Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

வீடு வரை கனவு, காடு வரை கடன்
கலையரசன்
.

அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பாற்ற, சொந்த மக்களை பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்) தோற்றம் இது. "அமெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொறுங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில் எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் எழுந்துள்ள தேவையை ஒட்டி இந்த கட்டுரையை எழுதவேண்டியுள்ளது.

ஒரு வீடு வாங்குவது தொடர்பாக நமது நாடுகளுக்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். நமது நாடுகளில் (பணக்காரரை விட்டுவிட்டால்) ஓரளவு நல்ல மாத வருமானம் எடுக்கும் நடுத்தர மக்கள், சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு பணத்துடன், தமது சொத்துகள் எதையாவது அடமானம் வைத்து வங்கி கொடுக்கும் கடனையும் வைத்து வாங்குவார்கள். வாழ்க்கை செலவுக்கே போதாத சம்பளம் பெறும் உழைக்கும் வர்க்கத்தினர், எங்காவது வசதியற்ற வாடகை வீட்டிலோ அல்லது குடிசையிலோ தமது காலத்தை கழிப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரை சொந்த வீடு என்பது ஒரு கனவு மட்டுமே.

பணக்கார மேற்குலக நாடுகளில் நிலைமை வித்தியாசம். முன்பு என்னதான் சோஷலிச நாடுகளைப்பற்றி இல்லாத, பொல்லாத கதைகளை கட்டி விட்டாலும், அங்கே அனைத்து மக்களுக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுத்த சோஷலிச பொருளாதாரம் குறித்து உள்ளுக்குள் பொறாமை கொள்ளவே செய்தனர். ஒவ்வொரு பிரசைக்கும் வீடு அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட மேற்கத்திய "நலன்புரி அரசுகள்"(சோஷலிசத்திற்கு மாற்றீடு), தனியார் வீட்டுமனை நிறுவனங்களிடம் விரைவில் லட்சக்கணக்கான வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு கோரின. அரசு வழங்கிய மானியங்களை பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள் கட்டி முடித்த வீடுகளில், (அப்போது வசதியான வாழ்க்கைக்கேற்ற சம்பளம் வாங்கிய) உழைக்கும்வர்க்க மக்கள் குடிபுகுந்தனர். முதலில் வாடகைக்கு வீடு கிடைப்பது பற்றியே அதிக அக்கறை காட்டப்பட்டது. எனினும் சோஷலிச நாடுகளைப் போல, முதலாளித்துவ நாடுகளிலும் சாதாரண உழைக்கும் மக்களும் சொந்த வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்ற திட்டம் உருவானது.

இரண்டாம் உலகபோருக்கு முன்னர், மேற்குலகிலும் நமது நாடுகளில் உள்ளது போன்றே, "வல்லவன் வாழ்வான்" என்ற பாரம்பரிய முதலாளித்துவ அமைப்பு இருந்தது. அதன்படி ஒருகாலத்தில் பணம் உள்ளவர்கள் மட்டுமே சொந்த வீட்டில் வாழலாம், என்ற நிலையை மாற்றி சாதாரண தொழிலாளியும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்ற புரட்சிகர மாற்றம், முதலாளித்துவ பொருளாதாரத்தில் சாத்தியப்படாத ஒன்று தான். இருப்பினும் Mortgage எனப்படும், வீட்டுமனை கடன் வழங்கும் திட்டம் அதனை சாத்தியமாக்கியது. தற்போது மேற்குலக நாடுகளில், ஒருவரது வருமானம் நிச்சயப்படுததப்பட்டு விட்டதால், அதுவும் உலகிலேயே அதிகூடிய சம்பளம் கிடைப்பதால், வங்கிகள் கடன்கொடுக்க முன்வந்தன.

உதாரணத்திற்கு தகைமையற்ற தொழிலாளிக்கும் கிடைக்கும் சம்பளம் சராசரி ஆயிரம் டாலர் ஆகில், அவர் ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வீட்டை வாங்குவாராகில், அவர் அதற்காக பெற்றுக்கொள்ளும் கடனை 20 அல்லது 30 வருடஙகளில் கட்டி முடிப்பார் என்ற எதிர்பார்ப்பில், வங்கிகள் Mortgage(அடமானம்) பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கின்றன. நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது, மேற்குலக நாட்டு பிரசை ஒருவர் தன்னை தானே அடமானம் வைத்துக் கொள்கிறார். அது எப்படி? வீடு வாங்க விரும்பும் ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் நிரந்தர பணியுடன், குறிப்பிட்ட அளவு சம்பளம் பெறுபவர் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

ஒருவேளை சம்பளம் போதாது என்றால், மனைவியின் சம்பளத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முழு குடும்பமும் கடனில் மூழ்குகின்றது. அந்த கடனாளிகள், வீடு வாங்கியதாலேயே, வேலை போய்விடும் என்ற பயத்தில், கைகட்டி, வாய்பொத்தி வேலை செய்வதை; ஓவர்டைம், இரண்டு வேலைகள் என்று ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்கள், வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைப்பதை காணலாம். கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் கூறியது போல; ஒரு தொழிலாளி, வேலை வாங்கும் முதலாளியால் நேரடியாகவும், வங்கிகளால் மறைமுகமாகவும் சுரண்டப்படுகிறான்.

ஐரோப்பாவில் விதிகள் கடுமையாக உள்ளன. ஒரு வீட்டை வாங்கியவர், சில வருடங்களுக்கு பின்னர் விற்றால், இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காரணம், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப்பணம் முழுமையாக தமக்கு வட்டியுடன் வரவேண்டுமென நினைக்கின்றன. ஒருவேளை வேலை பறிபோனால், வாங்கிய வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். கடன் வாங்கியவர் காலக்கெடுவுக்குள் இறந்தால், வீட்டுக்கடனை வங்கிகள் திரும்பப்பெற ஆயுட்கால காப்புறுதி கட்டியிருக்க வேண்டும். அல்லது அந்த வீட்டில் வசிக்கும் மனைவி, பிள்ளைகள், தொடர்ந்து கட்ட வேண்டும். யாராவது கடனை கட்டாமல் நாட்டை விட்டு ஓடுவது சுலபமான விடயமல்ல. ஒருவர் இன்னும் எவ்வளவு கடன் கட்ட வேண்டும் என்ற விபரம்(தவணை தவறினால்), அவரது கடவுச்சீட்டில் டிஜிட்டல் முறையில் பதியப்படுவதால், எல்லையை கடக்க அனுமதி கிடைக்காது. அப்படியே சட்டவிரோதமாக வேறு நாட்டிற்கு போய்விட்டால், பிடிபடும் போது கிரிமினல் குற்றச்சாட்டில் சிறைக்கு போக வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது கூட, நிலுவையில் இருக்கும் கடனை எப்பாடு பட்டாவது அடைக்க வேண்டும்.

காலங்காலமாக ஒரு கட்டுக்கதை உலாவிவருகின்றது. வீட்டுவிலை எப்போதும் கூடிக்கொண்டே தான் இருக்கும் என்று பல மக்கள்(படித்தவர்கள் கூட) அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வீடுகளின் விலை, பொதுவாக பெரிய வீட்டுமனை நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சிறப்பாக செய்வதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. சனத்தொகை பெருக்கம் பல துறைகளை செழித்தோங்க வைக்கின்றது. உதாரணத்திற்கு, ஓய்வூதியம் வழங்கும் காப்புறுதி நிறுவனங்களும் பங்குச்சந்தைக்கு வருகின்றன. "தற்போது தொழில் புரியும் இத்தனை லட்சம் மக்கள், ஒரு காலத்தில் 60 வயதாகி ஓய்வெடுப்பார்கள்", என்ற எதிர்பார்ப்பில் அந்த வர்த்தகம் நடக்கின்றது. அதுபோன்றே "இந்த நாட்டில் இத்தனை உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் வாங்குவதற்கு வீடு வேண்டும்", என்ற எதிர்பார்ப்பில் வீட்டுமனை நிறுவனங்களின் வியாபாரம் நடக்கின்றது. நமது நாடுகளிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அனேகமாக பண வசதி உள்ள, அல்லது நிரந்தர வருமானம் கொண்ட குறிப்பிட்ட மக்களுக்கு வீடுகள் விற்பதையே கறாராக நடைமுறைப் படுத்துவதால், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்வதில்லை.
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் விதிகள் கடுமையாக இல்லை.

லண்டனில் எனக்குத் தெரிந்த சிலர், மாதம் 800 பவுன் வருமானம் எடுப்பவர்கள், வாங்கிய வீட்டிற்கு மாதம் 1000 பவுன் Mortgage கட்டுவதை பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்று கேட்டால், அங்கே சில வங்கி ஊழியர்கள் செய்யும் ஊழலால், அதாவது போலி பத்திரங்கள் தயாரித்து, வருமானத்தை கூட்டி காட்டி Mortgage எடுப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிலும் அது போன்ற நிலைமை எப்போதும் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் நிதி நெருக்கடி, அதன் காரணமாக எழவில்லை. மோசடியே வங்கிகளின் அலுவலக செயல்முறையாக மாறியதன் விளைவு இது. எந்த வருமானமும் இல்லாதவர்கள் கூட வீடு வாங்கிக் கொள்ளுமாறு ஆசை காட்டி மோசம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் வீட்டை காலியாக்க வேண்டிய நிலை வந்த பின்னர் வழக்கறிஞரை தொடர்புகொண்ட பின்னர் தான், முகவர்கள் எவ்வாறு ஏமாற்றியுள்ளனர் என்ற விபரம் அம்பலமானது. வீடு வாங்கும் போது நிரப்பப்பட்ட வங்கியுடனான கடன் ஒப்பந்த படிவத்தில், வருமானம் பற்றி எங்கேயுமே குறிப்பிடப்படவில்லை. வீடு வாங்கிய பலர் அதிகம் படிக்காத அப்பாவி மக்கள். ஆனால் வங்கியின் முகவர்கள் அப்படியானவர்கள் அல்ல. விதிமுறைகளை கற்றுக்கொள்ளாமல் ஒருவர் முகவராக முடியாது. நிலைமை இப்படியிருக்கையில், சாதாரண மக்கள் தமக்கு பொய் தவல்களை கொடுத்து ஏமாற்றி விட்டதாலேயே, இந்த நிதி நெருக்கடி ஏற்பட்டது என்று வங்கி மேலாளர்கள் பொய்யுரைக்கின்றனர். சில ஊடகங்களும் இடந்த பொய்யை அப்படியே நம்புகின்றன.

அதற்கு முன்னர் அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் பற்றி சிறிய அறிமுகம். முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டமாக, அமெரிக்காவில் வங்கிகள் அனைத்து நிறுவனங்களையும்(அது உற்பத்தி துறையாகட்டும், அல்லது சேவைத் துறையாகட்டும்) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. ஒரு கம்பெனி நடத்துவதற்காக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன்(Liquidity) மட்டும் இதற்கு காரணமல்ல. பல நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வங்கிகளே வாங்கி, பிரதிநிதிகளை கொண்டு பங்குதாரர் கூட்டத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன. அப்படித்தான் வீடு கட்டிக் கொடுக்கும் (ரியல் எஸ்டேட்) கம்பனிகளிலும் வங்கிகள் ஆளுமை கொண்டிருந்தன. அந்த அகங்காரமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானதை பின்னர் பார்ப்போம்.


அனேகமாக 2001 ம் ஆண்டிற்கு(செப்டம்பர் 11 ன் தாக்கம்?) பிறகாக, அமெரிக்க மக்கள் அதிகம் செலவளிக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பியது. பணம் ஓடித்திரிய வேண்டும் என்பது சந்தை பொருளாதார தாரக மந்திரம். நாம் செலவளிக்கும் ஒவ்வொரு சதமும், எங்கேயோ ஒருவருக்கு வருமானமாக போய்ச்சேருகின்றது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் படி, கடன் வழங்கும் விதிகளை தளர்த்த அரசாங்கமும், வங்கிகளும் முன்வந்தன. சந்தேகத்திற்கிடமின்றி இது பலரை கடன்வாங்க வைத்திருக்கும். ஆகவே வழமைக்கு மாறாக, வருமானம் குறைந்தோரும், அல்லது எந்த வருமானமும் இல்லாதவர்களும் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் யாருக்கு என்ன லாபம்? இப்போது தான் வங்கிகளை திவாலாக்கிய மாபெரும் பங்குச்சந்தை சூதாட்டம் ஆரம்பமாகின்றது.

(நமது நாடுகளில் "ரியல் எஸ்டேட் கம்பெனி" என்று அறியப்பட்ட) வீடு விற்கும் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வீடுகளை கட்டி விற்றுத்தள்ளின. Mortgage முறையின் கீழ், ஒருவர் அந்த வீட்டை வாங்கி வங்கியிடம் அடமானம் வைக்கின்றார். அதற்கு வீட்டின் மொத்த விலையை வங்கி ரியல் எஸ்டேட் கம்பெனி கையில் கொடுக்கின்றது. அடமானம் வைத்தவரோ, வீட்டின் விலையை மட்டுமல்ல, தரகர் கூலி, சட்டவாக்க கூலி, போன்றவற்றை ரொக்கமாக கடன் என்ற பெயரில் வீடு வாங்கியவரின் தலையில் கட்டிவிடுகின்றது. கடனுக்கு வரும் வட்டி தான் வங்கிகளின் மிகப்பெரிய வருமானம். வழக்கமாக வீட்டு அடமானப்(Mortgage) பங்குகளை வங்கிகள் சந்தையில் ஏலம் விடுகின்றன. அதேநேரம் சாதாரண "வீட்டு சொந்தக்காரர்" மாதாமாதம் கட்டிவரும் வட்டிப்பணத்தை ஆதாயப் பங்காக(dividend) லாபம் பார்க்கின்றன.

சில வங்கி முகவர்கள் வருமானம் பற்றி எதுவும் கேட்காமலே (சப் பிரைம் திட்டம்) கடன் கொடுத்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அது இப்போது தான் தமக்கு தெரிந்தது போல பலர் பாவனை பண்ணுகின்றனர், அல்லது அந்த திட்டத்தை கொண்டு வந்த அரசியல்வாதிகள் மீது பழிபோடப் பார்க்கின்றனர். உண்மை என்னவெனில், அனைத்து வங்கிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் என்ன நடக்கின்றது என்பது தெரிந்தே இருந்தது. "நிறையப்பேர் வீடு வாங்கியிருக்கிறார்கள்" என்ற வெறும் எண்ணிக்கையை வைத்து, அனைவரும் பங்குச் சந்தையில் சூதாடி, கோடி கோடியாக சம்பாதித்தனர். இந்த வருடம் மட்டும் தான், "எல்லாம் மாயை தானா?" என்று திடீர் ஞானம் தோன்றியதால், முதலீட்டாளர்கள் தமது பணத்தை திருப்பி எடுக்க ஓடிய போது, பங்குகளின் விலை சடசடவென வீழ்ச்சியடைந்து, சந்தை ஸ்தம்பிதமடைந்தது.

பங்குச்சந்தையில் ஒரு பக்கத்தில் சூதாடியே பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஊகவணிகத்தில் கில்லாடிகளான அவர்கள், வீட்டு அடமானப் பங்குகளை அதன் உண்மையான பெறுமதியை விட பலமடங்கு அதிகமாக உயர்த்தினார்கள். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது மகிழாதவர் யார் இருக்கமுடியும்? இந்த சூதாட்டத்தால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், முதலீட்டு வங்கிகள், பங்குசந்தை தரகர்கள், பங்குதாரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே பெரும் பணம் புரட்டியது. அமெரிக்காவில் இந்த "அற்புதம்" நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளும் அமெரிக்க அசையா சொத்துகளில்(இங்கே வீடுகள்) முதலிட்டன. அப்படி கடல்கடந்து முதலிட்டு லாபமீட்டிய பெல்ஜிய வங்கியான Fortis, நெதர்லாந்து வங்கியான ABN-Amro என்பன இன்று நெருக்கடிக்குள் சிக்கி, திவாலாகும் நிலையில் அவ்வவ் அரசாங்கங்களால் தேசியமயமாக்கப்பட்டுள்ளன.

நடந்தது என்ன? அமெரிக்க பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து, வீட்டு மனை வியாபாரம் பற்றி பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன. விதி தளர்த்தலால், எந்தவித முன்யோசனையுமின்றி சேர்க்கப்பட்ட மக்களின் தொகையை காட்டித் தான் பங்குகளின் பெறுமதி கூடியது. ஆனால் அது ஒரு கற்பனாவாத பெறுமதியாக இருந்தது. பல வருடங்களாக யாரும் அதனை ருட்படுத்தவில்லை.(பங்குச்சந்தையில் இதெல்லாம் சகஜம்). ஆனால் கடந்த வருடம் தான் வங்கிகளை எதிர்காலம் பற்றிய பயம் கவ்விக்கொண்டது. எந்த யோசனையுமின்றி, இத்தனை கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோமே, அது மீண்டும் எமது கைக்கு வருமா? என்று எழுந்த சந்தேகம் வங்கிகளை திவாலாக்கியது. பொய், புரட்டு, மோசடி நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது. அதற்கு அவர்களே பலியாகிப் போனார்கள்.

இப்போது என்ன நடக்கிறது? குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமெரிக்க திறைசேரி அதிகாரி போல்சன் அறிவித்த 700 பில்லியன் டாலர் உதவி, தமக்கு வேண்டிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு(வீடு வாங்கி, நடுதெருவுக்கு வந்தவர்கள்) ஒரு சதம் உதவி கூட இல்லை. அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் உதவி. இறுதியில் வென்றது முதலாளித்துவம், தோற்றது மக்கள்.

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவி எதற்கு பயன்படுத்தப்படப் போகின்றது? நிச்சயமாக பங்குகளின் பெறுமதியை மீண்டும் அதிகரிக்க வைக்குமென்பதால், பங்குதாரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம். (இல்லாவிட்டால் தெருவுக்கு வரவேண்டியிருக்கும்). இந்த அரச திறைசேரி நிதியை ஆதாயப்பங்கு வழங்கவும், அதைவிட மேல்மட்ட மானேஜர்களின் போனஸ் கொடுக்கவும் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்? இந்த வங்கி தலைமை முகாமையாளர்களின் சம்பளமே குறைந்தது மாதம் ஐம்பதாயிரம் டாலர்கள். வருடாந்த போனஸ் பணம் சில லட்சம் டாலர்கள். அவர்கள் வேலையை விட்டு செல்லும் போது கிடைக்கும் "தங்கக் கைகுலுக்கல்" தொகை சிலநேரம் மில்லியனை தாண்டும். அதனை விட அவர்களே குறிப்பிட்ட அளவு பங்குகளை சொந்தமாக வைத்துள்ளனர்.

நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாகில், குறைந்த பட்சம் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளையாவது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் பொதுவான எதிர்பார்ப்புக்கு மாறாக, இவர்கள் திருந்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்காவில் புஷ் வழங்கிய மீட்பு தொகையை வாங்கிக் கொண்ட AIG நிறுவன முகாமையாளர்கள் செய்த முதல் வேலை, ஆடம்பர கடற்கரை விடுதிகளில் உல்லாசமாக பொழுது போக்கியது தான். அந்த விடுதியில் ஒரு நாள், ஒரு அறைக்கான வாடகையே ஆயிரம் டாலர் எனும் போது மிகுதியை நீங்களே கணக்குப் போட்டு கொள்ளுங்கள்.

Fortis என்ற தேசங்கடந்த வங்கி திவாலாகி பெல்கிய அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அந்த வங்கி நிர்வாகிகள் முதலீட்டாளருக்கு விருந்து கொடுக்கவென, மொனாக்கோ ஐந்து நட்சத்திர விடுதியில் ஆடம்பரமாக கொண்டாடினர். அந்த விருந்துக்கு ஆன செலவு, ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் யூரோக்கள்! ஏற்கனவே வங்கிப் பணத்தை திருடி திவாலாக்கிய இந்த கொள்ளைக் கோஷ்டிக்கு, அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து, அவர்களது ஆடம்பர வாழ்க்கையை நிச்சயப்படுத்தியுள்ளது. அப்பாவித்தனமாக நெருக்கடியில் சிக்கி வீடுகளை இழந்து நிரந்தர கடனாளிகளாகிய மக்களின் கண்ணீரை துடைப்பதை விட, முதலாளிகளின் செல்வம் குறையக்கூடாது என்பதிலே தான் அரசுக்கு அக்கறை.

பொருளாதார நெருக்கடி இப்போது தான் ஏற்படுவதல்ல. முன்னர் ஒருமுறை தென் கொரியா கார் உற்பத்தி பெருக்கத்தால், வாங்குவார் அற்று தேங்கிப்போய், அது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. அப்போது கார் கம்பெனிகளை தென்கொரிய அரசு தேசியமயமாக்குவதை தடுத்தது I.M.F. (அதுவும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனம்). இன்று ஒரு சோஷலிச அரசுக்கு நிகராக, அமெரிக்க அரசாங்கம் வங்கிகளை தேசியமயமாக்கி வருகின்றது. வெனிசுவேலாவின் சோஷலிச ஜனாதிபதி சாவேசும் அமெரிக்க அரசின் இந்த இரட்டை வேடத்தை சுட்டிக்காட்ட தவறவில்லை. தான் தொலைத்தொடர்பு, பெற்றோலிய நிறுவனங்களை தேசியமயமாக்கிய போது, தன்னை ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன் என்று கூறிய அமெரிக்க ஊடங்கங்கள், தற்போது புஷ் விடயத்தில் மௌனம் சாதிப்பதேன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.எம்.எப்., உலகவங்கி போன்றன ஆலோசனை கூறும் தகுதியை இழந்து விட்டதால், அவை சொவதை இனிமேல் கேட்கப்போவதில்லை என்று, வெனிசுவேலா, பொலீவியா, மற்றும் நிகராகுவா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும் லத்தீன் அமெரிக்க அபிவிருத்திக்காக "தென்னக வங்கி" ஒன்றை ஸ்தாபிக்கப் போவதாகவும் முன்மொழிந்துள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com