Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

சொல்பொருள் ஆக்கமும் சமூக மதிப்பீடும்
கா.அய்யப்பன்
.

செழுமையான இலக்கண மரபினைக் கொண்டுள்ளது தமிழ்மொழி. அப்படியான இலக்கண மரபுக்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதும் சுவாரசியமான விடயம். தமிழில் தொல்காப்பியம் என்கிற இலக்கணப் பிரதி தமிழர் இன, மொழி, சமூக அடையாளங்களை அறிவதில் முக்கிய தரவாக அமைகிறது. எழுத்து, அவ்வெழுத்து பொருள்கொள்ளும் முறைமை என்கிற செய்தியை விளக்கும் சொல்லதிகாரம் சில அதிகார மையங்களைக் கட்டமைத்திருக்கிறது. எழுத்துக்கள் இணைந்து பொருள் கொள்ளுதல் முறையையோ அல்லது ஒலிக்குறிக்கான பொருளையோ பதிவு செய்தல் என்பது எவரால் சாத்தியமானது என்பது கவனிக்கத்தக்கது.

மனிதன் தனக்குத்தானே சில வலைகளைப் பின்னிக் கொள்கிறான். தான் என்கிற அடையாளத் தேடல் தொடர்ச்சியாக அவனுள் நிகழ்ந்திருக்கிறது. அவற்றையே வருணம், சாதி, தொழில், தனக்கான வாழ்க்கை, தான் கையாளும் சொல் பிரயோகம் என ஒவ்வொன்றிலும் செயல்படுத்துகிறான். இனக்குழு, அவ்வினக்குழுக்கென்று ஒரு தலைவன் அவனூடாக வளர்ச்சி பெற்ற அரசன் என்கிற அமைப்பினை உருவாக்கியதுதான் தமிழர் செய்த முதல் தவறு. எல்லோருக்கும் தலைவன் என்ற நிலைக்குப் பிறகு எல்லாம் அவனாகி போகிறான். அவனை முதன்மைப்படுத்தியே அந்தணர் முதலானோர் எல்லாவற்றிலும் தங்களின் அதிகாரங்களை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ச்சியாக முயற்சித்திருக்கின்றனர். இலக்கணங்கள் இப்படியான முடிவுக்கு இடமளிக்கின்றன. சொல் எப்படியெல்லாம் பொருள் கொள்கிறது என்பது மொழியியலாகிவிட்டது. ஆனால் அது எந்தவிதத்திலும் சரியான மதிப்பீட்டை வெளிப்படுத்தவில்லை.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற பாகுபாட்டிற்குப் பிறகு அவர்களை அழைக்கும் சொல்பிரயோகங்கள் உருவாயினவா அல்லது அப்படியான சொல்பிரயோகங்களே இப்படியான பாகுபாட்டை உருவாக்கினவா என்பது கவனிக்கத்தக்கது. நமக்கு கிடைக்கக் கூடிய முதல் நூலான தொல்காப்பியம் அதிகாரம் சார்ந்த சில சொல்பிரயோகங்களை உருவாக்கியிருக்கிறது. தொல்காப்பிய சொல் அதிகாரத்தில் இடம்பெறும் ஒன்பது இயல்களில் இறுதியாக அமைந்திருப்பது எச்சவியல். சொல் பொருள் கொள்ளும் முறைமைக்கான சில முடிவுகளை இயம்பும் இயலாக அது அமைந்துள்ளது. அப்படி விளக்கும் நிலையில் ஈ, தா, கொடு என்கிற மூன்று சொற்களும் பொருள் கொள்ளும் முறைமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஈதா கொடு எனக் கிளக்கும் மூன்றும்

இரவின் கிளவி ஆகிடன் ஊடைத்தே

அவற்றுள்

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே

கொடுஎன் கிளவி உயர்ந்தோர் கூற்றே

கொடு என் கிளவி படர்க்கை யாயினும்

தன்னைப் பிறன் போற் கூறுங் குறிப்பின்

தன்னிடத் தியலும் என்மனார் புலவர்

எச்சவியல் (927-931)

ஈ, தா, கொடு என்கிற மூன்று சொல்லும் பொருள் கொள்ளும் முறைமைப் பற்றி தொல்காப்பியர் சொல்லு வதினூடாக தனது அதிகாரத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு சமூகத்தை, அச்சமூகத்தில் வாழும் மனிதனை மதிப்பீடு செய்கிறார்.

எல்லா நிலையிலும் தாழ்ந்து இருக்கும் ஒருவன் தனக்கு தேவையான ஒன்றை உயர்ந்தவனிடம் சென்று இரப்பது. இன்று நாம் பிச்சைக்காரன் என்பது போல. ஒரு பொருளை கேட்கிறபோது யார் யாரிடம் கேட்கிறோம் என்கிற புரிதல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். மனிதனே மனிதனை அடிமைப்படுத்துகிற முறைமை சொல்பிர யோகத்தில் எப்படி பதிவாகியிருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. எல்லா நிலையிலும் தனக்கு சமமான ஒருவனிடம் தா என்றும், எல்லா நிலையிலும் உயர்ந்த ஒருவன் தனக்கு வேண்டிய பொருள் இழிந்தவனிடத்தில் இருந்தாலும் கொடு என்பதும் பெறப்படுகிறது.

ஒரே சாதியிலேயோ, அல்லது உயர்வு தாழ்வு என்கிற நிலை யிலேயோ ஒரு மனிதனை எப்படி பிரித்து அறிவது என்பது ஒரு மனிதனை எப்படி காட்டியிருக்கிறார் என்பது அறியத் தக்கது. குலத்தாலும், தொழிலாலும், குணத்தாலும், பொருளாளும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவன் தன்னைவிட எல்லா நிலையிலும், தாழ்ந்தவனிடத்தில் எத்தகைய உயர்வான பொருள் இருந்தாலும் கொடு என உரிமையோடு கேட்கலாம். ஆனால் எல்லா நிலையிலும் இழிந்த ஒருவன் உயர்ந்த ஒருவனிடம் இருக்கும் பொருளை கேட்கும்போது மட்டும் ஈ (ஐயா சாமி) என பணிந்து இரத்தல் வேண்டும் என்கிற இம்முறையே எல்லாவற்றிற்கும் அடிப்படை.

திணைசார் நிலத்தில் வாழ்பவனில் ஆரம்பமாகும் உயர்ந்தோர் அல்லோர் முறைமை அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்கிற நான்கு குலத்தினை கட்டமைப்பதில் முடிகிறது. ஈ, தா, கொடு என்கிற தொல்காப்பியர் காட்டும் சமூகத் திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார் முதலியோர்களின் உரை சுவாரசிய மானது. இன்னும் சொல்லப்போனால் இச்சொல் பிரயோக நிலைமையினை விளங்கிக் கொள்ளாது நன்னூலாரூம், முத்துவீரிய ஆசிரியரும், தொன்னூல்விளக்க ஆசிரியரும் தமது இலக்கண நுல்களில் நூற்பாவாக்கியிருப்பது அதைவிட சுவாரசியமானது.

ஈ என்னும் சொல் இரக்கப்படுவோரை இழிந்தோர் கூறியிரக்கும் சொல் என்றவாறு (உடுக்கை ஈ), உயர்ந்தோன் இழிந்தோனை யிரக்குங்கால் தமனொருவனை காட்டி இவருக்கும் கொடு ஆண்டு படர்க்கை இடத்திற்கு உரித்தாக கூறினான் (இளம்பூரணர்). ஈ தா கொடு, இவை மூன்றும் இல்லென இரப்போர்க்கும், இடனின்றி இரப்போர்க்கும், தொலைவாகி இரப்போர்க்கும் உரிய (நச்சினார்க்கினியர்). இன்னார்க்கு இன்ன சொல் உரித்தென்று வரையறுத்தலும் வழுவமைத்தலுமாகிய ஆராய்ச்சி ....ஈ எயன் கிளவி இரக்கப்படுவோனில் இழிந்த இரவலனின் கூற்று. தா வென்கிளவி அவனோடொப்போன் கூற்று. கொடு அவனோடுயர்ந்தான் கூற்று (சேனாவரையர்)

ஏதோ ஒரு அளவுகோலை வைத்து தொல்காப்பியர் காட்டும் சமூகம் பின்னாளில் புரிந்து கொள்ளப்பட்ட முறையும் அதனை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த உரையாசிரியர்கள் விளக்கும் நேர்த்தியான சொல் பிரயோகமும் அவர்களின் அறிவு நுட்பத்தினைவிட ஆதிக்க நுட்பத்தினையே காட்டுகிறது. பின்னாளில் இலக்கணம் செய்த நன்னூலார், முத்துவீரிய ஆசிரியர், தொன்னூல் விளக்க ஆசிரியர் அனைவரும் அப்படியே நூற்பாவாக செய்திருக்கிறார்கள். தன் சமகால புரித லையோ, மாற்று கருத்தையோ எங்கும் முன் வைக்க வில்லை. இது முந்தநூல் ஆசிரியர் மரபினை பொன்னே போல் போற்றல் என்கிற தந்திர உத்தி என்ற பெயரில் இலக்கணத்தில் அதிகார மையங்களை உண்டு பண்ணுவதே.

சங்க இலக்கியத்தில் இப்படியான புரிதலுக்கு நேர்மாறான செய்தியினை காண முடிகிறது.

ஈ யென விரத்த லிழிந்தன் றதனதிர்

ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று

கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றனனெதிர்

கொள்ளே னென்று லதனினு முயர்ந்தன்று... (புறநானூறு 204)

வல்வில் ஓரியின் கொடையைப் புகழும் பாடலாக புரிந்து கொள்ளப்படும் இப்பாடலில் அடித்தட்டு மனிதனின் ஆழ்மனப் பதிவும் இருக்கிறது. பொருளுக்காக நாடோடி வாழ்க்கை மேற்கொண்டு கிடைப்பவரையெல்லாம் புகழ்ந்து தன் வாழ்வை நடத்தும் ஒருவனின் ஆதங்கம் ஈ என்று இரந்து நிற்றல் இழிந்தது இல்லை. அப்படி நான் கேட்கினும் ஈய முடியாது என்று சொல்வதும் தவறு இல்லை. நீயே வலிய வந்து வாங்கிக் கொள் என்று கூறுவது உயர்ந்து இல்லை, அப்படி நீ கொடுக்கும் அதனை வேண்டாம் எனல் உயர்ந்தது அன்று. இவை அனைத்தும் ஒவ்வொருவரின் மனம் சார்ந்தது என்கிறார்.

தொல்காப்பியர் ஈ என்ற சொல் இழிந்தோனையும் கொடு என்ற சொல் உயர்ந்தோனையும் முன்னிலைப் படுத்தியது என்கிறார். இப்புரிதல் இலக்கண ஆக்க நிலையில் அதாவது இலக்கண கல்விப் பாரம்பரியத்தில் அப்படியே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, ஒரு மரபாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு விடயம் இலக்கிய அளவிலும், இலக்கண அளவிலும் எப்படி கொள்ளப்படுகிறது என்பது அவை அதிகார மையங்களின் வேர்களாக இலக்கணத்தில் பதிவாகி இருப்பதும் தமிழரின் சமூக, கல்வி மதிப்பீடை காட்டுகின்றன. சொல்லாக்கத்தின் ஊடாக தனது அதிகாரத்தை நுட்பமாக தொல்காப்பியர் பதிவு செய்துள்ள அனைத்து விடயங்களும் வெளிக் கொணரப்பட வேண்டும்.

உசாத்துணை நூல்கள்:

1. சி.வை. தாமோதரம் பிள்ளை (பதிப்பாசிரியர்) தொல்காப்பியம் சொல்லதிகாரம், நச்சினார்கினியர் உரை, வித்தியாறுபாலன யந்திரசாலை, சென்னை, 1892.

2. கு.சுந்தரமூர்த்தி(பதிப்பாசிரியர்), தொல். சொல். இளம்பூரணர் உரை, கழகம், சென்னை. 1963.

3. கு.சுந்தரமூர்த்தி (பதிப்பாசிரியர்), தொல். சொல். சேனாவரையர் உரை, திருப்பனந்தாள் வெளியீடு. 1966.

4. சிவத்தம்பி. கா. இலக்கணமும் சமூக உறவுகளும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை. 1982.

5.சிவலிங்கனார்.ஆ. தொல். சொல். எச்சவியல் உரை வளம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1988.

6. உ.வே.சாமிநாதையர் (பதிப்பாசிரியர்), நன்னூல் மூலமும் மயிலை நாதருரை. உ. வே. சா. நூல்நிலையம், சென்னை, 1995.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com