Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

3. உங்களை என் முகத்தைப் பார்க்கும்படி செய்த கதை
அழகிய பெரியவன்
.

புட்டண்ணன் பத்து இணைகளுக்கு எப்படி சாதிமறுப்பு திருமணத்தை செய்துவைத்தார் என்று தெரியவில்லை. அதை சொல்வதற்கும் இன்று ஆளில்லை. அம்மாவுக்கு மேற்கொண்டு எதுவும் தெரியாது என்பதே உண்மை. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்தவர்கள் இதை சொல்லிவிட்டார்கள். மெய்யாகவே அவரிடம் இது பற்றிய விவரங்கள் இல்லை. பின்பு ஒருமுறை நான் நினைவுபடுத்தி சொல்லக்கேட்டேன். எல்லாம் சொல்கேள்விதாண்டா. ஆயாகிட்ட கேட்டிருந்தியானா ஒருவேளை சொல்லியிருப்பாங்க. கவுண்டர்களோட போராடி அதை செஞ்சார்னு எங்கப்பா சொல்லியிருக்கார் என்றார். புட்டண்ணன் செய்துவைத்த திருமணங்கள் எவ்வளவு கடினமானவை என்பதை இன்றும் கூட உணர முடியும்.

மாங்குப்பத்துக்கு உடனடி அச்சுறுத்தலாக அன்றைக்கு தேவலாபுரம் இருந்திருக்கும். தேவலாபுரம் கூப்பிடு தொலைவில் இருக்கிறது. ஊரைச் சுற்றிலும் வயல்வெளிகள். தென்னந்தோப்புகள். பாலாற்று நீர் உறிஞ்சி செழிக்கும் கரும்பும், நெல்லும், வாழையும். விசேஷமாக வெற்றிலையைப் பயிரிடுவார்கள். காற்றை கை நீட்டி இகழ்ந்தபடி முரட்டு கர்வத்தோடு வளரும் கொழுந்து வெற்றிலைகள். நிலம் இல்லாமல் இருந்திருக்கும் தலித் மக்கள் அந்த நிலங்களில்தான் வேலை செய்து பிழைப்பு நடத்தியிருப்பார்கள். இந்த வளத்துக்கு சொந்தக்காரர்களான வன்னியர்களை எதிர்த்து ஒரு சொல்லை உதிர்க்க முடிந்திருக்காது. இவைகளையெல்லாம் மீறிதான் அத்திருமணங்களை புட்டண்ணன் நடத்தியிருப்பார். அவரே தனித்துப் போராடி யிருக்கலாம். அந்தத் திராணி கொண்ட வீரன்தான் அவர். அடித்தால் ஆறு மாதத்திற்கு எழமாட்டார்கள். உள்காயம் தீர அய்ந்து மண்டலம் மருந்து தின்னவேண்டும் என்று அம்மா சொல்வார். இதற்கு அவர்கள் பயந்திருக்கலாம், நடுங்கியிருக்கலாம். புட்டண்ணனுக்குத் துணையாய் மாங்குப்பத்தில் இருந்த வயதொத்தவர்கள் நின்றிருக்கலாம். ஏழூரு பஞ்சாயத்தும்கூட நடந்திருக்கும்.

சின்னவயதில் பஞ்சாயத்து நடந்தால் நான் வேடிக்கைப் பார்க்கப் போவதுண்டு. பஞ்சாயத்து மாரியம்மன் கோவில் அருகில் நடக்கும். இல்லையென்றால் ஊர் ரட்சை அருகிலே ஒரு பூவங்காய் மரம் கசக்கிப் பிழிந்த துணிபோல வளர்ந்திருந்தது. சில ஊர்களில் ஆல மரமோ, அரச மரமோ உண்டு. அம்மரங்களின் அடி திம்மையில் மண் அணைத்து, சதுரவடிவில் கல் பரவியிருப்பார்கள். எத்தனை பேரானாலும் உட்கார வசதியாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களோ, தீர்வு வேண்டும் என்பவர்களோ பிராது கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து சீட்டு தருவது அது. எல்லாரும் சேரும் நேரமாகக் குறித்து கோல்காரன் பஞ்சாயத்தை கூட்டிவிடுவான்.

இன்னிக்கு சாங்காலம் ஆறுமணிக்கி, மாரியம்மா கோயிலாண்ட ஊர் கூட்டம்பா. எல்லாரும் வந்துர்னம்னு கேட்டுக்கிறம்பா... ஆ... ஊர்தோட்டி சந்து சந்துக்கும் பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டு போவான். குறித்த நேரத்தில் பஞ்சாயத்து கூடும். பஞ்சாயத்தில், கட்டுப்பாட்டை மீறி பேசுகிறவர்களுக்கு உதைவிழும். உதைக்க வேண்டியது கோல்காரன் கடமை. அதற்காகவே அவன் பசிய மரத்தின் மெலிந்த விளார்களை உடைத்து பின்னி வைத்திருப்பான். அல்லது சாட்டை இருக்கும். பெண்கள் பேசமாட்டார்கள். அவர்கள் எட்டி நிற்கவேண்டும். தேவையேற்பட்டால் மட்டுமே அவர்களிடம் வாக்குமூலம் கேட்கப்படும்.

காதல் இணைகளை பிடிக்கவும், கள்ளக்காதலர்களை பிடிக்கவும் வாலிபர்கள் கண்ணி வைத்து அலைவார்கள். ஊரைவிட்டு ஓடிப்போகின்ற இணைகளையும் தேடிப்போய் கூட்டிவருவது அவர்கள்தான். ஊரில் எங்கு, எந்த நிலையில் இருந்தாலும் பிடித்து கட்டிவிடுவார்கள். கட்டிவிடுதல் என்றால் ஏதாவது ஒரு வீட்டில் அடைத்துவிடுவது. பிறகு பஞ்சாயத்து நடக்கும். பிடிபட்டவர்களுக்கு அதுவரை படபடப்பில் கழியும் நேரம். இருட்டுக்குப் பார்வை இல்லையென்று பெண் மலையோரம் ஒதுங்குவாள். பையனும் அங்கே ஒதுங்குவான். அவர்களைப் பிடிக்க புதர்களின் மறைவிலும், பாறைகளின் ஓரங்களிலும் சில கண்கள் வேட்டை மிருகங்களாய் விழித்திருக்கும். ஊரிலே ஒரு பெண் எருமை மேய்ப்பாள். இள வட்டங்களுக்கு அவர்மீது இருகண்கள் இருந்தன. ஒன்று அவள்மீது. ஒன்று அவர் நடவடிக்கைகள் மீது.

பெண்ணிடம் தன் ஆசையைச் சொல்லி, அவர் மறுத்தால் ஆத்திரம் அடைந்து, பழிவாங்கும் வன்மத்தோடு இப்படி கண்காணிப்பில் ஈடுபடுகிறவர்களே இதில் அதிகம். மேய்ப்பள் மீதும் அப்படி இருந்திருக்கும் என்பது அவளை பிடித்துவிடக் காட்டிய ஆர்வத்தில் தெரிந்தது. மலை மீது நின்று பார்த்தால் நகருக்குப் போகிற கிராமத்தின் சாலை தெளிவாகத் தெரியும். அந்த சாலையை ஒட்டிய நிலத்தில் எருமையை மேய்த்துக் கொண்டிருந்தவள், காதலனோடு அருகில் இருந்த பாழடைந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறாள். வந்து பிடித்துவிட்டார்கள் இளவட்டங்கள். மலைமேல் நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது இவர்கள் ஒதுங்குவது தெரிந்ததால் வந்து பிடித்துவிட்டதாக சொல்லிக்கொண்டார்கள். அது அவர்களுக்கு ஒரு சாகசக்கதை. அப்புறம் என்ன பஞ்சாயத்து பலபட்டறை என்று நடந்தது.

பஞ்சாயத்துகளில் பலவிதமான தண்டனைகளை தருவார்கள். எல்லார் முன்னிலையிலும் அடிவாங்குவதும், திட்டுவாங்குவதும் முதல் தண்டனை. அதற்கே பாதி ஜெம்மம் செத்துவிடும் என்பதுண்டு அனுபவித்தவர்கள். நாட்டாண்மையையோ, ஊர்ப்பெரியவர் களையோ எதிர்த்துப் பேசினால் உதைவிழும். பெண்ணைக் கெடுத்துவிட்டு கட்டிக்கொள்ள மறுத்தாலும், தவறை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உதைவிழும். உண்மையை வரவழைக்க காலகாலமாகப் பின்பற்றிவரும் நடைமுறைகள் உண்டு. கற்பூரத்தின் மேல் சத்தியம் செய்தல், பிள்ளையைத் தாண்டுதல் போன்றவை அந்த வகை நடைமுறைகளில் எளிமையானவை.

பெண்ணுடன் பழகி, குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள மறுத்தாலோ, கைவிட நினைத்தாலோ எருக்கூடை சுமக்க வேண்டும். அய்ந்து மரக்கால் கூடையில் எருவை அள்ளி நிரப்பியதும் பஞ்சாயத்தார் நிர்ணயிக்கிற அளவு ஊரை வலம் வருவார் குற்றவாளி. இது பெருத்த அவமானம். பெண்ணின் கால் சந்திலும் நுழைந்து வந்துவிட வேண்டும் என்று ஒரு தண்டனை இருந்திருக்கிறது. இதுவும் பெருத்த அவமானத்துக்குரியது. கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஊர்வலம் வரவைப்பதும் ஒருவகையான தண்டனை முறைதான். பஞ்சாயத்துத் தீர்ப்பை ஏற்காதவர்களை ஊர்விலக்கம் செய்துவிடுவார்கள். தனி ஆளோ குடும்பமோ இப்படி ஊரைவிட்டு தள்ளி வைக்கப்படலாம். அவரோடு மக்கள் எந்த உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். செத்தாலும் அனாதைப்பிணம்தான்.

தண்டனை முறைகள் ஊருக்கு ஊர் மாறுபவை. இன்று பஞ்சாயத்து முறைகள் மாறிவிட்டன. ஆனால் பழைய முறையில் பல அனுகூலங்கள் இருந்தன. இன்றைய சூழலைப்போல வருடக்கணக்கில் அலைந்து இழுபட வேண்டியதில்லை. விசாரணையும் தண்டனையும் உடனே கிடைத்துவிடும். தண்டனையே கிடைத்தாலும் அது சொந்தங்கள், ஊரார் நடுவில் நிறை வேற்றப்படுவதால் அத்தனை உக்கிரமாய் உணரத் தோன்றாது. புட்டண்ணன் காலத்தில் இவைகள் இன்னும் கடுமையாகக் கூட இருந்திருக்கலாம். சாதி மீறிய திருமணம் என்பது 1900களின் தொடக்கத்தில் சாகசம் மட்டுமல்ல, பெரும் சமூகப்புரட்சி. சாதி இந்துக்களை கிலி கொள்ளச் செய்தவர். சுற்றுபுற கிராமங்களுக்கெல்லாம் நாட்டாண்மையாய் நீதி சொன்னவர். சண்டையிடும் போது எதிராளியை மூர்க்கமுடன் தாக்குபவர், அத்து மீறும் முசுலீம் நிலவுடமையாளர்களை அடித்து விரட்டியவர், வைராக்கியம் மிகுந்தவர் என்றெல்லாம் அம்மாவின் மூலம் புட்டண்ணனைக்குறித்து கேட்கிறபோது சரசரவென வீரச் சித்திரம் ஒன்று மனதில் உருவாகிறது.

வேலூர் மாவட்டம், வடஆற்காடு மாவட்டமாக நவாப்பு களின் ஆட்சியில் அறியப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் வடகர்நாடகப் பகுதிகளை செஞ்சியை தலைநகராகக் கொண்டு மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர் களோடு போரிட்டு அவுரங்கசீப்பின் தளபதி சூல்பிர்கான் செஞ்சியை கைப்பற்றினார். அப்போது தக்காண பகுதி களின் சுபாதாரராக இருந்தவர் நிசாம்-உல்-முல்க். இவர் அவுரங்கசீப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டு இருந்தார். தன் ஆட்சிப்பகுதியில் வடகர்நாடக பகுதிகளை சேர்த்துக் கொண்ட இவர் சாதுல்லாகான் என்ற தன் தளபதியை புதிய பகுதிக்கு நவாப்பாக நியமித்தார்.

நவாப் சாதுல்லாகான், 1712ஆம் ஆண்டு தன் தலைநகரை செஞ்சியிலிருந்து ஆற்காட்டுக்கு மாற்றினார். சாதுல்லா கான் அரச போகத்தில் திளைக்க ஏழை விவசாயிகளை துன்புறுத்தினார். நிலத்தீர்வை மற்றும் குத்தகையின் மூலம் விவசாயிகளிடமிருந்து பெரும்பகுதியை வரியாக அவரின் அதிகாரிகள் பிடுங்கினர். இப்பகுதியில் இருந்த பெரும் பாலான நிலங்களும், மலைகளும் முசுலீம் அதிகாரிகளின் சொந்தமாயின. எங்கள் பகுதியில் சாத்கர் வட்டத்தில் இருந்த கிழக்குத் தொடர்ச்சிமலையின் ஒருபகுதி சித்திக் என்ற ஓர் முசுலீம் அதிகாரியிடம் இருந்தது.

இந்த அதிகாரிகளிடம் குத்தகை பெற்று வேளாண்மை செய்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை முசுலீம் நிலவுடமையாளர்கள் சுரண்டியும் ஒடுக்கியும் வாழ்ந்தனர். இந்த சுரண்டலில் பாலியல் சுரண்டல் முதன்மையானது. தலித் பெண்களை இவர்கள் விடவில்லை. இவர்களின் பிடி யிலிருந்து தமது பெண்களை காப்பற்றுவதே தலித் கிராமத் தலைவர்களின் முதல் வேலையாக அப்போது இருந்தது. ஆண்கள் இல்லாத போது தலித் வீடுகளில் நுழையும் முசுலீம் நிலவுடமையாளர்களையும், அதிகாரிகளையும் அத்தலைவர்கள் தீரமுடன் அடித்து விரட்டினர். புட்டண்ண னும் அப்படியான ஒரு கிராம தலைவர்தான். முசுலீம் நிலவுடைமையாளர்களை மூர்க்கமுடன் தாக்கி விரட்டியிருக்கிறார்.

அம்மா, புட்டண்ணனைப்பற்றி இன்னொரு கதையும் சொல்வார். அது சொந்தங்களை வெள்ளத்திலிருந்து காத்த கதை. ஆம்பூரை ஊடறுத்து ஓடும் பாலாறு மிகப்பெரும் காட்டாறு போன்றது. கர்நாடகத்தில் தோன்றும் இது, ஆந்திரா வழியாக ஓடி வந்து புல்லூரில் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. புல்லூர் வாணியம்பாடிக்கு அருகில் இருக் கின்ற ஒரு மலைகிராமம். புல்லூர் வரை பாலாறு பாறைகளின் நடுவே ஓடிவரும் காட்டாறுதான். புல்லூரில் நுழைந்து ஓடத்தொடங்கியதும் சில கல் தொலைவிலேயே அகன்று மணல்விரியும் பரப்பாய் மாறுகிறது. சிற்றூர்களை கடந்து அது சந்திக்கும் முதல் சிறுநகரம் வாணியம்பாடி.

அய்ப்பசியிலும், கார்த்திகையிலும் அடித்துப் பெய்த பெரு மழையில் 1903ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பாலாற்றில் பெருவெள்ளம் வந்திருக்கிறது. புல்லூரில் நுங்கும் நுரை யுமாக நுழைந்த ஆறு அங்காற்று அடிக்குமோ, பொங்காற்று அடிக்குமோ என ஆத்திரத்துடன் வருகிறது. அதன் இராட்சத வேகத்துக்கு முதலில் இறையானது வாணியம்பாடி. அந்த சிறுநகரை மூன்று பாகங்களாக வெட்டிப்பிளந்து விழுங்கி யிருக்கிறது வெள்ளம். வாணியம்பாடி வெள்ளம் என்பது, குமரிக்கண்ட கடல்கோள் போல வட ஆற்க்காடு மனிதர் களின் உயிர்ச்சுருள்களில் தொடர் நினைவாய் பதிந்திருக்கும் இயற்கைப் பேரழிவு. அந்த வெள்ளத்தின் நினைவுகள் சந்ததிகளிலிருந்து சந்ததிகளுக்கு இன்றும் கடத்தப்படுகின்றன.

வாணியம்பாடியில் வந்துமோதிய காட்டுவெள்ளம் வீடுகளையும், கால்நடைகளையும், மனிதர்களையும் அடித்துச் சென்றிருக்கிறது. ஆறு தனக்கு உரிமையுள்ள நீர் வழியின் எல்லைகளை உடைத்திருக்கிறது. கரைகளைத் தாண்டி வெகுதொலைவுக்குப் பாய்ந்திருக்கிறது. ஆற்றின் கரையிலிருநது அரை கிலோமீட்டர் தள்ளியிருக்கும் என் பாட்டிவீட்டில் குழிதோண்டும்போது பார்த்திருக்கிறேன் நான். மூன்றடி ஆழத்தில் மணல் இருக்கும். சலவை செய்யப்பட்டது போன்ற துப்புரவான நொய்மணல். இன்னும் ஒரு கிலோமீட்டர் தள்ளிப்போய் தோண்டினாலும் மணல் கிடைக்கும் என்பார் பெரிய மாமா. ஆற்றைப் புதைத்த நிலத்தின் மேல் மக்கள் வாழ்வதை நினைத்தவுடன் மனதில் பயம் கப்பும். வாணியம்பாடி வெள்ளத்துல இது வரைக்கும் தண்ணி ஏறி வந்திருக்கு என்பார் மாமா. ஆற்றின் வழிநெடுக இருந்த உடைமைகளும், உயிர்களும் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. சில ஆங்காங்கே கரை ஒதுங்கியிருக்கின்றன. பாலாறு தேவலாபுரத் துக்கு அருகிலிருந்துதான் ஆம்பூரை தொட்டு ஓடுகிறது.

நடுஇரவில் நுழைந்த இரவுப் பட்சிணி விலங்குபோல் வெள்ளம் அடித்து ஓடத்தொடங்கியதும் புட்டண்ணனுக்கு உறக்கம் போய்விட்டது. விடிகிறவரை ஊரில் இருக்கிறவர் களையும், தன் குடும்பத்தையும் பாதுகாப்பான தொலை வுக்கு கூட்டிச்சென்று தங்கவைப்பதில் நேரம் கடந்தது. அதிகாலையில் பொழுது பளபளவென்று விடிகிறபோது சடாரென்று மின்னலைப்போல் வெட்டியது ஓர் எண்ணம். சோமலாபுரத்தில் இருக்கும் நம் உறவினர்கள் எப்படி இருப்பார்கள்? புட்டண்ணனின் மைத்துனர் அங்குதான் பெண்ணெடுத்திருந்தார். மைத்துனரும் அவரின் மனைவி யும் அங்கே போயிருந்தார்கள். வெள்ளத்தில் குதித்தார் புட்டண்ணன்.

கரையில் இருப்பவர்கள் ஓடிவந்து கூச்சலி டுவது தெளிவில்லாமல் அவருக்குக் கேட்டது. புட்டா. வேணாம் வந்துடு ஆற்றின் திசையிலேயே வெகுதூரம் வந்துவிட்டார் புட்டண்ணன். துத்திப்பட்டு, பெரியவரி கத்தைத் தாண்டி கிழக்குத்திசையில் கரையேறினால் சோமலாபுரம் வந்துவிடும். சோமலாபுரத்துக்கு கொஞ்சம் தள்ளிப்போனால் பாலாற்றில் இன்னொரு காட்டாறு கிளையாறாக சேரும் இடம் வருகிறது. அந்தக் கிளையாற்றி லும் வெள்ளம். புதுவெள்ளம் நுரைத்து சூழ்வதை பார்த்து கூக்குரலிட்டபடி இருக்கிறார்கள் சோமலா புரத்து மக்கள். புட்டண்ணனை பார்த்ததும் அவர்களின் கண்களில் பற்றிய உயிர்விளக்கு இன்னும் பிரகாசமாய் எரிகிறது. அங்கிருக் கிறவர்களுடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியிருக்கிறார் புட்டண்ணன்.

இப்போது அசைபோடுகையில் புட்டண்ணனின் கதை ஒரு தொன்மவீரனின் கதையை ஒத்திருந்தது. பாலாற்றுக் கரையோரம் உள்ள சில ஊர்களில் வேடியப்பன் என்ற பெயரில் ஒரு தலித் சாமி உண்டு. நாய்,கோழி,வில்லுடன் அச்சாமியின் உருவம் புடைப்புச் சிற்பமாய் நடுகல்லில் செதுக்கப்பட்டிருக்கும். அவனுக்கு வெள்ளக்காலங்களுக்குப் பிறகு கோழி அறுத்து, சாராயம் வைத்து படைப் பார்கள். மொச்சைக்கொட்டை போட்டு வைத்த கரு வாட்டுக் குழம்பும், களியும், கூழும், படையலில் வைக்கப் படும். புட்டண்ணன் இன்னொரு நூற்றாண்டை முன் தள்ளி பிறந்திருந்தால் அவரும் இன்னொரு வேடியப்பன்தான். நடுகல் வைக்கப்படவில்லை என்றாலும் அம்மாவுக்கும், மாமாக்களுக்கும் புட்டண்ணன் இன்றும் குலசாமியைப் போலத்தான் தெரிகிறார்.

ஓணான் கடிக்கும் மாமாக்கள் உற்சாகமாக இருக்கும்போது ஆயாவை பிரியமுடன் கிண்டல் செய்வார்கள்: ஓணாங் கடிச்சான் மகளே. நாக்கைக் கடித்துக்கொண்டு, கையை நீட்டியபடி, போலி யான மூர்க்கத் தோடு மகன்களை அடிக்க ஓடுவார் ஆயா. அந்த இடமே சிரிப்பாய் பொங்கும். சிறுவர்களாகிய எங்களுக்கு அதைப்பார்க்க குதூகலமாக இருக்கும். ஓணான் கடிச்சான் என்று மாமாக்கள் கேலியாகச் சென்னது தங்களின் தாத்தாவான பெரியராஜைதான். ஆயாவின் அப்பா அவர். ஆயாவின் அம்மா பொன்னி.

பெற்றவர்களைப் பற்றியும், உடன் பிறந்தவர்களைப் பற்றி யும் மிகமிகப் பிரியமான நினைவுகள் பெண்களிடம் உண்டு. திருமணமாகி கணவனோடு குடும்பத்தை பிரிந்து போகிறவரை ஒரு வாழ்க்கையும், கணவனோடு அவன் வீட்டில் வாழும் வாழ்க்கையுமாக இருவேறு வாழ்வுகள் அவர்களுக்கு கிட்டுகின்றன. முதுகெலும்பற்ற உயிரி களுக்கு இளம் உயிரி, முது உயிரி என இரு வாழ்நிலைகள் உள்ளதைப்போலத்தான் இதுவும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாற்றைப்போல பிடுங்கி நடப்படுவதால் பறிபோன தன் வீட்டு வாழ்க்கையும், தன் பெற்றோர், உடன் பிறந்தோர் நினைவுகளும் இன்னும் கூடுதல் பிரியத் துடன் அவர்கள் மனதில் தங்கிவிடுகின்றன. அப்பாவை யும், அண்ணன் தம்பிகளையும் நினைத்து கரையாத பெண் கள் யாரும் இல்லை ஆயாவும் இதற்கு விதிவிலக்கல்ல. வயதான காலத்தில் கூட மகன்களிடம் சண்டை வந்தால், வைராக்கியத்துடன் எழுந்துகொள்வார்.

டேய் நான் எங்க அண்ணனுங்ககிட்ட போறன்டா, என்ன யாருன்னு நெனச் சீங்க, பெரிராஜி பொண்ணுடா. மானஸ்தி. இதுப்பாரு இந்த முந்தானையிலே சுருக்குபோட்டுனு செத்துப் போயிடுவேன். தெரியுமா? என்னா கோவம் வருதுடா எப்பா... ரோசத்தப்பாரு... என்று சொல்லியபடி ஆயாவை சமாதானப்படுத்துவார்கள் மாமாக்கள். தன் அப்பாவைபற்றியும், அண்ணன்களைப் பற்றியும் எப்போதும் வாஞ்சையுடன் பேசுவார் ஆயா. ஆயாவுக்கு சொந்த ஊர் சான்றோர்குப்பம். அது ஆம்பூருக்கு அருகில் ஏரிக்கரையில் இருக்கிற ஒரு அழகிய கிராமம். ஆயா வாழ்க்கைப்பட்ட மாங்குப்பத்திலிருந்து பாலாற்றின் எதிர் கரையில் பார்த்தால் அந்த ஊர் தெரியும். அவருக்கே உரிய அழகோடு, வாசலில் மொக்குமாவினால் வரையும் கோலக் கோடுகளைப்போலத்தான் ஆயாவுக்கு அவரின் பிறந்தகத்துக்கும் நடுவிலே பாலாறு படுத்தி ருந்தது. ஆயாவின் வாழ்க்கைக்கோடு அது உண்மை யிலேயே ஆயாவின் வாழ்க்கை பயணித்த ஓர் உயிர்வழித் தடமாகத்தான் அந்த நீர்வழித்தடமும் இருந்தது.

ஆயாவின் அண்ணன்கள் கூத்துக்காரர்கள். கடும் உழைப் பாளிகள். அவரின் அண்ணன்களில் ஒருவர் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களில் இருந்தவர். அண்ணன்கள் போடும் கூத்தைப்பற்றி சொல்லத் தொடங்கினால் ஆயாவுக்குக் கண்கள் கலங்கும். மெல்லிய நீர்த்திரை கட்டிய கண்களில் பெருமிதமும், பாசமும் பொங்கும். தன் அப்பா பெரியராஜியைப்பற்றி சொல்லப்புகுந்தால் பெருமைகளாய் அடுக்குவார். அவர் களின் குடிப்பெருமைகள் அவை. பொன்னு மாதிரி பார்த்துக்கிட்டார் எங்கப்பா. தினுசால ஒரு பண்டம். என்னா கொறை? அடேயப்பா சேம்பரமா இருந்தோம்டா.

தன் அப்பாவின் தோற்றம் குறித்து சொல்லத் தோன்றினால், தன் கடைசி மகன் அனுக்கிரகத்தை அடையாளம் காட்டுவார் ஆயா. சராசரி உயரம். கருத்த நிறம். களையான படர்ந்த முகம். சடை பின்னி முடியும் அளவுக்கு நீண்ட கூந்தல். காதுகளில் கடுக்கன். பெரியராஜீ கடும் உழைப்பாளி. ஏரிக்கரையை ஒட்டி பல ஏக்கர் களை வைத்திருந்த முசுலீம் ஒருவரது நிலத்தைத்தான் அவர் ஒப்பி யிருந்தார். இப்படி குத்தகைக்கு இருப்பவர்களும், நிலம் ஒப்புக்கொண்டு வெள்ளாமை செய்பவர்களும் போகத் துக்கு இவ்வளவு என்று விளைச்சலில் தந்துவிட வேண்டும். ஏரிப் பாசனம் என்பதால் செழுமையான நிலம். தென்னை மரங்களும் அதில் இருந்தன.

அம்மரங்களிலிருந்து கள் இறக்குவார்கள். ஏரி நிறைந்துவிட்டால் சவுக்கு போகும் தண்ணியிலேயே இரு போகம் விளைந்துவிடும். ஏரியில் மீன்கள் உண்டு. நவாப்புக்கு மீன்பிடித்தலிலும் வருவாய் இருந்தது. இதனால் ஒவ்வோர் ஆண்டும், அந்த ஊரின் கணக்கப்பிள்ளையும் வருவாய்த்துறை குமாஸ்தாக் களும் ஏரியின் மீன் மகசூலை ஏலம் விட்டுவிடுவார் கள். ஏலம் எடுத்தவர் ஏரிக்கு காவல் போட்டுவைப்பார். இந்த காவலை மீறி மீன்பிடித்தல் அப்படி இப்படி என்று மறை வாக நடந்துக் கொண்டுதான் இருக்கும். மாதத்தில் ஒன்றிரண்டு முறைகளுக்கு பெரியராஜீ இப்படி மீனை பிடித்து வந்துவிடுவார். ஆயா அதை விவரிக்கும்போது அற்புதமாக இருக்கும்.

நல்லா இருட்டனதும், அப்படியே ஏரக்கரைக்கா ஒதுங்குற மாதிரி போயி ஜல்லிக்கூடையெ தண்ணில போட்டு அள் ளினு வரவேண்டியதுதான். மொலுமொலுன்னு மீனுங்க மேலேயே நீந்தித் திரியுங்க இதைச் சொல்லும்போது ஆயாவுக்கு மீன் தின்ற நினைவு வந்துவிடும். எங்கம்மா கெழங்கு மாதிரி அவச்சி கொட்டிடுவாங்க. அம்புட்டு ருசியா இருக்கும் பாத்துக்கோ
பெரியராஜியின் பிள்ளைகள் தினமும் ஆளாளுக்கு ஒரு வேலைக்கென்று போய்விடுவார்கள். ஆயா ஆடு மேய்க்கப் போவார். ஆடுகளை ஓட்டிக்கொண்டு நிலத்துப் பக்கமாப் போகும்போது, ஆங்கே இறக்கி வைத்திருக்கும் கள்ளை வயிறு முட்ட குடித்து விடுவாராம். சிலநேரங்களில் குரங்குகளும் கள் குடித்து, போதையேறி அமர்க்களம் செய்யும் என்பார் ஆயா.

பாத்து பத்திரமா ஓட்டினு போயி வந்துடு தாயீ வேலை நடுவில் பெரிய ராஜி தன் மகளை சொல்லி அனுப்பி வைப்பார். கூட இருக்கும் சிறுமிகளி டம் ஒத்தாசையாக இருக்கச் சொல் வார். மகள்கள் மீது அவருக்கு கொள்ளை பிரியம். சட்டை போடா மல் திரியும் தன் மனைவி பொன்னியைப்போல மகள் களை விட்டுவிட அவர் விரும்ப வில்லை. கால மாற்றங்களை பெரிய ராஜி கவனித்துக்கொண்டுதான் இருக்கி றார். சான்றோர்குப்பம் மேல்தெருவில் இருக்கும் சாதிக்கார பெண்கள் மேலுக்கு போடுகிறார்கள்.எப்போதாவது ஊருக்கு வரும் வெள்ளைக்காரப் பெண்களும் சட்டை போடுகிறார்கள். ஊர்ப் பெண்கள் அப்படி வருகிற வெள்ளைக்காரப் பெண்களை சட்டைக்காரிச்சிகள் என்று தான் கூப்பிடுகிறார்கள். நமது பெண்பிள்ளைகளும் கூட அப்படி போட்டால்தான் என்ன? பெரியராஜி தேடித்திரிந்து தன் பெண் பிள்ளைகளுக்கு சட்டை தைத்து வந்து தந்தார். அப்போது ஆம்பூரில் வளையல்காரத் தெருப்பக்கமாக அப்படி ஒரு தையல் கடை இருந்ததாக ஆயா சொல்வார். மடிப்பு வைத்து பருத்தி ருக்கும்படி தைக்கப் பட்ட பப் கைகளை கொண்ட சட்டைகள் அவை. ஆயா தன் ஊர்பற்றி சொல்லும்போதெல்லாம் பெரியாங்குப்பம் திருவிழா தவறாமல் ஓடிவந்து இடம் பிடித்துக் கொள்ளும்.

சான்றோர்குப்பத்தின் பாசனப்பரப்பு ஆயிரத்து நானூறு ஏக்கர்களாகும். ஏரியைச்சுற்றியும், அதன் பாசனத்தை சார்ந்தும் கண்ணடிகுப்பம், ஆலங்குப்பம், அய்யனூர், பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், சோலூர் போன்ற கிராமங்கள் இருந்தன. இந்த ஊர்களுக்கு மய்யமாக இருந்த பெரியாங்குப்பத்தில் ஆண்டு தோறும் தவறாமல் அம்மன் திருவிழா நடக்கும். ஒரு பார்ப்பனப்பெண் துட்டர்களிடம் சிக்கி ஓடிவந்தா ளாம். அவள் வந்த ஏரிக்கரையின் வழியிலே இருந்த சான் றோர் குப்பம், அடைக்கலம் அளித்ததாம். பிறகு அவள் அங்கிருந்து புறப்பட்டுப் போய் பெரியாங்குப்பத்தில் நிலை கொண்டாளாம். அவளைத்தான் காலகாலமாக மக்கள் வணங்கி வருகிறார்கள் என்பார் ஆயா. அவர் ஊர் சாமிக்கு இக்காரணத்தாலேயே பாப்பார கெங்கையம்மன் என்ற பெயர் வழங்குகிறது.

திருவிழா அன்று வழிநெடுக அமைக்கப்பட்டிருக்கும் பச்சைப் பந்தல்களில் மோரையும், கூழையும், சோறையும் வாங்கித் தின்றபடி பெரியாங் குப்பம் போய் திருவிழா களித்து வரும் அனுபவத்தை அம்மாவும் மாமாக்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தத் திருவிழாவில் ஒரு வழக்கம் உண்டு. இரவு பத்து மணிக்கு மேல் திருவிழா நடக்கும் இடத்திலும், கோயிலரு கிலும் யாரும் இருக்கக்கூடாது. ஏன் அப்படி என்று நான் போட்டபோது ஆயா ஒரு கதை சொன்னார். அது என்னுமோ தெரியலை. பெரியவங்க சொல்லி வச்ச வழக் கம்போல இருக்கு. இதுங்கள மதிக்காம இருக்கிறதுக்கும் மொட்டப்பசங்க இருக்கிறாங்கதானே. அப்பிடிதான் ஒருத்தன் துடுக்குத்தனமா அங்கியே இருந்துட்டானாம். எள ரத்தம். திருநா முடிஞ்சதும் கோயில் பக்கத்துல இருக்கிற மரத்துமேல ஏறி ஒக்காந்துக்கிட்டான். ஒரு காக்கா குருவி இல்ல. அங்கங்கே கொழுத்தி வெச்சிருக்கிற பந்த வெளிச்சம். அந்தப் பையன் குறுப்பா கீழ பாத்துனு இருக் கானாம். தலைவிரி கோலமா கோயிலுக்குள்ளர்ந்து எழுந்து வருதாம் அந்த அம்மா. அந்தத் திருநா களத்துல வந்து ஆதாபாதையா உலாவுதாம். அந்தப் பையனுக்கு குண்டி கொலையெல்லாம் அதிருதாம். அப்படியே மரத்து மேலயிருந்து விழுந்து ரத்தம் கக்கி செத்திருக்கான்

ஆயா சொன்ன இன்னொரு கதையும் அமானுஷ்யத்தன்மை யுடன்தான் இருந்தது. அந்த சாமி தன் ரூபத்தை மறைத்து சாதுவான பெண்ணாக மாறி உலாவியபோது, ஒரு பெண்ணை தனக்கு பேன் பார்க்கச் சொல்லி கேட்டுக் கொண்டதாம். பேன் பார்த்த போது அந்தப் பெண்ணின் கண்களுக்கு தலையெல்லாம் கண்களாகத் தெரிந்ததாம்.

நான் சிறுவனாக இருந்தபோது ஆயா சொன்ன இப்படி யான கதைகள் எனக்கு பயமூட்டும். இரவில் தனியாக ஒன்றுக்கு போவதற்குக் கூட நடுக்கமாக இருக்கும். ஆனால் இப்போது அசைபோடும்போது ஒரு மாய யதார்த்த கதையைப் படித்தது போலத்தான் தோன்றுகிறது. காப்ரியல் கார்சியா மார்க்வெசின் பெருஞ்சிறகு கொண்ட மனிதனுடைய கதையைப்போல. இப்படி ஆயாவால் சிலாகித்து சொல்லப்பட்ட பெரியாங்குப்பம் திருவிழா வுக்கு போவதற்குதான் பெரியராஜி வினோதமானதொரு காரணத்தை சொல்ல வேண்டியிருந்திருக்கிறது. ஊரே திருநாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. பீளைப் பூ, மாவிலை, வேம்பு ஆகியவற்றை சேர்த்துக்கட்டிய தோரணங்கள். தெருமுழுக்க சாணம் தெளித்த பசுமையின் ரம்மியம். திண்ணைகளிலும், நிலைப்படிகளிலும் செம் மண் பூச்சு. சுவர்கள் தும்பை பூபோல வெள்ளைவெளே ரென்று இருக்கின்றன. பூமிக்கு மாலையிட்டது போல வகைவகையான கோலங்கள்.

இன்றைக்கென்றபாட்டிற்கு நிலத்துக்கார எசமான் வருகிறார் என்று நேற்றே ஆள் வந்துபோனது. விட்டிலிருந்து கிளம்பும் போதே பிள்ளைகளும், பொன்னியும் பிலுபிலு வென பிடித்துக் கொண்டார்கள் பெரியராஜை. உனக்கு இன்னிக்குக்கூட அந்த நெலத்துவேல மாளாதா? ஒரு நாளுங்கெழமன்னு மனுசனுக்கு இல்ல? அப்படி சொல்லப்படாது, என்னாயிருந்தாலும் பொழப் புன்னு ஒன்னு இருக்குதில்ல. நீங்க எனுக்காக பாத்துனு இருக்க வேணாம். ஜனமோட ஜனமா பெறப்புட்டுப் போங்க நா வந்து பாத்துக்கிறேன். பெரியராஜிக்கி நிலத் துல வேலைகள் காத்திருந் தன. உழைத்த கை சும்மா இருக் காது கோவணத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு சேடையில் இறங்கி அண்டை வெட்டத் தொடங்கினான்.

என்ன பெரிராஜீ என்று எசமான் வர சூரியன் மாரளவுக்கு வந்திருந்தது. அத்தர் வாசனையில் அந்த இடம் மணந்தது. நடவுக்கு ஆள் சொல்லிட்டியா நாத்து போதுமா? கள்ளெறக்குறவன் வந்து போனானா? நிலத்துக்கார முசுலீமிடமிருந்து கேள்விகள் சங்கிலிபோல வந்து கொண்டேயிருந்தன. பெரியராஜீ அவரோடு வால் பிடித்தபடி ஓடிக்கொண்டும், பதில் சொல்லிக்கொண்டும் இருந்தார். சூரியன் தலைக்கு மேல் வந்துவிட்டது. இன்னேரம் பொன்னி, பிள்ளைகளை கூட்டிக்கொண்டு பெரியாங்குப்பம் போய் சேர்ந்திருப்பாள் என்று எண்ணம் ஓடியது. பதைபதைப்பும் அவசரமும் கூடிவிட்டன. எதை யாவது சொல்லி புறப்பட்டுவிட வேண்டும் என்று மனது திட்டம் போட்டது. சட்டென்று ஒரு காரணமும் தோன்ற வில்லை மனதுக்கு. அதற்கே கொஞ்சம் அல்லாடினார். பெரியராஜி நெடுநேரத்துக்குப்பிறகு ஒரு மாதிரி தன்னை சுதாரித்துக்கொண்டு நிலத்துக்காரரிடம் சொன்னார். எஜமான், அண்ட கழிக்கும்போது என்னெ ஓணான் கடிச்சிருச்சி. நான் வைத்தியன பாக்க கொஞ்சம் சீக்கிரம் போகனும்... வாயடைத்துப்போன அவர், பெரியராஜை மேலும் கீழும் பார்த்தார்.
       ...தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com