேவையில்லை, அமைப்பின் எழுத் தாளர்களது படைப்பில் கொள்கையும் கோஷமும் கொடி பிடிக்கும் எனவே அமைப்பே தேவையில்லை என்ற படியே ஒரு அமைப்பாக திரளும் ஏற்பாடு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com